முடிக்காத கடிதம்




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அக்கா, உனக்குக் கடிதம் வந்திருக்கிறது. எழுத் தைப் பார்த்தால் அத்திம்பேரென்று நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் தம்பி கோபு ஒரு கடிதத்தை அவள் பேரில் போட்டான். அவள் அப்போது தான் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள்.
“அத்திம்பேரா ? எனக்கா?” என்று எழுந்து உட்கார்ந்து கடிதத்தைக் கையில் எடுத்தாள் பார்வதி. அவள் குரலில் ஆச்சரியம் தொனித்தது. கல்யாணம் கழிந்து இந்த ஆறு வருஷங்களில் இதுவரையும் அவள் கணவன் அவளுக்குக் கடிதம் எழுதியதே இல்லை. முன் பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு ஆண்டு நிறைவோடு தான் அவள் கணவர் வீடு சென்றாள். “சிறிசு, அவ்விடத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை. குழந்தையைத் தனியே வைத்துக் கொண்டு தவிக்க வேண்டும்” என்று சொல்லி அவள் தாய் அனுப்பவில்லை. அவள் கணவரும் அதை ஆக்ஷேபித்து ஒன்றும் சொல்லவில்லை. தனியாக அவளுக்குக் கடிதம் எதுவும் எழுதவில்லை. அவளும் கவலையற்றுப் பிறந்தகத்தில் இருக்கவேண்டிய நாட்களுக்கு மேலாகவே இருந்துவிட்டுச் சென்றாள். எப்பொழுதாவது அவள் கணவரிடமிருந்து க்ஷேம சமாசாரம் விசாரித்துக் கடிதம் வருவதுண்டு. அவளுக்கல்ல – அவள் தந்தைக்கு. அதை அவள் தகப்பனார் வாசித்துச் சொல்லும் பொழுதுகூட அவள் அவ்வளவாகக் கவனிக்க மாட்டாள். அவளுக்குக் கணவரிடத்தில் அவ்வளவு அலக்ஷ்ய புத்தி இருந்ததாக எண்ண வேண்டாம். ஒருவிதமான கூச்சம்; சங்கோசம்; பிறந்த வீட்டாரெதிரில், கணவரிடத்தில் தனக்கு இருக் கும் பிரேமை, அவர் க்ஷேமத்தில் தனக்கு இருக்கும் கவலை, இவைகளைக் காண்பிப்பதா? ‘வயசு சென்ற கணவனிடத்தில் ஆசையைப் பார்!’ என்று அவர்கள் பரிகாசமாக நினைத்தால்…?
இப்பொழுதுகூட அவள் தம்பி கோபு, “என்ன, அத்திம்பேருக்குச் சிறுபிள்ளைத்தனம் திரும்பிவிட்டது போல் இருக்கிறதே! கடிதம் எழுதக் கிளம்பிவிட்டார்” என்று சொன்னதும் கடிதத்தைப் பிரித்துப் பார்க்க அவளுக்கு இருந்த ஆவல் சட்டென்று தணிந்துவிட்டது; அவமானங் கூட உண்டாயிற்று என்று சொல்லலாம்.
இவ்வளவு நாளும் இல்லாமல் கடிதம் எழுதுவானேன்? ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை அறிய ஓர் ஆவல் உண்டாயிற்று; மறுகணம் பிறர் பரிகாசத்தை நினைத்தவுடன் அது அடங்கியது.
பார்வதி நல்ல அழகி. பெயருக்கேற்ப ஸாக்ஷாத் அவ்வம்பிகையின் ஸௌந்தர்யத்தோடுதான் அவள் அழகையும் ஒப்பிட வேண்டும். துவண்டு விழும் கொடி. போன்ற சரீரமும், பொன் போன்ற சிவந்த மேனியும், கறுத்துச் சுருண்டு தொங்கும் அடர்ந்த கூந்தலும், களை பொருந்திய முகமும் அவளை ‘அதிக சுந்தரி’ என்று சொல்லும்படிதான் இருந்தன. ஆனால் அழகு மட்டும் இருந்தால் போதுமா? பணமும் அன்றோ முக்கியமாகக் கருதப்படுகிறது இக்காலத்தில்?
நாலைந்து பெண்களும் நாலைந்து பிள்ளைகளு கொண்ட பெரிய குடும்பம் படைத்த அவள் தகப்பனார் சொற்பக் குடித்தனக்காரர். அதுவும் முன் நான்கு பெண் களுக்கு விவாகம் நடத்திப் பிள்ளைகளையும் படிக்க வைத்து மிகவும் கைசளைத்திருந்தார். இவ்வளவு காலமாக அலைந்து திரிந்து வரன் தேடியதில் அலுப்பு ஏற்பட்டு விட்டது. “இன்னும் ஒரு பெண்ணுக்கு வரன் தேடியாக வேண்டுமே! இந்தத் தொல்லைக்கு முடிவே இல்லையா?” என்று அவர் சோர்ந்திருக்கும் சமயம். அவர் மனைவிக்கு ஒன்று விட்ட சகோதரர் ஒருவருக்கு மனைவி இறந்து விட்டாள். அவர் இரண்டாந்தாரமாகப் பார்வதியைக் கொடுக்கும்படி கேட்டிருந்தார். நல்ல சொத்துடையவர். மூத்த சம்சாரம் குழந்தைகளின்றியே இறந்து போய் விட்டாள். நல்ல மனிதர். உயர்ந்த குடும்பம். வீட்டில் தம்மைச் சேர்ந்த மனிதர்கள் யாரும் இல்லை என்பதற்காகவே மறுவிவாகம் செய்து கொள்ள எண்ணினார். வயசு தான் கொஞ்சம் அதிகம். அதைப் பற்றிச் சிறிது யோசித்தார் பார்வதியின் தந்தை. ஆனால் அவர் மனைவி அதற்கேற்ற சமாதானம் சொல்லி விட்டாள். “யாவும் சேர்ந்து கிடைக்குமா?” என்று அவள் சொன்னதும் அவர் அலுப்பும் சேர்ந்து அவருடைய முயற்சியை அந்தப் பக்கமாகத் தள்ளின.
பார்வதிக்குச் சம்மதந்தானா? அதை யார் கேட்டது? பெண்களைக் கேட்டு நடத்தும் வழக்கம் சிறிது காலத்துக்கு முன் வரையும் நம் ஹிந்துக் குடும்பங்களில் ஏது? தாய் தந்தையர்களாகப் பார்த்துச் செய்வதுதானே பரம்பரை வழக்கம்?
ஒரு கிராமத்தில் வயசு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு காலம் தள்ளுவது லேசான காரியமா? ஊரார் அபவாதம் கொஞ்சமா? அதிலிருந்து நீங்குவோம் என்ற சந்தோஷத்தில் மூழ்கினாள் பார்வதியின் தாய். அவள் தகப்பனாரோ, ‘பகவான் தாம் நம்முடைய கஷ்ட காலத்தை அறிந்து இந்த வரனை அனுப்பியிருக்கிறார். எல்லாம் அனுகூலமாக இருக்கின்றன. இல்லாவிட்டால் நம் முடைய குதிகால் தேய மறுபடியும் யாத்திரையைத் தொடங்க வேண்டி யிருக்குமே? பணத்திற்கு எங்கே போவது?’ என்று தம்முடைய பழைய கஷ்டங்களை மீட்டும் அனுபவியாமல் விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார். ‘எல்லாம் அனுகூலமாகவே இருக்கின்றன’ என்று அவர் நினைத்தது, முக்கியமாக அவருடைய மனைவியின் சம்மதத்தை எண்ணித்தான். அந்த ‘எல்லாம்’ என்பதில் பார்வதியின் சம்மதம் மட்டும் அடங்கி இருக்கவில்லை.
ஆனால் அவளுக்கு வெறுப்பா? அதுவும் இல்லை. தனக்கென்று சிறப்பான உணர்ச்சி ஒன்று அவளிடம் அரும்பவில்லை. ‘அப்பா சொல்கிறார்; அம்மா திருப்தி அடைகிறாள்; உடன் பிறந்தவர்களுக்கும் சம்மதம். இது நமக்கும் சம்மதமாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நினைத்தது அவள் உள்ளம். அவள் அப்படி நினைக்கத் தான் பழகி யிருந்தாள். அந்தப் பழக்கத்திற்கு முன் அவள் அழகு, இளமை, காதல் புரிவது எல்லாம் அழுந்திக் கிடந்தன. அவற்றைப் பற்றிய நினைவு அவர்களுக்கு இல்லை. அவளுக்கு இருந்ததா, இல்லையா?
ஆனி மாதக் கடைசி; ஆகவே யாவும் வெகு சீக்கிரமே ஏற்பாடாகிவிட்டன. கல்யாண முகூர்த்தமும் வைத்தாயிற்று.
கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தத்திற்காகப் பார்வதியை அவள் தமக்கை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். புதுப் புடைவையும் ஆபரணங்களும் பார்வதியின் இயல்பான அழகுக்கு ஒரு புதுப்பொலிவை உண்டாக்கின. அலங்காரம் செய்து விட்டுப் பார்வதி யைப் பார்த்தாள். அவளுடைய அழகு இணையற்றதாகி விளங்குவதை உணர்ந்த பொழுது அவள் தமக்கைக்கு என்னவோ தோற்றியது; உணர்ச்சி பொங்கியது; அவளால் அடக்க முடியவில்லை. “என்ன இருந்தாலும் நம் பார்வதியின் அழகிற்கு இப்படிப் புருஷன் அமைய வேண்டாம். இளையாளாக வாழ்க்கைப்படாமல் இருக்கலாம்” என்ற வார்த்தைகள் அவளை அறியாமலேயே அவள் வாயிலிருந்து வந்தன.
அவை பார்வதியின் உள்ளத்திலே போய்த் தைத்தன. அழகு என்ற வார்த்தையும், இளையாள் என்ற வார்த்தையும் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமற்றவை என்பதை அப்பொழுதுதான் ஒருவாறு உணர்ந்தாள். அழகு ஒரு பெரிய பாக்கியம், இளையாள் பதவி பெரிய அவமானம். அழகைப் பலி கொடுப்பதற்கு அந்தப் பதவி படைக்கப் பட்டிருக்கிறது – இந்த எண்ணங்களிலே உண்டான வேதனை அவள் முகத்திலே அலையாடியது.
