கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 10,408 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

மழைக்கு – விடாத தொடர் மழைக்கு – பழகிப்போன மலையாளத்துக்கே புதுமையான ஒரு பேய் மழை! 

சரிவுகள் எல்லாம் நீர்வீழ்ச்சியாக மாற, மின்னல் இடையிடையே பளீர் பளீரென்று மின்ன, இடியால் தாக்குண்ட மரங்கள், மழை நீரினிடையே அக்கினி ஜுவாலையோடு பற்றி எரிந்தவாறு விழும் காட்சி, ஊழிக் கூத்தைப் போல் பயங்கரமாகத் தோற்றமளித்தது. 

எரிந்து விழும் மரம், விடாது பெய்யும் மழை. அத்தோடு கும்மிருட்டு. மூன்றும் சேர்த்து ஒரு விபரீதக் கலவையாகக் காட்சி தந்தன. 

இரவு மணி பத்திருக்கும். ஷோரனூரிலிருந்து குருவாயூர் செல்லும் பாதையில், இயற்கையின் இந்தப் பயங்கர பாடகத்துக்கு இடையில் செயற்கையின் சின்னமான ஒரு மோட்டார் பஸ், துணிவோடு, அதன் முன் விளக்குகள் மங்கலாக எரிய, மெள்ள ஊர்ந்து வந்தபடி இருந்தது. 

அந்த பஸ்ஸில் மூன்றே பிரயாணிகள், டிரைவர் – கண்டர்டரைத் தவிர ஓர் இளைஞன், இளமங்கை, மூன்று வயதுச் சிறுமி. 

மூவரும். ஏன் இந்த இரவு வேளையில் பயணம் புறப்பட்டோம் என்ற பீதியில் இருந்தனர். டிரைவர், ‘எந்த வேளையில் இந்த பஸ்ஸை எடுத்தோமோ’ என்ற கவலையோடு இருந்தார். அவரருகில் உட்கார்ந்திருந்த கண்டக்டர், வேலைக்குப் புதியவன். பயத்தால் உணர்விழந்து, எதுவும் பேசாமல், எதிரே பஸ்ஸின் முன் விளக்குகளின் வெளிச்சத்தில் தெரியும் நீர்த்திரை போன்ற மழையை விறைத்துப் பார்த்தடி இருந்தான். 

சாலையோரத்தில் தெரியும் பிரம்மாண்டமான மரங்கள் நிறைந்த பள்ளத் தாக்குகளைப் பார்க்கும் போதெல்லாம், பீதி அவன் அடி வயிற்றைப் பற்றிக் கொண்டது. “பஸ்சை இவ்விட நிறுத்திக்கோ!” என்று அடிக்கடி மலையாளத்தில் சொல்லிக் கொண்டிருந்தான்.

தாயான பின்னும் அவள் நிலையில் முன்னேற்றம் தெரியவில்லை. உடல் ஒன்றைத் தவிர. அவளுக்கும் மனம், உணர்ச்சிகள், அறிவு என்பவை இருப்பதாகவே அவள் கணவன் கருதவில்லை. அவனுக்குப் புரிந்த அந்த உடலையும் அவன் மென்மையாகவோ, தன்மையுடனே நடத்தவில்லை. காதல் வாழ்க்கை தேன் பாயும் ஆறு என்று நம்பி, கணவன் வீடு நுழைத்தவளுக்கு, அது ஒரு நச்சுப் பொய்கையாகத்தான் மாறியது. 

மாலை வேளைகளில் அவள் பழம் வாங்கச் செல்லும் டீக்கடைக்காரனின் புன்முறுவல், தன்னையும் மதிப்போடு நடத்தும் ஒரு மனிதனும் இந்த உலகத்திலிருக்கிறான் என்பதை அவளுக்குக் காட்டியது. பல நூறு முறைகள் குருவாயூரப்பன் சந்நிதியில், அவள் வீட்டின் நிலை மாறவேண்டும் என்று வேண்டியிருக்கிறாள். ஆனால் குருவாயூரப்பன் அருள் கிட்டவில்லை; இளைஞனின் கருணை தான் கிட்டியது. அதுவும் அவள் வீட்டுக் கொல்லைப்புறத் தோப்பில், இரவில், அவனைச் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பில் ஆண் பெண் உறவின் மென்மையை உணர்ந்தாள், மாற்றானோடு இன்பத்தை உணர்த்தபின், கணவன் அளித்த துன்பம் பன்மடங்கு அதிகமாகத் தெரிந்தது. பொறுமையின் எல்லையில் துணிவு பிறந்தது. குழந்தை யோடும். மாற்றான் துணையோடும் புது வாழ்வு நோக்கிப் புறப்பட்டாள். அந்த விடுதலைப் பணமா இப்படி இருக்க வேண்டும்? அவளது துணிவு வீட்டைவிட்டு இருபது மைல் வரும் வரையில்தான் இருந்தது. 

அதன்பின், தான் செய்வது பாவம் என்ற உணர்வும், அதன் சுமையும் தான் மிஞ்சின. தன்னையே வெறுத்தாள். தன்னுடன் வந்தவனையும் வெறுத்தாள்.

டீக்கடைக்காரனோ, ஊரைவிட்டு ஓடி வந்துவிட்டதால் தான் இழந்து விட்ட வியாபாரத்தை எண்ணி ஏங்கினான். ஊரிலிருந்தபடியே ரசசியமாக இந்தத் தொடர்பை வைத்துக் கொண்டிருக்கக் கூடாதா என்று நினைத்தான். அதிக முதல் போட்டு, குறைந்த லாபத்தை அடைந்துவிட்ட வியாபாரி போல் மனம் கசந்து நின்றான். ரகசியம், கணவன் வீடு என்ற தடை இரண்டும் இருவரின் உறவையும் வளர்த்தன. அத்தடை நீங்கியதும், உறவும் கசக்கத் தொடங்கியது. 

இருண்ட வழியில் மருண்டு நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸில், ஒடி வந்த பெண்ணும், கடத்தி வந்த இளைஞனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பளீர் என்று வீசிய மின்னல் இருவரையும் பார்த்து இடி இடியென்று நகைத்தது. டிரைவரின் கண்கள் மின்னல் ஒளியில் சில வினாடிகளுக்குக் குருடாகிவிடவே, அவன் கால்கள் பிரேக்கை அழுத்த மறந்தன. பஸ் பள்ளத்தை நோக்கிப் வேகமாகப் பாய்ந்தது. 

கண்டக்டர், இனிமேல் வாழ்வில் நமக்குக் கூச்சலிடும் வாய்ப்பே கிடையாது என்பதை உணர்ந்தவன் போல் அலறினான். பஸ்ஸில் இருந்த பெண். கண்டக்டரின் அலறலைக் கேட்டாள். 

உள்ளிருக்கும் பீதியை அடக்க, மங்கலாகத் தெரியும் பாதையில், பஸ்ஸைக் கொண்டு செலுத்தும் பொறுப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தியபடி இருந்த டிரைவருக்குக் கண்டக்டரின் குறுக்கீடு ஆத்திரத்தைக் கொடுத்தது. 

வந்த வழியெல்லாம் ஊரில்லாத மலைப் பகுதி. மலைப் பாம்புகளின் வாசஸ்தலம். பஸ்ஸை நிறுத்தவோ திருப்பவோ இடமில்லாத குறுகிய சாலையில், எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் டிரைவர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டே இருந்தார். இன்னும் இரண்டு மைல் களுக்கப்பால் ஒரு சிற்றூர் இருப்பதாக ஞாபகம். அதை அடைந்துவிட்டால் ஒரளவு நிம்மதி என்று நினைத்தபடி பஸ்ஸை ஒட்டிவந்தார். 

திடீரென்று ஒரு மின்னல். அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் பயங்கர இடி. நீண்டு உயர்ந்த மரத்தின் மீது விழுந்தது. சோவென்று பெய்யும் மழையின் நடுவே அந்த மரம் கடகட வென்று முறிந்து, பஸ்ஸின் பின்புறம் விழுந்தது. அதே மரம், பஸ்லின மீதே விழுந்திருந்தால்….? 

பஸ்ஸில் உட்கார்ந்திருந்த குழந்தை அச்சத்தால், “அம்மே,” என்று சொல்லி, தனது தாயின் உடலைத் தாவிக் கட்டிக் கொண்டது. உடல் நனைந்து, உடல் நனைத்து, உள்ளம் பயந்து, முகம் வெளுத்து உட்கார்ந்திருந்த அந்தப் பெண், அருகிலிருந்த இளைஞனிடம், “எனிக்கி பயமாகுன்னு. நம்மள் செய்யுன்ன பாவம் குருவாயூரப்பனுகூடி பொறுக்கில்லா. நம்மள் பாலக்காட்டக்கே ஜீவனோட போகில்லா. அதுனு வேண்டியாணு ஈ பரிசோதனா,” என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள். 

பாவம், புண்ணியம் என்ற சொற்களின் அர்த்தமே புரிந்துகொள்ள முடியாத மூன்று வயதுக் குழந்தை, தாய் அழுவதைப் பார்த்துத் தானும் அழுதது. “அம்மே! அச்சன் எவ்விடே? அம்மே! அச்சன் எவ்விடே?”

பயம் வரும்போது தகப்பம்ன நினைப்பது குழந்தையின் இயற்கை போலும். அந்த இளைஞனுக்குக் குழந்தையிடம் கோபம்தான் வந்தது. அவன் அதன் தகப்பனாரல்லவே? ஆனால் குழந்தையின் தாய்க்கு அழுகை வந்தது. இளைஞன் குழந்தையை அடிக்கக் கையை ஓங்கினான். குழந்தையின் தாய் அவனைத் தடுத்துவிட்டு, வெறுப்போடு அவனை நோக்கினாள். கணவன் வீட்டில், கணவனும் அவன் தாயும் மிருகத்தனமாக நடந்து கொண்டதன் விளைவாக, வாழ்வு சுசந்து போய், எங்கானது ஓடினால் போதும் என்று நினைத்து, நள்ளிரவில் டீக்கடைக்காரனோடு ஓடிவந்தது பெரும் முட்டாள்தனம் என்பதை உணர்ந்தாள். 

கணவன் வீடு என்ற சிறையில் சித்திரவதைப்பட்டபோது, டீக்கடை இளைஞன் தனக்கு விடுதலை கொடுத்து, புது உலகத்தின் கதவுகளையும் திறந்து தன்னை இன்பத்தின் சிகரத்துக்கு அழைத்துப் போவான் என்று நம்பியவளுக்கு, பஸ்ஸில் ஏறியதிலிருந்தே குழப்பம் ஏற்பட்டது. டீக்கடைக்காரனின் கவர்ச்சி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்தது. அவனும், ‘தவறு செய்கிறோம்’ என்ற உணர்ச்சியில் இருந்ததால் சிறிய விஷயங்களுக்கெல்லாம் பொறுமை இழந்தபடி இருந்தான். ‘அவனுக்கும் கோயம் வரும், வெறுப் புணர்ச்சியை அவன் முகமும் காட்டும்’ என்பதை அந்தப் பெண் அவனேடு பஸ்ஸில் ஏறிய பின்தான் உணர்ந்தாள். 

ஒரு முள் படுக்கையாக இருந்த அவளுடைய இறந்த காலத்துக்கு மூடி போட்டுவிடலாம் என்று நினைத்த அவள் அது முடியாது என்பதைத் தன் மகளின் முகத்தைப் பார்க்கும்போது உணர்ந்தாள், இனி, கணவன் வீடு திரும்ப முடியாது. எதிர்காலமோ, பஸ்ஸுக்கு வெளியே இருந்த கும்மிருட்டுப்போல் புரியாத பயங்கரமாகத் தெரிந்தது. 

டீக்கடை இளைஞனின் அழகான முகமும், மேனியும் பார்க்கப் பார்க்க இனிமையாக இருந்தாலும், வாழ்வின் சோதனைகளை உறுதியோடு தாங்கக் கூடிய வலிமை அற்றவன் அவன் என்பதை, அவன் புயலுக்குப் பயப்படுவதைக் கண்டதும் உணர்ந்தாள். இயற்கையின் கோரப் புயலைக் கண்டு அவள் பயப்படவில்லை. காரணம், அவள் உள்ளத்தில் வீசிய கோரமான புயல் தான். அவள் கணவனைவிட அழகானவன் அவளைக் கடத்திவந்த இளைஞன். அவள் வீட்டைவிட்டு ஓட அவனது சுவர்ச்சி மட்டும் காரணமல்ல. கணவன் வீட்டில் அவள் கண்ட கொடுமை! 

சிறு தவறுகளுக்கெல்லாம் பெல்ட்டால் அடிக்கப்படுவாள். அடுத்த கால் மணிக்கெல்லாம் கணவனில் மிருக அணைப்பிற்குச் சிரித்த முகத்தோடு தயாராக வேண்டும். துன்பத்தின் ஆழத்திலிருந்து இன்பத்தின் உச்சிக்குச் சில வினாடிகளில் தாவ வேண்டும் என்று எதிர்பார்த்தான் அவள் கணவன். அடுத்த வினாடி ஜன்னல் வழியே பார்த்தாள். அப்போது மின்னிய மின்னல், அவளுக்கு நிலையைத் தெளிவாக உணர்த்தியது. 

பஸ், பிரம்மாண்டமான பாதாளத்தின் விளிம்பின் மேல் போய்க் கொண்டிருத்தது. உடனே ‘கடபட’ என்று ஏதோ சத்தம்! ஒரே இருட்டு! பஸ் வேகமாக உருண்டது. தன்னால் தீர்க்க முடியாத சிக்கலான ஒரு பிரசினையை பஸ் நிரந்தரமாகத் தீர்த்துவிட்டது என்பதை அவள் உணர்ந்தாள். உடனே ஒரு நிம்மதி. அவள் தலை, இருட்டில் எதையோ தாக்கியது. தன் கையில் குழந்தை இல்லை என்பதை உணர்ந்தாள். குழந்தை எப்போது, எப்படித் தன்னிடம் இருந்து விசிறி எறியப்பட்டது என்பது புரியவில்லை.

அவளையும் அறியாமல், ‘அய்யோ மோகினி!’ என்று கூச்சலிட்டாள். அதன் பிறகு அந்தக் காட்டில் மனிதக் குரலே கேட்கவில்லை. 

பஸ்ஸின் உலோகப் பகுதிகள் பாறையிலும் சிறு மரங்களிலும் மோதி இடறும் சப்தம்தான் கேட்டது. மழை மட்டும் பெய்து கொண்டே இருந்தது. பள்ளத்தாக்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த ஒரு சிறு வீட்டில், சுமார் முப்பது வயதுள்ள ஒரு மலையாளத்து மாது, பேரிரைச்சல் கேட்டு விழித் தெழுந்தாள். மழையின் சப்தம், இடியின் உறுமல் அவளுக்குப் பழகிப் போனவை. ஆனால் இந்தச் சப்தம் அவள் காதுகளுக்குப் புதியவை.

என்ன சப்தம் என்று ஆராய்ந்திருப்பாள். ஆனால் அதற்கு அவகாசமில்லை. அவள் படுத்திருந்த இடத்துக்கருகிலிருந்த படுக்கை காலியாக இருப்பது கண்டு திடுக்கிட்டாள்.

அந்தப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த சிறு வீட்டில், நாராயணி அம்மாளையும், அரைப் பைத்தியமான அவளுடைய ஏழுவயதுப் பிள்ளை சங்கரன் குட்டியையும் தவிர வேறு யாரும். இல்லை. நாராயணி அம்மாளின் கணவன் இறந்து நான்கு வருடங்களாகின்றன. நாராயணி அம்மாளுக்குத் துணை சங்கரன் குட்டி, சங்கரன் குட்டிக்குத் துணை நாராயணி அம்மாள் என்ற அமைப்பில் அவர்கள் வாழ்வு நடந்து கொண்டிருந்தது. கொட்டும் மழையில் ஏழு வயதுப் பிள்ளை எங்கு போயிருப்பான் என்று நினைத்தாள். இடி சப்தத்துக்கும் சங்கரன் குட்டிக்கு உள்ள ஒரு பிணைப்பை நினைத்து, பார்த்தாள். இடி இடித்தால் போதும் சங்கரன் குட்டிக்கு ஒரே குதூகலம். குதிப்பான், பாடுவான். ஆர்ப்பாட்டம் செய்வான். இன்று இரவு அப்படி ஒன்றும் அவன் செய்யவில்லை. இருளில் அவன் குரலே கேட்கலில்லை.

ஒருவேளை வீட்டை விட்டே வெகு தூரம் சென்றிருப்பானோ என்ற அச்சம் நாராயணியின் மனத்தில் எழுந்தது. தலையணைக்கும் அடியில் வழக்கமாக வைத்திருக்கும் தீப்பெட்டியைத் தேடினாள். அது அங்கு இல்லை, நாராயணியின் கலவரம் அதிகமாயிற்று. உடனே வெளியே ஓடிவந்தாள். வீட்டின் பின் கட்டில் வெளிச்சம் தெரிந்தது. அங்கு ஓடினாள். அங்கு தென்னை ஓலைகலை எருக்காகக் கட்டி அவற்றுக்குத் தீ வைத்து, கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான் சங்கரன் குட்டி.

அவன் முகத்தில் ஒருவித எக்களிப்பு இருந்தது. அவன் கையில் தீப்பெட்டி இருந்தது. எரியும் தென்னஞ் களுந்தைக் கொண்டு, வீட்டின் பின் கட்டுக் கூரைக்குத் தீ வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

நாராயணி அம்மாள, ”டேய் பைத்தியம்! என்னடா செய்யறே?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள். சங்கரன் நீட்டி, “ஒரு மின்னல் பண்ணறேம்மா. ஒரு பெரிய மின்னல் செய்யறேம்மா!” என்று களுந்தைச் சுற்றுமுற்றும் சுழற்றினான்.

நாராயணிக்கு ஆத்திரமாக வந்தது. “குடி இருக்கிற வீட்டுக்கே தீ வைக்கிறியாடா, பைத்திய மகனே!” என்று சொல்லிக்கொண்டே சங்கரன் குட்டியை இரண்டு கன்னத்திலும் அறைந்தாள். சங்கரன் குட்டியின் முகத்திலிருந்த குதூகலம் குறைந்தது. அவன் முகத்தில் பயம் தோன்றியது. “ஓ…”வென்று ஒலமிட்டு அழ ஆரம்பித்தான்.

அவன் அழுகையின் தொனி ஒரு மிருகம் ஊளையிடுவது போல் கேட்டது. நாராயணியின் ஆத்திரம் மறைந்தது. பச்சாதாபம் எழுந்தது.

“குருவாயூரப்பா! இந்தப் பைத்தியக் காரப் பிள்ளையை வச்சிட்டு நான் நான் எப்படித்தான் பிழைக்கப் போறேனோ” என்று வருந்தியவளின் பிரார்த்தனைக் குரலுக்குப் பதில் சொல்வதுபோல் வாசல் புறமிருந்து டொக் டொக் என்ற சப்தம் வந்தது.

நாராயணி அதைக் கவனிக்கவில்லை. ஒருவேளை காற்று கதவை மோதுவதன் விளைவாக உண்டான ஒலியாக இருக்கலாம் என்று நினைத்தபடி, மகனைப் பின் கட்டிலிருந்து இழுத்துவந்து, படுக்னகயில் படுக்க வைத்தாள். பிறகு தன் படுக்கையில் படுத்தபடி, “நாராயணா!” என்று கூறிக் கண்னை மூட முயன்றாள்.

வாசல்புறக் கதவை ஏதோ ஓசைப் படுத்துவதுபோல் கேட்டது. அந்தச் சப்தம் தொடர்ந்து வந்தது. நாராயணி அம்மாள் எழுந்து உட்கார்ந்தாள். ‘டொக்டொக்’ சப்தத்தைத் தொடர்ந்து முனகல் சப்தமும் கேட்டது. அந்த முனகல் ஒலி பூனையின் ஓலம்போல் கேட்டது.

அருகில் படுத்திருக்கும் மகனைப் பார்த்தாள்.

கணவன் இறந்த பின்பு, அவள் உறவினர்கள் கூறிய வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. ‘நாராயணி! நீ இந்த மலையடிவாரத்திலே, தனியே புருஷத் துணை இல்லாமல் இருப்பது சரியில்லே. இந்த மலையிலே பாலமுனி உலாவறதாக மஹேச நம்பூதிரி சொல்றார். பாலமுனி ஒவ்வொரு ஒவ்வொரு சமயம் சாஸ்தா மாதிரி வரும். ஒவ்வொரு சமயம் பாவாடை சட்டையோடு தெரியும்”, என்று சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.

ஒவ்வொரு சமயம் சங்கரன்குட்டிக்கு வயது வளர அதோடு அறிவு வளராமல் பித்தன்போல் இருப்பதன் காரணம் பாலமுனியின் தோஷமாகக்கூட இருக்குமோ என்றுகூட நினைத்திருக்கிறாள். ஆனால் கணவன் இறந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் அவள் எந்தவித முனியையும் சந்திக்கவில்லை. சலியாத உழைப்பால் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தைப் பயிரிட்டு, மானமாக ஜீவனத்தை நடத்திவந்தாள், தனிமை அவளுக்குப் பயம் தரவில்லை. அமைதியையே தந்தது. ஆனால் அன்று இரவு வாசல் புறத்திலிருந்து வந்த சப்தம், சிறிது நடுக்கத்தை உண்டு பண்ணியது.

இருந்த பொழுதிலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான். அப்போது மின்னிய மின்னலின் வெளிச்சத்தில், சுவரில் மாட்டியிருந்த குருவாயூரப்பன் படம் தெரிந்தது. “குருவாயூரப்பா! நாராயணா!” என்று இரு முறை முணுமுணுத்தாள். ஒருவிதத் தைரியம் பிறந்தது. மெள்ள அடிமேல் அடி வைத்து வாசல் புறக் கதவை நோக்கி நகர்ந்தாள்.

வாசல்புறத் தாழ்ப்பாளைத் திறக்க விரலைத் தாழ்ப்பாளில் வைத்தவுடனே, ‘இச் இச்’ என்ற தும்மல் ஒலி கேட்டது.

இடிச் சப்தத்துக்குப் பழகிப்போன நாராயணி அம்மாளுக்கு, இந்தச் சிறிய தும்மல் சப்தம் பயத்தைக் கொடுத்தது. கதவைத் திறவாமலே உட்புறம் திரும்ப ஓர் அடி எடுத்து வைத்தாள். உடனே மறுபடியும், ‘டொக் டொக்’ என்ற சப்தம் கேட்டது. நாராயணி அம்மாள் ஒரு வினாடி திகைத்து நின்றாள்.

பிறகு சிரமப்பட்டுத் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு. தாழ்ப்பாளை நீக்கிப் படீரென்று கதவைத் திறந்தாள். அப்போது வேகமான காற்று, மழை நீரை நாராயணியின் முகத்தில் வாரி அடித்தது. நாராயணி பார்வை இழந்தாள் ஒரு வினாடிக்கு. சுதாரித்துக் கொண்டு கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் பார்த்த காட்சி, அவளை அப்படியே திகைக்க வைத்தது.

தண்ணீர், வீட்டுத் திண்ணையை நனைத்தபடி நீர்வீழ்ச்சிபோல் சென்று கொண்டிருந்தது. இடுப்பளவுத் தண்ணீரில் பாவாடை சட்டையுடன் ஒரு சின்னஞ் சிறு பெண் உருவம் தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தது.

மின்னல் வெளிச்சத்தில், தள்ளாடிய படி அவள் கறுத்த விழிகள் நாராயணி அம்மாளை நோக்கியபடி. இருப்பது தெரிந்தது. அவள் உதடுகள் விலகி, முத்துப்போன்ற பற்களை வெளிக் காட்டியபடி இருந்தன. அந்தச் சிறு உருவம் ஏதோ பேச முயன்று உதடுகளை அசைத்தது. ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை.

நள்ளிரவில் மலையடிவாரத்தில் தன் வீடுதேடிச் சிறுமி ஒருத்தி நிற்பானேன்? இது கனவுத் தோற்றமா, இல்லை உண்மையா? ஒன்றும் புரியாமல் நின்றாள் நாராயணி. பாலமுனி எண்ணத்தில் ஊறிப்போயிருந்த நாராயணி அம்மாளுக்குப் பீதி அதிகமாகிக் கொண்டே போயிற்று, உரத்த குரலில், “குருவாயூரப்பன் மீது சத்தியம் செய்து சொல்றேன். யார் நீ?” என்றாள்.

நாராயணியின் கடுமையான குரலைக் சேட்ட அந்தச் சிறுமி, அப்படியே நடுங்கி நின்றாள், அவள் பார்வை நாராயணி அம்மாள் மீது நிலைத்து நின்றது. அப்போதுதான் நாராயணி. அம்மாள், சிறுமியின் பின்புறம் நோக்கினாள், தொலைவில் நெருப்பு எரிவது தெரிந்தது. கொட்டும் மழையில் பெரு நெருப்பு ஓர் ஆச்சரியமல்லவா? நாராயணி அம்மாள் நெருப்பையும் சிறுமியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அத்தியாயம்-2

தன்னைத் திரும்பத் திரும்பப் த பார்த்தபடி நெருங்காமல் நிற்கும் நாராயணி அம்மாளை ஒருவித ஆச்சரியத்துடன் பார்த்தாள் சிறுமி.

நாராயணியோ; சிறுமியின் கால்கள் நிலத்தில் பதிகின்றனவா அல்லது காற்றில் மிதந்தபடி இருக்கின்றனவா என்று பீதியோடும் குழப்பத்தோடும் பார்த்தாள், சிறுமியின் கால்களைத் தண்ணீர் முழங்கால்வரை மறைத்திருந்தபடியால் ஒன்றும் தெரியவில்லை. அந்த மங்கிய வெளிச்சத்தில் சுறுப்பாக அகன்று காணப்பட்ட அவள் கண்கள், நாராயணியின் கலக்கத்தை அதிகப்படுத்தின.

இதற்குள், சங்கரன்குட்டி எழுத்து, தாயைப் படுக்கையில் காணாததால், தேடிக்கொண்டே வாயில்புறத்துக்கு வந்துவிட்டான். சங்கரன்குட்டிக்கு எப்போதுமே தாயிடம் ஒரு பயம் உண்டு. அந்தத் தாயே ஒரு சிறிய குழந்தையைக் கண்டு பயந்து நிற்பதைப் பார்த்த போது அவனுக்கு ஆச்சரியமே ஏற்பட்டது.

தாய்க்குப் பின்புறம், பரட்டைத் தலையுடன், சுழலும் கண்களுடன் நின்று கொண்டிருக்கும் சிறுவனை, சிறுமி லேசாகப் புன்முறுவலுடன் பார்த்தாள்.

நாராயணிக்கு, எதிரே நிற்கும் சிறு உருவம், தனக்குப் பின்புறம் எதைப் பார்த்துச் சிரிக்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை தனக்குப் பின்புறமும், முன் பின் தெரியாத ஒரு பாலமுனி நிற்கிறதோ என்று நினைத்து விருட்டென்று வேகமாகத் திரும்பினாள்.

சங்கரன் தனக்கே உரித்தான அசட்டுச் சிரிப்புடன், “யாரம்மா அந்தப் பெண்?” என்று கேட்டான்.

நாராயணி, ஆத்திரத்துடன், “போடா..போ வீட்டுக்குள்ளே. அது பெண்ணில்லேடா. அது… அது… ” என்று எதையோ சொல்ல நினைத்து அதைச் சொல்லத் துணிவு இல்லாமல் கலவரத்தோடு நிற்கும் போது, அந்தச் சிறுமியே முந்திக் கொண்டு. “ஞான்.. ஞான்தான் மோகினி,” என்று மழலை மலையாளத்தில் சொல்லிவிட்டுத் தண்ணிரிலே தள்ளாடியபடி நின்றாள்.

நாராயணிக்குத் தலை சுழன்றது. அவள் உதடுகள் ‘மோகினி, பால மோகினி’ என்ற வார்த்தைகளை முணு முணுத்தன. அத்தோடு, “குருவாயூரப்பா! நாராயணா!” என்று ஓலமிட்டுக்கொண்டே கதவின் நிலையில் சாய்ந்தாள்.

சிறுமியும் சங்கரனும் திகைத்தனர்.

அந்தச் சிறுமியின் அகன்ற கறுப்பு விழிகளும், நீண்டு அருவிபோல் விழுந்த கேசமும், சாதாரணச் சூழ்நிலையில் நாராயணிக்கு ‘எவ்வளவு அழகான குழந்தை!’ என்று தாய்மையின் துடிப்பைக் கொடுத்திருக்கும். ஆனால் அதே அழகிய உருவம், நாராயணியின் பயம் நிறைந்த மனநிலையில், பீதியின் துடிப்பைத்தான் கொடுத்தது.

படிப்படியாக ஏறிக்கொண்டிகுந்த பயம் அந்தச் சிறு குழந்தை தன் பெயர் “மோகினி” என்று சொன்னதும், அந்த அம்மாளை உணர்விழக்கச் செய்தது.

வீட்டை விட்டு ஓடிவந்த தாயோடு பஸ்ஸில் வந்த மோகினி, மலைச்சரிவில் பஸ் உருண்டு விழுந்தபோது. விழித்துக் கொண்டாள். “தாயின் மடியில் இருந்த நாம் புதருக்கு எப்படி வந்தோம்? நாம் ஏறிவந்த பஸ் ஏன் பற்றி எரிகிறது? தாய் எங்கே? தாய்க்குத் துணையாக வந்த டீக்கடை ஆள் எங்கே?” என்று தெரியாமல் தவித்தாள். நீண்டு உயர்ந்த மரங்கள் மழை இருட்டில் தன்னைக் குனிந்து பார்க்கும் ராட்சதர்கள் போல் தெரிந்தன. குழந்தை மோகினிக்கு அழுகைதான வந்தது. ஓவென்று அழு,தாள். 

நான்கு வயதுக் குழந்தைக்கு, அழுதால் தாய் வந்து தேற்றுவாள் என்பது நினைப்பு. இன்று தாய் வர வில்லை. அவள் அழுகைக்கு, இடியின் உறுமல்தான் பதில் கொடுத்தது. யாரும் மோகினியின் குரல் கேட்டு அங்கு வரவில்லை, ஒரு மலைப் பாம்பைத் தவிர! அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் அவள் தலைக்குமேல் ஒரு பாம்பு நகருவதைக்கூட, பாவம் குழந்தை கவனிக்கவில்லை. இன்னும் கொஞ்ம் ஓங்கி அழுதால் அம்மா வருவாள் என்ற நம்பிக்கையோடு அழுது பார்த்தாள். அப்போதும் தாய் வரவில்லை.

மோகினிக்கு அதற்குமேல் அழச் சக்தியுமில்லை. அப்போதுதான் மின்னலின் ஒளியில் நாராயணியின் சிறு வீடு அவள் கண்ணில் பட்டது. அதே சமயத்தில் பசியால் உந்தப்பட்டு நகர்ந்து வரும் பாம்பு, மோகினியை நெருங்கியது. இன்னும் ஒரு வினாடி குழந்தை அங்கு தங்கியிருந்தால், பாம்பு அவளைச் சுற்றிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் மின்னல் ஒளியில் வீட்டைப் பார்த்த குழந்தையின் மனத்தில் அங்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. வீட்டை தோக்கி நகரத் தொடங்கினாள். மலை நாகம் ஏமாந்து நின்றது. ஒருவேளை மோகினி அந்தப் பாம்பைப் பார்த்திருந்தால், பயத்தால் அவள் மயங்கி விழுந்திருக்கலாம். அவள் வாழ்வு முடிந்திருக்கலாம். ஆண்டவன் மோகினி வாழவேண்டும் என்று கணக்கு செய்து விட்டானே! இல்லாவிட்டால் சரிவில் பலமுறை உருண்ட பஸ்ஸிலிருந்து எப்படிச் சிறுகாயம்கூட இல்லாமல் இவள் தப்பினாள்? 

மோகினி, பாம்பு இருப்பதைக்கூடக் கவனியாமல், நாராயணியின் வீட்டு வெளிப்புறம் வந்து நின்றாள். 

வீட்டைச் சுற்றி நீர் ஓடுவதைக் கண்டு பயந்தபடியே நின்றாள். பிறகு துணிவு கொண்டு கதவை அசைத்துச் சப்தம் செய்தாள். அந்தச் சப்தம் கேட்டு வந்து கதவைத் திறந்த நாராயணி, அவளைப் பார்த்து பாலமுனி என்று நினைத்து உணர்விழந்தாள்.

அச்சத்தால் ஆதரவு தேடிவந்த குழந்தை அச்சத்தைக் கொடுத்து நின்றது. ஆனால் சங்கரன்குட்டி மோகினியைப் பார்த்து அச்சப்படவில்லை. மோகினியின் பின்புறம் தெரிந்த நெருப்பைப் பார்த்தான். அவ்விடத்தில் இருந்து தான் மோகினி வந்திருக்க வேண்டுமென்று ஊகித்துக்கொண்டான். சங்கரன்குட்டி தன்னைப்போல் அவளையும் நினைத்தான்.

அந்த நெருப்பை உண்டு பண்ணியது மோகினியாகத்தான் இருக்கும் என்று நினைத்தான். வீட்டுப் பின்புறத்தில் அவன் கூரைக்குத் தீ வைத்து இடியை உண்டுபண்ண முயன்றபோது, அவன் தாய் வந்து தடுத்துவிட்டாள். ஆனால் அதே சமயத்தில் இந்த மோகினி மட்டும் காட்டில் இடி தயார் செய்து கொண்டிருக்கிறாள். அவளைத் தடுக்க யாராலும் முடியவில்லை என்று நினைத்தான். அவனுடைய மந்த புத்தியில் குழந்தை மோகினியின் மீது லேசாகப் பொறாமை ஏற்பட்டது. 

“நீதான் அந்தப் பெரிய இடி செய்தாயா?” என்று எரிந்து கொண்டிருக்கும் பஸ்ஸைச் சுட்டிக்காட்டிக் கேட்டான். மோகினி ஒன்றும் புரியாமல் விழித்தாள். பிறகு திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அவன் சுட்டிக் காட்டுவது, எரியும் பஸ்தான் என்று புரிந்தது. அதை எரித்ததாக அவன் குற்றம் சாட்டுகிறான் என்று மட்டும் புரிந்து கொண்டாள். அந்தச் சின்ன வயதிலும் மோகினியின் மனத்தில், தான் நிரபராதி என்பதை ஸ்தாபிக்க வேண்டும் என்று தோன்றியது. 

“ஞான் ஒண்ணும் செய்யில்லா, ஞான் வன்ன பஸ்ஸு தீப்பிடுச்சி இருக்குன்னு. ஞான் வள்ள பஸ்ஸு,” என்று சொல்லி நெருப்பைக் காட்டி, தன்னை நிரபராதியாக்கிக் கொண்டாள்.

அதுவரையில் உணர்வு இல்லாமல் திகைத்துக் கொண்டிருந்த நாராயணி அம்மாளுக்கு, பஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் சிறிது தெளிவு ஏற்பட்டது. 

சங்கரன்குட்டி சகஜமாகப் பேசுவதைப் பார்த்ததும், நாராயணி துணிவுடன், குழந்தை மோகினியைக் கூர்ந்து நோக்கினாள். நனைந்த உடை, அவள் கழுத்தில் அணிந்திருந்த செயின், அதன் நுனியில் தொங்கிய சின்னஞ்சிறு கிருஷ்ண விக்கிரகம் இவை எல்லாம் சேர்ந்து மோகினியை ஒரு மனிதக் குழந்தை என்று தெளிவாக்கின. நாராயணி மெள்ள  நெருங்கி மோகினியின் தலையைத் தடவிப் பார்த்தாள். 

“நீ யாரம்மா குழந்தை?” என்று கேட்டாள். 

குழந்தை “ஞான் மோகினி! ஞான் மோகினி!”, என்று கூறினாள். நாராயணி அம்மாள், “நிண்ட அச்சன் அம்மே எவ்விட?” என்று கேட்டாள். 

குழந்தை தூரத்தில் எரியும் நெருப்பைப் பார்த்தாள். பிறகு தடுமாற்றத்துடன், “எண்டா அச்சன் குருவாயூர்லே; அம்மை ஈ பஸ்லே,” என்று சொல்லி எரியும் நெருப்பைக் காட்டினாள்.

இதைக் கேட்டதும் நாராயணி பதறிப் போனாள். பயத்தால் மரத்துப் போயிருந்த அவள் மனத்தளத்தில், விஷயங்கள் வேகமாகப் புலப் படலாயின. உடனே மோகினியை அழைத்துக் கொண்டு நெருப்பை நோக்கி நகர்ந்தாள். சங்கரன் குட்டியும் பின் தொடர்ந்தான். இப்போது பஸ்ஸைச் சுற்றி ஜ்வாலை சற்றுக் குறைத்திருந்தது. 

எரிந்து கருகிப் போலிருந்த பஸ்ஸில் மழைத்துளிகள் விழுந்தபடி இருந்ததால் ‘புஸ்’ என்ற சப்தத்தோடு புகை எழுந்தது. நாராயணி பஸ்ஸைச் சுற்றிப் பார்த்தாள், தரையில் முகம் கருகிய ஆடவனின் உடல் தெரிந்தது. நாராயணி அம்மாள் அதை நெருங்கினாள். அதுதான் டீக்கடைக்காரன் உடல். மோகினி அதைப் பார்த்ததும், “டீக்கடையிலுள்ள அம்மாவன்” (டீக்கடை மாமா) என்று சொன்னாள். 

நாராயணி டீக்கடைக்காரனை அசைத்துப் பார்த்தாள். எரிந்த உடலாயினும் அது ஜில்லிட்டுக் கிடந்தது. பஸ்ஸின் இன்ஜின் புறத்தில் மட்டும் நெருப்பு எரித்து கொண்டிருந்தது. உருமாறிப் போயிருந்த பஸ் தரையில் குத்திட்டு நின்றது. மெள்ள நாராயணி பஸ்ஸை நெருங்கினாள். பஸ்ஸின் கதவு திறந்து கிடந்தது. 

அதன் அருகில் தரையில், முற்றிலும் வெந்து கறுத்துப்போன உடலோடு ஒரு உருவம் கிடந்தது. முகம் மட்டும் நெருப்புப் படாதபடி கிடந்தாள் மோகினின் தாய். உடல் பற்றி எரிந்து துடித்த நிலையிலும், வலியின் காரணமாகவோ, தீயின் வெப்பத்தின் காரணமாகவோ அந்த முகத்தில் ஒரு சுளிப்பு இல்லை; விகாரம் இலை. இறந்தவள் முகம் புன்முறுவலோடு காணப்பட்டது. அந்த முகத்தில் ஒருவித அமைதியும் திருப்தியும்தான் இருந்தன. கணவனுக்குச் செய்த துரோகத்துக்கு அக்கினிப் பிரவேசம் செய்து பிராயச்சித்தம் தேடி விட்டோம் என்ற உணர்வும் உறுதியும் அந்தப் பேதை மங்கையின் உள்ளத்தில் இருந்திருக்க வேண்டும்.

தாயின் முகத்தைக் குனிந்து பார்த்த மோகினிக்கு, தாய் இறந்து விட்டாள் என்பது புரியவில்லை. சாவை அந்தக் குழந்தை முதன் முறையாகச் சந்திக்கிறாள் அல்லலா? உண்மை புரியாமல், ”அம்மே! அம்மே” என்று தன் தாய் மொழியாகிய மலையாளத்தில் கூறி அழுதது.

ஆனால், பெற்றவளோ, செவி அற்றவளாகக் கிடந்தாள். நாராயணியின் தாய்மை உணர்ச்சி பொங்கி எழுந்தது. குழந்தையை இறுகத் தழுவி அணைத்துக் கொண்டாள். குழந்தை மோகினி, ”அம்மே! எந்தா மிண்டாதிருக்குன்னுள்ளது?” என்று கேட்டாள்.

நாராயணி. குழந்தையிடம் எப்படி விளக்குவது என்று தெரியாமல் தவித்தாள். மோகினியை மெள்ள வீட்டுக்கு அழைத்துப்போக இழுத்தாள். குழந்தை விடாமல் தாயை நோக்கி ஓடியது.

அவளது நான்கு வருஷ வாழ்வில் அவளுக்கு ஒரு சிறு உண்மைதான் தெரியும். அவள் அழுத போதெல்லாம் தாய் முத்தமிட்டுத் தேற்றியிருக்கிறாள். சில சமயங்களில் அவளை அறைந்து கண்டித்தும் இருக்கிறாள். இரண்டும் செய்யாமல் தன்ளை விறைத்துப் பார்த்தபடி படுத்திருக்கும் தாயை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. “உறவு என்பது முறியக்கூடிய ஒன்று. வாழ்வு என்பதே உறவுகள் சேர்ந்த சங்கிலி. அதில் நாம் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது சில காலம். அவற்றை முறிப்பது சில காலம். நாமாக முறிக்காத உறவுகளை மரணம் வெட்டிவிடுகிறது.” என்பதெல்லாம் மோகினிக்கு எப்படிப் புரியும்?

அவளுக்குப் புரிந்த தெல்லாம் ‘அம்மை’ என்ற உறவு. ‘அச்சன்’ என்ற உறவுதான். அழுதுகொண்டிருக்கும் மோகினியைப் பிடித்து நாராயணி “அம்மா மரிச்சி போயி, ஓரிக்கலும் சம்சாரிக்கில்லா. ஓரிக்காலும் சம்சாரிக்கில்லா”, என்ற மூல தத்துவத்தை விளக்கினாள். குழந்தை மோகினி நாராயணி முகத்தையே விறைத்துப் பார்த்தபடி இருந்தாள்.

“மரிச்சிபோயி,” என்ற வார்த்தை, அவளது மனத் திரையில் சில காட்சிகளை உருவாக்கின. ஒரு மாதத்துக்கு முன்பு அவள் அச்சன் வீட்டில் எலிப் பொறி வைத்து எலியைப் பீடித்த. காட்சி தோன்றியது. பிறகு அவள், அச்சன் பொறியைத் திறந்து எலியை வெளி யேற்றி அதைத் தடியால் அடித்ததும், அடிபட்ட எலி அப்படியே அசையாமல் வீட்டின் வெளிப்புறம் கிடந்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது அவள் அச்சனை, “எந்தா எலி ஓடில்லா?” என்று கேட்டாள்.

“எலி மரிச்சிப்போயி”, என்று அவன் சொன்னான். அன்று பிற்பகல் வரை அந்த எலி வீட்டின் வெளிப்புறம் அசையாமல் கிடந்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் மோகினிக்குப் பரிதாபமாக இருந்தது. மோகினியின் மனத்தில் அவளுடைய தாய், அந்த எலியின் நிலைக்கு வந்துவிட்டாள் என்ற உண்மை இப்போது விளங்கியது.

அதே வினாடி அவள் உடல் பூராவும் ‘கிடுகிடு’ என்று ஆடியது.

“மரிச்சிப்போயி,” என்ற உண்மை தெரிந்ததும், விவரிக்க முடியாத ஒரு பயம், துக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது. அது ரத்த பாசத்தால் ஏற்பட்டதா அல்லது கர்ம பந்தத்தால் ஏற்பட்டதா என்பதை விவரிக்க முடியாது. இந்தத் துக்கம் காலம். தாழ்த்தி மோகினியின் ஆன்மாவை அடைந்ததால் அது புயல்போல் தாக்கியது. அவளால் அதைச் சமாளிக்க முடியவில்லை. தாயை நிரந்தரமாகப் பிரிந்து விட்டோம் என்ற நிலையில், அச்சன் நினைவுதான் வந்தது. “அச்சன்! அச்சன்!” என்று அலறியபடி ஞாபகம் இழந்து விழுந்தாள்.

நாராயணி, ஓடிப்போய்க் குழந்தையைத் தூக்கினள். மோகினி துணிபோல், நாராயணியின் கைகளில் கிடந்தாள். எதை, எப்போது, எந்த அளவுக்குப் பேசுவது என்பதை உணராத சங்கரன்குட்டி, “அம்மே! மோகினியும் மரிச்சிப்போயி!” என்று கூறிக் கை கொட்டி நகைத்தான்.

நாராயணிக்கு அவனை அறையலாம் போலிருந்தது. ஆனால் அவள் கைகளில் மோகினி துவண்டு கிடந்ததால், அவளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

அத்தியாயம்-3

அந்த நள்ளிரவில் மோகினியைத் தூக்கியவாறு நாராயணி வீட்டுக்கு வந்தாள். சங்கரன்குட்டி படுத்திருந்த படுக்கையில் குழந்தையைப் போட்டாள். அதன் உடலைப் பச்சாதாபத்தோடு தடவிக் கொடுத்தாள்.

சங்கரன் குட்டி தாயை ஒருவிதமாக பார்த்தான். தன் படுக்கையில் குழந்தையைப் போட்டு விட்டுக் கவலையோடு அந்தச் சிறுமியைத் தடவிக் கொடுப்பது கண்டு சங்கரன்குட்டிக்கு விபரீதமான யோசனை தோன்றியது. “அம்மா! நானும் மரிச்சுப் போறேன். என் பக்கத்திலே உட்கார்ந்து என்னையும் தடவிக்கொடும்மா”, என்று சொல்லிவிட்டு, நெடுங்கிடையாகப் படுக்கையில் படுத்து விட்டான்.

தாய்க்கு ஆத்திரம் வந்தது. “அடே! அவ மரிச்சிப் போகலேடா. மயங்கி விழுந்திருக்கா. நீ பாயை விரிச்சுட்டு அப்படிப் படுடா.” என்று கட்டளை யிட்டாள்.

தாயின் முகத்தில் தெரிந்த கோபுத்தைப் பார்த்துச் சங்கரன்குட்டி ஒதுங்கிப் போய்ப் படுத்தான். நாராயணி அம்மாள் நீலகிரித் தைலத்தை எடுத்து மோகினியின் பொட்டிலும் நெஞ்சிலும் தடவினாள். பக்கத்திலே தானும் படுத்துக் கொண்டாள். மோகினியை அணைப்பதில் ஒரு நிறைவும் திருப்தியும் ஏற்பட்டது. அப்படியே அயர்ந்து தூங்கி விட்டாள்.

திடீரென்று வந்த ஒரு குழந்தையைத் தாய் அணைத்தபடி படுத்திருப்பதைப் பார்த்து, சங்கரன்குட்டி எதையோ இழந்துவிட்டவன்போல் ஆனான்.எழுந்து நின்றான், பிறகு கைகளைச் சொடுக்கினான், மறுபடியும் படுத்துக் கொண்டான. விழித்துக்கொண்டே, வானத்தில் தோன்றிய மின்னலைக் கணக்கெடுத்தபடி படுத்திருந்தான். கணக்கும் அவனுக்கு ஒழுங்காகத் தெரியாது.

1,2,7,9,4, 3 – என்று ஏதேதோ எண்ணிக் கொண்டே கண்ணை மூடித் தூங்கினான்.

பொழுது விடிந்ததும் மழை நின்று இருந்தது.பட்சிகளின் ஆரவரரத்தின் ஒலி கேட்டு நாராயணி அம்மான் விழித்துக்கொண் டாள்.

குழந்தை மோகினி இரவு படுத்த நிலையிலேயே கொஞ்சமும் அசையாமல் அப்படியே படுத்திருந்தாள். குழந்தையின் பிஞ்சுக் கால்களைத் தொட்டுப் பார்த்தாள். நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ஜுரம் இல்லை.

தாய் இறந்துவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டவுடன் மயங்கி விழுந்த குழந்தையின் புத்திக்கு ஏதாவது நேர்ந்து இருக்குமோ என்று பயந்தாள்.

சித்த சுவாதீனமில்லாத ஒரு பிள்ளைக்குத் தாயாக இருந்தபடியால், அவளுக்குக் குழந்தையின் புத்தியைப் பற்றித்தான் முதன் கவலை ஏற்பட்டது. அதனால் மோகினியை எழுப்பவே பயமாக இருந்தது.

அடுத்தபடி நாராயணியின் மனத்தில் பல சில்லறைப் பிரசினைகள் எழுந்தன. “தன் வீட்டருகில் நிகழ்ந்த விபத்தைய பற்றி, அரை மைலுக்கப்பாலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுப்பதா? தகவல் கொடுத்தால், ஏன் உடனே சொல்லவில்லை என்று கேட்பார்கள். தகவல் கொடுக்காமலே இருந்தால் மோகினியை எப்படி அவளைச் சேர்ந்தவர்களிடம் சேர்ப்பது? ஒருகால் பஸ்ஸில் ஏதாவது விளையுயர்ந்த பொருள்கள் இருந்தால், அவைகாளைப் பத்திரப் படுத்திப் போலீஸாரிடம். கொடுப்பது தன்னுடைய பொறுப்பல்லவா? அம்மாதிரிப் பொருள் ஏதாவது காணாமல் போய்விட்டால் அல்லது சிதறி எங்காவது மறைந்து விழுந்திருந்தாலும் சந்தேகம் தன்மேல் அல்லவா வரும்?” என்றெல்லாம் நினைத்தாள்.

ஏதோ வறுமையில் ஓரளவு அமைதியோடு வாழ்ந்து வந்தவளுக்கு, இந்த விபத்து புதுப் பொறுப்புக்களையல்லவா சுமத்துகிறது?.

விடிந்துவிட்டது. வெளியே போய்ப் பார்ப்போம் என்றால், மோகினியைத் தனியே விட்டுச் செல்ல மனம் இல்லை. மாறுபட்ட யோசனைகளில் குழம்பி இருந்தாள். நாராயணி அம்மாளின் மூத்த சகோதரன் கோழிக்கோட்டில் ஒரு போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்ததால், அவளுக்கு மாமுல் போலீஸ் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இப்படிச் சிந்தனைகளிலேயே பொழுது போக்கினால் முடியுமா?

அன்றாடக் கடமைகள் இருக்கின்றனவே! பக்கத்து அறையில் அடுப்பை மூட்டி நீர் காய வைத்துத் தேயிலை பானம் தயார் செய்தாள், பாலில்லா தேனீர்! அதில் இரண்டு பெரிய திப்பீ வெல்லத்தைப் போட்டாள்.

சங்கரன் குட்டி விழித்துக் கொண்டான். அதோடு அவன் பசியும் விழித்துக் கொண்டது. கொல்லைப்புறம் சென்று கால்முகம் கழுவி, பல் தேய்த்துவிட்டு வந்து தாயின் அருகில் உட்கார்ந்தான்.

மண்பானையில், உலர்ந்த இலையில் சுற்றி வைத்திருந்த தேத்திரங்காய் வறுவலை அவன் முன் எடுத்து வைத்தாள்.

ஏழு வயதுப் பிள்ளை. பதினேழு வயது இளைஞனின் பசியோடு அந்த உப்பிட்ட வறுவலைக் காலி செய்து, மடக் மடக்கென்று டீயைக் குடித்தான், குட்டிக்குச் சாப்பாட்டு விஷயம் ஒன்றிலாவது வயதுக்கு மிஞ்சிய சாமர்த்தியம் இருக்கிறதே என்ற திருப்தி நாராயணிக்கு. அவளும் சாயாவைச் குடித்துவிட்டு சிறு மூங்கில் தட்டில் வறுவல்களையும் ஒரு கண்ணாடி கிளாஸில் கொஞ்சம் சூடான சாயாவையும் எடுத்துக் கொண்டு மோகினியிடம் வந்தாள்.

மெள்ளத் தட்டிக் குழந்தையை எழுப்பினாள். மோகினி விழித்தெழுந்தாள். நாராயணி அம்மாளையும், சங்கரன்குட்டியையும் மாறி மாறிப் பார்த்தாள். வீட்டை ஒருமுறை பார்த்தாள், “மோகினி! இதைச் சாப்பீடு” என்றாள் நாராயணி.

மோகினி வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

“இந்தச் சாயாவையாவது குடி.”

மோகினி ஆவி பொங்கும் சாயாவைப் பார்த்தாள். நடுங்கும் கைகளோடு கிளாஸை வாங்கிக் குடித்தாள். பிறகு மௌனமாகத் தரையைப் பார்த்தபடி இருந்தாள்.

“மோகினி இன்னும் கொஞ்சம் சாயா?”

குழந்தை, “வேண்டாம்,” என்று கூறிவிட்டுத் தரையைப் பார்த்தாள். தன் அம்மாவைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

நாராயணி அம்மாள் தொடர்ந்து, “உனக்கு என்ன வேணும் மோகினி?” ன்று கேட்டாள்.

மோகினி தலையை நிமிர்த்தி நாராயணியைப் பார்த்தாள். “எண்ட அச்சனை நோக்கணும்.”

“நிண்ட அச்சன் பேரு என்ன மோகினி?”.

மோகினி கண்களை அகல விரித்து யோசித்தாள்.

“எண்ட அச்சன் பேரு சொல்லி அச்சன்” என்று சொல்லி விட்டு மறுபடியும் படுத்துவிட்டாள்.

இறந்துவிட்ட தாயைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பயங்கர விபத்தில் தாயை இழந்த குழந்தை, சாயாவைக் குடித்து விட்டு மறுபடியும் தூங்குவது அதைவிட ஆச்சரியமாக இருந்தது.

துக்கத்தைப் பாராட்டி ரசிக்கவும் உலக அனுபவம் தேவைப்படுகிறது. ஒன்றுமறியாத குழந்தைக்கு, தாயின் பிரிவு வெறும் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. உலக அனுபவம் முற்றி உண்மை தெளிவாகி துறவியான போதும், பிரிவுத் துக்கத்தை நாம் பாராட்டுவது இல்லை. ஒன்றுமறியாத நிலைக்கும், எல்லாம் தெளிந்த நிலைக்கும் இடையே சராசரி மனிதனாய் இருக்கும் போதுதான், பிரிவின் துக்கம் நமக்கு ஏற்படுகிறது போலும்!

குழந்தை விழித்தவுடன் கதறி அழுவாள்; அவளை மடியிலே போட்டு அன்போடு தேற்ற வேண்டும் என்று தன் தாய்மை உணர்ச்சிகளைத் தயார்ப் படுத்திக் காத்திருந்த நாராயணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

இரவு வேளையில் ரயில்வே ஸ்டேஷனில் தூங்கும் பிரயாணி எழுந்து, போர்ட்டரிடம், “எக்ஸ்பிரஸ் வந்தவுடன் என்னை எழுப்பு.” என்று சாதாரணமாகச் சொல்வதுபோல் அல்லவா மோகினி, “எண்ட அச்சனை நோக்கணும்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள்!

மோகினி மன உறுதியின் காரணமாக அப்படி இருந்தாள் என்று சொல்வதா அல்லது அவளை ஒன்றுமே அறியாத குழந்தை என்று சொல்வதா? நாராயணிக்கு விளங்கவில்லை. அப்பனைப் பார்க்கத் துடிக்கும் அந்தக் குழந்தையால் அப்பன் பெயரைக்கூட் சொல்லத் தெரியவில்லை. எப்படி இவளைத் தகப்பனிடம் சேர்க்கப் போகிறோம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த நாராயணி அம்மாளிடம் சங்கரன்குட்டி, “மோகினி மட்டும் என்னம்மா, நானும் என் அச்சனைப் பார்க்க வேண்டும்.” என்று உளறினாள்.

“நீ உங்கப்பனைப் பார்க்கணும்னா மலை உச்சியிலிருந்து குதிக்கணும், இல்லேன்னா நெருப்பிலே விழுந்து சாகணும். கொஞ்சம் சும்மா இருடா” என்று ஆத்திரம் தீரப் பதில் சொல்லி நாராயணி அவனை அடக்கினாள்.

இதே சமயத்தில் வீட்டின் வெளிப்புறம் இரைச்சல் கேட்டது. நாராயணி அம்மாள் வெளியே வந்து பார்த்தாள், தொலைவில் எரிந்து கருகிப் போய் இருந்த பஸ்ஸின் கூடு தெரிந்தது. அதைச் சுற்றிப் பத்துப் பதினைந்து ஆட்கள் நின்று கொண்டு இருந்தனர். எல்லோரும் அவளுக்கு ஓரளவு தெரிந்த அருகிலிருக்கும் வாழைத் தோட்டத்துக் கூலிகள்.

அவர்கள் உற்சாகத்தோடு பஸ்ஸைச் சுற்றி வந்து பார்வையிட்டபடி இருந்தனர்.

தினம் எழுந்து காட்டுக்குச் செல்வது. பூமியைத் தோண்டி நாற்று நடுவது. இப்படியே உப்புச் சப்பில்லாத ஒரே மாமூல் வேலையைச் செய்கின்றவர்களுக்கு. சில நாள் பேச விஷயம் கிடைத்தது அல்லவா? மாமூலை விட்டு மாறிய நிகழ்ச்சிகள் எதுவாயினும் அது சுவாரசியமானதே, ”அவள் அவனோடு ஓடினாள். அவன் போலீசாரால் பிடிபட்டான்” போன்ற நிகழ்ச்சிகளே ஊர் வாய் மெல்ல உதவுகிறபோது, இம்மாதிரி பஸ் உருண்டு எரிந்து விழுந்தது போன்ற அசாதாரண விஷயம் கிடைந்தால், சும்மா விடுவார்களா? அவர்கள் கற்பனா சக்திக்கு உணவு கிடைத்த மாதிரி அல்லவா? ஒவ்வொருவனும் விபத்து நிகழ ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தான். ஒருவன். “டிரைவர் பட்டை அடித்திருப்பான்”, என்று பொருள்படும்படி சொன்னான். இன்னொருவன், “சடன் பிரேக் போட்டிருப்பான் வண்டி ஸ்கிட்டாகியிருக்கும்” என்று தன் மோட்டார் யந்திர அறிவைக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான். ஸ்டியரிங் வீல் அருகில் கிடந்த கண்டக்டரை டிரைவர் என்றும் நினைத்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

டீக்கடைக்காரனையும், அலங்கோலமா விழுந்து கிடந்த மோகினியின் தாயையும் பார்த்த கூட்டம் அதன் பச்சாத்தாப உணர்ச்சியைப் பலமாகத் தெரிவித்தது.

“ஐயோ! பார்க்கவே முடியல்லே”, “காணச் சகிக்கில்லா”, என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகராமல் நின்று கொண்டிருந்தனர்.

மோகினியின் தாய் எடுத்து வந்த டிரங்க் பெட்டி, மூலை நசுங்கிப் பாதித் திறந்தபடி கிடந்தது.

பயந்து, வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வரும் பெண் எவ்வளவு பொருள்களை எடுத்துக்கொண்டு வர முடியுமோ அவ்வளவைத்தான் எடுத்து வந்திருந்தாள்.

குழந்தையுடைய கசங்கிய கவுன்கள், பழைய சேலைகள், சிறு பவுடர் பெட்டி, ஒரு பழைய குருவாயூரப்பன் படம் இவைதான் இறந்தவளின் சொத்து. அவை யாவும் கருகிப் போகாமல் புல் தரையில் கிடந்தன. குருவாயூரப்பன் படம், பிணமாகிக் கிடந்த மோகினியின் தாயின் முகத்தின் எதிரே கிடந்தது;

“கணவன் வீட்டுக் கொடுமையிலிருந்து காப்பாற்று, காப்பாற்று என்று என்னிடம் தினமும் சுற்றியிருக்கிறாய். பார், உன்னைக் காப்பாற்றிவிட்டேன்,” என்று சொல்வது போல் இருந்தது படத்திலிருந்த கடவுளின் தோற்றம்.

டீக்கடைக்காரனின் மணி பர்ஸ் அவனருகில் கிடந்தது. அதன் விளிம்பி லிருந்து பத்து ரூபாய் நோட்டுக்கள் கத்தையாகத் தெரிந்தன. சுமார் ஐந்நாறு ரூபாய்க்கு இருக்கும் அந்தப் பர்ஸிலிருந்த தொகை. அதுதான் அவன் தன் எதிர்காலத்தை அமைக்கக் கொண்டுவந்த முதல். அந்த முதல் செலவாகாமலே அவன் வாழ்க்கை வியாபாரம் ஓய்ந்து முடிந்துவிட்டது.

சிதறிக் கிடக்கும் நோட்டுக்களை அங்கு நின்றவர்களில் சிலர், ‘பசி’யோடு பார்த்தனர்.

அவர்கள் தனியாக இருந்திருந்தால் எரியும் காட்டில் அகப்பட்டதைச் சுருட்டத் தயங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் கூட்டமாக இருந்ததால், பணத்தைத் தொடத் துணிவு இல்லாமல் இருந்தார்கள்.

இதற்குள் போலீசாரும் வந்துவிடவே, எல்லாரும் ஒதுங்கி நினறார்கள். போலீசார் முறைப்படி விபத்தைப் படம் எடுத்தனர்.பிரேதங்களை விழுந்து கிடந்த அமைப்பிலே போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

பிறகு அந்த இடத்துக்குச் காவல் வைத்துவிட்டு, துப்புத் துலக்கத் தொடங்கினார்கள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நாராயணி அம்மாள், அந்தப் பஸ்ஸில் வந்த மோகினி தன் வீட்டில் இருக்கிறாள் என்று சொல்வதா வேண்டாமா என்று யோசித்து நின்றாள்.

சொன்னால், தன்னைக் காணாமல் பொருள்களுடன் சம்பத்தப்படுத்தித் துன்புறுத்துவார்களோ என்று பயம். சந்தர்ப்பம் எதிர்பாரா விதமாகப் பிரசினையைத் தீர்க்கத் தொடங்கியது. வந்திருந்த இன்ஸ்பெக்டர் ஒரு வயதான நாயர். அவர் தலை, தும்பைப் பூவைப்போல் நரைத்திருந்தது. அவர் குறிப்புக்கள் எடுத்து, உடல்களை அப்புறப்படுத்தும்போது மணி பதினொன்று ஆகிவிட்டது.

மழை ஓய்ந்த மறுநாள் வெய்யில் எப்போதுமே கடுமையாக இருக்கு மாதலால் இன்ஸ்பெக்டர் பங்குன் நாயருக்குக் களைப்பு ஏற்பட்டது. அவர் பார்வையில் நாராயணி அம்மாளின் வீடு தெரிந்தது. அத்தோடு தாகமும் எடுத்தது. ஒரு கான்ஸ்டபிளை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இன்ஸ்பெக்டர் பங்குன் நாயர் ஆறடி உயரமும், பரந்த மார்பும் உள்ளவர். வெளுத்த மயிர்த் தலையும், அதற்கு நேர்மாமுகச் சாயம் தடவிக் கறுத்திருந்த கெய்சர் முறுக்கு மீசையும் உடையவர். அந்த வட்டாரங்களில் அவருக்குச் ‘கெய்சர் மீசை இன்ஸ்பெக்டர்’ என்றே பெயர்.

அவரது தொழில்: திறமை, அவர் டிபார்ட்மென்டுக்குப் புரிந்த துணிவான சாதனைகள் எல்லாம் சேர்ந்து அளிக்காத புகழை அவருடைய மீசை தனித்து அளித்தது. ஆகவே தலை நரைக்க ஆரம்பித்தபோது அவர் கவலைப்படவில்லை. அப்படியே விட்டு விட்டார். மீசை நரைக்க ஆரம்பித்ததும் தான் கலங்கினார். அவருடைய டிரேட் மார்க்கின் நல்ல பெயருக்கே களங்கம் வரக்கூடாது என்று அதற்கு மட்டும் சாயம் தடவிக் கறுப்பாகவே வைத்திருந்தார்.

அவர் உருவத்துக்குத் தகுந்த குரல் இருந்தது. அவர் பேசினால் குதிரைப் படைத் தகரப் பாலத்தில் நடை பழகுவது போல் இருக்கும். ஆனால் அவர் அதிகமாகப் பேசுவதில்லை. அவர் கைது செய்து லாக்கப்பில் அடைத்த திருடர்களிடம் அவர் உதடுகள் பேசுவில்லை என்றலும், அவரது பெல்ட் பேசி, பலமுறை, உண்மையை வரவழைத்ததுண்டு.

சில சமயம் அவர் பூட்ஸ் கால்களும் குற்றவாளிகளிடம் சம்பாஷிப்பது உண்டு. அவர் சட்ட வீரோதிகளிடமிருந்து, கருணை, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை எதிர்பார்ப்பது இல்லை. அந்த உணர்ச்சி மற்றவர்களிடம் காட்டுவதும் இல்லை.

அவர் தன் வீடு நோக்கி வருவதைப் பார்த்த நாராயணி அம்மாளின் உடல் வியர்த்தது. விட்டினுள் நுழைந்ததும் நாராயணி அம்மாள் ஓடிப்போய் ஒரு மரப்பெஞ்சியை இழுத்துப் போட்டாள். இன்ஸ்பெக்டரின் கண்கள் பாதாதி கேசம் அவளை உரித்து நோக்கின.

வயதானவர் ஆனாலும் இன்ஸ்பெக்டர் ஓர் ஆண் மகள் அல்லவா? அவர் பார்வை நாராயணியைச் சிலிர்க்க வைத்தது. மலையாள முண்டும் சோலியும் அணிந்த நாராயணி, முப்பது வயதுக்கு மேற்பட்ட விதவையானாலும், கட்டுக் குறையாதவளாக இருந்தாள். அருகில் நிறை கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டர் இம்மாதிரி அவளை நோக்குவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். ஏனென்றால் பங்குன் நாயர் கண்டிப்பானவர்.

பங்குன் நாயர், “தாகமாக இருக்கிறது. கொஞ்சம் வள்ளம் கிடைக்குமா?” என்று கேட்டார்.

நாராயணி, ஏதேதோ கெடுபிடியான கேள்விகளை எதிர்பார்த்தவள், தாகத்துக்குத் தண்ணீர் கேட்கிறார் என்றதும் ஓரளவு நிம்மதி அடைந்தாள். ஓடிப் போய், சுக்கு வள்ளத்தில் சிறிது தேன் விட்டுக் கொண்டு வந்தாள்.

அதற்குள் நாயர் அறை முழுதும் நோட்டம் விட்டார். பயந்து நிற்கும் சங்கரன் குட்டி, தூங்கும் மோகினி ஆகிய எல்லோரையும் பார்த்துக் கொண்டார்.

நாராயணி அம்மாள் கொண்டு வந்த சுக்கு வள்ளத்தைக் குடித்துவிட்டு, அவளை ஒரு முறை பார்த்தார். அவள் ஒரு விதவை என்பதை உடனே புரிந்து கொண்டவர் சங்கரன் குட்டியைக் காட்டி, “நீங்களும், இந்தப் பையனும் இங்கிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

அவர் கேட்ட கேள்வியில், குழந்தை மோகினியை அவள் குடும்பத்தில் சேர்க்கலில்லை என்பது தொக்கி நின்றது.

நாராயணி அம்மாள் பயத்தோடு தலைகுனிந்தபடியே, “‘ஆமாம்,” என்றாள்.

நாயர் துப்பாக்கிக் குண்டு வெடிப்பது போன்ற குரலில், “அப்படீன்னா இந்தப் பெண் குழந்தை யாரு? எப்படி வந்தது?” என்று கேட்டுவிட்டு, நாராயணியை முறைத்துப் பார்த்தார்.

நாராயணி அப்படியே வெலவெலத்து நின்றுவிட்டாள்.

முதலில் சாதாரண குரவில் ஒரு கேள்வி. அடுத்தபடி குண்டு வெடி போன்ற குரலில் இன்னொரு கேள்வி. சாதாரணக் குற்றவாளிகள் உடனே உண்மையை உளறிவிடுவார்கள். இது நாயரின் பரந்த அனுபவத்தில் கண்டு பிடித்த உண்மை.

நாராயணி நடுக்கத்தோடு. “இது அந்தப் பஸ்ஸில் வந்த குழந்தை,” என்று உண்மையைச் சொல்லிலிட்டாள்.

“இந்தக் குழந்தை மட்டுமா உயிரோடு தப்பியது? இல்லை, இன்னும் வேறு யாராவது…”. என்று கேள்வியைக் கேட்டு நிறுத்தினார்.

நாராயணி அம்மாள், “எனக்குத் தெரிந்தவரையில் வேறு யாரும் தப்ப வில்லை. இந்தக் குழந்தை மட்டும்தான் இரவு வந்து என் கதவைத் தட்டியது,” என்றாள்.

உடனே நாயர், “அப்படியென்றால், இரவே உனக்குப் பஸ் விபத்தைப் பற்றித் தெரியும். ஏன் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கவில்லை?” என்று கேட்டார்.

“இரவு ஒரே மழையும் இடியுமாக இருந்தது.” என்று தழுதழுத்த குரலில் அவள் பதில் சொன்னாள்.

“காலையில் நான் வந்ததும், என்னிடம் வந்து உண்மையைக் கூறியிருக்கலாமே?”

“நீங்கள் வந்தவுடனே சொல்லியிருக்கலாம். ஆனால்..”

“ஆனால் என்ன சொல்லு?” அறைவது போல் கேட்டார்.

நாராயணி பதில் சொல்லவில்லை. இன்ஸ்பெக்டரைப் பயந்தபடி பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் சொல்லவில்லை? சொல்லு.”

நாராயணியின் கண்களில் நீர் நிறைந்தது. ஆனால் உதடுகள் பேச வில்லை. இன்ஸ்பெக்டர் எழுந்து நாராயணியை நெருங்கினார். நாராயணி அவரைப் பார்த்தபடி நின்றாள். இன்ஸ்பெக்டர் நாயர், திடீரென்று தன் குரலை மாற்றினர்.

குழைவான குரலில் ரகசியம் பேசுவது போல் சொன்னார், “நீ சொல்ல வேண்டாம். நான் சொல்கிறேன். இந்தக் குழந்தையோடு சில பெட்டிகளையும் அப்புறப்படுத்திவிட்டாய். இந்தக் குழந்தை அணிந்திருந்த நகைகளை எடுத்துப் பதுக்கி வைத்துவிட்டாய். அதனால் தான் நீ விபத்தைப் பற்றி ரிப்போர்ட் பண்ண முன் வரவில்லை” என்று அடுக்கிக் கொண்டே போனார்.

தன்னை ஒரு திருடி என்று குற்றம் சாட்டுகிறார் என்று உணர்த்ததும் நாராயணிக்குத் திடீரென்று தைரியம் வந்தது. இன்ஸ்பெக்டர் நாயரின் பயங்கரத் தோற்றம், அவள் கண் முன்னின்று. மறைந்தது. அவள் பிறந்த பரம்பரையில் யாரும் திருடர்கள் அல்ல. ஏழைகளாய் இருந்திருக்கலாம். ஆனால் யாரும் திருடினதில்லை. தன்னேடு, தம் உத்தம சகோதரன், தந்தை எல்லாரும் சேர்த்து நிந்திக்கப்படுவதாகத் தோன்றியது. அதுவும் அவள் செய்யாத ஒரு குற்றத்துக்கு.

“நான் எதையும் திருடவில்லை. விபத்திலிருந்து தப்பிப் பிழைத்த குழந்தைக்குக் கருணை காட்டியதற்கு நல்லாயிருக்கு சன்மானம்! என் அப்பன், அண்ணன் – இவங்க திருடங்களைப் பிடிச்சுக் கொடுத்திருக்காங்களே அல்லாமல், யாரும் என்னிக்கும் திருடினதில்லே. எங்கப்பா கோவிந்தன் நாயர் ஒரு இன்ஸ்பெக்டர். எய்கண்ணன் அச்சுதன் நாயர் டியூட்டியிலே இன்னொரு போலீஸ் அதிகாரியைக் காப்பாத்தப் போயி இறந்தார். அவர் உடன் பிறப்பான நான் இன்னும் திருடற அளவுக்குக் கெட்டுப் போயிடல்லே!” என்று சொல்லித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

இதுவரை புலிபோல் உறுமிய இன்ஸ்பெக்டர், நாராயணியின் துணிவான பேச்சைக் கேட்டு நிதானித்தார்.

புதுப் பார்வையோடு நாராயணி அம்மாளைப் பார்த்தார். திரும்பிக் கான்ஸ்டபிளைப் பார்த்தார். ஜாடை புரிந்து கொண்டு கான்ஸ்டபிள் அறைக்கு வெளியே சென்றான். கான்ஸ்டபிளை வெளியே அனுப்பி விட்டு அறையில் அவர் மட்டும் நிற்பதைப் பார்த்ததும் நாராயணி அம்மாளின் மனத்தில் விபரீதமான எண்ணங்கள் உதயமாயின.

நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் இன்ஸ்பெக்டர் நாயர், சற்று விலகி நின்று கொண்டு தரையில் மயங்கிப் படுத்திருக்கும் குழந்தையைப் பார்த்தார்.

பிறகு எந்தவித உணர்ச்சியுமற்ற குரலில், “அந்தக் குழந்தையைப் பத்தி ஏதாவது தகவல் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு நாராயணி அம்மாளின் முகத்தைப் பாராமல் வேறுபுறம் பார்த்தார்.

நாராயணி, “உடல் கருகிக் கிடக்கும் அந்தப் பெண்தான் மோகினியின் தாய். இவன் அச்சன் குருவாயூரில் இருக்கிறான் என்று தெரிகிறது. இறந்து கிடக்கும் இன்னொரு இளைஞனைக் குழந்தை, ‘டீக்கடை அம்மாவான்’ என்று அழைத்து வந்ததாகத் தெரிகிறது ” என்று தனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் கூறினாள்.

நாயர் யோசித்தார், ஒரு வினாடி.

“அச்சன் பேர் என்னவென்று சொன்னாளா?” என்று கேட்டார்.

“நான் கேட்டேன், அச்சன் பேரு அச்சன் என்று சொன்னாள். அவளுக்கு அச்சன் பேரு தெரியவில்லை”

“பரவாயில்லை அவள் அச்சனை இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன். அதுவரை குழந்தை இங்கேயே இருக்கட்டும்.”

கழற்றிப் பெஞ்சியில் வைத்திருந்த தொப்பியை எடுத்து அணிந்து கொண் டார். ஒரு முறை நாராயணி அம்மாளைப் பார்த்துவிட்டு. வீட்டு வாயிற் புறம் வரை சென்றார். அங்கு நின்றார்.

நாராயணி அம்மாள் வாயிற்புறம் வரை வந்து நின்றாள். இன்ஸ்பெக்டர் நாயரின் கண்களில் நீர் நிறைந்து காணப்பட்டது. அவர். தொனியில் ஆணவம் இல்லை, மரியாதை இருந்தது. “நீங்கள் தானே நாராயணி அம்மாள்?” என்று கேட்டார்.

“ஆமாம். உங்களுக்கு என் பெயர் எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் நாராயணி.

“கோழிக்கோட்டில் நானும் உங்கள் அண்ணன் அச்சுதனும் ஒரே ஸ்டேஷனில் வேலை பார்த்தோம். அச்சுதன் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறான்.” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.

நாராயணி அம்மாளின் மனத்தில் எண்ணங்கள் வேகமாக ஓடின. பல வருடங்களுக்கு முன் ஒரு முறை லீவில் வந்திருக்கும்போது அச்சுதன், நாராயணியைத் தன் கோழிக்கோடு சிநேகிதன் பங்குன் நாயருக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவள் தந்தை. ‘என் ஒரே மகளை உயிருக்கு ஆபத்து நிறைந்த ஆயுத போலீஸ் இலாகாவில் உள்ளவனுக்குக் கட்டிக் கொடுக்க முடியாது’ என்று மறுத்துக் கூறியதும், ஞாபகத்துக்கு வந்தன. தன் மகள் வாழ்நாள் பூராவும் பூவும் மஞ்சளோடும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஒரு மர வியாபாரிக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். ஆனால் அந்த வியாபாரி என்னவோ அற்பாயுசாகப் போய் விட்டார். உயிருக்குத் தினம் ஆபத்து வரும் இலாகாவில் வேலை செய்பவன் என்று பயந்து ஒதுக்கிய பங்குன் நாயர் கண் எதிரே ஆஜானுபாகுவாக நின்று கொண்டிருந்தார்.

நாராயணி அம்மாள் தயக்கத்தோடு, “அச்சுதனை உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் உங்கள் பெயர்தான் பங்குன் நாயர் என்பதா?” என்று கேட்டாள்.

“ஆமாம். என் பெயர்தான் பங்குன் நாயர், கோழிக்கோடு துறைமுகத்தில் கள்ளக் கடத்தல் கூட்டத்தைப் பிடிக்கப் போனபோது என்னைக் காப்பாற்ற முன்வந்து, துப்பாக்கிக் குண்டைத் தன் உடலில் வாங்கிக் கொண்டான். அவனை நான் மறக்க முடியுமா? நீங்கள் யார் என்று தெரியாத நிலையில் உங்கள் மனம் நோகும்படி பேசியதற்கு மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் நடந்தார்.

வீட்டை விட்டுப் பத்தடி நடந்ததும், அவர் நடையில் மறுபடியும் கம்பீரம் தெரிந்தது. சற்றுமுன் குழைந்து பேசிய அவர் குரல் மறுபடியும் போர் முரசுபோல் ஒலித்தது. இறந்த காலத்திலிருந்து பறந்து வந்த ஒரு சிறு ஏடு, நாராயணி அம்மாளின் நிகழ் காலத்தின் அமைதியைக் குலைத்து நின்றது.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *