மாறாதோ இக்காலம்…?
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹால் முழுவதும் வெளிநாட்டுச் சாமான்கள் இறைந்து கிடந்தன.
அண்ணா! இதனை எப்படி ‘ஆபரேட்’ பண்ணு வது?” ‘வீடியோ’வுக்குக் ‘காஸட்’டும் கொண்டு வந் தியா? “இந்தப் புடவையைப் பாரேனம்மா-கைக்குள் ளேயே பொத்தி விடலாம் போல…”- ஆளுக்கொரு கேள் வியும், விமர்சனமுமாய் வீடே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
எல்லோரது கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகதீசன்.
“அவனைக் கொஞ்சம் ரேஸ்’ட்’ எடுக்க விடுங்க ளேன். எத்தனை மைல் பயணம் பண்ணியிருக்கிறான்” பாதி துருவிய தேங்காய் மூடியும், கையுமாக வெளியே வந்த மரகதம் தன் மற்றைய குழந்தைகளைக் கடிந்தாள்.
“அம்மா… அவர்கள் வேண்டியதைப் பேசட்டும். நான் ரயிலிலோ, காரிலோவா வந்தேன். வெகு சொகு சாகப் பயணக் களைப்பே இல்லாமல் “பிளேனில்” வந்தி ருக்கிறேன். இவர்களோடு பேசித்தான் எவ்வளவு நாட் களாச்சு”- தன் சகோதரர்களைக் கனிவு பொங்கப் பார்த் தான் ஜெகதீசன்.
ஜெகதீசனின் தந்தை மாணிக்கவாசகம் ‘சேவையர் டிபார்ட்மென்டில்’ குமாஸ்தா. சுமாரான சம்பளம். அதனைத் தவிர வேறு தில்லுமுல்லுகள் பண்ணிப் பணம் சம்பாதிக்கத் தெரியாத அப்பாவி மனிதர். மரகதத்தின் வீட்டிலிருந்தும் வரதட்சணையாக எதுவும் வாங்கியதில்லை. அவரது சம்பளத்தை நம்பியே குடும்பத் தேர் ஓடியது.
மூத்த பையன் ஜெகதீசனை ‘அட்வான்ஸ் லெவல்’ வரை கொழும்பிலுள்ள விவேகானந்த வித்தியாலயத்தில் படிப்பித்தார். அவனும் பரீட்சைகளில் நல்ல “மார்க்” எடுத்துக் கொண்டு தான் வந்தான். ஆனால் பல்கலைக் கழகப் போட்டிப் பரீட்சையில் அவனால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு தடவைக்கு மூன்று தடவை முயற்சி எடுத்தும் சாதாரண “டிகிரி” பண்ணும் அளவுக்கும் அவனால் “மார்க்” பெற முடியவில்லை.
அவனுக்குப் பின்னால் பிறந்தவர்களும் பெரியவர்க ளானார்கள். குடும்பச் செலவுகள் அதிகரித்தன. வயதில் பெரியவனான ஜெகதீசனுக்கு தந்தை படும் துயரம் புரிந் தது. வசதியுள்ள சில மாணவர்களைப் போல் தனியார் நிறுவனங்களில் சேர்ந்து படித்து, பட்டம் பெற வேண் டுமென்ற தன் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வேலை தேடத் தொடங்கினான். பல கம்பெனிகளில் ஏறி இறங்கியதுதான் மிச்சம். சில இடங்களுக்கு *அப்ளிக் கேசன்” போடுவதற்கே மாணிக்கவாசகம் கடன்பட்டுக் கொடுத்தார்.
எரிச்சலும், வெறுப்பும் அவன் மனதை நிரப்பிய சம யம் தான் “சவூதிஅரேபியா’வில் வேலைக்கு ஆட்கள் திரட்டும் தனியார் கம்பனியொன் றின் “அட்ரஸ் கிடைத்தது. தன் “சர்ட்டிப்பிக் கெட்டுக்களை” எடுத்துக் சொண்டு நேரே அவர்களை அணுகினான். அக் கம்பெனி யின் மானேஜர் உண்மையைக் கூறினார்.
“நீ நினைப்புது மாதிரி… அங்குள்ள வேலை உன் படிப் புக்குத் தகுந்த மாதிரியிராது. சவுதியில் உள்ள ஒரு ஷேக் தன் பெயரில் ஒரு மருத்துவமனை கட்டுகிறானாம். அதற் கான இன்ஜினியர், ஆர்க்கிரெக், டிராஸ்மென் அனைவ ரையும் இந்தியாவிலிருந்து “றெகுறிற்” பண்ணி விட் டான். சிமெந்து கலக்க… கல்லு நெறிக்கக் கூடிய சின் னச் சின்ன வேலைகளுக்குத் தான் இங்கு ஆளெடுக்கிறான்”.
“அதுபற்றியெல்லாம் நீங்கள் யோசிக்க வேண் டாம்… என்னிடம் எந்தப் “பிரஸ்டீஜ்”ஜும் கிடையாது. குடும்பத்தில் ஒரு நாள் செலவைச் சமாளிப்பதே தர்ம சங் கடமாக இருக்கிறது… நான் மூட்டை சுமக்கக் கூடத் தயாராக இருக்கிறேன்” என்றான்.
ஜெகதீசனின் நேர்மையான பேச்சு மானேஜரைக் கவர்ந்தது. தங்கள் கம்பெனி அனுப்பிய முதலாவது “பாட்ச்” தொழிலாளர்களுக்கிடையே இவனது பெயரை யும், “பாஸ்போர்ட்டையும் புகுத்தி ஒரு வழியாக “விசா” எடுத்துக் கொடுத்தார்.
அதற்குப் பின்னர்தான் இவ்விவகாரம் பற்றிப் பெற் றோர்களிடம் பிரஸ்தாபித்தான். மரகதம் முதலில் அதிர்ந்து போனாள். மூத்த பையன் செல்லமாக வளர்ந் தவன். சூதுவாது தெரியாதவன்- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி இந்தியா வரை அழைத்து வந்து கை விட்டுச் செல்லும் ஏஜென்சிகள்; அங்கு வேலை யில் சேர்ந்த பின்னாலும், அவர்களது சம்பளத்தில் பாதி யைச் சுருட்டிக்கொள்ளும் கமிஷனர்கள்; வீட்டு வேலைக் கெனப் பெண்களை அழைத்து வந்து பம்பாய் ‘ரெட் லையிட்’ ஏரியாவில் தள்ளிவிட முனைந்த சில கயவர்கள் பற்றி யெல்லாம் மரகதம் செய்தித்தாள்கள், அனுபவப் பட்டவர்கள் மூலமாக நிறையத் தெரிந்து வைத்திருந்தாள்.
அதனால் ஜெகதீசனும் அப்படியொரு ஏமாற்றுக் காரர்களை நம்பி மோசம் போய் விடுவானோ என்ற அச்சத்தில் அவன் முடிவை அங்கீகரிக்க முடியாதென முரண்டுபண்ணினான்.
ஜெகதீசன் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை.
“நல்ல தகுதிவாய்ந்த தமிழ் இளைஞர்களுக்கே சிங்கள வன்கள் வேலை கொடுக்கிறான்கள் இல்லை. அவனை, இவனைப் பிடித்து ஏதாவதொரு ஆபீசுக்குள் நுழைந்து விட்டாலும் பின்னால் வந்த சிங்களவன் மனேஜராயும் அக்கவுண்டனாயும் பதவி உயர்வு பெற்றுச் சென்று விடு வான். தமிழனுக்கு இதுதான் தலைவிதி என்பது போல் “றிரையர்” ஆகும் வரையும் குமாஸ்தா செயரிலே”யே உட்கார்ந்திருக்க வேண்டும். இதென்னம்மா மூன்று வருட ஒப்பந்தம். கண்மூடித் திறக்குமுன்னே போய் விடும். திரும்பி வரும்பொழுது கையில் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ இருந்தால் அதனைப் போட்டு. “பிஸினஸ்” ஆரம்பித்தால்கூடப் போதும் சுயமாகப் பிழைக்கலாம்.
தாயாரைச் சமாதானப்படுத்தி “சவுதி”க்குச் செல் வதற்கு ஜெகதீசன் பட்ட பிரயத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல.
அவன் கூறியது போல் மூன்று வருடங்கள் சிட்டாய்ப் பறந்தன. அவனது உழைப்பில் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்க ஆரம்பித்தது. அலுவலகத்தில் மாணிக்கவாசகத்தைப் பார்த்தால் “எங்கே கடன் கேட்டு விடுவாரோ?” என அஞ்சி அவரைப் பார்த்தும் பார்க்காததும்போல் சென்ற அலுவலக நண்பர்கள் கூட அவரைத் தேடி வந்து பேச ஆரம்பித்தனர்.
அவ்வேளையில் ஒரு நாள் ஜெகதீசனிடமிருந்து கடிதம் வந்தது. ‘இன்னும் மூன்று வருடங்களுக்கு மேலும் என் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். அதற் கிடையில் கிடைக்கும் ஒரு மாத லீவில் ஊருக்குவந்துவிட்டு திரும்புகிறேன்’ என அதில் எழுதியிருந்தான்.
அதனைப் பார்த்ததும் மரகதம் மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள். தன் மகனின் வாய்க்கு ருசியாக என் னென்ன சமைத்துப் போடலாம், எந்தெந்தக் கோயில் களுக்கு அழைத்துச் செல்லலாம்… தன் அண்ணன் மகள் சுபத்ராவின் ஜாதகத்தையும், ஜெகதீசனின் ஜாதகத் தையும் யாரிடமாவது கொடுத்துப் பொருத்தம் பார்க்க வேண்டுமென மனதுக்கு இதமான கற்பனைகளில் மூழ்கி யிருந்தாள்.
ஆனால் ஜெகதீசன் வந்ததிலிருந்து அவனோடு ஒரு வார்த்தைகூட அவளால் ஆற அமரப் பேச முடியவில்லை. அவ்வளவு வேலை. வழக்கமாக சமையலுக்கு உதவி பண்ணும் அவளது பெண்கள் கூட அண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
செக்கச் செவேலென்று முன்பிருந்ததைவிட நான் கைந்து ‘இஞ்சு’கள் வளர்ந்து கொழு கொழுவென்ற மேனியும், சுருட்டை முடியுமாக சினிமாவில் வரும் கதா நாயகன் போல் கழுத்தில் மைனர் செயினும், கையில் தங்க மோதிரமுமாய்ப் பளபளத்த தன் புதல்வனைப் பார்த்து சந்தோசப்பட்டதுடன் சரி.
இரவுச் சாப்பாடு முடிந்ததும், ஜெகதீசனுடன் ஆறுதலாகப் பேசலாமென அவசர அவசரமாகச் சமைய லறையைத் தண்ணீர் விட்டு அலம்பிவிட்டு வெளியே வரும் பொழுது முன்னறையில் தன் ஏழெட்டு வயது தம்பியை அணைத்துக் கொண்டு தூக்கத்தில் மூழ்கியிருந்தான் ஜெகதீசன்.
காற்றில் பறந்த அவன் சுருண்ட கேசத்தைப் பாசத்துடன் ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்த மரகதத்திடம் “அவன் களைத்துப் போய் உறங்குகிறான்… நாளைக் கிடையில் யாரும் உன் பிள்ளையை கொத்திக் கொண்டு போய்விட மாட்டார்கள். நீயும் களைத்துப் போயிருக் கிறாய்… போய்த் தூங்கு. காலையில் பேசலாம்” எனக் கணவர் கண்டிக்கவே பின் கட்டுக்குப் போய் தன் பெண் களுடன் படுத்துக் கொண்டாள். நிம்மதியான உறக்கம் அவளைத் தழுவியது.
தூக்கக் கலக்கத்துடன் புரண்டு படுத்த மரசுதத்தின் காதுகளில் ஏதேதோ இனம்புரியாத கூச்சல்கள் அவலக்குரல்கள் கனவு போலும் விழுந்தது. திடுக்கிட்டு விழித்தாள்.
அவளுக்கு முன்னாலேயே அவளது பெண்கள் இருவரும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
“அம்மா, பக்கத்து வீதியில் கண்ணாடிகள் நொறுங் குவது மாதிரிச் சத்தம கேட்கிறதே… “ஜெயவீவா’ எனச் சில கோஷங்களும் இடையிடையே கேட்பது போலிருக்கிறது” என பெரிய பெண் காயத்திரி பேசி முடிப்ப தற்குள் பதட்டத்துடன் ஓடிவந்த மாணிக்கவாசகம் “எல்லோரும் சத்தம் போடாமல் பின்பக்கமாக ஓடி டுங்க. சிங்களவர்கள் ஐந்நூறு ஆயிரமெனத் திரண்டு தமிழர் வீடுகளைப் பார்த்துப் பார்த்துத் தாக்கிக்கொண்டு வாரான்கள்… ஓடுங்க ஓடிடுங்க’ எனத் தன் பெண் களையும், மனைவியையும் கையைப் பிடித்து இழுத்து பின் கதவைத் திறந்து விட்டார்.
”தம்பி எங்கே? அவனைக் கூப்பிடுங்கள். ஜெகதீஸ் ….குமார்” மாணிக்கவாசகத்தைத் தள்ளிக்கொண்டு ஜெகதீசன் படுத்திருந்த அறைக்குள் நுழைய முயன்றாள் மரகதம்.
“நீ முதலில் போ… அவன் வருவான்” மனைவியிடம் எரிந்து விழுந்தபடி முன்பக்கம் ஓடினார் மாணிக்கவாசகம்.
“அம்மா, வாங்கம்மா. அண்ணன் வருவான், வாங்கம் மா” வீட்டு மதிற் சுவரில் ஏறி நின்றபடி கத்திய பெண் களை நோக்கி மரகதம் ஓடிய பொழுது தடால் தடாலென அவர்களது வீட்டின் முன் பக்கக் கதவு பெயர்ந்து விழும். சப்தம் காதைத் துளைத்தது.
“பறதெமளு… பிற்ற பஸ்ஸெங்…துவனவா… அளப் பாங்… அளப்பாங்”
பறத்தமிழர்கள் பின்னால ஓடுறாங்கள். “பிடி,பிடி” யெனக் காட்டுக் கூச்சல்கள் எழுந்தன.
எவர் எந்தப் பக்கம் ஓடுகிறோம் என்பது தெரியாமல் எல்லோரும் சிதறி ஓடினார்கள்.
வீட்டுக்குப் பின்னால் இரண்டடி சந்து. அதையடுத்து நான்கைந்து இறைச்சிக் கடைகள்.
இருட்டில் ஓடிய மரகதம் மேலும் போகும் வகை தெரியாமல் இறைச்சி வெட்டவென வைத்திருந்த நான் கைந்து மரக்குத்திகளுக்கு நடுவே தன் மகளொருத்தியை யும் இழுத்துக்கொண்டு மறைந்து உட்கார்ந்தாள்.
அவர்கள் வீட்டுப் பக்கமிருந்து புகை மூட்டங்கள் கிளம்பின.
“அண்ணனுக்கு இடங்கூட தெரியாதே. எங்கே ஓடி. யிருப்பான். இன்றைக்குப் பார்த்து இந்த எம பூமிக்கு என் பிள்ளை வந்தானே” தன் பெண்ணின் காதோடு புலம்பினாள் மரசுதம்.
காயத்திரிக்கும் அண்ணனை நினைக்க மனசு கலங்கியது. ‘இருந்ததுபோல் அங்கேயே இராமல் எங்களை நினைத்து ஆளுக்கொரு பரிசுப் பொருளாகப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்தானே, அவன் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது அத்தனையும் மண்ணாய்ப் போச்சே…!
ஏறக்குறைய விடிகாலைதான் அந்தப்பகுதி நிசப்தமானது.
பக்கத்திலிருந்த இறைச்சிக்கடை முதலாளி முஹமத் அலி வீட்டில் எல்லோரும் அடைக்கலமானார்கள். ஆனால் ஜெகதீசனை மட்டும் காணவில்லை. மரகதம் பதறினாள். “அவனும் நம்மைப்போல் எங்கேயாவது ஒளித்திருப் பான். வந்து விடுவான்” மாணிக்கவாசகம் மனைவியைச் சமாதானப்படுத்தினார்.
கொட்டாஞ்சேனை அகதிகள் முகாமுக்கு அவர்களைக் ‘கொண்டு வந்து சேர்த்த முஹமத் அலியின் கால்களைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக “எப்படியாவது என் பிள்ளையை தேடிப்பார்த்து இங்கு அனுப்பி வையுங்கள்” என மரகதம் கெஞ்சினாள்.
“ம், அவன் வந்து சேருவான்” மரகதத்தை உள்ளே அழைத்துப் போனார் மாணிக்கவாசகம்.
ஏதேதோ சமாதானங்களெல்லாம் கூறி மாணிக்க வாசகம் மனைவியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று வருஷமும் இரண்டாகப் போகின்றது.
வருவோர் போவோர்களிட மெல்லாம் “என் பிள்ளை யைப்பார்த்தீர்களா, என் பிள்ளையைப் பார்த்தீர்களா? அவனைக் கூட்டிவாருங்கள்! என சிரிப்பும் அழுகையுமா கப் புலம்பிக் கொண்டிருந்தாள் மரகதம்.
அவளது கலைந்த கூந்தலும், அவிழ்ந்து கிடந்த புடவையும், ‘பிளேட்’டைச் சுற்றிச் சிந்திப்போய் கிடந்த சாதமும் மாணிக்கவாசகத்தின் நெஞ்சைப்பிளந்து மவு னத்திலாழ்த்தியது. விழிகள் மூலைக்கொன்றாகக் குந்தி யிருக்கும் பிள்ளைகளின் மேல் குத்திட்டு நிற்க-ஜெகதீ சனின் கையும், காலையும் கட்டி எரிந்த நெருப்புக்குள் தூக்கிப் போட்ட கொடுமையைக் சுண்ணால் பார்த்தும், அதனை வெளியே சொல்லாமல், அந்த நினைப்பிலேயே நீறாகிக் கொண்டிருந்தார் மாணிக்கவாசகம்.
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.
![]() |
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்! இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க... |