கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,294 
 
 

ஒரு முன் குறிப்பு

இந்தக் கதை ஒரு கற்பனையே. இதில் வரும் பிரபலங்களின் பெயர்கள் மட்டுமே உண்மை. சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. இது வரை இப்படியெல்லாம் நடந்தது இல்லையென்றாலும் கூடிய விரைவில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதே தெரிகின்றன.


18.10.2028 தேதியிட்ட குமுதம் வார இதழில் ஒரு புதுமையான விளம்பர அறிக்கை வெளி வந்தது. பத்திரிகை உலகில் இது வரை யாருமே செய்யாத ஒரு புதுமை.

நடுப் பக்கத்தின் இடப்புறத்தை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் புகைப்படம் நிறைக்க, வலப்புறத்தில் கொட்டை எழுத்துக்களில் அந்த விளம்பரம்:

மீண்டும் கணேஷ், வசந்த்!

கடந்த இருபது ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பேனா மறுபடியும் உயிர் பெற்று எழப் போகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த கணேஷ், வசந்த் பாத்திரங்களை மையமாகக் கொண்டு சுஜாதாவின் அதே துள்ளல் நடையில் மின்னல் வேகத்தில் செல்லும் ஒரு துப்பறியும் கதை அடுத்த வாரத்திலிருந்து தொடராக வெளி வருகிறது. மெலிதான நகைச்சுவை, கிண்டல், சொற் சிக்கனம், சடக் திருப்பங்கள் என்று சுஜாதாவின் டிரேட் மார்க் பாணியை முழுக்க முழுக்க பின் பற்றி இந்தக் கதையை எழுதிய எழுத்தாளர் யார் என்பதை கதையின் முடிவில் அறிவிப்போம்.

விளம்பரம் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் வெளி வர ஆரம்பித்து ஓரிரு வாரங்களில் கதை பலரையும் பல விதத்தில் பாதித்தது. சுஜாதாவின் பாணியிலிருந்து இம்மியும் பிறழாமல் வரிக்கு வரி அவர் எழுதியது போலவே கதை இருந்தது எல்லோரையும் பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இருபது ஆண்டுகள் சுஜாதாவின் எழுத்திற்காக ஏங்கிக் கிடந்த அவரது பரம ரசிகர்கள் மீண்டும் சுஜாதா கிடைத்து விட்டார் என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஆனால் அவருடைய சில ரசிகர்கள் வெகுண்டு எழுந்து சுஜாதா எனும் மாபெரும் கலைஞனக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம் இது என்று காரசாரமாக அறிக்கை விட்டனர். இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்வதற்கு சுஜாதாவின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்கினார்களா என்று அக்கறையுடன் விசாரித்தார்கள். இதென்ன பெரிய விஷயம், தான் எழுதியதை சுஜாதா எழுதினார் என்று எத்தனை பேர் வாட்ஸாப்பில் வெளியிட்டிருக்கிறார்கள், ரொம்ப லேட்டாக அல்லவா குமுதம் இதை செய்கிறது என்று ஒரு கும்பல் கிண்டல் செய்தது. கதையை தீவிரமாக அலசி ஆராய்ந்த ஒரு சிலர், சுஜாதாவைத் தவிர வேறு யாராலும் இப்படி எழுத முடியாது. ஒரு வேளை அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரோ என்று புரளியைக் கிளப்பி விட்டார்கள். சமூக வலைத்தளங்களில் விஷயம் மேலும் மேலும் பேசப்பட, குமுதம் சர்க்குலேஷன் விறு விறுவென்று ஏற ஆரம்பித்தது.

நாலைந்து வாரங்கள் கழித்து சர்ச்சை வேறு வழியில் திரும்பியது. கதையை எழுதுவது யாராக இருக்கும் என்று எல்லோரும் விவாதிக்க ஆரம்பித்தார்கள். கண்டிப்பாக இது பட்டுக்கோட்டை பிரபாகர் தான், அவருக்குத் தான் சுஜாதாவின் நடை வரும் என்று ஒரு சாரார் அடித்து சொன்னார்கள். இல்லை, இது ஜெயமோகனாக இருக்கலாம். சர்ச்சைகளை பெரிதும் விரும்பும் அவர் தன் ரசிகர்களை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்க செய்யும் சாகசம் இது என்று சிலர் சந்தேகித்தனர்.

குமுதம் ஆசிரியர் குழுவிலிருக்கும் ஒருவரது வேலையாக இது இருக்கலாம், சோர்ந்து படுத்துக் கிடக்கும் குமுதம் சர்க்குலேஷனை தூக்கி நிறுத்தும் ஜிம்மிக்ஸ் வேலை இது என்று ஒரு சிலர் அபிப்பிராயப்பட்டனர்.

பல வாரங்கள் தொடராக வெளி வந்து சுஜாதாவின் பழைய ரசிகர்கள், புதிய ரசிகர்கள் என்று எல்லோரையும் பெரிய அளவில் கவர்ந்த கதை ஒரு வழியாக முடிந்தவுடன், குமுதம் ஒரு சின்ன அறிக்கை வெளியிட்டது:

மீண்டும் கணேஷ், வசந்த்!

கடந்த பதினெட்டு வாரங்களாக வெளி வந்து உங்கள் மனதையெல்லாம் கொள்ளை கொண்ட இந்தக் கதையை எழுதிய மர்ம எழுத்தாளர் யார் என்பதை அறிய நீங்களெல்லாம் மிகவும் ஆவலுடன் இருக்கிறீர்கள். இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்று கிளம்பிய விவாதங்கள் இன்று வரையிலும் தொடருகிறது. ஆனால் நீங்கள் சந்தேகப்பட்ட எந்த எழுத்தாளரும் இந்தக் கதையை எழுதவில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்தக் கதையை எழுதியது ஒரு எழுத்தாளரே அல்ல. உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் அதிகமாக உபயோகிக்கும் ChatGPT தான் இந்தக் கதையை எழுதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *