மாமனுக்கு ஆகாது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2024
பார்வையிட்டோர்: 155
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிறப்பிற்கும் இறப்பிற்கும் அங்கே பெரும் போர் நடந்துகொண்டிருந்தது. இவள் வயிற்றில் இருந்து வரும் குழந்தை எனக்கே சொந்தம்’ என்று பிறப்பும், ‘நீ இப்படிப் பிடிவாதம் செய்தால் குழந்தை மட்டுமல்ல. அதன் தாயும் எனக்கே’ என்று இறப்பும், கெடுபிடிப் போரில் ஈடுபட்டது போன்ற ஒரு நிலைமை அங்கே உருவாகியிருந்தது. பாக்கியம் வலிதாளாமல் பல்லைக் கடித்துக்கொண்டிருந் தாள். ஆடைகளை அகற்றியதால் முதலில் ஏற்பட்ட இயல்பான நாணம். இப்போது வேதனை முனங்கலில் மறைந்து போய்விட்டது. ‘நான் சாவோடு போமாட்டேன் என்னைப் போகவிடாதிக… என்று சொல்பவள்போல் குடிமகளின் கையைப் பற்றுக்கோடுபோல் பற்றிக்கொண்டாள்.
பாக்கியத்துடன் சேர்ந்து அவள் அம்மாவும் அழுதாள்.
“ஏல… முத்தையா… வண்டிய பூட்டுடா. ஆஸ்பத் திரிக்குக் கொண்டு போனாத்தான் முடியும்.ஜல்திடா. என்றார் பக்கத்துவீட்டுத் தாத்தா.”
முத்தையா கையைப் பிசைய, அந்தப் பிசைவின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட தாத்தா, நான் பணம் தாரேண்டா. வண்டியைப் பூட்டு என்று சொல்ல முத்தையா இரண்டடி நடக்கையில் குடிமகள்’ உள்ளே இருந்து கதவைத் திறந்துகொண்டே, “கன்னிக்குடம் உடஞ்சிட்டுது… வண்டில போவமுடியாது. நல்லா சாமியக் கும்பிடுங்க” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கதவைச் சாத் தினாள். இப்போது முத்தையாவும் தன் தந்தை அய்யா வுடன் சேர்ந்துகொள்ள மாடனைக் கும்பிட்டான்.
அய்யாவு மகளை வெளியூரில் சுமாரான இடத்தில் கொடுத்திருந்தார். தலைப்பிரசவத்திற்காக பாக்கியம் ஒன்பது மாதம் ஆனபோது அழைத்து வந்தாள். முத்தையா தங்கச்சியை டாக்டர்’ பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது அய்யாவு மறுத்துவிட்டார். கையில் காசில்லாத முத்தையாவும் அதிகமாக இதை ஆட்சேபிக்க வில்லை. ஒருநாள் தங்கை ‘வயித்த வலிக்குதுன்னு’ சொன்னதும், அய்யாவுக்குத் தெரியாமல் ஒரு ஹோமியோ பதி டாக்டரைக் கூட்டிக்கொண்டு வந்தான். அவர் ஒரு அல்லோபதி’ ஊசியைப் போட்டுவிட்டு, மேற்கொண்டும் பத்து ஊசிகளை போட்டுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். விஷயம் தெரிந்த அய்யாவு, சொள்ளமாடனை சாட்சியாக வைத்துக்கொண்டு குதித்தார். மருமகள்காரி முதன்முதலாக மாமனாருக்கு ஆதரவு தெரிவித்ததால் முத்தையாவால் அந்தக் கூட்டணியை வெல்ல முடியவில்லை. அதை முறியடிக்கும் முயற்சிக்குரிய “டிபாஸிட்டும் அவனிடம் இல்லை.
திடீரென்று ஒரு ‘குவா குவா’ சத்தம் கேட்டது. பிறந்தது ஆண்பிள்ளை என்பதற்கு அடையாளமாக பொம்பிளைகள் மூன்று தடவை குலவை விட்டார்கள். முத்தையா அருகிலிருந்த தன் பையனை அணைத்துக் கொண்டான். அய்யாவு சொன்ன மாடனை நினைத்துக் கொண்டார்.
உள்ளே இருந்து வந்த குடிமகள் திருமலைவடிவு யாரிடமும் பேசாமல் வெளியேறினாள். இந்தப் பிள்ளைக் காவது எனக்கு ஒரு சீல வேணும் நாடாரேன்னு பல தடவை சொல்லிப் பலன் பெறாத வடிவு, இந்தத் தடவை அப்படிக் கேட்காதது அய்யாவுக்கு ஆறுதலாக இருந்தது. இதற்குள் அம்மாக்காரி வெளியே வந்து ஒரு ‘சாக்கை’ எடுத்துப் போட்டுக்கொண்டு முடங்கினாள். முத்தையா மனைவியின் முகத்தில் வீடு முழுவதும் நிறைந்திருந்த ஈக்களில் ஒன்றுகூட ஆடவில்லை. பக்கத்து வீட்டுத் தாத்தாவுக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. முத்தையாவின் மகளைப் பார்த்து “உள்ள போயி பிள்ள எப்படி இருக்குன்னு பாத்துட்டு வாம்மா’ என்று சொன் னார். அந்தச் சிறுமி பத்து நிமிடம் கழித்து வந்து “அத்த மவன் அழகா இருக்கான்… நான்தான் அவன கட்டிக்கு வேன்” என்று சொன்னதில் அய்யாசாமி திருப்தியடைந் தாலும் முத்தையா திருப்தி அடையவில்லை. அம்மாவைப் பார்த்து, “என்னம்மா,ஒருமாதிரி படுத்திருக்கே? பிள்ளக்கி ஏதாவது… என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் திணறினான். நொண்டி மூக்கறையா பிறந்திருக்குமோ!’
“பிள்ளக்கி என்ன… நல்லாத்தான் இருக்கு. என்று சொல்லிக்கொண்டே, அவன் அம்மாக்காரி வேறுபுறமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.
மருமகள்காரி,மாமியாரிடம் வந்தாள்.
“வாங்கத்தே சாப்பிடலாம் இந்த வயசுல பட்டினி கிடந்தா உடம்புக்கு ஆவாது. ஒரு வாயாவது சாப்பிடுங்க.”
மருமகள்காரியின் கரிசனம், மாமியார்காரிக்குப் புரிய வில்லை. “தின்னுட்டுப் படுக்கவேண்டியதுதான். சாப்புடுற துக்குத் தாங்கணுமாக்கும். மருமகளின் புதிய கரிசன னம், சோகத்தைச் சற்றுக் குறைத்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். ‘வட்டில்’ உட்கார்ந்திருந்த மகன் முத்தையாவின் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே, நீ படேண்டா!” என்று அவள் சொன்னபோது, அவள் கண்ணீர் முத்தையாவின் தலையில் சூடாக விழுந்தது. முத்தையாவுக்கு என்னவென்று புரியவில்லை. கண்ணுங் கெட்டு, காதுங் கெட்ட அய்யாவுக்கோ எதுவுமே தெரிய வில்லை.
கிழவி, மகனைக் கொஞ்சநேரம் விழுங்கிவிடுவதுபோல் பார்த்துவிட்டு முத்தையா… ஜாக்கிரதையாப் படுடா. பூச்சி புழு இருக்கான்னு பாத்துப் படு! நாளைக்கித் தோட் டத்துக்குப் போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, சமையலறைக்குள் மருமகளோடு போனாள். குழந்தையின் தொப்புள்கொடி, மாலைமாதிரி கழுத்தைச் சுற்றி இருந்த காட்சி அவள் மனத்தை வதைத்தது.
நார்க்கட்டிலில், தன்னோடு ஒண்டிக்கொண்டு கிடந்த அந்த மான்குட்டியை, பாக்கியம் பார்த்துச் சிரித்துக்கொண் டாள். பிரசுரமான முதல் கதையைப் பார்க்கும் புதிய எழுத் தாளனின் பெருமிதத்தைப்போல் தலைப்பிள்ளையின் தலை யைச் செல்லமாகக் கோதிவிட்டாள். கிழவி உள்ளே வந்தாள்.
.அம்மா… இந்தப் பயல பாரு! அய்யா காலு மாதிரியே இருக்கு பாத்தியா! காத பாரும்மா. அண்ணனோட காது மாதிரி… தாடையோட ஒட்டிக்கிட்டு இருக்கத பாரேன். முகம் யாரு மாதிரிம்மா இருக்கு?”
கிழவி பேச்சை மாற்றினாள்.
“பாக்கியம்… ஒன் அண்ணனுக்கு மூக்குல ஒரு துளை இருக்கே அது எதுக்குன்னு தெரியுமா?
“என்னம்மா… பச்சைப் பிள்ளக்கிட்ட பேசறதுமாதிரி பேசுற! ஏழுபேரு செத்துப்போனாங்க. இவனாவது தங்கட்டுமுன்னு மூக்கில வளையம் போட்டதாயும்… அந்த வளையம் அப்புறம் விழுந்துட்டுதுன்னும் எத்தன தடவ சொல்லியிருக்க? எதுக்கும்மா கேக்குற?”
“ஒண்ணும் இல்லம்மா… நமக்குக் கறிவேப்பிலமாதிரி ஒருவன் இருக்கான், தங்கச்சின்னா உயிர விடுவான்…”
“இத நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா உன் வீட்டு மருமவன் என்ன ஒருநாள் செல்லமா திட்டுனாரு. அண்ணாச்சிக்கு அதுகூடப் பிடிக்கல. அவியகூட பேசாம நேரா வீட்டுக்கு வந்துட்டாரு. அவியகூட அப்புறம் ஒரு மாசம் பேசலியே.”
“நீன்னா அவனுக்கு உசிருமா. ஆனால் அவன் உசிரு தான் இடையில் போயிடும்போல தோணுதம்மா!”
“நீ… நீ… என்னம்மா சொல்ற! அண்ணாச்சிக்கு ஒண்ணுன்னா… முதல்ல நான் இருக்கமாட்டேன்! சீக்கிர மாச் சொல்லும்மா. அண்ணாச்சி உடம்புக்கு ஏதாச்சும்… சொல்லேன். சீக்கிரமாச் சொல்லித் தொலையேன்!’
“பிள்ள குலமழிச்சா பெத்தவ என்ன செய்வா?”
“உனக்கு அறிவிருக்கா என்னம்மா நடந்தது? அண்ணாச்சிக்கு என்ன? ஐயோ சொல்லும்மா!”
“உன் மவன், மால சுத்தி பிறந்திருக்காம்மா! மாமனுக்கு ஆகாதே!”
பாக்கியம் ஸ்தம்பித்துப் போனாள். ஒருகணம்,தன் பிள்ளையை வெறுப்போடு பார்த்தாள். அதனிடமிருந்து சிறுது விலகினாள். அவளை ஓட்டிப் படுத்துக் கிடந்த குழந்தை, இதனால் லேசாகப் புரண்டது. கை, உடம்புக்குள் சிக்கியது. பாக்கியத்திற்கு மனசு கேட்கவில்லை. குழந்தை யின் கையை எடுத்து சரி செய்துவிட்டுத் தன்னோடு காண்டாள். அம்மாவை வெறித்துப் அணைத்துக் பார்த்தாள்.
“நான் பாவிம்மா… எனக்குக் கல்யாணமே ஆயிருக்கக் கூடாதம்மா. ஐயோ! கடவுளே! குழந்தை பிறக்கணுமுன்னு யாரு கேட்டா! பாவி கடவுளே! அண்ணாச்சி! அண்ணாச்சி!”
“ஏம்மா அழுவுற… நீ என்னம்மா பண்ணுவே, கவலைப் படாதம்மா. இந்த பிள்ள போனா, இன்னும் எத்தனையோ பிள்ளை பெத்துக்கிடலாம்மா… ஆனால் உன் அண்ணாச்சி போயிட்டா…”
“நீ என்ன சொல்ற?”
“இதவிட எப்படிம்மா சொல்லுவேன்! செவத்தியா புரத்துல ராமசாமி பேத்தியாளுக்கும் இப்படித்தான் மால சுத்தி பிறந்தது. கழுத்த நெறிச்சு..”
“அம்மா!” என்று கத்தினாள் பாக்கியம். பிள்ளையை மார்போடு அணைத்துக்கொண்டாள். ஆழமான கிணற் றுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது போன்ற பிரமை. வாய்வழி யாகக் கிணற்று நீர் உடல் முழுதும் வியாபிப்பது போன்ற கனம்.
“இதைச் சொல்ல உனக்கு எப்படிம்மா மனசு வந்தது?”
“பெத்த வயிறு கேக்கலம்மா!”
“என் பெத்த வயிறு மட்டும் எப்படிம்மா கேக்கும்?”
கிழவி குற்ற உணர்வில் முகத்தைத் திருப்பிக்கொண் டாள். பிறகு தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். மகள் அருகே சென்று அவளை அணைத்துக்கொண்டாள். பிறகு மெள்ள பேச்சைத் துவக்கினாள்.
“இந்தா பாரும்மா… எனக்கு அவன் பிள்ள இல்லியா! பேரு சொல்றவன் பேரன்பாங்க… ஆனால் உன் அண்ணாச்சி இந்த நாப்பது வயசுல… எங்களால தாங்கமுடியுமாம்மா?”
“நான் மட்டும் அண்ணாச்சிய விட்டுட்டுத் தாங்கிக்கிடு வேனா? நான் தங்கார புள்ளியா? (சுயநலவாதியா)”
“அதனாலதான் சொல்லுதேன். ஒன் பிள்ளக்கி பிறந்த வுடனே, கணச்சூடு வந்திட்டு, நாலு நாளையிலே போயிடு முன்னு குடிமவா சொன்னா!”
“தானாச் சாவுறத, நீ எதுக்கும்மா சாகடிக்கணும்?”
“இந்த நாலு நாளுல முத்தையாவுக்கு ஏதாவது வந்துட்டா?”
பாக்கியம் காதுகளைப் பொத்திக்கொண்டாள். வேறு பக்கமாகப் படுத்துக்கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள். கிழவியின் நடுங்கும் கைகள் குழந்தையின் கழுத்தை நோக்கிப் போயின. அப்போது-
முத்தையா தன் மனைவியை தரதரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான். அவன் இடுப்பில் இருந்த மூன்று வயதுப் பையன் துரை, தூக்கக் கலக்கத்தில் அப்பனின் தோளில் விழுந்துகொண்டும், பிறகு தலையைத் திடுக்கிட்டு எடுத்துக்கொண்டும் இருந்தான். அய்யாவு தாத்தாவும் தள்ளாடிக்கொண்டு வந்தார். கிழவி கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.
முத்தையா, கிழவியின் கைகளைப் பார்த்துக்கொண்டே நிதானமாகப் பேசினான்:
“ஓஹோ! இவன் இருந்தா நான் இருக்கமாட்டேனா, அப்படின்னா தங்கச்சி மவன கொன்னுட வேண்டியதுதான். ஆனால் ஒண்ணு. இன்னா…இடுப்பில் இருக்கானே இவன் ஜாதகப்படி இவனுக்கு மூன்று வயசுல அப்பனுக்குக் கொள்ளி போடணுமாம். இவனுக்கு நான் கொள்ளி போட்டுட்டா அவன் எனக்குக் கொள்ளி போட முடியாது. அதனால் இவனையும் கொன்னுடுறேன்!”
முத்தையா இடுப்பில் இருந்த மகனைத் தரையில் இறக்கிவிட்டு அவன் கழுத்தை நெறிப்பதுபோல் ‘பாவலா’ காட்டினான். அவன் மனைவி பதறிப்போய்ப் பையனைத் தூக்கிக்கொண்டு வெளியே போகப் போனாள். அப்படிப் போனவளின் தோளைப் பிடித்து நிறுத்திவிட்டு. “உன்ன மாதிரிதாண்டி என் தங்கச்சிக்கும் இருக்கும். அறிவு கெட்டவுளுகா… மாலை சுத்தி பிறந்தானாம். கொல்லணு மாம்…! அப்படியே நான் போனால் போறேன்! நாப்பது வருஷம் வாழ்ந்தாச்சு என் தங்கச்சி மவன் சாகடிச்சிட்டு நான் வாழணுமா? அப்படியே நான் போயிட்டாலும் என் மருமவன் என் பேரச் சொல்லுவாண்டி. ஒன் பிள்ள ஒன் அண்ணன் மாதிரி முடிச்சிமாறிப்பய பிள்ள… என் தங்கச்சி மவன் இருக்கதுக்காக நான் இறக்க தயாருடி… அறிவு கெட்டவுளுகா…”
அய்யாவு, “அப்படிச் சொல்லாதய்யா, சொல்லா தய்யா” என்று அவன் தோளில் தலையைவைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார். பாக்கியம் விம்மினாள். கிழவி தன் விரல் களுக்கு சொடக்கு’ விட்டுக்கொண்டே அழுதாள்.
முத்தையா அவர்களைப் பார்த்தான்.
“அம்மா, ஒனக்குத்தான் சொல்லுகிறேன். என் தங்கச்சி மவன ஏதாவது பண்ணிட்டே… நான் ஒனக்கு பிள் ளயா இருக்கமாட்டேன்! எல்லாத்துக்கும் சொல்லுதேன்! ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்துதுன்னா மூட்டைப் பூச்சி மருந்த சாப்பிட்டுட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்துல போயி கிடப்பேன்! இது சத்தியமான வார்த்தை! குழந்தை கழுத்த பிடிக்காதம்மா… சொள்ளமாடன் காலப் போயி பிடி! பிள்ளய கொல்லப்போறாளுகளாம். அறிவு கெட்டவுளுக… என்னக் கொல்லணுமுன்னா பிள்ளயக் கொல்லு…”
முத்தையா போய்விட்டான். அய்யாவு தாத்தா மனைவியைப் பார்த்து, “பிள்ளக்கி தற்செயலா ஏதாவது நடந்தாலும் நீதான் செய்துட்டன்னு அந்த குரங்கு பய மவன் எதையாவது குடிச்கிடுவான். அதனால் குழந்தைய ஜாக்கிரதையா பார்த்துக்கடி. ஒப்பன மாதிரி பராக்கு பாக்காத.”
கிழவிக்குப் புரிந்தது. இப்போது. குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான் அவள் கவலை.
குடிமவளக் கூட்டிக்கிட்டு வாம்மா… கணைக்கு மருந்து குடுக்கணும். சீக்கிரம்மா… நான் சொன்னேன்னு கையோடு கூட்டியா.
மாமியாரின் உத்தரவிற்கு என்றுமே கீழ்ப்படியாத மருமகள், இப்போது ‘குடிமவளை’ கூப்பிட ஓடிக்கொண்டிருக்கிறாள்.
– இன்னொரு உரிமை, முதற் பதிப்பு: மே 1992, வானதி பதிப்பகம், சென்னை.