நிறமிழக்கும் கனவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,815 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்லூரைச் சேர்ந்த நடராஜா சத்தியபாலன் 17 -04-1956 ல் பிறந்தவர். ஆங்கில ஆசிரியர் கவிதை, சிறுகதை, கட்டுரை என்பவற்றில் ஈடுபாடுடையவர். திசை, அமிர்தகங்கை, கவிதை, சஞ்சிகை, சஞ்சீவி என்பவற்றில் எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் கவிதைக்குரிய மென்போக்கு விஞ்சி நிற்கும்.


அவன் மனசு கவிதை பாடிற்று. சந்தோஷம் நிறைந்து வழிந்தது. பயணஞ்செய்த வாடகை வண்டியைவிட வேகமாய் மனம் வீட்டை அடைந்தது. 

நிவேதிதா என்ன செய்து கொண்டிருப்பாள்? மணி இரவு ஒன்பதுக்கு மேலாகிறதே!…தூங்கியிருப்பாள். அப்பாவின் வருகையைப்பற்றி விசாரித்தபடியே தூங்கிப் போயிருப்பாள். சுபதா…. காத்திருப்பாள். மனசு நிறையக் காதலும் ஏக்கமுமாய் ” நீங்கள் வருவதாக எழுதிய கடிதம் கிடைத்த நாளிலிருந்து எனக்கு சந்தோஷத்தில் சாப்பாடும் செல்லவில்லை. தூக்கமும் வரவில்லை. நித்தி…நித்தி என் இனிய நித்தி….நீங்கள் எப்போது வருவீர்கள்.’ 

கடைசியாய் சுபதாவிடமிருந்து வந்த கடிதத்தின் இந்த வரிகள் மன ஏட்டில் பளிச்செனத் துலங்குகின்ற வரிகள்! ஓ….. சுபதா…….சுபதா என் பிரியமான பெண்ணே! இதோ நான்மீண்டும் எங்களின் ரம்மியமான உலகத்திற்கு வந்துகொண்டிருக்கின்றேன். …சம்பாதித்த பணம் போதும். இனி…..இனி என்றும் இனிக்கும் எமது சொர்க்கத்தை நாம் அலங்கரிப்போம். எங்கள் பிரியமான மகளின் எதிர்காலத்தைச் சகல வளங்களும் கொண்டதாக்கி 

ஓ!..நமது தெருவில் வண்டி போய்க் கொண்டிருக்கின்றதா? “அ…இதில இருந்து நாலாவது வீட்டில் நிற்பாட்டுங்கோ….!” 

வாசலில் வண்டி நின்றது. வண்டிக் கதவைத் திறக்கிறபோதே வீட்டு வாசலைப் பார்த்தபடி கதவைத் திறந்தான் நித்தி. 

அது யார் ஓடிவருவது? ஓ… சுபதாவா? “இஞ்ச அப்பா வந்திட்டார் நிவேதிகா… ஓடி வாங்கோ. இஞ்ச வந்து பாருங்கோ… ஆர்வாறதெண்டு…” 

உற்சாகம் பொங்கிவழிகின்ற குரலில் மகிழ்ச்சியாய்க் குரல் கொடுக்கிற தனது ஆசை மனைவியைப் பார்த்துச் சிரித்தபடியே வண்டியிலிருந்து சாமான்களை இறக்கினான். வண்டிக்காரனுக்கு அவன் கேட்டதற்கும் மேலாகவே பணம் கொடுத்தனுப்பினான். 

இறக்கி வைத்த எல்லாவற்றையும் சரி பார்த்தபடியே தூக்க முயலுகையில் “இஞ்ச விடுங்கோ” என்று சுபதா உதவிக்கு வந்தாள். வியப்பில் விரிந்த விழிகளுடன் வந்து நிற்கிற தனது நிவேதிகாவைக் குனிந்து கொஞ்சினான். “குஞ்சு இன்னும் நித்திரை கொள்ளவில்லையோ” என்றான். “அவள் இப்ப…. இரண்டு நாளா நித்திரையில்ல. அப்பா எப்ப வருவார், அப்பா எப்ப வருவார் எண்டு ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கு மேலதான் நித்திரை” என்றாள், சுபதா “ஆ…அப்பிடியோ…” என்றபடி எல்லாச் சாமான்களையும் உள்ளே வைத்து நிமிர்கையில் வெளிச்சத்தில்…. மனசினைக் கண்ணில் ஏந்தி நிற்கிற தனது சுபாவை அவன் கண்கள் பரிவாய் எதிர்கொண்டன. “என்ன…ம்” மௌனமாகிப் போன அவளைக் கையில் பிடித்தபடி கேட்கையில் மனம் நினைத்ததை வார்த்தையாக்க இயலாமல் அவள் திணறிப் போனாள். 

2 

ஒரு மாதம் என்பது வெறும் முப்பது நிமிஷம் போல கழிந்தது போயிருந்தது. 

தாழ்ந்த தொனியில் மதுரை சேஷ கோபாலனின் சங்கீதம் அந்த அறையை நிரப்பிக்கொண்டிருந்தது. அந்த ‘நந்தலாலா”வில் தன்னைக் கரையவிட்டு அமர்ந்திருந்தான் நித்தி. 

வெளியே யாரோ அழைத்தார்கள், டேப்ரெக்கோடரை நிறுத்தியபடி வெளியே வந்தான். 

ஆ….மனோ…..வா மச்சான்… எப்பிடி சுகமாய் இருக்கிறியோ? “ஓமோம் சுகம் தான்…” என்றபடி அமர்ந்தான் மனோகரன்,-நித்தியுடன் சவூதியில் பணியாற்றித் திரும்பியிருக்கிறான் மனோகரன். இருபத்தெட்டு வயசு. திருமணமாகாதவன். சம்பாதிப்பதிலேயே குறி யாய் இருப்பான். லேசில் திருப்திப்படுகிற இயல்பு இவனுக்கு இல்லை. 

“என்ன நித்தி…. எல்லோரும் சுகம் விசாரிச்ச பிறகு கேட்கிற கேள்வி, “எப்ப திரும்பிப் போறியள்” எண்டது தான் இல்லையா?” ஓமடாப்பா, என்னையும் இஞ்ச கனபேர் கேட்டாச்சு திரும்பி வாறவ னெல்லாம் திரும்பிப்போவானெண்டுதான் எதிர்பார்க்கினம்”. 

“அப்ப நீ போகவில்லையோ மச்சான்” 

“இல்ல மனோ எனக்கு அந்த ஐடியா இல்லை. இங்க ஏதாவது வேலைக்கு ட்ரை பண்ணப் போறன். எனக்குக் காசு பெரிசில்லை மச்சான். நிம்மதியா ஆறுதலா எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கொள்ள வேணும் எண்டுதான் என்ற ஆசை. ஆரம்பத்தில் அப்பிடி ஒரு வாழ்க்கை சாத்தியப்படேல்லை, காசுதான் அதுக்கு ஒரு பெரிய தடையாய் இருந்தது. அதனாலதான் கஷ்டத்தைப் பாராமல் சவூதிக்குப் போனன். முறிஞ்சு உழைச்சன். இப்ப கடவுளே எண்டு காசால ஒரு கஷ்டமும் இல்லை. இன்னுமின்னும் ஏன் காசுபண்ண ஆசைப்பட வேணும்? எனக்கென்னவோ என்ற சொர்க்கமே இந்த வீட்டிலும் இந்த ஊரிலும் தான் இருக்கிறதாப்படுகுது” 

“நீ கவிதை எழுதத்தான் மச்சான் லாயக்கு. காசு பண்ண இல்ல” மனோகரன் பலமாகச் சிரித்தபடி கூறினான். 

3 

இரண்டு வருஷங்களுக்கு முன்னர் நித்தி சவூதிக்குப் புறப்பட்டபோது வெறும் மாநகர சபையின் மின்சாரசபை ஊழியன். 

சீதனமில்லாத திருமணம். இனிமையான குடும்பம்தான். அவன் ஆசைப்பட்ட மாதிரி மென்மையான ரசனையுள்ள மனைவி. அடக்கமான அழகி. அடுத்த வருஷமே கிடைத்த அவனது ஆசைமகள் என்று சந்தோஷங்கள் பரந்து சென்றபோதும் அடிக்கடி தலையில் இடிப்பதுபோல் பணச் சிக்கல்கள் வந்து சிரமப்படுத்தியபோது நித்திக்கு மனம் சலித்துப் போயிற்று. 

எல்லாவற்றிற்கும் மேலாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சுபதாவுக்கும் அவளது அக்காவுக்கும் தரப்பட்ட வீடு தொடர்பாகப் பிரச்சினைகளும் மனக் கசப்புகளும் உருவாகியபோது அவை அனைத்திற்கும் அடிப்படையான காரணமாயிருந்த பணம் என்கிற பூதாகரமான பிரச்சினை அவனைப் பிடரி பிடித்துத் தள்ளிற்று, 

அவன் சுபதாவின் நகைகள் விற்றும் கடன்பட்டும் சவூதிக்குப் போனான். 

மனுஷனைச் சிறுமைப் படுத்துகின்ற – அவனது நிம்மதிக்கு உலை வைக்கின்ற காசு என்கிற ஒன்றுக்காக அவன் தனது துன்பம் பாராமல் உழைத்தான். “ஓவர்டைம்” ஒன்று கூடத் தவறவிடாமல் தேடித் தேடிக் காசாக்கினான் 

தொலைவிலிருக்கிற தனது மெய்யான சந்தோஷங்களை நினைத்துக்கொண்டே அவற்றின் சாசுவதத்திற்காகத் தனது உடலை ஒரு கருவியாக்கிப்பாடுபட்டான். 

அதன் பலனாய் சுபதாவுக்கு உரித்தான வீட்டுப் பங்கு விஸ்தரிக்கப்பட்டது. சகல வசதிகளும் உடைய ஒன்றாக மாற்றப்பட்டது. பங்குக் கிணற்றுப் பிரச்சினைக்கு முடிவாகத் தனியான ஒரு கிணறும் தோண்டப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சுக்கதை தாங்கியபடி வரும் சுபதாவின் கடிதங்கள் இவனுடைய இதயத்திற்கு ஒத்தடம் கொடுத்தன. அடி மனசின் துயரங்கள் இந்த ஆறுதல்களால் மறக்கடிக்கப்பட்டன. 

இப்போது அவன் பழையபடி…. தனது ஊரில் தனது உலகில் தனது புத்தகங்கள் – தனது கவிதைகள் – தனது குடும்பம் – தனது குழந்தை இவற்றோடு நிறைவாய் வாழவே பிரியப்படுகிறான். 

4

மீண்டும் மின்சாரசபையில் வேலையில் இணைந்து கொள்வது சாத்தியமென்று அறிந்தபோது நித்திக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. 

வேலைச் சிரமங்களோ இப்போதிருக்கிற நிலையில் அந்த வேலையில் இணைந்து கொள்வது கௌரவமாகுமோ என்கிற சிக்கலோ அவனுக்கில்லை. அவன் தொழிலை மதிக்கிறவன். வாழ்க் கையை அதன் இயல்பேயான தன்மையோடு அங்கீகரிக்கத் தெரிந்தவன். 

இரவில் படுக்கையில் சரிந்திருந்தபோது வேலையெல்லாம் முடித்து சுபதா படுக்கைக்கு வந்தாள். தான் மீண்டும் மின்சார சபையில் வேலைக்குச் சேரப்போகிற விஷயத்தை அவளிடம் சொல்ல அவன் வாயெடுத்தபோது, “இண்டைக்கு மத்தியானம் உங்களோட சவூதியில் இருந்த ஈஸ்வரன் வந்தவர், நீங்கள் வெளியில போயிருக்கிறதா சொன்னன். நாளைக்கு வாறதெண்டு சொல்லியிட்டுப் போனார்.” என்றாள் சுபதா. 

“எட ஈஸ்வரனோ வேற என்ன சொன்னான்? அவனைக் கட்டாயம் காணவேணும். அவன் ஒரு நாளைக்குக் குடும்பத்தோட லஞ்சுக்குக் கூப்பிடவேணும் சுபா” 

“அவர் திரும்பவும் அடுத்த மாதம் சவூதி போறாராம். இது வேற கொம்பனியாம். தொடர்ந்து மூண்டு வருஷம் வேலை செய்யலாமாம். நல்ல சம்பளமாம்…’ 

“திரும்ப போறானாமோ… பாவம் சுபா அவனுக்கு நிறையக் கடன் இருக்கு. அவன்ர காணிய ஈடு வைச்சுத்தான் போன முறையும் போனவன். “இந்தக் கொம்பனியிலை எலக்ரீஷியன் மாருக்கும் வேலையிருக்காம். சம்பளமும் கூடவாம். நீங்களும் ட்ரை பண்ணலாமே எண்டும் சொன்னவர்…” 

“அப்ப நானும் போகலாமெண்டு சொல்லும்” ஏதோ நடக்கமுடியாத காரியம்பற்றி வேடிக்கையாகப் பேசும் தொனியில் கேட்டான் நித்தி. அவனுடைய மனசு சுபதாவின் தீர்க்கமான மறுப்பை எதிர்பார்த்தது. 

“போனால் உழைக்கலாம்… இன்னும் வசதிகள் கூடும்…’ 

இதைச் சொல்லுகையில் சுபதாவின் குரலில் தெரிந்தது ஆவலா – நிறையச் சம்பளம் வரும் – என்பதால்தான் மீண்டும் போகவேண்டும் என்று சுபதா எதிர்பார்க்கிறாளா? 

நெஞ்சினூடாக ஆழ்ந்த வலியாய்த் தோன்றிய இந்த நினைவுகள் நித்தியை உள்ளூர அதிர வைத்தன. யாரை மையமாக வைத்துக்கொண்டு தனது கனவின் இழைகளைப் பின்னினானோ அதே மனைவி இவனை வெறும் காசு பண்ணும் இயந்திரமாய்த் தான் நினைக்கிறாளா? வகை வகையாய்ச் சேர்ந்த வசதிகள் அவளுக்குள் இருந்த மென்மையான சுபாவை மூடிக்கொண்டனவா? 

ஓ! சுபதா! 

“என்ன பேசாமல் கிடக்கிறியள்” அவர் வந்தால் என்ன சொல்லப் போறியள். அடுத்த மாதத்துக்கு இன்னும் இரண்டொரு கிழமைதான இருக்கு.. 

நித்தி நெடிதாய்ப் பெருமூச்செறிந்தான் “…ம்…நான் திரும்பிப் போக வேணுமெண்டு நீர் ஆசைப்படுகிறீரோ? சுபா? அப்பிடியெண்டால் நான் போகலாம் சுபா” 

இதைச் சொல்லுகையில் நித்தியின் விழிகள் கலங்கிச் சிவந்து போனதை அவனருகில் படுக்கையில் அண்ணார்ந்து கிடந்த சுபதா அறிந்திருக்க நியாயமில்லைத்தான்!

– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *