மான் தப்பியது எப்படி?





அந்த மான் இப்படி ஓர் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம் என்று அதுவரை நினைத்துப் பார்த்ததேயில்லை.
காட்டின் நடுவே இருக்கிறது மிகப்பெரிய அருவி. அதன் ஓரத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த மானுக்கு, புலியின் உறுமல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், பாய்ந்தால் பிடித்துவிடும் அருகில் புலி. சிறிய பாறை, பெரிய புதர் எல்லாவற்றையும் கண் இமைக்கும் நேரத்தில் தாவிச்சென்ற மான், தாழ்ந்துகிடந்த கொய்யா மரக்கிளைகளுக்கு இடையில் புகுந்து ஓடியது. அப்போது, ஒரு கிளையில் மானின் கொம்புகள் சிக்கிக்கொள்ள, அதை மீட்க முடியாமல் தவித்தது.

காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்தது மான். அந்தப் பகுதியில் எந்த விலங்கும் தென்படவில்லை. புலி ஓடிவரும் அதிர்வை உணர்ந்தது மான். இன்னும் சில நிமிடத்தில் புலி வந்துவிடும். எவ்வளவு வலுவாக இழுத்தாலும் மாட்டிக்கொண்ட கொம்புகள் விடுபடவில்லை. இன்னும் வேகமாக இழுத்தால், கொம்புகள் உடைந்துதான் போகும். இப்போது, மானின் கண்களில் தென்படும் தூரத்தில் புலி வந்துவிட்டது.
அந்த நேரத்தில் காற்று வேகமாக வீசத் தொடங்கியது. காற்றில் பறந்த மணல்துகள்கள், புலியின் கண்களில்பட்டது. அதன் வேகம் குறைந்து, குறைந்து நின்றேவிட்டது. கொய்யா கிளை காற்றில் மேலும் கீழும் ஆடினாலும், மானால் விடுபட முடியவில்லை. ஓரிரு நிமிடத்தில் காற்றின் வேகம் குறைந்தது. புலி மீண்டும் மானை நோக்கி ஓடிவரத் தொடங்கியது. மான், தன் வலிமை முழுவதையும் திரட்டி, கிளையை ஆட்டியது. அப்போது, மரத்தின் கிளை ஏதோ நகர்வதுபோல இருந்ததைப் பார்த்தது. ஒரு மலைப்பாம்பு, இரையைத் தின்றுவிட்டு மரத்தின் கிளையில் படுத்திருந்தது. அதன்மீது, மான் ஆட்டிய கிளை உரசி உரசி வலியை ஏற்படுத்தியுள்ளதுபோலும்!மலைப்பாம்பு கோபத்துடன் தலையை உயர்த்த, இப்போது இரண்டு ஆபத்துகளிடம் சிக்கிக்கொண்டது மான். கோபத்துடன் மானைத் தாக்குவதற்காகத் தன் உடலை மரத்திலிருந்து இழுத்தது மலைப்பாம்பு. அந்த வேகத்தில் மானின் கொம்பைப் பிடித்திருந்தக் கிளை விடுபட்டு மேலே சென்றுவிட்டது. அவ்வளவுதான்… மான் ஓட்டம் பிடித்தது.
பாய்ந்த புலியும் சீறிய பாம்பும் ஏமாந்து பார்த்தன.
– டூடுல் கதைகள், ஜூன் 2017