முகவரி தேவை




அந்த ஆரஞ்சுப்பழம் என்னப்பா விலை? கிலோ நாற்பது ரூபா சார். சரி அதுல அரை கிலோ கொடு, பர்ஸில் இருந்து பணம் எடுத்து கொடுத்து பழத்தை வாங்கியவன்,
மிகுந்த எச்சரிக்கையுடன் இரு புறமும் பார்த்து வாகனங்கள் வராத நேரம் பாதையை தாண்டி எதிரில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தேன்.பார்க்க வந்தவர் ஒரு விபத்தில் அடிபட்டு இரண்டாம் மாடியில் படுத்திருக்கிறார்,விபத்துக்கு காரணம் நான் தான்.
மனசு பட படத்தது. விபத்து நடந்தபோது கொண்டு வந்து சேர்த்தது. அதன் பின் நான்கு நாட்கள் கழித்து இப்பொழுத்துதான் பார்க்க வருகிறேன்.எப்படி வரவேற்பார்களோ.
மனது படபடப்புடன் அவர் கட்டிலை நெருங்குகிறேன்.மனிதர் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
சுற்றும் முற்றும் பார்த்தேன், இவருக்கு உறவினர்கள் யாராவது தென்படுவார்களா? பத்து நிமிடம் நின்ற பின் ஒரு வயதான மாது அவர் கட்டிலுக்கு அருகே வந்தவர் என்னைப்பார்த்து யார் என விசாரிப்பது போல முகத்தை சுருக்கினார். ஒரு நிமிடம் தயங்கினேன், என்ன சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வது.இவர் பெயர் கூட தொ¢யாது. மெல்ல நான் அவரோட நண்பன் என்று சொன்னேன்.அந்த “மாதின்” முகம் மலர்ந்தது. இப்பவாச்சும் பார்க்க வந்தீங்களே, யாரோ புண்ணியவான் இங்க கொண்டு வந்து சேர்த்துட்டு போனதோட சரி. எனக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சி,ம்..ஒரே பையன். அவங்க அப்பாவும் உயிரோட இல்லை. இவனைத்தான் மலை போல நம்பியிருந்தேன்,இவனும் இப்படி வந்து படுத்துட்டான். அந்த மாது துக்கம் நிறைந்த குரலில் சொல்லிக்கொண்டே போனாள்.
டாக்டர் என்ன சொன்னாரு? பேச்சை மாற்ற கேள்வியை கேட்டேன். இப்ப நல்லாயிடுச்சு இன்னும் இரண்டு நாள்ல அனுப்பறேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு மனதில் நிம்மதி வந்தது.கொண்டு வந்த சேர்த்த பொழுது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். சரி நான் கிளம்பறேன் என்று ஆரஞ்சு பழ பொட்டலத்தை கொடுத்துவிட்டு ஆயத்தமானேன்.தம்பி எந்திரிச்சா என்னன்னு சொல்றது. நான் யார்? எங்கிருந்து வருகிறேன்?என்று எப்படி சொல்வது,முகவரியே தடுமாற்றம். அந்த மாதின் கேள்விக்கு நண்பன்னு மட்டும் சொல்லுங்க தொ¢ஞ்சுக்குவாரு. மெல்ல நகர்ந்தேன்
வெளியே வரும்பொழுது என் சிந்தனைகள் மெல்ல அன்று நடந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்தது சந்தடி மிகுந்த இரயில்வே ஸ்டேசன்சாலையில் ஸ்டேட் பாங்கில் இருந்து வெளியே எதோ ஒரு கம்பெனி பணத்தை வங்கியில் போடவோ அல்லது எடுக்கவோ வந்து கொண்டிருக்கும் ஒருவரை குறி வைத்து நான் வேகமாக நடந்து வர, அவர் என்னைப்பார்த்து ஏதோ சைகை காட்டியதை நான் புரியாமல் பார்ப்பதற்குள் அவர் ஒடி வந்து என்னை அந்தப்புறம் தள்ளிவிட்டார். நான் கீழே விழும்போது “டமால்” என்ற சத்தம் எழுந்த பார்த்த பொழுது இவர் அடிபட்டு கிடந்தார்.எனக்கு அப்பொழுதான் தொ¢ந்தது. என்னை இடிப்பது போல வண்டி வருகிறது என்று சொல்லத்தான் சைகை காட்டியிருக்கிறார். நான் வேறு எண்ணத்துடன் இவரை அணுக நினைப்பதற்குள் அவரே என்னை காப்பாற்ற பாய்ந்து வந்து தள்ளிவிட்டு திரும்புவதற்குள் அந்த வண்டி அவர் மீது மோதிவிட்டது.
அவரை சுற்றி கூட்டம் அதிகமாக ஆரம்பித்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்து அங்குள்ள ஓரிருவரை துணைக்கு அழைத்து அருகில் உள்ள அரசாங்க மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு குற்ற உணர்ச்சியில் கிளம்பிவிட்டேன்.அதற்குப்பின் இப்பொழுதுதான் வருகிறேன். இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்திருக்கலாம், அவர் விழித்திருந்தாலும் விழித்திருப்பார்.தவறு செய்துவிட்டேனோ என்று மனம் சொன்னாலும். விழித்திருந்தாலும் என்ன சொல்லி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்வது. அவர் தூங்கிக்கொண்டிருந்ததே நல்லது என்று மனம் சமாதானம் சொல்லிக்கொண்டது.
ஒரு மாதம் ஓடியிருக்கும், எனக்கு தொழில் ஒன்றும் ஓட்டமில்லை, சோர்ந்தவாறு இரயில்வே ஸ்டேசன் பாதையிலே நடந்து வந்து கொண்டிருந்தவன் எதேச்சையாக ஸ்டேட் பாங்க் வாசலை பார்க்க அன்று அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்தவர் எதிரில் வந்து கொண்டிருந்தார்.எனக்கு தொழில் முறையில் பரபரப்பு வந்தாலும், இவருக்கு என்னை அடையாளம் தெரியுமா என நினைத்தவாறு மெல்ல அவர் எதிரில் நின்று அவர் முகத்தை பார்த்தேன். அவர் என் முகத்தை பார்த்து ஒன்றும் சொல்லாமல் கொஞ்சம் தள்ளி நில்லுங்க சார். என்று என் தோளை பிடித்து தள்ளிவிட்டு வேக வேகமாக சென்று கொண்டிருந்தார்.
என்னை அடையாளம் தெரியவில்லையா? அன்று நடந்ததை மறந்து விட்டாரா? மனசு வியப்புற்றாலும் மனதுக்குள் ஒரு நிம்மதி வந்து உடகார்ந்து கொண்டது. என்னைப்போன்ற ஜேப்படி தொழில் செய்பவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மறப்பது சுலபமல்ல. ஆனால் இவரை அன்று ஜேப்படி செய்ய அணுகும்போது தன் உயிரை கூட மதிக்காமல் என்னை காப்பாற்றினாரே,ஆனால் அதைக்கூட விபத்தில் பாதிக்கப்பட்டும் யாரால் பாதித்தோம் என்பதை கூட மறந்து விட்டாரே.மனிதர்களில் இப்படி கூட உண்டென்றால்,நான் மட்டும் ஏன் இப்படி?
தொழிலை மாற்றவேண்டும், எனக்கு என்று முகவரியை இந்த சமுதாயத்தில் தேட வேண்டும்.மனதில் வைராக்கியம் மெல்ல நுழைந்தது.