மாறிப்போன அடையாளம்
கதையாசிரியர்: ச.இராகவன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,420
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சபாரட்ணம் இராகவன் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்தவர். 1! – 08-1976 ல் பிறந்த இவர் யாழ்பல்கலைக்கழக முகாமைத்துவபீட இறுதியாண்டு மாணவன். சிறுகதை கவிதை ஓவியம் என்பவற்றில் ஈடுபாடுள்ளவர். சஞ்சீவி, சரிநிகர், தாயகம், மித்திரன், ஆதவன் ஆகியவற்றில் எழுதியுள்ளார் வழமையான சமூகப் பிரச்சினையைச் சொல்லும் விதமான முறையைப் பின்பற்றினாலும் தற்போது பின் நவீனத்துவ பாணியை அணுகுகிறார்.
அரசிலைகள் அமைதிகாத்தன. அரச மரத்தின் கீழ் சித்தார்த்தன் ஆழ்ந்த தியானத்திலிருந்தான். அது உலகை மறந்த தியானம். அவன் உடல் விறைத்துப்போய் சவமாக இருந்தான். அவன் உடல் மீது காவியில்லை. முழு நிர்வாணமாக இருந்தான். பத்மாசனம் போட்டிருந்த அவன் கால்கள் வெகு நேர்த்தியாகவும் நெருக்கமாகவும் இருந்ததனால் ஆண்குறி மறைந்த பொருளாயிற்று. கைகள் இரண்டையும் கோர்த்து பாதங்கள் ஒன்றையொன்று தொட்டுச் செல்லும் மையத்தில் வெகு நேர்த்தியாக வைத்திருந்தான். எந்தவொரு வெளிச்சக்தியும் அவனைச் செல்வாக்கிற்குட்படுத்தி விடயமுடியாதொரு சூழ்நிலையே அங்கு நிலவியது. அவன் தொடைகளின் மீது அனல் கக்கும் நெருப்புத் தணல்களை வைத்தாலும் அந்தத் தியானம் கலையப்போவதில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். யசோதராவுடன் புணர்ச்சியில் ஈடுபட்டது. எல்லாம் முடிந்து அவளை அணைத்தபடி துயில் கொண்டது. யசோதராவின் முலைகளைப் பார்த்து ரசித்து, ஸ்பரிசித்து மெய்மறந்து தனது தாம்பத்திய வாழ்வின் சான்றாக இராகுலன் பிறந்தது. இவற்றுக்கான எந்தவித ஆவணப்படுத்தலும் அவன் அடிமனதிலேனும் காணப்படவில்லை. அவன் மனதில் நிலைபெற்று நின்றதெல்லாம் அவலத்தின் வரிசைப்படுத்தல்களே அந்த வரிசைப்படுத்தல்கள் காட்சிகளாக ஒவ்வொன்றாய் அவன் மனக்கண்ணில் தோன்றி மறையும். தெளிந்த நீரில் கல்லெறி விழும். அது முதலில் சிறுவட்டம் ஒன்றைத் தோற்றுவிக்கும். அவ்விதம் தோன்றிய சிறுவட்டம் விரிந்து பெரிதாகும். இவ்விதம் தொடர்ந்து கல்லெறி விழும் வட்டம் தோன்றி விரிவடையும். இந்த தொடர் செயற்பாடு தெளிந்த நீரை மோசமாகக்கலக்கும். கலங்கிய நீர் கறுப்பாக மாறும். சேறும் சுரியும் கலந்த அந்த நீரிலிருந்து எழும் மணம் மூக்கைச் சித்திரவதைப்படுத்தும். இவ்விதம் சித்திரவதைப்பட நேரும் போதெல்லாம் சித்தார்த்தன் தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்து சவமாகிவிடுவான்.
“ஐயா! எமக்கெல்லாம் சாந்தியருள வந்த சித்தார்த்தரே! அமைதியின் காவலரே சாந்தத்தின் முழுவடிவே! முழுமதியின் முகவடிவே! கண்திறந்து பாரும். எனக்கு திகழ்ந்த கொடுமையைக் கண்திறந்து பாரும்” இவ்விதம் கதறி அழுதபடி கைகளில் சிறுவன் ஒருவனின் சடலத்தை சுமந்தபடி சித்தார்த்தன் முன்னிலையில் வந்து நின்றாள் அந்தப் பெண். அவள் தலைவிரி கோலத்தினளாய் இருந்தாள். அவள் உடலெங்கும் உடலெங்கும் மண் ஒட்டியிருந்தது. ஆடைகள் அழுக்கேறியிருந்தன. அவள் கையிலிருந்த சிறுவனின் சடலம் வாய்திறந்திருந்தது.
அவளின் கதறல் சித்தார்த்தனை அணுவளவும் பாதித்ததாகத் தோன்றவில்லை. அந்தப் பெண் அழுதுகொண்டேயிருந்தாள். அவள் கையில் அந்தச் சிறுவனின் சடலம் தொங்கிக்கொண்டிருந்தது.
சமரானந்த கெளசாம்பி பஞ்சனை இருக்கையில் சாய்ந்திருந்தான். அவன் வழுக்கைத் தலை மீது சுடரொளி பட்டுத் தெறித்ததில் அது மினுமினுப்பாக இருந்தது. காதுகள் இரண்டும் தங்கக் கடுக்கண்கள் தாங்கி இருந்தன. அவன் கண்கள் மூடி இருந்தன. அவன் நீண்ட மூக்கிலும் சுடரொளி பட்டு அதைப் பளபளபாக்கிற்று. அவன் செந்நிற மேனிக்கு சற்றும் பொருத்தமில்லாத கறுத்த உதட்டை அவன் ஒரு பக்கம் சுழித்துக் கொண்டிருந்தான். சுயாதீனமாக விடுபட்டிருந்தன கைகள். கைவிரல்களில் கணையாழிகள் வரிசையாக மின்னின. அவன் அணிந்திருந்த காவியுடை அவன் தோற்றத்திற்கு சற்றும் பொருத்தமின்றி இருந்தது. அவன் கால்களை ஒடுக்கி பாதங்களைக் காலணை மீது வைத்திருந்தான். காலணையின் கீழே அன்னத்தின் இறகு கொண்டிழைத்த காலணிகள் இருந்தன. அவன் இருமருங்கும் திறந்த மார்பினராய் இரு நங்கையர் நின்று கவரி வீசிக்கொண்டிருந்தனர். அவர்களது மார்பகங்கள் கவரி வீசும் வேகத்திற்கேற்ப சீராக அசைந்து கொண்டிருந்தன.
“வணக்கத்திற்குரிய கௌசாம்பியே! உங்களைச் சந்திக்க அரசியார் வந்திருக்கிறார்.” சேவகனின் குரல்கேட்டு கண்திறந்த கௌசாம்பி சூழ்நிலை கவனித்தான். சில நிமிட நகர்விற்குப் பின்னர் “வரச்சொல்” என்று தனது அடைத்த குரலில் கட்டளையிட்டான். அந்நேரம் ஏதோ விசித்திர மிருகம் ஒன்று சத்தம் செய்தது போல் தோன்றிற்று.
அரசியார் நரபலி நாயகி பணிவான நடையுடன் கௌசாம்பியின் காலடியில் வந்தமர்ந்து தான் கொண்டு வந்திருந்த வெண் தாமரை மலர்களை கௌசாம்பியின் பாதார விந்தங்களில் வைத்து வணங்கினாள். கௌசாம்பி அவளை நோக்கினான். அவள் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அதற்கான காரணத்தை அவன் அறியாதவனல்ல. இருப்பினும் அறியாதவன் போலக் கேட்டான். “ஏன் உனது முகம் வாட்டம் மிகுந்ததாயிருக்கிறது?”
மதிப்பிற்குரிய கௌசாம்பியே! சித்தார்த்தன்…. என்று ஆரம்பித்தாள் அரசி.
“தெரியும்” என்று சொன்னான் கௌசாம்பி. அவன் குரலில் அடிநாதமும் கவலையை வெளிப்படுத்துவதாய் இருந்தது.
“அப்படியாயின் இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனது ஆட்சி நீடிக்குமா?” அச்சத்தின் வயப்பட்டவளாய் கேட்டாள் அரசி.
“நானும் என்போன்றவர்களும் இதே கௌரவத்தோடு இருப்பதும், நீ அரசாட்சியில் நிலைத்திருப்பதும் உன் கையிலேயே தங்கியிருக்கிறது.” சமரானந்த கௌசாம்பி மறைபொருளோடு பேசி னான். அரசி எதுவும் புரியாதவளாய் கேட்டாள் “என்கையிலா?”
“ஆமாம்! உன்னால் மட்டுமே முடியும்” அழுத்திச் சொன்னான் கௌசாம்பி. “என்னால் மட்டுமா? ஆச்சரியம் மிகுந்தவளாகக் கேட்டாள் அரசி. கௌசாம்பி விபரிக்க ஆரம்பித்தான். “நிச்சயமாக உன்னால் மட்டுந்தான் முடியும். நான் சொல்வதைக் கவனி. சித்தார்த்தன் பல வருடங்களாக பெண்களின் அங்க தரிசனம் அற்றவனாகவேயிருக் கிறான். ஆதலால் அவன் நித்திய துறவியாக இருக்கிறான். என் போன்றோர் காவியுடை தரித்து சுகபோகம் அனுபவிப்பதில் அவனுக்கு அணுவளவேனும் உடன்பாடில்லை. இதனால் இப்போது “காவியுடை என் துறவுக்குரிய அடையாளப்படுத்தல் அல்ல என அறிவிப்பு செய்து காவியுடை ‘களைந்து நிர்வாணியாகவே நிஷ்டையில் இருக்கிறான். அவனை திசை திருப்ப வேண்டும் எனின் நீ ஆடை களைந்து உன் முழு அங்கத் தரிசனத்தையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும்.”
“சுவாமி என்ன இது”அரசி பதறிப்போய்க் கேட்டாள்.
“என்ன பதறுகிறாய் நிர்வாணமாகத் தோன்றுவது என்பது உன்னால் முடியாவிடின் காவியுடை எனக்கும் என் போன்றவர்களுக்கும் அடையாளப்படுத்தக்கூடியதான பொருளாகமாட்டாது. நீ நிர்வாணக் கோலத்தில் நிஷ்டையில் இருக்கும் சித்தார்த்தன் முன் தோன்றி அவனை மயக்கி திரும்பவும் காவியுடை தரிக்கச் செய்யா விடில் நானும் என் போன்றவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்வதோ உனது ஆட்சி நிலைத்திருப்பதோ சாத்தியமில்லை” கௌசாம்பி விளக்கிச் சொன்னான்.
சிறுது நேர மௌனத்தின் பின் “தாங்கள் சொன்னபடியே செய்கிறேன் சுவாமி” என்றபடி கௌசாம்பியின் பாதங்களைத் தொட்டு வணங்கியவளாய் விடைபெற்றாள் அரசி.
எவ்வளவு நேரம் கடந்திருக்குமோ தெரியாது. அமைதி காத்த அரசிலைகள் சலசலக்க வாரம்பித்தன. மெல்லிய காற்று வீசத் தொடங்கியது. நடுவானில் மேகத்துள் மறைந்த சந்திரன் வெளிப்பட்டு வெளிச்சம் பாய்ச்சிற்று அந்தப் பெண் இன்னும் சடலத்தை கையிலேந்தியவளாய் அழுதுகொண்டிருந்தாள். சித்தாத்தன் அந்த அழுகுரலை அப்போதுதான் செவிமடுக்கக் கூடியவனாய் இருந்தான். அவன் மனம் பதறியது. ‘யாரம்மா நீ?’ சித்தார்த்தன் கேட்டான். அழுது கொண்டிருந்த பெண் சொன்னாள் “ஐயா! நான் ஓர் ஏழை, எனது கணவன் பிணியால் இறந்துவிட்டார். அதன் பின்னர் எனது ஏகப் புதல்வனே எனக்கு எல்லாமுமாக விளங்கினான். அவனையும் இன்று நண்பகல் சர்ப்பம் தீண்டியதால் இழந்து நிற்கிறேன். எனக்குதவ யாருமில்லை. ஆதலினால் என் மகனை உயிர்ப்பிக்க வேண்டும். எனக்கு ஒளிமயமான வாழ்வினை அருள வேண்டும்”
அவள் சொன்னதைக் கேட்ட சித்தார்த்தன் சிறுதுநேரம் எதுவும் பேசாதிருந்தான். பின்னர் மெதுவான குரலில் அவளுக்கு சொன்னான் “பெண்ணே! உன் ஏகப் புதல்வனை நான் உயிர்ப்பிக்க வேண்டின் அவன் பிணத்தை இங்கே வைத்துவிட்டு வடபுலம் நோக்கிச் சென்று அங்கு யுத்தத்தின் பாதிப்பில்லாத, யுத்தத்தினால் இறப்பிற்குள்ளாகாத, யுத்தத்தினால் அங்கவீனராகாத எவராவது ஒருவரின் மனையில் ஒரு பிடியரிசி வாங்கிவர வேண்டும்”
சித்தார்த்தன் வாத்தைகளை சிரமேற் கொண்டு தான் சுமந்து கொண்டிருந்த தன் மகனின் சடலத்தை நிலத்திற் கிடத்தி சித்தார்த்தனை தாழ்த்தி வணங்கி வடபுலம் நோக்கிப் புறப்பட்டாள் அந்தப் பெண். அவன் வெகு தொலைவில் ஒரு புள்ளியாக மறைந்து கொண்டிருந்த போதும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்தன். மீண்டும் அவன் மனம் கலங்கிய நீராயிற்று. அதிலிருந்து சேறும் சுரியும் சேர்ந்து மணத்தன. அந்த மணம் அவன் சுவாசத்தை சித்திரவதைக்குள்ளாக்கியது. தனமுன் கிடந்த பிணத்தைப் பார்த்தான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். சூழ்நிலை மறந்தான். தானும் பிணமானான்.
***
அரசி உடலெங்கும் அத்தர் பூசிக்கொண்டாள். அங்கங்கள் வெளித்தள்ளும் ஆடைகளை அணிந்துகொண்டாள். எவர் துணையுமின்றி தானே தனித்துப் புறப்பட்டாள் சித்தார்த்தன் இடம் நோக்கி. அவள் மனம் முழுவதும் தான் ஆட்சியில் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசையை வியாபித்திருந்தது. அந்த ஆசை நிறைவேறக் கௌசாம்பிகன் மனம் வைக்கவேண்டும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை காலமும் இந்த உலகத்தை மறந்திருந்த சித்தார்த்தன் விழித்துக் கொண்டு விட்டான். காவியுடை களங்கப்படுவதை விரும்பாதவனாய் அதைக் களைந்தெறிந்த இது எனக்குரிய அடையாளம் அல்ல என்றும், தனக்குரிய அடையாளம் நிர்வாணம் என்றும் அறிவித்து விட்டான். இனி திரும்பவும் சித்தார்த்தன் காவியுடை அணிந்துகொண் டால் மட்டுமே கௌசாம்பிகள் துறவிகளாகக் கருதப்படுவர். இல்லா விடின் காவியணிந்த சுகபோகிகளாகவே கருதப்படுவர். அவர்கள் சுகபோகிகளாகக் கருதப்பட்டால் கௌரவம் இழப்பர். செல்வாக்கிழப் பர், வாழ்க்கை சோகம் மிகுந்ததாகும். இது முடிவில் அரசியின் அரசாட்சியைக் கவிழ்க்கும். இவை எல்லாவற்றையும் சமரானந்த கௌசாம்பி உணர்ந்தேயிருந்தான். இந்நிலையை தடுத்துநிறுத்த அவன் அரசியை ஆயுதமாக்கிக் கொண்டான்.
அரசி அரசமரத்தடியை அடைந்தபோது அங்கே ஏதொவொரு பொருள் பற்றியெரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து எழுந்து கருகிய வாசனை அரசியைப் பாதிக்கவில்லை. அவள் பூசியிருந்த அத்தர் மட்டும்தான் அவளுக்கு மணத்தது. அரச மரத்தின் பீடத்தை உற்று நோக்கினாள். அது வெறுமையாக இருந்தது. அங்கே சித்தார்த்தன் இல்லை. அவனுக்குப் பதில் ஒரு நறுக்கோலை பீடத்தில் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து அங்கே எரிந்த தீச்சுவாலையில் பார்த்தாள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “நான் இந்தத் தேசத்தைவிட்டுப் போகிறேன். இனிமேல் இங்கே திரும்பி வருவதாய் எந்தத் தீர்மானமும் என் மனதில் இல்லை. தயவு செய்து இனி என் பெயரால் சுகபோக வாழ்க்கை நடத்தி என்னை அவமதிக்க வேண்டாம். இனிமேல் நீங்கள் காவியுடை தாராளமாகப் பாவிக்கலாம். ஏனெனில் அது எனக்கும் என் போன்றவர்களுக்குமுரிய சின்னமல்ல. அதை நான் நெருப்பிலிட்டு கொழுத்திவிட்டே போகிறேன்”
– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026