மாமியார் அம்மாவாகி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 2,889 
 
 

ஆகாஷ் தன் மனைவி பேச்சை கேட்டுக்கிட்டு ஆடுறான் என்று அவன் அம்மா மரகதத்துக்கு ஆதங்கம்.

அவன் மனைவி நளினி தனிக்குடித்தனம் போயிடுவோம் என்று சொல்லிவிட்டாள்.

ஆகாஷ் அவன் மனைவி நளினி, அவன் அம்மா மரகதம், அவன் தங்கை நிர்மலா இதுதான் மொத்தம் குடும்பமும்.

மரகதத்திற்கும் நளினிக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரே சண்டை. அப்பப்ப மரகதத்தின் மாமியார் கொடுமையும் உச்சத்திற்கு சென்றது. அதனால் நளினி பிடிவாதமாக நின்றுவிட்டாள், தனிக்குடித்தனம்தான் ஒரே வழி என்று.

அதற்கு ஆகாஷூம் சம்மதம் தெரிவித்துவிட்டான்.

இதோ பாரும்மா! எப்போது உனக்கும் நளினிக்கும் ஒத்துப்போகவில்லையோ தனிக்குடித்தனம்தான் ஒரேவழி.

நிர்மலாவுக்கு கல்யாணம் ஆகும்வரை, இந்த வீட்டுலயே இருந்துக்கங்க. நான் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து நளினியை அங்கே கூட்டிப்போயிடுறேன்.

அப்போ நிர்மலா கல்யாணம் ஆகிப் போய்விட்டால், நான் இங்கே தனியாகவா இருப்பேன் என்று மரகதம் கேட்டாள்.

அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நான் இங்கே அடிக்கடி இங்கே வந்து உங்க இரண்டு பேரையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

என்ன இருந்தாலும் இப்படி பொஞ்சாதி பேச்சை கேட்டு ஆடக்கூடாதுடா!

நீயும் சும்மா இருக்க மாட்டேன் என்கிறாயே. அவளோடு மல்லுக்கட்டுகிறாய். அதுதான் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று சொல்லிவிட்டான் ஆகாஷ்.

சில மாதங்கள் கழித்து நிர்மலாவுக்கு ஒரு நல்ல வரன் அமைந்தது அவர்கள் ஒரு கூட்டுக் குடும்பமாக நிர்மலாவை பெண் பார்க்க வரும்போது ஆகாஷூம் நளினியும் வந்திருந்தார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நிர்மலாவை பிடித்துவிட்டது.

மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடிச்சிருக்கா என்று கேளுங்க.

மாப்பிள்ளை சிவக்குமார் சந்தோஷமாக தலையாட்டினான்

பிடிச்சிருக்கு ஆனால் நிர்மலாவோடு கொஞ்சம் பேசணும் என்றான்.

அதுக்கென்ன தாராளமாக பேசுங்க மரகதமும், ஆகாஷூம் சந்தோஷமாக தலையாட்டினார்கள்.

அப்புறம் சிவக்குமாரும் நிர்மலாவும் தனியாக சென்று பேசிவிட்டு வந்து இருவரும் சந்தோஷமாக கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

எல்லாம் சுமூகமாக பேசி முடித்ததும் மாப்பிள்ளை வீட்டார்கள் சென்றுவிட்டார்கள்.

ஆகாஷூம் அம்மாவிடமும், தங்கையிடமும் ஒன்னும் கவலைப்படாதீங்க கல்யாணத்தை நல்லபடியாக நடத்திடுவோம் என்று சொல்லிவிட்டு நளினியோடு விடைபெற்று சென்றுவிட்டான்.

எல்லோரும் சென்றதும் மரகதம் நிர்மலாவிடம் சொன்னாள், இங்கே பாருடி மாப்பிள்ளை குடும்பத்தை பார்த்தால் பெரிய கூட்டுக் குடும்பமாக தெரிகிறது. அப்பாவியாக இருக்காமல், உன் அண்ணி நளினி மாதிரி மாப்பிள்ளையை உன் கைக்குள்ள போட்டுக்க. எதாவது பிரச்சினை வந்தால் மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிடு.

சும்மா இரும்மா. அண்ணனும் அண்ணியும் நம்மைவிட்டு பிரியும்போது ஒரு அம்மாவாக உனக்கு வலித்தது. ஒரு மோசமான மாமியாராக நடந்து கொண்டாய். அதையே உன் மகளுக்கு என்று வரும்போது அண்ணி மாதிரி நடந்துகொள் என்கிறாய். அப்போ அண்ணி செய்தது சரி என்கிறாயா? அப்படி செய்தால் ஒரு அம்மாவாக எனது மாமியாருக்கு வலிக்காதா?

அவர் என்னை தனியே அழைத்து என்ன சொன்னார் தெரியுமா? அவர்கள் கூட்டுக் குடும்பமாக எவ்வளவு சிறப்பாக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பதையும் நான் கல்யாணம் ஆகிப் போனால், அங்கே எனக்கு இன்னொரு அம்மா மாமியார் வடிவில் இருப்பார் என்பதையும் சொன்னார். அதுமட்டுமில்லாமல் இனிமேல் நீயும் அவருக்கு இன்னொரு அம்மா என்றும் சொன்னார். எனவே அந்த அன்பான கூட்டுக்கு எந்த பிளவும் என்னால் வந்துடக்கூடாது என்றும் கேட்டுக்கிட்டார். அதனால எனது வருங்கால மாமியார் உன்னை மாதிரியும் இருக்கப்போவதில்லை.

நானும் அண்ணி மாதிரி இருக்கப்போவதுமில்லை என்றாள் நிர்மலா.

மரகதம் கண்கலங்கி மாப்பிள்ளை என்னை இன்னொரு அம்மா என்றா சொன்னார்! நான் இப்போவே போய் என் மகனையும், மகளையும் நம் பரம்பரை வீட்டுக்கே கூட்டி வந்துடுறேன் என்றாள்.

நிர்மலாவுக்கு நிம்மதி.

– முகநூல் மத்யமர் தளத்தில் மே மாதம் 2024 அன்று போஸ்ட் ஆகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *