மிமிக்கிரி – ஒரு பக்க கதை





நாகப்பன் எழுந்து நின்று மிமிக்கிரி செய்தான். சக ஊழியர்கள் கைகளைத் தட்டி ‘ஒன்ஸ் மோர்’ என்றார்கள். எல்லோரும் சிரிப்பில் மிதந்து கொண்டிருக்க ஓரமாக அமர்ந்திருந்த சீனு மட்டும் சிரிக்கவில்லை. எப்படி சிரிப்பான், சீனுவின் வாரத்தை உச்சரிப்பை வைத்துதானே கிண்டல் நடந்து கொண்டிருந்தது.
வடை என்பதை வதையென்றும், பழத்தை பதம் என்றும் சீனு உச்சரிப்பான்.
அன்றும் வழக்கம் போல, அரட்டைக் கச்சேரியை எதிர்பார்த்து ஊழியர்கள் கூடினார்கள். நாகப்பன்தான் வரவில்லை. தொடர்ந்து பத்து நாளாக அவன் பணிக்கு வரவில்லை. பத்து நாள் கழித்து அலுவலகம் வந்த நாகப்பனிடம் பெரும் மாறுதல் காணப்பட்டது. மிமிக்கரி செய்வதை நிறுத்திவிட்டான்.
அவன் கடும் காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் ஊழியர்களில் சீனு மட்டுமே பழங்கள் வாங்கிச் சென்று பார்த்து ஆறுதலான வாரத்தைகளால் தேற்றி வந்தான்.
கண்களில் நீர் வழிய, மனதுக்குள் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டான் நாகப்பன்.
– ஆள்வநேரி சாலமன் (27-10-10)