இரண்டாந்தாரம் – இந்த விஷயம் அவளுக்குத் தெரியாதா?- நன்றாகத் தெரியும். தன் கணவருக்கு நாற்பத்தைந்து வயசு என்பதும் தெரியும். ஆனால் அந்த விஷயங்களை அவள் தடைகளாக நினைக்கவில்லை! இரண்டாந்தாரமாக இருந்தால் என்ன? அவளுடைய சகோதரிகளில் ஒருத்தியே இரண்டாந் தாரமாக வாழ்க்கைப்பட்டுச் சௌக்கியமாக இருக்கிறாள். இரண்டாந் தாரமாக வாழ்க்கைப்பட்டவர்கள் கணவன்மாரைக் கைக்குள் போட்டுக் கொண்டு வீட்டுக்கு ராணியாகக் குடும்ப ராஜ்யத்தை நடத்தும் கதைகளை அனுபவசாலிகளான கிழவிகள் பார்வதியின் காதில் படும்படி அவள் தாயிடம் சொல்லுவதை அவள் கேட்டிருக்கிறாள். இதனால் அவளுக்கு ஒரு குறையும் தோன்றவில்லை.
ஆனால், இப்போதோ, அவள் தமக்கை சொன்ன வார்த்தைகள் இருதயத்திலிருந்து பிறந்தவை. அவை பார்வதியை ஒரு கலக்குக் கலக்கிவிட்டன.
நிச்சயதார்த்தத்திற்கு மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வரும் வழக்கமில்லை. மறுநாள் மாலை மாற்றும்பொழுது தான் பார்வதி முதல் முதல் தன் கணவனைப் பார்த்தாள். அவர் தோற்றம் அவள் மனத்தை வருத்தத்தில் ஆழ்த்தியது. அத்தோற்றத்தில் கவர்ச்சி இல்லை ; பாதி வழுக்கை விழுந்த தலை, மாநிற மேனி, சற்றுத் தொந்தி விழுந்த தேகம் – இவை யாவும் அவருடைய இயல்பான வயசைச் சற்று அதிகமாகவே காட்டின. அவர் தோற்றத்தில் கம்பீரம் இருந்தது. ஆனால் அது பார்வதியின் உள்ளத்தில் ஏமாற்றத்தைத்தான் உண்டாக்கியது. அவரைக் கடைக்கண்ணால் பார்க்கும் பொழுதெல்லாம், முதல் நாள் தன் தமக்கை சொன்ன வார் ததைகள் அவள் காதில் ஒலித்தன.
தாலி கட்டி முடிந்தவுடன் தம்பதிகள் யாவரையும் நமஸ்கரித்தார்கள்; பார்வதியின் தமக்கை புருஷரை மாப்பிள்ளை நமஸ்காரம் செய்யப் போனார். அப்போது அவர் விலகிக்கொண்டே, “நான் உங்களைவிடச் சிறியவனாகத்தான் இருப்பேன். என்னை நமஸ்காரம் செய்ய வேண்டாம் ” என்றார். இந்த வார்த்தைகள் பார்வதியின் மனத்தில் எரிந்த வேதனைத் தீயில் நெய்யை விட்டன. தன் தமக்கை தன்னை விடப் பெரியவள். ஆனால் அவள் கணவரோ தன் கணவரை விடச் சிறியவர்- அதாவது தன் புருஷர் அவரை விடப் பெரியவர். இந்தக் கணக்கை எண்ணிப் பார்க்கையில் அவள் தலை சுழன்றது. முதல் நாள் தமக்கை ஓர் அம்பை எய்தாள்; அந்தப் புண்ணின் மேல் தமக்கையின் புருஷர் மற்றோர் அம்பை எய்துவிட்டார்.
வாடிய முகத்தோடு பார்வதி உள்ளே சென்று மாலையைக் கழற்றினாள். பக்கத்திலே நின்ற அவள் சித்தி, “பாவம்! பார்வதியின் அதிருஷ்டம் அவ்வளவு தான். என்ன செய்யறது.” என்று அங்கலாய்த்தாள். அதற்குள் அனுபவம் முதிர்ந்த ஒரு பாட்டி, “அவளுக் கென்னடி குறைச்சல்? அவள்தான் எல்லாரையும் விட ஒசத்தியா இருக்கப் போறாள் ” என்று உச்சஸ்தாயியில் சொல்லி அந்தக் குரலை அடக்கினாள். ஆனாலும் சித்தியின் பேச்சுத்தான் பார்வதிக்குக் கேட்டது. பாட்டியின் பேச்சு அவள் காதில் ஏறவில்லை.
அவளுக்குத் துக்கம் தாங்கவில்லை. இதுவரையில் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த வருத்தம் கண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. தன் கதி இப்படியாயிற்றே என்ற துக்கம் ஒரு பக்கம். பிறர் பரிகாசம் செய்கிறார்களே என்ற அவமானம் ஒரு பக்கம். அவர்கள்மேல் ரோஷம் ஒரு பக்கம்.
இப்படி இரண்டு நாட்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று நிகழ்ச்சிகள் அவள் உள்ளத்திலே பதிந்து அங்குள்ள ஆசையைத் துடைத்தன; உணர்ச்சியைப் போக்கின ; மென்மையை நீக்கி ஒரு கடின ஸ்வபாவத்தைப் புகுத்தின. உலகம் உத்தியோகசாலை யாகிவிட்டது. தன் தாய் தகப்பனாரிடம் சிறிது வெறுப்புங்கூட உண்டாயிற்று. கல்யாணத்தில் ஊஞ்சலென்றும் நலங்கென்றும் சொல்லி உட்கார அவள் சம்மதிக்கவில்லை. அவைகள் எல்லாம் தன் துரதிருஷ்டத்தை விளம்பரப் படுத்தும் என்ற எண்ணம் அவளுக்கு. அவள் கணவரும் அவை யெல்லாம் வேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அதிலே ஒருவித ஆறுதல் உண்டாயிற்று பார்வதிக்கு.
அது முதல் பார்வதி மாறிவிட்டாள். யாருடனும் அவள் மனம் விட்டுப் பேசுவதில்லை. துக்கமோ, சுகமோ அவளுக்குள்ளே அடங்கிக் கிடக்கத் தொடங்கியது.
கல்யாணம் கழித்துப் புக்ககம் சென்று வசிக்கலானாள். துணைக்காக அவள் பாட்டியை அவளுடன் அனுப்பினார்கள். அந்தப் பாட்டி வயது சென்றவள்; அதோடு காதும் செவிடு. அவளுடன் என்ன அந்தரங்கங்களைப் பேச முடியும்?
அவள் வாழ்க்கை நடத்தத் தொடங்கினாள். கணவரிடத்தில் மரியாதையும் பக்தியும் இருந்தன. இவை அவளுடைய பிறந்தகத்தில் கற்றுக் கொண்டவை. கணவனைத் தெய்வமாகக் கொண்டாட வேண்டும் என்ற போதனையின் பயனாக எழுந்தவை. ஆனால் பிறர் சொல்லிக் கொடுக்காமல் இயற்கையூற்றாக எழும் பிரேமை – காதல் அவளுக்கு உண்டாகவில்லை. இருதயத்தில் அந்த ஊற்றுக் கண்கள் அடைந்துவிட்டன. ஆகவே அவள் கணவர் அவளுக்குத் தெய்வந்தான்; காதலர் அல்ல. அவருக்கு அடங்கிச் சுச்ரூஷை செய்யக் கடமைப்பட்டவள் அவள்; அவரோடு சமமாக இருந்து அளவளாவும் உரிமை, இன்பம் அவளுக்கு இல்லை. இல்லற வாழ்க்கை அந்த அளவில்தான் அவளுக்கு அமைந்திருந்தது.
எல்லாப் பெண்களையும் போல் அவள் தன் கணவருடன் தாராளமாகப் பேசுவதில்லை. நாலுபேர் இருக்கும் பொழுது அவர் எதிரேகூட வருவதில்லை. சிறிது நேரம் அவருடன் சிரித்துப் பேசினால், “வயது சென்ற கணவருடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது!” என்று வேலைக்காரர் முதல் யாவரும் இகழ்வார்களே என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. கூடியவரையில் அவர் கண்களில் படாமல் இருப்பதை அவள் விரும்பினாள். பெரும்பாலும் உள்ளுக்குள்ளே இருந்து ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பாள். அவளுடைய கலகலப்பான பேச்சு இருந்த இடந் தெரியாமல் அடங்கியது. செயல்களிலும் அடங்கியே நின்றாள். அடக்கமே அவள் ஸ்வரூபமாகி விட்டது.
பிறந்தகம் வந்த சமயங்களிலும் தான் எல்லாரோடும் சமமாக இருக்கும் பாக்கியம் பெற்றவளல்ல என்ற நினைவு அவளை உறுத்திக் கொண்டே இருக்கும். அதனால் அவள் எல்லாரோடும் சகஜமாகப் பேசிப் பழகுவதில்லை. அவளிடத்தில் ஏற்பட்ட மாறுதலை யாரும் கவினிக்கவில்லை. தாயோ பெரியவள் ; அவளுக்குப் பல வேலைத் தொல்லைகள். சகோதரிகள் தங்கள் குடும்பத்தில் கலந்து வாழ்பவர்கள். சகோதரர்களோ புருஷர்கள்; அவர்கள் பெண் உள்ளத்தை எங்கே அறிந்துகொள்ளப் போகிறார்கள்? அதுவும் அவர்கள் உத்தியோகம் ஏற்று வெளியூர்களில் வசிப்பவர்கள். பார்வதியைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு அவகாசம் ஏது? இவ்வாறு, பலருடன் பிறந்தும் அவள் தனியுலகிலேயே சஞ்சரிக்கலானாள்.
இந்தத் தடவை அவள் பிரசவித்து ஒரு மாதந்தான் ஆகிறது. என்றைக்கும் இல்லாத அதிசயமாய் அவள் கணவர் அவளுக்கே நேரில் கடிதம் எழுதியிருக்கிறார். அவள் மனத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. கடிதத்தை வாங்கினாள். நாலுபுறமும் பார்த்து விட்டு அதைப் படிக்கத் தொடங்கினாள். புருஷருடன் குடித்தனம் செய்த பழைய மனைவியானாலும் அந்தக் கடிதம் அவரிடமிருந்து பெற்ற முதற் கடிதந்தானே? சரியானபடி அமைந்த காதலன் காதலியராக இருந்தால் அந்தக் கடிதம் ஆயிரம் இன்ப ஊற்றுக்களை ஒரு கணத்தில் எழுப்பியிருக்கும். பார்வதியின் அதிருஷ்டந்தான் அப்படி அமையவில்லையே! கடிதம் என்னவோ புதியது; இதற்குமுன் இல்லாத வழக்கம். ஆனால் அது அவள் பால் இன்ப உணர்ச்சியை உண்டாக்க வில்லை; அதிக நாணத்தையும், யாராவது கண்டு ஏளனம் செய்யப் போகிறார்களே என்ற பயத்தையுமே அளித்தது.
தக்க பருவத்தில் அமைந்த பொருள்கள் அவளுக்குக் கிடைக்கவில்லை. எல்லாம் தாமதமாகவே கிடைத்தன. நாற்பத்தைந்து வயதுடைய புருஷர் கிடைத்தார்; அவரிடம் காதல் புரிய வகையில்லை. கல்யாணமாகி இவ்வளவு வருஷம் கழித்து நேரே அவளுக்குக் கடிதம் வந்தது. அதைக் கொண்டு இன்ப மாளிகைகள் நிருமிக்க இடமில்லை.
கடிதத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் தாய் சட்டென்று அந்த அறையில் நுழைந்தாள்.
“யார் கடிதாசு?” என்ற அவள் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் பார்வதிக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. அவள் கணவர் அவளுக்கு நேரே கடிதம் எழுதினாரென்பது தாய்க்கு எதிர்பாராத விஷயமாக இருந்தது.
“உங்காத்துக்காரரா? என்ன விசேஷம்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் தாய்.
“அவருக்கு உடம்பு சரியாக இல்லையாம். பாலசந்திரனைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதாம்” என்று சங்கோசத்துடன் பதில் வந்தது.
இதில் என்ன புதுமை இருக்கிறது? பார்வதியின் தாய், “உன்னை வரச் சொல்லுகிறாராக்கும்? ரொம்ப அழகுதான்! இளையாள் மோகம் கிழவர்களுக்கு என்பது சரியாகத்தான் இருக்கிறது. பிரசவமாகி ஒரு மாதம் ஆகவில்லை. அதற்குள் என்ன அவசரம்? நீ இல்லாமல் முடியவில்லை யாக்கும்? நன்னாயிருக்கு! நாலு பேர் கேட்டால் சிரிப்பார்கள் என்று படபடவென்று சொல்லிக் கொண்டு போனாள்.
‘ஏனடா சொன்னோம்!’ என்று ஆகிவிட்டது அந்தப் பேதைப் பெண்ணுக்கு. மேலே அவளுக்கு வார்த்தை வரவில்லை. அவமானமும் துக்கமும் சூழ்ந்துகொண்டன.
அவள் எல்லாரையும் போலிருந்தால் அந்தக் கடிதத்துக்கு எவ்வளவு மதிப்பு இருந்திருக்கும் ? அப்போது அவளை வரச்சொல்லி அவள் புருஷர் எழுதினால் சொந்தத் தாயே பரிகசிக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா? கிழவன் மோகம் என்று தூக்கி எறிந்து பேசிய பேச்சு அந்தப் பெண்ணின் மனத்தைச் சுட்டது. அந்தத் தாய்க்குத் தெரியவில்லையா? கிழவனைக் கணவனாக்கியது யார் பிசகு? கிழவனானால் என்ன? தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் உரிமை போய் விடுமா? அவர்கள் மேல் ஆசை வைப்பது அதர்மமான காரியமா? என்ன உலகம் இது!
பார்வதியின் துக்கமயமான எண்ணங்கள் உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டு சுழன்றன. வெளியே வரவில்லை.
பார்வதிக்கு முதலில் தன் கணவரிடத்தில் கோபம் இருந்தது. அவருடைய முயற்சியினால் தானே தான் அவருக்கு மனைவியாக நேர்ந்தது என்ற எண்ணத்திலே பிறந்தது அந்தக் கோபம். நாளடைவில் அந்தக் கோபம் மாறத் தொடங்கியது. அவரைத் தன் காதலர், கணவர் என்று இப்போது நினைப்பதில்லை. தன் அருமைக் குழந்தை பாலசந்திரனுடைய தந்தை என்ற நினைவினால் அவர்பால் ஒரு பக்தி ஏற்பட்டது. அந்தக் குழந்தையிடம் அவருக்கு இருந்த கரையற்ற அன்பைக் காண அவர் பால் ஒரு விதமான மரியாதையும் கௌரவ எண்ணமும் தோன்றின.
அவர் சாது. ‘இவளை மணந்ததனால் ஓர் அழகிய இள நங்கையின் வாழ்வில் இவள் பெறவேண்டிய இன்பத்தைப் பெறவொட்டாமல் தடுத்துவிட்டோம். இது தவறு’ என்று நினைந்து பச்சாத்தாபப் படுபவரைப் போல நடந்து கொண்டார்.
மணமான புதிதில் அவரைத் தனிமையில் சந்தித்த போது எந்த உணர்ச்சியும் இல்லாத அவள் தன் துர திருஷ்டத்தை நினைந்து விம்மி விம்மி அழுதாள். அந்தக் காலங்களில் அவர் சிறிதளவு கூடக் கோபிக்கவில்லை. அந்த அழுகைப் பாஷையைப் புரிந்துகொண்டவர் போல மௌனமாகவே இருந்தார். அவளைச் சமாதானம் செய்யவும் முயலவில்லை. அந்தச் சமாதானம் அவளுடைய துயரத்திற்கு எல்லை கோலச் சக்தி அற்றதென்று அவருக்குத் தெரியுமோ என்னவோ! அவர் அப்படி ஒன்றும் செய்யாமல் இருந்ததே அவளுக்குப் பெரிய ஆறுதலை அளித்தது.
பார்வதிக்கு அவருடைய நடத்தையில் இருந்த பெருந்தன்மை அப்போதெல்லாம் தெரியவில்லை; இப்பொழுது தெரிந்தது.
அவள் கணவரிடம் சென்று வசிக்க ஆரம்பித்து இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகே பாலசந்திரன் பிறந்தான். குழந்தை தந்தையிடம் தனி அன்பு காட்டினான். அவர் பிரேமையும் அவனிடம் அலாதியாகவே தான் இருந்தது. அதிலிருந்தே பார்வதியின் உள்ளமும் அவர்பால் வெறுப்பு நீங்கி ஒரு வித மரியாதை கலந்த அன்பு கொள்ளத் தொடங்கியது. ஆனால் அதை அவள் எப்போதாவது வெளிக்காட்டி யிருப்பாளா? அதுதான் அவளால் முடிகிற காரியம் அல்லவே!
இப்பொழுது இந்தக் கடிதம் ஒரு பரபரப்பையே உண்டு பண்ணியது. அவருக்கே ஆவல் அதிகரித்துத் தான் அதை எழுதியிருக்கிறார். அவர் எந்த உணர்ச்சி யையும் அடக்கக் கூடியவர் என்பதை அவருடன் பழகிய சில வருஷங்களில் அவள் தெரிந்துகொண் டிருந்தாள்.
“எனக்கு இரண்டு நாளாய்ச் சொற்பக் காய்ச்சலாக இருக்கிறது; காய்ச்சல் கொஞ்சந்தான். பலவீனம். மட்டும் அதிகமாய்த்தான் தோன்றுகிறது. பாலசந்திரனைப் பார்க்க மட்டும் ஆவல் அதிகமாக இருக்கிறது. உன்னால் இப்போது வர முடியுமா?” என்று எழுதியிருந்தது அந்தக் கடிதத்தில்.
வெகு சாதாரணமான சொற்கள். அவற்றுள் எவ்வளவு ஏக்கமும் ஆவலும் அடங்கி இருக்கின்றன என்பதைப் பார்வதி தெரிந்துகொண்டாள். அவள் மனம் அலக்ஷ்யமாயில்லை. உடனே புறப்பட்டுப் போக வேண்டும் என்று இருந்தது. ஆனால் தன் எண்ணத்தை எப்படிச் சொல்லி நிறைவேற்றிக் கொள்ளுவாள்?
தகப்பனார் சாப்பிடும் பொழுது தாய் அவரிடம் பார்வதிக்குக் கடிதம் வந்திருப்பதைச் சொன்னாள் “இப்போது அறுப்புக் காலமல்லவா? யார் கொண்டு போய் விடுவார்கள்? கோபு எனக்கு ஒத்தாசைக்கு இருக்க வேண்டும். வேறு யாரும் ஊரில் இல்லை. நான் எழுதுகிறேன் அவனுக்கு” என்றார் அவள் தந்தை.
“அப்படியும் பிரசவித்து ஒரு மாதம் ஆகவில்லை. அதற்குள் அலைச்சல் பார்வதி உடம்புக்குத் தான் ஆகுமா?” என்றாள் தாய்.
“ஆமாம், அதுவும் வாஸ்தவமே. அவன் எனக்கு எழுதாமல் அவளுக்கு என் எழுதினான்?” என்று வியப்போடு தாமே கூறிக்கொண்டார் தந்தை.
“என்னவோ, பால்யம் திரும்பியிருக்கிறதாக்கும்” என்றாள் தாய்.
இந்தச் சம்பாஷணையைக் கேட்ட பிறகு பார்வதிக்குப் போவதைப் பற்றிப் பேசவே மனம் வரவில்லை. அவர் விரும்புவது நியாயம் என்று வெட்கத்தை விட்டு அவள் எப்படிச் சொல்லுவாள்? தாய்க்கே பரிகாசம் தோன்றுகிறது. கடித்தத்திற்குப் பதிலாவது போடுவோ மென்றால் அவள் தம்பி ஏளனம் செய்வான். ‘என்ன, காதல் கடிதமா?’ என்பான். எல்லாரிடமும் சொல்லி வேடிக்கை செய்வான். அவள் பிராணனே போய்விடும்.
இவ்விதமான போராட்டத்திலேயே இரண்டு நாட்கள் போய்விட்டன. அவள் தந்தை எழுதிய கடிதத்திற்குப் பதிலையே காணவில்லை. அவள் சஞ்சலப்படத் தொடங்கினாள். என்றுமில்லாமல் வந்த அந்தக் கடிதம் உள்ளுக்குள் வேலை செய்து கொண்டே இருந்தது. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அன்று பதில் எழுதிப் போடுவது என்று நினைத்தாள். வேலைக்காரியிடம் ரகசியத்தில் ஒன்றரை அணத் தலை வாங்கிவரச் சொன்னாள். அவள், “ஏதுக்கம்மா?” என்று கேட்ட பொழுது கூடக் குறும்புத்தனமாகவே பார்வதிக்குப் பட்டது. “எதுக்கானால் என்ன ? வாங்கிவா” என்று அதட்டினாள்.
யாவரும் உணவருந்தி மத்தியான்னம் சிறிது சிரம பரிகாரமாகத் தூங்கும் பொழுது கடிதத்தை எழுதுவது என்று தீர்மானித்தாள்.
தகப்பனார் சாப்பிட்டு விட்டுக் காமரா உள்ளில் போய்ப் படுத்துவிட்டார். தாயும் கூடத்தில் புடைவைத் தலைப்பை விரித்துப் படுத்துக்கொண்டாள். கோபுவும் சிநேகிதன் வீட்டிற்கோ வேறு எங்கேயோ சென்றிருந்தான். அவள் குழந்தைகள் இருவரும் தூங்கினார்கள். அவள் கடுதாசியும் பென்சிலும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
பார்வதி அநேக நாவல்கள் வாசித்திருக்கிறாள். அவளுக்கு அதுதான் பொழுதுபோக்கு, கணவன் வீட்டில் கூட. அவைகளிலிருந்து அவள் காதலி காதலனை விளிக்கும் எவ்வளவோ ஆசைச் சொற்களைத் தெரிந்து கொண்டாள். தெரிந்திருந்தென்ன? இப்பொழுது அவளுக்கு அவைகளில் ஒன்றும் உதவாது. வெகு சாதாரணமாகவே, ‘க்ஷேமம், நமஸ்காரம்’ என்று தொடங்கினாள் கடிதத்தை. கடைசியில் பதிலாவது எழுதுகிறோ மென்ற எண்ணமே அவளுக்குச் சிறிது மனச் சமாதானத்தைக் கொடுத்தது. தனக்கு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் பெருமதிப்பை வெளியிட நினைத்தாள். நேரில் அதைச் சொல்வது அவளுக்குச் சாத்தியமல்ல.
பாதிக் கடிதங்கூட எழுதியிருக்க மாட்டாள். அதற்குள் வாயில் கதவை யாரோ இடித்தார்கள். யாரது? பாரு என்று அவள் தந்தை உள்ளிருந்தே அரைத் தூக்கத்தில் கூறினார். பார்வதி கடிதத்தை வைத்து விட்டு எழுந்து சென்றாள். வாயிலில் தந்திச் சேவகன் ஒருவன் நின்றான். “இதுதானா ஜகதீசையர் வீடு?” என்று கையிலிருந்த கவரின் விலாசத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான். “ஆமாம்” என்று கூறிக் கையெழுத்துச் செய்து தந்தியை வாங்கிக்கொண்டு சென்றாள் பார்வதி.
தந்திக்காரன் போய்விட்டான். தெருவில் தூங்கிக் கொண்டிருந்த நாய்கள் சில குரைத்து அவன் சைக்கிளைச் சிறிது தூரம் துரத்தி விட்டுத் திரும்பின. அந்தச் சத்தத்தைக் கேட்டு அரைத் தூக்கத்திலிருந்த அண்டை அயல் வீட்டார் வாயிலில் வந்து பார்த்து, ஜகதீசைய ரகத்துக்குத் தந்தி என்று தெரிந்துகொண்டு, என்ன விசேஷமென்று விசாரிப்போமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் மறுபடியும் போய்ப் படுத்துக் கொள்ளாமல் நின்றார்கள்.
பார்வதி தந்தையிடம் தந்தியைக் கொடுத்தாள். தந்தி எதுவாக இருக்குமென்று அறிய ஏனோ அவள் மனம் துடித்தது. பெஜவாடாவில் இருந்த அவள் தமையன் மனைவி பிரசவித்திருக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கலாம். கிராமாந்தரமாக இருந்தாலும் பல ஊர்களில் பெண்களும் பிள்ளைகளும் வசிப்பதால் தந்தி வருவது அப்படி அபூர்வ சம்பவமல்ல. இருப்பினும் தந்தை பிரித்துப் பார்ப்பதற்குள் அவள் மனம் துடியாய்த் துடித்தது. அதற்கு ஏற்றாப்போல் அவரும் தந்தியைப் படித்தார். “இதென்ன? ‘கைலாசத்திற்கு ஜன்னி பிறந்திருக்கிறது. சுய நினைவில்லை. உடனே வருக’ என்று அடித்திருக்கிறதே என்றார் கலவரத்துடன். பார்வதிக்கு ஒன்றுமே தோன்றவில்லை. பிரமை பிடித்து நின்றாள். தந்தி சமாசாரம் கேட்ட தாய், “பார்வதி தலையில் என்ன எழுதியிருக்கிறதோ தெரியவில்லையே! இளையாளாகத்தான் வாழ்க்கைப்பட்டாள். பொன்னும் புடைவையுமாக உடுத்துத் தாலியைக் கட்டிக் கொண்டிருக்கலாகாதா?” என்று அங்கலாய்க்கத் தொடங்கி விட்டாள். சமாசாரம் நெடுகிலும் பரவிவிட்டது. அண்டை அயலார், “ஒன்றும் இராது” என்று ஆளுக்கு ஒரு சமாதானம் சொல்லிச் சென்றனர்.
பார்வதி, அவள் தாய், தந்தை மூவரும் குழந்தைகளுடன் கிளம்பி விட்டார்கள். சாமான்களுடன் பாதி எழுதின கடிதத்தையும் எடுத்துச் சென்றாள் பார்வதி. அவருக்கு உடம்பு சௌகர்யமானவுடன் பார்ப்பார் அல்லவா?
அவர்கள் சென்ற பொழுது கைலாசத்திற்குச் சுய நினைவு இல்லாமல் தான் இருந்தது. பக்கத்து ஊர்ச் சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டர் வந்து பார்த்து, “இன்னும் சில விநாடிதாம் உயிருடன் இருப்பார்” என்று சொல்லி விட்டார். ‘ஏதோ விஷ ஜுரம், சரியான வைத்தியமில்லாமல் இவ்வாறு நேர்ந்தது’ என்பது அவர் அபிப்பிராயம்.
கூடத்தில் ஒரு பெஞ்சியில் கைலாசமையர் படுத்திருந்தார். லேசாகச் சுவாசம் வந்து கொண்டிருந்தது. மிராசுதார் ஆகையால் காரியஸ்தன் முதலானவர்களும் ஊர் ஜனங்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
இவர்களைக் காணவும் அவர்கள் சிறிது வழிவிட்டு விலகினர். “கைலாசம், கைலாசம்” என்று அவர் முகத்திற்கு நேராகக் குனிந்து கூப்பிட்டார் பார்வதியின் தந்தை. கைலாசத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லை. மூச்சுமட்டும் வந்ததே தவிர இவ்வுலக சிந்தையே அவரை விட்டுப் போய்விட்டதென்று தெரிந்தது. “ஐயோ! அம்மா, பார்வதி! இப்படி வந்துவிட்டதே உனக்கு !” என்று தந்தை வருந்தினார். பார்வதிக்கு ‘ஹோ’வென்று கதற வேண்டும்போல் இருந்தது.
தனக்கு அவரிடத்தில் ஏற்பட்டிருக்கும் அன்பை வெளியிட அவள் இப்பொழுதுதானே நினைத்தாள். அவர் அதைத் தெரிந்துகொள்ளாமல் போகிறாரே. அவளுக்குத் துக்கம் பொறுக்க முடியாதுபோல் இருந்தது. குழந்தை பாலசந்திரன் அவ்வளவு பேரையும் பார்த்துப் பிரமித்து நின்றவன் தந்தை படுத்திருப்பதைக் கிட்ட நெருங்கிப் பார்க்கவும், யாவரையும் மறந்து, ‘அப்பா’ என்று மழலைச் சொற்களால் கூவிக்கொண்டு அவர் படுத்திருந்த பெஞ்சியை நோக்கித் தாவினான். பக்கத்தில் நின்ற சிலர் அவர் மேல் விழ விடாமல் அவனைப் பிடித்துத் தூக்கிக் கொண்டனர். குழந்தையின் குரல் கேட்டவரைப் போலக் கைலாசத்தின் உடல் ஒரு குலுங்கு குலுங்கிற்று. கண்களை விழித்து மலர நோக்கினார். மறுகணம் அவர் பிராணன் போய் விட்டது. பார்வதியையும் பாலசந்தரனையும் அவர் தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டார்.
பார்வதியின் மனம் பிளந்து விடும் போல் இருந்தது. வாய் விட்டுக் கதறி அவர் மேல் விழுந்து புரண்டு அழ நினைத்தாள். இவ்வளவு பேர் முன்னிலையிலா? அந்தப் பாழும் சங்கோசம் இப்பொழுதும் அவளை விடவில்லை. இனி யார் எது நினைத்தால் அவளுக்கு என்ன? அவள் கணவர், அவள் அருமை மகன் பாலசந்திரனின் பிரியமான தந்தை போய் விட்டார். அவள் கைம்பெண்ணாகி விட்டாள். பாலசந்திரன் குழந்தைப் பருவத்திலேயே தந்தையின் ஆதரவை இழந்துவிட்டான். அவள் பேதை மனம் கதறிப் புலம்பத் தூண்டியது. ஆனால் அவள் என்னவோ அப்படிச் செய்யவில்லை. இவ்வளவு காலமாக மன எழுச்சிகளை அடக்கிப் பழக்கப்பட்ட அவளுக்கு அது சாத்தியமாகவில்லை. கண்ணீர் சொரிந்து ஸ்தம்பித்து நிற்கத்தான் அவளால் முடிந்தது.
அவளைப்பார்த்து யாவரும் அங்கலாய்த்தனர். அவள் இளவயசும் சௌந்தரியமும் அனைவர் உள்ளத்தையும் மிகவும் வருத்தின.
இப்படியாகப் பார்வதியின் வாழ்க்கையே முடிந்து விட்டது. “இவ்வளவு அதிகமாவதற்கு முன்பே ஏன் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை?” என்று பார்வதியின் தந்தை பிறகு சாவகாசமாகக் காரியஸ்தன் முதலானவர்களை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். அதற்கு அவர்கள் முதல் நாள் வரை அவர் சாதாரணமாகவே இருந்ததாகவும், அவர் கடிதத்திற்குக் கூடத் தாமே பதில் எழுதுவதாகச் சொன்னதாகவும், நேற்றுக் காலையில் கூட அவ்விடமிருந்து இன்னும் ஏதாவது கடிதம் வந்ததா என்று விசாரித்துக் கொண்டிருந்ததாகவும், இரவிலிருந்து தான் திடீரென்று இம் மாறுதல் ஏற்பட்ட தென்றும், பொழுது விடிந்து தந்த ஆபீஸ் திறந்தவுடன் தந்தி கொடுத்து விட்டதாகவும் வெகு பணிவாகச் சொன்னார்கள்.
‘எந்தக் கடிதத்தை அவர் எதிர்பார்த்தார்? நாம் பாதி எழுதி வைத்திருக்கும் கடிதத்தையா?’ என்று பார்வதி எண்ணினாள். ஆம்! அந்தக் கடிதத்தையும் அவர் பார்க்கவில்லை; ஊரிலிருந்து ஆவலாக வந்த அவளையும் பார்க்கவில்லை. கடிதம் முடியவில்லை; அதற்குள் அவள் மங்கல வாழ்வு முடிந்துவிட்டது.
– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.
– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.