மாறுதல்..!






(2020ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சார் உங்க பையனுக்கு படிப்பு வரவே மாட்டேங்குது…! சரியான ‘மக்கு பிளாஸ்திரி!’ இந்த பள்ளிக்கூடம் சரிப்பட்டு வராது. நல்லா யோசிச்சுப் பாருங்க, மத்தவங்க ‘லைஃப்’ பாதிக்கப்படக் கூடாது இல்லையா…?! அதுனால, பேசாம, வேற ஸ்கூலுக்கு மாத்திடுங்க…!” என்று கோபமாக பேசினார் ஆசிரியர்.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பையனின் அப்பா, ‘ஒரு வாரம் டைம் குடுங்க மாத்திடறேன்!’ என்றார் தலைகுனிந்து நின்றபடி.
“அதெல்லாம் முடியாது…! உடனே மாத்தணும்…! அதுதான் எல்லாருக்கும் நல்லது! போங்க, நிக்காதீங்க!” என்று கண்டிப்புடன் விரட்டி அடித்தார்.
ஒரு வாரத்தில் ஸ்கூலுக்கு வந்த பையனின் அப்பா, “சார்…நீங்க நீங்க சொன்னதை நல்லா யோசிச்சுப் பார்த்தேன்! வேற ஸ்கூலுக்கு மாத்திடறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு பட்டது. அதிகாரிகளைப் பார்த்து, மந்திரியைப் பிடிச்சு, நீங்க சொன்னபடி, ஒரு வாரத்துக்குள்ளேயே, உங்களுக்கு ‘மாறுதல்’ வாங்கிட்டு வந்துட்டேன், இந்தாங்க!” என்று அவருக்கான டிரான்ஸ்ஃபர் ஆர்டர் காப்பியை கொடுக்க… வாயடைத்து நின்றார் அவர்.
– 12.2.2020, குமுதம்.