மாலவல்லியின் தியாகம்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 2,544
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
ஏழாம் அத்தியாயம்
பிக்ஷுவின் ஏமாற்றம்!
புத்தபிக்ஷுணி கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கலங்கமாலரை யரும் பூதுகனும் அவள் செல்வதையே வியப்புடன் நோக்கினர். இந்தச் சமயத்தில் அந்த புத்த விஹாரத்திலிருந்து வேறொரு உருவமும் வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் அவர்களுக்குச் சமீபம் வந்ததும் அது யாரென்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அன்று பூசை வேளையில் அந்தப் பெண் மீது எந்த பிக்ஷு குற்றம் சுமத்தினாரோ, அவரேதான் என்று தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு ஏற்படவில்லை. அந்த பிக்ஷு முன்னால் சென்ற அந்தப் பெண்ணைப் பின்பற்றிச் செல்லுகிறவர் போல் அந்தச் சோலையைத் தாண்டி நடந்தார். பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக்கொண்டே, “கலங்கமாலரையரே! இதென்ன துறவு வாழ்க்கை? ஒரு பெண்ணைப் பற்றிய கவலை தான் ஒரு துறவியின் கொள்கையா? ஒரு நடத்தையை உளவு பார்த்து அவள் மீது குற்றம் சுமத்துவது தான் ஒரு புத்த பிக்ஷுவின் இலட்சியமா? இப்படிப் பட்ட கவலையில் மூழ்கி இருக்கும் ஒரு பிக்ஷு எப்படிக் கடைத்தேற முடியும்? புத்த பெருமான் புத்த வக்கத்தில் சொல்லுகிறர். ‘கண்ணைக் காத்தல் நலம்; காதைக் காத்தல் நலம். உள்ளத்தைக் காத்தல் நலம். வாக்கைக் காத்தல் நலம். இவை எல்லாவற்றையும் காத்துக் கொள்ளும் பிக்க்ஷு சகல துக்கங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறான்’ என்று, கலங்கமாலரையரே! பாவம்! இந்த பிக்ஷு எதைக் காக்கப் பாடுபடுகிறார் என்பது உங்களுக்குப் புரிந்து விட்டதா?”
ஏதோ யோசனையில் இருந்தவர் போலிருந்த மாலரையர் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல், “பூதுகா! இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது. இதை எப்படியேனும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்!” என்றார்.
“அது ஒரு கடினமான காரியமல்ல. நீங்கள் ஒரு புத்த பிக்ஷு என்ற நிலையில் அவர்களைப் பின் தொடர்ந்து போவது உசிதமாகாது. நீங்கள் உங்கள் இருப்பிடத்துக்குச் செல்லுங்கள். நான் இதைக் கவனித்துக் கொள்ளுகிறேன்'” என்றான்.
மாலரையருக்கு அவனுடைய யோசனை மிகவும் நலமானதாகவே பட்டது. ”ஆம்! உன் யோசனை சிறந்தது தான். நான் போகிறேன். நீ இப்பொழுதே அவர்களைப் பின் தொடர்ந்து சென்று விஷயத்தை அறிந்து கொள்வது நலம்” என்றார்.
பூதுகன் அதற்கு மேலும் அங்கு தாமதிக்கவில்லை. அந்த பிக்ஷுணியைத் தொடர்ந்து சென்ற பிக்ஷுவின் பின்னால் அவனும் நடந்தான்.
இளம் பருவத்தினனான அந்த பிக்ஷுணி அந்த நிலவிடையே நிழல் உருவம் நகர்ந்து செல்வது போல் அந்தச் சோலையைத் தாண்டி, கடற்கரையைக் கடந்து, பட்டினப்பாக்கத்தை நோக்கி நடந்தாள். அவளைத் தொடர்ந்து சென்ற பிக்ஷுவும் அவள் எங்கே செல்கிறாள் என்பதை அறிய நினைப்பவர் போல் அவளுக்குப் பத்தடி பின்னால் நடந்து கொண்டிருந்தார். ‘பூதுகன் அந்த பிக்ஷுவுக்குப் பத்தடி பின்னால் நடந்து கொண்டிருந்தான். அந்த அழகான நிலவொளியில், அகன்ற வீதிகளும், அழகான கட்டடங்களும் நிறைந்த அந்தப் பட்டினப்பாக்கம், அந்தச் சமயத்திலும் அமர உலகம் போலக் காட்சியளித்தது என்றால் கரிகாலன் போன்ற பேரரசர்கள் அங்கு வாழ்ந்த நாளில் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா? வானளாவி நிற்கும் மாட மாளிகைகளோடு கூடிய ராஜ வீதிகள், ரத வீதிகள், பெரிய வணிகர்களும் பிரபுக்களும் வாழ்ந்த வீதிகள், அமைச்சர்கள் சேனாதிபதிகள் முதலியோர் வசித்த வீதிகள், ரத சாரதிகள், போர் வீரர்கள், யானைப் பாகர்கள் முதலியோர் வாழ்ந்த வீதிகள், அதற்கடுத்து வேதியர்கள், சோதிடர்கள் முதலியோர் வசித்த வீதிகள், அதை அடுத்து இசை வல்லுனர்கள், நாட்டியக் கணிகையர்கள் முதலியோர் வாழ்ந்த வீதிகள், ஒன்றுக்குப் பின் ஒன்றாக அந்த வீதிகள் தான் எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டிருந்தன! இத்தகைய அழகிய நகரைச் சிருஷ்டிக்கக் கரிகாலன் எத்தகையபாடு பட்டானோ ! ஒவ்வொரு வீதியிலும் அந்த வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீடும் அங்கு வாழ்பவர்களின் தகுதிக்கு உரிய முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வீதிகளிடையே அழகான தேவாலயங்களும், யானை, குதிரை முதலியன கட்டுவதற்கான கூடங்களும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தன, அமைதி நிறைந்த அந்த நடு நிசிப் பொழுதில் அந் நகரின் பூரண எழிலும்-அழிவுற்ற சாம்ராஜ்யத்தின் பெருமைகளை யெல்லாம் ஏதோ கனவில் நினைவுக்குக் கொண்டு வருவது போலத் தான் இருந்தது. ஒரு வம்ச அரசர்களின் சாம்ராஜ்யம் அழிந்து விட்டது. ஆனால் இன்னும் அந்த சாம்ராஜ்ய பாரம்பரியத்தில் வந்த பெருமக்கள் நகரில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். எந்தெந்த வீதியில் எத்தகையவர்கள் இருந்து வாழ்ந்தார்களோ, அத்தகையோரின் சந்ததிகள்தான் அந்தந்த வீதிகளில் வாழ்ந்து வந்தனர். அமைச்சரின் மகன் அமைச்சனாக இல்லா விட்டாலும், போர் வீரனின் மகன் போர்வீரனாசு இல்லா விட்டாலும் சாம்ராஜ்யம் அழிந்தும் அதன் பெருமை அழியாதிருப்பது போல, தங்கள் முன்னோரின் பெருமை தங்களுக்கு இல்லா விட்டாலும் அத்தகைய வீரமும் திறமையும் உள்ளவர்களாகத்தான் இருந்தனர், கடந்த நாட்களைப் போன்ற நாட்களும் திரும்ப வரும் என்ற கனவோடு.
அந்த இளம் பிக்ஷுணி பட்டினத்து ராஜ வீதிகளைத் தாண்டி, ரத வீதி தாண்டி, இன்னும் பல வீதிகளையும் கடந்து, இசைவாணர்களும் நாட்டியக் கணிகையர்களும் வாழும் வீதிக்கு வந்தாள். ஒரு காலத்தில் கோவலனும், மாதவியும் மகிழ்ந்திருந்த வீதியல்லவா அது? எடுக்க எடுக்கக் குறையாது அன்னமளிக்கும் அக்ஷ்ய பாத்திரத்தை ஏந்தி உலகில் பசிப்பிணியைத் தீர்த்துப் புரட்சி செய்து காட்டிய மணிமேகலை பிறந்த வீதியல்லவா அது! இப்பொழுதும் அந்தப் பெருமைகளை, எழில் மிக்க கூடங்களையும் மாடங்களை உல்லாசயும் தழுவி நிற்கும் நிலவு சொல்லிச் சொல்லி மன ஆதங்கமடைவது போல் தானிருந்தது.
அந்த இளம் பிக்ஷுணி நாட்டியக் கணிகையர்கள் வாழும் அந்த வீதியை அடைத்தது. அவளைத் தொடர்ந்து வந்த பிக்ஷுவுக்கு ஆச்சர்யத்தை அளித்ததோ இல்லையோ பூதுகனுக்குச் சிறிது ஆச்சரியத்தைத்தான் அளித்தது. இத்தகைய இளம் பருவத்திலுள்ள ஒரு பிக்ஷுணி இந்த வீதியை அடைந்தது தனக்காகக் காத்திருக்கும் தன் காதலனை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டான் பூதுகள். அவனுக்கு இவ்வளவு நேரமும் உளவு பார்ப்பதில் இருந்த ஆர்வமும் சுவாரசியமும் குறைந்து விட்டது. ‘இதென்ன? சகஜம்! இந்தப் பருவத்தில் இதை யார் கட்டுப்படுத்த முடியும்?’
பௌத்த பிக்ஷுணி என்பதால் ஒரு இளம் வயது நங்கையின் மனத்திலிருந்து இத்தகைய ஆசைகள் அழிந்து விடுமா? இதைப் பின்தொடர்ந்து வந்து உளவு பார்த்துத் தெரிந்து கொள்வதனால் என்ன லாபம் ? உலகத்தில் ஒவ்வொரு ஜீவனும் இன்பம் அனுபவிக்கத்தானே பிறந்திருக்கின்றன? பௌத்த பிணி இன்ப வேட்கையைத் தீர்த்துக் கொள்வதனால் என்ன பாவம் இருக்கிறது? இந்த உலகத்தில் இன்பம் அனுபவிக்கும் வரையில்தான் சுவர்க்கம். துக்கம் அனு பவிக்கும் வரையில் இதுதான் நரகம். சுவர்க்கம் என்று தனியாக எதுவும் இல்லை, நரகம் என்று தனியாக எதுவும் இல்லை. கடவுள், மதம், ஆத்மா, சுவர்க்கம், நரகம், தவம், விரதம், தியானம், பூசை என்றெல்லாம் மனிதன் தன்னைத்தானே கட்டுப்படுத் திக் கொண்டு ஏன் உழல வேண்டும்? இதிலிருந்தெல்லாம் தங்கள் மன இச்சைக்காகச் சிறிது விலகி நிற்பவர்களை மனிதன் ஏன் தூஷிக்க வேண்டும்? ஏன் திரஸ்கரிக்க வேண்டும்? புத்தர் பெருமான் உலகத்தின் துக்கத்தை யெல்லாம் துடைத்தெறிவதற்குத்தானே முயன்றார்? பிறருடைய இன்பங்களுக்கு இடையூறாக நின்று அவர்களுக்குத் துக்கத்தையும் துயரத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டம் வகுத்தாரா? இந்த உலகில் பற்றை விட்டு இந்த உலகின் நலனுக்காகத் துறவு பூணும் மனிதர்களைத்தானே தம்முடைய சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயன்றார்? பருவத் துடிப்பு நிறைந்த இத்தகைய இளம் பெண்களை யெல்லாம் பிக்ஷுணிகளாக்கிக்கட்டுப்படுத்தி அவர்களுடைய இன்ப வாழ்க்கையை யெல்லாம் சீர் குலைக்க வேண்டுமென்று அவர் நினைத்தாரா? ஒரு இளம் பெண்ணைப் பற்றி முன்னதாகவே யோசிக்காமல் சங்கத்தில் அனுமதித்து அவளைப் பிக்ஷுணியாக்கிய பிறகு, அவளுடைய நடைமுறைகளைக் கண்காணிக்கப் புகுவது பின்புத்திதானே? இவள் ஒழுங்கு தவறியவள் என்றால் இவளைத் தொடர்ந்து இவளுடைய நடத்தைகளை உளவு பார்க்க முயற்சி செய்யும் அந்த பிக்ஷுவினுடைய யோக்கியதையைப் பற்றி என்ன சொல்வது? பிறருடைய தினசரி வாழ்க்கை முறையில் குறுக்கிடும் இந்த பிக்ஷுவை யல்லவா முதலில் விசாரித்துத் தண்டனை அளிக்க வேண்டும்? போகட்டும்— இந்தப் பயித்தியக்கார பிக்ஷுவைப்போல் நானும் ஏன் அந்தப்பெண்ணைப் பின்தொடர்ந்து உளவு பார்க்க வேண்டும்?
இவ்வாறு அவன் எண்ணியவனாக அப்பொழுதே அங்கிருந்து திரும்பிவிட நினைத்தான். ஆனால், அடுத்த கணம் அவனுக்கு மேலும் ஒரு பேராச்சர்யத்தைக் கொடுக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த பௌத்த பிக்ஷுணி அங்கொரு மாளிகையின் வாயிலை யடைந்து கதவைத் தட்டிய போதுதான் அவனுக்கு இத்தகைய திகைப்பும் வியப்பும் ஏற்பட்டன. அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டவுடனே திறக்கப்பட்டது. அவ்விளம் பிக்ஷுணி அந்த வீட்டுக்குள் நுழையவும் கதவு மறுபடியும் தாளிடப்பட்டு விட்டது.
அவளைத் தொடர்ந்து வந்த பெரிய பிக்ஷு மிகவும் ஏமாற்றம் அடைந்தவர் போல் தயங்கியபடியே அந்த வீட்டின் வாசலில் நின்றார். அந்த பிக்ஷுவைத் தொடர்ந்து வந்த பூதுகன் சிறிது ஆத்திரமும் வேகமும் கொண்டவன் போல் பிக்ஷுவின் பின்னால் வந்து அவருடைய தோளைப் பிடித்து உலுக்கினான். அந்த பிக்ஷு பேயால் அறையப்பட்டவர் போல் நடுங்கிய வண்ணம் திரும்பிப் பார்த்தார். நிலவொளியில் பூதுகனின் முகமும் அதில் நிறைந்திருந்த கோபமும், ஆத்திரமும் அவருக்கு நன்கு தெரிந்தன.
பூதுகன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, “அடிகள் என்ன இப்படிப் பார்க்கிறது? இந்த வேளையில் அதுவும் இந்த வீதிக்கு இப்படிப்பட்ட கோலம் தரித்தவர்கள் வரக்கூடாதென்பது மத தருமமாய் இருக்கலாம்; ஆனால், அது மனித தர்மம் என்று நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்-இது பாபமல்ல. ஒருவன் தன் இச்சையை அடக்கிக் கொண்டு, விரும்பும் இன்பத்தைத் துறந்து அடங்கி வாழ்வதுதான் மகா பாபம் என்பதுதான் என் சித்தாந்தம். அடிகள் அச்சப்படுவானேன்? தாராளமாகக் கதவைத் தட்டலாம்” என்றான்.
பிக்ஷு ஏதோ தடுமாறியவர் போல் பரபரவென்று விழித்தார். “நீ சொல்வது போல் நான் அத்தகைய விருப்பத்தைக் கொண்டு இங்கு வரவில்லை. நான் வந்தது வேறு காரணம். ‘புலனடக்கத் தோடு, நிதான உணர்வுடனும், நல்லறத்திலே நாட்டத்துடனும், நிறைந்த வீரியத்துடனும், இன்பங்களை எதிர்பாராமல் வாழ்ந்து வருவோனை, பாறைகள் நிறைந்த மலையைச் சூறாவளி அசைக்க முடியாதது போல் மாறன் வெல்ல முடியாது’ என்று ததா கதரே சொல்லி இருக்கிறார்” என்றார்.
“ஓகோ! அப்படியா? அறிந்து கொண்டேன். அடிகளார் இத்தகைய வீதிகளுக்கு வர வேறு காரணம் என்ன இருக்கப் போகிறது? பிக்ஷை ஏற்க வந்திருக்கலாமோ? அதுவும் இந்த நடுநிசி யில்…? பிக்ஷா பாத்திரமும் தங்கள் கையில் இல்லையே?” என்றான்.
பௌத்த பிக்ஷுவுக்கு அந்தச் சமயம் பூதுகனிடமிருந்து எளிதில் தப்ப முடியும் என்று தோன்றவில்லை. அந்தச் சமயம் அவனுக்கு நயமாகவே பதில் சொல்லி எப்படியாவது அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என்று அவருக்கு தோன்றியது. “சங்கத்தைச் சேர்ந்த பௌத்த பிணி ஒருத்தி இங்கு வந்தாள். அவளைக் கவனிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன்” என்றார் சிறிது தயக்கத்தோடு,
பூதுகன் ‘கலகல’வென்று ஒரு ஏளனச் சிரிப்புச் சிரித்தான். “பிக்ஷுக்கள் என்றால் பிக்ஷுணிகளைக் கவனிக்கத் தானே இருக்கிறார்கள்? இதில் ஒன்றும் தவறில்லை. அடிகளார் பிக்ஷுணியைக் கவனித்தாகி விட்டதா? அந்த பிக்ஷணி எங்கேயோ?” என்றான்.
”அவள் இந்த வீட்டுக்குள் போய் விட்டாள். நான் போகிறேன். அவள் எங்கே வருகிறாள் என்று கவனிக்கத்தான் வந்தேன், அவ்வளவுதான்” என்று கூறினார் பிக்ஷு.
”அவ்வளவுதானா? இந்த வீட்டுக்குள்ளேயா சென்றாள் ? நீங்கள் அச்சப்பட வேண்டாம். தாராளமாய் வீட்டுக் கதவைத் தட்டுங்கள். இன்னும் தீரத் தெளிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு விடலாம். அவளைத் தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்து விட்டு இவ்வளவு மாத்திரம் தெரிந்து கொண்டு போவது போதாது என்று நினைக்கிறேன்” என்றான் அவன் பரிகாசமாக.
பூதுகன் தன்னை மிகவும் விபரீதமான சூழ்நிலையில் சிக்க வைக்க நினைக்கிறன் என்பதை அவனுடைய ஏளனம் நிறைந்த வார்த்தை மூலமாக அறிந்து கொண்டார் அவர். அந்தச் சமயத்தில் அவனோடு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அவ்விடமிருந்து சென்று விட நினைத்தார். அவர் ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டவராக, “நாங்கள் எந்த வீட்டிலும், அதுவும் இந்த நேரத்தில் நுழையவே கூடாது. அது எங்கள் தருமத்துக்கு விரோதம், சங்கத்தில் சேர்ந்த ஒரு பிக்ஷுணி தருமத்துக்குப் புறம்பாக நடந்தால் அதனால் சங்கமே பாழாகி விடும். இப்படிப்பட்டவளைச் சங்கத்திலிருந்து விலக்குவதுதான் உத்தமமான காரியம். இந்த பிக்ஷுணியைப் பற்றிச் சிறிது சந்தேகம். அதைக் கவனிக்க வேண்டுமென்றுதான் வந்தேன். ஒரு பிக்ஷுணி இந்த நேரத்தில் தனக்குரிய இடமாகிய விஹாரத்திலிருந்து வெளியே வருவது சாதாரண காரியமா? எனக்கு அவளைப் பற்றித் தெரிந்தவரையில் போதும் – பௌர்ணமி யன்று இரவு நடக்கும் பாபப் பிராயச்சித்த சடங்கான பாடி மோஹ்ஹத்தில் அவளைச் சங்கத்திலிருந்து நீக்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விடுகிறேன்…” என்று சொல்லி, அந்த இடத்திலிருந்து அதிவேகமாகக் கிளம்பினார் பிக்ஷு.
பூதுகன் அவரைத் தடுத்து நிறுத்திச் சிறிது நேரம் அவரோடு ஏதேனும் வம்பு செய்யலாம். ஆனால் அப்படிச் செய்ய அவனுக்கு மனமில்லை. அந்தச் சமயம் அவரை விட்டுவிடத் தீர்மானித்தான். அவன் சிரித்துக் கொண்டே, “அடிகளாருக்குக் கடைசியாக ஒரு வார்த்தை – பூதுகன் என்ற நாஸ்திகனைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அவன்தான் நான். எனக்கும் புத்தர் தருமம், சங்கம் இவைகளைப்பற்றிக் கொஞ்சம் தெரியும். ததாகதரின் உபதேச மொழிகளில் ஒன்றை மாத்திரம் உங்களுக்குச் சொல்லி உங்களைவிட்டு விடுகிறேன். ‘ஒரு பிக்ஷ தன் சகல பாவங்களையும் தன்னிடமிருந்து நீக்கிக் கொள்ளவே எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும். எப்பொழுதும் தான் செய்யும் கர்மங்கள் நற்காமங்கள் தானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவைகளுக்கு ஆதாரமாக இருப்பது அவன் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது தான். மாதக்கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையினால் துளித் துளியாக உணவை எடுத்து உண்டு வத்தாலும், இருதயத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு தர்மத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒரு பகுதிக்குக்கூட அவன் ஈடாக மாட்டான் ” என்றான்.
அந்த இடத்தில் அதிக நேரம் நின்றால் பூதுகன் ததாகதரின் மற்ற உபதேசங்களையும் தனக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விடுவானோ என்று பயங் கொண்டவர் போல அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார் அந்த பிக்ஷு. பூதுகன் அந்த பிக்ஷு தலைமறையும் வரையில் அங்கு நின்றபடியே பார்த்து விட்டு, அந்த மாளிகையின் வாயிற் கதவை வந்து தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. கையில் தீபம் ஏந்திய வண்ணம் வந்து வாயிற் கதவைத் திறந்த நடுத்தர வயதுடைய ஒருபெண்மணி முகத்தில் மகிழ்ச்சிக்குறி தோன்ற, “வாருங்கள்! உங்கள் வருகை அத்தி பூத்தாற் போல் இருக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்குப் பின் சோழ சாம்ராஜ்யத்தை இந்த நாட்டில் நிலை நிறுத்திய பிறகுதான் நீங்கள் வருவீர்களோ என்று நினைத்தேன்” என்று உபசார வார்த்தைகள் சொல்லி அவனை உள்ளே அழைத்துச் சென்றதிலிருந்து ஏற்கனவே அவன் அந்த இடத்திலுள்ளவர்களோடு நெருங்கிப் பழகியவன் என்பதைத் தான் எடுத்துக் காட்டியது.
பூதுகன் சிரித்துக் கொண்டே, ”அது இருக்கட்டும், சுதமதி! வைகைமாலை எங்கே?” என்றான்.
”அவளுக்கென்ன? ஆட்டத்திலும் பாட்டத்திலுமே காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைக்கிறாள். இரவு பகல் என்று பார்க்காமலேயே அப்பி யாசம் நடக்கிறது. ஏனென்றால் அவள் ஆட்டத்தைப் பார்த்து இவள் பாட்டுக்குச் சோழ மன்னன் மான்யம் கொடுத்தது போல் யாராவது கொடுத்துவிடப் போகிறர்கள் அல்லவா?” என்று பூதுகனிடம் சொல்லிக் கொண்டு வரும் போது அம்மாளிகையின் பின்கூடத்திலிருந்து இசையொலியும், நாட்டியமாடும் சதங்கை யொலியும் கேட்டன. பூதுகன் சுதமதியின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் உள் கூடத்திற்குச் சென்றான்.
அது மிகவும் அழகான மாளிகை. வெளிக்கூடத்தைவிட உள்கூடம் நாட்டி யம் ஆடுவதற்காகவே அரங்கு போல் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. கூடத்துக்கு நேராக அமைக்கப்பட்டிருந்த மேடையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. புத்த பெருமான் தியானத்தில் அமர்ந்திருப்பது போலச் சலவைக்கல் படிவம் ஒன்று வைக்கப் பட்டிருந்தது. அமர உலகத்து அரம்பை யர்களில் ஒருத்தியே அங்கு வந்து நடனம் ஆடுவது போல் வைகை மாலை நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். அது கூடப் பூதுகனுக்கு ஆச்சரியத்தை விளைவிக்க வில்லை. அவள் நாட்டியத்துக் குத் தகுந்தாற்போல் யாழை மீட்டிப் பாடிய ஒரு உருவம் தான் அவனைத் திகைக்க வைத்தது.
எட்டாம் அத்தியாயம்
வைகைமாலையின் தோழி
வைகைமாலையின் நடனத்துக் கேற்ப இளம் வயதுடைய பௌத்த பிக்ஷுணி யாழோடு இழைந்த இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். அந்தக் கூடத்துக்குப் பூதுகன் வந்த சமயம், அவர்கள் இருவரும் மெய்ம் மறந்த நிலையில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தார்கள்.
அகன்று வட்ட வடிவமாகத் தோன்றிய அக்கூடத்தைச் சுற்றி லும் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் — கூடத்தைச் சுற்றிலுமுள்ள சுவர்களில் பலவித நாட்டிய முத்திரைகளைக் குறிக்கும் சித்திரப் படங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
வைகைமாலை தன் ஆட்டத்திடையே எதேச்சையாகத் திரும்பியபோது அங்கு பூதுகன் நிற்பதைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தவள் போல் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டாள். வைகைமாலை தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண் டதும், அந்த பிக்ஷுணி அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் போல் சட்டென்று தன் பாட்டை நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிர்பாராதவண்ணம் ஒரு வாலிபன் அந்த இடத்துக்கு வந்ததைப் பார்த்ததும் அவளுக்குச் சிறிது வெட்கமும் திகைப்பும் ஏற்படவே வீணையைக் கீழே வைத்து விட்டு எழுந்து நின்றாள்.
”ஏன்? இன்னும் சிறிது நேரம் ஆடலாமே?” என்று சொல்லிக் கொண்டே பூதுகன் அங்கிருந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டான். எதிர்பாரா வண்ணம் அந்த இடத்துக்குப் பூதுகன் வந்தது வைகைமாலைக்குச் சிறிது ஆச்சரியத்தையும் திகைப்பையும் தான் கொடுத்தது. அவள் பூதுகனிடம் நெருங்கி, “நீங்கள் இப்பொழுது இங்கு வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் விருப்பப்படி நீங்கள் காரியத்தை நிறைவேற்றாமல் இங்கு வரக்கூடாதென்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்பொழுது என்ன? எல்லாம் எவ்வளவு தூரம் இருக்கிறது…?” என்றாள்.
“வைகைமாலா! உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாத வரையில் இந்தப் பூதுகன் உயிரோடு வாழ விரும்பமாட்டான். உன்னிடம் தனியாகச் சில வார்த்தைகள் பேசவேண்டும்…” என்று சொல்லியபடியே அவளுக்குச் சற்றுத் தூரத்தில் நிற்கும் பிக்ஷுணியைப் பார்த்தான். அந்த பிக்ஷணி வெட்க மும் நாணமும் கொண்டவளாகத் தலை குனிந்த வண்ணமே நின்று கொண் டிருந்தாள். அவளுடைய முக நிலை அவள் மனத்தில் எழுந்த கவலையையோ திகிலையோதான் எடுத்துக் காட்டுவதாக இருந்தது. வைகைமாலை அந்த பிக்ஷுணி இங்கு இருப்பதால் தான், பூதுகன் தன்னோடு சில ரகசியங்களைப் பேச அச்சப்படுகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் போல், அந்த பிக்ஷுணியைப் பார்த்துக் கண்களால் ஜாடை காட்டினாள். அவளும் உடனே அதை உணர்ந்து கொண்டவள் போல மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.
அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றவுடன் பூதுகன், “வைகைமாலா! நான் முயற்சி எடுத்துக் கொண்ட காரியத்தின் நிமித்தமாகவேதான் இப்பொழுது இங்கு வந்திருக்கிறேன். உன் விருப்பப்படி காரியத்தை நிறைவேற்றாத வரையில் இங்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம். நான் உளவு பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த இடமே அமைந்து விட்டால் நான் என்ன செய்ய முடியும் ? நீயே என்னிடம் சொல்லாமல் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக் கொண்டு என்னை ஏன் அல்லல்பட வைக்கிறாய்? சதிகாரர்கள் இந்தக் காவிரிப்பூம் பட்டினத்திலேயே இருக்கிறார்கள் என்ற ரகசியம் இன்றுதான் எனக்குப் புரிந்தது. அதுவும் உன் வீட்டுக்கே இவர்களில் சிலர் வருகிறார்கள் என்ற இந்த ரகசியம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது” என்று கூறினான்.
வைகைமாலை ஆச்சர்யமும் திகிலும் அடைந்தவளாய், “என் வீட் டிலேயே நீங்கள் உளவு பார்க்க வந்தீர்களா? அப்படி என்ன உங்களுக்குச் சந்தேகம் ஏற்படக்கூடிய நிலையில் காரியங்கள் இங்கே நடக்கின்றன?” என்று கேட்டாள்.
பூதுகன் சிரித்தான்: “உன் மீது சந் தேகம் இல்லை. இங்கு வருகிறவர்கள் மீதுதான் எனக்குச் சந்தேகம். இந்த நேரத்தில், அதுவும் இந்த வீட்டில் ஒரு பௌத்த பிக்ஷுணிக்கு வேலையென்ன? அவள் யார்?” என்று கேட்டான்.
வைகைமாலை சிரித்தாள். அந்த அழகியின் சிரிப்பு பூதுகனை மயக்குவதற்காக ஏற்பட்டதாக இல்லை. அவனுடைய தவறான அபிப்பிராயத்தை ஏளனம் செய்வது போலத்தான் இருந்தது.
“இந்த பௌத்த பிணிக்கு இங்கென்ன வேலையா? இவ்வளவு நேரம் அவள் இங்கு என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை உங்கள் கண்ணால் தானே பார்த்தீர்கள்? இன்னிசை வித்தையில் தேர்ந்தவர்கள் எத்தகைய நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் அந்த வித்தை அவர் களை விட்டு அகன்று விடாது என்ற விடாது என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? அவ ளுக்கு இந்த உலகத்தில் ஏதேனும் ஆசை இருந்தால் அது பாட வேண்டும் என்ற ஆசைதான். அவள் பாடுவதற் காகத்தான் இங்கு வருகிறாள்” என்றாள். ” தெரிகிறது, அவள் நன்றாகப் பாடக் கூடியவள் என்பதை அறிந்து கொண்ட பின்னும் அதை நான் தெரிந்துகொள்ள முடியாதா? ஆனால் அவள் பாடுவதற்காக மட்டும் இங்கு வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
“அவள் யார்? அவளுடைய நட்பு உனக்கு எப்படி ஏற்பட்டது?” என்று வியப்புடன் கேட்டான் பூதுகன்.
“அவளைப் பற்றி ஏன் இவ்வளவு சந்தேகம் உங்களுக்கு?” என்று வினவினாள் வைகைமாலை.
“சந்தேகப்படுவதற்கு எத்தனையோ இருக்கின்றன. அவளுடைய வாழ்க்கை விவரம் முழுதும் உனக்குத் தெரியுமா? இந்த இளம் வயதில் அவள் ஏன் இத்தகைய துறவுக் கோலம் பூண வேண்டும்? அதுவே எனக்குப் பெரிய சந்தேகமா யிருக்கிறது.
“உங்களுடைய சந்தேகம் நியாயமானதுதான். அவளைப் பற்றிய வரலாறுகளெல்லாம் எனக்குத் தெரியும். ‘அலையூர் கக்கை’ என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரசித்தி பெற்ற நாட்டிய கணிகையாகத் திகழ்ந்தாள். அவளைப் பற்றிய அநேக கதைகள் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வேத்தியல் கூத்து ஆடுவதிலும் தேவாலயங்களில் சாக்கைக் கூத்து ஆடுவதிலும் அவளைப் போன்ற திறமைசாலிகள் அந்தக் காலத்திலும் இல்லை. இந்தக் காலத்திலும் இல்லை என்று பேசிக் கொள்வார்கள். அவளுடைய கொள்ளுப் பேத்திதான் இவள். இவள் பெயர் மாலவல்லி, இவளைப் போலப் பாடுகிறவர்கள் இந்தக் காலத்தில் இல்லை யென்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். இனிமேல் யாரேனும் பிறந்தாலும் பிறக்கலாம். இவளுடைய தாயும் என்னுடைய தாயும் நெருங்கிய தோழிகள். இதன் காரணமாகவே நானும் இவளும் நெருங்கிய நட்பு கொண்டவர்களாகி விட்டோம். இவள் இந்த வேளையில் தர்மத்தை மீறிப் பௌத்த விஹாரத்திலிருந்து இங்கு வருவாளானால், அது எனக்காகவும், உயர்த்த சங்கீதத்துக்கு உயிர் கொடுப்பதற்காகவும் தான். இதைத் தவிர இதில் ரகசியம் வேறு எதுவுமில்லை. இதைஉளவு கண்டு பிடிப்பதனால் உங்களுக்கு ஒரு லாபமும் ஏற்படப் போவதில்லை” என்றாள் வைகைமாலை.
“வைகைமாலா! உன்னுடைய பேச்சு இனிமையாக இருக்கிறது. ஆமாம்! னுடைய இதயம் கபடமற்ற இதயம். உன்னைப் போன்ற பெண் உலகில் எதையும் எளிதாக நம்பி விடுவார்கள் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவள் அலையூர் கக்கையின் கொள்ளுப்பேத்தி எனத் தெரிந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவள் சிறந்த பாடகி என்று அறிந்து கொண்டதிலும் எனக்குச் சந்தோஷம். ஆனால் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் எல்லாம் இவை அல்ல. நான் தெரிந்துகொள்ள வேண்டியது வேறு; இந்த இளம் வயதில் அவள் ஏன் துறவுக்கோலம் பூண வேண்டும். என்பதுதான்? அவளிடம் மனத்தைக் கவரும் அழகு இருக்கிறது. அதோடு நெஞ்சையள்ளும் இசைக்கலையும் இருக்கிறது. இப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கையில் என்ன வெறுப்பு ஏற்பட்டிருக்கும்…? ஏன் இந்தக் கோலம் பூண்டு திரிய வேண்டும்?” என்றான்.
இதைக் கேட்டதும் வைகைமாலைக் சிறிது குழப்பம் ஏற்பட்டது. வைகைமாலை சிறு குழந்தையாய் இருக்கும் காலத்தில்தான் அவளுக்கும் மாலவல்லிக்கும் நட்பு ஏற்பட்டது. வைகை மாலையின் தாய் பல்லவ மன்னரின் ராஜ சபையில் ஒரு நாட்டியக் கணிகையாகச் சேவை செய்தபோது வைகைமாலை சில வருடங்கள் காஞ்சியில் போய்த் தங்கி இருக்க நேர்ந்தது. அப்பொழுது பல்ல சபையில் சிறந்த பாடகியாகத் திகழ்ந்த மாலவல்லியின் தாய்க்கும் வைகைமாலையின் தாய்க்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஆனால் திடீ ரென்று வைகைமாலையின் தாய் இறந்து விடவே, அவளும், அவள் சகோதரி சுதமதியும் காவிரிப் பூம்பட்டினத்தில் தங்கள் பாட்டியிடமே வந்து வசிக்க நேர்ந்தது. இதன் காரணமாக, மாலவல்லியோடு பல வருஷங்கள் அவளுக்குத் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு நாள் வைகைமாலை பௌத்த விஹாரத்துக்குத் தரிசனத்துக்குச் சென்றிருந்த போது அங்கு பிக்ஷுணிக் கோலத்தில் மாலவல்லியைப் பார்த்தாள்.
சிறுவயதில் அவளைப் பார்த்தவளே ஆயினும் இப்பொழுது அவளை யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடித்தது. மாலவல்லியை ஒருநாள் தன் வீட்டுக்கு வரும்படி, வைகைமாலை வேண்டிக் கொண்டாள். மாலவல்லி தன்னுடைய பால்ய சிநேகிதையாகிய வைகைமாலையின் வேண்டு கோளுக்கு இணங்கி ஒருநாள் அவள் வீட்டுக்கு வந்தாள். அந்தச் சமயம் வைகைமாலை பிக்ஷுணிக் கோலம் பூண்டதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தாள், மாலவல்லி தான் துறவுக் கோலம் பூண்டதற்குச் சரியான கார ணங்கள் எதுவும் கூறவில்லை. மணி மேகலையைப் போல் உண்மையாக உலகத்தின்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தான், பிக்ஷுக்கோலம் பூண்டதாகச் சொன்னாள்.
வைகைமாலை அவளிடம் மேலும் சில சமயங்களில் நிர்ப்பந்தித்துக் கேட்ட போது உலகத்தில் இன்பம், செல்வம், இளமை, சுகம் போன்றவைகளின் நிலையாமையைப் பற்றி எடுத்துக் கூறத் தொடங்கினாள். வைகைமாலையும் அவளுடைய இனிமையான வார்த்தைகளில் மயங்கி அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டாள். அதன் காரணமாக மாலவல்லியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று. நாளாக ஆக மாலவல்லி ஏன் துறவுக்கோலம் பூண்டாள் என்பதைக் கிளறிக் கேட்கும் நோக்கம் அவளுக்கு இல்லாமல் போய் விட்டது. உண்மையாகவே ஏன் அவள் துறவு மனப்பான்மையோடு பெளத்த சங்கத்தில் சேர்ந்திருக்கக் கூடாது வைகைமாலைக்குத் தோன்றியது. ஆனால் உலகில் எதிலும் பற்றுதல் கொள்ளாதவள்போல் இருந்த மாலவல்லி பௌத்த சங்க விதிகளை மீறி ஒருவருக்கும் தெரியாமல் இரவு வேளைகளில் வைகைமாலையின் வீட்டை நாடி வந்து, கீதம் பாடுவதில் ஏற்பட்டிருக்கும் அடங்காத இச்சையும் மோகமும் வைகைமாலைக்குச் சில சமயங்களில் பேராச்சரியத்தைக் கொடுப்பதுண்டு.
சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களிலிருந்து ரசமான பகுதிகளை எடுத்து அழகாக இசையமைத்துப் பாடியது புத்த மகத்தின் மேல் அவளுக்குள்ள பக்தியையும் பற்றுதலை யும் காட்டியது. ஒரு பௌத்த பிக்ஷுணி இசைக் கலையில் பற்று தல் கொண்டு பாடுவது தர்ம விரோதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? எப்படியோ பூதுகன் மாலவல்லியைப் பற்றிய சந்தேகத்தைக் கிளப்பி விட்டது வைகைமாலையின் மனத்தில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ‘உண்மையாகவே மாலவல்லியின் வாழ்க்கையில் ஏதேனும் ரகசியம் புதைந்து கிடக்குமோ?’ என்ற எண்ணம் வைகைமாலைக்கு ஏற்பட்டது. அவள் குழப்பத்தினிடையே “நீங்கள் சொல்லிபபடியே மாலவல்லியின் வாழ்க்கையில் ஏதேனும் ரகசியம் இருக்கலாம். எனக்கும் அந்தச் சந்தேகம் ஆரம்பத்தில் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவளோடு பழகப் பழக அந்தச் சந்தேகம் என் மனத்திலிருந்து நீங்கிச் சாதாரணமாகவே அவள் துறவறத்தை விரும்பி ஒரு பௌத்த பிக்ஷணி ஆகியிருக்கிறாள் ஆகியிருக்கிறாள் என்ற எண்ணத்தில் இருந்து விட்டேன், நீங்கள் சொல்லியதன் பேரில் தான் எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் இந்தத் துறவறத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவள் புத்த சங்கத்தில் சேர்ந்து ஒரு பிக்ஷுணியானபின் அவள் ஏதேனும் ரகசியமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவளாக எனக்குத் தோன்றவில்லை” என்றாள்.
“உனக்குத் தோன்றாமற்போனதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் நானும் அவளைப் பற்றித் திடமாக எதுவும் சொல்வதாக நினைத்துக் கொள்ளாதே. அவள் இங்கு வருவதை உளவு பார்க்கிறான் ஒரு பிக்ஷு. அவனை உளவு பார்த்துக் கொண்டு இங்கு நான் வந்தேன். பொதுவாகவே சொல்லுகிறேன், வைகைமாலா! சாம்ராஜ்ய நோக்கத்தில் ஈடுபடும் சூழ்ச்சிக்காரர்களெல்லாம் துவராடைக்குள் புகுந்துகொண்டு பல விதமான சூழ்ச்சிகளெல்லாம் செய்வதற்குப் பௌத்த சங்கங்கள் நிலைக்களமாகி விட் டன என்ற வருத்தம் தான் எனக்கு. அந்த பிக்ஷு ஏதோ அரசியல் நோக்கம் கொண்டு தான் பௌத்த சங்கத்தில் சேர்ந்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அவனை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறது. அது எனக்குச் சரியாக விளங்க வில்லை. அவன் இவளுக்கு விரோதமாக இவளைக் கவனிப்பதிலே யே நோக்கம் கொண்டவனாக இருப்பதால் இவளும் ஒரு அரசை ஸ்தாபிச்சுவோ, அல்லது ஒரு அரசை வீழ்த்தவோ பாடுபடும் ஒருத்தியாகத்தானே இருக்க வேண்டும்? இவள் உன் வீட்டுக்கு வருவது அத்தகைய நோக்கத்தோடு இருக்கலாம்!”
இதைக் கேட்டதும் வைகைமாலையின் சந்தேகமும் குழப்பமும் அதிகமாகி விட்டன. “நீங்கள் சொல்லிய பிறகு எனக்கும் சந்தேகத்தின் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் நான் சில புத்திபிசகான காரியங்கள் செய்து விட்டேன். மறுபடியும் இந்நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று எனக்குள்ள ஆர்வத்தை அடிக்கடி என் பேச்சின் மூலம் அவளிடம் எடுத்துக்காட்டி விட்டேன்!”
”அப்படியா! அதனால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை. ஆனால் என்னைப் பற்றி நீ அவளிடம் ஒன்றும் சொல்லி விடவில்லையே ?”
“உங்களைப் பற்றிச் சொல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும். எப்பொழுதும் உங்களைப் பற்றிய நினைவாகவே நான் இருக்கும்போது?”
“என்னைப்பற்றி அவளிடம் சொல்லி விட்டாயா? நம்முடைய காதல் விவகாரங்கள் மட்டும் தானே அவளுக்குத் தெரியும்? நான் இங்கு எதற்காகப் பாடு படுகிறேன், என் லட்சியம் என்ன என்ற ரகசியமும் அவளுக்கு…”
“…அதெல்லாம் தெரியாது. உங்கள் மீது எனக்குள்ள அன்பைத்தான் நான் அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறேன். அதைத் தவிர நீங்கள் பெரிய நாஸ்திகர் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறேன்.”
“பிழைத்தேன். நீ உன்னுடைய ஆர்வத்தில் என்னுடைய ரகசிய நடவடிக்கைகளை யெல்லாம் சொல்லி விட்டாயோ என்ற பயம்தான் எனக்கு. நீ இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த சௌந்தர்யவதி என்று மட்டும்தான் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் நீ இந்த உலகிலேயே மிகவும் சிறந்த புத்திசாலி என்ற உண்மையையும் தெரிந்து கொண்டு விட்டேன். உன்னைக்காதலியாக அடைந்தவன் சோழ சாம்ராஜ்யத்தைப் போல் ஒரு சாம்ராஜ்யமல்ல, முந்நூறு சாம்ராஜ்யங்களை ஏற்படுத்தவும் ஏற்படுத்தலாம்! நினைத்தால் அழிக்கவும் அழிக்கலாம்” என்றான், அவளுடைய கன்னத்தை மெதுவாகத் தட்டியவாறு.
“வீணாகப் பரிகாசம் செய்யாதீர்கள். நீங்கள் முந்நூறு சாம்ராஜ்யங்களையும் ஏற்படுத்தவும் வேண்டாம்; அழிக்கவும் வேண்டாம். ஒரே ஒரு சோழ சாம்ராஜ்யத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உங்களால் ஆன முயற்சிகளை யெல்லாம் செய்யுங்கள். அது போதும்” என்றாள் வைகைமாலை.
“ரொம்ப சரி, முந்நூறு சாம்ராஜ்யங்கள் வேண்டாமென்றால் எனக்குச் சிரமம் குறைவு. சோழ சாம்ராஜ்யத்தை மட்டும் எப்படியாவது ஏற்படுத்தி விடுகிறேன். அதிருக்கட்டும்-நீ இந்நாட்டில் சோழ அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற வார்த்தைகளைச் சொல்லும் போது அவள் உன் அபிப்பிராயத்துக்கு ஆதரவாகப் பேசுகிறாளா? அல்லது அதற்கு எதிர்ப்பாகப் பேசுகிருளா?”
“அவளும் என் வார்த்தைகளை ஆதரித்துத்தான் பேசுகிறாள். அதை நினைக்கும் போது அவள் நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறவள் என்று தோன்றவில்லை?”
“வைகைமாலை. நீ களங்கமற்ற உள்ளம் படைத்தவள். எல்லாவற்றையும் நம்புகிறாய். உளவு பார்த்து எதிரிகளை ஒடுக்க வேண்டும் என்று நினைப் பவர்கள். எதிரிகளின் கொள்கைகளைத் தாங்களும் ஆதரிப்பது போல் நடித்தால்தான் அவர்களிடமிருந்து இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்ற சூழ்ச்சியோடு காரியம் செய்பவர்களாய் இருப்பார்கள். பிறர் மாத்திரம் அல்ல. நானும் அப்படித்தான். இன்று மாலை நான் சம்பாதிவன புத்த விஹாரத்துக்குச் சென்றபோது அங்கொரு பௌத்த பிக்ஷவுடன் நெருங்கி அவருக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பேசிப் பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டேன். அதைப் பற்றிப் பின்னால் உனக்கு விவரமாகச் சொல்கிறேன். இப்பொழுது நீ எப்படி மாலவல்லி யிடமிருந்து விஷயங்களைக் கிரகிப்பாய் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவள் என்னோடு பேசுவாளா? பேசினால் கொஞ்சமாவது அவளைப் பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்..?” என்று வைகைமாலையிடம் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது புத்தபிக்ஷுணியாகிய மாலவல்லி வந்து நின்றாள்.
ஒன்பதாம் அத்தியாயம்
மாலவல்லியின் காதலன்
பூதுகன் தன் காதலியோடு தனித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் வேறொரு பெண் அங்கு வந்து நிற்பது பூதுகனுக்கு மிகவும் விநோதமாகப் பட்டது. அவள் துறவறம் பூண்ட பௌத்த பிக்ஷுணியாகவே இருப்பினும் காதலர்கள் தனித்திருக்கும் இடத்தில் வந்து பிரவேசிப்பது பண்புள்ள காரியமாக அவனுக்குப் படவில்லை. ஒருவேளை மாலவல்லி எங்கேனும் ஒளித்திருந்து தானும் வைகைமாலையும் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை ஒட்டுக் கேட்டு அறிந்திருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அப்பொழுது அவள் அங்கு வந்ததையும், ஏதேனும் ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று விரும்பினான்.
மாலவல்லி அங்கு வந்தது, வைகைமாலைக்கும் சிறிது வியப்பை அளித்தது. ஒரு பெண் தன் காதலனோடு பேசிக் கொண்டிருக்கும் போது வேறொருவர் குறுக்கிடுவது அழகாகாது என்பதைத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்களால் உணர முடியாது போலிருக்கிறது என நினைத்தாள். இருப்பினும் தன் காதலரைக் கண்ட ஆர்வத் துடிப்பில் மாலவல்லியைத் தான் மறந்து விட்டது தன்னுடைய பிசகும் கூட என்று உணர்ந்தாள். அவன் சிறிது வெட்கம் நிறைந்த குரலில், “பகவதி! மன்னிக்க வேண்டும். இவர் என்னோடு தனித்துப் பேச வேண்டுமென்று விரும்பியதால் உங்களை மறந்து விட்டேன்” என்றாள்.
பொருளை ஒருநாளும் அடைய முடியாது. அவர்கள் வெறும் மோகத்தால் பீடிக்கப்பட்டு அலைந்து அல்லல் படுவார்கள்’ என்பது ததாகதரின் மெய் மொழி” என்றாள் மாலவல்லி.
”அதனால் பாதகம் இல்லை, வைகை மாலை! நான் உனக்காகச் சிறிது நேரம் வெளியே காத்திருந்தேன்.நடு நேர மாகி விட்டது. நான் போக வேண்டு மல்லவா? அதனால் உன்னிடம் சொல் லிக் கொண்டு போகலாம் என்று வத்லிய தேன் ” என்றாள் மாலவல்வி.
அவள் முகத்தில் வெட்கமும் நாணமும் சிறிது தாண்டவமாடின. வைகைமாலை அவளுக்கு ஏதோ சொல்ல நினைப்பதற்கு முன், பூதுகன் மாலவல்லியிடம், “பகவதி! உங்களைப் போன்றவர்களெல்லாம் இரவு வேளைகளில் இப்படிப்பட்ட இடங்களுக்கு வர தர்மம் இடம் கொடுக்கிறதா?” என்று கேட்டான்.
இந்த வார்த்தையைக் கேட்டதும் பிக்ஷுணி மாலவல்லியின் முகத்திலிருந்த நாணக் குறி மறைத்து பரபரப்பு உணர்ச்சி ஏற்பட்டது. ”இங்கு தர்மம் அதர்மம் என்பதெல்லாம் சில காரியங்களுக்காக எழுதி வைக்கப்பட்டவை. புத்தகங்களில் எழுதிவைக்கப்பட்ட தருமங்களையே எல்லாச் சமயங்களிலும் தருமங்களாகக் கொள்ள முடியாது. ஒருவருக்கு நன்மையென்று தோன்றியதை அஞ்சாமல் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பம் அடையுமோ, அதன் பயனை உள்ளக் களிப்போடு அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல் அதோடு மட்டுமல்ல: தருமம் என்று சொல்லப்பட்ட சில விதிகளைச் சில சமயம் நல்லதற்காகத் துறக்கவும் நேரிடலாம். ‘மனிதனை மனோதர்மமே உருவாக்குகிறது. சிந்தனைகளே அதன் அடிப்படை. சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகிறது. மனிதன் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் செயல் புரித்தாலும் நிழல் தொடர்ந்து செல்வதுபோல் இன்பம் அவனைத் தொடர்ந்து செல்கிறது. ‘பொய்யில் மெய்யைக் கற்பனை செய்து கொண்டு, மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையோர். மெய்ப்பொருளை ஒரு நாளும் அடைய முடியாது. அவர்கள் வெறும் கோகத்தால் பிடிக்கப்பட்டு அலைந்து அல்லல் படுவார்கள்” என்பது ததாகத்தரின் மே மொழி” என்றாள் மாலவல்லி.
“பகவதி! உங்களுடைய வார்த்தைகள் எல்லாம் மிகவும் இனிமையாகத் தான் இருக்கின்றன. ததாகதர் சொல் ஒவ்வொன்றையும் உணர்ந்து அதன் படி நடப்பதென்று உறுஓ கொண்டிருந்தால் இப்படிப் பௌத்த விஹாரங்கள் எல்லாம் சாம்ராஜ்யச் சூழ்ச்சிக்காரர் களே நிறைந்திருக்கக் கூடிய இடமாகி இருக்காது. பகவதி! உங்களுடைய கொள்கைகள் மிகவும் பிடித்திருக்கின்றன. ஆனால் மற்றவர்கள் பெளத்த பிக்ஷக்களுடைய தர்மங்களை மாத்திரம்விவரிக்கும் நூல்களைப் படித்து விட்டுச் சிந்திக்கும் திறன் இல்லாமல் ஊழல்களை வளர்த்துக் கொண்டு போகிறார்கள். பகவதி! தாங்கள் காஞ்சியிலிருந்து பூம்புகார் புத்த விஹாரத்துக்கு வந்த காரணம் என்னவோ? என்றான் பூதுகன் மெதுவாக.
“காஞ்சியை விடப் பூம்புகார் மன நிம்மதியை அளிக்கும் இடமாகப் பட் டது. தவிர, சில தகாதவர்களிடையே என்னைப் போன்ற பிணி வசிப்பது கடினமாக இருக்கிறது. அதனால்தான் இங்கு வந்தேன். நாழிகையாகி விட்டது. நான் போகிறேன். இன்று உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் மறுபடியும் இந்நாட்டில் உன்னதமான சோழ சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்று பாடுபடும் உங்களுக்குப் புத்தர் பெருமானின் அருள் கிடைக்கட்டும். நான் சென்று வருகிறேன்” என்றாள். வைகைமாலையைப் பார்த்து, ‘சென்று வருகிறேன்’ என்பது போல் தலையை ஆட்டி விட்டு மெதுவாக நடந்தாள் மாலவல்லி.
அவள் சென்ற பின் சில நிமிட நேரம் அங்கே இருள் சூழ்ந்திருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவன் போல் இருந்த பூதுகன், ” வைகைமாலை! நாட்டில் இன்று நிலவும் பிரபல மதங்களின் மூல புருஷர்களின் உன்னத நோக்கங்களுக்கும் இன்று நடக்கும் இந்த மதவாதிகளின் போராட்டத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது, பார்த்தாயா? களங்கமற்ற அழகு நிறைந்த புத்தரின் திருவுருவத்தையும், கம்பீரமும் சாந்தமும் நிறைந்த வாத்தமான மகாவீரரின் திருவுருவத்தையும் நாம் மனக்கண்ணால் நினைத்துப் பார்க்கும் போது ஏற்படும் சாந்தி சில போலி மதவாதிகளின் கூச்சல்களையும், துவேஷ உணர்ச்சி நிறைந்த நடத்தைகளையும் நினைத்துப் பார்க்கும் போது எப்படிச் சின்னாபின்னமாகச் சிதைந்து விடுகிறது? போகட்டும், ஒரு விஷயம் இன்று மாலவல்லியால் என்க்கு விளங்கியது. ‘வைகை மாலா? எளியமுறையில் பிக்ஷணிவேடம் தாங்கி இருக்கும் இந்த மாலவல்லியின் வாழ்க்கையின் பின்னணியில் ஒரு ரசமான பெரிய கதை இருக்கிறது என்பது எனக்கு விளங்கி விட்டது. இவளைத் தொடர்ந்து வந்த பௌத்தத் துறவியை எங்கேயோ நான் பார்த்த ஞாபகமாக இருக்கிறது. இப்பொழுது அவள் சொல்லியதிலிருந்து தான் அவனும் காஞ்சியைச் சேர்த்தவன் என்பதை அறிந்து கொண்டேன். நான் எப்பொழுதோ அவனைக் காஞ்சியில் பார்த்தேன் என்ற நினைவு எனக்கு ஏற் பட்டுவிட்டது. அவன் புத்தத்துறவியாவ தற்கு முன்னால் தீவிர சமணவாதியாக இருந்தான். அவன் ஜினகிரிப் பள்ளியி லுள்ள வர்த்தமான பேரடிகளின் சிஷ் யன்-அவன் பெயர் ரவிதாசன். அவனைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். ஆனால் என்னைப் பற்றி அவனுக்குத் தெரிய நியாயமில்லை. இன்று உள்ளத நிலையில் இருக்கும் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கி இருக்கும் சிற்றரசர்களில் எவர் சுரைக் கவிழ்க்கலாம், எவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்கிற குழ்ச்சியி லேயே எப்பொழுதும் ஈடுபட்டிருப்ப வன், சூழ்ச்சி வலை பின்னுவதிலே அவனுக்கு நிகர் அவனே தான்! மால வல்லிக்கும் இந்த ரவிதாசனுக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக் சுத்தான் வேண்டும். மாலவல்லிக் காகவேதான் அவன் மதம் விட்டு மதம் மாறிக் காஞ்சியிலிருந்து பூம்புகார் வந்திருக்க வேண்டும் ‘” என்றன்.
இப்பொழுதுதான் எனக்கும் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளி வாகின்றன. மாலவல்லி இத்தகைய காரியங்களில் ஈடுபட்டவளாய் இருப்பி னும் அவளுடைய உயிருக்கோ அல்லது கண்யத்துக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன்என்றால் இதில்சாம்ராஜ்ய ஆசை மாத்திரம் இருக்குமென்று நான் நம்பவில்லை. இத்தகைய அழகு நிறைந்த யௌவன மங்கைக்குக் களங்கம் ஏற் படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள தூர்த்தரும் இந்த உலகத்தில் இருப்பார்கள் அல்லவா?” என்றாள் வைகைமாலை.
“அப்படியும் நினைப்பதற்குக் காரணம் உண்டு. ஆனால் ரவிதாசனுக்கு அத்தகைய நோக்கம் இருக்குமென்று நான் கருதவில்லை. அவள் மீது அவனுக்கு இச்சை இருந்தால் வேறு வழியில் முயற்சிப்பானே தவிர அவள் மீது குற்றம் கண்டு, அந்தக் குற்றத்துக்காக அவளைப் பௌத்த சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதில் சிரத்தை உள்ளவனாக இருக்க மாட்டான். மாலவல்லி இரவு வேளைகளில் உன் வீட்டுக்கு வருவதை ஒளிந்திருந்து பார்த்து அவள் மீது இந்தக் குற்றத்தைச் சொல்லி அவளைப் புத்தசங்கத்தில் வைத்து விசாரணை செய்து அங்கிருந்து வெளியேற்றி விடப் பார்க்கிறன், இன்று மாலை புத்த விஹாரத்தில் பூசை நடக்கும் வேளையில் இவள் புத்த பெருமானின் பொன்னடிகளில் மலர்களைச் சமர்ப்பிக்க அருகதையற்றவள் என்று கூச்சலிட்டு அந்தச் சபையில் அவளை விசாரணைக்கு உட்படுத்தி அவமானப்படுத்த நினைத்தான். ஆனால் மகா உத்தமராக விளங்கும் அக்கமகாதேரர் அதைத் தடுத்து, ‘நாளை மறுதினம் பௌர்ணமியன்று நடக்கப் போகும் ‘பாடிமோஹ்ஹத்தில்’ விசாரிப்போம்‘ என்று சமாதானப்படுத்தி அடக்கி விட்டார். நிச்சயம் நாளை மறு தினம் மாலவல்லி குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுவாள். அதன் முடிவு என்னவாகுமோ, தெரியாது. அதற்குள் எத்தகைய மாறுதல்கள் எல்லாம் ஏற்படுமோ? எனக்கு இப்பொழுது கூடப் பெருஞ் சந்தேகம், மாலவல்லியைப் பின்தொடர்ந்து வந்த பிக்ஷ இவள் திரும்புகையில் எங்கேனும் மறைந்திருந்து இவளை வழிமறித்து இவளை ஏதோ கையும் களவுமாய்ப் பிடித்தவனைப் போலக் கலவரம் செய்து அவமானப்படுத்தி விடுவானோ என்று. அதோடு இவள் புத்த விஹாரத்திலிருந்து வெளி வந்ததையும், இவளைப் பின் தொடர்ந்து ரவிதாசன் வந்ததையும் பிக்ஷு வேடத்தில் இருக்கும் வேருெரு வஞ்சகனும் பார்த்திருக்கிறன். அவன் சாதாரண மனிதன் இல்லை. எங்கேனும் கண்காணாத இடத்தில் சோழ வம்சத் தின் சிறு பூண்டு எழுத்தாலும் கிள்ளி எறிந்து விட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். நீ திகைப்படையாமல் இருந்தால் அவன் பெயரையும் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான் பூதுகன்,
”அவன் யார் ?” என்று கேட்டாள் வைகைமாலை துடிப்போடு. ‘அவன் யார்….’ என்று நடிப் போடுகேட்ட வைகைமாலையின் உணர்ச்சியைப் பூதுகன் உணர்ந்து கொண்டானாயினும் கொஞ்சம்அமைதியாகவே, ”அவன் வேறு யாரும் இல்லை. தஞ்சை மன்னன் மாறன் முத்தரையரின் சேனாநாயகன், அவன் பெயர் கலங்க மாலரையல், போர்முகத்தில் நின்று வெற்றி பெற வேண்டியவன். இன்று புத்த பிக்ஷு வேடம் தாங்கி முத்தரையரின் அரசைக் காப்பாற்ற நினைக்கிறன். கொடும்பாளூர் வீரர்களின் வாள் வலிமைக்குப் பயந்து அவன் பூம்புகார், புத்த விஹாரத்தைப்புகலிடமாகக் கொண்டிருக்கிறான்” என்று கூறினான்.
இதைக்கேட்டதும் வைகை மாலை மிக்க கலக்கம் அடைந்தவளாய், “அப்படியா? மாலவல்லி இங்கு வந்து போகிறாள் என்பதை அறிந்தாலே இவளுக்கு இன்னல் விளைவிக்க அவன் முயற்சிப்பாள். நாங்கள் சோழ வம்சத்தினரிடம் எத்தகைய பற்றுள்ளவர்கள் என்பதைக் கொடும்பாளூர் அரசர்கள் எங்களுக்குச் செய்யும் மரியாதையிலிருந்து இவன் நன்கு உணர்ந்து கொண் டிருப்பான், மாலவல்லி இந்த வீட்டுக்கு வருவதை அவன் அறிந்தால் அவள் மீது சந்தேகம் கொண்டு அவளுக்குத் தீங்கு செய்ய நினைத்தாலும் நினைப்பாள், மாலவல்லி எவ்வித இடையூறுமில்லாமல் புத்தவிஹாரத்துக்குச்சென்றிருப்பாளா என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. நீங்கள் இனியும் இங்கு தாமதிக்க வேண்டாம். நாம் அப்புறம் பேசிக் கொள்ள லாம். நீங்கள் இப்பொழுதே புறப்பட்டு வேகமாகப் போய்ப பார்த்து விட்டு வாருங்கள் ‘” என்றாள்.
அவளுடைய பதற்றத்தையும் திகிலை யும் பார்த்த பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டான். “எது நடந்தாலும் விடிந்தால் தெரிந்து விடும். உன் மாலவல்லிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டு விடும் என்று நான் நினைக்க வில்லை, உன்னைப் போல் அல்ல அவள். எத்தகைய ஆபத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் சாமாத்தியம் அவளிடம் இருக்கிறது என்று தான் நான் கருதுகிறேன். வைகை மாலா! நெடு நாட்களுக்குப் பின் இப்படி இங்கு வந்த என்னை நீ விரட்டி அடிக்காதே. இந்த வைகாசி மாதத்துப் பூர்வபக்ஷத்துச் சந்திரன் நமக்கு இன்பம் அளிப்பதற்காக வானில் வந்து காத்து நிற்கிறான். இந்த உன்னத மாளிகையின் மேன் மாடத்தில் உல்லாசக் கூடம் நம்முடைய வரவை எதிர்நோக்கி அந்த நிலவொளியில் அமிழ்ந்து கிடக்கிறது. நமக்காக மலர் மணத்தை வாரி வரும் தென்றல் காற்று அடிக்கடி மேன் மாடத்தில் வந்து பார்த்து நாம் இல்லாதிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து விடுகிறது. உன் மனோதர் மத்தை அறியாத உன் இளமை எழில் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் வாட்டம் அடைந்து கொண்டே வருகிறது.அடங்காத ஆசை அலை மோதும் என் உள்ளம் அவ்வாசையிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே போகிறது. இரவும், நிலவும், இளங்காற்றும், எழில் மணமும் இளமையின் துடிப்பும் எல்லாம் வீணகும்படி வாழ்வதுதானா வாழ்க்கை? இத்தனை இன்பங்களும் காத்திருக்க இன்று கிடைத்தபொழுதை வீணாக்கினால்நாளை எப்படியோ? வைகைமாலா? வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்க வேண்டிய காலங்களைத் தவற விடுவது போன்ற பெரு நஷ்டம் வேறு எதிலும் இல்லை. இந்த இளமைப் பருவத்தில் எழும் உணர்ச்சி முதுமைப் பருவத்தில் திரும்பி வருவதில்லை. இப்பொழுது நாம் அனுபவிக்கும் இன்பமோ, அனுபவிக்க வேண்டிய இன்பமோ முதுமைப் பருவத்தில் நமக்குச் கிட்டுவதில்லை. இன்று அனுபவிக்க வேண்டியதை எதற்காகவோ நாளைக்கு ஆகட்டும் என்று விட்டுவிட்டால் அதை வாழ்வின் நஷ்டக்கணக்கிலே தான் எழுத வேண்டும்” என்றான்.
வைகைமாலை சிறிது கோபமும் பரிவும் நிறைந்த குரலில் பேசினாள்: “வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் லாப நஷ்டக் கணக்கில் வைத்துப் பேசும் ஒரு கொள்கைதான் எனக்கு விநோதமாய் இருக்கிறது. வாழ்வில் லாபம் என்று கருதுவதெல்லாம் வெறும் மாயை. நஷ்டம் என்று கருதுவதும் அப்படியே. உங்களைப் போன்ற இன்ப வேட்கையில் ஈடுபட்டவர்களுக்குச் சிற்றின்பத்தை அனுபவிப்பது ஒரு லாபம். அதைப்போல் துறவு வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்குப் பேரின்பத்தை அனுபவிப்பது ஒரு லாபம். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும். நீங்கள் இன்ப சுக போகங்களை விட்டுத் துறவு பூணுவதில் வாழ்க்கையில் நஷ்டம் என்கிறீர்கள். துறவு வேட்கையில் நாட்டங் கொண்டவர்கள் இன்ப வேட்கையில் நாட்டம் செலுத்திய ஓவ்வொரு நாளும் வாழ்க்கையில் நஷ்டம் என்று கருதுகிறார்கள். நான் சொல்லுகிறேன்-வாழ்க்கையின் அனுபவங்களை லாப நஷ்டங்களாகக் கருதினாலும் இன்று நஷ்டமாகக் கருதுபவற்றை நாளை அனுபவிக்கப் போரும் பெரும் லாபத்தை உத்தேரித்துத்தான் நஷ்டமடைந்தோம் என்று கருத வேண்டும். இப்படி உங்களோடு பேசிக் கொண்டே போனால் பேச்சு வளரும். நீங்கள் என் வார்த்தையைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு அடிமைப்பட்டவள் நான். நம்முடைய சுகத்தையே நாம் பெரிதாகக் கருதக் கூடாது. மாலவல்லியின் நிலை எப்படியோ? அதை நான் அறிந்து கொள்ளும் வரையில் என் மனம் நிம்மதி அடையாது. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். நீங்கள் உடனே போங்கள். நான், இந்த இரவு – அதைச் சோபிக்க வைக்கும் நிலவு- இந்த நிலவொளியில் தவழ்ந்து வரும் காற்று – இவைகளில் அமிழ்த்திருக்கும் உல்லாசக்கூடம்-மனத்துடிப்பு எல்லாம் அப்படியே இருக்கும். இன்று இல்லா விட்டால் நாளை திரும்பி வரும். ஆனால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளில் சிறிது தவறி விட்டோமேயானால் இதனால் ஏற்படப் போகும் இடையூறுகளுக்காக நாம் பின்னால் வருந்தும்படி நேரிடலாம். நீங்கள் இப்பொழுதே போங்கள். மாலவல்லியின் கதி என்ன ஆகுமோ?” என்று துடித்தாள்.
பூதுகன் அதற்கு மேலும் அவ்விடம் நின்றால் வைகைமாலையின் கோபமும், வருத்தமும் அதிகமாகும் என்பதை உணர்ந்து அவள் வார்த்தைக்கு இணங்கிப் புறப்படத் தீர்மானித்தான். “சரி, நான் போகிறேன். இரவு எந்நேரத்தில் வேண்டுமானாலும் வந்து கதவைத் தட்டுவேன். திறக்கத் தயாராயிரு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் பட்டினப்பாக்கம் மருவூர்ப் பாக்கம் இவைகளைத் தாண்டி. மிகவும் வேகமாக நடந்து கடற்கரையை அடைத்தான். அவன் கடற்கரையோரமாக நடந்து சம்பாதிவன விஹாரத்தை நோக்கிச் சென்றபோது கடற்கரையில் கலங்கரை விளக்கத்துக்குச் சமீபமாக இரண்டு உருவங்கள் ஒன்றை யொன்று ஒட்டினாற் போல் நடந்து செல்வதைக் கண்டான். சட்டென்று அவனுடைய வேகத்தில் தளர்ச்சி ஏற்பட்டது. அவன் இருந்த இடத்துக்கும் அந்த உருவங்கள் இருந்த இடத்துக்கும் சுமார் நூறு கஜ தூரமாவது இருக்கும். அந்த உருவங்கள் அவன் கண்களுக்குச் சரியாகத் தெரிய வில்லையாயினும் அவை ஒரு ஆணும் பெண்ணும்தான் என்பதை அவனால் எளிதில் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் யாரோ இளங் காதலர்களாக இருக்கக் கூடும் என்று எண்ணி அலட்சியமாக விட்டு விட்டுச் செல்ல அவனுக்கு மனம் இல்லை. அவன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுத்தாடின. ஒரு வேளை அவள் மாலவல்லியாக இருக்குமோ என்ற சந்தேகம்தான் அவனுடைய குழப்பத்திடையே முன்னணியில் வந்து நின்றது. இந்தச் சந்தேகம் அவன் மனத்தில் வலுக்கவே அதைக் கண்டறிந்து விட நினைத்தான். சம்பாதிவனத்தை தோக்கி நடந்து கொண்டிருந்த அவனுடைய கால்கள் சட்டென்று கலங்கரை விளக்கத்தை நோக்கி அதிவேகமாக நடக்கத் தொடங்கின. இளம் காதலர்கள் தன்னுடைய வரவைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அவன் மனத்தில் அப்பொழுது ஏற்படவில்லை. அவர்களைப் போலத் தானும் கடற்கரைக்கு உலாவ வந்தது போல அப்படியே அந்த வழியாகச் சென்று அவர்கள் யாரென்று பார்ப்பதில் பிசகில்லையல்லவா?
அவன் கலங்கரை விளக்கத்தை நெருங்கிய போது அவர்கள் அந்த ஸ்தூபிக்குச் சிறிது தூரத்துக்கு அப்பால் அமர்ந்து ஏதோ உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்ததும் அவனுடைய சந்தேகம் தெளிவாகியது. அவன் நினைத்தபடியே அவள் மாலவல்லிதான். ஆனால் அவன்?… அவனைப் பூதுகன் இதுவரை பார்த்ததில்லை. அதோடு மட்டுமல்ல. இவ்வளவு அழகான வாலிபனை அவன் இதுவரை எங்கும் பார்த்ததேயில்லை.
– தொடரும்…
– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.
– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.