மலைக்கன்னி







(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்குமென்று ஒரு பழமொழியுண்டு. அது மற்றவர்கள் விஷயத்தில் எப்படி இருந்தாலும் தன் விஷ யத்தில் நூற்றுக்கு நூறு உண்மையென்று பாலாஜி கன விலும் எதிர்பார்க்கவேயில்லை.

வாரி வழங்கிய தெய்வத்துக்கு நன்றி தெரிவிப்பதற் குப் பதிலாக இப்பொழுது அந்தத் தெய்வத்தை அவன் வாய் கொண்டமட்டும் சபித்துக் கொட்டினான். கண்டு களிக்க வேண்டிய அழகுகளைச் சுற்றாடல்களிலெல்லாம் படைத்துவிட்டு, அவைகளைப் பார்த்து ரசிக்கக் கண்களை மட்டும் கடவுள் கொடுக்க மறந்துவிட்டாரென்றால் அந் தக் கடவுளை ஒரு குருடன் வாழ்த்தவா செய்வான்? பாலா ஜியும் கிட்டத்தட்ட இதே நிலைமையில் தான் இருந்தான் என்று சொல்ல வேண்டும்.
அவன் பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே அவனை ஈன்ற தாய் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டாள். பிறந்த குழந்தை சர்வ அவலட்சணமாக, ஒரு மனிதக் குரங் கைப்போல் இருப்பதைக் கண்டு மனம் உடைந்து அவள் உயிர் நீத்ததாக அப்பொழுது ஊரில் பலரும் பேசிக் கொண்டார்கள்.
தந்தை சொக்கநாதரோ, “ஆண் பிள்ளைக்கு அழகு என்ன வேண்டிக்கிடக்கிறது?” என்று நினைத்தார் போலும். தாய்க்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தை யாகவும் இருந்து பாலாஜியை அவர் அருமை பெருமை யாக வளர்த்தார். தனது பிள்ளையை உலகம் புகழும் ஒரு மேதையாக்கிவிட வேண்டுமென்று அவர் கனவு கண் டார். சொற்ப வருமானத்தைக் கொண்டும் நான்கு பேர்களிடம் கை நீட்டி வாங்கியும் பாலாஜியைப் பட்டப் படிப்புக்கு முந்திய வகுப்புவரை எப்படியோ படிக்க வைத்துவிட்டார். கல்லூரி மூடுவதற்கு முதல்நாள் பரி சளிப்பு விழாவில் வழங்கப்பட்ட எல்லாப் பரிசுகளையும் எடுத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க ஆசையோடு அவன் வீடு திரும்பிய பொழுது அவனுக்குப் பெரிய ஏமாற் றந்தான் அங்கே காத்திருந்தது. சந்தோஷம் தாங்காமல் கட்டித்தழுவி முத்தமிடுவாரென்று அவன் எதிர்பார்த்த சொக்கநாதர் சாவைத் தழுவிவிட்டார்.
அவருடைய இறுதிச் சடங்குகளை நடத்துவதற்குக்கூட வீட்டில் ஒரு செப்புக் காசும் இல்லாதது பாலாஜிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சில மணி நேரத்துக்கு முன் னால் தலை நிமிர்ந்து பெருமையோடு அவன் வாங்கிய பரி சுக் கோப்பைகளெல்லாம் கைமாறின. சொக்கநாதரின் இறுதிச் சடங்குகள் ஒரு குறையுமில்லாமல் நடந்தேறின.
அதன் பிறகு….?
பாலாஜிக்கு வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டமாதிரி இருந்தது.
பிறந்த உடனேயே பெற்ற தாயைப் பலி கொடுத்தான்.
பொழுது விடிந்தால் சாப்பாட்டுக்கு வழியில்லாத தரித்திர நிலையை அவன் உணர்ந்த பொழுது கவலையும் ஏக்கமும் அவன் மனதில் குடிகொண்டன. ஆறுதல்மொழி கூறித் தேற்றுவதற்குக்கூட அவனுக்கு யாருமில்லை. இப் படிப்பட்ட ஒரு ஜன்மம் வாழத்தான் வேண்டுமா என் விரக்தி மனப்பான்மை அவனை ஆட்கொண்டது.
அந்த விரக்தியில் என்ன செய்கிறோம், ஏன் செய் கிறோம்? என்ற நினைவு இல்லாமல் வீட்டைவிட்டு வெளிப் பட்டு அவன் நடந்தான். கால் இட்டுச் சென்ற இடமெல் லாம் நடந்தான். அந்தப் பயணம் அவனைப் புகையிரதப் பாதையில் கொண்டுபோய் விட்டது. புகையிரதப் பாதை யின் நடுவே அமர்ந்து கண்களிலே கண்ணீர் வற்றிப் போகும் வரையில் வாய்விட்டுப் புலம்பி அழுது தீர்த் தான்.
ஏற்கனவே மனிதக் குரங்குபோலிருந்த அவன் முகம் அழுது அழுது வீங்கிப்போய்ப் பார்க்கப் பயங்கர மாக இருந்தது.
இன்னும் சில நிமிட நேரம் அவன் அதே நிலைமையி லிருந்தால், சற்றுத் தொலைவில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த புகையிரதம் அவனையும் சொக்கநாதர் போன இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கும். அவன் மூலம் பல அதிசயங்கள் நடக்க வேண்டியிருக்க அவனை வாரிக் கொண்டுபோக விதிக்கு வலிமை ஏது?
இந்த நெருக்கடியான நேரத்தில்தான் கருணையுள்ளம் படைத்த கடவுள் மனித உருவிலே வந்து பாலாஜியின் வாழ்க்கையில் குறுக்கிட்டார்.
“யாரப்பா நீ? ஏன் இப்படிப் புகையிரதப் பாதை யிலே படுத்துக் கிடக்கிறாய்? அதோ புகையிரதம் வந்து கொண்டிருப்பது தெரியவில்லையா?”
இப்படிக் கேட்ட அந்த மனிதர் பாலாஜியின் பதிலுக் குக் காத்திராமல் அவனைக் குண்டுக் கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்துவதற்கும் “ஓ” என்ற பேரிரைச்சலுடன் புகையிரதம் அந்த இடத்தைத் தாண்டிச் செல்வதற்கும் சரியாக இருந்தது.
எல்லோரும் தனது அவலட்சணமான முகத்தைப் பார்த்து அருவருப்புடன் ஒதுங்கிச் செல்லுவது வழக்கமாக இருக்கையில் இனம் தெரியாத யாரோ ஒரு மனிதர் தன் உயிரைக் காத்து அன்பும் ஆதரவுமாகப் பேசியது பாலாஜிக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. எவரிடமாவது தனது துயரத்தைச் சொல்லி அழ விரும்பிய பாலாஜி இனம் தெரியாத அந்த மனிதரிடம் தனது சோக வரலாற்றைச் சொல்லி ஒரு குரல் அழுது தீர்த்தான்.
அதை மௌனமாகவும் பொறுமையாகவும் கேட்ட அம்மனிதர், “நீ ஒரு படித்த முட்டாள்! இதற்காகவா இப்படி உலகமே சூன்யமாகிவிட்டதாக எண்ணி உயிரை மாய்த்துக் கொள்ளப் புகையிரதப் பாதையில் வந்து படுத்தாய்? இந்த உலகத்தில் உன்னைவிட அதிகமாகக் கஷ்டப் படுகிறவர்கள் இன்னும் எத்தனை பேர்களிருக்கிறார்கள் தெரியுமா? பேசாமல் எழுந்து என் கூடவா” என்றார் அம்மனிதர்.
“என்னை எங்கே அழைக்கிறீர்கள் ஐயா?’ என்று வினவினான் பாலாஜி.
“கேள்வி ஒன்றும் கேட்காதே. என் கூடவா என்றால் பேசாமல் என் பின்னால் வா” என்று சொல்லிய அம்மனிதர் முன்னே செல்ல இயந்திரத்தினால் இயக்கப்பட்ட பதுமையைப்போல பாலாஜியும் அவர் பின்னால் சென்றான்.
நகரத்தை அடைந்ததும் பாலாஜியை வலுக் கட்டா யப்படுத்தி ஆடம்பர மானதொரு ஹோட்டலுக்குள் அம் மனிதர் அழைத்துச் சென்று அவனுக்கு வயிறார நல்ல உணவு படைக்கச் செய்தார். சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் பொழுது “இதுமாதிரிச் சாப்பாட்டை என்வாழ் என்று நாளில் என்றுமே நான் சாப்பிட்டதில்லை ஐயா” நன்றிப் பெருக்குடன் சொன்னான் பாலாஜி.
“அப்படியா தம்பி? இன்று முதல் இனி இரண்டு வேளையும் இதே ஹோட்டலில்தான் நீ சாப்பிடப் போகி றாய். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விடு கிறேன். புகையிரதப் பாதையில் நீ வாய்விட்டுப் புலம் பியதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டுதான் இருந் தேன். உன் தந்தை ஆசைப்பட்ட மாதிரி நீ உயர்தரக் கல்வி பயின்று மாமேதையாக வரப் போகிறாய்! நாளையே பீ. ஏ. ஹானர்ஸ் வகுப்பில் சேர மனுப் போட்டுவிடு. உன்னை அந்த வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு கல்லூரி அதிபருக்கும் நான் சொல்லி வைக்கிறேன்” என்று அம் மனிதர் சொல்லிய பொழுது பாலாஜிக்கு தான் காண் பதும், கேட்பதும் கனவா அல்லது நனவா என்ற சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் சுண்டு விரலைக் கடித்துக் கொண்டு வலி பொறுக்கமாட்டாமல் கத்தியேவிட்டான்.
அதைப் பார்த்து அந்த மனிதர் லேசாகச் சிரித்தார்.
“எல்லாம் கனவு போலிருக்கிறதா தம்பி?” என்று கேட்டார் அம்மனிதர்.
“ஆமாம் ஐயா. இந்தத் துர்ப்பாக்கியசாலியிடம் கருணைகாட்ட அகண்ட பிரமாண்டமான இந்த உலகத் திலே ஒருவர் இருக்க முடியுமென்பதை என்னால் இன்ன மும் நம்ப முடியவில்லை” என்று மனதில் பட்டதை ஒளியாமல் சொன்னான் பாலாஜி.
“வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டதாக நீ நினைக்கிறாய். இதில் ஏற்பட்ட கோளாறுதான் உன்னு டைய தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம் தம்பி. உன்னை விட அதிகமாகக் கஷ்டப்படுகிறவர்கள் இன்னும் எத்தேனை எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? கூன், குருடு, நொண்டி, ஊமையாக இல்லாமல் திடகாத்திர மாகவேனும் இருக்கிறோமே என்றெண்ணி நீ திருப்தியடைய வேண்டும். பூர்வ ஜன்ம விதிப் பயனை யாராலும் மாற்றியமைத்துவிட முடியாது தம்பி. அவரவர்களுடைய கர்மவினையை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. உன் வீட்டுக் குப் போவோம் வா” என்றார் அம்மனிதர்.
பாலாஜியின் வீட்டை வீடு என்று சொல்லுவதா அல்லது வீடு போலிருக்கும் ஒரு பாழடைந்த குடிசையென்பதா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். நான்கு சுவர் களும் ஒரு கூரையுமுள்ள இடத்தை வீடு என்று வர்ணிப் பது தவறில்லையென்றால் பாலாஜியின் இருப்பிடமும் ஒரு வீடுதான். வெளித்தோற்றத்துக்கு ஒரு பாழடைந்த குடிசைமாதிரி அது தோன்றினாலும் உள்ளே சுத்தமாக இருந்தது. அதில் குடியிருப்பவர்களின் குண விசேஷங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
“உன்னைப் பிடித்த துரதிர்ஷ்டமெல்லாம் இன்றோடு உன்னைவிட்டுப் போய்விட்டதாக எண்ணிக் கொள். நான் சொல்லியமாதிரி பீ. ஏ. ஹானர்ஸ் வகுப்பில் படிக்க நாளையே கல்லூரிக்கு மனுப்போட்டுவிடு. உனக்குத் தேவையான பணம் அவ்வப்பொழுது உனக்கு வந்து சேரும். உன் தந்தை வாழ்ந்த இதே வீட்டில் இருந்து கொண்டு அவருடைய இலட்சியத்தை மறக்காமல் நன்றா கப் படித்து முதல் வகுப்பிலே நீ சித்திபெற வேண்டும். இப்போதைக்கு இதை வைத்துக் கொள்” என்று சொல்லி இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைப் பாலாஜியிடம் கொடுத்துவிட்டு அவன் நன்றி சொல்லக் கூடக் காத்திரா மல் மளமளவென்று போய்விட்டார்.
அந்த விசித்திரமான மனிதர் யார்? என்பதைக் கிடைக்க கேட்டு அறியக்கூடப் பாலாஜிக்கு அவகாசம் வில்லை. அவனுக்கு எல்லாமே ஒரு கனவுபோலிருந்தது.
முதல் நாள் சாப்பிட்ட அதே ஹோட்டலுக்கு மறு நாள் அவன் தயங்கித் தயங்கிச் சென்றபொழுது ஹோட்டல் முதலாளி பாலாஜியை விசேட மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்றார். “வாங்க தம்பி, வாங்க, இனிமேல் இந்த ஹோட்டலிலேயே சாப்பிடலாம். கொஞ்சம் கூட யோசிக்காமல் வேண்டியதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொள். ஏழ்மையிலிருந்த என்னையும் அந்த மகாப் பிரபு ஜமீன்தார் விஜயவர்மர்தான் கை தூக்கிவிட்டார். அவருடைய தயவினால்தான் இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். அவருடைய அன்புக்குப் பாத்திரமாகிவிட்ட உனக்கும் இனிமேல் ஒரு கவலையும் இருக்காது” என்றார்.
விஜயவர்மர் சொல்லிவிட்டுப் போனபடி பீ. ஏ. ஹானர்ஸ் வகுப்பில்சேர கல்லூரி அதிபரிடம் பாலாஜி மனுவைக் கொண்டுபோய் நீட்டிய உடனேயே மனுவை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
“உன்னுடைய மூன்று வருடப் படிப்பிற்கும் ஜமீன் தார் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டார். நீ இனிக் கட்டணம் ஒன்றும் செலுத்த வேண்டியதில்லை” என்று கல்லூரி அதிபர் சொல்லியபோது தன்னை ஆதரிக்கும் விசித்திரமான மனிதரை எண்ணி எண்ணி வியந்தான் அவன்.
ஜமீன்தாருக்கு நன்றி சொல்ல அவருடைய மாளிகைக் குப் போகலாமா என்று சில சமயங்களில் அவன் எண் ணியதுண்டு. அவராக அழைத்தாலன்றிப் போவது உசித மில்லையென்று அவன் தன்னுடைய ஆவலை மிகுந்த பிர யாசையுடன் அடக்கிக் கொண்டான். ஒரு நாள் அவனை யும் மீறிப்போன ஆவல், எப்படியும் ஜமீன்தாரைப் பார்த்துவிடுவதென்று முடிவெடுக்கத் தூண்டவே, அப் பொழுது பார்த்து ஜமீன்தாரிடமிருந்தே அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. கல்கத்தாவிலிருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. பாலாஜி நன்றாகப் படிப்பதை தனது அட்வ கேட் மூலமாகக் கேட்டு மிகுந்த சந்தோஷப்படுவதாயும் அதேபோல ஊக்கம் குன்றாமல் தொடர்ந்து படிக்க வேண்டுமென்றும் இனி அவன் செலவுக்கு வேண்டிய பணத்தை அவ்வப்பொழுது அட்வகேட் அனுப்புவாரென்றும் விஜயவர்மர் எழுதியிருந்தார்.
இதன் பிறகு மாதாமாதம் பாலாஜிக்கு ஜமீன்தாரின் அட்வகேட்டிடமிருந்து தவறாமல் பணம் வந்து கொண்டிருந்தது. நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை ஜமீன்தார் எதிர்பாராதவிதமாக திடுதிப்பென்று பாலாஜியைப் பார்க்க வருவார். அவனுடன் வெகுநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போவார். தனது மாளிகைக்கு வருமாறு ஒரு முறையும் அவர் அழைத்ததில்லை. அவர் அழைக்காதிருக்கையில் அங்கு போக வேண்டு மென்று அவன் மறுபடி நினைக்கவும் இல்லை. இப்படியே மூன்று வருடங்களும் மூன்று நாட்களைப்போல் ஓடி மறைந்து விட்டன.
பிறகு ஒரு நாள்…
அத்தியாயம்-2
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தார் விஜயவர் மரை எந்தச் சூழ்நிலையில் பாலாஜி சந்தித்தானோ அதே போன்ற சூழ்நிலை அவன் வாழ்வில் திரும்பவும் குறுக்கிட் டது. அதே போன்ற மனத்துயரம்! அதேபோன்ற விரக்தி மனப்பான்மை. இனியும் உயிர் வாழ வேண்டுமா? என்ற அதே கேள்வி …!
இம்முறை தந்தையை இழந்த துக்கம் அவனை ஆட் கொள்ளவில்லை. தரித்திர நிலை அவனைத் துன்புறுத்த வில்லை…… அப்படியானால் வாழ்க்கையையே வெறுக்கும் படியான அத்தனை மனக்கசப்பு ஏன்?…
அன்று போலவே இன்றும் அவனுடைய கல்லூரியில் படிப்பு முடிந்து பரிசளிப்பு விழா நடந்தது. சென்னை மாநிலத்திலேயே முதன்மையாகச் சித்தி பெற்றிருந்த அவனுக்கே கல்லூரி வழங்கிய எல்லாப் பரிசுகளும் கிடைத்தன. இரண்டு கைகளும் கொள்ளாமல் பரிசுக் கோப்பைகளை அவன் அள்ளி எடுத்துக்கொண்டு வந்தபொழுது, பொறாமை பிடித்த சக மாணவர்கள் ‘ஏய் குரங்கு, ஏய் குரங்கு’ என்று நையாண்டி செய்து கூச்சலிட்டார்கள்.
“பாவம், இந்தக் குரங்கு எந்த மரத்தின் மேல் இந்தக் கோப்பைகளைக் கொண்டுபோய் வைக்கப்போகிறதோ?” என்றாள் ஒரு சக மாணவி.
“இத்தனை அறிவைக் கொடுத்த ஆண்டவன் கொஞ்சம் அழகையும் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று அங்கலாய்த்தான் இன்னொருத்தி.
“அழகு வேண்டாமடி… குரங்கு மாதிரியாகவாவது படைக்காம லிருந்திருக்கலாமல்லவ?” என்றாள் வேறொருத்தி.
“இவனை யார் கல்யாணம் செய்து கொள்ளுகிறாளென்று பார்க்க வேண்டுமடி.”
”ஆமாம், இந்தக் குரங்குக்கு எவள் துணிந்து சுழுத்தை நீட்டுவாள்…”
“அய்யோ பாவம்டி……”
“இத்தனை பாவப்படுகிறவள், நீ தான் அவனைக் கட்டிக் கொள்ளேன்…”
“அவனைக் கட்டிக் கொள்ளுவதை விடத் தற்கொலை செய்துகொள்ளலாம்….”
இப்படிச் சக மாணவிகள் பேசிக்கொண்டது பாலாஜியின் உள்ளத்தில் கூரிய அம்பாகத் தைத்தன. இதயமே வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு. வீட்டுக்குத் திரும்பியதும் பரிசுக் கோப்பைகளையெல்லாம் ஒரு மூலையில் வீசியெறிந்துவிட்டு சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்துக்கு முன்னால் போய் நின்றுகொண்டு அழுதான்.
“கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமென்பதைப் போல என் வாழ்வில் ஒரு ஜமீன்தாரைக் கொண்டு வந்து விட்டு என் ஏழ்மையைப் போக்கினாய். கொடுத்த தெய்வமே இப்பொழுது என்னைக்கெடுத்து விட்டதே. பலரும் பார்த்துச் சிரிக்கும்படி இப்படி அவலட்சணமாக என்னைப் படைத்துவிட்டாயே முருகா. உனக்கு நான் என்ன அபச்சாரம் செய்தேன்?”
முருகனுக்கு முன்னால் அமர்ந்து வாய்விட்டு அழுத பாலாஜிக்கு நேரம் வேகமாக நகர்ந்து நடுஜாமம் நெருங்கி விட்டது கூடத் தெரியவில்லை. கதவை யாரோ தட்டும் சப்தம் பலமாகக் கேட்டபொழுது தான் அவன் சிந்தனை கலைந்தது.
அந்த அர்த்த ஜாமத்தில் தன்னைத் தேடிக்கொண்டு யார் வர முடியும்? வி ஜயவர்மர் ஒருவரைத் தவிர தன்னைத் தேடிக்கொண்டு வரக்கூடியவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? விஜயவர்மர் இந்த நேரத்தில் வருவாரா….?
அழுது அழுது வீங்கிப் போயிருந்த முகத்தைத் துடைத் துக்கொண்டே இவ்வாறு நினைத்த பாலாஜி கதவின் அருகில் போய் நின்றபொழுது வெளியில் ஒரு மனிதன் இருமும் சப்தம் கேட்டது.
“யார் அது?” என்று கேட்டான் பாலாஜி.
“நான் தான் பாலாஜி! கதவைத் திற” என்று பதில் வந்தது வாசற்புறத்திலிருந்து.
அந்தக் குரலைக் கேட்டதும் பாலாஜியிடம் ஒரு பதட்டமும் பரபரப்பும் தோன்றியது.
“நீங்களா?” என்று கேட்டுக்கொண்டே அவசரமாக பாலாஜி கதவைத் திறக்கவும் ஒரு பெரிய டிரங்குப் பெட்டியைத் தூக்கமாட்டாமல் தலையில் சுமந்துகொண்டு ஒரு மனிதன் உள்ளே நுழைந்தான்.
”பாலாஜி! கதவைப் பத்திரமாக உட்புறம் தாழிட்டுக்கொண்டுவா!” என்று சொல்லிவிட்டு அம்மனிதன் உள்ளே போய் தலையிலிருந்த சுமையை மெதுவாகக் கீழே இறக்கி வைத்துவிட்டு ‘லொக்கு லொக்கு’ என்று இடைவிடாமல் இருமினான்.
அவன் சொல்லியபடியே கதவைத் தாழிட்டுக் கொண்டு வந்த பாலாஜி, அம்மனிதன் இருந்த நிலைமையைப் பார்த்தவுடன் கலவரமடைந்து போய்விட்டா னென்று கூறவேண்டும்.
“உடம்புக்கு என்ன ஐயா! ஏன் இப்படி இருமுகிறீர்கள்? டாக்டரை அழைத்துவரட்டுமா?” என்றான் பாலாஜி.
பாலாஜிக்கு அவனுடைய சொந்தத் துயரமெல்லாம் எப்படியோ பறந்து போயிற்று. தன்னை நாடி வந்த மனிதனின் உடல் நிலையைக் கண்டு அவன் அவ்வளவு தூரத்துக்குக் கவலையும் பரபரப்பும் அடைந்திருந்தான்.
“டாக்டரை அழைக்கிறேனென்றா சொன்னாய்? வீணாக உன்னை நீயே சிரமப்படுத்திக்கொள்ளாதே பாலாஜி! டாக்டர் வந்து செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இப்படி என் பக்கத்தில் உட்கார்!” என்றான் ஹீனஸ்வரத்தில் அந்த மனிதன்.
அவனை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்த பாலாஜி, “நான் சொல்வதைத் தயவு செய்து கொஞ்சம் கேளுங்கள் அய்யா! உங்களுடைய உடல் நிலைமை சரியாயில்லை. இந்த நிலைமையில் அர்த்தராத்திரியிலே என்னைப் பார்க்க வரவேண்டுமா? யாரிடமாவது சொல்லியனுப்பினால் நானே ஓடோடியும் உங்கள் இருப்பிடத்திற்கு வந்திருக்கமாட்டேனா? தூக்க முடியாமல் இந்த இரும்புப் பெட்டியையும் நீங்களே தூக்கிக்கொண்டு வேறு வந்திருக்கிறீர்களே” என்றான். அவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் அம்மனிதன் மறுபடியும் பலமாக இருமிவிட்டு கண்களை இலேசாக் மூடிக்கொண்டான். ஒரு வரட்டுப்புன்னகை அவன் உதடுகளில் தோன்றி மறைந்தது.
“எனக்குப் பயமாகயிருக்கிறது அய்யா!” என்றான் பாலாஜி. இதைச் சொல்லுகையில் அவனுடைய நாவு குழறியது.
“பயமாயிருக்கிறதா? என்னிடமா உனக்குப் பயமா யிருக்கிறது?” என்றான் அம்மனிதன்.
“உங்களிடம் இல்லை அய்யா. கருணாமூர்த்தியான உங்களிடம் எனக்கு என்ன பயம்? உங்க தேக நிலைமையைக் கண்டு தான் அஞ்சுகிறேன். டாக்டரை அழைத்து வந்து காட்டலாமே” என்றான் பாலாஜி.
மீண்டும் ஒரு வரட்டுப் புன்னகை செய்த அம்மனிதன் “டாக்டரிடம் காட்டக்கூடிய நோயாக இருந்தால் டெலிபோன் செய்து டாக்டரை என் பங்களாவிற்கே தருவித்திருக்கமாட்டேனா? இது தீரக்கூடிய நோயில்லை பாலாஜி! உயிரைக் கொண்டு போக வந்திருக்கும் நோய்! உயிர் போவதற்குள் உன்னிடம் மனம் விட்டுக் கொஞ்சம் பேச வேண்டுமென்பதற்காகத் தான் வந்தேன்” என்றான்.
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அய்யா. தர்மப் பிரபுவான உங்களுக்கு ஒரு குறையும் ஏற்படாது. டாக்டரிடம் இரண்டு வேளை மருந்து குடித்தால் உடல்நிலை சரியாகிவிடும். அதைரியப்படாதீர்கள் அய்யா!” என்று ஆறுதல் கூறினான் பாலாஜி.
“அதைரியமா? அது என்னுடைய அகராதியிலேயே கிடையாது பாலாஜி. தற்செயலாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் உன்னைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே உன்னிடம் என்னையறியாமல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. உன் கஷ்ட நிலைமையை அறிந்து உனக்கு உதவி புரிய வேண்டுமென்று என் அந்தராத்மா என்னைத் தூண்டியது. பணஉதவி மட்டுமிருந்தால் பரீட்சையிலே நீ முதன்மையாகத் தேறி பிரகாசிப்பாய் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டாயிற்று. இன்று மாலை கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் எல்லாப் பரிசுகளையும் நீயே வாங்கியதை நானும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன், தெரியுமா?” என்றான் அம்மனிதன்.
பாலாஜி தனக்குக் டைத்த பரிசுகளையெல்லாம் எடுத்து அம்மனிதனின் பாதங்களில் வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து “இவையெல்லாம் எனக்குக் கிடைத்தவை அய்யா. உங்கள் உதவியாலும் ஆசியாலும் எல்லாப் பரிசுகளும் எனக்கே கிடைத்தன” என்றான்.
“போதிய உதவி மட்டும் இருந்தால் கல்லூரியில் நீ பிரகாசிப்பாய் என்பது எனக்குத் தெரியும் பாலாஜி. நான் மேற்கொண்ட பொறுப்பைச் செய்து முடித்துவிட் டேன். இனி அதிக நாள் உயிருடனிருக்கமாட்டேன் என்று என் அந்தராத்மா எனக்குச் சொல்லுகிறது.உயிர் போவ தற்குள் என் மனதிலிருக்கும் ஒரு பெரிய சுமையை உன் னிடம் ஒப்படைத்துவிட்டுப் போகவேண்டும். உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. செய்வாயா? சொல் பாலாஜி, சொல்லு உன் உதவி எனக்குக் கிடைக் குமா?” என்றான் அம்மனிதன்.
இதென்ன கேள்வி அய்யா! என் உயிரையே உங்கள் காலடியில் அர்ப்பணிக்க வேண்டுமென்று சொன்னாலும் தயங்காமல் இந்த க்ஷணமே செய்வேனென்று தெய்வ சாட்சியாகப் பிரமாணம் செய்கிறேன்” என்றான் பாலாஜி.
‘அப்படியானால் இந்தா,
இந்தா, இந்தப் பெட்டியைப் பொறுப்பெடுத்துக்கொள்” என்று அந்த மனிதர் கூறவும் ”பெட்டியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றான் பாலாஜி.
அந்த மனிதனின் போக்கு அவனுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரியிருந்தது.
“இந்தப் பெட்டியை நான் என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள். சொல்லுகிறபடி செய்து முடிக்கிறேன்” என்று அவன் பதிலளித்தான்.
“ஆம்; நீ என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாய் என்பது எனக்குத் தெரியும். உன்னை முதன் முதலாகச் சந்தித்த பொழுது உன்னிடம் நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேள் பாலாஜி. இப்பொழுது நான் சொல்லுவதை மறுபடி உனக்குச் சொல்லும் சந்தர்ப்பம் எனக்கு இல்லாமலே போகலாம். நாளை சூரியோதயத்தை நான் பார்ப்பேனா மாட்டேனா என்பதே சந்தேகம். ஆகையால் மிக மிகக் கவனமாகக் கேள். இரண்டாயிரத்து ஐந்நூறு வருடப் பழமை வாய்ந்த ஒரு குடும்பத்தின் அதி பயங்கரமானதும் சோகம் நிறைந்ததுமான ஒரு வரலாற்றை உன்னிடம் சொல்லப்போகிறேன். அதோடு ஒரு அதிமுக்கியமான பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கப்போகிறேன். எனக்குக் கல்யாணமாகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறதென்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் விஜயவர்மன்.
“”தெரியாது” என்றான் பாலாஜி.
“எனக்கு ஒரு குழந்தையிருக்கிறது. இப்பொழுது அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது. பெயர் ஜோதிவர்மன்” என்றான் விஜயவர்மன்.
“தங்களைக் கணவராகப் பெறும் புனிதவதியும் குழந்தையும் இம்மண்டலத்தில் தான் இருக்கிறார்களா?” என்று கேட்டான் பாலாஜி. விஜயவர்மன் ஒரு பெருமூச்செறிந்தான். கேட்கக் கூடாத எதையேனும் அவனிடம் கேட்டுவிட்டோமோ என்று பாலாஜி ஒருகணம் யோசிக்கையில் “அந்தப் புனிதவதி இம்மண்டலத்தில் இல்லை பாலாஜி! அம்மையப்பன் பாதார விந்தங்களை அடைந்து விட்டாள். ஜோதிவர்மன் பிறந்த பத்துத் தினங்களுக்குள்ளாகவே அவள் உயிர் துறந்துவிட்டாள்.
நான் சொல்வதைக் கேட்டால் ஏதோ பைத்தியக்காரன் உளறுவதைப்போல உனக்குத் தோன்றும். ஜன்னி சண்டு பிதற்றுகிறேனோ என்று கூட நீ சந்தேகப்படுவாய். ஆனால், நான் சொல்லும் ஒவ்வொருவார்த்தையும் உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். அப்பொழுது நீயே ஆச்சரியப்பட்டுப் போவாய். என் மூதாதையர் என்றால் ஏதோ இரண்டு மூன்று சந்ததிக்கு முற்பட்டவர்களல்ல. ஐம்பத்தைந்து சந்ததிகளுக்கு முன்னால் அதாவது சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னால் மகத நாட்டில் பிம்பிஸாரன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அப்பொழுது மகதநாட்டுக்கும், கோசலநாட்டுக்கும் இடை விடாமல் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இருதரப்புச் சேனைகளிலும் எவ்வளவோ லட்சம் பேர்கள் மாண்டு போனார்கள். அஜாதசத்துருவிற்கு ஜயகேசரியென்ற மதி நுட்பம் வாய்ந்த ஒரு மாமந்திரி உண்டு. அவருடைய சாமர்த்தியத்தினால் யுத்தம் நின்று மகதத்துக்கும் கோசலத்துக்கும் நட்புறவு ஏற்பட்டது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் அஜாதசத்துருவை அவனுடைய தகப்பன் பிம்பிஸாரனே படுகொலை செய்து அந்தப் பழியை மாமந்திரி ஜய கேசரியின் மீது சுமத்தி விட்டான். செய்யாத குற்றத்துக்காக ஜயகேசரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய ஒரே குழந்தையான விஜயகேசரியை அவரது நண்பரொருவர் அங்க நாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டார். விஜயகேசரி நல்ல கட்டிளங் காளையாக அங்க நாட்டில் வளர்ந்த பொழுது பிம்பிஸாரன் அங்கநாட்டின் மீது படையெடுத்து அதையும் கைப்பற்றிக் கொண்டு விடவே அவனிடமிருந்து தப்புவதற்காக விஜயகேசரி அங்க நாட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று. பல நாடுகளில் சுற்றிவிட்டு அவன் கடைசியாகக் கலிங்கத்துக்கு வந்து சேர்ந்தான் இந்த விஜயகேசரிதான் என்னுடைய வம்சத்தின் மூதாதை. இந்தச் சரித்திர வரலாறுகளெல்லாம் உனக்கே தெரிந்திருக்குமாகையால் அவற்றை விவரமாகச் சொல்லி உன் பொறுமையை நான் சோதிக்க விரும்பவில்லை. விஜயகேசரி என்னென்ன செய்தான் என்பதை யெல்லாம் பிறகு ஒரு சமயம் நீயே தெரிந்து கொள்ளுவாய். கலிங்க மன்னன் மகள் சந்திரிகாவுக்கும் விஜய கேசரிக்கும் எப்படியோ பரஸ்பரக் காதல் ஏற்பட்டு அவர்களிருவரும் ரகசியமாக நாட்டைவிட்டு ஓடிப் போனார்கள். ஒரு மரக்கலத்தில் அவர்கள் நாகதுவீபத்துக்குப் பயணப் பட்ட பொழுது அந்த மரக்கலம் புயலினால் சிக்கி உடைந்து விட்டது. காதலர்கள் இருவரும் கப்பலில் உடைந்த மரக் கட்டையொன்றைப் பற்றிக் கொண்டு இன்று லட்சத்தீவுகளென்று நாம் அழைக்கும் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவில் ஒதுங்கினார்கள்.
“தாங்கள் இறங்கிய இடம் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. அடிவானத்துக்கு அப்பாலிருக்கும் ஏதோ ஒரு தீவாந்திரமென்று அவர்கள் அப்பொழுது நினைத்தார்கள். அதன் பெயர் செம்பவளத்தீவு என்பது பிறகுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. தீவின் கரையோரங்களிலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஜன நடமாட்டமே இல்லை. தீவைச் சுற்றி ஏராளமான பாறைகளும் கடற் கோறைகளும்தான் தென்பட்டன. பெரிய மரக்கலங்கள் எதுவும் தீவை நெருங்க முடியாதபடி கடற் பாறைகள் ஒரு கோட்டைபோல அமைந்திருந்தன.
“விஜயகேசரியும் சந்திரிகாவும் கடற்கரையோரத்தில் கிடந்த கனி வர்க்கங்களைக் கொண்டு இரண்டு மூன்று தினங்களைக் கழித்துவிட்டுப் பிறகு தீவை ஆராய உள் நோக்கிச் சென்றார்கள். திடுதிப்பென்று புற்றீசல்களைப் போல எங்கிருந்தோ வந்த. நூற்றுக் கணக்கான காட்டு மிராண்டிச் சனங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் விஜயகேசரியினதும் சந்திரிகாவினதும் கண்களைக் கட்டி ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிச் சென்றனர்.
“இந்தப் பல்லக்குச் சவாரி விட்டு விட்டு ஆறு தினங்கள் நடந்தது. கடைசியில் கண் கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்ட பொழுது அவர்கள் திகைத்துப் போனார்கள். கண்களையே நம்ப முடியவில்லை. நாகரிக முதிர்ச்சியடைந்த அங்க, வங்க, கலிங்க நாடுகளைப் போன்றதொரு நாகரிக நாட்டின் அரண்மனைச் சபா மண்டபத்திலிருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு திகைத்தனர். அந்த நாட்டின் இராணி தேவதேவி அவ்விருவரையும் இன்முகம் காட்டி வரவேற்றாள். புன்னகைதவழப் பூத்துக்குலுங்கும் புதுமலர் போலிருந்த அந்த சுந்தர முகத்தைக் கண்டு விஜயகேசரி ஏமாந்தபொழுதிலும் அந்த அழகுக் குவியலுக்கு அடியிலே கொடிய நஞ்சு இருக்க வேண்டும் என்று சந்திரிகாவுக்கு மட்டும் தெரிவதைப் போலிருந்தது. தேன்மொழியில் தேவ தேவி சரளமாக வடமொழியிலும் தீந்தமிழ் மொழியிலும் பேசியதில் விஜயகேசரி மயங்கிவிட்டானென்றே கூறவேண்டும். காட்டுமிராண்டிகள் வாழும் ஒரு தீவாந்திரத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆட்சிபுரிவதும் அவருடைய ஆடம்பரப்படாடோபங்களும் அவர்களை அவ்வளவு தூரத்துக்குப் பிரமித்துப் போகச் செய்திருந்தன.
“விஜயகேசரியிடமிருந்து அவர்களுடைய வரலாற்றைக் கேட்டறிந்த தேவதேவி அவ்விருவரையும் தன் அரண்மனையிலேயே இருக்கச் சொன்னாள்.”
இவ்வளவு தூரம் தட்டுத் தடுமாறிச் சொல்லிக் கொண்டு வந்த விஜயவர்மனுக்கு இதற்குமேல் ஒன்றும் பேசமுடியவில்லை. அடுத்த கால்மணி நேரம் வரையில் இடைவிடாமல் அவன் இருமினான். உரக்க இருமியதில் அவன் மேலும் பலவீனமடைந்து மூச்சு வாங்க ஆரம்பித் தது. சற்று நேரம்வரையில் அவன் ஓய்ந்திருந்துவிட்டுப் பிறகு சொன்னான்:-
“பாலாஜி, நான் சொல்ல விரும்பியதைச் சொல்லா மலேயே சாகப் போகிறேன் போலிருக்கிறது. என் வம்சத்தின் வரலாறுகளைப் பிறகு ஒரு சமயம் நீயே தெரிந்து கொள்வாய். இதோ பார்! இந்தக் கவருக்குள் உனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறேன். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல என் மகனை நீ வளர்க்க வேண்டும். என் செல்வம் முழுவதையும் என் மகனின் பெயருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறேன். என் மகனைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டுவர மாதம் ஆயிரம் ரூபாய் உனக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த வீட்டைக் காலி செய்து விட்டு என் பங்களாவிற்குக் குடிமாறிப் போய்விடு. பாக்கியை என் வழக்கறிஞர் உனக்குச் சொல்லுவார்.
“நீ முக்கியமாகச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இதோ இந்த இரும்புப் பெட்டியை என் மகனுக்கு 25 வயது நிரம்பும்வரையில் நீ பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அவனுடைய 25-வது பிறந்த தினத்தன்று இந்தப் பெட்டியை அவன் திறந்து பார்க்கட்டும். அதுவரையில் கடவுள் சாட்சியாக இந்தப் பெட்டிக்குள் இருப்பதை யாரும் பார்க்க முயற்சிக்கக் கூடாது. பெட்டியைத் திறந்து பார்த்த பிறகு அவனிடம் ஒன்று சொல்லு. அவன் வாழ்க்கை முழுவதும் செம்பவளத் தீவிற்குப்போய் தேவ தேவியைப் பழிக்குப் பழி வாங்குவதற்கு முயற்சி செய்வதிலேயே ஈடுபட வேண்டும். அவன் கையினால் அவள் செத்தால்தான் என் ஆத்மா சாந்தியடையுமென்று அவனிடம் சொல்லு. விஜயகேசரியைப் படுகொலை செய்து சந்திரிகாவை நிர்க்கதிக்கு ஆளாக்கிய தேவதேவி துடி துடித்துச் சாகவேண்டுமென்று அவனிடம் சொல்லு. இந்தக் கடமையை அவனால் செய்ய முடியாவிட்டால் என்னையும் என்னுடைய முன்னோர்களையும் போல இந்தப் பெட்டியையும் அதிலுள்ள அந்தரங்கங்களையும் அலட்சியம் செய்து எறிந்துவிடாமல் அவனுடைய பிள்ளையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் சொல்லு! எனக்காக நீ இதைச் செய்வாயா? பாலாஜி! செய்வேன் என்று ஆண்டவன் சாட்சியாகச் சத்தியம் செய்!”
“நீங்கள் சொல்லுவது எனக்கு ஒன்றும் புரியவில்லையே ஐயா! இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயகேசரியைத் தேவதேவி கொலை செய்தாளென்கிறீர்கள். அந்தத் தேவதேவியை உங்கள் மகன் தேடிக் கொண்டு போய்ப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்றால் என்ன அர்த்தம்? தேவதேவி என்ற ராணி இன்னும் அதே இடத்தில் உயிரோடு இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பேசுகிறீர்களா?” என்றான் பாலாஜி,
விஜயவர்மன் ஒரு வரண்ட சிரிப்புச் சிரித்தான்.
“ஆம்! நீ இந்தக் கேள்வியைக் கேட்காவிட்டால்தான் ஆச்சரியப்படுவேன். இருபத்தைந்து நூற்றாண்டுகளாக ஒருவள் உயிரோடு நித்திய கன்னியாக இன்னும் இருக்கிறா ளென்று நான் சொன்னால் என்னை நீ நம்பமாட்டாய். எனக்கு ஜன்னி கண்டு பிதற்றுகிறேனென்று நினைப்பாய். ஆனால் இதன் உண்மையைப் பிறகு ஒரு சமயம் நீயே தெரிந்து கொள்வாய். முதலில் நானும் உன்னைப்போலத் தான் நினைத்தேன். என் தகப்பனாருக்குச் சரியான பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆனால் செம்பவளத் தீவிற்கு நேரில் சென்று விசாரித்த பொழுது மலைக்கன்னி என்ற பெயருடன் தேவதேவி இன்னும் அரசு செலுத்தி வருவதை அறிந்து பூரண திருப்தி யடைந்திருக்கிறேன். லட்சத்தீவு கூட்டங்களின் மேற்குக் கோடியிலிருக்கிறது செம்பவளத்தீவு. தீவைச் சுற்றிலும் கடலுக்குமேல் அறுபது எழுபது அடி உயரத்துக்குக் கற்பாறைகள் நிமிர்ந்து நிற்கும். ஒரு பாறை தூரப்பார் வைக்கு ஒரு ராட்சத யானை கடலில் படுத்திருப்பதைப் போலத் தோற்றமளிக்கும். அதையடுத்துள்ள இன்னொரு பாறை ஒரு பிரமாண்டமான ரிஷபம் நிமிர்ந்து நிற்பதைப் போலக் காட்சியளிக்கும், செம்பவளத் தீவிற்குச் செல்ல இவை இரண்டும் சரியான அடையாளங்கள்.
“தேவதேவி அங்கிருக்கிறாள். பழைய செல்வாக் குடனேயே அவள் இருப்பதாகக் கேள்வி. அவள் அழியா வரம் பெற்றவள். இது எப்படிச் சாத்தியம்? என்றெல் லாம் இப்பொழுது என்னிடம் கேட்காதே. என் மகன் வயதடைந்து இந்தப் பெட்டியை நீங்கள் திறந்து பார்க்கும் பொழுது நான் வெளியிடாத பல திடுக்கிடும் உண்மை களை நீ தெரிந்து கொள்வாய். உன்னிடம் ஒப்படைக்கும் இந்தப் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றுவாயா பாலாஜி! என் மகனுக்குத் தாயும் தந்தையுமாயிருந்து காப்பாற்றி அவனிடம் வம்ச பரம்பரையாக வந்த இந்தப் பெட்டியை ஒப்படைத்து நான் தெரிவித்த வரலாறுகளையும் சொல் வாயா? இந்தக் கடமையைச் செய்து முடிப்பேன் என்று சத்தியம் செய்! அதோ சுவற்றில் மாட்டியிருக்கும் முரு கன் முன்னிலையில் சத்தியம் செய்!”
விஜயவர்மன் உணர்ச்சி வசப்பட்டு இவ்விதம் சொல் லிய பொழுது அவன் விரும்பியபடியே சத்தியம் செய் வதைத் தவிர பாலாஜிக்கு வேறு வழியில்லாமற் போய் விட்டது. அதே சமயம் தெய்வ சன்னிதானத்தில் அசாத்தியமானதும் கற்பனைக்கு அப்பாற்பட்டது மான காரியத்தைச் செய்து முடிப்பதாகச் சத்தியம் செய்யவும் அவன் விரும்பவில்லை.
“நீங்கள் சொல்லிய கதையை நான் நம்பவில்லை. இது மனிதனின் கற்பனைக்கும் சக்திக்கும் விஞ்ஞானத்துக்குமே கூட அப்பாற்பட்டது. நீங்கள் சொல்லிய கதை எப்படியிருந்தாலும் உங்கள் மகனைக் கண்ணிமைபோலப் பாதுகாத்து வளர்த்து அவனுடைய 25-வது பிறந்ததினத் தன்று இந்தப் பெட்டியைப் பத்திரமாக அவன் வசம் ஒப்படைத்து விடுகிறேன். இன்று நீங்கள் சொல்லிய விருத் தாந்தங்களையும் அவனிடம் சொல்லி ராணி தேவதேவியைப் பழிவாங்க வேண்டுமென நீங்கள் கட்டளையிட்டுச் சென்றதாயும் கூறுகிறேன். இந்த மட்டும் கடமையைத் தவறாமல் செய்து முடிப்பதாகப் பிரமாணம் செய்கிறேன்” என்றான் பாலாஜி.
”போதும்! நீ இவ்வளவு செய்தாலே போதும்! நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு விஜயவர்மன் எழுந்த பொழுது பாலாஜி பரபரப்படைந்தான். அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “போகிறீர்களா? இந்த நிலைமையில் அதிலும் இந்த நேரத்தில் எங்கே போவது? பேசாமல் இங்கேயே படுத்திருங்கள். காலையில் போகலாம்” என்று மன்றாடினான்.
ஆனால், விஜயவர்மன் கேட்கவில்லை. பாலாஜியின் கையை உதறிவிட்டு, “இல்லை பாலாஜி! இன்றிரவு நான் தனிமையில் இருக்க வேண்டும். எப்படியும் நான் பங்களாவிற்குப் போய்விட வேண்டும். வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே விஜயவர்மன் போய்விட்டான். அவனைப் போகாமல் தடுத்து வைக்கப் பாலாஜி செய்த முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை.
அத்தியாயம் – 3
அன்றிரவு பாலாஜி வெகு நேரம் வரையில் தூங்க வில்லை. வி ஜயவர்மன் சொல்லிவிட்டுப்போன அதிசயமான விவரங்களே அவன் மனதில் சுற்றிச் சுழன்று வந்துகொண்டிருந்தன. அதிகாலையில்தான் அசதியில் அவன் கண்கள் சற்று மூடின. கதவை யாரோ “லொட்டு, லொட்டு” என்று இடைவிடாமல் தட்டும் சப்தம் அவன் உறக்கத்தைக் கலைத்தது. எழுந்து வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒரு மனிதர் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“இரவு வெகு நேரம் வரையில் தூக்கமில்லை. கதவு திறக்கச் சுணங்கியதற்கு மன்னிக்க வேண்டும். நீங்கள் யாரென்பது தெரியவில்லையே” என்றான் பாலாஜி.
வந்த மனிதர் தான் யாரென்பதைச் சொல்லாமல் “இந்தக் கடிதத்தைப் படித்துப்பார்” என்று சொல்லி ஒரு கடிதத்தைப் பாலாஜியிடம் கொடுத்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
அன்புள்ள அட்வகேட் சச்சிதானந்தர் அவர்களுக்கு!
“இந்தக் கடிதத்தை நாளை காலை ஆறு மணிக்கு உங்கள் கைக்கு வந்து சேரும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இதை நீங்கள் வாசிக்கும் பொழுது நான் இவ்வுலகைவிட்டு விண்ணுலகத்திற்குப் போயிருப்பேன். வாழ்க்கை எனக்குக் கசந்துவிட்டது. ஏன் என்று கேட்காதீர்கள். அது என் சொந்த விஷயம். அதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.
“நேற்றிரவு உங்கள் காரில் மலைக்கோட்டைக்குச் சென்று பாலாஜியைச் சந்திக்கப் போன பொழுதே நஞ்சு குடித்திருந்தேன். பாலாஜியிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் கண்கள் பஞ்சடைந்து போய்விட்டன. இந்த விவகாரத்தில் உங்கள் பெயரோ அல்லது பாலாஜியின் பெயரோ இழுபடக்கூடாதென்பதற்காகவே நேற்றிரவு உங்கள் காரில் பாலாஜியைச் சந்தித்ததைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென்று உங்கள் கார்ச் சாரதியை எச்சரித்திருக்கிறேன். நீங்களும் மறுபடி அவனை எச்சரித்து வையுங்கள். மரண விசாரணையின் பொழுது அவன் ஏதாவது உளறிக்கொட்டி வைக்கப் போகிறான்.
“நான் ஒரு மாதிரியாயிருப்பதைப் பார்த்து பாலாஜி பயந்து போய்விட்டான். இரவு தன் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அவன் கட்டாயப்படுத்தினான். பாவம், அவன் என்ன கண்டான்? இரவு அவன் வீட்டில் தங்கியிருந்தால் இந்நேரம் அவன் கதி என்ன ஆகியிருக்கும்?
என் உயிலில் ஒரு நகல் உங்களிடமிருக்கிறது. என் கையிலிருந்த நகலைப் பாலாஜியிடம் சேர்ப்பித்துவிட்டேன்.
உயிலைப் பிரகடனப்படுத்தி, பாலாஜியை என் பங்களாவில் குடியேற்றி, என் அருமைக் குழந்தையையும் அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பது உங்கள் பொறுப்பு. பாலாஜி மிகவும் நல்லவன். மனிதர்களிலே மாணிக்கம் போன்றவன். தலைமுறை தலைமுறையாக எப்படி உங்கள் குடும்பம் எங்கள் நலன்களைக் கவனித்து வந்திருக்கிறதோ அதே போல பாலாஜியின் நலன்களைக் கவனித்துவர வேண்டு மென்று சாகும் தறுவாயில் உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னுடைய இந்த அந்தியகாலக் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பீர்களென்ற நம்பிக்கையோடு உயிர் செய்து விடுகிறேன். வாழ்க்கை கசந்து தற்கொலை கொள்ளுவதாக போலிசாருக்கும் ஒரு கடிதம் எழுதியனுப்பியிருக்கிறேன்.
வணக்கம்,
விஜயவர்மன்.
இந்தக் கடிதத்தைப் படித்து முடிந்ததும் பாலாஜி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓவென்று அலறினான். அவன் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தி லுள்ளவர்கள் ஏதோ என்னவோ என்ற கவலையுடன் விசாரிக்கக் கூட்டம் கூட்டம் கூடிவிட்டனர். பாலாஜி சுயநினைவை இழந்து விஜயவர்மனின் பெயரைச் சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டதால் அட்வகேட் சச்சிதானந்தரின் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது.
பாலாஜியை ஆதரித்து வந்த ஜமீன்தார் விஜயவர்மன் காலமாகிவிட்டதாயும் அந்தத் துக்கம் தாங்காமலே பாலாஜி அப்படிப் புலம்புகிறானென்றும் சமாதானம் சொல்லி கூட்டம் கூடிய தெரு ஜனங்களைக் கலைந்து போகச் செய்ய அட்வகேட் சச்சிதானந்தர் பகீரதப் பிரயத்தனப்பட்டார். பாலாஜியைக் கொலைகாரனென்று கடுமையாகப் பேசிக் குற்றம் சாட்டிய அதே வாயினால் கதறியழுத அந்த வாலிபனை இப்பொழுது அவர் ஆதரவாக அணைத்துக் கொண்டு தேறுதல் சொல்ல வேண்டியதாயிற்று. “உன்னிடம் கடைசியாகப் பேசியபொழுது அவர் எப்படியிருந்தார்? மிகவும் நோய் வாய்ப்பட்டிருப்பதைப் போலக் காணப்பட்டாரா? உன்னிடம் என்னென்ன சொன்னார்” என்று கேட்டார் அட்வகேட் சச்சிதானந்தர்,
பாலாஜி ஒருகணம் தயங்கினார். அந்த ஒரு கணத்துக்குள் சச்சிதானந்தரிடம் எந்த அளவிற்குச் சொல்லலாம் என்பதைப் பற்றியே அவன் சிந்தித்திருக்க வேண்டும். என் சொந்த விஷயங்களை மற்றவர்கள் தெரிந்துகொள்வதை நான் விரும்பவில்லை என்று அட்வகேட்டுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் விஜயவர்மனைக் குறிப்பிட்டிருந்தது அவன் ஞாபகத்துக்கு வந்தது. செம்பவளத்தீவையும் விஜய கேசரி, தேவதேவி ஆகியவர்களையும் பற்றி விஜயவர்மன் சொல்லியதை அட்வகேட்டுக்குத் தெரிவிப்பது உசிதமானதாக அவனுக்குத் தோன்றவில்லை. எனவே “அவர் அப்படி ஒன்றும் பிரமாதமாகச் சொல்லவில்லை” என்றான்.
பின்னர் தொடர்ந்து “வாழ்க்கையில் வெறுப்புத் தட்டியவரைப் போலவும் என்னிடம் அவர் பேசவில்லை. தன்னுடைய சொத்துக்களுக்கு என்னை டிரஸ்டியாக நியமித்திருப்பதாகச் சொன்னார். தனது குழந்தையை நான் வளர்க்க வேண்டுமென்றார். அவருடைய பங்களாவிற்கே நான் குடிமாறிப் போய்விட வேண்டுமென்று தெரிவித்தார். அவர் உடல் நிலைமை சரியாயில்லையென்று மட்டும் எனக்குத் தெரிந்தது. டாக்டரை அழைத்துவருவதாக அவரிடம் சொன்னேன். இரவு என் வீட்டிலேயே தங்கியிருக்கும்படி காலைப்பிடித்துக் கொண்டு மன்றாடினேன். ஆனால், அவர் ஒரே பிடிவாதமாகப் போய்விட்டார். நஞ்சு குடித்திருப்பாரென்று கொஞ்சம் சந்தேகமேற்பட்டிருந்தாலும் அவரை நான் போகவிட்டிருக்கமாட்டேன். இங்கேயே கட்டிப்போட்டுவிட்டாவது டாக்டரை அழைத்துவந்து காட்டியிருப்பேன்!” என்றான் பாலாஜி.
”பாவம், நீ தான் என்ன செய்வாய்? அவர். விஷம் குடித்திருப்பது உனக்குத் தெரிந்தால்தானே அவரைக் காப்பாற்ற நீ முயற்சி செய்வாய். போனதைப் பற்றி இனி வருந்திப் பயன் இல்லை. அவரிடம் உனக்கு இருக்கும் நன்றி விசுவாசத்தைச் சரியாகக் காட்ட வேண்டுமானால் உன்னி டம் அவர் விட்டுப்போகும் பொறுப்புக்களைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டும். ஜோதிவர்மனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து விஜயவர்மனின் ஆன்மா சாந்தியடையச் செய்ய வேண்டும். இன்று மாலை நடக்கும் மரண விசாரணைக்கு அநேகமாக உன்னையும் அழைப்பார்கள். விசாரணையின் பொழுது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அதிகப்படியாக ஒன்றும் சொல்லாதே. சாத்தியமானால் நேற்றிரவு விஜயவர்மன் உன்னைச் சந்தித்ததைச் சொல்லாமலேயிருந்தால் நல்லது. நான் வருகிறேன்” என்று அட்வக்கேட் சச்சிதானந்தர் சொல்லி விட்டுப் போனார்.
அன்று மாலை அட்வக்கேட் சொல்லிவிட்டுப் போனதைப் போலவே பாலாஜியையும் விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். தன்னிடம் என்ன கேட்பார்களோ என்று உள்ளூரப் பயந்து கொண்டே அவன் விசாரணை அதிகாரியின் முன்னால் வந்து நின்றான்.
மரணவிசாரணை அதிகாரி பாலாஜியிடம் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. அவனுக்கும் விஜயவர்மனுக்கு முள்ள தொடர்பைப்பற்றி மட்டுமே இரண்டொரு கேள்விகள் கேட்டார். கடைசியில் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஜயவர்மன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாயும் அவருடைய மரணத்தில் சந்தேகப்படும்படியான அம்சம் ஒன்றுமில்லை யென்றும் மரண விசாரணை அதிகாரி தீர்ப்புக் கூறினார்.
விஜயவர்மனுக்கு நெருங்கிய உறவினர் யாருமில்லாத படியால் பிரேதத்தைப் பாலாஜியே பெற்றுக்கொண்டு சாஸ்திரோத்தமாக தகனக் கிரியைகளை நடத்தினான். அவன் கூடவே அட்வக்கேட் சச்சிதானந்தரும் இருந்து உதவினார்.
தகனம் முடிந்து பாலாஜியும் சச்சிதானந்தரும் சுடு காட்டிலிருந்து திரும்புகையில் அவ்வளவு நேரம் அவர்கள் கூடவேயிருந்த ஒருவன் பாலாஜிக்கு முன்னால் மரியாதை யாகக் கரம் குவித்து நின்று எஜமான் பங்களாவிற்கு எப்பொழுது வருகிறீர்கள்?” என்று கேட்டான். அந்தக் கேள்வியிலிருந்து அவன் விஜயவர்மனின் வேலைக்காரனா யிருக்க வேண்டுமென்பதை சுலபமாக ஊகிக்கும்படியா யிருந்தது.
“இவன் பெயர் முனிசாமி! விஜயவர்மன் குடும்பத்திற்கு எப்படி நாங்கள் தலைமுறை தலைமுறையாக வழக்கறிஞர்களாயிருந்து வந்திருக்கிறோமோ அதேபோல இவனுடைய முன்னோர்களும் பல தலைமுறைகளாக விஜயவர்மன் குடும்பத்தில் விசுவாசத்தோடு சேவைபுரிந்து வந்தவர்கள். காலஞ்சென்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் முனிசாமி!” என்று அட்வகேட் சச்சிதானந்தர் சொன்னார்.
எஜமானை நான் பார்த்ததில்லை. ஆனால், உங்களைப் பற்றி ஜமீன்தார் அடிக்கடி சொல்லுவார். நீங்கள் பங்களாவிற்கே வந்துவிடப் போகிறீர்களென்று நேற்று சாயங்காலம் தான் சொன்னார். அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இப்படிச் சொன்னாரென்பது இப் பொழுதுதான் தெரிகின்றது. ஜமீன்தார் நம்ம எல்லோரையும் இப்படி தவிக்கவிட்டுப் போய்விடுவாரென்று நினைக்கவேயில்லை எஜமான்!” என்றான் தழுதழுத்த குரலுடன்.
இரவு முழுவதும் பாலாஜிக்குத் தூக்கமே வரவில்லை. பிச்சை வாங்கிப் பிழைப்பு நடத்தி வந்த தனக்கு திடீரென்று ஜமீன் அந்தஸ்தும் குடியிருக்க பங்களாவும் குற்றேவல் புரிய ஆட்களும் ஆடம்பரமான புது வாழ்வும் ஏற்பட்டது நம்ப முடியாத ஒரு கனவைப் போலிருந்தது.
– தொடரும்…
– 1957ம் வருட ம்,மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மலைக்கன்னி என்ற தலைப்பில் இக்கதை வீரகேசரி நாளிதழில் பிரசுரமாயிற்று. ‘SHE’ என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியது. வீரகேசரியில் பிரசுரமாகிய கதை ஓட்டத்தைப் பாதியாமலும் சுவை குன்றாமலும் சிறிது சுருக்கி மாற்றி எழுதியிருக்கிறேன்.
– மலைக்கன்னி, முதற் பதிப்பு: ஜூலை 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.