மின்னல், மழை, மோகினி






(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
விஜயாவின் தந்தைக்கு, திடீரென்று விஜயா ஹாலை விட்டு ஓடியது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. வெங்கடபதியை அவமானப்படுத்துவதைப்போல் அதுவும் வேண்டு மென்றே அவமானப்படுத்துவதுபோல் – இருந்தது அந்நிகழ்ச்சி.

அவர் எதிர்காலத்தில் வெங்கடபதியின் தயவை எதிர்பார்த்திருந்தார். சமயத்தில், லட்சக்கணக்கில் கடனாக உதவிக் காப்பாற்றியவர் வெங்கடபதி. அவரை வீட்டுக்கு அழைத்து இப்படி அவமானப்படுத்தும்படியாய் விட்டதே. அவருக்கு என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் விஜயாவின் தந்தை. வெங்கடபதியும் திகைத்துப் போயிருந்தார். அவர் முகம் அடக்கப்பட்ட கோபத்தால் சிவந்துபோய் இருந்தது. தன்னுடைய ஒரே பிள்ளைக்கு இம் மாதிரியான கர்வம் பிடித்த பெண்ணையா கட்டி வைப்பது. இவளோடு ராஜு எப்படி வாழ்க்கை நடத்துவான் என்று யோசிக்க ஆரம்பித்தார் வெங்கடபதி.
நிகழ்ந்துவிட்டதை இனித் தடுக்க முடியாது, நிகழ இருப்பதையாவது இனித் தடுப்போம் என்ற முடிவுக்கு வந்தார். விஜயாவின் தந்தை குருசாமியை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தார், “ராஜு, போகலாம் வா” என்று அழைத்தார்.
விஜயா தன்னைப் பார்த்ததும் அதிர்ச்சியடைவாள், குழம்பிப் போவாள் என்பதை ராஜு எதிர்பார்த்தான். ஆனால் இப்படி மிரண்டு ஓடி விடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. “இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் நான்தான். நீ நினைப்பதுபோல் நான் ஏழையல்ல. பணக்காரன்” என்பதைத் தனிமையில் விஜயாவிடம் விளக்கியிருந்தால், பெரியவர்கள் முன்னால் அவள் இப்படி நடந்து கொண்டிருக்கமாட்டாள் அல்லவா என்று நினைத்தான்.
வெங்கடபதி எழுந்ததும், குருசாமி கெஞ்ச ஆரம்பித்தார், “வெங்கடபதி, நீங்க உக்காருங்க. விஜயா நல்ல பொண்ணுதான். அட ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு எனக்கே புரியல்லே. தயவு செய்து பெரிய மனது பண்ணி நீங்க உக்காருங்க”, என்றார்.
ஆனால் வெங்கடபதி, குருசாமியின் வார்த்தைகளைக் காது கொடுத்தே கேட்கவில்லை. நிமிர்ந்த தலையோடு குருசாமியை ஒரு புழுவென மதித்து, ஹாலுக்கு வெளிப்புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
குருசாமி மேலும் தொடர்ந்து மன்றாடியபடி வெங்கடபதியைத் தொடர்ந்தார்.
வெங்கடபதி விர்ரென்று ஆத்திரத்தோடு திரும்பி. “குருசாமி! நீ ஒரு மனுஷன் மாதிரி நீ வியாபாரத்தை எப்படிப் புரியாமே நடத்தறியோ, அப்படியே உன் பெண்ணையும் புரியாமே வளாத்திருக்கே!” என்று வெம்மையான பதிலைச் சொல்லிவிட்டு. வெளியேறத் திரும்பினார்.
அதே சமயத்தில், “அப்பா! அப்பா” என்று ராஜுவின் குரல்கேட்டு நின்றார். “அப்பா! கொஞ்சம் பொறுங்கப்பா. எனக்கு விஜயாவைப் பிடிச்சிருக்கப்பா. அவள் வெளியே போனதுக்குத் தக்க காரணம் இருக்கப்பா” என்று ராஜு சொல்லிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், குருசாமியின் வீட்டின் உட்புறம் சென்றான்.
விஜயாவின் நடத்தை கொடுத்த அதிர்ச்சியை விட மகள் ராஜுவின் பதில் இன்னும் அதிக அதிர்ச்சியைச் கொடுத்தது வெங்கடபதிக்கு. அவர் மனிதர்களைத் தன் காரியங்களுக்கான உபயோகப்படுத்தியிருக்கிறாரே அல்லாமல் யாரையும் நேசித்தது இல்லை. பணம் உள்ளவனைப் பயன்படுத்து, சாமாத்திய முள்ளவன் சாமாத்தியத்தை உப யோகப்படுத்து, ஏமாறத் தயாராக இருப்பவனை ஏமாற்று, நம் குறிக்கோள் வெற்றி என்று வாழ்ந்தவர் வெங்கடபதி. அவர் யாரிடமும் உள்ளம் பூராவையும் கொடுக்க முடியாதல்லவா?
அவருடைய இரும்புக் கொள்கைக்கும் விதிவிலக்காக இருந்தவர்கள் இருவர். அவரையுமறியாமல் அவர் மனம் ராஜுவிடம் இளகியது. அதே போல் அவரது சகோதரன் அழகிரியிடமும் இளகியது. தம்பி அழகிரி பால்யத்தில் எப்படிப் புரியாத ஒருவனாக இருந்தானோ அதேபோல் மகனும் சில விஷயங்களில் வெங்கடபதிக்குப் புரியாதவனாகவே இருந்தான். அவமானப் படுத்திய அந்தப் பெண்ணைத் தேடி வீட்டினுள் அவன் செல்வது அவருக்குக் கொஞ்சமும் புரியவில்லை. அப்படியே அசைவற்று அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துவிட்டார்.
ராஜு, விஜயாவின் சார்பில் பேசியது, குருசாமிக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்ததாயினும், அவர் அதைத் தன் பக்க பலமாக உபயோகப் படுத்தி. வெங்கடபதியைத் திருப்திப் படுத்த ஏதேதோ பேச முயன்றார்.
ஆனால். வெங்கடபதி குருசாமியின் முகத்தைக் முகத்தைக் கூடப் பார்க்காமல் இறுமாந்து உட்கார்ந்திருந்தார்.
வீட்டின் உட்புறம் சென்ற ராஜு நேராக விஜயாவின் அறைக்குள் சென்றான், அங்கு அவள் படுக்கையில் சாய்ந்துகொண்டு, வேதனையோடு இருந்தாள், எதிரே அவள் அத்தை அவளைச் கண்டித்துக் கொண்டிருந்தாள். “தாயில்லாத பெண் நீ. ஒரு நல்ல இடத்து சம்பந்தம் வர்றப்போ இப்படியா நடந்துக்கறது; முட்டாள் பெண்ணே. உன்னைச் சொல்லி என்ன பண்றது? உங்கப்பன் உன்னை கண்டிப்பு இல்லாம் வளர்த்துட்டான்,” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், மாப்பிள்ளையாகப் போகும் ராஜுவே அறையின் வாயிலில் நிற்பதைப் பார்த்துக் குழம்பிப் போனாள்.
அவள் பார்வையிலிருந்து அவன் விஜயாவோடு ஏதோ பேச வேண்டு மென்று நினைக்கிறான் என்பதை அத்தையம்மாள் புரிந்து கொண்டாள். உடனே மகிழ்ச்சியோடு வெளியே சென்றாள்.

தனிமையில் விடப்பட்ட ராஜு படுக்கையை நெருங்கினான். தலைகுனிந்த படி இருந்த விஜயாவை அணைத்தபடி அவள் முகத்தைத் திருப்பினான். நீர் நிறைந்த விஜயாவின் விழிகள் அவன் முகத்தைப் பார்த்தன. “என்னை மன்னித்து விடு விஜயா. நான் சைக்கிள் ஷாப்காரன் மகன் என்று விளையாட்டாகச் சொன்னேன். அப்புறம் உன் காதலின் உறுதியைச் சோதிக்க வேண்டும் என்று ஏழையாகவே நடித்தேன். உன் உள்ளத்தில் இரண்டு ஆசைகள் போராடியபடி இருந்தன. பணத்தாசை ஒன்று, என் மீதுள்ள காதல் மற்றென்று. எது வெல்லப் போகிறது என்று தெரிந்து கொள்ளவே இந்த நாடகம் ஆடினேன். நீ எந்த அலங்காரமும் இல்லாமல் ஹாலுக்கு வந்தது, உன் உண்மையான அன்பு இந்த ராஜுவிடம்தான், செல்வந்தர் வெங்கடபதியின் செல்வத்திடம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். என்னை மன்னிப்பாயா விஜயா?” என்று கேட்டான்.
விஜயாவுக்குக் கோபம், இன்பம், நெகிழ்ச்சி-இம்மாதிரி உணர்ச்சிகள் சேர்ந்து தோன்ற அவளைத் திக்கு முக்காடச் செய்தன. அவளுக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் தோன்றவில்லை. முகத்தை ராஜுவின மார்பில் புதைத்தபடி. விக்கி விக்கி அழவே தோன்றியது.
அவன் கை, அவள் முதுகின் மீது மெள்ள நகர்ந்தபடி இருந்தது.
அந்தக் காட்சிதான் இப்போது சக்கர நாற்காலியில் உட்கார்ந்து, கால் இழந்து உட்கார்ந்திருக்கும் விஜயாவின் மனத்திரையில் தோன்றியது. ‘அன்று என்னிடம் எவ்வளவு அன்பாகப் பேசினார். தந்தையின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் என்னை என் அறைக்குத் தேடி வந்து, தேறுதல் வார்த்தைகள் சொல்லி அணைத்தவர் அல்லவா? இன்றும் அவர் என்னிடம் அன்போடுதான் பழகுகிறார். ஆனால் அன்றைக்கு இருந்த ஆர்வம், இன்று என் மீது இருக்குமா?’ என்று சந்தேகத்தோடு ராஜுவின் மார்பைப் பார்த்தாள்.
‘இரும்பு போன்ற பரந்து கிடக்கும் அதே மார்பு. அந்த மார்பு மாறவில்லை. அன்று போல் அப்படியேதான் இருக்கிறது. அதற்குள் இருக்கும் இதயம் மாறிவிட்டால்? அந்த இதயத்து அன்பு மாறிவிட்டால்?’ என்ற பயம் விஜயாவுக்கு வந்தது.
‘இளமை மாறாமல் வலிமை குன்றாமல் இருக்கும் கணவனுக்கு, நம்மால் என்ன இன்பம் கொடுக்க முடிகிறது? நான் ஒரு சுமையாக அல்லவா இருக்கிறேன்’, என்று தன் மீதே ஆத்திரப்பட்டுக் கொண்டாள். உணர்விழந்து கிடக்கும் கால்களைப் பார்த்தாள். அவளுக்கு அவள் மீதுள்ள ஆத்திரம் அதிகமாயிற்று. ‘அந்தப் பாழாய்ப் போன தலைப்பிரசவம் தானே. நன்றாக நடந்து கொண்டிருந்த என் கால்களை இப்படி ஆக்கிவிட்டது? அந்தக் காலத்தில் எவ்வளவு வலிமை மிகுந்த கால்களாக இருந்தன! இப்போது எப்படி ஆகிவிட்டன! அன்றெல்லாம் அவருக்குத்தான் என் மீது எவ்வளவு கவர்ச்சி! என் நடையைக் கண்டு எப்படி மயங்கிப் நிற்பார்!’ என்று எண்ணினாள்.
அதே சமயம் நாற்காலியில் அமர்ந்தவாறு புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கும் ராஜுவைக் கவனித்தாள், அவள் அவன் அருகில் வந்த பின்பும் அந்தப் புஸ்தகத்தையே படித்துக் கொண்டு இருப்பதையும், தன்னைத் திரும்பிக் கூடப் பாராமல் இருப்பதையும் கண்டு, அவனது அந்தச் செய்கை அவளுக்கு மன்னிக்க முடியாத குற்றமாகத் தோன்றியது.
அவளுக்குத் தன் கால்மீது இருந்த கோபம், புஸ்தகத்தின் மீது சென்றது. நொண்டியான பின்பு உலகில் அவன் ஓடி நகர்ந்து வாழ முடியவில்லை யாகையால், சீதா உணர்ச்சிகளிலேயே வாழ ஆரம்பித்தாள். உணர்ச்சிகள் சதா மாறிச் சுழலும் தன்மையை உடையன. இதனால் அவள் வெறுப்பு ஒவ்வொரு பொருளாக மாறி முடிவில் ராஜுவின் மீதே வந்து நிற்கும்.
‘ராஜுவின் மீதுள்ள காதல் தானே என்னைத் தாயாக்கியது? தாய்மைதானே முடிவில் என்னைக் கால் இழக்கச் செய்தது?’ என்று தர்க்க ரீதியாக நினைப்பாள். பொருமுவாள். ராஜுவின் மீது சுடு வார்த்தைகளைத் தாக்குவாள். ஆனால் ராஜுவுக்கு விஜயா என்ன சொன்னாலும் கோபம் வருவது கிடையாது.
காரணம், விஜயாவின் வாதத்தை அவன் ஒப்புக் கொண்டாள். தானே விஜயாவின் சக்கர நாற்காலி வாழ்வுக்குக் காரணம் என்று நினைத்து அவன் புழுங்கியதால், அவன் விஜயாவின் அர்த்தமில்லாத ‘கோபத்தையெல்லாம் பொறுத்துக் கொண்டான்.
அவள் அமைதியாக, இன்பமாக வாழ்வதற்காக அவன் எதையும் துறக்கத் தயாராக இருந்தான். தான் ஒரு குற்றவாளி குற்றம் இழைக்கப்பட்டவள் விஜயா என்பது அவன் எண்ணம். அவள் கோபம் எல்லை மீறும்போது அதைப் பொறுத்துக் கொள்வதே சரி என்று நினைத்தான்.
பொதுவாக, அசாதாரண தேக வலிமை உள்ளவர்களுக்கு உள்ள பொறுமை அவனிடமிருந்தது. விஜயாவின் மனம் கோணாமல் நடப்பதே தன்னுடைய வாழ்வின் கடமையாக ராஜு அமைத்துக் கொண்டான்.
விஜயா கால் இழக்காமல் இருந்திருந்தால், ஒரு வேளை அவள் ராஜுவை இவ்வளவு தூரம் ஆள முடியாமல் போயிருக்கலாம். தொண்டியானதால் அவள் ஆளும் சக்தி அதிகமாயிற்று. அவளுடைய ஒவ்வொரு ஆசையும் கட்டளையாகவே நிறைவேற்றப்பட்டது. அந்த சாந்தி வில்லாவில் வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் முதலியோர் ராஜுவின் கட்டளையை மீறத் துணிந்தாலும் துணிவார்கள், ஆனால் விஜயாவின் கோபத்துக்கு ஆளாகப் பயப்படுவார்கள்.
“என்ன அவ்வளவு படிப்பிலே கவாரஸ்யம்! அது என்ன புத்தகம்?” என்று எரிச்சலுடன் கேட்டாள். அப்போதுதான் ராஜு” திரும்பிப் பார்த்தான் விஜயாவின் முகத்தை.
அதில் தோன்றிய கோபத்தை அவன் உடனே புரிந்து கொண்டான். “ஒன்றுமில்லை. ஒரு ஆங்கிலப் புத்தகம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் புஸ்தகத்தை அவள் பார்த்து விடுவாளோ என்று தூரத்தில் உள்ள மேஜையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தான். ”உனக்குப் பழ ரஸம் கொண்டு வரட்டுமா? இல்லை, நாற்காலியை வெளி வராந்தாவுக்குக் கொண்டு செல்லட்டுமா?” என்று கனிவோடு கேட்டான்.
விஜயாவின் கவனம் பூராவும் அந்தப் புஸ்தகத்திலேயே இருந்தது. “அந்தப் புஸ்தகத்தின் பெயர் என்ன?” என்று தொடர்ந்து கேட்டாள்.
ராஜு ஒரு வினாடி திகைத்தான். ”ஒன்றுமில்லை விஜயா. அந்தப் புஸ்தகம் ஒரே போர். ஏதோ ‘லேடி சாட்டர்லீஸ் லவர்’னு பேரு” என்று சொல்லி நிறுத்தினான்.
“சாட்டர்லி சீமாட்டியின் காதலன்! பேரு அழகா இருக்கே! காதல் நாவலா?” என்று ஆர்வத்தோடு வேண்டுமென்றே கேட்டாள்.
விஜயாவின் ஆர்வத்துக்குக் காரணம் புஸ்தகத்திலுள்ள ஆசையல்ல. ‘ராஜு ஏன் அந்தப் புஸ்தகத்தைப் பற்றி அக்கறையில்லாதவனைப் போல் நடிக்க வேண்டும்? அவ்வளவு கவனம் செலுத்திப் படித்த அந்தப் புஸ்தகம் எப்படி போராக இருக்க முடியும்? இதன் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்.’ என்ற குதர்க்க நோக்கமே அவள் ஆர்வத்துக்குக் காரணம்.
“ஒரு விதமான காதல் நாவல்”, என்று சொல்லி விட்டு வாக்கியத்தை முடிக்காமல் நின்றான்.
“சரி, இனிமேல் புஸ்தகத்தைப் பற்றிய விசாரணையைத் தொடர வேண்டாம்”, என்று விஜயா நினைத்து அதோடு நிறுத்திவிட்டு, ”என்னைத் தூக்கிப் படுக்கையில் விடுங்கள்” என்றாள்.
ராஜு அவளைப் படுக்கையில் தூக்கி வைத்தான்.
“ஏன், நான் கனமாக இருக்கிறேன? என்னைத் தூக்க முடியவில்லையா?” என்று கேட்டாள். “இல்லை விஜயா.. இல்லை… வந்து, ‘” என்று தன் எண்ணங்களைக் கூற முடியாமல் நின்றான். ராஜுவின் குழப்பம் எப்பொதுமே விஜயாவுக்கு இன்பம் அளிக்கும்.
அவனை இன்னும் குழப்பி அவனைத் திண்டாட வைப்பதில் அவளுக்கு ஓர் ஆசை. ராஜுவின் கைகளைப் பற்றினாள்.
“வேண்டாம் விஜயா. வேண்டாம். என்னை மிருகம் ஆக்கிவிடாதே. டாக்டர் சொன்னதை நீ மறக்கக் கூடாது விஜயா”, என்றான்.
“எத்தனை நாள்தான் நீங்க இப்படி உணர்ச்சிகளைத் துறந்து தவம் இருக்க முடியும்? உங்களுக்கு ஒரு சுமையா உபயோகமில்லாமல் நான் ஏன் உயிரோடிருக்கணும்?” என்று கண்ணிரோடு சொன்னாள்.
“நீ எனக்கு சுமையல்ல விஜயா. எனக்குத் தேகத்திவே பலம் இருக்கிற மாதிரி, மனசிலேயும் பலம் இருக்கு. பொறுத்திருப்போம். என் மிருக இச்சையினாலே உனக்குக் கால் போச்சு. அதன் காரணமாய் உனக்கு உயிரும் போயிடக்கூடாது விஜயா” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். அவன் போனதும் விஜயா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அத்தியாயம்-14

ராஜு குதிரையைத் தன் வீட்டு லாயத்தில் கட்டியபோது குதிரையின் உடலும் வியர்த்திருந்தது. அவன் உடலும் வியர்த்துக் களைத்திருந்தது. ஆனால் அவன் மனத்தில் அமைதி இருந்தது. அவன் மனத்தில் தோன்றிய ஆசை என்ற நெருப்பு அணைத்து அவன் மறுபடியும் மென்மையான ஓர் ஆடவனாக வீட்டினுள் நுழைந்தான். குளிக்கும் அறைக்குச் சென்று குளித்துவிட்டு, ஒரு சில்க் பனியன் அணிந்து ஹாலுக்கு வந்தான், அதே சமயத்தில் கெளரி, படிக்கும் அறையிலிருந்து கையில் புத்தகத்துடன் ஹாலுக்கு வந்தாள்.
கௌரியைப் பார்த்ததும் அவனுக்கு அவள் மீது ஒரு பச்சாத்தாபம் ஏற்பட்டது. காலிழந்து படுத்த படுக்கையான மனைவி, பலவீனமான இருதயம் படைத்த மகள். அந்த வீட்டிலே மூன்று பேர். அதில் இருவருக்கு உடல்நிலை சரியில்லை. திரண்ட செல்வம் இருந்தும் அதைப் பூரணமாக அனுபவிக்க முடியாத ஒருநிலை.
கௌரி தந்தையைப் பார்த்ததும், “அப்பா, அப்பா! மருந்து கொடுங்கப்பா”, என்று சொல்லி அவனை நோக்கி வந்தாள். ராஜு கௌரியைப் பார்த்து ஒருமுறை புன்முறுவல் செய்து விட்டு ஹாலில் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த அலமாரியிலிருந்து ஒரு மருந்துப் பாட்டிலை எடுத்துத் திறந்து அதிலிருந்து சிறு மாத்திரைகளை எடுத்து அதில் ஒன்றைக் கௌரிக்குக் கொடுத்தான். கௌரி மாத்திரையை விழுங்கி விட்டுத் தண்ணீரைக் குடித்தாள்.
“ஏம்பா நீங்க மருந்தே சாப் பிடறதில்லை? நானும் அம்மாவும் மட்டும் மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கோம்,” என்று ராஜுவைப் பார்த்துக் கேட்டாள்.
“அம்மாவுக்கும், உனக்கும் நோய் இருக்கு. அதனாலே நீங்க மருந்து சாப்பிடணும். எனக்கு நோய் இல்லை. அதனாலே நான் மருந்து சாப்பிடறதில்லே,” என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டான் ராஜு.
கௌரி சோபாவில் ஏறி அவன் அருகில் உட்கார்ந்தபடி அவனைப் பார்த்து, “ஏம்பா உங்களுக்கு மட்டும் நோயில்லே?” என்று கேட்டாள்.
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று ராஜுவுக்குத் தெரிய வில்லை. சிரித்தபடி பேச்சை மாற்ற நினைத்தான்.
“கௌரி, உனக்குப் பள்ளிக்கூடம் பிடிச்சிருக்கா? அது என்ன புஸ்தகம்?” என்று சொல்லி, புஸ்தகத்தைக் குழந்தையின் கையிலிருந்து வாங்கினான். கௌரி, தன் தந்தை தான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே என்பதை மறந்துவிட்டாள். அவள் கவனம் புஸ்தகத்தில் சென்றது.
“இப்போல்லாம் நானே படிப்பேன். கேட்கிறீங்களா?” என்று சொல்லி வீட்டு, புஸ்தகத்தை வாங்கி ஒரு பக்கத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள், ”தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்கதோர் மந்திரமில்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,” என்று படித்ததும், கௌரி படிப்பதை நிறுத்திவிட்டுத் தந்தையைப் பார்த்தாள். கௌரியின் கண்களில் பரிதாப உணர்ச்சி தெரிந்தது.
“அப்போ எனக்கும் அம்மாவுக்கும் செல்வம் இல்லையாப்பா? நாங்க ஏழைங்க தானே?” என்று கேட்டாள்.
ராஜு, “அதெல்லாம் ஒண்ணு மில்லே, உனக்கு சீக்கிரமே உடம்பு சரியாப் போயிடும்.” என்றான்.
“அப்போ அம்மாவுக்கு மட்டும் சரியாப் போகாதா?அம்மா எப்பவுமே நடக்க மாட்டாளாப்பா?”
“கௌரி!அம்மாவுக்கும் சரியாப் போயிடும். அதுக்குத்தானே டாக்டர் மருந்து கொடுக்கிறார்?” என்றான் ராஜு.
கௌரி ஒரு விநாடி யோசித்தாள். பிறகு திடீரென்று ஞானோதயம் ஆனவள் போல், “மருந்து சாப்பிடறதினாலே தானே நோயிருக்கு? நீங்க மருந்து சாப்பிடறதில்லே. உங்களுக்கு நோயில்லே. அதனாலே நானும் இனிமேல் மருந்து சாப்பிடமாட்டேன். எனக்கும் நோயிருக்காது,” என்று சொன்னாள்.
தன் குழந்தையின் நூதனமான தர்க்க வாதத்தைக் கேட்க ராஜுவுக்குச் சிரிப்பு வந்தது. குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டு முத்தமிட்டான். அப்போது கெளரி தன்னுடைய சிறிய கைகளால் தந்தையின் புஜங்களை அன்போடு தடவினாள்.
“அப்பர்! உங்க கை பாறாங்கல்லு மாதிரி இருக்கப்பா, உங்களுக்கு நிறையப் பலயிருக்கு,” என்று சொல்லிவிட்டுத் தனது கையைத் தொட்டுப் பார்த்தாள். “எனக்கு அப்படி இல்லையே ஏம்ப்பா?” என்று கேட்டாள்.
“நீ இப்ப சின்னவ. அப்படித்தான் இருக்கும். பெரியவளானால் பலசாலியாகி விடுவாய்,” என்றான் ராஜு. அதே சமயத்தில் மாடியிலிருந்து மின்சார மணி ஒலித்தது. விட்டு விட்டு இருமுறை ஒலித்தது.
மின்சார மணி விட்டு விட்டு இரு முறை ஒலித்தால் விஜயா தன்னைக் கூப்பிடுகிறாள் என்பது ராஜுவுக்குத் தெரியும். தொடர்ந்து ஒரு முறை ஒலித்தால் வேலைக்காரர்களைக் கூப்பிடுகிறாள் என்று பொருள். ராஜு வேகமாக மாடிக்குப் போனான்.
மாடி அறையில் விஜயா படுக்கையில் உட்கார்த்திருந்தாள். அவள் முகம் குழம்பி, கண்கள் சிவந்திருந்தன. அவள் மூச்சு வேகமாக வந்து போய்க் கொண்டிருந்தது. அவள் கை மார்பைப் பிடித்த படி இருந்தது.
ராஜு ஓடிவந்து கவலையோடு பதறிய படி “என்ன விஜயா? என்ன விஜயா?” என்றான்.
விஜயா மூச்சுத் திணறியபடி “திடீானு நெஞ்சு வலிக்குது. மூச்சுத் திணறுது” என்று சொல்லிவிட்டு ராஜுவின் மேல் சாய்ந்தாள்.
ராஜு நிதானமாக அவளைத் தாங்கியபடியே, படுக்கை அருகில் வைக்கப் பட்டிருக்கும் ஷெல்பிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருந்து மருந்தை அவுன்ஸ் கிளாஸில் ஊற்றி விஜயாவுக்குக் கொடுத்தான். அதை வாங்கிக் குடித்ததும் விஜயாவின் மூச்சுத் திணறல் சற்றுக் குறைந்தது. தன் கைக்குட்டையால் விஜயாவின் நெற்றியைத் துடைத்தான்.
விஜயா பொறுமை இழந்தவளாய், “உங்களுக்கென்ன கவலை? இந்த வலி வந்தால் நரக வேதனையா இருக்கு. குதிரையை எடுத்துக்கொண்டு நீங்க பாட்டுக்கு எங்கோ போயிட்டீங்களே, ” என்றாள்.
”கொஞ்சம் பொறுமையா இரு விஜயா,” என்று சொல்லிவிட்டு, தலையணையில் அவளைப் படுக்க விட்டான் ராஜு.
“பொறுமையாயிரு என்று சொல்வது சுலபம். என் வலி எனக்குத் தானே தெரியும்!” என்று சொல்லிவிட்டு அவனுடைய பலம் நிறைந்த நோய் நொடி இல்லாத உடலைப் பார்த்தாள் விஜயா, அவன் உடலைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மனத்தில் இருந்த ஒரு பகுதி – அசுரப் பகுதி – எப்படியாவது அவனை வருந்தச் செய்ய வேண்டும் என்று நினைத்தது.
“என்னை இப்படி நாற்காலியோடு நாற்காலியாக ஆக்கினதே நீங்கள் தான். இந்தப் பாழும் பிரசவம் இல்லை யென்றல், கௌரி மட்டும் எனக்குப் பிறக்கவில்லை யென்றால் நான் எவ்வளவோ நன்றாய் எல்லாரையும் போல நடமாடிக் கொண்டிருப்பேன்.” என்று கூச்சலிட்டபடி சொன்னாள்.
இதை விஜயா ஞாபகப்படுத்தும் போதெல்லாம் ராஜுவுக்குத் தன் மீதே கோபம் வரும். வேதனையும் வரும். ஆனால் ஆண்மையும் வலிமையும் நிறைந்தவனாகையால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வான் தன்னுள் எழும் ஆத்திரத்தை வெளிக்காட்ட மாட்டான்.
‘கௌரி மட்டும் எனக்குப் பிறக்கா விட்டால் நான் எவ்வளவோ நல்லா எல்லாரையும்போல நடமாடிக் கொண்டிருப்பேன்.’ என்ற வார்த்தைகளை சொன்ன போதே, கெளரி அறையில் நுழைந்ததையும், தாயின் சுடுவார்த்தைகளைக் கேட்டுக் கலங்கி நின்றதையும் முதலில் தாயும் கவனிக்கவில்லை. தந்தையும் கவனிக்கவில்லை.
விஜயா திரும்பியதும் அறையின் கதவருகில் தன் மகள் அழுதுகொண்டு நிற்பதைச் கவனித்தாள். நாம் கூச்சலிட்டது குழந்தையின் காதுகளில் விழுந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். அவளுக்கு ராஜுவின் மீது இருந்த ஆத்திரம் தன் மீதே திரும்பியது, தன்னைத் தானே ஒருவர் திட்டிக்கொள்ள முடியாதல்லவா? ஆகையால் பற்களை நரநரவென்று கடித்தாள்.

குழந்தையின் பக்கம் திரும்பிய விஜயா, “கௌரி! மாடிக்கு நீயாகவா வந்தாய்? படிக்கட்டிலே நீயேவா ஏறி வந்தே?” என்று கேட்டாள்.
”ஆமாம்மா, நான் தான் ஏறிவந்தேன்” என்றாள் கௌரி பயத்தோடு.
உடனே விஜயா கணவன் பக்கம் திரும்பினாள். “பார்த்தீர்களா, பார்த்தீர்களா? அவளாகவே படிக்கட்டிலே ஏறி வந்திருக்காள். நீங்கள் இருந்தும் என்ன பிரயோசனம்? கௌரி படி ஏறக் கூடாதென்று டாக்டர் சொன்னதைப் பத்தி அவளுக்கும் அக்கறையில்லை. உங்களுக்கும்அக்கறையில்லை. அந்த மாதவன் எதற்கு வேலைக்கு இருக்கிறான்? அவனை உடனே வேலையை விட்டு நீக்குங்கள்!” என்று கூச்சலிட்டாள்.
தன் காரணமாக மாதவனுக்கு வேலை போய் விடுமோ என்று நினைத்த கௌரி, “நான் மாடிக்கு ஏறி வந்தது மாதவனுக்குத் தெரியாதும்மா. அவன் என்னுடைய கவுன் சட்டைகளைத் துவைக்கக் கிணற்றடிக்குப் போயிட்டாம்மா நான் ஏறிவந்துட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகல்லியே?” என்றாள்.
விஜயா அமைதியாகச் சிந்தித்திருந்தால் குழந்தை சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பாள். ஆனால் அவளுக்குப் புரிந்த தெல்லாம் ‘குழந்தைகூடத் தன்னை எதிர்த்துப் பேசுகிறாள். தன்னை மதிக்கவில்லை’, என்பதுதான்.
“எதிர்த்து எதிர்த்துப் பேசறியா! இனிமேல் நீ படி ஏறக்கூடாது. ஓடக் கூடாது. தெரிஞ்சுக்கோ!” என்று புருவங்களை நெரித்தாள்.
கௌரிக்குக் கோபத்திலிருக்கும் தாயைப் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. “நான் ஓடினால் என்னம்மா? என் உயிர்தானே போகும்? போகட்டுமே! என்னால்தான் உன் கால் போச்சு. நான் செத்துப் போயிட்டால் உன் காலாவது சரியாயிடும் இல்லையா?” என்று திக்கித் திணறியபடி சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
விஜயா, “கௌரி! கெளரி! கௌரி!” என்று பலமுறை உணர்ச்சியோடு கூப்பிட்டதோ தந்தை அழைத்ததோ அவள் காதில் விழவில்லை.
முதன் முறையாகக் கௌரி இப்படிப் பேசியது இன்றுதான். விஜயாவுக்கு ஒரு பக்கம் ஆத்திரம். ஒரு பக்கம் துக்கம், ஒரு பக்கம் அழுகை! “என் குழந்தையே என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டாள். நீங்களும் என்னை வெறுக்குறீங்க. ஆனால் அதை மூடி வைக்கிறீங்க. இந்த விட்டிலே வேலை செய்கிறவங்க எல்லாம் பணத்துக்காக எனக்குப் பயந்து நடக்கிறாங்க. நான் எல்லாருக்குமே ஒரு சுமையாயிட்டேன். நான் ஏன் உயிரோடு இருக்கணும்? நான் ஏன் உயிரோட இருக்கனும்?” என்று சொல்லி விட்டுத் தலையில் மடீர் மடீர் என்று அடித்துக் கொண்டாள்.
அவன் துக்கத்தைப் பார்த்து ராஜுவுக்கு வேதனையாக இருந்தது. அவளைத் தேற்றும் நோக்கத்தில் ஏதாவது சொன்னால் விஜயாவுக்கு மீண்டும் கோபம் வரும். விஜயா காலை இழந்ததிலிருந்து இம் மாதிரி சம்பவங்களை அவன் அடிக்கடி சந்தித்திருக்கிறான். ஆகையால் ராஜு வுக்கு விஜயாவைத் தேற்றும் பழக்கம் இருந்தது. வார்த்தைகள் அவள் கோபத்தைக் கிளறும். ஆகையால் இம்மாதிரி சமயங்களில் ராஜு அவளோடு அதிகம் பேசமாட்டான். அவளை நெருங்கி, முரட்டுக் குதிரையை அதன் சாரதி தட்டிக் கொடுப்பதுபோல் விஜயாவைத் தடவிக் கொடுப்பான். சமாதானப் படுத்துவான்.
அதே போல் இன்றும் ராஜு விஜயாவை நெருங்கி அவள் மோவாய்க் கட்டையைத் தூக்கிப் பிடித்து அவள் கண்களை கனிவோடு நோக்கியபடி “விஜயா? நீ ஏன் உயிரோடு இருக்கணும் தெரியுமா? நான் உயிரோடு இருக்கணும் என்பதுக்காக நீ உயிரோடிருக்கணும்.” என்று சொல்லி விட்டுப் படுக்கையில் உட்கார்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
ராஜூவின் ஸ்பரிசம் பட்டதுமே விஜயா கோபம் தணிந்து அழ ஆரம்பித்தாள். அவன் கையை எடுத்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். “உங்கள் மாதிரி ஒரு பொறுமையான நல்ல புருஷன் உலகத்திலேயே இருக்க முடியாது. எவ்வளனோ பாபத்துக்கு நடுவிலே கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன். அதனால் தான் உங்களைக் கணவனாய் அடைந்திருக்கிறேன். என்னை என்றைக்கும் மறக்கமாட்டீர்களே? என்னைக் கைவிடமாட்டீர்களே?” என்று சொல்லி விட்டு அவனைச் கெஞ்சியபடி பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் அவளைப் படுக்க வைத்துவிட்டு நகர்த்தான் ராஜு.
கோபம், கூச்சல், அழுகை, மன்னிப்பு இந்த நிலைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு வெகு சீக்கிரத்தில் தாவும் விஜயாவிடம் வார்த்தைகள் பேசி என்ன பயன்! விஜயாவுக்கும் தனக்கு மிடையே ஒரு காந்த வயல் காந்த வயல் இருப்பதையும் அதில் எப்போதும் கண்ணீர் மழை பெய்து. கொண்டிருப்பதையும் ராஜு நன்கு உணர்ந்திருந்தான்.
பேசாமல் செல்லும் ராஜுவைப் பார்த்து, “என்ன, ஒன்றும் சொல்லாமல் போகிறீர்களே!” என்று கேட்டாள் விஜயா.
ராஜு திரும்பினான். அவன் முகத்தில் சோகப் புன்னகை படிந்தது. “நான் என்ன சொல்லணும் விஜயா? நான் உன்னை விரும்பரேண்ணு ஒரு நாளைக்கு எவ்வளவு முறை சொல்லணும்?” என்றான்.
“பெண்மனம் உங்களுக்குப் புரியல்லியா? எவ்வளவு முறை ஒரு பெண்ணிடம் நீங்க அவளை விரும்பறேன்னு சொன்னாலும் அவளுக்கு அது அலுக்காது. அந்த வார்த்தைதானே எங்களுக்கு தெய்வீக சங்கீதம்.” என்றாள் விஜயா.
ராஜு சிரித்துவிட்டு வெளியே சென்றான்.
மறுநாள் காலையில் கௌரி எழுந்தவுடன் மாதவன் கௌரியை விஜயாவிடம் அழைத்துச் சென்றான். விஜயா குழந்தையின் நன்மதிப்பைப் பெறும் நோக்கத்தோடு கெளரியின் அலங்காரத்தைத் தானே மேற்கொண்டாள். சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே கௌரிக்குத் தலைசிவிப் பூ வைத்தாள். மலேயாவிலிருந்து வந்திருந்த சுவையான பிஸ்கொத்துகளைக் கொடுத்தாள். சிரித்தாள். இன்னும் என்ன என்னவோ செய்து பார்த்தாள்.
கௌரி அமைதியாக இருந்தாள். வெறுப்பையும் காட்டவில்லை. அன்பையும் காட்டவில்லை. கணவன் ராஜுவிடம் பலிக்கும் முயற்சிகள் தன் குழந்தையிடம் பலிக்கவில்லையே என்றதும் விஜயாவுக்கு ஏமாற்றமாயிருந்தது. ஒன்றும் பேசாமல் இருந்த கௌரி, “அம்மா! நான் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வர்றேன் அம்மா”, என்றாள்.
அவள் அந்த அறையை விட்டு வெளியே போக விரும்புகிறாள் என்பது புரிந்தது.
விஜயாவுக்கு. “நீ ரொம்ப அழுத்தக் காரிடி! நேத்திக்கு உன்னைத் திட்டினதுக்காக உனக்கு என் மேலே கோபம் தானே கௌரி?” என்று கேட்டாள்.
“இல்லேம்மா, எனக்குக் கோபம் இல்லேம்மா,” என்றாள் கெளரி.
விஜயா குழந்தையை அதோடு விடுவதாயில்லை. விஜயாவின் ஒரு பெரும் குறைபாடே அதுதான். எந்த உணர்ச்சியையும் எந்த அளவில் விட வேண்டு மென்று தெரியாது. எந்தப் பேச்சை எப்போது நிறுத்த வேண்டுமென்று தெரியாதவள்.
“கௌரி! நீ என் கண்ணில்லே? நீ ஏம்மா ஒரு மாதிரியா இருக்கே?” என்று தொடர்ந்து கேட்டாள்.
கௌரி கொஞ்சம் தயங்கினாள். தாயைப் பயத்தோடு ஒருமுறை பார்த்து விட்டு, “அம்மா உன்னை எனக்குப் புரியலேம்மா. ஆனால்… ஆனால் உன்னைப் பார்த்தால் இரக்கமா இருக்கம்மா,” என்று சொல்லிவிட்டு, “மாதவா, என்னைக் கீழே தூக்கிட்டுப் போ,” என்று மாதவனைப் பார்த்துச் சொன்னாள். மாதவனும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினான்.
குழந்தையின் பதிலைக் கேட்ட விஜயாவுக்கு விரல்கள் துடித்தன. பலவீனமான நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் அவள் கோபப்பட வில்லை. கூச்சலிடவில்லை. ‘நான் பெற்ற குழந்தை, என் உதிரத்தில் உதித்தவள். என்னைப் பார்த்துப் பரிதாபப்படும்படி ஆகிவிட்டதே!’ என்று வருந்தினாள்.
இதே சமயத்தில் கீழ்ப்புற ஹாலின் சோபாவில் அமர்ந்தபடி ராஜு கௌரியின் பாடப் புத்தகத்தைப் புரட்டினான். அந்தப் புத்தகத்தில் அவன் கண்முன் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற வரிகள் எதிர்ப்பட்டன. ராஜு ஒரு பெருமூச்சு விட்டான். கடந்த ஆறு வருடங்களாக, தன் மனைவிக்குச் சம்பளமில்லாத ஒரு ஆண் நர்ஸாகப் பணியாற்றும் விந்தையை நினைத்துப் பார்த்தான். எதிரே மாட்டியிருந்த தன்னுடைய தந்தையின் படத்தைத் பார்த்தான். ‘ஒரே மகனுக்காக எவ்வளவு மில்கள், எவ்வளவு தோட்டங்கள், எவ்வளவு பங்களாக்கள்! குறுகிய காலத்தில் அவ்வளவும் தேடி வைத்து விட்டு இறந்து போனார். அவர் வைத்து விட்டுப் போன செல்வம் அவர் இறந்த பின் விருத்தியாகிக் கொண்டுதான் இருக்கிறது. பாங்குகளில் தொகை ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் அவர் மகனுக்கு ஒருநாள் சுகமுண்டா? அமைதி உண்டா?” என்று ராஜு பன்மைப் படுத்தி யோசிக்கும்போதே தன்னுடைய அன்பு மகளை மாதவன் படிக்கட்டுகளில் தூக்கி வருவதைப் பார்த்தான்.
அதே நேரத்தில் ராஜுவுக்கு அவன் சித்தப்பாவின் நினைவும் மனத்தில் எழுந்தது. அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்ற தகவலே கிடைக்கவில்லை. ஆனால் அவர் எங்கோ பரதேசியாக, சந்தோஷமாக இருக்கிறார் என்பது மட் டும் உறுதி என்று ராஜுவின் மனம் நினைத்தது.
சித்தப்பாவைப் பற்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராஜுவுக்கு, தன் குழந்தை கௌரி கூப்பிடுவது முதலில் காதில் விழவில்லை. “அப்பா! அப்பா! நான் ஸ்கூலுக்குப் போறேம்பா,” என்று சொன்னாள், கௌரி.
“அதுக்குள்ளேயா? ஸ்கூலுக்கு மணி ஆகவில்லையே கௌரி?'” என்றாள்.
“ஸ்கூலுக்குப் போக ஆசையா இருக்கப்பா,” என்றாள் கௌரி.
அமைதி இல்லாத வீட்டை விட்டு ஸ்கூலுக்காவது போவோம் என்று குழந்தை ஆசைப்படுகிறது என்பது ராஜுவுக்குப் புரியவில்லை. “சரி, போய் விட்டு வா, கௌரி!” என்று சொல்லி விட்டு மாடியை நோக்கி ஏறினான்.
அத்தியாயம்-15

அன்று காலை ஒன்பது மணிக்குப் பள்ளியில் நுழையும்போது கௌரிக்கு ஒரு புத்துணர்ச்சி. மற்றக் குழந்தைகளைப் பார்க்கப் போகிறோம், அவர்களோடு பேசப் போகிறோம் என்ற ஆவல், எல்லாவற்றுக்கும் மேலாக அழகான மோகினி டீச்சரைப் பார்க்கப் [போகிறோம் என்ற ஆவல்தான் அவள் மனத்தில் மேலோங்கி நின்றது.
ஆனால், கௌரி பள்ளிக்குள் நுழைந்ததும் சில குழந்தைகள்தான் விளையாடிக் கொண்டிருந்தனர். மோகினி டீச்சர் இன்னும் பள்ளிக்கு வரவில்லை என்பதை உணர்ந்தாள். அந்த ஏழைக் குழந்தைகளோடு நெருங்கிப் பேச முயன்றாள். ஆனால், அவர்கள், காக்கி உடை அணிந்த மாதவன் அருகில் இருப்பதைக் கண்டு பயந்து ஒதுங்கினார்கள். இது கௌரிக்குத் துன்பமாயிருந்தது.
“மாதவா! நீ தூரப் போ!” என்று கட்டளையிட்டாள்.
மாதவன் தயங்கினான். “அம்மா திட்டுவாங்க. நான் இங்கனே இருக்கேன்.” என்றான்.
கெளரி வீம்போடு, மறுபடியும், “மாதவா! நீ போய்க்கோ, நீ போய் கோடா!” என்று மீண்டும் கட்டளையிட்டாள்.
வேறு வழியில்லாமல் மாதவன் நகர்ந்து கொண்டான். பள்ளியின் வேறு புற வராந்தாவில் போய் உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்தான்.
மாதவன் நகர்ந்ததும் குழந்தைகளுக்குத் துணிவு ஏற்பட்டது கௌரியை நெருங்கி வந்தனர். அழுக்காடை அணிந்த குழந்தைகள் சில, மேல் சட்டையே இல்லாத குழந்தைகள் சில. எல்லோருமே அவளை நட்போடு பாராமல் பகையோடு பார்த்தனர். காரணம், கெளரி பள்ளிக்கு வந்த ஆடம்பரமான விதம்தான்.
குழந்தைகளும் பேசாமல் தன்னை உற்றுப் பார்ப்பது கௌரிக்கு அவமானமாக இருந்தது. வீட்டில்தான் குழப்பமாயிருக்கிறது என்று பள்ளிக்கு வந்த குழந்தைக்கு இம்மாதிரியான வரவேற்பு வேதனையாக இருந்தது.
“ஏண்டி எல்வாரும் அப்படி முறைச்சுப் பாக்குறீங்க?” என்று கேட்டாள் கௌரி.
அதில் அழுக்கு உடை அணிந்த ஒரு குழந்தை, “நீதான் போலிஸோட வர்றியே!” என்று மாதவனைக் குறித்துச் சொன்னாள்.
இன்னெரு குறும்புக்காரக் குழந்தை, “அது போலீஸில்லேடி, அதுதான் கௌரியோட கால், கௌரி தன் காலை வச்சிப் படியேற முடியாதுடி. அதுக்குத் தான் அந்த ஆளு வர்றான்,” என்று சொன்னதும், எல்லாக குழந்தைகளும் சிரிக்க ஆரம்பித்தனர்.
விஜயாவின் ஆணவம், மகள் கௌரியிடம் கொஞ்சமாவது இல்லாமலிருக்குமா? ஆத்திரத்தோடு, தனக்குக் கால் இல்லை என்று சொன்ன குழந்தையின் மீது பாய்ந்தாள். அவளைத் தன் கைகளால் பிறாண்ட ஆரம்பித்தாள். அவளும் இவளை அடித்தாள். கௌரிக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும் விடாமல் எதிரியைத் தாக்கினாள். இந்தச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு கை வந்து, போரிடும் குழந்தைகளைப் பிரித்தது. எல்லாக் குழந்தைகளும் பிரிந்து நின்றனர்.
கௌரி நிமிர்ந்து பார்த்தாள். மோகினி டீச்சர் நின்று கொண்டிருந்தாள். செல்வமாகச் சலுகையோடு வாழ்ந்த குழந்தையாதலால் கௌரி, மாதவனைப்போல் மோகிளி டீச்சரும் அவள் சொல்வதையெல்லாம் கேட்பாள் என்று நினைத்தாள்.
“பாருங்கள் டீச்சர்! அவள் என்னைத் திட்டறா. அவளை அடியுங்க டீச்சர்,” என்றாள்.
மோகினி, “அடிக்கிறதுன்னா இரண்டு பேரையும்தான் அடிக்கணும். இரண்டு பேரும்தானே சண்டை போட்டிங்க?” என்று சொல்லிவிட்டு மற்றக் குழந்தைகளைப் பார்த்து, “வகுப்புக்குப் போங்க.” என்று கட்டளையிட்டாள். எல்லாரும் வகுப்புக்குச் சென்றனர்.
மோகினி டீச்சர் இப்படி நிர்த்தாட்சண்யமாகப் பேசுவாள் என்று கௌரி எதிர்பார்க்கவில்லை. திகைப்போடு டீச்சரைப் பார்த்தாள்.
குழந்தை கௌரியின் மனத்தில் முதல் நாள் தாய் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. ‘ஒருநாள் பழக்கத்திலே டீச்சர் நல்லவள்னு எப்படி கௌரி சொல்ல முடியும்?’ என்றது கௌரியின் ஞாபகத்துக்கு வந்தது. குழப்பத்தோடு டீச்சரைப் பார்த்தாள், மோகினி சிரிப்போடு குழந்தையைப் பார்த்தாள்.
“என்னையும்கூட அடிப்பீங்களா டீச்சர்?” என்று கேட்டாள் கெளரி.
“பொதுவா நான் யாரையும் அடிக்கிற பழக்கமில்லே. நீயும் தப்பு செய்தா உன்னையும் கண்டிப்பேன். நீயும் எல்லாரையும் போலத்தானே? வா. வகுப்புக்குப் போகலாம்,” என்று அழைத்தாள் மோகினி.
பள்ளிக்கூடத்தின் படிக்கட்டுக்கு வந்ததும் கௌரி தயங்கினாள். “பரவாயில்லை. படிக்கட்டிலே ஏறினா உனக்கு ஒண்ணும் ஆயிடாது. ஏறி வா!” என்று சொன்னாள் மோகிளி.
கௌரியும் மெள்ள ஒவ்வொரு படியாக ஏறினாள். படிக்கட்டில் ஏறிக் கொண்டிருக்கும்போதே கௌரிக்கு முதல் நாள் இரவு, அவள் படியேறியதைக் குறித்துத் தாய் கண்டித்தது ஞாபகத்துக்கு வந்தது, மற்றக் குழந்தைகளைப் போல் நானும் படிக்கட்டுகளில் மாதவன் உதவி இல்லாமல் ஏறிவிட்டேன் என்ற திருப்தியும் கௌரிக்கு ஏற்பட்டது. ஆனால் அவளுக்கு டீச்சர் மீது ஏற்பட்ட கோபம் மட்டும் தணியவில்லை.
வீட்டில் எல்லோரும் கௌரியிடம் தனிப்பட்ட சலுகை காட்டுவார்கள், ஆனால் டீச்சர் அப்படி இல்லை. தன்னை அலட்சியமாக நடத்துகிறாள் என்று நினைத்தாள். சிரிப்பே துளிகூடக் காட்டாமல் வகுப்புக்கு வந்தாள்.
விஜயா கோபத்தைக் காட்டும் சமயத்தில் எல்லாம், இயற்கையாகவே சிரிப்பூட்டும் நிகழ்ச்சி நடந்தால் கூடச் சிரிக்க மாட்டாள். எடுத்ததற்கெல்லாம் சிரித்தால் அது கௌரவக் குறைச்சல் என்று தன் தாய் சொல்லக் கேட்டிருக்கிறாள் கௌரி.
வருப்பில் மோகினி வேடிக்கையான கதைகள் சொன்னாள். மற்றக் குழந்தைகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள், ஆனால் கௌரி மட்டும் ‘உம்’ மென்று உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்த மோகினி, கௌரிவின் கோபத்தின் காரணத்தைப் புரிந்து கொண்டாள். தன்னோடு சண்டை போட்ட குழந்தையை டீச்சர் கண்டிக்கவில்லை என்ற கோபம்தான் கௌரியின் மனத்தைக் குழப்புகிறது என்று தெரிந்து கொண்டாள்.
பணக்கார வீட்டுச் செல்வக் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆணவம்தான் கௌரியிடம் தோற்றமளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மோகினியால்.
மோகினி செல்வத்தில் பிறக்கவுமில்லை, செல்வத்தில் வளரவுமில்லை. அவளைச் சுற்றிக் குற்றேவல் புரிய வேலைக்காரர்கள் இருந்ததில்லை. கௌரியைவிடச் சிறிய வயதில் தாயை இழந்து, தகப்பனால் புறக்கணிக்கப் பட்டவளுக்கு, சலுகை, செல்வம் என்ற வார்த்தைகளின் அர்த்தமே புரியாததில் ஆச்சரியமில்லை. அவளைப் பாராட்டி உயர்த்திப் பேசிய ஜீவன்கள் குழந்தைச்சாமியும் நாராயணியும்தான்.
குழந்தைச்சாமியின் நினைவு வந்ததும் மோகினிக்குக் கௌரியிடம் ஒரு பரிவு ஏற்பட்டது. கெளரி குழந்தைச்சாமிக்கு ஒரு விதத்தில் பேத்தியல்லவா? அதற்காகவாவது அவளுக்குத் தனிச் சலுகை காட்ட வேண்டியதுதான் என்று நினைத்தாள்.
குழந்தைச்சாமியில் பேத்தி என்று கௌரியை நினைக்கும்போதே மோகினிக்குத் தன்னையுமறியாமல் ஒரு விதச் சிரிப்பு வந்தது. அந்தச சின்ன வயதியே என்னை அம்மா தாயே என்றெல்லாம் சாமி கூப்பிடுவாரே. அவரே என் மகன். ஆனால் கௌரிக்கு நான் கொள்ளுப் பாட்டி ஆகவேண்டும் அல்லவா? என்று சிரித்துக் கொண்டாள்.
வகுப்பு முடிந்து பிற்பகல் இடைவேளையில், கௌரிக்கு வராந்தாவில் போட்டிருந்த பெஞ்சியில் வேலைக்கார மாதவன் உணவு எடுத்துப் பரிமாற ஆரம்பித்தான். வீட்டுக்கு உணவருந்த மற்றக் குழந்தைகள் சென்றுவிட்டனர்.
கௌரியின் முன் பல பிளேட்டுகளும் ஜூஸ், தண்ணீர் நிரம்பிய சிறிய பாட்டில்களும் பரப்பப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிளேட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பல ரகப்பட்ட உணவுகளை மாதவன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
மோகினி சீரித்தபடி கௌரியிடம் நெருங்கி “என்ன கௌரி, டீச்சருக்கு டிபன் கிடையாதா?” என்றாள்.
கௌரி ஒரு விநாடியில் கோபத்தை மறந்துவிட்டு, “எது வேணும்னாலும் எடுத்துக்கோங்க டீச்சர்!” என்றாள்.
“கௌரி நான் கொடுப்பதை நீ சாப்பிட்டாத்தான் நீ கொடுக்கிறதை நான் எடுத்துப்பேன்.'” என்ற மோகினி தன் டிபன் பெட்டியிலிருந்து ஓர் இலை அடையை எடுத்து வைத்தாள்.

இலை அடை என்பது பொதுவாக மலையாளப் பணியாரம் ஆகையால் கெளரிக்கு அதைச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. அது பார்க்கவே புதுமாதிரியாக இருந்தது. அதை எடுத்துச் சாப்பிட்டு விட்டுக் கௌரி, “ரொம்பத் தித்திப்பா இருக்கு டீச்சர். இதுக்குப் பேர் என்ன டீச்சர்?” என்று கேட்டாள்.
”பார்த்தாலே தெரியலே? இலையிலே சுற்றி இருக்கிறதுனாலே இதுக்குப் பேர் இலை அடை,” என்றாள் மோகினி.
இருவரும் சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டனர், கௌரி மறுபடியும் குதூகலமாகப் பேச ஆரம்பித்தாள். மோகினி சந்தாப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு. “கௌரி! உன் கோபமெல்லாம் போயிட்டுதா?” என்றாள்.
கௌரி வெட்கத்தோடு தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள்.
மோகினி, தொடர்ந்து, “ஒரு விஷயத்திலே அவள் உன்னோடு சண்டை போட்டது நல்லதாப் போச்சு. உனக்கு இதயத்திலே ஒரு கோளாறும் இல்லைன்னு தெரியுது. ஹார்ட் வீக்கா இருந்தா, நீ போட்ட சண்டைக்கு நீ மயங்கி விழுந்திருக்கனும். இல்லைன்னா ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருக்கணும்” என்றாள்.
இதைக் கேட்டதும் கௌரிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “அப்பாவும் அம்மாவும் எனக்கு ஹார்ட் வீக்னு சொல்றங்களே, அது பொய்யா?” என்று கேட்டாள்.
“அப்பாவும் அம்மாவும் பொய் சொல்லமாட்டாங்க. அவுங்க, டாக்டர் பேச்சைக் கேட்டுத்தான் சொல்லியிருப்பாங்க” என்றாள் மோகினி.
“அப்போ டாக்டர் சொல்றது பொய்யா டீச்சர்?”
“டாக்டர் வேனும்னுட்டுப் பொய் சொல்லமாட்டார். உன்ளைப் போல வளர்ற குழந்தைக்கு நோய்கள் ஏற்படறதும் அப்புறம் தானாவே சரியாப் போயிடறதும் சகஜம். உனக்குக் குழந்தையிலே ஏதாவது கோளாறு இருந்திருக்கலாம். பின்பு இயற்கையே அந்தக் கோளாறைச் சரி செய்திருக்கலாம். இல்லையா?” என்றாள் மோகினி.
கௌரி யோசித்தாள். “நிஜமாவே எனக்கு ஒண்ணுமில்லையா டீச்சர்?” என்று மோகினியைக் கெஞ்சும் பார்வையில் பார்த்தாள். அப்பார்வை, ‘எனக்கு ஒரு கோளாறும் இல்லை என்று அடித்துச் சொல்லுங்கள்,’ என்று கூறுவது போல் இருந்தது.
மோகினி, “கௌரி! உனக்கு ஒரு உனக்கு ஒரு கோளாறும் இல்லை, நீ எல்லாக் குழந்தைகளும் போலத்தான் இருக்கே.” என்று உறுதியோடு சொன்னாள்.
மோகினி சொன்ன வார்த்தைகள் கௌரிக்குப் பெரிய ஒளஷதம் போல் அமைந்தன. கௌரியின் முகம் மலர்ந்தது. அவள் கண்களில் புது ஒளி தோன்றியது. அவள் இதயத்தில் நிறைவு ஏற்பட்டது. கௌரியின் தாய் விஜயா இதுவரை கெளரியின் மனத்தில் இம்மாதிரி ஒரு நன்றிப் பெருக்கை உண்டு பண்ணியதில்லை.
கௌரி பாய்ந்து மோகினியைக் கட்டிக் கொண்டாள். தன் முகத்தை மோகினியின் மார்பில் புதைத்துக் கொண்டாள்.
மோகினியும் உடலளவில் கன்னியாக இருந்தபோதிலும் ஒரு தாயின் இன்பத்தை அப்போது அடைந்தாள். கௌரியின் கன்னத்தில் மூத்தமிட்டாள்.
இந்தத் திடீா அன்புச் காட்சியைப் பார்த்துத் திகைத்தவாறு நின்றான் மாதவன். அடுத்தபடி கெளரி டீச்சரைக் கேட்ட கேள்வி மாதவனுக்கு இன்னும் திகைப்பை ஊட்டியது. அவனைச் சிரித்த படி தலை குனியச் செய்தது.
“டீச்சர், உங்க தோளும் மார்பும் கல்லு மாதிரி பலமா இருக்கு, எங்கப்பாவுக்கும் இப்படித் தான் பலம் இருக்கு டீச்சர்” என்று மோகினியின் வளமான வலிமை பொருந்திய அழகை வர்ணித்தாள் கௌரி.
இக்கேள்வி மோகினியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. எதிரே வேலைக்காரன் நிற்பதை உணர்ந்த மோகினி கண்டிப்பான முகத்தோடு, “கெளரி! நீ பெரியவளான உனக்கும் பலம் வந்துடும்,” என்று சொல்லி மழுப்பிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்.
அன்று பிற்பகல் மூன்று மணிக்கு விளையாட்டு நேரத்தில் மற்றக் குழந்தைகளோடு கௌரியும் விளையாட விரும்பினாள். மாதவன் அதைத் தடுத்தான். “எஜமானியம்மா குழந்தை ஓடாம் குதிக்காம பாத்துக்கத்தான் என்னை அனுப்பியிருக்காங்க,” என்று சொன்னான்.
மோகினி, “குழந்தைக்கு இந்த விளையாட்டினால் கெடுதி ஒண்ணும் வராது. தினமும் நோயாளின்னு குழந்தையிடம் சொல்லி அதை ஒரு நோயாளி ஆக்கக்கூடாது. உண்மையிலேயே ஏதாவது கோளாறு இருந்தாக்கூடக் குழந்தையின் திட நம்பிக்கை அந்தக் கோளாறைப் போக்கிடும்,” என்று சொல்லிலிட்டுச் கெளரியைக் குழந்தைகளின் விளையாட்டில் கலந்து கொள்ளச் சொன்னாள்.
மாதவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கௌரி குதூகலமாகப் பந்தைத் துரத்தி ஓடும் காட்சியைப் பார்த்த மாதவனுக்கு, “கௌரிக்கு நோய்கூட இருக்க முடியுமா?” என்ற சந்தேகம் வந்தது. குழந்தையின் குதூகலத்தைக் கெடுக்க விரும்பவில்லை மாதவன். எஐமானி அம்மாளுக்குத் தெரிந்தால் தானே வம்பு? விஷயத்தை மூடிவைத்துவிடுவோம் என்று தீர்மானித்தான்.
மூடிவைக்கக் குழந்தையின் ஒத்துழைப்புத் தேவையல்லவா? மாலை வீடு திரும்பும்போது மாதவன் கௌரியிடம் விஷயத்தை விளக்கினான்!
“அந்த டீச்சரம்மாவானா உன்னைப் பந்தாடச் சொல்றங்க. அவுங்க வீட்டுப் பலகாரத்தை உனக்குக் கொடுக்கிறங்க. இதெல்லாம் விஜயா அம்மாவுக்குத் தெரிஞ்சா எனக்கு வேலை போயிடும் பாப்பா. உன்னையும் பள்ளியிலேருந்து பள்ளியிலேருந்து மாத்திடுவாங்க,” என்றான் மாதவன்.
‘பள்ளியிலேருந்து மாத்திடுவாங்க’ என்ற விஷயம் கௌரிக்குக் கவலையைக் கொடுத்தது. “நீ அம்மாக்கிட்டே சொல்ல வேண்டாம். நானும் சொல்ல மாட்டேன்,” என்று அவனோடு தன்னுடைய தாயை ஏமாற்றும் சதிக்கு ஒத்துக் கொண்டாள்.
“கவுன்லே எப்படி இவ்வளவு செம்மண் கரைன்னு அம்மா கேட்டாங்கன்னா என்ன சொல்லுவே பாப்பா?”
“அம்மா மாடியிலேதானே இருக்காங்க? நான் மாடிக்குப் போறதுக்கு முன்னாடி வேற கவுன் போட்டுட்டா, அம்மாவுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் கௌரி சமத்காரமாக.
குழந்தையும் வேலைக்காரனும் விஜயாவை ஏமாற்றத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது பழனிமலைக்குச் செல்லும் பாதையில் ஒரு பிச்சைக் காரன் ஒரு தனவந்தர் முன் குருடன் போல் கருவிழியை இமையில் மறைத்து. “கண்ணில்லாத கபோதி ஐயா… பிச்சை போடுங்க,” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்தத் தனவந்தர், முழு ரூபாயைப் பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு நகர்ந்தார்.
பணத்தை வாங்கிக் கொண்டதும் அந்தப் பிச்சைக்காரன் கண்களைச் சரியாக்கிக்கொண்டு, பணம் கொடுத்து விட்டுப் போனவரின் திசையை நோக்கி, “முட்டாப் பசங்க தான் முதலாளியாறாங்க.” என்று சொன்னான்.
“கொடுத்தவரையே திட்டறியேப்பா. கொடுக்காதவனை இன்னும் எப்படியெல்லாம் திட்டுவே நீ?” என்ற குரல் கேட்டுப் பிச்சைக்காரன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
எதிரே புழுதி படிந்த கால்களோடு அயர்வும் களைப்பும் மிகுந்த தோற்றத்தோடு ஒரு சாமியார் நிற்பதைக் கண்டதும், “ஓ சாமியாரா? நீங்களும் நம்மைப் போல ஒரு ரகம்,” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.
அவன் குருடன் அல்ல என்பதை உணர்த்து கொண்ட குழந்தைச்சாமி, “ஏம்பா நீ குருடனில்லையா? ஒருவன் சிலரைப் பலகாலம் ஏமாத்தலாம். ஒருவன் பலரைக் கொஞ்சகாலம் ஏமாத்தலாம். ஆனால் எல்லோரையும் எப்பவுமே ஏமாத்திக் கொண்டிருக்கவே முடியாது. அதுவும் அடவுளை நீ ஏமாத்தவே முடியாதுப்பா”, என்று சொல்லி விட்டுப் பழனிமலை மீதிருக்கும் ஆன்டவன் இருக்கையைக் காட்டினார்.
பிச்சைக்காரன் இடிஇடி என்று சிரித்தான், குழந்தைச்சாமி திகைத்தார்.
“ஏம்பா சிரிக்கிறே?”
“சாமி! கடவுளைத்தான் நல்லா ஏமாத்த முடியும். மனுஷங்கூட சமயத்திலே உஷாராயிட்றான். அந்த மலை மேலே இருக்கானே ஆண்டவள், அவன் ஏமாத்தறவங்களோட கூட்டாளிங்க, ஏமாத்துந் தொகையிலே அவனுக்கும் பங்குண்டுங்க. இல்லாட்டி எப்படி இவ்வளவு தடபுடல் நடக்கும்? கிருத்திகைக்கு எவ்வளவு கார் வருதுன்னு நினைக்கிறீங்க? அந்தக் கார்ல வர்றவங்க எல்லாம் யோகயன்னா சொல்றீங்க? அவ்வளவு பயல்களும் சுத்தக் கேப்மாரிப் பசங்கசாமி. திரும்பத் திரும்ப ஏன் வர்றாங்க, தெரியுங்களா? ஊரை ஏமாத்திச் சம்பாரிச்சதை ஆண்டவன் என்கிற கூட்டாளிக்குக் கொடுக்க வர்றாங்க,” என்று சொல்லிக் கொண்டேயிருந்தவன் தொலைவில் காலில்லாமல் தரையில் நகர்ந்தபடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு மாது வெய்யில் தாங்காமல் தரையில் சாய்வது கண்டு அவளைத் தூக்க ஓடினான்.
குழந்தைக் காமியும் அவனைத் தொடர்ந்து ஓடினார்.
– தொடரும்…
– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.