கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 4,162 
 
 

(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5 

அன்று மாலை அமைச்சர் ரங்கதுரை அண்ணா சாலை ஓட்டலில் தனியறை ஒன்றில் சூடான பலகாரத்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நேரம் ஆறரை மணி. அடிக்கடி அறைக்கதவு திறக்காதா என்று அவர் பார்த்ததிலிருந்து அவர் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்று தெரிந்தது. அவர் காபி குடித்து முடிக்கவும் அறைக்குள் பாலு, சாலமன் இருவரும் நுழையவும் சரியாக இருந்தது. 

“வாங்க டாக்டர் பாலு, டாக்டர் சாலமன். நீங்க என்னைக் கூப்பிட்டதுமே எல்லா வேலையையும் ஒதுக்கிட்டு நான் வந்திருக்கேன்” என்று முகத்தில் ஒருவிதமான சிரிப்புடன் சொன்னார் ரங்கதுரை. 

“நீங்க வந்ததுபற்றி ரொம்ப மகிழ்ச்சிங்க…” பாலு அவர் எதிரில் உட்கார்ந்தான். 

“இந்த விஷயத்திலே நீங்க எடுத்துகிட்ட முயற்சி அக்கறை எல்லாமே நல்லா புரியுதுங்க” என்றான் சாலமன். அமைச்சர் நேரம் இதுக்காக ஒதுக்குகிறார் என்றால் காரணமில்லாமலா இருக்கும். அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள சாலமனால் முடிய வில்லை. அரசியல்வாதியின் மூளை எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைப் பற்றி பாலுவும், சாலமனும் தெரிந்துகொள்ளும் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது.

“உண்மையைச் சொல்லட்டுமா?” ரங்கதுரை தூண்டில் போட்டார். 

“அதைக் கேக்கத்தானே வந்திருக்கோம்” பாலு துடிப் புடன் பதில் சொன்னான். 

“அவசரப்படறீங்க டாக்டர் பாலு… இப்பத்தானே நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கு. நான் என்ன சொல்ல வந்தேன்னா… நேற்று நாம் பாராட்டு விழாவிலே சந்தித்துப் பேசினோம்… நான் ஏதோ விவரம் கேட்டேன்… மறுநாளே நீங்க எனக்கு தொலைபேசியிலே கூப்பிட்டு விவரத்தைத் தர்றதுக்கு நேராக வந்துட்டீங்களே… அதைத்தான் சொன்னேன்” என்றார் ரங்கதுரை. அவர் பாலுவையும் சாலமனையும் ஆழம் பார்க்கிறார் என்பது இரண்டு விஞ்ஞானிகளுக்கும் புரியவே இல்லை. 

“எங்களுக்கே எதிர்பாராத வகையிலே டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சிக் குறிப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் ஏதோ பெரிய விஷயம்னு சொன்னதை…” பாலு முடிக்கவில்லை. 

“நாங்க இன்னும் கண்டுபிடிக்க முடியலே” சாலமன் சுருக்கிவிட்டான். 

ரங்கதுரை அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். ‘இந்தப் பயல்கள் என்னையே ஆழம் பாக்கறானுங்களா?’ என்று அவர் மனத்தில் தோன்றியது. சிரிப்பை சட்டென வரவழைத்துக் கொண்டு, “சரிங்க டாக்டர்களே… தெரிஞ்ச வரைக்குமாவது எனக்குச் சொல்லலாமில்லே” என்றார். 

பாலுவும் சிரித்தான். சாலமனைப் பார்த்தான். “அமைச்சர் ரங்கதுரைக்குச் சொன்னா அதனாலே எங்களுக்கு என்ன லாபம்?” என்று சாலமன் சிரித்தான். 

“சொன்னா லாபம் உண்டு. ஆனா இப்ப லாபம் இல்லை. பின்னால வரும். சொல்லலேன்னா நஷ்டம் உண்டு. நஷ்டம் சீக்கிரமே வரலாம்” ரங்கதுரை நன்றாகவே சிரித்தார். அவருடைய காவி ஏறிய பற்கள் அந்தச் சிரிப்புக்கு ஒரு பயங்கரக் களையைக் கட்டியது. 

பாலு நடுநடுங்கி விட்டான். மீண்டும் சாலமனைப் பார்த்தான். சாலமன் பாலுவின் தோளில் இலேசாகத் தட்டினான். ‘நீ கவலைப்படாதே. நாம இதை எப்படியும் சமாளிக்கலாம்’ என்ற தைரியத்தை பாலு உணரவில்லை என்றாலும், அவன் நடுக்கம் கொஞ்சம் குறைந்தது. 

“மிஸ்டர் ரங்கதுரை… எங்களுக்குத் தெரிஞ்சதை சொல்றோம். ஆனா ஒரு வாக்கு நீங்க கொடுக்கணும்” அரசியல்வாதியிடமே சாலமன் பேரம் பேசும் திறமையை பாலு மனதுக்குள்ளேயே பாராட்டினான். ‘சாலமன் கேட்பதில் நியாயம் இருக்கிறது’ என்று பாலு தனக் குள்ளேயே சொல்லிக் கொண்டான். 

“என்ன கேக்கறீங்க டாக்டர்களே” என்றார் ரங்கதுரை. 

“நீங்க இந்த ஆராய்ச்சியை எப்படிப் பயன்படுத்தப் போறீங்கன்னு எங்களுக்குப் புரியலே… அதை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தினா எங்களுக்குத் தானாகவே பாராட்டு வரும்…” சாலமன் சற்று நிறுத்தினான். 

ரங்கதுரை புருவங்களை உயர்த்தினார். ‘சாலமன் அரசியல்வாதி மாதிரி மூளையைப் பயன்படுத்துகிறான். இந்த இரண்டு பேர்ல சாலமன்கிட்ட கவனமாய் இருக்கணும்’ என்று ஒரு குறிப்பை மனதில் எடுத்துக் கொண்டார். 

சாலமன் தொடர்ந்தான். “ஆராய்ச்சியைத் தவறான வழியிலே பயன்படுத்தும் போது டாக்டர் பாலு, டாக்டர் சாலமன்னு நீங்க எங்க பேரை இழுத்தா உங்க பேரும் அடிபடாதா? நாம மூணு பேருமே கவனமாய் இருக்க வேண்டாமா?” என்று முடித்தான். 

ரங்கதுரை தலையை ஆட்டினார். “சாலமன் நீங்க சொல்றது உண்மையான பேச்சு. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்க என்னை முழுக்க நம்பலாம்” என்றார் ரங்கதுரை. 

அரசியல்வாதியை முழுக்க நம்பும் காலம் உலகத்தில் எந்த நாட்டிலுமே நடக்காத காரியம் என்பது சாலமனின் வாதம். ரங்கதுரை சொன்னதை நினைத்து உள்ளுக் குள்ளேயே சிரித்துக் கொண்டான். 

“டாக்டர் பிரபு ‘மேலதயான்’ என்ற பூச்சிக்கொல்லி பற்றிய சிறப்பு ஆராய்ச்சி ஒன்று செய்து வருகிறார். ஆராய்ச்சிக்கு எலிகளைப் பயன்படுத்துகிறார். எலிகளின் வளர்ச்சி, எடை, மற்றும் மாற்றங்களைப் பற்றி கவனமாகக் குறிப்பெடுத்து வருகிறார்.” 

“இது எந்த பூச்சிக்கொல்லி மருந்து பற்றியும் மேல் நாடுகளில் செய்யற ஆராய்ச்சிதானே டாக்டர்களே… என்ன சிறப்பு?” என்று ரங்கதுரை சொன்னதும் சாலமன் அதிர்ந்துவிட்டான். 

ரங்கதுரைக்கு ‘இந்த அளவு விவரம் எப்படித் தெரிந்திருக்கிறது?’ என்பது அவனுடைய வியப்புக்குக் காரணம். 

“விவசாயத் துறையைப் பத்தி நான் நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கேன் டாக்டர்களே… அமைச்சர் பட்டம் சும்மாவா? அப்படி நாலுபேர் பேசறதை காதிலே வாங்கிக்கிறேன். அடிக்கடி முக்கியமான செய்திகளைப் படிப்பேன். விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழில் மொழி பெயர்க்க என் சொந்த சிலவுலே ஆள் வைச்சிருக்கேன்… போதுமா?” ரங்கதுரை சாலமனின் கேட்கப்படாத கேள்விக்குத் தானாகவே பதில் சொன்னார். 

“நான் பூச்சிக்கொல்லி ‘மேலதயான்’ பற்றிச் சொல்லி முடிக்கலையே… அதை ஆண் எலிகளுக்குக் கொடுக்கும் போது உயிரணுக்கள் ஏராளமான அளவிலே குறைகிறது. அதனாலே எலிப்பெருக்கம் குறையும்” சாலமன் முடித்தான். 

“அப்படியா… அந்த மருந்து… என்ன பேர் சொன்னீங்க” ரங்கதுரை நிறுத்தினார். 

“மேலதயான்” பாலு நிதானமாக ஒருமுறை சொன்னான். 

“அதான்… அந்த மருந்தை எலிகளுக்குக் கொடுக்கும் போது வேறு ஏதாவது தொல்லைகள் உண்டாகுமா? புற்றுநோய் போன்ற விவகாரங்கள் உண்டா? உயிருக்கு ஆபத்து உண்டா?” ரங்கதுரை கேள்விகளை அடுக்கினார். 

“இது போன்ற விவரங்களை ஏற்கெனவே அமெரிக்காவில் ஆராய்ச்சி மூலம் வெளியிட்டிருப்பாங்க. டாக்டர் பிரபு அதைப் பற்றியெல்லாம் அதிகமாக நேரம் வீணாக்க மாட்டார்” என்றான் பாலு. 

“நான் அதைச் சொல்லவில்லை. அது போன்ற விவரங்களும் எனக்கு – ஏன் உங்க இரண்டு பேருக்கும் கூட -தெரிந்தால் நல்லது. ஆராய்ச்சிக் கட்டுரைகளி லிருந்து நீங்கள் விவரம் சேகரித்துச் சொல்ல முடியுமா?” என்று ரங்கதுரை கேட்டார். 

“அடுத்த வாரம் சொல்லலாமா?” என்றான் பாலு. 

“நிச்சயமாக….அடுத்த வாரம் உங்களுக்கு விவரம் கிடைத்ததும் என்னைக் கூப்பிடுங்கள். வேறு எங்கே யாவது சந்திக்கலாம்… சரியா?” என்று எழுந்தார். 

பாலுவும் சாலமனும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். ரங்கதுரை அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “டாக்டர்களே… பிரபுவின் ஆராய்ச்சியில் நல்லா கவனம் செலுத்துங்க. அவருடைய முக்கிய நோக்கம் என்னன்றதை கண்டுபிடிச்சீங்கன்னா உங்களுக்கு விஞ்ஞான உலகிலே பேரும் புகழும் எப்பவுமே இருக்கும்படி நான் செய்வேன்” என்று கை கூப்பினார். 

ரங்கதுரை புறப்பட்டதும் பாலுவும் சாலமனும் காபியாவது குடிக்கலாம் என்று உட்கார்ந்தார்கள். 

“அந்த ரங்கதுரை காபி சாப்பிடறியான்னுகூட கேக்கலையே” என்றான் பாலு. பிறகு இருவரும் ரங்கதுரை, ‘மேலதயான்’ ஆராய்ச்சி என்று பேசிக் கொண்டு காபியை முடித்துவிட்டுப் புறப்பட்டனர். 

அவர்களுக்கு முதுகுப்புறத்தைக் காட்டி உட்கார்ந் திருந்த போட்டோகிராபர் மூர்த்தி அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதை இருவருமே கவனிக்க வில்லை. 

மூர்த்தி அண்ணாசாலைக்கு வருமுன் நீலாவிடம் பேசியது நினைவுக்கு வந்தது. 


ஆபீசுக்குத் திரும்பியதும் நீலா சில வேலைகளைக் கவனித்துவிட்டு ஐந்து மணிக்கே வீட்டுக்குப் புறப் பட்டாள். மூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவனுடைய அறைக்குப் போனாள். அவன் ‘டார்க் ரூமில் இருப்பதாகத் தெரியவே மணியை அழுத்தினாள். சில நிமிடங்களில் கையைத் துணியால் துடைத்துக் கொண்டே மூர்த்தி வெளியே வந்தான். 

“என்ன, நீலா? அதுக்குள்ளே புறப்பட்டுட்டே?” 

“எனக்கு நீ நேற்று செஞ்ச அட்வைஸ் மறந்துட்டியா?” என்றாள் மெல்லச் சிரித்தபடி. 

“ஓ… அதுவா… நல்லதுதான். சேதுவுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். அப்ப நாளைக்குப் பார்க்கலாமா” என்றான் மூர்த்தி. 

“ஒரு முக்கிய விஷயம்… டாக்டர் பிரபுவின் ஆபீஸைக் கூப்பிட்டேன். நமக்கு அடுத்த வாரம் பேட்டி நாள் கிடைத்திருக்கு. சரியா?” என்றாள் நீலா. 

“ஓ.கே… பார்க்கலாம்.” 

“மூர்த்தி… பாலு, சாலமன் பற்றி நாம கவனமாய் இருக்கணும். அவர்களைப் பார்த்ததாகவோ நாம தெரிஞ்சிகிட்ட விவரங்களையோ எதையும் பிரபுகிட்ட – ஏன் செங்கோடன் சார் கிட்டகூட இப்ப சொல்ல வேண்டாம்” என்று நீலா கேட்டுக் கொண்டாள். 

“இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்!” என்றான் மூர்த்தி. நீலா உடனே சிரித்துவிட்டாள். மூர்த்தியின் வேடிக்கையான பேச்சில் விவரம் இருக்கும். 

“நீ அதிக நேரம் இங்கே இருப்பியா?” என்றாள் நீலா.

“இல்லை, நீலா … இன்னும் அரைமணிக்குள் நான் புறப்பட்டு விடுவேன். மவுண்ட் ரோட் வரை போகணும்.” 

“அண்ணாசாலை” என்றாள் நீலா குறும்புடன். 

மூர்த்தி பேசும்போது ‘அண்ணா சாலை’ என்று அவனால் ஏனோ சொல்லவே முடியவில்லை. பழக்கமே இல்லை. ‘மவுண்ட் ரோட்’ என்பது அவன் மண்டையில் ஊறியிருந்தது. 

“சரி, அண்ணா சாலை…” என்றான் மூர்த்தி. 

பெரிதாக ஒருமுறை சிரித்துவிட்டு நீலா புறப்பட்டாள்.  

மூர்த்தியும் அரை மணிக்குள்ளாகவே அன்று கழுவிய போட்டோக்களை எடுத்து உலர விட்டுவிட்டுப் புறப்பட்டான். பாலு, சாலமன் இரண்டு பேருமே திருட்டுப் பார்வையுடன் ‘போஸ்’ கொடுத்ததாக அவன் எண்ணிச் சிரித்துக் கொண்டான். 

மவுண்ட் ரோட் ஓட்டலுக்குப் போய் அங்கே அந்த இருவரின் பேச்சை ஒட்டுக் கேட்டபோதுதான் நீலாவின் ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’ டெக்னிக் என்ன என்று மூர்த்திக்குப் புரிந்தது. 


நீலா வீட்டுக்கு வந்து அரைமணிக்குள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். சேது வந்ததும் இருவரும் அன்று மாம்பலத்தில் பெரிய ஓட்டல் ஒன்றில் சாப்பிடு வதாகத் திட்டம் போட்டிருந்தார்கள். ‘சேதுவுடன் ஸ்கூட்டரில் போய் மாதக் கணக்காகிறதே’ என்று நீலா நினைத்தபோது அவள் மனம் வேதனைப்பட்டது. இந்த நிருபர் வேலை இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்ளும் வேலையாக இருக்கிறதே… ஓய்வு இல்லாமல், குடும்ப வாழ்க்கையைக் கவனிக்க முடியாமல்… என்றெல்லாம் நீலா நினைத்துக்கொண்டே தன் அலங்காரத்தை முடித்தாள். 

சேதுவும் சொன்னபடி ஆறு மணிக்கு வந்துவிட்டான். 

“நீலு… நீலு…” என்று கூவியபடியே அவன் உள்ளே நுழைந்தான். 

சேது ‘நீலு’ என்று கூப்பிட்டு எத்தனை நாட்கள் இல்லை மாதங்கள் ஆயின. நீலாவின் மனம் துள்ளியது. இன்றுபோல் என்றுமே இருவரும் மனமகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்காக அவள் எந்த முயற்சியும் எடுப்பதாய் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். 

“என்ன சேது… பழையபடி நீலுன்னு கூப்பிடறீங்க?” என்றாள் கிண்டலாக. 

“இன்னக்கி என் பழைய நீலுவா நீ இருக்கே- அதான் அப்படிக் கூப்பிடறனே” என்றான் சேது. 

நீலாவின் அலங்காரம் அவனுக்குப் பிடித்திருந்தது. சென்ற முறை அவனாகவே எடுத்துத் தந்த ‘மாவ்’ வண்ண சேலையும் அதற்கேற்ற சோளியும் அளவான இரண்டு நகைகள் கழுத்திலுமாக நீலா மென்மையான நிலவாக நின்றாள். சேது கண்கொட்டாமல் அவளைப் பார்த்தான். நீலாவுக்கு வெட்கம் உடலில் மின்னலாக ஓடியது. தலையைக் குனிந்துகொண்டாள். சேதுவின் மனம் நிறைந்தது. 

“நான் இன்னும் கால் மணியில் தயாராகிவிடுவேன்” என்று உள்ளே ஓடினான் சேது. 


‘ஆளுக்கு இன்னொரு பாசந்தி’ என்று சேது சொன்னபோது, நீலா அவனை வியப்புடன் பார்த்தாள். 

“என்ன சேது! இப்போதுதானே ஒரு பாசந்தி சாப்பிட்டு முடிச்சோம்” என்றாள். 

“இத்தனை மாதமாக நாம வெளியே சேர்ந்து வந்து சாப்பிடாத குறையெல்லாம் மறக்கத்தான் இரண்டாவது பாசந்தி” என்று சிரித்தான். 

“சாப்பிட்டு முடிந்ததும் பனகல் பார்க்கில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டுப் போகலாமா சேது?” 

“நீலு சொன்னா சேது செய்யமாட்டானா?” 

“சேது இது பொது இடம். இந்தக் குழைவெல்லாம் தேவைதானா?” என்று சிணுங்கினாள் நீலா. 

“சரி, நீலுன்னு வீட்டிலேயே கூப்பிடறேன் நீலு” என்றான் சேது குறும்பாக. 

மீண்டும் ஸ்கூட்டரைக் கிளப்பி, பனகல் பார்க் வரை போய் அதை வைக்க இடம் கண்டுபிடிக்க அலைய சேது விரும்பவில்லை. இருவரும் நடந்தே பூங்காவை அடைந்தார்கள். நடப்பதும் அந்த நெரிசலில் எளிதான காரியமில்லை. நீலா கழுத்துவரை புடவைத் தலைப்பால் போர்த்திக்கொண்டு நடக்க வேண்டியிருந்தது. ‘சங்கலித் திருட்டு’ இன்னும் குறையவில்லையே. 

பூங்காவில் கூட்டம் அதிகமாக இல்லை. எல்லாரும் வெளியே அவசரமாக நடந்துகொண்டே இருந்தார்கள். ‘எல்லோரும் எங்கே போகிறார்கள்’ என்று நீலா அடிக்கடி வியந்ததுண்டு. அன்றும் அப்படியே. 

“ஏய், நீலு… பார்க் வந்தாச்சு… இன்னும் என்ன யோசனை?’ சேதுவின் குரல் நீலாவை அழைத்தது. 

“ஒண்ணுமில்லை… நம்முடைய தினசரி, அவசர வாழ்க்கையைப் பற்றித்தான் யோசனை” என்றாள். 

“அது இருக்கட்டும். அதை மறக்கத்தானே நாம வெளியே வந்தோம்… வேறு ஏதாவது பேசுவோமா?” 

“எதைப் பற்றி சேது?” 

“நமக்குக் குழந்தை ஏன் இன்னும் வரவில்லை என்பதைப் பற்றிப் பேசினால் நீலு வருத்தப்பட மாட் டாளே” என்றான் அவள் கன்னத்தை லேசாகத் தட்டி. 

“நானும் அதைப்பற்றி யோசனை செய்யாமலில்லை.” “நல்லது… என்ன யோசனை?” 

“நாம இரண்டு பேரும் பெங்களூர் போய் அங்கே ‘இன்பெர்ட்டிலிடி க்ளினிக்’கில் பரிசோதனைகள் செய்து கொண்டால் என்ன?” நீலா குறிப்பாகவே சொன்னாள். 

“அதெல்லாம் தேவைதானா நீலா? நீதான் ஏற் கெனவே ஒருமுறை கருத்தரித்தாயே?” 

“அது இரண்டு வருஷத்துக்கு முன்னால் சேது… இரண்டு வருஷமா இப்படி இருக்கே… எனக்குப் புரியவில்லை.” 

“நமக்கு வாழ்க்கையிலே ரொம்ப ‘டென்ஷன்’ நீலு… இரண்டு பேருமே ‘ரிலாக்ஸ்’, செய்யறதில்லே. அதுகூட காரணமாக இருக்கலாமே.” 

“இருக்கலாம்… அதுவும் காரணமாக இருக்கலாம்..”

“அப்படின்னா வேற காரணங்கள் இருக்கும்னு நினைக்கிறியா நீலு?” 

“நான் என்ன ஸ்பெஷலிஸ்ட் டாக்டரா? இப்பெல் லாம் விஞ்ஞானத்தின் உதவியாலே மருத்துவத் துறையில் எவ்வளவு முன்னேற்றங்கள்னு உங்களுக்கு நான் சொல்லணுமா? அதை நாமும் பயன்படுத்திக்கலா மேன்னு நினைக்கிறேன்.” 

“என்ன செய்யணும்னு சொல்லேன்.” 

“நாம் ஒருமுறை பெங்களூர் க்ளினிக் போய் வருவோம். இரண்டு பேருமே சில முக்கிய ‘டெஸ்ட்டு களைச் செய்துகொள்வோம்…” 

“நான் எதுக்கு ‘டெஸ்ட்’ செய்துகொள்ள வேண்டும்? என்னிடம் குறைன்னு நீ சொல்றியா?” 

சேதுவிடமிருந்து இந்த பதிலைத்தான் நீலா எதிர் பார்த்தாள். சந்தேகமேயில்லை. சேதுவும் கோடிக்கணக் கான ஆண்களில் ஒருவன்தானே. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா- நாடு எதுவானால் என்ன? ஆண்களுக்கென்று இருக்கும் ஆணவம் சேதுவுக்கும் இருக்காதா? ‘ஆணவம்’ என்ற சொல்லே ‘ஆண்’ என்றதிலிருந்துதான் வந்ததோ? 

“என்ன நீலா… நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லலையே” சேது மீண்டும் ‘நீலு’வை விட்டு ‘நீலா’வுக்கு மாறியதும் அவன் சற்று தொலைவில் போக ஆரம்பித்தான். 

“சேது… நீங்களும் நானும் மனித இனம்தானே? இருவருக்குமே ‘பயலாஜிகலா’ குறைகள் இருக்கலாமே. பெண்களுக்கு மட்டுமே குறை என்பது எந்த விதத்தில் சரியான வாதம்?” என்றாள். 

“நிருபர் நீலா சொல்லும்போது தப்பாகுமா?” என்று சேது கிண்டல் செய்தான். 

“எனக்குக் கோபம் வரும் சேது” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நீலா. 

“ஏய், நீலு… நீ சொல்றபடியே செய்வோம். பெங்களூர் போய் வருவோம் சரிதானே” என்றான் சேது. 

நீலாவினால் நம்ப முடியவில்லை. 

“இத்தனை நேரம் என்னை வேணும்னே கலாட்டா செய்றீங்க… அப்படித்தானே?” 

“ஒண்ணு உண்மை… மற்றபடி நிறைய கலாட்டா.”

“எது உண்மை?” 

“குழந்தை வேணுங்கறது.” 

“சேது… சேது…” என்று மேலே பேச முடியாமல் நீலா சேதுவின் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் கண்கள் குளமாயின. 

“போகலாம், நீலு… மணி பத்தடிக்கப் போகுது” என்று அவளை அழைத்தான். 


அவர்கள் வீட்டு வாசலில் ஓர் ஆட்டோ நின்றிருந் தது. அதில் யார் இருந்தது என்பதை தெரிந்துகொள்ளு முன், மூர்த்தி இறங்கினான். 

“ஹலோ, சேது, நீலா… நீங்க இன்னும் பத்து நிமிஷத்துலே வர்ரலேன்னா நான் போறதாய் இருந்தேன்.” 

‘இந்த நேரத்துலே இவன் எதுக்கு வந்திருக்கான்’ என்று சேது எரிச்சலடையக் காரணம் இருந்தது. 

“நான் இரண்டே நிமிடம்தான் நீலாவிடம் பேசணும் சேது… ஒரு மிக முக்கிய செய்தி…” என்று இழுத்தான். 

நீலா, மூர்த்தி இருவரையும் ஒருமுறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு சேது ‘களுக்’ என்று சிரித்தே விட்டான். பிறகு அவன் வீட்டுக்குள் போனான். 

அத்தியாயம்-6

சேது வேலைக்குப் புறப்பட்டபோது ஏற்கெனவே நீலா எழுந்துவிட்டிருந்தாள். ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தாள். 

“என்ன இது நீலா, காலையில் ஆறரை மணிக்கு இவ்வளவு சீரியசா எழுதறே?” 

“சேது நான் இன்னக்கி பிரபு இருக்கும் ஆராய்ச்சிக் கூடத்துக்குப் போய் இன்னும் சில விவரங்கள் சேகரிக்கணும்….அதுக்குத்தான் இதுவரை என்னென்ன இருக்குன்னு ஒழுங்குபடுத்தினேன்.” 

“நீ வழக்கமான நேரத்துக்கு வந்துடுவியா?” “அநேகமாக வந்துடுவேன்.” 

“எனக்கு ஆறுமணிக்கு முன்னால் வர முடியாது நீலு.” 

நீலு! 

“காலையிலேயே என்ன ‘நீலு’ போடறீங்க?” 

“நேற்று மாலை வெளியே போனது, பார்க்கில் பேசினது எல்லாமே மனசுக்கு இதமா இருந்தது நீலு… அதான் நீலுன்னேன் நீலு” சேது சிரித்தான். 

“காபி போடட்டுமா?” என்றாள் நீலா. 

“நீ காபி போட்டா வேணாம்னு சொல்வேனா… அதிருக்கட்டும். மூர்த்தி ஏன் உன்னைப் பார்க்கக் காத்திட்டு இருந்தான்?” 

“ஒரு முக்கிய விஷயம் சொன்னான். அதுக்காகத்தான் நான் பிரபுவின் ரிசர்ச் பில்டிங்கிற்குப் போகணும் இன்னக்கி.” 

“அப்படி என்ன முக்கிய விஷயம்?”

“சொல்லியே ஆகணுமா?” 

“சொன்னா நான் என்ன பேப்பரிலயா போடப் போறேன்?” சேது பலமாகச் சிரித்தான். நீலாவும் சிரித்துவிட்டாள். 

“இந்த விவகாரத்திலே அமைச்சர் ரங்கதுரையின் பேரும் அடிபடுது… அவர், டாக்டர்கள் பாலு – சாலமன் இரண்டு பேருடன் தொடர்பு கொண்டு ஏதோ திட்டம் உருவாக்கப்படுகிறதுன்னு மூர்த்தி சொன்னான்.” 

“அப்ப ரங்கதுரை ஆபீசுக்குத்தானே நீ போகணும்.” “இல்லை! ரங்கதுரையைவிட பாலு, சாலமன் இரண்டு பேரிடமிருந்து விவரம் சீக்கிரம் வெளியே வரும்னு எனக்குத் தோணுது.” 

“நீ கவனமாக இருக்கணும் நீலா…” கருத்துடன் சொன்ன சேதுவை நீலா அன்போடு பார்த்தாள். 

“நிச்சயம், சேது… நம்முடைய கனவுகள் இன்னும் நினைவாக வேண்டுமே” என்றாள். 

“நானும் சீக்கிரம் புறப்படணும்” என்று சேது தயாரானான். 


சேது அவனுடைய ஆபீசுக்கு வந்தபோது அவனுக்கு முக்கிய செய்தி காத்திருந்தது. தாளை எடுத்துப் படித்தான். 

‘இன்று 200 மூட்டைகள் வருகின்றன. அதில் பூச்சிக்கொல்லி இருக்கிறது. கவனமாக அவற்றை எண்ணி, மற்ற மூட்டைகளுடன் கலக்காமல், தண்ணீர் படாத இடத்தில் வைக்கவும். இன்னும் மூன்று வாரத்தில் இவை பற்றின ஏற்பாடுகள் பற்றி அறிவிப்பு வரும்’ என்ற செய்தியை சேதுவின் ஹெட் ஆபீசிலிருந்து சீனியர் எக்சிகூடிவ் அனுப்பியிருந்தார். 

சேது வேலை செய்த இடம் ஒரு பெரிய கம்பெனியின் வேர்ஹவுஸ்! அந்தக் கம்பெனி விவசாயத்துக்கான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவைகளை லட்சக்கணக்கான ரூபாய் அளவில் வாங்கிச் சிறு கடைகளுக்கு விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது. சென்னையின் வெளிப்புறத்தில் ‘ரெட் ஹில்ஸ்’ போகும் வழியில் பழைய கட்டடத்தைக் கொஞ்சம் சீர்படுத்தி, அதில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தனர். சேதுவின் வேலை கடினம் இல்லையானாலும், கவனம் அதிகம் வைக்க வேண்டிய வேலை. என்னென்ன உர மூட்டைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வருகின்றன என்பதையெல்லாம் கணக் கெடுத்து, கம்ப்யூட்டரில் ‘இன்வென்டோரி’ செய்ய வேண்டும். அன்றாடம் கடைகளுக்கு அனுப்பப்படும் மூட்டைகள் கணக்கையும் பார்த்து, தினமும் மாலையில் கணக்கைச் சரி செய்ய வேண்டும். தலைமை அலுவலகத் திலிருந்து கேள்விகள் வந்தால் கணக்குக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அவனுக்கு உதவி செய்ய ஆறு ஆட்கள் இருந்தனர்; கம்பெனிக்கு மூன்று லாரிகள். மற்றபடி தேவைக்கேற்ப ஒவ்வொரு நாளும் தினசரி கூலிக்கு ஆட்களை நியமிப்பதும் சேதுவின் வேலைதான். 

சேதுவின் தினசரி வேலையில் காலையில் மூன்று மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் வேகமாக ஓடிவிடும். இடையில் மூன்று மணி நேரம் அவன் பேப்பர் படிப்பதும், பழைய கணக்குகளைப் பார்ப்பதும், தலைமை அதிகாரிகளுடன் போனில் பேசுவதும்- இப்படியாகக் கழியும். 

அவனுக்கு அங்கு வேலை செய்வதில் பிடிக்காதவை இரண்டு விவரங்கள். ஒன்று, மாதம் இரண்டு முறை யாவது சில உர மூட்டைகளோ, பூச்சிக்கொல்லி மருந்து களோ காணாமல் போவது. மற்றது, மூட்டைகள் வந்து இறங்கும்போதும், லாரிகளில் ஏறும்போதும் சிலவற்றி லிருந்து வாடையும், மிகச் சன்னமான தூசும் வரும். சேதுவும் அங்கு வேலை செய்யும் மற்றவர்களும் அந்தத் தூசை சுவாசிக்காமல் இருக்கவே முடியாது. மெல்லிய துணியால் மூக்கை, வாயை மூடிக்கொண்டு மூட்டையை அடுக்கு வோர் போல சேதுவும் மூடிக் கொள்வதில்லை. தூரத்தில் நின்று வேலையைக் கண்காணித்தாலும் தூசு அவனை நாடி வருவது போல இருக்கும். வரும். தடுக்க முடியாது. 

சேது அடிக்கடி நினைப்பதுண்டு. ‘இந்த அளவு இது போன்ற ‘கெமிக்கல்ஸ்’ தூசு எல்லாம் உள்ளே போகிறதே…உடலை எந்தவிதத்தில் பாதிக்குமோ- புற்று நோய் போன்ற கொடும் நோய்கள் வருவதற்குக் கூட வாய்ப்பு ஏற்படும் என்று நீலா அடிக்கடிச் சொல்கிறாளே’ என்று நினைப்பான். இந்த வேலையில் இன்னும் ஒரு வருடமாவது இருந்தால், ஐந்து ஆண்டு பயிற்சியை வைத்துக்கொண்டு வேறு வேலை தேடலாம் என்ற எண்ணம்தான் அவனைத் தொடர்ந்து வேலையில் இருக்கச் செய்தது. அங்கு வேலை செய்யும் மற்ற ஆட்கள் எதைப் பற்றியும் கவலையில்லாமல் மூட்டை தூக்கிய கையோடு பன், ரொட்டி சாப்பிட்டு, டீ குடிப்பதையும் தினமும் சேது பார்க்கிறான். வயிற்றைக் கழுவ வேலை செய்யும் மக்களுக்கு, நாளைக்கு வரும் புற்றுநோயை விட இன்றைய பசியின் கொடுமை அதிகம் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இது சாதாரணமான நிலையாயிற்றே என்று நினைத்தபோது சேது வருந்தினான். 


“குட் மார்னிங், மிஸ்டர் சேது” என்று சேதுவின் உதவியாள் ஒருத்தன் கூப்பிட்டபோதுதான் சேது மீண்டும் இந்த உலகத்துக்கு வந்தான். 

“குட் மார்னிங்.” 

“இன்னிக்கு ஏதாச்சும் பெரிய ஆர்டர் வருதா சார்?” 

“இருநூறு மூட்டைகள் பூச்சிக்கொல்லி மருந்து வருமாம். எப்பவும் அனுப்பறாங்களே ‘மேலதயான்’ என்கிற பூச்சிக்கொல்லி- அதுதான் இன்னிக்கும் வருது. அதைத் தண்ணீர் படாமல் உலர்ந்த இடத்தில் அடுக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று சேது சொன்னதும் உதவியாள் போய்விட்டான். 

தலைமை அலுவலகத்திலிருந்து ‘மேலதயான்’ பூச்சிக்கொல்லியைத் தண்ணீர் படாமல் வையுங்கள் என்று செய்தி வந்ததற்குக் காரணம் இருக்க வேண்டும். சேதுவுக்கு ஏற்கெனவே சில கடைகளிலிருந்து புகார் வந்திருந்தது. அவர்கள் விற்ற ‘மேலதயான்’ வேலை செய்யவில்லை என்று விவசாயிகள் சொன்னதாக சேது அறிந்தான். ஏன் என்பது சேதுவுக்கு அப்போது புரியவில்லை. தலைமை அலுவலகத்தைக் கேட்டபோது அவர்களும் அப்போது ஒன்றும் சொல்லாமல், இப்போது ‘தண்ணீரில் மருந்து கலந்தால் சில நேரங்களில் அப்படி ஆகிவிடலாம்’ என்று சொல்கிறார்கள். 

‘மேலதயான்’ என்று சேது நினைத்தபோது நீலாவின் ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’ சட்டென்று நினைவு வந்தது. அவள்கூட ‘மேலதயான்’ பற்றித்தானே இப்போது செய்தி சேகரித்து வருகிறாள்; அவளுக்கு ‘மேலதயான்’ பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே… அன்று மாலை வீட்டிற்குப் போனதும் அவளிடம் நிச்சயம் அதுபற்றி பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மேலே வேலையைக் கவனித்தான் சேது. 


நிலா ஆபீசுக்குப் போன் செய்து மூர்த்தியிடம் பேசி னாள். தான் நேராக டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சிக் கூடம் போவதாயும் பிற்பகல் ஆபீசுக்கு வருவதாயும் சொன்னாள். மூர்த்தி “நானும் வருகிறேனே” என்றபோது அவள் “இப்போது தேவையில்லை மூர்த்தி. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டாள். மூர்த்தி போனை வைத்துவிட்டு தன்னறைக்குத் திரும் பியதும் ஆசிரியர் செங்கோடன் அங்கு வந்து நின்றார். 

“என்ன, மூர்த்தி… நீலா எங்கே?” என்றார். 

“நீலா ஆராய்ச்சிக்கூடத்துக்குப் போயிருக்காங்க” என்றான். நீலாவை ‘நீ, போ, வா’ என்று நேரடியாய் பேசும்போது சொன்னாலும், ஆபீஸில் மற்றவர்களிடம் அவளைப் பற்றிப் பேசும்போது ‘அவங்க, போங்க’ என்றவாறுதான் மூர்த்தி பேசுவான். ‘புரொபாஷனல்’ தோரணையில் பேசுவது நல்லது என்பது அவன் கருத்து. “அப்படியா? சரி, நீ இதுவரை எடுத்த படங்களை எப்பப் பார்க்கலாம்?” என்றார் செங்கோடன். 

“இன்னும் ஒரு மணி நேரத்துலே எடுத்து வரட்டுமா?” என்றான் மூர்த்தி. “சரி” என்று சொல்லிவிட்டு செங்கோடன் தன்னறைக்குப் போய் தொலைபேசியை எடுத்து ஓர் எண்ணைச் சுழற்றினார். 

“நீலா நேராக ஆராய்ச்சிக் கூடத்துக்குப் போயிருக்கா. அவள்கூட இன்னக்கி மூர்த்தி இல்லை” என்று சொன்னார். 

அடுத்த பக்கத்தில் ஒலித்த குரல் “எல்லாம் நானே கவனிச்சிக்கிறேன் சார்” என்றது. போன் வைக்கப்பட்டது. 

செங்கோடன் பெருமூச்சு ஒன்றை விட்டார். மேசை யில் இருந்த செய்திகளைப் பரீசிலிக்க ஆரம்பித்தார். 


நீலா ஆராய்ச்சிக் கூடத்துக்கு வந்தபோது டாக்டர் பிரபு இன்னும் வரவில்லை என்று தெரிந்தது. 

“அவருக்கு உடம்பு சரியில்லையாம்… சுரம், உடல்வலி என்று வீட்டில் தங்கிவிட்டார்” என்று பானு சொன்னாள். பிரபுவின் அறை பூட்டப்பட்டிருந்தது. 

“தேங்க் யூ… ஆராய்ச்சி அறை வரைக்கும் நான் போய் வரலாமா?” என்றாள் நீலா. 

“தாராளமாய் போகலாம். அங்கே டாக்டர்கள் பாலு, சாலமன் இரண்டு பேருமே இருக்காங்க- உங்களுக்கு விவரம் சொல்லுவாங்க” என்று பானு உற்சாகமாகச் சொன்னதை நீலா வரவேற்றாள். 

மறுபடியும் பானுவுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆராய்ச்சி அறையை நோக்கி நடந்தாள். நீண்ட பாதையில் நடந்து வலது பக்கம் திரும்ப வேண்டும். பாதையின் கோடிக்கு வந்ததும் நீலாவுக்குப் பழக்கமான இரண்டு குரல்கள் ஒலித்தன. நீலா நின்றுவிட்டாள். 

“ஏய் பாலு… இன்னக்கி பிரபு வரலை; நீயும் நானும் கொஞ்சம் ‘லைப்ரரி ரிசர்ச்’ செய்யலாமா?” 

“என்ன செய்யணும்?” 

“விடிய விடிய பேசினாலும் சீதைக்கு ராமன் என்ன உறவுங்கிற மாதிரி நீ கேக்கிறயே… நேத்து ரங்கதுரை நம்மகிட்ட பேசின விவரத்தை மறந்துட்டியா?” 

“சாலமன், இந்த ரங்கதுரை விவகாரம் எனக்கு நிறைய பயத்தை உண்டாக்கியிருக்கு… நீயும் நானும் ஏதோ பெரிய சிக்கலிலே மாட்டப் போறோம்னு நினைக்கிறேன்.” பார்த்துக்கறேன். எனக்குத் துணையா மட்டும் நீ இருந்தா “பாலு, ரங்கதுரையை எப்படி சரி கட்டறதுன்னு நான் போதும்.” 

“உன் மேலே நம்பிக்கை இருக்கு. ஆனா அந்த ரங்க துரையைப் பத்தி நான் அப்படிச் சொல்ல முடியாது” 

பாலு உறுதியாகவே சொல்லிவிட்டான். 

நீலாவுக்கு இந்தப் பேச்சு போய்க்கொண்டிருந்த திசை விறுவிறுப்பாக இருந்தது. தான் தெரிந்தகொள்ள வேண்டிய விவரம் இப்படித் தானாகத் தன்னை நோக்கி வருவது தன்னுடைய நல்ல காலம் என்று நினைத்தாள். 

“பாலு, நாம இன்னக்கி பதினோரு மணி வரைக்கும் வேலை செய்வோம்… பானுகிட்ட சொல்லிட்டு ‘லைப்ரரி ஒர்க்’ பார்க்கப் போகலாம்” என்றான் சாலமன். தன் கையிலிருந்த சிகரட் துண்டை கீழே வீசிவிட்டு சாலமன் போக, பாலுவும் அவனைத் தொடர்ந்தான். 

நீலா சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருந்த ஆராய்ச்சி அறைக்குள் நுழைந்தாள். 

அவளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத பாலுவும் சாலமனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“ஹலோ டாக்டர்ஸ் பாலு, சாலமன்” என்று உற்சாக மாகக் கூவிய நீலாவுக்குப் பதில் சொல்லாமலிருக்க முடியவில்லை. 

“என்னங்க, நிருபர் நீலா… நீங்களும் இங்கே ஆராய்ச்சி செய்ய வர்றாப்போல தினமும் வர்றீங்க?” சாலமன் கிண்டலாகப் பேசினான். 

“அப்படியும் சொல்லலாம். நான் செய்வது விஞ்ஞான ஆராய்ச்சி இல்லை. விஞ்ஞானத்தைப் பற்றின ஆராய்ச்சி” என்று நீலா சொன்னதும் சாலமன் கிண்டலை மறந்தான். ‘நீலா புத்திசாலியான ரிப்போர்ட்டர்’ என்று தான் கேள்விப்பட்டதை இப்போது நேரடியாகப் புரிந்துகொண்டான். 

“இன்னிக்கும் எங்களைப் பேட்டி காண வந்தீங்களா?” என்றான் பாலு தயக்கத்துடன். 

“உங்கள் உதவியை நாடி வந்தேன்னு சொன்னா சரியாயிருக்கும்” என்றாள் நீலா விட்டுக் கொடுக்காமல். 

“என்ன செய்ய வேண்டும்?” சாலமன் புருவத்தை உயர்த்தினான். 

“டாக்டர், ‘மேலதயான்’ என்கிற பூச்சிக்கொல்லி மருந்தைப் பற்றி மேலே நீங்க சொல்ல முடியுமா?” 

“அதை டாக்டர் பிரபுவிடம் கேளுங்கன்னு நான் சொன்னேனே!” சாலமன் பிடிகொடுக்காமல் பேசினான். 

“ஆனால் டாக்டர் பிரபு இன்னக்கி வரவில்லை. இன்னும் சில நாட்கள் வருவாரோ இல்லையோ… அவருக்கு ‘ஃப்ளூ’ என்று பானு சொன்னாங்க. எனக்கு இந்தக் கட்டுரையை முடிக்கணும். டாக்டர் பிரபு இல்லாதபோது நீங்க இரண்டு பேருந்தானே இங்கே பிராஜக்ட் டைரக்டர்கள் போல… உங்களுக்குத் தெரியாத விவரம் யாருக்குத் தெரியப்போவுது-டாக்டர் பிரபுவைத் தவிர…” என்று அழகாக முடித்தாள். 

பாலுவின் முகத்தில் பெருமையின் களை கட்டியது. சாலமன் முகவாயை ஒருமுறைத் தடவிக் கொண்டான்.

“அதோ பார்த்தீங்களா?” என்று மேசைமேல் இருந்த எலிக் கூண்டுகளைக் காட்டிவிட்டு, “அந்தக் கூண்டுகளை இரண்டாகப் பிரித்து, ஆண் எலி, பெண் எலி என்று இரண்டு பக்கங்களில் தனித்தனியாக வைத்து ஆராய்ச்சி நடக்கிறது” என்றான் பாலு. 

“ஆண் எலிகளுக்கு ‘மேலதயான்’ தினசரி ஆகாரத்தில் ஓரளவு கொடுக்கப்படுகிறது. இன்னொரு கூண்டிலிருக் கும் ஆண் எலிகளுக்கு வெறும் ஆகாரம்தான். ஆண் எலிகளுக்கு உயிரணுக்கள் குறைகின்றனவா என்பதை டாக்டர் பிரபு ஆராய்ச்சி செய்கிறார்.” 

“மிகவும் சுவாரசியமான ஆராய்ச்சி” என்றாள் நீலா. மேலும் விவரங்கள் அதிகமாக வரவில்லை என்றாலும் சிறிதுநேரம் பாலு, சாலமன் இருவரிடமும் பேசிவிட்டு, ஆராய்ச்சி அறையை ஒருமுறை பார்த்து சில கேள்விகள் கேட்டபின் அவள் அங்கிருந்து புறப்பட்டாள். கட்டடத்தை விட்டு வெளியே வந்த நீலா ஆட்டோவுக்காகக் காத்திருந்தாள். தூரத்தில் ஒரு மரத்தடியில் நின்று சிகரட் பிடித்துக்கொண்டிருந்த ஓர் ஆள் நீலாவையே கவனித்துக் கொண்டிருந்தான். அது செங்கோடன் அனுப்பிய ஆள் என்பது நீலாவுக்குத் தெரியாது.


நீலா பார்வையிலிருந்து மறைந்ததும் சாலமன் பாலுவிடம் தணிந்த குரலில் பேசினான். “பாலு, இந்த நீலா நம்ம இரண்டு பேரையும் கவனிக்கிறாளோ அப்படின்னு தோணுது.” 

“சேச்சே… இவளுக்கு என்ன வந்தது? ஒரு விஞ்ஞானக் கட்டுரையை எழுதி முடிச்சிட்டா அடுத்த ரிப்போர்ட்டிங் பிராஜக்ட் அவ்வளவுதானே.” 

“இருந்தாலும், நாம பிரபு அறையிலிருந்து வந்ததைப் பார்த்துட்டு பானுகிட்ட சொல்லியிருந்தா நம்ம பாடு ஆபத்து இல்லையா?” சாலமன் நிறுத்தினான். 

பாலுவுக்குப் பழைய பயம் திரும்பியது. ஏற்கெனவே ரங்கதுரையிடம் சிக்கல் ஒன்று. இப்போது நீலா வேறே. சட்டென்று பாலுவுக்கு ஒரு ஐடியா வந்தது. 

“ஏய், சாலமன்… இந்த நீலாவைப் பத்தி ரங்கதுரை கிட்ட சொல்லி வைச்சா எப்படி?” என்றான். சாலமன் சிறிது யோசித்துவிட்டுத் தலையை ஆட்டினான். அவன் மூளை வழக்கத்தைவிட அதிகமாகவே வேலை செய்தது.

– தொடரும்…

– கல்கி வார இதழ் 14.5.1995 ல் தொடங்கி 30.7.1995 வரை பன்னிரண்டு இதழ்களில் தொடராக வந்தது.

– மாண்புமிகு கம்சன் (விஞ்ஞான நாவல்), முதற்பதிப்பு: 2014, வானதி பதிப்பகம், சென்னை.

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *