மஹால் சுந்தர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 5,047 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒலி 96.8ல் ‘மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ’என முன்னிரவில் மாலையை விரட்டிக் கொண்டிருந்த நேரம், நான் சென்ற வருடத்திய டைரிகளை அடுக்கிக் கொணடிருந்தேன். விதவிதமான டைரிகள். வருடா வருட டைரிகளின் பளபளப்பும் தரமும் கூட விஞ்ஞான வளர்ச்சியின் மாற்றங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. காயத்ரி மூன்றாம் முறையாக,‘ வந்து சாப்பிடுங்களே.. டைம் ஆச்சில்லே.. தூங்கவேண்டாமா’ என்றாள். 

நான் திரும்பி அவளைப் பார்த்ததில் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் ‘ம்ம். இதுக்கு ஒன்ணும் கொறக்சலில்லை. கோபம் மட்டும் வந்துருது. படக்குன்னு. இதுகளுக்கிட்டே வந்து இப்படி படணும்ன்னு எழுதி வெச்சிருக்கு என்ன பண்ண?’ வாய்க்குள்ளேயே முறுக்கொண்டு இடுப்பை வெட்டி நடந்தாள். இடுப்பை வெறித்து விட்டு வேலையைத் தொடர்ந்தேன்? 

முதல் டைரிக்கு இந்த வருடத்தோடு பதினைந்து முடிந்து பதினாறு வயது ஆரம்பிக்கிறது. அண்ணனுக்கு நான் டைரி எழுதவேணடும் என்று எப்படித் தோன்றியதோ தெரியவில்லை. சென்னையில் ஏதோ ஒரு கம்பெனியில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்து முதன்முதலாய் பொங்கலுக்கு ஊருக்கு வந்த போது அட்டையில் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பொறிக்கப்பட்ட டைரியை என்னிடம் கொடுத்தார். பிளஸ்டு முடித்துவிட்டு புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வேதியியல் படித்த தருணத்தில் அதை நான் பெருமையாகக் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு பெண்களிடம் ரவுசு காட்டியதுண்டு. வழக்கம்போல் கரம்பக்குடியிலிருந்து வரும் கவிதாவிடம் அதைக் கொடுத்து உள்ளே சங்கர் பயல் வைத்திருந்த காதல் கடிதத்திற்காக அவளிடம் திட்டு வாங்கியது ஏப்பம் போல சின்ன வாசமாய் வந்துபோனது. 

எல்லாவற்றையும் அடுக்கிக்கொண்டிருந்தபோது கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்ட தோரணையில் முதலில் கண்களில் பட்டது, 1999ம் ஆண்டு டைரி. சிங்கப்பூர் வந்து இரண்டாவது டைரி. ஏதோ ஒன்று தோன்ற எடுத்துப் பார்த்தேன். முதல் பக்கத்தில் ஒரே ஒரு தும்பிக்கை மட்டும். அதன் கீழே ‘மஹால் சுந்தர்’. ஆங்கிலத்தில்! சுந்தர் என் பெயர்தான். ஆனால் அதை நான் எழுதவில்லை. அத்தும்பிக்கையை நான் வரையவுமில்லை. 

ஐந்து வருடங்கள் எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான நாட்களைக் கொண்டிருக்கிறது. நினைவில்? இதோ நேற்றைய பொழுதுபோல ஞாபகம் இருக்கிறது. புகித் பாதோவின் ஸ்டேடியத்திற்குப் பின்னா லிருக்கிற மலைப்பூங்காவில் நான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். தயங்கித்தயங்கி அவள் வருகிறாள். நான் அவளை முதலிலேயே பார்த்துவிட்டாலும் முகத்தை ஏதோ யோசனையின் பேரில் வைத்துக்கொண்டிருக்கிறேன். 

‘மஹால் சுந்தர், குமுஸ்த கா?’ 

‘என்னிடம் பேச ஏதாவது இருக்கிறதா உன்னிடம்? எனக்கு இப்போது உன்னோடு பேசப் பிடிக்கவில்லை. உனது வேலையைப் பார்க்கலாம. 

‘கோபமாக இருக்கிறாயா? நான் உன்னைப்போல இங்கு அலுவலக வேலை செய்யவரவில்லை. நினைக்கும்பொழுதில் எங்கு வேண்டு மானாலும் உன்னால் செல்லமுடியும். எனக்கு அப்படியில்லை உனக்குத் தெரியுமா?’ கூடவே விசும்பல் சத்தம். 

திரும்பிப் பார்த்தேன். கண் கலங்குகிறாள். ‘நீ கண் கலங்குவதை முதல் முறை பார்க்கிறேன். எனக்கு இது புதிதாக இருந்தாலும் பிடிக்க வில்லை. அழாதே! பெண்களின் கண்களில் இத்தகைய தருணங்கள் என்னால் உருவாவதை நான் விரும்பவில்லை. அப்படியே யார் அழுதாலும் என்னை வழுக்குவதற்காக்த்தான் அழுகிறார்களோ எனத் தோணுகிறது.‘

‘என்ன வேண்டுமென்றாலும் நினைத்து விட்டுப்போ. நான் இங்கே அமரலாமா? உனக்குப் பிரச்சனை எதுவுமில்லையே?’ 

‘இல்லை. நீ உட்காரலாம். எதற்காக என்னை இங்கு வரச்சொன்னாய் என்பதை மட்டு ம் முதலில் சொல்லிவிடு . நான் சீக்கிரம் போக வேண்டும்.’ 

‘என்னோடு பேசப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடு. நான் போய்விடுகிறேன். போகட்டுமா?’ ‘சரி, கோபித்துக் கொள்ளாதே’ இந்தா உனக்குப் பிடித்த ‘இந்தியன் ரோஜாக்’ எடுத்துக்கொள். சாப்பிடு. உன் பிரச்சனையைச் சொல். என்ன ஏதாவது வம்பில் மட்டும் மாட்டிவிட்டுவிடாதோ! நானும் பிழைக்க வந்தவன்தான். புரிகிறதா?’ 

‘ம்ம். ஊரில் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்லையாம். ஏதாவது கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.’ 

நான் திரும்பிப் பார்த்தேன். தூரத்திலிருந்த ‘ காண்டோ’ வின் உச்சி விளக்குகளை அவள் மேய்ந்து கொண்டிருந்தாள். 

அதெப்படி ஏதாவது ஒரு பெண்ணிடம் நான் பழகியவுடன் அவர்களின் பணக்கஷ்டம் அதிகமாகி உடனே என் ஞாபகம் அவர்களுக்கு வருகிறது எனத் தெரியவில்லை. கூச்சப்படாமல் கேட்டும் விடுகிறார்கள். மற்ற ஆண்களுக்கும் இதே நிலைதானா இல்லை எனக்குத்தான் அந்த பாக்கியமா? யோசனை அவளது வருத்தத்தை அதிகமாக்கும் என்றறிந்து, ‘ என்னாச்சு உன் அப்பாவுக்கு’ என்றேன். 

விவரத்தை அவள் சொல்லி முடிக்கும் வரையில் நான் அதை அசிரத்தையாகக்கூட கேட்காமல், அடுத்த கேள்வியைத் தயாராக வைத்திருந்தேன். 

‘உன் ‘பாஸ்’ வீட்டில் கேட்டாயா? கேட்கவேண்டியதுதானே என்ன சொன்னார்கள்?’ ‘ எப்படிக் கேட்கச் சொல்கிறாய்? எனது சம்பளத்தில் போன மாதம் வயிற்றுவலிக்கு பார்த்ததைக் கழித்துக் கொண்டார்கள். மீதி

எவ்வளவு வரும் என உனக்குத் தெரியும். அதையும் அப்போதே’ அனுப்பிவைத்து விட்டேன். இப்போது எல்லாம் காலி.’ 

அதற்குமேல் அவள் பேச எதுவுமில்லை என்பதை, என்னைவிட அவள் நன்றாக உணர்ந்திருக்கிறாள். நிறுத்திக்கொண்டாள். 

‘ சரி, எவ்வளவு வேண்டும். அதிகமாகக் கேட்காதே. முடியாது என்று சொல்ல நான் விரும்பவில்லை. ‘ 

‘ஐம்பது இல்லை நூறு வெள்ளி. முடியுமா? போதும்.’ 

‘ இந்தா. பணத்தை வாங்கிக்கொண்டு. அருகே உட்கார்ந்திருக்காதே! கிளம்பு. அனுப்பிவிட்டு அப்பாவின் உடல்நிலை பற்றி எனக்கு தெரியப்படுத்து. பார்க்கலாமா?’ 

‘உனது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.’ 

கரண்டியாய் இருக்கவேண்டும். கீழே விழுந்த சத்தம் காதுக்குள் கிண்ணெண்றது. 

அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டுப் போய் சாப்பிட மனசில்லை. சாப்பிட்டுவிட்டு வந்து அந்த வேலையைத் தொடர்வதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு வழியாய் முடித்து விட்டால் பிறகு நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு தூங்கலாமே என்று தோன்றியது. சொன்னால் தலைகீழாக ஆடுவாள். அதிரச்செய்வாள். எதிலுமே தன்னை மதிக்கவில்லை என்பதாய் ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பாள். படக்கென்று இப்படி குற்றம் சாட்டுவதிலும் பொய் பேசுவதிலும் பெண்கள் வல்லவர்கள் போல. அவளும் அப்படித் தான் செய்தாள். இவளும் அப்படித்தான் செய்கிறாள். 

“என்ன காயத்ரி? என்ன பண்ணுறே?” பதிலுக்கு சத்தமேயில்லை. அப்படியே போட்டுவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றேன். ஆளில்லை. சன் டிவியின் ‘ நீங்கள் கேட்ட பாட’ லில் திருமணமான புதிதில் பார்த்த வேதம்புதிதை வெட்கத்தோடு அந்த குண்டுப் பெண்மணி சொல்ல அதை அந்த அப்பாவிக்கணவர் அசடாய் ஆமோதித்துக்கொண்டிருக்க காயத்ரி வத்த கண் வாங்காமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஹாலுக்கும் சமையலறைக்கும் இடையில் இருந்த அந்த மறைப்பு எனக்கு இப்போது வசதியாயிருக்க அவளைக் கொஞ்சநேரம் அப்படியே ரசித்துக்கொண்டிருந்தேன். 

“சாப்பிடலமா?” திரும்பாமல் கேட்டாள். எங்கிருந்தாலும் நம்மீது தான் கவனம் போல! 

“நீ டிவி பாத்துக்கிட்டுயிருக்கியே… எப்படி சாப்பிடுறது?” 

அவள் முறைத்ததில், நல்லவேளை! கட்டிடம் இடிந்து விழவில்லை. எங்காவது அதற்குப் பதிலாய் குண்டு வெடித்திருக்கலாம். அவ்வளவு 

சக்தி கொண்ட பார்வை அது. சக்தி எப்போதும் வீணாவதில்லை யாமே. மாற்றுச்சக்தியாய் வேறிடத்தில் உலவிக் கொண்டிருக்கு மாமே! 

சாப்பிடும்போது டிவியைப் பார்ப்பது எனக்குப் பழகிப்போன ஒன்று இரண்டு விஷயத்தில் இது நன்மை பயக்கும். ஒன்று எந்தப் பிரக்ஞையும் இன்றி அவளின் அமிர்த உணவை வயிற்றுக்குள் எளிதாகத் தள்ளிவிடலாம். இரண்டாவது. தேவையில்லாத ஆனால் நேரம் பார்த்து வீசப்படும் பௌன்சர்களை, யார்க்கர்களைத் திறமையாக அமைதியாயிருந்து தவிர்க்கலாம். 

நேஷனல் ஜியாக்ரபிக்கு மாற்றினேன். மணிலாவின் கரடுகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். நச்சென்று தலையில அடித்தது அது. படக்கென்று கண்ணில் விழுந்து எழுந்து பறந்து போனது அதுதானே. மனம் புலம்பத் தொடங்கியது. முன்னும் பின்னும் அலைந்தது. ஆராயத் தொடங்கியது. அசை போட்டது. நினைவுக் கடலலைகள் 

திடுமென்று மொத்தமாய் எழும்பி அதிர்ந்து குலூங்கி மீண்டும் எழும்பி கரை நோக்கி பயணிக்கத் தொடங்கின. பிபிட்’ வந்து விட்டது. மனசுக்குள் தென்றலாய் பறக்க ஆரம்பித்து விட்டது. என்னையும் அதனுடைய மெல்லிசையால் கவர்ந்து இழுக்கப் புறப்பட்டு விட்டது. 

‘என்ன அது? என்றாள் என் கையிலிருந்த புது டைரியைப் பார்த்துவிட்டு. 

‘புது வருட டைரி’ என்றேன். 

‘இதெல்லாம் உனக்குப் பழக்கமா? முதல் பக்கத்தில் என்ன

எழுதுவாய்..?’ ஆர்வத்தோடு கேட்டுவிட்டு என் கையிலிருந்து அதைப் பிடுங்கித் திறந்து பார்த்தாள். என் பாக்கெட்டில் இருந்த பேனாவைத். தானாகவே எடுத்து, அந்த தும்பிக்கை மட்டும் வரைந்தாள் அதற்குக்கீழே மஹால் சுந்தர் என்றும். 

‘என்ன இது?’ 

‘உனக்குப் பிடித்த பிள்ளையார் காட். தி காட் ஆப் ஹெல்த் அண்ட் வெல்த். நீதானே காட்டினாய். சொன்னாய்.’ மனதில் மல்லிகைப் பூக்கள் மழைத்துளியாய்க் கொட்டிக்கொண்டிருந்தன. 

‘உன்னிடம் ஒரு உண்மையை ரொம்ப நாளாய் மறைத்து வருகிறேன்’ என்றாள் அவள். தலை குனிந்திருந்தது. 

ஒரு நிமிடம் அதிர்ந்த நான், ‘ இதில் தவறொன்றும் இல்லை. எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்பது அவசியமில்லையே’ என்றேன். 

முகம் வாடியது. ‘எல்லோரும் போலத்தான் உன்னையும் நினைக்கி றேனா? இல்லை நீயும் அப்படித்தான் நினைக்கிறாயா? நாம் நல்ல நண்பர்கள் இல்லையா?’ என்றாள் குரலில், தோய்ந்த வருத்தத்தோடு. ‘மன்னித்துக்கொள். நீ என்னிடம் எதையோ இதுவரை மறைத்திருக்கிறாய். அப்படியானால் இதுவரை அப்படியில்லை என்றுதானே அர்த்தம்’ என்றேன் நான். ‘நிஜமாகவே என்னை மன்னித்துக்கொள். இன்று உன்னிடம் சொல்லியாக வேண்டும் என்றுதான் வந்தேன். சொல்லாமல் போக மாட்டேன். சொல்லட்டுமா?’ அவளது முகத்தை ஏறிட்டேன். கொஞ்சம் அகலம் அதிகமாயிருந்தாலும் எனககுப பிடித்த உருண்டை வடிவத்தில் விரிந்த உதடு களுடன் கன்னங்கள் மின்னும் குழந்தை முகம். ‘நீ இந்தியாவுக்கு வாவேன்.. நடிகையாக ஒரு படத்தில் நடித்துவிட்டுப் பிறகு கலைப் பயணம செய்து நிறைய சம்பாதிக்கலாம்’ என்றேன் கேலியாய் நான் சொல்லி முடிப்பதற்குள் சிரித்துக்கொண்டே சொன்னாள். ‘உங்கள் ஊருக்குப் பக்கம்தானே பங்களாதேஷ். அங்குதான் வரப்போகிறேன். நீ இஷ்டப்பட்டால் அப்படியே இந்தியாவுக்கும் வந்து நடிகையாகி விடுகிறேன். என்ன ஓகே தானே!’ 

ஒரு நிமிடம் வியப்பு மேலிட்டது. ‘ஏன்? அங்கு ஏதாவது வேலை கிடைத்து விட்டதா? போகப்போகிறாயா?’ 

‘ஆமாம். இதுபோன்ற வேலையில்லை. வீட்டு மனைவியாக. ரா. பிக்கு. ‘ சொல்லியவுடன் முகம் தாழ்ந்து புற்களைப் பார்த்தாள். உடல் வளைந்திருந்தது. 

எதுவும் புரியவில்லை எனக்கு. அமைதியாக இருந்ததை அறிந்து நிமிர்ந்தாள் ‘ ரா. பியைக் காதலிக்கிறேன்’ என்றாள் வெட்கம் இழைந்தோட, காற்றுக்கும் வலிக்காத தொனியில். 

எனது முகத்தில் ஈயாடவில்லை. ஏதோ நினைத்துத் திரும்புகையில் ‘ ணங்’ கென்று முகத்தில் இரும்புக்கதவு இடித்தது போலிருந்தது. அளவுக்கு அதிகமாக வலித்தது. இதயம் நின்று துடித்ததால் ரத்த நாளங்களில் அழுத்தம் கூடிக்குறைந்து மயக்கமாய் வந்தது . கண்கள் சுழன்றன. 

‘என்னானது உனக்கு? ஏன் அமைதியாக இருக்கிறாய். உனக்கு சந்தோசம்தானே’ என்றாள் ஏஞ்சி. ஏஞ்செலீனா ‘ ரோமினிகா, பிலிப்பைன்ஸ்காரி. பிலிப்பைன்ஸிலிருந்து வீட்டு வேலைக்காக இங்கு வந்தவள். அப்படியே என் உயிரை வாங்கவும். 

“ம்ம். இப்படியே உக்காந்திருந்தா எப்போ தூங்கப்போறது வரவர எதுவும் சரியில்லை இந்த வீட்லெ. எழுந்திருங்க உங்களத்தான். அப்பொவே எங்கப்பா சொன்னார். வாக்குப்போட்டாருன்னா போட்டதுதான். இன்னக்கி வரைக்கும் நடக்குது.” பாய்ந்து வந்த நீரலை அணையில் மோதி நிற்பது போல காயத்ரியின் சொற்கள் என்னை நினைவலைகளிலிருந்து நிறுத்தின. பரஸ்பர சோகங்கள் மனதில் கோர்வை யாய் சூழ்ந்திருக்க, வேண்டாவெறுப்பாய் எழுந்தேன். 

மொத்த டைரிகளையும் அள்ளி ஓரமாக வைத்தேன். இனி நாளை தான். கையில் சிகரெட்டை எடுத்துக்கொண்டு வராந்தாவிற்குச் சென்றேன். வெளியே விளக்கு வெளிச்சத்தில் இரு ஜோடிகள் அபாய கட்டத்தைத் தாண்டுவதற்கு ஆயத்தமாயிருந்தனர். சிறிய வயதினராக இருந்தாலும் அபாயத்தைத் தாண்டுவதில் அறிய முனைவதில் அப்படி ஒரு ஆனந்தம்; ஆவல், இச்சை! வருத்தமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அவளும் அப்படித்தானே தாண்டினாள்!

அதற்குப்பின் ஏறக்குறைய ஐந்து மாதங்கள்கழித்துத்தான் ஏஞ்சியைப் பார்த்தேன். இடையில் போன் கூட செய்யவில்லை. 

புகித் பாதோவின் கம்யூனிட்டி கிளப்பில் நடந்த ஏதோ ஒரு விழாவுக்கு நண்பர்களின் கட்டாயத்தால் நான் சென்றிருந்தபோது அவளைப் பார்த்தேன். ஏதோ ஒரு வித்தியாசம் படக்கென்று தெரிந்தாலும் இருட்டினில் என்னவென்று சரியாக உணர முடியவில்லை. 

என்னைப் பார்த்ததும் அருகிலிருந்து சேஷ்டைகள் செய்து கொண்டிருந்த அவனை ஒதுக்கினாள். எழுந்து வந்தாள். இது ரா.பி என்றாள். தலையை விரித்துப் போட்டுக்கொண்டு மீசையை இழந்திருந்த அப்பட்ட ‘ பங்களாதேச’ முகவாசி என்னைப் பார்த்து இளித்தான். காவிபடிந்த பற்களைப் பார்த்து எனக்கு எரிச்சல் அதிகமானது. 

என்ன செய்கிறீர்கள் என்றேன். இங்குதான் ஏதோ ஒரு இடத்தில் குப்பை அள்ளுபவனாக வேலை செய்கிறானாம். அவன் சொல்லியது கொஞ்சம் நாகரீகமாக இருந்தது. நான் அவளைப் பார்த்தேன். வாழ்த்துகள் என்றேன். இப்போதும் அதை நான் கவனிக்கவில்லை. 

அடுத்த ஒரு வாரத்தில் பயங்கர அழுகையோடு போனில் என்னைக் கூப்பிட்டாள் ஏஞ்சி. 

விட்டால் போனிலேயே அழுது ஒப்பாரி வைத்து மயங்கி விழுந்து விடுவது போலிருந்தது அவளது குரல். எங்கு வரவேண்டும் என்பதைக் கேட்டுக்கொண்டு விரைந்து சென்றேன். அழுதழுது முகம் வீங்கியிருந்தது. என்னைப் பார்த்ததும் கதறினாள் 

சுற்றும் முற்றும் பார்த்து அவளைச் சமாதானப்படுத்தினேன். என்ன விஷயம் என்றேன். சொன்ன விஷயம் கேட்டு தலை சுற்றியது. 

ஐந்து மாதம் கர்ப்பம் என்றாள். நான் இதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. 

‘என்ன சொல்கிறாய்? வேலைக்கு வந்த இடத்தில் இப்படியெல்லாம் என்று தெரிந்தால் உன்னை உடனே அனுப்பிவிடுவார்கள் தெரியுமா?’ ‘ வேலை செய்யுமிடத்தில் சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்’ என்றாள் அப்பாவியாய்.

‘ஷிட்.. என்ன செய்திருக்கிறாய் பார். எங்கே போயிற்று புத்தி அவனுக்கு? ரா. பியிடம் சொன்னாயா?’ என்றேன் மிகுந்த வருத்தத்துடன். 

ஓவென்று அழுதாள். அவளை அணைத்து அழுகையை நிறுத்து வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மெதுவாகச் சொல்கிறாள். ‘ அவன் நல்லவனில்லை!’ 

‘வாட் டு யு மீன்? அப்படியென்றால்..?’ 

‘பாஸ்டர் தோ* அவன்! நேற்று மாலை பார்க்கிற்கு வந்தபோது அவனிடம் விஷயத்தைச்சொன்னேன். சீக்கிரம் நாம் உனது நாட்டிற்கு கிளம்ப வேண்டும் என்றேன். நிதானமாக யோசித்த அவன் அதெல்லாம் இப்போது முடியாது என்கிறான். சரி கலைத்து விடலாமா என்று கேட்டதற்கு மிகவும் கூலாகச் சொல்கிறான். இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்.. அந்த இந்தியன் என்ன ஆனான்? என்று. 

ரத்தம் கொதித்தது எனக்கு. ‘என்ன சொல்கிறாய்?’ 

‘என்னை மக்டெலீனா என்று சொல்லிவிட்டான் அந்த பாஸ்டர்தோ. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த நாயைக் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாமோ எனத் தோன்றுகிறது. பயமாயிருக்கிறது. ‘ சொல்லிவிட்டு விக்கி விக்கி அழுகிறாள். 

என்ன நடக்கிறது என்பது புரியவே கொஞ்சம் நேரமானது. ஒரு முடிவுக்கு வந்தவனாய்ச் சொன்னேன். ‘எழுந்திரு. வீட்டிற்குப் போ. உனது பாஸ் வீட்டில் எதையும் காட்டிக்கொள்ளாதே. லேசாகக்கூட அழுது நீயாகக் காட்டிக்கொடுத்து விடாதே. நாளைக் காலை எனக்காகக் காத்திரு. செராங்கூன் செல்லலாம்.’ 

எல்லாம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தோம் ரயிலிலிருந்த டிவியில் சில தீவுகளைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தர்கள் எதையோ பார்த்த அவள் படக்கென்று என் தாடையைப் பிடித்துச் சொன்னாள் ‘அதுதான் பிபிட் பேர்ட் . எங்களூர் வானம்பாடி. அந்த மாதிரி இருக்கவேண்டுமென்று நினைத்தேன். எல்லாம் முடிந்து விட்ட்து.’ மெதுவாக விசும்பியவள் எனது தோளில் சாய்ந்து கொண்டாள். 

அதற்குப்பின் அவ்வப்போது போனில் பேசுவாள். வேலை செய்த இடமும் வசிக்கும் இடமும் மாறிவிட்டதாய்ச் சொன்னாள். 

திடுமென ஒருநாள் அதிகாலையில் எனது கைத்தொலைபேசிக்கு அழைத்து ‘இன்று மாலை உன்னைச் சந்திக்க விரும்புகிறேன் எனக்காக வருவாயா? உன்னைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. உனக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருக்கிறது. தரப்போகிறேன்’ என்றாள். 

புகித்பாதோவின் ஸ்டேடியத்திற்குப் பின்னாலிருக்கும் அதே மலைப் பூங்கா. வருகிறாள். அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

‘குமுஸ்த கா சுந்தர்?’ 

மென்மையாக சிரிக்கிறேன். ‘இந்தா இது உனக்கு’ என்கிறாள். வாங்கிப் பார்க்கிறேன். ஆணும் பெண்ணுமாக இருவர் இருக்கும் ஓவியம். ஆண் நான்தான் என்பது என் மீசையில் தெரிகிறது. என்னருகில் இன்னொரு பெண். ‘யார் இது?’ 

‘ஒஓ அகோ.*’ 

புரியாமல் அவளைப் பார்க்கிறேன். ‘பிபிட் பேர்ட்!’ சொல்லிவிட்டு என் கையை எடுத்து உதட்டில் ஒத்திவிட்டு நகர்கிறாள். தூரத்தில் பெருவிரைவு ரயில் அடுத்த நிறுத்தத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. 

தக்காலே (பிலிப்பைன்ஸின்) மொழியில். 

*மஹால் – – அன்புக்குரிய 

*குமுஸ்த கா – – நலமா? 

*பாஸ்டர் தோ – – தவறான வழியில் பிறந்தவன் 

*மக்டெலீனா – – தவறான பெண்

‘ஒஓ அகோ.*’ – நான்தான் (உன் அன்பிற்குரியவள்)

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *