கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 7,776 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

பங்குன் நாயர் சென்ற திசையையே பார்த்து நின்ற நாராயணியின் உள்ளத்து அலைகள் அவளை உணர்வற்றவளாக்கின.

எவ்வளவு முறை அவள் அண்ணன் அச்சுதன் இந்தப் பங்குன் நாயரைப்பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறான்! அவர் நேர்மை, அவர் கண்டிப்பு. அவர் தைரியம், அவர் மீசை – எல்லாவற்றைப் பற்றியும், ஒவ்வொரு முறை அச்சுதன் விடுமுறைக்கு வந்தபோதும் கதை கதையாகச் சொல்லியிருக்கிறான்!

அவன் சொல்லாமல் சென்ற கதை, அவன் உயிரிழந்த கதைதான். யாரைக் காப்பாற்றுவதன் பொருட்டு அவன் உயிரிழந்தான் என்பது அவளுக்குத் தெரியாத கதை. அந்தக் கதையைச் சொல்லவா இன்று இன்ஸ்பெக்டர் பங்குன் நாயர் இந்தக் காட்டுக்கு வந்தார்?

அன்பு அண்ணனைப் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம். வேதனை ஏற்படும். அண்ணன் உயிரோடு அவளுக்கு இருந்தால் எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்? ஆதரவில்லாத விதவையாக, பித்தம் பிடித்த மகனோடு, ஜன சஞ்சாரமில்லாத தனிமையில் வாழ வேண்டாமே? மெள்ளக் கடந்த காலத்தைச் சிந்தையிலிருந்து ஒதுக்கிவிட்டு, அவள் வீட்டினுள்ளே நுழைந்த போது குழந்தை மோகினி தூங்கியபடி இருந்தாள். அருகில் சங்கரன்குட்டி பயந்து உட்கார்ந்திருந்தான்.

தாயின் அருகில் வந்து ரகசியமான குரலில், “அம்மா! அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டராக்கும், அந்தப் பஸ்ஸை மலையிலிருந்து உருட்டிவிட்டிருக்கான். அவனைப் பார்த்தாலே பயமாயிருக்கம்மா. அவன் மேலே கல்லை உருட்டி விடட்டுமாம்மா?” என்று நடுங்கும் குரலில் கேட்டான்.

வீரம் நிறைந்த அண்ணனைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்த நாராயணிக்கு, தன்னுடைய மகனைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. சங்கரன்குட்டி பயப்படும்போது, அவன் கண்கள் அவன் தந்தையின் கண்கள் போலவே சுற்றிச் சுழன்றன. அவரும் இப்படித்தான். போலீஸ் என்றாலே பயந்து வாழ்ந்தவர். அவர் நடத்திய மர வியாபாரத்தின் எல்லாப் பகுதியும் சட்டபூர்வமாக நடந்தன என்று சொல்ல முடியாதபடி இருந்தது.

பயந்த கோழைகளுக்கு, இயற்கையாகவே தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் கோபம் வரும். நாராயணியின் கணவனும், நாராயணியிடம்தான் தன் தைரியத்தைக் காட்டுவார். மற்றப்படி எல்லாரிடமும் பயப்படுவார். ஒவ்வொரு சமயம் அவருக்கு வரும் கோபத்தைக் கண்டு, நாராயணி நடுங்கி இருக்கிறாள். தன் கணவனுக்குப் புத்தி பேதலித்துவிட்டதோ என்றுகூட நினைக்கத் தோன்றும். கோழைத்தனத்துக்கு அடித்தளத்தில் உறங்கும் பயங்கர வெறி, சங்கரன்குட்டிக்கும் இருந்துவிடுமோ என்று நினைக்கவும், நாராயணிக்குத் தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர் நாயர் மீது கல்லை உருட்டுவேன் என்று சொல்லும் மகனிடம் என்ன சொல்லுவது என்று புரியவில்லை.

“குட்டி! அப்படி ஒன்றும் ஒன்றும் செய்யாதே. இன்ஸ்பெக்டர் ரொம்பவும் நல்லவர்டா.” என்று சொல்லி, குட்டியின் அபிப்பிராயத்தை மாற்ற நினைத்தாள்.

“நல்லவர்னா ஏம்மா அவர் உங்கிட்டே அப்படிப் பேசினார்?”

“எல்லாரையும் விசாரணை செய்றது அவர் வேலைடா.”

குட்டி விடுவதாயில்லை. ”போலீஸ்காரனுக்குத் திட்றதுதான் வேலையா?” என்று மறுபடியும் கேட்டான்.

குட்டி, பங்குன் நாயரிடம் அசட்டுத் தனமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் அவனைப் பயமுறுத்தி வைத்தால்தான் முடியும் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். பயம் ஒன்று தான் அவனுக்குப் புரிந்த உணர்ச்சி என்பதை உணர்த்து கொண்ட தாய், அவனை அருகே அழைத்தாள். சங்கரன்குட்டி நெருங்கி வந்தான். நாராயணியும் பயந்தவள்போல் நடித்து, சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தாள்.

தாய் பயப்படுவதைப் பார்த்து, குட்டி, “என்னம்மா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.

“குட்டி! இன்ஸ்பெக்டர் வம்புக்குப் போகாதே. அவர் ஒரு மாதிரி.”

“அம்மா, மறைஞ்சிருந்து அவர் மேலே கல்லை வீசினால் என்னம்மா செய்வார்?”

”அவராலே முன்னாலேயும் பார்க்க முடியும், பிள்னாலேயும் பார்க்க முடியும். அதுக்குத்தான் தொப்பி போட்டிருக்கார். அவர் மீது கல்லை வீசினாயோ உடனே அவர் உன்னைப் பிடிச்சிட்டுப் போய், உன் கண்ணிலே மிளகாயை அரைச்சித் தடவிடுவார். ஜாக்கிரதை!”

மிளகாய் என்று சொன்னவுடனே, அவனுக்குப் பயம் ஏற்பட்டது. “மிளகாயா? மிளகாயா?” என்று இருமுறை கேட்டான்.

பிறகு, “அம்மா! நான் அவர் பக்கமே போகல்லேம்மா,” என்று சொல்லிவிட்டு அறையின் மூலைக்குப் போய்விட்டான்.

அதே சமயத்தில் படுத்திருந்த மோனியும் விழித்துக் கொண்டாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு நாராயணியைப் பார்த்தாள்.

நாராயணி, “மோகினி! நீ என்ன சாப்பிடறே?” என்று கேட்டாள்.

மோகினி பேசாமல் இருந்தாள். நாராயணி எழுந்து போய்ச் சமையல் அறையிலிருந்து சிவப்பு அரிசிச் சோற்றில் குழம்பு விட்டுப் பிசைந்து எடுத்து வந்தாள்.

அதை மோகினியின் முன் வைத்து. “சாப்பிடு மோகினி” என்றாள்.

மோகினி தன் அகன்ற கண்களால் நாராயணியைப் பார்த்துவிட்டு, “வேண்டாம்,” என்றாள்.

“நான் எடுத்து ஊட்டட்டுமா?”

“வேண்டாம்.”

“வேறே பழம் சாப்பிடறியா?”

குழந்தை பதில் சொல்லவில்லை.

“சின்னக் குழந்தை நீ. சாப்பிடாமல் இருக்கக் கூடாது. கொஞ்சம் சாயா கொண்டு வர்ரேன். அதையாவது குடி மோகினி,” என்று நாராயணி வற்புறுத்தியதும், குழந்தை அழ ஆரம்பித்துவிட்டாள்.

“எண்ட அச்சனை நோக்கணும். அச்சன் வருன்னவரே எனிக்கே ஓண்ணும் வேண்டாம்.” என்று அழுது கொண்டே ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.

சிறு குழந்தையாயிருந்தும் அவளுக்குத் தந்தை மீதுதான் எவ்வளாவு பாசம்! அவள் மனத்தில்தான் எவ்வளவு உறுதி! ஆச்சரியப்பட்டாள் நாராயணி. அதே சமயம், நள்ளிரவில் உதவியவளுக்கு நன்றியோ அல்லது சிறு அன்போ காட்டாமல் ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கும் குழந்தை மீது லேசாகக் கோபம்கூட வந்தது.

மாலை வரை காத்திருந்தாள். குழந்தை, மெளனமாக ஜன்னல் வழியே வெறும் வெளியைப் பார்த்திருந்தாள், சங்கரன்குட்டியிடம் கூடப் பேசவில்லை. இறந்துபோன தன் தாயைப் பற்றிச் கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

அறுபது வயதுக் கிழவனுக்குத் துக்கம் நேர்ந்தால், அமைதியாக எப்படி அந்தத் துச்சத்தை ஏற்றுக் கொள்வானே அம்மாதிரி தனக்கு நேர்ந்த பிரிவை எடுத்துக் கொண்டாள், ‘நான்கு வயதுக் குழந்தை விசும்பி அழக்கூடாதா? தனக்கு ஆதரவளித்த பெண்மணியிடம் ஒரு புன்முறுவல் காட்டக் கூடாதா? ஒன்றும் செய்யாமல், கருங்கல்லைப் போல் இருக்கிறாளே!’ என்று நினைத்தாள் நாராயணி. குழந்தை அலுக்காமல், சளைக்காமல் ஜன்னல் வழியே பார்த்தபடி இருந்தாள்.

மாலைப் பொழுது இரவாக மாறி, இருள் மலைப் பகுதியைக் கவ்விய பின் ஜன்னல் வழியே பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஜன்னலை விட்டு எழுந்து தரையில் உட்கார்ந்து கொண்டாள். சங்கரன்குட்டி பசி பொறுக்க முடியாமல் சாப்பிட உட்கார்ந்தான். அவன் சாப்பிடுவதைப் பார்த்த பின்பு கூட குழந்தை, ‘பசிக்கிறது,’ என்று சொல்ல வில்லை.

திக்கற்ற குழந்தையைப் பட்டினியாக வைத்துவிட்டு, தான் மட்டும் சாப்பிட நாராயணி அம்மாளின் இளகிய மனம் கேட்கவில்லை. இரவு ஒன்பது மணி அளவில் மோகினி வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசினாள், “குடிக்க வெள்ளம்”. அதுவும், பாதி ஜாடையிலும், பாதி பேச்சிலும்.

நாராயணி கொடுத்த சுக்குப் போட்டுக் காய்ச்சிய நீரைக் குடித்துவிட்டு, விரித்திருந்த பாயில் படுத்துக் கொண்டாள். படுத்த சில வினாடிகளுக்கெல்லாம் மறுபடியும் எழுந்து உட்கார்ந்தாள். நாராயணியைப் பார்த்து, “எண்ட அச்சன் வன்னு என்னை எனிப்பீக்கோ?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

உடனே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். இந்த விசித்திரமான குழந்தையின் மெளனத்தைப் புரிந்துகொள்ள முயன்றாள் நாராயணி, தாயை இழந்த குழந்தை தகப்பனைப் பார்த்த பின்பு தான் சரியான நிலைக்கு வரும் எனபதைப் புரிந்து கொண்டு, குழந்தையின் அருகில் படுத்துக் கொண்டாள்.

அமைதியாகத் தூங்கும் மோகினியின் நிர்மலமான முகத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். குழந்தையாய் இருந்தாலும் அழுது அமளி செய்யாமல் இந்த மட்டும் அமைதியாகத் தூங்கினாளே. புத்திசாலிப் பெண்தான் என்று நினைத்தபடி குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

நாராயணியின் கைகள், தூங்கும். மோகினியின் மீது பட்டதும், தூங்கிய படியே அவளது உதடுகள் அசைந்தன. விழித்த நிலையில் தன்னை விட்டு ஒதுங்கி இருந்த குழந்தை, தூக்கத்தில் நாராயணியின் அணைப்பை விரும்பியது போலும்! அதன் பிஞ்சு உதடுகள் நாராயணியின் மார்பில் உராய்ந்து அவள் தாய்மையைச் சுண்டி எழுப்பின. அவளை அணைத்தபடி நாராயணியும் புன் முறுவலுடன் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

பொழுது புலர்ந்ததும் நாராயணி எழுந்து காலைக் கடன்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். அதிகாலையிலேயே வீட்டின் வெளிப்புறத்தில் ஆள் நடமாட்டமும் போலீஸாரின் குரலும் கேட்டது. பங்குன் நாயர் ஒரு மரத்தடியில் அமர்ந்தபடி கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

கருகிக் கிடந்த பல்ஸை அப்புறப் படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குழந்தை மோகினி எழுந்தாள். பல் விளக்கிக் குளித்தாள். ஓடிவந்து ஜன்னலருகில் உட்கார்ந்து கொண்டு, திறந்த வெளியைப் பார்த்தபடி இருந்தாள்.

நாராயணி கொடுத்த சாயாவைக் குடித்து விட்டு மௌனமாக இருந்தாள். நாராயணி ஒரு பித்தளை டம்ளரில் சாயா ஊற்றி எடுத்துக் கொண்டு போய் பங்குன் நாயருக்குக் கொடுத்தாள். அவர் ஒரு வினாடி யோசித்தார். பிறகு நாராயணி அளித்த சாயாவை வாங்கிக் குடித்து விட்டு, “அம்மா, நான் நேற்றே அந்தக் குழந்தையின் தகப்பனுக்குத் தகவல் அனுப்பிவிட்டேன். சீக்கிரமே கிருஷ்ண பணிக்கர் வந்து அவர் மகளை அழைத்துப் போவார்” என்று சொன்னார்.

நாராயணி தரையைப் பார்த்தபடி, “உங்களுக்கு மோகினியின் அச்சனைத் தெரியுமா?” என்று கேட்டாள்.

பங்குன் நாயர், “தெரியாது. இறந்து போன தாயின் பெட்டியிலிருந்து விலாசம் கிடைத்தது. அவள் தாய் டீக்கடைக்காரனோடு ஓடி வந்த விட்டதாகக் கணவனிடமிருந்து குருவாயூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு புகார் வந்திருந்தது,.’ என்று சொல்லி விட்டு நிறுத்தினார். ஒரு பெண் ஒழுங்கு தவறிய செய்தியைச் கூறுவதற்கும் கூச்சப்பட்டார் என்பதை அவருடைய குரல் காட்டியது.

நாராயணி தலை குனிந்தபடி வீடு திரும்பினாள்.

பத்து மணி சுமாருக்கு மலையின் முகட்டை ஒட்டிச் செல்லும் ரோடில் ஒரு பஸ் நின்றது. அதிலிருந்து ஒரு கான்ஸ்டபிளும் இன்னொரு நபரும் இறங்கினார்கள். இறங்கிய நபரின் கையில் ஒரு குடை இருந்தது. அவர் குடுமி வைத்திருந்தார். அவர் குடுமி நுனியில் முடியப்பட்டு, உச்சந்தலையில் முடிச்சு உட்கார்ந்திருந்தது. தூரத்திலிருந்து பார்த்தபோது நடுத்தலையில் ஒரு கொட்டைப்பாக்கு வைக்கப்பட்டிருந்தததுபோல் தோற்றமளித்தது. அவர் நெற்றியில் அரைத்த சந்தனக் கீற்றுக்கள் குறுக்கு நெடுக்காகச் சென்றன. அவர் குடுமி பாதி நரைத்தும், பாதி கறுப்பாகவும் இருந்தது. மார்பை மூடச் சட்டை அணியவில்லை. நீண்ட, அகலமான துண்டை அணிந்திருந்தார். காலில் பழைய செருப்புக் காட்சி யளித்தது. கண்கள் அப்படியும் இப்படியுமாக அசைந்து கொண்டிருந்தன. நாசி, நெற்றியிலிருந்து வளைத்து கிளியின் மூக்குப்போல் தோற்றமளித்தது.

அவருடன் வந்த கான்ஸ்டபிள், அவரைப் பங்குன் நாயர் இருக்குமிடத்துக்கு அழைத்து வந்தான். வந்தவர் எரிந்து கிடக்கும் பஸ்ஸைப் பார்த்தார். பங்குன் நாயர் அவரைப் பார்த்தார். என்ன காரணத்தால் அந்த இளம் பெண் கொட்டும் மழையில் இவரை விட்டு ஓடியிருப்பாள் என்ற ஊகம் அவர் மனத்தில் எழுந்தது.

கனைத்துக்கொண்டு, “உங்கள் மனைவியின் உடல் ஆஸ்பத்திரியில் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், “பார்த்தேன் பார்த்தேன், தயவு செய்து என் பார்யாள் என்று மட்டும் சொல்லாதீர்கள், இன்ஸ்பெக்டர். அந்த நாய் எப்போ வீட்டை விட்டு ஓடிற்றோ, அப்பவே எனக்கும் அவளுக்கும் சம்பந்தம் அத்துப் போச்சு!” என்று வெறுப்புடன் பேசினார்.

“உங்களுக்கு இந்தப் பெண் இளைய சம்சாரமோ?”

“ஆமாம், கர்மம். அப்பா அம்மா இல்லாத அனாதையாயிருக்கிறாளே, ஒழுங்காக இருப்பாள், நமக்கும் குழந்தை இல்லியேண்ணு இவளை இரண்டாந்தாரமாகக் கல்யாணம் பண்ணிட்டேன். என் தலையிலே தீராத அவமானத்தைக் கொண்டு வந்து விட்டாள். இனிமேல் தெருவிலே நடக்க முடியாது நான், இன்ஸ்பெக்டர். என் தொழில் மந்திரிச்சிப் பிழைக்கிறது. தாயத்தைக் கொடுப்பது. தள்ளி வச்ச பெண்சாதியைப் புருஷனோடு சேர்த்து வைக்க வசிய பூஜை பண்ணுவேன். விஷக்கடிக்கு மந்திரிப்பேன். ஜோஷ்யம், நவக்கிரக சாந்தி செய்து வைப்பேன். இனிமே யாராவது என் மந்திரத்தை நம்புவானா? நீங்களே சொல்லுங்க! இவர் மந்திரம் இவர் சம்சாரத்துக்கிட்டேயே நடக்கல்லியேண்ணு சொல்வானா, இல்லியா? பாவி, என் பிழைப்பிலேயே மண்ணை வாரிப் போட்டு விட்டாள்!” என்று சொல்லிக் கலங்கி நின்றார்.

இன்ஸ்பெக்டர், “இந்தத் துக்கத்திலேயும் ஒரு நல்ல செய்தி நான் சொல்லப் போகிறேன்,” என்று முடிப்பதற்குள் அந்த மனிதர் குறுக்கிட்டார். “அந்தக் கழுதை, வீட்டிலேயிருந்து திருட்டுத்தனமாகத் தூக்கி வந்த இரு நூறு ரூபாயும் பத்திரமா இருக்கா? அந்தப் பணம் எரிஞ்சு போகாம் பத்திரமா இருக்கா?” என்று ஆவலோடு கேட்டார்.

“பணமா? உங்க மனைளியின் பெட்டியிலே எந்தப் பணமும் இல்லையே. அந்த டீக்கடைக்காரன் பர்ஸிலேயல்லவா பணம் இருந்தது!” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அந்த டீக்கடைக்காரப் பயலிடம் ஏது பணம்?”

“டீக்கடைக்காரன் பர்ஸில் இருந்தது அவன் பணம்தான் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. டீக்கடையை விற்று அதன் விலையாகப் பெற்றுக் கொண்டது ஐந்நூறு ரூபாய். என்பதற்குக் கடிதம் இருக்கிறது. அதிலிருக்கும் தேதியும், விபத்து நிகழ்ந்த தேதிக்கு முதல் தேதி. ஆகையால் உங்கள் மனைவி மீது, அவள் செய்யாத திருட்டுச் குற்றங்களையும் நீங்கள் சுமத்த வேண்டாம்.” என்று சற்றுக் கடுமையான குரலில் சொன்னார்.

பணிக்கருக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்தது.

“நீங்க வரச் சொன்னதாகக் கான்ஸ்டபிள் சொன்னார். இங்கே வந்தேன்” என்று இழுத்தார்.

“அதற்காக உங்களைக் கூப்பிடவில்லை. பஸ் விபத்தில் உங்கள் மகள் சாவில்லை. அவள் உயிரோடுதான் இருக்கிறாள்.” என்று பங்குன் நாயர் கூறி முடிப்பதற்குள்ளாகவே, தன் தந்தை வந்திருப்பதைக் குழந்தை மோகினி கவனித்து விட்டாள். தன் இருக்கையை வீட்டு ஓடினாள். திடீரென்று குழந்தை ஓடி வருவதைக் கவனித்த நாராயணியும் பின் தொடர்ந்து வந்தாள்.

மோகினி கண்களில் நீர் வழிய, உதடுகள் விரிந்து அழகான பற்களைக் காட்ட, தன் அச்சனைக்கண்டு விட்டோம் என்று எல்லையில்லா மகிழ்ச்சி வெள்ளமாக வெளிப்பட, “எண்ட அச்சன், எண்ட அச்சன்” என்று கதறியபடி ஓடி வந்து தன் தகப்பனைச் கட்டிக் கொண்டாள்.

பங்குன் நாயருக்கும் கண் கலங்கியது. மனைவியை மாற்றானுக்கு இழந்து, முடிவிலே யமனுக்கே கொடுத்து விட்ட கணவன்! தாய் என்ன தவறு செய்தாள் என்பதைச் கூட உணர்ந்து கொள்ள முடியாத பருவத்துக் குழந்தை! இருவரும் ஒன்று சேரும்போது பச்சாத்தாப உணர்ச்சிகளையே தன் இதயத்திலிருந்து துடைத்துவிட்டு இன்ஸ்பெக்டருக்கும் மனம் இளகிற்று என்றால், நாராயணியின் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்?.

ஆனால் இந்த நிலையிலும், உணர்ச்சியை வெளியில் காட்டாது நின்றவர்- குழந்தையின் தந்தை கிருஷ்ண பணிக்கர்தான்.

அத்தியாயம்-5

மோகினி அவளுடைய தகப்பனாரின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

இதுவரை அவளது குழந்தை உள்ளம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை யெல்லாம் கொட்டித் தீர்த்தாள். “அம்மே மரிச்சிப்போய். அம்மே மரிச்சிப்போயி”, என்று விபத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்த வற்றையெல்லாம் கூறினாள்.

தன் தந்தை தன்னை எடுத்து அணைப்பார். உச்சி மோந்து முத்தமிடுவார் என்று எதிர்பார்த்தாளோ? தன்னுடன் சேர்த்து அழுது, தன் பிஞ்சு மனத்தின்மீது அழுந்தியிருக்கும் துக்கச் சுமையைப் பகிர்ந்து கொள்வார் என்று நினைத்தாளோ? அழுதபடி தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள்.

அவர் ஒன்றும் தோன்றாமல் தன்னையே விறைத்துப் பார்ப்பதை உணர்ந்தாள், தந்தையின் கண்களில் அவள் கண்ணீரைக் காணவில்லை. பயத்தைத்தான் கண்டாள். அச்சன் முகத்தில் அருளைக் காணவில்லை. மருளைத்தான் கண்டாள். தன்னை அவர் பாம்பையோ தேளையோ அல்லது உயிரை உண்ண வரும் மிருகத்தையோ நோக்குவது போல் நோக்குவதைக் கண்டாள்.

மோகினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அச்சன் சிரித்துப் பார்த்திருக்கிறாள். தன் தாயைக் கோபத்தில் அடித்ததைப் பார்த்திருக்கிறாள். எதற்கும் பயப்படாதவர் அச்சன் என்றுதான் அவள் அதுவரை நினைத்திருந்தாள். இப்போது தன்னைப் பார்த்துப் பயப்படுவது, அவளுக்குப் புரியாத விஷயமாய் இருந்தது.

மோனியின் அனுபவத்தில் சமூகம், கட்டுப்பாடு – இவையிரண்டும் புலி, சிங்கத்தினும் மிகப் பயங்கரமானவை, சமூகத்தின் துரத்தக்குப் பயந்து மனிதர்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படிப் புரியும்?

மோகினியைத் தன் அருகில் பார்த்ததும் தான் அவளுடைய தகப்பன் என்ற உணர்வோடு தன் எதிர்காலத்தைப் பற்றிக் கிருஷ்ண பணிக்கர் நினைத்துப் பார்த்தார். சிறு வயதிலிருந்து மந்திரம் பயின்று, ஒரு நாளைக்கு நான்கு முறை குளிப்பதும் ஈரத்துணியோடு நின்று மணிக்கணக்கில் ஜெபிப்பதும்தான் அவருக்குத் தெரியும். தாயத்துத் தயார் செய்வது, ரட்சைகள் செய்து பேயோட்டுவது – இவைதான் அவர் தொழில். இந்தத் தொழிலின் வருவாய் சிறியதாயினும் சமூகம் இவர்களிடம் ஆசாரத்தையும் அதிகம் எதிர்பார்த்தது. ஆகையால் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த திருஷ்ண பணிக்கர் தன் மனைவி ஓடிப் போனதைத் தன்னுடைய கௌரவத்துக்கு, ஆண்மைக்குக் களங்கமாக நினைக்க வில்லை. அதனால் வந்த கெட்ட பெயர், அவருடைய எதிர்கால வருவாய்க்கு ஆபத்து வளைவிக்குமே என்று தான் நினைத்தார்.

கெட்டு, ஓடிப்போன மனைவியின் குழந்தையைப்பற்றி, அவர் வாழ்ந்த இரக்கமற்ற சமூகத்தின் பகுதி என்ன சொல்லுமோ? மோகினி அவள் தாயின் தவற்றுக்கும், தன்னுடைய தோல்விக்கும் நிரந்தரமான ஞாபகச் சின்னமாக அல்லவா வளர்ந்து வருவாள்? தாயோடு மகளும் அதே விபத்தில் மடிந்து மறைந்து போய் இருக்கக்கூடாதா? இந்த மோகினியை எப்படிக் குருவாயூருக்கு அழைத்துச் செல்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டு மனம் குழம்பினார். பாச உணர்ச்சி இருக்க வேண்டிய இதயத்தில், பய உணர்ச்சிதான் மிஞ்சியது. குடும்பத்தின் நல்ல பெயர் போய்விடுமோ, அதோடு பணமும் போய் விடுமோ என்று தான் அவர் மனம் கவலைப்பட்டது.

தந்தையின் உருவத்தில் தாயையும் சேர்த்துப் பார்த்து வாத்ஸல்யத்தோடு நின்றாள் மகள் மோகினி. ஆனால் அவள் தந்தையோ வறுமை என்ற எதிர்காலத்தைத்தான் நோக்கி நின்றார்! அவர் கால்களை அணைத்து நின்ற மகளின் கைகளை விலக்கினார். “இறந்தவள் என் மனைவியுமல்ல, இது என் பெண்ணுமல்ல”, என்று கூறிவிட்டு, சடாரென்று அங்கிருந்து நகரத் தொடங்கினார்.

அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் பங்குன் நாயர், “நீங்க ஒரு மனுஷனே அல்ல. தாயின் தவற்றுக்குக் குழந்தையைத் தண்டிக்காதீர்கள். உங்கள் மகளைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை,” என்று சொன்னார்.

கிருஷ்ண பணிக்கர் ஒன்றுமே பேசாது சாலையை நோக்கி நகர ஆரம்பித்தார்.

மோகினி தன் தந்தையைப் பின் தொடர்ந்து ஓடினாள். ஆனால் அவள் கூச்சலைக் காது கொடுத்துக் கேட்காமலே சென்று கொண்டிருந்தார் தந்தை. இந்தக் கொடுங்காட்சியை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றார் பங்குன் நாயர்.

மோகினியும், விடாப்பிடியாக மலையின் முகட்டில் ஏறித் தந்தையைப் பின் தொடர்ந்தாள்.

அதே சமயத்தில் ஒரு பஸ் வந்தது. கிருஷ்ண பணிக்கர் அதில் தொற்றி ஏறிக்கொண்டுவிட்டார், வாழ்வில் தனக்குள்ள ஒரே உறவாகிய அச்சனைப் பிரிய மனமில்லாமல் மோகினியும் பஸ்ஸில் முயன்றாள். பணிக்கர் அவளைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார்.

குழந்தை தரையில் உருண்டது. பஸ் நகர்ந்தது.

பிஞ்சுக் கால்கள் பஸ்வைப் பிள் தொடர்த்து ஓடின. பஸ்ஸின் வேகத்தோடு போட்டி போட முடியவில்லை குழந்தையின் கால்களால். மோகினி துக்கம் மனத்தைக் கவ்வ திறந்த வானத்தைப் பார்த்து வீரிட்டலறினாள். அங்குதான் இறந்து போன அவளது தாய் இருப்பதாக நினைத்தாள் போலும்! தலை மயிரைப் பிய்த்துச் கொண்டாள். அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், துக்கத்தையும் தரையிலே உருண்டு புரண்டு தீர்த்துக் கொள்ள முயன்றாள்.

வானத்திலிருந்து மோகினியின் தாய் இறங்கி வந்து அவளைத் தேற்றவில்லை. ஆனால் நாராயணி அம்மாள் ஓடி வந்து மோகினியை அணைத்துக் கொன்டாள். “அழாதே மோகினி! அழாதே!” என்று கலங்கிய கண்களோடு தேற்ற முயன்றாள்.

மோகினியின் குழந்தை மனத்தில் கூட ஓரளவு ஆணவம் இருந்திருக்க வேண்டும். “அம்மா போய் விட்டாள். அச்சனும் என்னைத் துறந்து போய் விட்டார்; இதை விட அவமானம் வேறு இல்லை” என்று நினைத்தது போல் ஆத்திரத்துடன் அலறி அலறி அங்கும் இங்கும் ஓடினாள்.

அங்கு நின்றிருந்த கூலியாட்கள், கான்ஸ்டபிள்கள் ஆகியோர் இம்மாதிரியாள சோகக் காட்சியை இதுவரை பார்த்ததில்லை யாகையால், கண் கலங்கி நின்றார்கள். பங்குன் நாயர், தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குழந்தையிடம் வந்து, “பயப்படாதே குழந்தை, உன்னை குருவ்வாயூருக்குக் கூட்டிப் போய், உன் அச்சன் வீட்டிலே நான் சேர்த்து விடுகிறேன்.” என்று சொன்னார்.

மோகினி அழுவதை நிறுத்திக் கொண்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள், மிக்க பரிதாபத்தோடு தன்னை நோக்கியபடி நிற்கும் மற்றவர்களைப் பார்த்தாள், கருணையற்ற தன் தந்தையை ஏற்றிச் சென்ற பஸ் போன திசையை ஒரு முறை நோக்கினாள். மறுபடியும் அழுகை அவளுக்குப் பொங்கி வந்தது, அழுகையும் ஆத்திரமும் பொங்கும் குரலில், “வேண்டாம். ஞான் குருவாயூர் போவில்லா. எண்ட… எண்ட அச்சனும் மரிச்சிப்போயி”, என்று சொல்லிவிட்டு நாராயணியைப் பார்த்தாள்.

நாராயணி விம்மிய மார்போடும், கலங்கிய கண்களோடும் நின்று கொண்டிருந்தாள். அப்போது ஓடிப்போய் மோகினி நாராயணியைக் கட்டிக்கொண்டாள். “அம்மா அம்மா…” என்று அழுதாள்.

முதல் நாள் பூராவும் ஓட்டுதல் இல்லாமல், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உட்கார்ந்திருந்த குழந்தை, இன்று, ”அம்மா!” என்று ஓடி வந்து தன்னைக் கட்டிக்கொண்ட விந்தையைப் பார்த்துத் திகைத்து நின்றள் நாராயணி.

பங்குன் நாயர் மெள்ள நெருங்கி வந்து தரையைப் பார்த்தபடி, “குழந்தையை நான் அழைத்துப் போகிறேன். அவள் அப்பன் அவனை வீட்டில் வைத்துக் கொள்கிறானா இல்லையா என்று பார்த்து விடுகிறேன்” என்றார்.

உடனே மோகினி, “ஞான் அவ்விட போவில்லா,” என்று அலறினாள்.

நாராயணி இன்ஸ்பெக்டரிடத்தில், “குழந்தை கலங்கிப் போயிருக்கு. இப்போதைக்கு இங்கேயே இருக்கட்டும். அப்புறம் குழந்தையே வீட்டுக்குப் போகணும்ணு ஆசைப்பட்டா அனுப்பி விடுவோம்,” என்று சொன்னாள்.

இன்ஸ்பெக்டர் யோசித்தார், நாராயணி அம்மாளின் பொருளாதார நிலையைப் புரிந்து கொண்டிருந்தார் அவர், “அப்பன் தான் வேண்டாமென்று சொல்லிலிட்டுப் போயிட்டான். குருவாயூருக்கே குழந்தை போகணும்ணு இல்லை. எனக்குத் தெரிந்த அனுதை விடுதியிலே வேணுமானால் குழந்தையைச் சேர்த்திடறேன். அவுங்க நல்லாக் கவனிச்சிக்குவாங்க,” என்று சொன்னார்.

நாராயணி மோகினியின் முகத்தைத் கவனித்தாள். குழந்தையின் கண்கள் லிருந்து தோன்றிய கலக்கத்தைப் பார்த்தாள், நாராயணியின் மனத்தில் ஒரு தீர்மானம் உருவாயிற்று. “இல்லை, மோகினி என்னுடனேயே இருக்கட்டும். அவள் விரும்பும் வரையில் என் வீட்டிலேயே இருக்கட்டும்,” என்று சொல்லிக் குழந்தையைத் தழுவிக் கொண்டாள்.

இன்ஸ்பெக்டர், நாராயணியைப் பரிவோடு நோக்கினார், அந்தப் பார்வையில், ‘இந்தக் குழந்தை உங்களுக்குச் சுமையாக இருக்காதா?’ என்ற கேள்வி வெளிப்பட்டது. அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டவள் போல் நாராயணி தரையைப் பார்த்தபடி பதில் சொன்னாள்: “இல்லை. இவள் யாருக்கும். சுமையாக இருக்க மாட்டாள். புத்திசாலிப் பெண்.. எனக்கும், ஒரு பெண்ணுக்குச் சோறூட்டி, தலை வாரி, பூச்சூடி, பொட்டு இடணும்னு ரொம்ப நாளாய் ஆசை”.

பங்குள் நாயர் ஒரு பெருமூச்சு விட்டார். “இல்லாதவங்களுக்குத்தான் எப்பவுமே தாராள மனசு”, என்று நினைத்துக் கொண்டு, நாராயணியிடம் திரும்பி, “எனக்கு ஷோரனூர்லே தான் ட்யூட்டி. இந்தக் குழந்தை விஷயமா எந்தவித உதவி தேவையாயிருந்தாலும், தகவல் கொடுங்கம்மா” என்று சொன்னார்.

நாராயணி, ”அப்படியே ஆகட்டும்”, என்று சொல்லிவிட்டுத் தரையைப் பார்த்தாள். இன்ஸ்பெக்டர், குழந்தை மோகினியின் முகத்தை ஒரு முறை தடவிக் கொடுத்து விட்டுப் போனார்.

நாராயணி வீடு திரும்பினாள் மோகினியோடு. காட்டில் அங்குமிங்கும் ஓடிய களைப்பும் தந்தையால் அடைந்த ஏமாற்றமும் மோகினியின் உள்ளத்தையும் உடலையும் சோர்வடையச் செய்யவே அயர்ந்து படுத்து விட்டாள். வெகு நேரம் எழுந்திருக்கவில்லை. நாராயணிக்கு ஒரே கவலை. அச்சன் வரப் போகிறார் என்ற ஆவலில் மோகினி முந்தின நாள், டீ தவிர ஒன்றும் சாப்பிடவில்லை. அவர் வந்து சென்ற பின்னும், ஒன்றும் சாப்பிடாமல் படுத்து விட்டாளே என்று வருந்தினாள்.

மோகினி அன்று மாலைதான் விழித் தெழுந்தாள், எழுந்ததும் கால், முகம், கழுவிக் கொண்டு வந்தாள். நாராயணி அம்மாளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். வாய் திறந்து, “பசிக்குன்னு” என்று முதல் முறையாகப் பேசினாள்.

உடனே நாராயணி ஆசையோடு இலை போட்டு சங்கரன் குட்டிக்கும் மோகினிக்கும் சாப்பாடு பரிமாறினாள்.

சாப்பிட்டு முடிந்ததும், மோகினி சாப்பிட்ட எச்சில் இலையை எடுத்துக் கொண்டு போய் வெளியே எறிந்தாள். பின்பு வந்து சாப்பிட்ட இடத்தை நீர் தெளித்துச் சுத்தம் செய்தாள். ‘இனி மேல் இந்த வீடுதான் என் வீடு’ என்ற எண்ணத்தைச் செயலால் வெளிப்படுத்தினாள் போலும்! வெளிப்புற அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

நாராயணி மிகுதி இருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கழுவி, சுத்தம் செய்து விட்டு வெளிப்புற அறைக்கு வந்தாள். மோகினி வரிசையாகப் பாய் விரித்துத் தலையணைகளை வைத்துக் கொண்டிருந்தாள். சங்கரன்குட்டி அருகில் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். மோகினியின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு நாராயணி அதிசயித்தாள்.

மறுநாளும் அப்படியே மோகினி நாராயணியின் வேலைக்காரி வலுவில் வந்து பகிர்ந்து கொண்டாள். குருவாயூரைப் பற்றியோ, தன் தகப்பனைப் பற்றியோ அல்லது இறந்துபோன தாயைப் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

சில நாள் கழித்தாவது மோகினியின் தந்தை கிருஷ்ண பணிக்கர் வந்து குழந்தையை அழைத்துப் போவார், போவார், மோகினி ஒரு நாள் தன்னை விட்டுப் பிரிந்து போக வேண்டியவள் தான் என்ற நினைப்பில் தான் நாராயணி வாழ்ந்து வந்தாள்.

நாட்கள் வாரங்கள் ஆயின. வாரங்கள் மாதங்களாயின. மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் நடந்து முடிந்தன. ஆனா கிருஷ்ண பணிக்கர் மகளைத் தேடி வரவே இல்லை.

மோகினியும் நாராயணியைத் தாயாகவே நினைத்து, “அம்மா”, என்றே அழைக்க ஆரம்பித்து விட்டாள். சங்கரன் குட்டி படிக்கத் செல்லும் பள்ளியிலேயே மோகினியும் சேர்க்கப்பட்டாள். சங்கரன் குட்டியும் பள்ளியில் சேர்ந்தபோது இருந்த அதே அறிவுத் திறனோடு, அப்படியே மாறாமல் இருந்தான், மோகினியோ ஒவ்வொரு வகுப்பாகத் தேறிக் கொண்டே சென்றாள்.

சங்கரன் குட்டியால் ஒரு விஷயத்தையும் கிரகித்து மனத்தில் நிறுத்த முடியவில்லை என்பதை உணர்ந்த ஆசிரியர்கள், அவன் படிப்பதை நிறுத்தி விடுவது நலம் என்றே கூறினார்கள். அதன் படியே குட்டியின் படிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் மோகினியின் படிப்பு தொடர்ந்து நடந்தது.

படிப்பு வளர்ந்ததைப்போல் மோகிளியின் உடலும் கவர்ச்சியோடு வளர ஆரம்பித்தது. பத்தாவது வயதிலேயே அவள் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத எழில் ஒவியமாகத் திகழ்ந்தாள். அது மட்டுமல்ல. படிப்போடு வீட்டு வேலைகளிலும் மோகினி கவனம் செலுத்தினாள்.

நடு நடுவே சங்கரன் குட்டிக்குக் கிறுக்கு ஏற்படும். வீட்டுப்பாத்திரங்களை உடைப்பதும், தீ வைப்பதும் போன்ற பயங்கரச் செயல்களில் ஈடுபடுவது அவனது பழக்கங்களாக இருந்தன. நாராயணி அம்மாளின் வார்த்தைகளைச் சட்டை செய்யவே மாட்டான். அம் மாதிரி சமயங்களில் மோகினி அவனைச் சமாளித்து, சீர்ப்படுத்தப் பெரிய உதவியாக இருந்தாள்.

மூளை வளரா விட்டாலும், குட்டியின் உடல் வளர்ந்து கொண்டு தானிருந்தது. அவன் மிருக பலம் வளர்ந்து வந்தது, அவனை விடச் சிறியவளாயினும் மோகினியைக் கண்டால் குட்டிக்கு ஒரு பயம். மோகினி அதிகம் பேசாமல் தன் வேலையை மட்டும் கவனித்து வந்ததே குட்டியின் மனத்தில் அவளிடம் ஒரு விதமான மதிப்பைக் கொடுத்தது. மோகினியின் கறுத்த அகன்ற விழிகளால் ஒரு முறை நோக்கினால், சங்கரன் குட்டி அப்படியே பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவான்.

மோகினி பள்ளிக்குப் புத்தகம் தாங்கிச் செல்லும் அழகே அழகு. மழை மேகம் போன்ற கூந்தல் தோளில் புரள, எந்தவித ஆபரணமும் இல்லாத ஆனால் தானே ஒரு ஆபரணம் போல் மின்னும் கழுத்து அசைய, கறுத்து ஒளி வீசும் விழிகள் பார்ப்பவர் உள்ளத்தை இழுக்க, பத்து வயது. மோகினி அந்தப் பகுதியிலேயே எல்வோருக்கும் வேண்டியவளாகி விட்டாள்.

ஒருநாள் மாலை.

பள்ளி முடிந்தது வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மோகினி.

மலைச்சாரலில் ஒரு மனித உருவம் நகர்ந்து வருவது தெரிந்தது.

முதலில் மோகினி அதைக் கவனிக்க வில்லை. அந்த உருவம் எதிர்த் திசை யிலிருந்து வந்தது. அதன் தலைமுடி ஓட்ட வெட்டப்பட்டிருந்தது. முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி சிறப்பு. ஒரு பார்க்கவே மோகினிக்குப் பயமாக இருந்தது. மோகினியை நெருங்கியதும் உருவம் அப்படியே நின்றது. அவளை முறைத்துப் பார்த்தது. மோகினியும் அந்த உருவத்தை முறைத்துப் பார்த்தாள்.

திடீரென்று அந்த உருவத்தின் கண்களில் ஒருவித ஒளி வீசியது. பயமே தெரியாத மோகினிக்குக் கூட நெஞ்சு படபடத்தது. செம்மண் நிறச் சாக்குத் துணி அணிந்த உடல் வெண்மையாக இருந்தது. அந்த உருவம் மோகினியை நோக்கிக் குனிந்தது. அப்போது தான் மோகினி அந்த உருவத்தின் கையைக் கவனித்தாள்.

அதன் ஒரு கையில் மூன்று விரல்கள் இல்லை!

சிறு பெண் மோகினிக்கு பயம் ஏற்பட்டது. மலை முகட்டில் சூரியன் மறைந்து இருள் சூழும் சமயம். அந்த உருவத்தின் கை – மூன்று விரல்களை இழந்த கை – மோகினியின் முகத்தை நோக்கி நெருங்கிற்று. கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் மட்டுமே அந்தச் கையில் மீதியிருந்தன. இரண்டும் சேர்ந்து ஒரு கிடுக்கி போல காட்சியளித்தன. அந்தக் கிடுக்கி மோகினியின் சுன்னத்தைத் தடவியது. விரல்களின் ஸ்பரிசம் ஏற்பட்டதும் மோகினி வீரிட்டலறினாள். “அம்மா! அம்மா! சத்தம் போடாதே!” என்று கூறியது அந்த உருவம்.

பத்து வயதுக் குழந்தையாகிய தன்னை, “அம்மா” என்று அந்தப் பெரிய திரண்ட உருண்டு உருவம் அழைத்தது மோகினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த உருவத்தின் பின்னால் மலைச்சரிவில், ஒரு பெரிய கார் நிற்பதையும் அவள் கவனித்தாள்.

அத்தியாயம்-6

மோனிக்குக் கிலி பிடித்தது.

எதிரே நின்ற அந்த உருவத்தின் கண்ணில் நீர் துளித்தது.

“குழந்தை! என்னைப் பார்த்து பயப்படாதே. நீ எனக்குத் தாயம்மா. நான் தொழும் வாலைக்குமரியம்மா, பாலா திரிபுரசுந்தரி! அண்ட சராசரங்கள் உயிர்நாடி யான பராசக்தியின் பால வடிவம் நீ” என்று ஏதேதோ சொன்னார்.

அவர் சொன்னவற்றின் பொருள் என்ன என்று மோகினிக்குப் புரியவில்லை. அவர் விரல்களைக் கண்டு அவளுக்குப் பயம்தான் ஏற்பட்டது. அவரது கடை வாய்ப் பற்கள் வரை வெளியே தெரியும் ஒரு சிரிப்பு அவரை ஒரு பயங்கர உருவமாய்க் காட்டியது. ஆனால் ஒளிவீசும் அவர் விழி நிறைந்த கண்ணீர் அவர் வருந்துகிறார் என்ற உண்மையைத்தான் புலப்படுத்தியது.

மோகினி, “வழியை விடுங்க, நான் வீட்டுக்குப் போகணும்”, என்றாள்.

“உன் வீடு எங்கேம்மா இருக்கு?”

மோகினி, தன் வீட்டின் இருப்பிடத்தை இந்த பயங்கர சொருபியிடம் சொல்லலாமா கூடாதா என்று தயங்கினாள். சொல்லாவிட்டால் அவர் ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயம் மனத்தை உறுத்தியது. தன் அழகிய கைகளை உயர்த்தி, மலைக்கப்புறம் காட்டினாள். “அவ்விடே” என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

உருவமும் மெல்லத் தொடர்ந்தது.

மோகினி, சரிவில் நிறுத்தியிருக்கும் காரைத் தாண்டிப் பத்தடி போனதும், பின்புறம் பேசும் குரல் கேட்டு நின்றாள், அந்தப் பளபளப்பான காரின் டிரைவர் “வண்டி எடுக்கட்டுங்களா?” என்று கேட்டான். மோகினி திரும்பிப் பார்த்தாள். டிரைவர், அந்தப் பயங்கர மனிதரிடம் கைக்கட்டிப் பணிவுடன் நின்று கொண்டிருந்தார். காவி அணிந்தவர், மோகினியைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.

“வேண்டாம், நான் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன்”, என்று சொல்லிவிட்டு மோகினியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மோகினி விர்ரென்று திரும்பி இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். மேல் சட்டை கூட இல்லாமல் இருப்பவருக்கு இவ்வளவு பெரிய கார் சொந்தமாக இருக்கிறதா! பெரிய பணக்காரராக இருக்க வேண்டும், நம்மை ஏன் தொடர்ந்து வருகிறார். புரியவில்லை. திரும்பிப் பார்த்தாள், அந்த மனிதர் வேகமாக பின் தொடரவில்லை. மெள்ள நடந்து வந்து கொண்டிருந்தார்.

வீடு நெருங்கிக் கொண்டிருந்தது. மோசினியின் பயமும் குறைந்து கொண்டு வந்தது. மோகினி வீட்டுக்குள் சென்றதும் படபடப்போடுநம் தன்னுடைய பயத்தைத் தெரிவித்தாள். நாராயணி மோகினியை உள்ளே அனுப்பிவிட்டு வெளிப்புறம் வந்தாள், சங்கரன்குட்டியும் வெளியே வந்தான்.

அவர் நாராயணி அம்மாளையும், சங்கரன் குட்டியையும் மாறி மாறிப் பார்த்தார். புன்முறுவலோடு, “பள்ளியிலிருந்து வந்தாளே சிறுபெண். அவள் உங்கள் மகளா?” என்று கேட்டார்.

நாராய்ணியின் மனத்தில் சந்தேகம். கிருஷ்ண பணிக்கர் அனுப்பிய ஆளாக இருப்பாரோ? மகளைக் கதறக் கதற விட்டுச் சென்றவர், இத்தனை வருஷம் கழித்து ஆளனுப்பி அழைத்துப் போக நினைக்கிறாரோ? என்ன நெஞ்சழுத்தம்! சற்று சூடாகவே, “நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்? மோகினி என் வயிற்றில் பிறந்த மகளல்ல. ஆனால் அவளை விட்டுப் பிரிய நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!” என்று படபடவென்று அடுக்கிக் கொண்டே போனாள்.

“என்னைப் பார்த்துக் குழந்தை பயப்பட்டாள். அது நியாயம், வயதில் பெரிய நீங்களும் பயப்படுகிறீர்களே!” என்று புள்முறுவல் செய்தார் அவர். உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த சங்கரன் குட்டி, “அம்மா, அவர் தலை ஈயச் செம்பு போல இருக்கம்மா!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். நாராயணி, “சும்மா இருடா குட்டி!” என்று கண்டித்தாள்.

சங்கரன்குட்டி ஒரு மாதிரி என்பதைத் தெரிந்து கொண்ட அவர் முகத்தில் கனிவு ஏற்பட்டது. “இது ஈயச்செம்பு போல் இருந்தாலும் இது தேயாத செம்பு. ஈயாத செம்பு. உலகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்ட விஷயங்களைத் தேக்கி வைக்கும் செம்பு. இந்தச் செம்பீல் நுழைந்தது வெளி வராது”, என்று பற்களையெல்லாம் காட்டிச் சிரித்தார்.

நாராயணி, “அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் யார், எதற்கு வந்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே?” என்று தொடர்ந்து கேட்டாள்.

“பார்த்தாலே தெரியவில்லையா? நான் ஒரு பரதேசி. எங்கு போகிறேன், என்ன பேசுகிறேன் என்ற கட்டுப் பாடு இல்லாதவன். நடந்து வரும்போது குழந்தையைப் பார்த்தேன். மாலைச்சூரியன் ஒளி முன்பு அவள் நடத்து வந்த காட்சி நான் மனத்தில் உபாசிக்கும் பாலாதிரிபுரசுந்தரியின் கற்பனை உருவம் போல் தோன்றியது. மகிழ்ந்தேன். ஆனால் குழந்தை என்னைப் பார்த்துப் பயந்தது,” என்று நிறுத்தினார்.

நாராயணி அவர் முகத்தில் நிலவிய அருளைப் பார்த்துக் குழம்பினாள். அவர் கண்களில் களங்கமோ, விகல்பமோ இல்லாதிருப்பதை உணர்த்தாள். அவர் பார்வை பொதுவாகத் தரையிலே நின்றது. அவர் தலை நிமிர்ந்து பார்க்கும் போது, அவர் பார்வை குறிப்பாக எதிலும் லயிக்காமல் எல்லாவற்றிலும் பொருத்தி நின்றது. குழத்தைகள், மிருகங்கள் பார்ப்பது போல் எந்தவித தனி நோக்கமும் அப்பார்வையில் இல்லாதிருந்தது. நாராயணிக்கு அவர்மீது நம்பிக்கை பிறந்தது. அதைப் புரிந்து கொண்டவர் போல் அந்த மனிதர் “அம்மா, தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கிறீங்களா?” என்று கேட்டார்.

நாராயணி நீர் கொண்டு வர உள்ளே சென்றபோது அவர், “அம்மா, தண்ணீரை உங்க வளர்ப்புப் பெண்ணிடம் கொடுத்து அனுப்புங்க. அவள் என்னைக் கண்டு பயப்படக் கூடாது,” என்று சொன்னார்.

ஒரு வெண்கலப் பாத்திரத்தில் நீர் எடுத்து வரும்போதே மோகினி நாராயணியிடமிருந்து பாத்திரத்தை வாங்கிக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்தாள். ஆனால் தயங்கித் தயங்கி வந்தாள்.

“உன் கையால் தாகம் தீரத் தண்ணீர் கொடம்மா,” என்றார்.

மோகினி பாத்திரத்திலுள்ள நீரை சாய்த்தாள்.

இரண்டு கைகளாலும் கை ஏந்திக் குடித்தார், நீர் அருந்திய பின் ஒருவித நன்றியோடு மோகினியை நோக்கினார். நாராயணி, “உங்கள் பேச்சைப் பார்த்தால் நீங்கள் மலையாளத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று தெரிகிறது. நீங்க எந்த ஊர்? எங்கே தங்கறீங்க?” என்று கேட்டாள்.

“நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். இரண்டு மைலுக்கப்பாலுள்ள ‘சாந்திவில்லா’வில் தங்கியிருக்கிறேன்,”

சாந்திவில்லா என்றதும் நாராயணிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்த சாந்திவில்லாவில் வாழ்பவர்தான் அந்த வட்டாரத்தில்லேயே பெரும் பணக்காரர், அவருக்குச் சொந்தமாகக் கோயம்புத்தூரில் பல மில்கள் இருப்பதாகக் கேள்வி, ஏதோ மனச் சாந்திக்காக இந்த மலைப்பிரதேசத்துக்கு வந்து வாழ்வதாகவும், அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தாள். ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசியின் போதும் அந்தப் பிராந்தியத்து ஏழைகள் அவர் வீட்டுக்குச் சென்று அரிசி, துணி தானமாக வாங்கி வருவது வழக்கம், மற்றப்படி அவர் வெளியே வந்து யாருடனும் சகஜமாகப் பழகவோ ஊர் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதோ கிடையாது. அவர் வாழும் பிரம்மாண்டமான சாந்தி வில்லாவுக்கு யாரும் போனதில்லை, பெரிய அரசாங்க அதிகாரிகள் சாந்தி வில்லாவுக்குப் போவதென்றால் முன்னேற்பாடான அழைப்பின் பேரில்தான் போகமுடியும். உயர்வோடு ஒதுங்கி வாழ்ந்த லட்சாதிபதியின் வீட்டில் எப்படி இந்த சாமியார் தங்க நேர்ந்தது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, கார் டிரைவர் ஒரு கூடையோடு அவரை நெருங்கினான்.

“அந்தப் பழங்களை என் தாயாருக்குக் கொடு,” என்றார்.

டிரைவர் குழம்பினான், அவன் பார்வையில் தெரிந்தவர் இருவர்: ஒருத்தி நாராயணி அம்மாள், இன்னொருத்தி, மோகினி. இருவருமே அவருக்குத் தாயாகக்கூடிய பருவத்தினர் அல்ல, புரிந்து கொண்டவர்போல், அவர் மோகினியைச் சுட்டிக்காட்டி, “அதோ அதுதான் என் தாய், அவளிடம் கொடு”, என்றார்.

டிரைவர் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பழக்கூடையை மோகினியிடம் கொடுத்தான்.

அவர் எழுந்து ஒன்றும் பேசாமல் காரை நோக்கிச் சென்றுவிட்டார். பழக்கூடையைக் கொடுத்துவிட்டு நகரும் டிரைவரை நிறுத்தி நாராயணி கேட்டாள்.

“இவர் யாருப்பா?”

“சாமியை உங்களுக்குத் தெரியாதுங்களா? இவரை வேண்டியவங்கன்னு நெனைச்சேன். மார்க்கெட்டிலே பத்து ரூபாய்க்கு வாங்கிய பழத்தை அப்படியே. கொடுத்திட்டாரே. அவர் போக்கே புரியலங்க. ‘பங்களாக்காரர்’ தம்பிங்க.”

“சாந்திவில்லா பங்களாக்காரர் தம்பியா? அவ்வளவு செல்வந்தரின் தம்பி ஏம்பா இப்படி ஆயிட்டார்?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. அண்ணாத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பணத்திலே அழுத்தமோ அவ்வளவுக்கவ்வளவு இவர் தாராளமுங்க, பள்ளிக்கூடம் கட்டப் போறாருங்களாம். ஏழை அனாதைக் குழத்தைக்களுக்கு விடுதி கட்டப் போறாராம்.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மறுநாள் மாலையும் அவர் நாராயணியின் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகினி பள்ளியிலிருந்து திரும்பலில்லை. மோகினியின் விருத்தாந்தம் பூராவும் கேட்டுக்கொண்டார். அப்புரம் தினமும் மாலை வர ஆரம்பித்தார். மோகிளிக்குத் தமிழ்ப் பாடமும், திருக்குறள் பாடமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பள்ளி தொடங்கியதும் மோகினியை அதில் சம்பளமில்லாமல் சேர்த்துக் கொண்டார். ஒரு குழந்தையின் வளர்ச்சியில், அதுவும் பெண் குழந்தையின் வளர்ச்சியில் இருவித ஆதரவுகள் தேவை. உணவு அளித்து அன்பு காட்டும் மென்மை யான தாயின் ஆதரவு, மற்றொன்று தைரியமூட்டி உள்ளத்துக்கு வலிவும் உலக அறிவும் போதிக்கும் தந்தையின் ஆகரவு. மோகினி இரண்டையும் ஆரம்பத்தில் இழந்தவளாயினும் நாராயணியின் அன்பால் ஒன்றையும், இவரது ஆதரவால் மற்றென்றையும் அடைந்தாள். அவர் மோகினிக்குப் படிப்பு மட்டும் சொல்லித் தரவில்லை. பண்பும் போதித்தார். உடல் வளர்ச்சிக்கும் வேண்டிய பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார். நாராயணி வீட்டைச் சுற்றி ஒரு காய்கறித் தோட்டம் போடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து அதற்குத் தேவையான விதைகளையும் உரத்தையும் கொண்டுவந்து கொடுத்தார். அந்தத் தோட்டத்திலே மோகினியையே உழைக்கும்படி செய்தார். ”உழைப்பே இன்பத்தின் அடிப்படை, பலன் கருதாமல் ஏதாவது ஒன்றில் உழைத்துக் கொண்டே இருந்தால் துன்பம் அணுகாது, அதுவே பேரின்ப சாதனம். இடை விடாத பலன் கருதா உழைப்புக்கு ஆண்டவன்தான் எடுத்துக்காட்டு. தினமும் சூரியனைக் காலையில் எழுப்பி பவனி வரச் செய்கிறான். பருவத்தில் மழையைப் பெய்வித்து உணவை வளர்க்கிறான். புஷ்பங்களை மலரச் செய்கிறான். நாம் தூங்கும்போது அவன் தூங்குவது இல்லை. எங்கும் எப்போதும் விழிப்புடன் இருந்து கொண்டே பணியாற்றுகிறான். ஓய்வை வெறுக்கும் ஒருவன் புவனத்தில் உண்டென்றால் அது முழு முதற் கடவுள்தான். அவன் படைப்பாகிய நாம் அவனை பின்பற்ற வேண்டாமா?” என்று அடிக்கடி மோகினிக்குச் சொல்லார்.

அவருடைய வாழ்வையும் அப்படியே அமைத்துக் கொண்டார், காலை நான்கு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரையில் ஏதாவது செய்துகொண்டே இருப்பார். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அதனால் அந்தப் பகுதியில் அவருக்குக் ‘குழந்தைச் சாமி’ என்ற பட்டப் பெயர் வந்து விட்டது. குழந்தைச் சாமி வந்ததிலிருந்து நாராயணி அம்மாள் வாழ்க்கையமைப்பில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. எல்லையில்லாச் செல்வத்தில் பிறந்தும் செல்வத்தைத் துறந்து, காவி அணிந்து தெருத் தெருவாக சுற்றுகிறாரே இந்தக் குழந்தை சாமி, அதைப் பற்றிச் சிறிது கூட வருந்துவதாக இல்லையே என்று நினைக்கும் போதெல்லாம், நாராயணிக்குத் தன் மகள் சங்கரன்குட்டி அறிவு வளராமல் இருப்பதை ஒரு பெரும் துக்கமாக மனத்தில் போற்றி வளர்ப்பது தவறு என்று பட்டது.

நாராயணியின் மனத்தில் ஒரு அமைதி, திருப்தி ஏற்பட்டது. அது மட்டுமல்ல குழந்தைசாமியின் சொல்படி காய்கறித் தோட்டம் அமைத்ததன் விளைவாக, பொருளாதார அமைப்பிலும் சிறிது உயர்வு ஏற்பட்டது. பணத்தைக் கொண்டு வந்து பிச்சையாகக் கொடுத்திருந்தால் நாராயனி அம்மாளின் தன்மானத்தை உறுத்தியிருக்கும். ஆனால் குழந்தைச் சாமி சம்பாதனைக்கு வழி காட்டினார். அதற்குத் தேவையான விதைகள், உரம் கொண்டு வந்து கொடுத்து உதவினார். அதுமட்டுமல்ல, பயிரான காய்கறிகளைத் தன்னுடைய அனாதை விடுதிக்கே விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். ஒன்றும் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த சங்கரன்குட்டிக்குக்கூட நீர் இறைத்துத் தோட்டத்தில் வேலை செய்யும் பழக்கம் ஏற்பட்டது.

ஒரு நாள் மாலைப் பொழுது, மோகினி பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை. நாராயணி அம்மாள் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் பங்குன் நாயர் வந்தார். ஷோரனூரிலிருந்து குருவாயூர் போக நேர்ந்தபோது அவருக்குக் குழந்தை மோகினியைப் பற்றியும், நாராயணியைப் பற்றியும் ஞாபகம் வரவே, வழியில் பயணத்தை நிறுத்தி நாராயணியைப் பார்க்க நினைத்தார். அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்ட சங்கரன்குட்டியைத்தான் வீட்டில் நுழைந்ததும் பார்த்தார். ‘ஒருவேளை மோகினியின் தந்தை மனம் மாறித் திரும்பி வந்து தன் மகளை அழைத்துப் போயிருப்பாரோ’ என்று நான் நினைத்தார். நாராயணி அம்மாள் அவரிடம் மிகவும் பெருமையோடு மோகினியைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், தான் நினைத்தது தவறு என்பதை உணர்ந்தார்.

“குட்டி என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாலும் அவனால் எனக்கு உதவி எதுவும் இல்லை. எனக்குப் பிள்ளை போல் உதவுவது மோகினிதான். அன்று இரவு நடந்த விபத்து என்னைப்பொறுத்த வரையில், பெரிய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். என்னையும் சங்கரன்குட்டியையும் காப்பாற்றுவது மோகினியின் உழைப்பு என்றே கூறலாம். என்ன சுறுசுறுப்பு அந்தக் குழந்தை! பள்ளியில் படிக்கிறாள். தோட்ட வேலையில் உதவுகிறாள். வீட்டு வேலையில் பாதி அவளே செய்கிறாள். அவளை இரக்கமில்லாமல் இங்கு விட்டுச் சென்ற அவள் தந்தை கிருஷ்ண பணிக்கருக்கு, அவர் அடைந்த நஷ்டத்தைப் பற்றிக் கொஞ்சமும் தெரியாது!” என்றாள் நாராயணி.

“அப்படியென்றால் அவள் தந்தை பிறகு ஒரு முறைகூட இங்கு வந்து அவளைப் பார்க்கவே இல்லையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“மோகினியும் அவள் அச்சனைப் பற்றியே பேசுவதில்லை. அவரும் இந்தப் பக்கமே அப்புறம் வரவில்லை. பெற்ற தந்தை மோகினியை மறந்தாலும் கடவுள் அந்தக் குறையைத் தீர்த்து விட்டார். அவளுக்கு ஒரு உயர்ந்த மனிதர் தந்தையாகக் கிடைத்து விட்டார்” என்று குழந்தைச் சாமி பற்றியும், மோகினி அவர் நடத்தும் பள்ளியில் படிக்கும் விவரத்தையும் கூறினாள்.

“நானும் அவரையும், அவர் செய்யும் நன்மையையும் அடிக்கடி கேள்விப்படுகிறேன். ஆனால் அவரை இதுவரையில் ஒருமுறைகூட நேரிலே பார்க்கவில்லை,” என்று சொல்லி நிறுத்தும்போதே, ஆள் நுழையும் சத்தம் கேட்டது. வீட்டினுள் குழந்தைச் சாமி நுழைந்தார். நாராயணி அம்மாள் பயபக்தியோடு எழுந்து அவர் உட்காருவதற்காக முலையிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டாள். ஆனால் உள்ளே நுழைந்த குழந்தைச் சாமி, இன்ஸ்பெக்டர் பங்குன் நாயரைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தவர் போல் ஆனார். சலனமில்லா அவர் முகத்தில் குழப்பம் திரைபோல் விழுந்தது. அதேபோல் பங்குன் நாயரும் குழப்பத்தோடு அவரைப் பார்த்தபடி தன் இடத்தைவிட்டு எழுந்தார்.

பங்குன் நாயரின் பார்வை அவரது தலையிலிருந்து அவர் பாதம் வரை பார்வையிட்டது. முடிவில் இன்ஸ்பெக்டரின் பார்வை அவரது விரல்கள் மீது நின்றது. ஐந்து விரல்களுக்குப் பதிலாக இரண்டே விரல்கள் கிடுக்கிபோன்ற அமைப்பில் மிகுந்திருக்கும் கரத்தைப் பார்த்தார். இன்ஸ்பெக்டர் முகத்தில் ஒருவித ஒலி உண்டாயிற்று. அவர் எதையோ புரிந்து கொண்டவர் போல் புள்முறுவல் செய்தார். ‘யோக்கியர்கள் என்று நிரூபிக்கப்படும்வரை எல்லாருமே அயோக்கியர்கள்.’ என்ற வரண்ட தத்துவத்தில் நம்பிக்கை வைத்த இன்ஸ்பெக்டர், ‘எல்லோரும் நல்லவரே,’ என்று தினமும் சொல்லிவந்த ‘பரதேசி’யைப் பார்த்து முறைத்து நின்றார். அந்தச் சிறு அறையின் ஒருபுறத்தில் மின்னும் பொத்தான்களும் பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட பெல்ட்டும் அணிந்த இன்ஸ்பெக்டர்; இன்னெரு புறத்தில் வெள்ளை உடை பரதேசி ஒருவர். சமூகத்திலுள்ள குற்றத்தைத் துரத்தித் தண்டிக்கும் ஆயுதம், மற்றவர் குற்றத்தை வலுவில் போய் அணைத்து, அதன் விஷத்தைப் போக்கப் பாடுபடும் சக்தி. இந்த இரண்டு தத்துவங்களும் எதிர்எதிராய் நிற்கும் நிலையில், இரண்டுக்கும் இடையில் நிகழ்ந்த மௌன சம்பாஷவையைப் புரிந்து கொள்ளாமல் நாராயணி, “இவர்தான் நான் இப்போது. பேசி கொண்டிருந்தேனே அந்தக் குழந்தைச்சாமி. உட்காருங்கோ. பழமும் சுக்குவெள்ளமும் எடுத்திட்டு வர்றேன்”, என்று சொல்லி உள்ளே சென்றாள்.

சங்கரன்குட்டியும் தாயைப் பின் தொடர்ந்தான். தனியே விடப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டனர். இன்ஸ்பெக்டர் பங்குன் நாயர் கனைத்துக் கொண்டார். பிறகு, “நீ தானா குழந்தைச் சாமி?” என்று சொல்லி விட்டுச் சாமியை ஏன்னமாகப் பார்த்தார்.

தரையைப் பார்த்தபடி இருந்த அவர் கண்கள் இன்ஸ்பெக்டரை நிமிர்ந்து பார்த்தன. “நான் யார் என்பது இப்போது எனக்கே அக்கறை யில்லாத ஒரு விஷயம், நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதில்தான் எனக்கு அக்கறை. அதனால் நான் யார் என்பது இங்குள்ள யாருக்கும் தெரிய வேண்டியதில்லை, தெரிந்தால் வீண் குழப்பம்தான் ஏற்படும்”.

இன்ஸ்பெக்டர் சிரித்துக்கொண்டே, “உண்மையை மூடி மறைக்கச் சொல்கிறீர்கள்”, என்றார்.

“சில உண்மைகளை மறைப்பதால் ஏற்படும் நன்மை அபரிமிதம், நீங்கள் நேர்மையும் ஒழுக்கமும் உள்ள இன்ஸ்பெக்டர். குழந்தையல்ல, நான் என் சுய லாபத்துக்காக எந்த உண்மையையும் உங்களை மறைக்கச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள். நான் என்னால் இயன்றவரை இந்த வட்டாரத்தில் செய்துவரும் நல்ல காரியங்களுக்கு முட்டுக்கட்டை போட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, குழந்தைச் சாமி இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டர் அவரது பார்வையில் அப்படியே கட்டுண்டு நின்றார். சிந்தனை சுழன்றது. அவர் பேச நினைத்தது, சொல்ல விரும்பியது எல்லாம் அவர் மனத்தைவிட்டு மறைவதுபோன்ற உணர்ச்சி ஏற்பட்டது.

தன்னுடைய போலீஸ் உடை, இன்ஸ்பெக்டர் என்ற நினைப்பில் தோன்றும் ஒருவித பலம். இவற்றையெல்லாம் மிஞ்சிய ஒரு பலம், குழந்தைச் சாமியிடம் இருப்பதைப்போல் உணர்ந்தார்.

பல வருஷங்களுக்கு முன் விசித்திரமான சூழ்நிலையில் சந்தித்த ஆசாமியின் உடல், தோற்றம் இவரிடம் இருந்த போதிலும், எதிரே இருப்பவர் அவன் அல்ல. இவரை ‘அவன்’ என்று அழைக்கவே இன்ஸ்பெக்டரின் சிந்தனை கூசியது. இந்த மாறுதல் வெறும் உடையினால் வரக்கூடிய மாற்றமல்ல. ஓர் ஆழமான மாற்றம், உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து ஏற்படும் மாற்றம் என்பதை உணர்ந்து கொண்டார்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *