கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 5,205 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

இரும்புப் பெட்டியின் இரகசிய அறையிலிருந்து எடுத்த அந்த நோட்டுப் புத்தகத்தில் விஜயகேசரியின் மனைவியான சந்திரிகா தனது பிள்ளை சந்திரவர்மனுக்கு எழுதி வைத்த கடிதம் முதலில் இருந்தது. அதை ஜோதிவர்மன் உரத்துப் படித்தான்:-

“என் அன்புள்ள குழந்தை சந்திரவர்மனுக்கு உனது துர்ப்பாக்கியவதியான தாய் சந்திரிகா எழுதியது:- 

“நீ கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே இதை எழுத ஆரம்பிக்கிறேன். நீ பிறந்து பெரியவனாகி இதைப் படிப்பாயென்ற நம்பிக்கையுடனும் என்னுடைய சபதத்தை நிறைவேற்றுவாயென்ற நம்பிக்கையுடனும் எனது சோகக் கதையை எழுதுகிறேன். என்னைப் போன்ற ஒரு பெண்ணினால் உன் தகப்பனார் நயவஞ்சகமாகக் கொலை செய்யப்பட்ட பொழுது அதே ஸ்தலத்தில் நானும் பிராணத் தியாகம் செய்து கொள்ளாமல் தப்பி வந்ததும் வாழ்க்கையில் வேறு எவருக்கும் ஏற்பட்டிருக்க முடியாத பல துன்பங்களை அடுத்தடுத்து நான் அனுபவித்ததும் ஒரே ஒரு இலட்சியத்துடன்தான். உன்னைப் பிரசவித்து ஆளாக்கி விட்டு உன் தகப்பனைக் கொன்ற படுபாதகியை வஞ்சம் தீர்க்க வேண்டும். அவள் துடி துடித்துச் சாவதை என் கண்ணால் காண வேண்டும். அந்த ஒரு இலட்சியத்துக்காகவே நான் கண்டிப்பாக உயிர்வாழ வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன். பழிக்குப் பழிவாங்கும் பாலகனைப் பெற்றெடுப்போம் என்ற நம்பிக்கையுடனேயே நீ பிறப்பதன் முன்னால் உனக்குச் சந்திரவர்மன் என்று பெயரிட்டுவிட்டேன். 

“குழந்தாய்! நீ ராஜ குலத்தில் பிறந்தவன். நான் கலிங்க நாட்டு மன்னனின் கடைசிப் புதல்வி, உன் தகப்பனார் விஜயகேசரியும் சாமான்யமானவரில்லை. மக்த மன்னர் பிம்பிசாரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த மாமந்திரி ஜெயகேசரியின் ஒரே புதல்வர். பிம்பி சாரனுக்கும் கோசல நாட்டு மன்னவன் பிரசன்னஜீத்துக்கும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்த யுத்தங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் உன் பாட்டனார் ஜயகேசரிதான்” 

ஜோதிவர்மன் இப்படிப் படிக்கையில் பாலாஜி குறுக்கிட்டு “இந்த விபரங்களையெல்லாம் விஜயவர்மன் அன்று சொல்லியபொழுது அவர் சித்த சுவாதீனமில்லாமல் ஏதேதோ பிதற்றுகிறாரென்று நினைத்தேன். இப்பொழுது தான் உண்மை தெரிகிறது” என்றான். 

பிம்பிசாரனைக் கொலை செய்துவிட்டு அஜாதசத்து பட்டத்துக்கு வந்ததையும் ஜயகேசரி மீது கொலைக் குற்றம் சாட்டி அவனை அஜாதசத்து தூக்கிலிட்டதையும் குழந்தை விஜயகேசரி அங்க நாட்டுக்குக் கொண்டு போகப்பட்ட தையும் அங்க நாட்டுக்கும் மகதநாட்டுக்கும் யுத்தம் ஏற்பட்ட சமயம் விஜயகேசரி கலிங்கத்துக்கு ஓடிவந்ததையும் விஜயவர்மன் சொல்லியதைப் போலவே சந்திரிகா தனது கடிதத்தில் விரிவாகவும் விபரமாகவும் எழுதியிருந்தாள். அவள் மேலும் எழுதியிருந்ததாவது:- 

“உன் தகப்பனார் கலிங்க நாட்டுக்குள் பிரவேசித்ததே பௌர்ணமி ஒரு பரபரப்பான சூழ்நிலையில். அன்று யென்று நினைக்கிறேன். பகவான் புத்தர் பரி நிர்வாண மடைந்து ஏழாண்டுகள் கடந்திருந்தன. புத்தபிரானின் பிரதம சீடர்களில் ஒருவரான ஆனந்ததேரோ எனது தந் தையின் அழைப்பின் பேரில் கலிங்கத்துக்கு விஜயம் செய் வதாக இருந்தார். அவரை வரவேற்கக் கூடாதென்றும் இந்த எச்சரிக்கையை மீறி ஆனந்ததேரோ நாட்டில் அடியெடுத்துவைத்தால் இரத்தக் களரி ஏற்படுமென்றும் வீர சைவர்கள் அரசரைக் கடுமையாக எச்சரித்திருந்தார்கள். ஆனந்தரின் வரவினால் இந்து சமயம் பாதிக்கப்பட்டு விடு மென்பது அவர்கள் கருத்து. இந்த எச்சரிக்கையை மீறி ஆனந்தரை வரவேற்க எனது தந்தை விரிவான ஏற்பாடுகள் செய்ததோடு அந்த மகானை எல்லையில் சந்தித்தும் பூரண கும்பம் வைத்து வரவேற்கப் படைத் தளபதிகளுடன் என்னையே அனுப்பி இருந்தார். நாட்டின் எல்லைக்குச் செல்ல காட்டின் வழியாக நாங்கள் மூன்று நாட்கள் பிரயாணம் செய்தோம். நான்காவது நாள் வீர சைவர்கள் காட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு படை எங்களைத் தாக்க நான் மட்டும் அவர்களிடம் சிக்கிக் கொண்டேன். தளபதிகள் தப்பிக் கொண்டு விட்டார்கள். 

“நான் மயங்கிக் கிடப்பதைப்போல நடித்தேன். ஒரு சைவத் துறவியின் முன்னால் அவர்கள் என்னைக் கொண்டு போய்க் கிடத்தினார்கள். தளபதிகளைவிட்டு நிராயுத பாணியான ஒரு பெண்ணைத் தூக்கி வந்ததற்காக அந்தத் துறவி தனது ஆட்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். நான் மயங்கிக் கிடப்பதாயும் என்னை மருத்துவருடைய முகாமுக்குக் கொண்டு போகும்படியும் அவர் உத்தரவிட்டார். நால்வர் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் வைத்து மருத்துவர் முகாமுக்குத் தூக்கிச் செல்கையில் கலிங்கத்துக்குக் காட்டினூடாக வந்து கொண்டிருந்த என் தந்தை என்னை விடுவித்து எல்லைக்கு அழைத்துப் போனார். தப்பியோடிய தளபதிகளும் அங்கேயிருந்தார்கள். எல்லையில் ஆனந்தரை வரவேற்பது எனது தந்தை திட்டமிட்டபடியே நிகழ்ந்தது. இதற்கிடையில் ஒற்றர்கள் மூலம் தகவல் அறிந்திருந்த அரசர் ஒரு படையையே எல்லைக்கு அனுப்பியிருந்தபடியால் ஆனந்தரைப் பத்திரமாக நாங்கள் நாட்டுக்கு அழைத்து வந்தோம். எதிரிகளிடமிருந்து என்னை மீட்ட உன் தந்தையின் வீரத்தை அரசர் பாராட்டி அவரைக் கன்னிமாடத்தில் பாதுகாவலராக நியமித்தார். இது எங்கள் இருவருக்குமிடையில் பரஸ்பரம் அன்பு வளர உதவியாக இருந்தது. வீர சைவர் கள் அஞ்சிய மாதிரியே ஆனந்தரின் வரவு சைவ சமயத்தைக் கடுமையாகப் பாதித்தது. என் தந்தை பௌத்தராகியதோடு அதை ராஜாங்கச் சமயமாகவும் பிரகடனப்படுத்தினார். இதனால் நாட்டிலே சமயக் கலவரம் ஏற்பட்டது. நாடு முழுவதும் இரத்த ஆறு ஓடியது. அரண்மனையை வீரசைவப்படை தாக்கியபொழுது நானும் உன் தந்தையும் நாட்டைவிட்டுத் தப்பியோடினோம். நாக தீபத்துக்கு அப்பொழுது ஒரு மரக்கலம் கிளம்பிக் கொண் டிருந்தது, அதில் ஏறி நாக தீபத்துக்குப் போய்விட்டால் அங்கு ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து பிழைத்துக் கொள்ளலாமென்று நம்பி நாங்கள் அதில் நாக தீபத்துக்குக் கிளம்பினோம். 

“எந்த நிமிடம் நாங்கள் மரக்கலத்தில் ஏறினோமோ அன்றிலிருந்து போதாதகாலம் எங்களைத் தொடர்ந்துவர ஆரம்பித்துவிட்டது. நாகதீபத்துக்குப்போக வேண்டிய மரக்கலம் கடுமையான புயலில் சிக்கித் திக்குத் திசை தெரியாமல் செல்லவாரம்பித்தது. எந்த நிமிடம் மரக் கலம் சுக்கு நூறாகச் சிதறிப்போகுமோ என்ற பயங்கரமான அபாயத்தில் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் நாங்கள் பிரயாணம் செய்தோம். அந்த மூன்று தினங்களுக்கிடையில் மரக்கலத்திலிருந்த எங்களில் ஒரு வரும் கண்ணயரவில்லை. மரணத்தின் தலைவாசலில் நின்று எமதர்மனின் அழைப்பை ஒவ்வொரு வினாடியும் எதிர் நோக்கிக் கொண்டிருந்தோம். மரக்கலம் நாகதீபத்தைத் தாண்டிக் கொண்டு எங்கெங்கோ போவதாயும், திசை மாறி மரக்கலத்தைச் செலுத்த முடியவில்லையென்றும், புயல் அடங்கினால்தான் பிழைக்க வழி ஏற்படுமென்றும் மாலுமிகள் அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். 

நான்காவது நாள் இரவில் புயலின் வேகம் மிகவும் கடுமையாகியது. பனை மரம் உயரத்துக்கு அலைகள் எழும்பி மரக்கலத்தைத் தவிடுபொடியாக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தன உள்ளே இடுப்பளவு ஜலம் புகுந்து விட்டதால் மரக்கலம் தடுமாறிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் மரக்கலத்தைக் காப்பாற்ற முடியாதென்று முடிவு செய்த மாலுமிகள் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு கடலில் குதிக்குமாறு பிரயாணிகளுக்கு யோசனை கூறிவிட்டு அவர்களும் நீரில் விழுந்துவிட்டனர். நாகதீபத்துக்குப் பெரிய பெரிய சந்தனக்கட்டை மரங்கள் மரக்கலத்தில் ஏற்றப்பட்டிருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரத் தைத் தூக்கிக் கடலில் எறிந்து அதைப் பற்றிக் கொண்டு நீரில் இறங்கினார்கள். இரண்டு பெரிய சத்தன மரங்களை உன் அப்பா கட்டுமரத்தைப்போல சேர்த்துக் கட்டினார். எங்கள் கைவசமிருந்த உணவுப் பொருள்களையும் ஆப் ரணங்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு கட்டுமரத் துடன் நாங்கள் கடலில் இறங்கினோம். சிறிது நேரத்துக் கெல்லாம் எங்கள் கண்ணெதிரிலேயே மரக்கலம் கடலுக் குள் ஆழ்ந்து போயிற்று. 

மரக்கலம் மூழ்கிய இடம் லட்சத்தீவுகளுக்கருகில் என்று நினைக்கிறேன். ஏனெனில் கட்டுமரத்தில் நாங்கள் இறங்கிய ஏழெட்டு நாழிகை நேரத்துக்குள் நாங்கள் லட் சத் தீவுகளில் ஒன்றான செம்பவளத்தில் ஒதுக்கப்பட்டோம். மரக்கலத்தில் இருந்த மற்றவர்கள் பல்வேறு திசைகளி லும் இழுத்துச் செல்லப்பட்டதால் அவர்கள் என்ன ஆனார்களென்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. செம்பவளத்தீவின் கரையோரங்கள் ஒரே மலைப் பாங்காயிருந்தன. அது தீவுதானா அல்லது கடலில் தலை தூக்கி நிற்கும் கற்பாறையா என்பதே சந்தேகமாயிருந்தது. பாசி படிந்திருந்த பாறைகளின் மேலே ஏறி மறு புறத்தில் இறங்கிய பொழுதுதான் ஜன சஞ்சாரமில்லாத ஒரு தீவாந்தரத்தில் நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோ மென்பதை உணர்ந்து கொண்டோம். 

கரையோரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. சற்றுத் தூரத்துக்கு அப்பால் மா, பலா முதலான கனி தரும் மரங்களும் பசுமையாகக் காட்சியளித்தன. சூதும் வாதும் நிறைந்த ஜனசமுதா யத்தை விட்டுப் பிரிந்து இயற்கையோடு இசைந்துவாழ ஒரு தீவாந்தரத்தை அடைந்ததில் உண்மையாகவே நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் உன் அப்பாவிற்குமட்டும் நாகதீபத்துக்குப் போகாமல் பெயர் தெரியாத ஒரு தீவுக்கு வந்து சேர்ந்ததில் உள்ளூர வருத்தம். சுமார் ஒரு பக்ஷம் வரையில் (பதினைந்து தினங்கள்) நாங்கள் கரையோரப் பகுதியிலேயே வசித்தோம்! பிறகு ஒரு நாள் உன் அப் பாவின் விருப்பப்படி தீவைச் சுற்றிப் பார்க்க உள்பிர தேசத்தை நோக்கிப் புறப்பட்டோம். 

சிறிய தூரம் சென்றதும் நிலத்தில் மனித அடிச்சுவடு கள் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம், நாங்கள் எதிர்பார்த்ததைப்போல அது ஜனசஞ்சாரமற்ற இடமல்லவென்பதையும் மனிதர்கள் அங்கு இருக்க வேண்டுமென்பதையும் அறிந்தவுடன் எங்களுக்குச் சற்று ஆறுதலாயிருந்தது. ஒரே காடுகளும் வானளாவிய மலை களுமாயிருந்த அத் தீவில் வசிக்கும் ஜனங்கள் எப் படிப்பட்டவர்களாய் இருப்பார்களென்பதைப் பற்றிப் பேசிக் கொண்டே நாங்கள் மேலும் நடந்து கொண்டிருக் கையில் திடீரெனக் காட்டுமிராண்டிக் கூட்டமொன்று எங் களைச் சூழ்ந்து கொண்டது. அவர்கள் எப்படி வந்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை. நாலா திசைகளிலிருந்தும் புற்றீசல்களைப் போல அவர்கள் வந்து எங்களை மொய்த்துக் கொண் டார்கள். ஒவ்வொருவர் கையிலும் கூர்மையான வேல் களும், வில் அம்புகளும், ஈட்டிகளுமிருந்தன. 

தோற்றத்தில் பயங்கரமாயிருந்த அம்மனிதர்கள் லட் சத்தீவுகளின் பூர்வீகக் குடிகளாயிருக்க வேண்டுமென்று எங்களுக்குத் தோன்றியது. அவசியமான அளவிற்கு அவர்கள் சொற்ப ஆடையை அணிந்திருந்தனர். அதுவும் ஒரு மாதிரியான கடற்கோரைகளையும், வாழைநார் களையும் கொண்டு செய்த உடைகளைப்போலிருந்தன. தொட்டால் ஓட்டிக் கொள்ளுவதைப்போன்ற அட்டைக் கரி நிறமுடனிருந்த அவர்களைப் பார்த்த பொழுது உண் மையில் நாங்கள் கலங்கிப் போனோம். அவர்களிடையே தலைவனைப் போலிருந்த ஒரு நெட்டை மனிதன் எங்கள் முன்னால் வந்து பதில் பேசாமல் என் பின்னால் வாருங் கள்” என்று கொச்சைத் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளத்தில் சொன்னான். வடமொழியில் அவன் சொல்லியதை உன் அப்பாவும் தமிழில் அவன் சொல்லி யதை நானும் புரிந்து கொண்டோம். அந்த ஆபத்தான நிலைமையில்கூட நமது பாஷைகளைப் பேசும் ஜனங்கள் மத்தியில்தான் நாம் இருக்கிறோம் என்பது எங்களுக்குச் சற்று ஆறுதலாயிருந்தது. 

“எங்களை எங்கே அழைக்கிறாய்? ஏன் அழைக்கிறாய்?” என்று உன் அப்பா வடமொழியில் வினவினார். 

“பதில் பேசாதே! உங்கள் இருவரையும் அழைத்து வரும்படி மலைக்கன்னியின் உத்தரவு! என்று சொல்லி விட்டு அம்மனிதன் நடந்தான். எங்கள் முதுகுக்குப் பின் னால் கூர்மையான ஈட்டிகளைப் பட்டதும் படாததுமாகப் பிடித்துக் கொண்டு சிலர் நின்றபடியினால் வேறு எதுவும் செய்ய வழியில்லாமல் நாங்கள் அம் மனிதனைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. 

“அந்தக் காட்டுமிராண்டி ஜனங்கள் எங்களை ஒரு குகைக்கு இட்டுச் சென்றார்கள். அங்கு பழங்களும் பால கொடுத்து எங்கள் பசியை ஆற்றிவிட்டு எங்கள் இருவர் கண்களையும் கட்டி ஒரு மூடு பல்லக்கில் உட்கார வைத்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். மலைக்கன்னியைப் பார்க் கப் பாதையில் எங்களுடன் பல்லக்கைத் தூக்கிய நால் வரைத் தவிர வேறு இருவர் மட்டுமே வந்தனர். நான்கு தினங்கள் வரையில் நாங்கள் பிரயாணம் செய்தோம். பல மலைகளையும், ஓடைகளையும், காடுகளையும் தாண்டி அவர்கள் எங்களைத் தூக்கிச் சென்றதை கண்ணால் பார்க்காவிட்டாலும் உணர்ந்து கொள்வது சாத்தியமாய் இருந்தது. கடைசியில் செங்குத்தான படிக்கட்டுகளின் மீது அவர்கள் வெகுதூரம்வரை எங்களைத் தூக்கிச் சென்றனர். மேலும் மேலும் அவர்கள் மேல் நோக்கி ஏறிக் கொண்டு போவதைக் கவனித்த பொழுது வான மண்டலத்துக்கே எங்களைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்களோ என்று தோன்றியது. 

வெகுநேரத்துக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் சம நிலத்தில் போவதையும், ஈட்டிகளின் சப்தமும், அதிக ஜன நடமாட்டமும் இருப்பதை அறிந்ததும் மலைக்கன்னி இருக்குமிடத்துக்கு நாங்கள் வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. பல்லக்கிலிருந்து எங்களை இறக்கிக் கண் கட்டுகளை அவிழ்த்து விட்ட பொழுது எங்கள் கண்களையே எங்களால் நம்பமுடியவில்லை. அரண்மனைகளைவிட ஆடம் பரம் மிகுந்த ஒரு சபாமண்டபத்தின் நடுவிலே அப்பொழுது நாங்கள் இருவரும் நின்று கொண்டிருந்தோம்! அந்த இடத்தின் அழகையும், வேலைப்பாடுகளையும் வர்ணிப்ப தென்றால் அதற்குப் போதிய வார்த்தைகள் அகப்படாது. தங்கத்தையும், வெள்ளியையும் உருக்கி வார்த்த தகடுகள் சுவற்றையும் தூண்களையும் கவச மணிந்ததைப்போல மூடி யிருந்தன. தரையில் விலையுயர்ந்த ரத்தினக் கம்பளம் விரிக் கப்பட்டிருந்தது. ஏககாலத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கள் இருக்கக் கூடிய பிரமாண்டமான அந்தச் சபாமண் ‘பத்தில் உட்காருவதற்கு ஒரு நாற்காலிகூட இல்லாதது நூதனமாகத் தோன்றியது. 

மண்டபத்தின் ஒரு மூலையிலே சற்று உயரமான ஒரு மேடை. அந்த மேடைமீது நவரத்தினங்கள் வைத்து இழைத்த ஒரு சிம்மாசனம். அதன் மீது உட்கார்ந்திருந் தாள் ஒரு பெண். அவள்தான் மலைக்கன்னி என்று சொல் லப்பட்ட பெண் மணியும் அந்தத் தீவின் அரசியாகவும் இருக்க வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துக் கொண் டோம். நாங்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நான்கு நாள் பிரயாணம் செய்ய வேண்டிய தொலைத் தூரத்துக்கப்பாலிருக்கும் மலைக்கன்னிக்கு நாங்கள் அத் தீவில் வந்து இறங்கியிருப்பது எப்படித் தெரிந்தது? எங் களைக் கைது செய்து கொண்டுவர அவள் உத்தரவிட் டிருப்பது சாத்தியமா? என்று நாங்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தோம். 

மலைக்கன்னி எங்களைப் பார்த்ததும் புன்முறுவலோடு வரவேற்றாள். நாங்கள் அத்தீவிற்கு வந்த வரலாற்றைப் பற்றி விசாரித்தாள். நாங்கள் சொல்லிய வரலாற்றைக் கேட்டதும் எங்களிடம் மிகுந்த அனுதாபம் காட்டி அரண் மனையிலேயே எங்களை இருக்கும்படி சொன்னாள். 

பிறகுதான் அவளுடைய பெயர் தேவதேவி என்பதும் அந்தத் தீவின் பெயர் செம்பவளத்தீவு என்பதும் எங் களுக்குத் தெரிந்தது. 150 வருட காலமாக அந்தத் தீவில் ஆட்சி புரிந்து வருவதாயும் இளமைமாறாமல் நித்திய கன் னியாயிருக்கும் அதிசயமான சக்தியை அவள் பெற்றிருப் பதையும் நாங்கள் தெரிந்து கொண்டோம். அடுத்த ஒ மாதகாலம் வரையில் விசேஷமாக ஒன்றும் நிகழவில்லை. ஆனால், இந்த ஒரு மாதத்தில் தேவதேவியின் பேரில் எனக்கு வெறுப்புத்தட்ட ஆரம்பித்தது. அவள் உன் அப்பாவிடம் அளவுமீறி நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். இது எனக் குப் பலத்த சந்தேகத்தையும் பயத்தையும்கூட உண்டு பண்ண ஆரம்பித்தது. 

ஒருநாள் இரவு அரண் மனையில் நிலா முற்றத்தில் விஜய கேசரி உட்கார்ந்திருந்தார். நான் அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணி. எனக்கு ஆயாசமாயிருந்தபடியினால் சற்றுச் சீக்கிரமாகவே படுக்கப் போய்விட்டேன். இடையில் கண் விழித்துப் பார்த்தபொழுது விஜயகேசரியை அறையில் காணாதபடியினால் அவரைத் தேடிக்கொண்டு நிலா முற் றத்துக்குச் சென்றேன். அங்கு கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. அற்ப ஆசையுடன் போதையூட்டும் பாணியில் தன்னை அலங்கரித்துக் கொண்டு தேவதேவி உன் அப்பாவிடம் வாதாடிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். எங்கோ ஒரு இடத்தில் ஜீவஜோதியென்ற ஒரு அக்னி இருப்பதாயும் அதில் பிரவேசித்து வெளிவந்தால் இளமை மாறாமல் அமரனாயிருக்கலாமென்றும் என்னை உத றித் தள்ளிவிட்டுத் தன்னை மணந்து கொண்டு சுகமாக வாழும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாமென்றும் அவள் உன் அப்பாவுக்கு உபதேசம் செய்து கொண் டிருந்தாள். உன் அப்பா என்னைத் திரஸ்கரிப்பதற்குப் பிடி வாதமாக மறுக்கவே இவள் எவ்வளவோ நயமாகவும் பயமுறுத்தியும் மன்றாடினாள். அந்தக் கட்டத்தில் நான் அவர்கள் முன்னிலையில் போய்ச் சேர்ந்தேன். என்னையும் வைத்துக் கொண்டு உன் அப்பா தேவதேவியை இழிவா கப் பேசியது அவளுக்குப் பொறுக்கவில்லை. கோபத்தில் உன் அப்பாவின் தலைமீது அவள் கையை வைத்தாள். அடுத்த கணம் உன் அப்பா கீழே சுருண்டு விழுந்துவிட்டார்: 

பிறகு தன் ஆட்களை அழைத்து என்னை ஒரு படகில் வைத்து கடலில் விட்டுவிடுமாறு அவள் உத்தரவு பிறப் பித்தாள். உன் அப்பாவை மட்டும் கொன்றுவிட்டு என்னை மட்டும் அவள் ஏன் உயிரோடு விட்டாளென்பது இன்ன மும் எனக்குப் புரியவில்லை. உன் அப்பா கொலை செய்யப் பட்ட அதே இடத்தில் நானும் பிராணத்தியாகம் செய்ய வேண்டுமென்று முதலில் எனக்குத் தோன் றியது. ஆனால் உடனே அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டுவிட் டேன். எப்படியாவது அந்த இடத்திலிருந்து தப்பி வந்து, வயிற்றிலிருந்த உன்னை ஆளாக்கிவிட்டு பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற ஒரு வைராக்கியம் எனக்கு ஏற்பட் டது. அந்த வைராக்கியம் என்னுடைய உயிரிடம் எனக்கு ஒரு ஆசையையும் உண்டுபண்ணியது. 

படகிலேற்றிக் கடலில் விடப்பட்ட நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து வழியில் வந்த ஒரு மரக்கலத் தின் உதவியுடன் சோழநாட்டுக்கு வந்து சேர்ந்தேன். என்னுடைய நல்ல காலம் அப்போது மகான் ஆனந்தர் சோழ நாட்டில் முகாம்போட்டிருந்தார். அவரின் உதவியினால் மன்னரிடமிருந்து எனக்கு ஒரு வீடும் கொஞ்சப் பணமும் கிடைந்தது. 

குழந்தாய்! உன்னுடைய ஐந்தாவது வயதில் இந்த வரலாறுகளை நான் எழுதி முடிக்கிறேன். நீ கர்ப்பத்தில் இருக்கையில் எழுத ஆரம்பித்த இந்தக் கதையை ஐந்து வருட காலம் தட்டுத் தடுமாறிப் பல தடவை எழுதிக் கடைசியாக இதைத் திருத்தி எழுதியிருக்கிறேன். இத் துடனிருக்கும் சர்ப்பமோதிரமும் சர்ப்பச் சின்னம் பதித்த மாலையும் தேவதேவியினால் எனக்குக் கொடுக்கப்பட்டவை. அவைகளையும் அடையாளமாகவிட்டுச் செல்கிறேன். செம் பவளத்தீவு பாரதத்தின் தென்மேற்கிலிருக்கும் தீவுக் கூட் டங்களில் ஒன்று. அதன் அடையாளம் கடலிலிருந்து பார்க்கும் பொழுது இரண்டு பெரிய மலைச் சிகரங்கள் கட லுக்குமேல் எழும்பி நிற்பதைப் போலிருக்கும். ஒரு சிகரம் பெரிய யானை ஒன்று படுத்திருப்பதைப் போலவும் மற் றொன்று பெரிய ரிஷபம் படுத்திருப்பதைப் போலவும் தோன்றும். என்றைக்காவது ஒரு நாள் நீ அந்தத் தீவுக் குப்போய் சாதுரியமாகத் தேவதேவியைக் கொலை செய்து வஞ்சம் தீர்க்க வேண்டும். உன்னால் இதைச் செய்து முடிக்கச் சாத்தியப்படாவிட்டால் இப்பொறுப்பை அடுத்த சந்ததியிடம் விட்டுச் செல்ல வேண்டும். எந்தக் காலத்தி லாவது விஜயகேசரியின் மரணத்துக்கு வஞ்சம் தீர்க்கும் ஒரு வீரன் நமது வம்சத்தில் வந்து பிறக்காமலிருந்து விட மாட்டான். தேவதேவி இயற்கையாகச் சாகாவரம் பெற் றிருப்பினும் பலாத்காரச் சாவுக்கு அவளும் உட்பட்டவள் தான். இந்த இரகசியத்தை அவள் வாயிலிருந்தே நான் கேட்டிருக்கிறேன். உன் தாயின் கட்டளையை நீ நிறைவேற்றுவாயா? உன் தகப்பனார் மரணத்துக்கு வஞ் சம் தீர்த்த பெருமையை நீ சூட்டிக் கொள்ளுவாயா? உனக்கு இறைவன் பக்கபலமாயிருப்பார். 

துர்ப்பாக்கியவதியான 
உன் தாய்,
சந்திரிகா. 

அத்தியாயம்-8

சந்திரிகா எழுதிவைத்திருந்த கடிதத்தை ஜோதிவர் மன் படித்து முடித்தவுடன் ஆச்சரியமிகுதியால் சற்று நேரம் வரையில் எல்லோரும் மௌனம் சாதித்தார்கள். கடிதத்தைப்பற்றி அவர்கள் ஒவ்வொருவருடைய சிந்தனை யும் ஒவ்வொருவிதமாக ஓடிக்கொண்டிருந்தது. 

சரித்திர ஆராய்ச்சிகளில் கைதேர்ந்த மேதையாக விளங்கிய ஜோதிவர்மன் முதலில் பேச ஆரம்பித்து, “இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதைப்போல பிம்பிஸா ரனை அஜாதசத்ரு படுகொலை செய்து சிம்மாசனத்தைக் கைப்பற்றியதும் அங்கநாட்டை அஜாதசத்ரு தாக்கிப் பிடித்ததும் உண்மைதான். மகான் ஆனந்தர் விஜயத்தின் பயனாகக் கலிங்கத்தில் பௌத்தமதம் பரவியதும் சரித்திர பூர்வமானது. இவற்றில் ஆட்சேபிக்கக்கூடிய அம்ச மொன்றுமில்லை!'” என்றான். 

“இவை மட்டுமென்ன? ஜயகேசரி, விஜயகேசரி, தேவ தேவி ஆகியவர்கள் சம்பந்தமான வரலாறுகளும் உண் மையாகவே இருக்கலாம். சந்திரிகாவின் உருக்கமான கடிதத்தை வாசிக்கும்பொழுது அவள் குறிப்பிடும் விவரங் களைச் சந்தேகிக்க இடமேயில்லை. தேவதேவி இன்னமும் உயிரோடு இருப்பதாக நம்புவதைத்தான் பைத்தியக்கா ரத்தனமான நம்பிக்கை என்கிறேன்” என்றான் பாலாஜி. 

“ஆமாம்”, “ஆமாம்” நானும் அப்படித்தான் நினைக்கிறேன் என்று பாலாஜியை ஆமோதித்தார் சச்சிதானந்தர். 

சந்திரிகாவின் கடிதத்தின் கீழே அதை மொழி பெயர்த்த பேராசிரியர் பானர்ஜி கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பு எழுதியிருந்தார்:- 

சந்திரிகா கடிதத்தின்கீழ் ஆறுபேர் ஒப்பமிட்டிருக்கி றார்கள். அவர்களுடைய பெயர்கள் தெளிவாகத் தெரிய வில்லை. இவர்கள் சந்திரிகாவின் சந்ததியார்களென்று தெரிகிறது. ஏழாவதாக நந்திவர்மன் என்ற ஒருவர் தனது மகன் மேகவர்மனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கி றார். இந்தக் கடிதத்திலிருந்து சந்திரிகாவின் பிள்ளை சந்திர வர்மன் இலங்கையில் குடியேறியதாகத் தெரிகிறது. நந்திவர்மனுடைய காலம் இந்தியாவில் சந்திரகுப்தன் அரசு செலுத்திய காலம். அப்பொழுது ஈழநாட்டில் பாண்டுகபயன் என்பவன் ஆட்சி நடத்தி வந்தான். சிரஞ் சீவியாக தேவதேவி இருப்பது சாத்தியமென்பதற்கு நந்தி வர்மன் சில ஆதாரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். 

பேராசிரியர் பானர்ஜியின் இந்தக் குறிப்பைப் பார்த் தவுடன் “நந்திவர்மனுடைய கடிதத்தையும் படிகேட்க லாம் ஜோதி!” வேறு எதற்கு உபயோகப்படாவிட்டா லும் மிகமிக ரசமான பல சரித்திர வரலாறுகளை இக்கடி தங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. என்றான் பாலாஜி. 

ஜோதிவர்மன் தொடர்ந்து படிக்கவாரம்பிக்க அதை மற்றவர்கள் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

அன்புள்ள மேகவர்மனுக்கு, 

இந்தப் பெட்டிக்குள் இருக்கும் ஓலைச் சுவடிகளை நீ படித்துப் பார்க்கும் பொழுது சந்திரிகாவின் சபதத்தை நிறைவேற்ற நான் ஏதாவது முயற்சி செய்தேனா என்று நீ யோசிப்பாய். இதைச் சொல்வதன் முன்னால் சந்திரிகா வின் பிள்ளை சந்திரவர்மனிடமிருந்து வாய்மொ ழி யா கப்பரம்பரை பரம்பரையாக வந்த சில விவரங்களை உனக்கு நான் தெரிவிக்கவேண்டும். 

“சந்திரிகாவின் பிள்ளை சந்திரவர்மன் சோழ நாட்டி லிருந்து தனது தாயின் ஜன்மஸ் தலமான கலிங்கத்துக்குப் போயிருக்கிறார். அப்போது கலிங்கம் முழுவதும் பௌத்த தேசமாக மாறியிருந்தது. பகவான் புத்தர் காலமாகிய தும் அவருடைய புனித தந்தம் ஒன்று கலிங்கத்துக்குக் கொண்டுவரபட்டு அதை பிர திஷ்டை செய்ய ஒரு பிர மாண்டமான விஹாரையையும் சிருஷ்டித்திருந்தார்கள். அந்த விஹாரையைச் சுற்றி தந்தபுரம் என்ற ஒரு புதிய பெரிய பட்டினமே தோன்றியிருந்தது. சந்திரவர்மன் இந்தப் பட்டினத்தில் தான் தொழில் நடத்தி வந்ததா கத் தெரிகிறது. பிறகு அங்கிருந்து அவர் எப்படியோ சிங்கப்புரத்துக்குப் போயிருக்கிறார். 

தென்னிலங்கையில் கட்டுப்பாடான ஒரு இராஜ் யத்தை ஸ்தாபித்து அரசு செலுத்திய பெருமை விஜயன் என்ற இந்திய இளவரசனைச் சேர்ந்ததென்பதை நீ கேள் விப்பட்டிருப்பாய். அவன் சிங்கபுரத்து மன்னன் சிங்க பாகுவின் பிள்ளையாவான். வாலிபப் பருவத்தில் இவ னும் இவனுடைய சகாக்களும் நாட்டில் செய்த அக்கிர மங்களுக்கு ஒரு எல்லையே கிடையாது. அடங்காப்பிடாரி யான இந்தப் பிள்ளை இருப்பதைவிட எங்கேயாவது தொலைந்து போய்விட்டால் தேவலை போலிருந்தது. சிங்கபாகுவிற்கு விஜயனையும் அவன் சகாக்களையும் மன்னர் சிங்கபாகு பிரஷ்டம் செய்து ஒரு கப்பலில் ஏற்றி நாட்டைவிட்டு விரட்டினார். இவர்கள் தென்னிலங்கையை அடைந்து ஒரு தனி இராஜ்யத்தை தங்களுக்காக ஏற்படுத்திக் கொண்டார்கள். 

விஜயன் சந்ததியில்லாமல் இறக்கவே கலிங்க நாட்டில் சிங்கபுரத்திலிருந்து அவனுடைய அண்ணன் பிள்ளைகளில் ஒருவனான பாண்டு வாசுதேவனை அழைத்து ஈழநாட்டு மன்னராக முடி சூட்டினார்கள். பாண்டுவாசு தேவனின் மெய்ப் பாதுகாவலர்களில் ஒருவராகச் சந்திரிகா வின் மகன் சந்திரவர்மனும் இலங்கைக்கு வந்திருக்கி றான். நான் இலங்கையில்தான் பிறந்தேன். நான் வாலிபப் பருவத்தை அடைந்தபொழுது பாண்டுரங்கன் இலங்கை அரசனாக இருந்தான். அவனிடம் நான் நமது குடும்ப வரலாற்றைச் சொல்லி செம்பவளத்தீவிற் குப் போய்வர உ தவி புரிய வேண்டுமென்று வேண்டி னேன். என் கூற்றைக் கேட்டு அவன் விழுந்து விழுந்து சிரித்தான். தேவதேவி இன்னமும் உயிரோடு இருப்பா ளென்று நம்புவது சுத்தப் பைத்தியக்காரத்தனமென்று அவன் கேலிசெய்தான். மன்னரின் பேச்சை மீறிக் கொண்டு என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. தவிரவும் திக்குத்திசை தெரியாத தீவாந்திரத்துக்கு நான் செல்லு வதை உன் தாயாரும் அனுமதிக்கவில்லை. எனக்கு என் னவோ தேவதேவி உயிருடனிருக்க முடியுமென்றுதான் தோன்றுகின்றது. அவளை வேட்டையாட உன்னால் முடியு மானால் முயன்று பார். முடியாவிட்டால் இந்த இரும்புப் பெட்டியையும் இதிலுள்ள ஏட்டுச் சுவடிகளையும் இந்த என் கடிதத்தையும் அடுத்த சந்ததிக்குப் பத்திரப்படுத்திக் கொடுப்பது உன் பொறுப்பு. செம்பவளத் தீவுக்குப் போய் உண்மையைக் கண்டறியும் ஆற்றல் மிக்க ஒரு வீரன் நமது சந்ததியில் என்றைக்காவது ஒரு நாள் தோன்றாமலா இருந்துவிடப் போகிறான்? 

உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகட்டும். 
நந்திவர்மன், 

பாண்டுகபயன் ஆட்சியில்- 
ஆறாவது ஆண்டு. 

இந்தக் கடிதத்தின்கீழே அநேகம் கையொப்பங்களிருந்தன. அவற்றின் பக்கத்தில் கையொப்பமிட்டவர் வாழ்ந்த காலத்தைக் குறிக்கும் ஒரு சிறு குறிப்பும் தென் பட்டது. ஜயவீர வர்மன் என்ற ஒருவருடைய காலத் தில் அதாவது கி. பி. எட்டாவது நூற்றாண்டில் இந்தக் குடும்பம் தென்னிலங்கையை விட்டு வடஇலங்கைக்குச் சென்று உக்கிரசேன மகாரா ஜனிடம் சேவைக்கு அமர்ந்திருக்கிறது. பிறகு விஜயாலய சோழன் காலத்தில் ரகுவர்மன் என்பவர் ஈழத்திலிருந்து அடியோடு இடம்மாறி சோழநாட்டில் குடியேறி ஒரு குதிரைப் படைத் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். வேங்கிச் சோழனான ராஜராஜ மும்முடிச் சோழன் அரசாண்ட கி. பி. 11ம் நூற்றாண்டில் சிங்களவர்மன் என்பவர் போர்க்களத்தில் அரிய பல சாதனைகளைச் சாதித்து அரண்மனையில் நல்ல செல்வாக்குடனிருந்ததாக ஏட்டுச்சுவடியில் அவர் எழுதியிருந்தார். ஹைதர் அலி காலத்தில் தான் இக்குடும் பம் திருச்சி மலைக்கோட்டையில் குடியேறியதாக இன் னொரு குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. மலைக்கோட்டைக்கு வந்த நாள்முதல் 1எளிமையும் இக் குடும்பத்தினருக்கு உற்ற துணையாகச் சேர்ந்து வந்தது. 

இவ்விதம் ஏட்டுச் சுவடிகளின் ஜோதிவர்மனுடைய பூர்வோத்திரங்களைச் சரித்திரக் கோவையுடனும் தேதி வாரியான ஆதாரங்களுடனும் கொடுத்திருப்பதைப் படித்து முடிந்ததும் எல்லோரும் வாயடைத்துப் போனார் கள். சுவடிகளை ஜோதிவர்மன் முன்போல பத்திரமாகப் பட்டுக் கயிற்றினால் கட்டி இரும்புப் பெட்டிக்குள் திருப்பி வைக்கையில் பாலாஜியும் சச்சிதானந்தரும் தீவிரமான சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்களென்று கூற வேண் டும். ஸர்ப்ப மோதிரத்தை ஜோதிவர்மன் மோதிர விர லில் அணிந்து கொண்டான். ஸர்ப்ப இலச்சினையுள்ள மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டான். மற்றப் பொருள்களையெல்லாம் இரும்புப் பெட்டியில் வைத்து அவன் பூட்டும்வரை அவர்களில் ஒருவரும் வாயைத் திறக்கவேயில்லை. 

முதலில் பாலாஜி பேசவாரம்பித்தான். “ஜோதியின் குடும்பத்தில் சென்ற 2500 ஆண்டுகளாக எல்லோருடைய பெயர்களும்” வர்மன் என்று முடிந்திருப்பது விசேஷ மான ஒரு அம்சம். வி ஜயகேசரியின் மரணத்துக்கு இது வரை யாரும் வஞ்சம் தீர்க்காவிட்டாலும் வஞ்சம் தீர்க்க வேண்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்பதைக் குறிக்கப் பிற்காலச் சந்ததியார்கள் ஒவ்வொருவரும் சந் திரவர்மனின் பெயரை அனுசரித்துத் தாங்களும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், இரண்டாவதாக தேவ தேவி செம்பவளத்தீவில் இன்னமும் இருப்பது சாத்தியமா என்பது எப்படியிருப்பினும் சந்திரிகா எழுதியிருக்கும் வர லாறு நூற்றுக்கு நூறு உண்மையென்பதை நாம் சந்தேகிக்க வேண்டியதேயில்லை. நந்திவர்மன் கடிதத்தைத் தான் யார் கட்டுக்கதையென்று துணிந்து சொல்ல முடியும்? சரித்திரத்தைக் கரைத்துக் குடித்த மேதாவிகளுக்குக்கூட தெரிந்திராத அவ்வளவு அரிய பெரிய சரித்திர உண்மை களை இக்கடிதம் எமக்கு அறிவுறுத்துகின்றது. இலங்கை, இந்திய சரித்திர நிகழ்ச்சிகளை ரத்தினச் சுருக்கமாகவும் வம்சாவளியாகவும் குறிப்பிடும் நந்திவர்மன் கடிதமும் ஏட்டுச் சுவடிகளில் அடங்கியிருக்கும் இதர விஷயங்களும் உலகுக்கு அபாரமான முக்கியத்துவம் வாய்ந்தவை” என்றார். 

“சரித்திரம் இருக்கட்டும் பெரியப்பா! எனது முன் னோர்கள் எழுதி வைத்திருக்கும் விருத்தாந்தங்களையெல் லாம் இப்பொழுது நாம் தெரிந்து கொண்டு விட்டோம். நாம் படித்திருக்கும் சரித்திரத்திற்கும் ஏட்டுச் சுவடிகளி லிருப்பதற்கும் நெருங்கிய ய ஒற்றுமை இருப்பதையும் தெரிந்து கொண்டு விட்டோம். இதற்கு அடுத்தபடியாக செம்பவளத்தீவின் ராணி தேவதேவி 2500 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதும் அதே இடத்தில் இருப்பது சாத் தியமா? இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? அதைச் சொல்லுங்கள்!” என்றான் ஜோதிவர்மன். 

“தேவதேவி சாகா வரம் பெற்றவளாயிருக்க முடியு மென்று உன் தகப்பனார் விஜயவர்மன் சொல்லிய பொழு தும் அதை நான் நம்பவில்லை. இப்பொழுதும் அந்த அபிப் பிராயத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை?” என்று பாலாஜி சொல்லவும், “ஆமாம், ஜோதி நானும் இப் படித்தான் நினைக்கிறேன்!” என்று ஆமோதித்தார் சச்சிதானந்தர். 

“நான் முற்றிலும் வேறுவிதமாக நினைக்கிறேன் பெரி யப்பா! செம்பவளத் தீவில் தேவதேவி இளமை மாறாமல் இன்னமும் ஆட்சி நடத்திவர வேண்டுமென்று என் அந்த ராத்மா எனக்குச் சொல்லுகிறது. நான் நினைப்பது தவ றாகவே இருக்கலாம். அதற்காக என் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கும் இந்தப் புனிதமான வரலாற்றை நான் உதாசீனம் செய்துவிடப் போவதில்லை. 25 நூற்றாண்டு களாக என் வம்சத்தில் யாரும் செய்ய முற்பட்டிராத ஒரு காரியத்தை நான் செய்து முடிக்கப் போகிறேன். தேவ தேவி நான் நினைப்பதைப்போல சிரஞ்சீவியாக இருப்பா ளாயின் என்னுடைய சாதுர்யத்தினால் அவளை அழித்துச் சந்திரிகாவின் சபதத்தை நிச்சயம் நிறைவேற்றப் போகி றேன். இம்முயற்சியில் எனக்கு என்ன நேரிட்ட பொழு திலும் சரி” என்று ஒரே போடாகப் போட்டான் ஜோதி வர்மன். உணர்ச்சியோடு அவன் அவ்விதம் சொல்லிய தைக்கேட்டு பாலாஜியும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்து போய் மௌனம் சாதித்தார்கள். 

அத்தியாயம்-9

ராதை அவனருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, “குழந்தை! ரொம்ப நேரமாகி விட்டது. இன்னும் கண் விழித்துக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது. போய்ப் படுத்துக் கொள் அப்பா! காலையில் பாக்கியைப் பேசிக் கொள்வோம்” என்றாள். 

வளர்ப்புத்தாயின் பேச்சை எப்பொழுதுமே தட்டியறியாத ஜோதிவர்மன் விரலில் ஸர்ப்ப மோதிரத்தையும், கழுத்தில் ஸர்ப்ப இலச்சினை பதித்த சங்கிலியையும் போட் டுக் கொண்டே எழுந்து போனான். 

அவன் போனபிறகு, “இந்தப் பைத்தியக்காரப்பிள்ளை பேசுவதைப் பார்த்தால் செம்பவளத் தீவுக்குக் கண்டிப்பாகப் புறப்பட்டுப் போய் விடுவான் போலிருக்கிறதே” என்றான் பாலாஜி. 

“ஆமாம்! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதைப்போல அவன் துணிந்து புறப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட் மாட்டேன். நல்ல வார்த்தையாகச் சொல்லித்தான் அவனு டைய மனதை மாற்ற வேண்டும்” என்றார். சச்சிதானந்தர். 

“காலா காலத்தில் ஒரு கல்யாணத்தைச் செய்துவைத் திருந்தால் பெட்டிப்பாம்பாக எஜமான் அடங்கிப்போயிருப்பார். குழந்தை குட்டிகளிருந்தால் அவர்களைவிட்டுப் போக வேண்டுமேயென்ற எண்ணம் எஜமானுக்கு ஏற்படுங்களா?” என்றான் வேலைக்கார முனிசாமி. 

“முனிசாமி இதுவும் ஒரு விதத்தில் உண்மை தான்!” என்று பாலாஜி ஆமோதித்த பொழுது “எது உண்மை? ஜோதியின் தகப்பன் கட்டிய மனைவியைக் கர்ப்பிணியாக விட்டு முரட்டுத்தனமாகச் செம்பவளத்தீவுக்கு ஓடவில் லையா? இந்தக் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாகவே ஒரு பைத்தியம் இருந்துவருகிறாப் போலிருக்கிறது!” என் றார் சச்சிதானந்தர். 

அவர்களுடைய சம்பாஷணை அன்றிரவு அதோடு முடிந்தது. 

மறுநாள் காலை பத்துமணி சுமாருக்குப் பாலாஜி ஜோதிவர் மனின் அறைக்கு வந்த பொழுது லட்சத்தீவு களின் சரித்திர பூகோள வரலாறுகளை அதிதீவிரமாக ஆராய்ந்து குறிப்பு எழுதிக் கொண்டிருந்தான் அவன். 

“ஏது அந்தப் பழங்கதையை நீ இன்னும் மறக்க வில்லை போலிருக்கிறதே ஜோதி! இந்தப் பைத்தியக்கார விஷயத்தை விட்டுவிட்டு வேறு ஏதாவது நல்ல விஷயத்தில் கவனம் செலுத்தினாலும் பிரயோசனமுண்டு!” என்று சொல்லிக்கொண்டே ஜோதியின் பக்கத்தில் வந்து உட் கார்ந்தான் பாலாஜி. 

”பெரியப்பா! செம்பவளத்தீவு இருப்பதாகக் கூறப் படும் லட்சத்தீவு கூட்டங்களின் வரலாறு எவ்வளவு ருசிகர மாயிருக்கிறது பார்த்தீர்களா? சற்றுக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் சரித்திர முற்காலத்தில் எகிப்து, பாரசீகம், உரோம ராஜ்யம், கிரீஸ், சீனம், பாரதம்ஆகிய நாடுகளைப் போலவே லட்சத்தீவுகளும் நாகரிகத்தின் உச்ச நிலைமையில் இருந்ததாகத் தோன்றுகிறது. இடைக்காலத் தில் எப்படியோ அந்த நாகரிகம் அழிந்து மறைந்து போயி ருக்கிறது” என்றான். 

நீ சரித்திர, பூகோள, பூதத்துவ ஆராய்ச்சிகள் நடத்தி யவன் ஜோதி! உன்னோடு தர்க்கம் செய்ய என்னால் முடி யு மா? நீ இவ் வளவு தூரம் ஆராய்வது எதற்கு என்பது புரிகிறது. சாவை வெல்லும் சக்தியடைந்த தேவதேவி செம்பவளத்தீவில் செங்கோல் செலுத்திக்கொண்டு சிரஞ் சீவியாய் இருப்பது பூதத்துவ வரலாற்றுக்கு மாறுபட்டதில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறாய். அவ்வளவு தானே?” என்றான் பாலாஜி. 

“நீங்கள் நினைப்பதை போல தேவதேவியைப் பற்றி நான் எவ்விதமான முடிவுக்கும் வரவில்லை பெரியப்பா! நமக்குத் தெரியாத பல விஷயங்கள் நமது மூதாதையர் களான முந்தியகத்து மனிதர்களுக்கு தெரிந்திருப்பது சாத்தியம் என்பதைச் சொல்லவே அழிந்து போன புராதன நாகரிகங்களையும் அவைகளின் சின்னங்களாக இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களையும் குறிப்பிட்டேன். லட்சத்தீவுகளையே எடுத்துக் கொள்வோம். உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே அந்தத் தீவுகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆயினும் பல நூற்றாண்டுகள் வரை அவைகளைப் பற்றி இந்திய மக்களுக்கு ஏதுமே தெரி யாமலிருந்தது. 1490ம் ஆண்டில் இந்தியாவுக்கு கடல் வழி யைக் கண்டுபிடிக்க வந்த வஸ்கோடிகாமா என்ற போர்க் சுக்கீசிய மாலுமி லட்சத் தீவுகளை கண்டுபிடித்து உலகத் துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான். அவன் கண்டுபிடிப்ப தற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து அந்தத் தீவுக்கூட்டம் அதே இடத்தில் தான் இருந்திருக்கின்றது. பாரதத்துடன் விட்டுவிட்டு நெருங்கிய தொடர்பு கொண்டும் இருந்து வந்திருக்கின்றன. 

“இப் பொழுதும் கூட கடலில் பரந்து கிடக்கும் நூற்றுக் கணக்கான இத்தீவுக் கூட்டங்களில் நமக் குச் சரிவரத் தெரிந்தது 14 தீவுகள் தான். அந்தப் 14 தீவு களிலும் நம்மவர்கள் போய் குடியேறியிருப்பது ஒன்பது தீவுகளில் தான். இந்த 9 தீவுகளிலும் தற்சமயம் உள்ள மொத்த ஜனத்தொகை சுமார் 10000. இந்தியாவுக்கு மிக அருகிலுள்ள தீவு மலையாளக் கடற்கரையிலிருந்து மேற்கே சுமார் 170 மைல் தூரத்துக்கப்பால் இருக்கிறது. மிகத் தூரத்திலுள்ள தீவு இன்னும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை?'” 

“அந்தத் தீவை ஏன் இன்னும் கண்டுபிடிக்க வில்லை? இந்த இருபதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்படாத இடம்கூட ஒன்று இருக்கிறதா?” என்றான் பாலாஜி. 

“ஏன் இல்லை! எவ்வளவோ இருக்கிறது. இருண்ட கண்டமெனப்படும் மத்திய ஆபிரிக்காவைப் பற்றி மனி தனுக்குத் தெரிந்தது மிகமிகச் சொற்பம். சமீபகாலம் வரையில் எவரஸ்ட் சிகரம் மனிதனின் கற்பனைக்கு அப்பாற் பட்டதாக இல்லையா? இமயமலையிலே மனிதன் திருஷ்டியில் படாத எவ்வளவோ. இடங்கள் இன்னும் இருக்கின்றன. சமுத்திரத்தில் இன்னும் எவ்வளவு ஆயிரம் தீவுகள் எங்கெங்கே இருக்கின்றனவோ யார் கண்டார்கள்? கண்டுபிடிக் காததீவுகளில் பழமையான நாகரிகமும் பழமையான மனிதர்களும் இருந்து அவர்களைப் பார்க்கும்  சந்தர்ப்பமும் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு சுவாரஸ்யமாயிருக்கும்? மறைந்து போன ஒரு பழைய நாகரிகத்தை உலகுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை நம்மைச் சேரும். இது மட்டுமா? நமது அபூர்வமான ஆராய்ச்சி இந்த அகிலத்தையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும்!” என்றான் ஜோதிவர்மன். 

“சரிதான் சரிதான்!” பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய ஒரு மனித சந்ததியையும் நாகரிகத்தையும் செம்பவளத்தீவில் கண்டு பிடித்து அகில உலகப் புகழ் பெற்ற மேதாவியாவதற்குத் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது ஜோதி. இந்த அசட்டுப் பேச்சுக்களெல்லாம் போதும். புத்தகத்தைப் பேசாமல் மூடி. விட்டு வா. உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டும்” என்றார் பாலாஜி. 

“என்ன பெரியப்பா! ஜமீன் விஷயமா?” என்றான் ஜோதி. 

“ஜமீன் விஷயமில்லை ஜோதி! உன்னுடைய சொந்த விஷயம்! எனக்கும் ராதைக்கும் உன் கல்யாணத்தைப் பற்றியே கவலையாயிருக்கிறது” என்று பாலாஜி ஆரம்பிக்கவும், “அதற்குக் கவலைப்படுவானேன்? எனக்குப் பெண் கிடைக்காமல் போய் விடுமோ என்றா?” என்று கிண்டல் லாகக் கேட்டுவிட்டுச் சிரித்தான். 

”அதற்கில்லை ஜோதி! எனக்கும் வயதாகிறது. காலா காலத்தில் உனக்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவைத்துக் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ராதைக்கும் ஆசை. குலம் தழைக்க வீட்டுக்கு ஒரு நாட்டுப் பெண் வேண்டாமா?’ என்றான் பாலாஜி. 

“பெரியப்பா! எப்படியாவது என் காலில் ஒரு பெண்ணைக் கட்டிவைத்துவிட நீங்கள் இப்பொழுது தீவிரமாக முனைந்திருப்பதின் நோக்கம் செம்பவளத்தீவிற்கு நான் கிளம்பி விடுவேனோ என்று அஞ்சித்தான். இவ்வளவு பச்சையாகப் பேசுகிறேனே என்பதற்கு என்னைத் தயவுசெய்து மன்னிக்க வேண்டும்” என்று ஜோதிவர்மன் ஆரம்பிக்கையில், பாலாஜி அவசரம் அவசரமாகக் குறுக்கிட்டு, “அப்படி யெல்லாம் இல்லை ஜோதி! உனக்கும் வயதாகிவிட்டதல்லவா?” என்று மழுப்பினார். 

“உண்மையை மறைக்க முயற்சிக்காதீர்கள் பெரியப்பா நேற்றிரவு ஓலைச்சுவடிகளை நான் படித்ததிலிருந்து உங்கள் மனதிலும் அம்மாவின் மனதிலும் இருக்கும் கவலையை நான் அறிவேன். வம்ச பரம்பரையாக வந்த ஒரு கதையை நம்பிக்கொண்டு நான் கண்காணாத தீவாந்திரத்துக்கு ஓடிப்போய்விடுவேனோ என்று பயப்படுகிறீர்கள். ஒரு கலியாணத்தை அவசரமாகச்செய்துவிட்டால் மனைவியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருப்பேனென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இதில்தான் நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள், பெரியப்பா! நான் சுகபோகங்களை அனுபவிப்பதற்குப் பிறந்தவனில்லை. கரடுமுரடான வாழ்க்கையையே என் மனம் நாடுகிறது. இலட்சியமில்லாத இன்ப வாழ்க்கை பாலைவனத்தைப் போன்றது, பயனற்றது. என் வாழ்க்கையின் இலட்சியத்தை அடையும் வரையில், எந்த இலட்சியத்துக்காக நான் பிறந்திருக்கிறேனோ அதை நிறைவேற்றும்வரையில் என் கவனம் வேறு எதிலும் செல்லாது. தயவுசெய்து அதுவரையில் கல்யாணத்தைப் பற்றி என்னிடம் பேச்சே எடுக்காதீர்கள்” என்று உறுதியாகச்சொன்னான் ஜோதிவர்மன். 

“ஜோதிவர்மன் வம்சத்தில் இன்று நேற்று அல்ல, இருபத்தைந்து நூற்றாண்டுகளாகவே எல்லோருக்கும் கொஞ்சம் பைத்தியம் போலிருக்கிறது” என்று அட்வகேட் சச்சிதானந்தர் கூறியதை பாலாஜிக்கு அப்படியே ஆமோதிக்க வேண்டும் போலிருந்தது. வி ஜயவர்மனை சொல்லி விட்டுப் போனதைப் போல ஜோதிவர்மன் சரித்திர, பூகோள, பூதத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தியதன் பெரும் தவறை பாலாஜி இப்பொழுது உணர்ந்துகொண்டு உள்ளூர வருந்தினான். ஜோதியின் வம்ச வரலாறுகளைப் கடித்ததிலிருந்து அந்த வம்சத்தில் பிறந்தவர்கள் எல்லோருமே மெத்தப்படித்த முட்டாள்களாக மாறிப்போனதை போல பாலாஜிக்குத் தோன்றியது. இதை எப்படி அவன் வாய்விட்டுச்சொல்லுவான். 

பாலாஜி சொன்னான்:- 

“ஜோதி வாழ்க்கையில் ஏதோ ஒரு மாபெரும் இலட்சியத்தோடு பிறந்திருப்பதாக நீ சொல்வதைக் கேட்க நான் ஆச்சரியப்படவில்லை. உன்னுடைய வம்சத்தில் சென்ற 2500 ஆண்டுகளாகத்தோன்றிய ஒவ்வொ வரும் இப்படித்தான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார் கள். அதற்காக அவர்கள் கல்யாணம் செய்துகொள் ளாமலோ அல்லது வம்சவிருத்திக்கு ஏற்பாடு செய்யா மலோ இல்லை. ரொம்ப தூரம் போவானேன்? உன் அப்பா வையே எடுத்துக்கொள். தேவதேவி மர்மத்தைக்கண்டு பிடிப்பதில் உனக்கு இருக்கும் ஊக்கமும் சிரத்தையும் உன் அப்பாவுக்கு இல்லையா? அதற்காக அவர் கல்யாணம் செய்துகொள்ளாமலிருந்துவிட்டாரா? எனக்குத்தெரிந்து, உலகத்தின் சரித்திரத்துக்குத்தெரிந்து உன்னுடைய வம் சத்தைப்போல பழமையான வம்சம் வேறு எந்த நாட்டி லும் இல்லை. இருபத்தைந்து நூற்றாண்டுகளாக வாழையடி வாழையாக வந்த வம்சவரலாறு உன்னோடு முடிந்துவிடக் கூடாது. இந்த ஒரு விஷயத்தை உத்தேசித்தாவது முதலில் கல்யாணம் செய்துகொள். மற்ற விஷயங்களைப்பற்றி ஒரு குழந்தை பிறந்து நீ தகப்பனான பிறகு பேசுவோம். உன் அப்பா என்ன செய்தார்?” என்றான் பாலாஜி. 

“அப்பா செய்த தவறு அம்மாவை ஏங்கி ஏங்கிச்சாக அடித்தது. அந்த மாதிரித் தவறை நான் செய்யப் போவ தில்லை பெரியப்பா! 1942ம் வருட சுதந்திரப்போராட் டத்தின்போது செய் அல்லது செத்து மடி என்று இரண்டே வாக்கியங்களில் காந்தியடிகள் மனிதனின் கடமையை உணர்த்திக்காட்டினார். அந்த உபதேசத்தைக்கடைப்பிடித் துக்கடமையைச் செய்ததன் பயனாகவே இன்று நாம் சுதந் திரமக்களாக வாழ்கிறோம் அதேபோல நானும் என் இலட்சியத்தில் உடனடியாக இறங்கப்போகிறேன். அதில் ஒன்று வெற்றி அல்லது சாவு. இந்த இரண்டுக்கும் மத்தி யில் செயலற்ற, பயனற்ற வாழ்க்கை எனக்கு இருக்கப் போவதில்லை.” 

“நல்லது ஜோதி, உன் விருப்பத்தில் தலையிட நான் யார்?” என்று துக்கத்தோடு சொன்னான் பாலாஜி. 

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் பெரியப்பா! தேவதேவி கதை கட்டுக்கதையென்று நீங்கள்தான்சொல்லு கிறீர்களே? அப்படியானால் நான் செம்பவளத்தீவுக்குப் போய்வருவதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இருபதாம் நூற்றாண்டில் கடல் பிரயாணத்துக்கு சகல வசதிகளும் இருக்கும்பொழுது கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது பெரியப்பா?” என்றான் ஜோதி. 

“வாஸ்தவம் ஜோதி! கடல் பிரயாணத்தைப் பற்றி நான் கொஞ்சம்கூடப் பயப்படவில்லை. சாத்தியமானால் விமானத்திலேயே போய்விட்டு வரலாம். அவசியமானால் துணைக்கும் சிலரை அழைத்துச் செல்லலாம். தேவதேவி என்ற மாயப் பெண் உயிருடனில்லை என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமென்று பிடிவாதம் செய்யும் பட்சத்தில் நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும். ஆனால்…!” 

“என்ன ஆனால்? சொல்லுங்கள் பெரியப்பா” என்றான் ஜோதிவர்மன், 

“நீ செம்பவளத் தீவுக்குப் போய்வருவதை இனிமேல் நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. அதே சமயம் உன்னைத் தனியாக அங்கு அனுப்பப் போவதுமில்லை. நானும் முனிசாமியும் உன்கூடவே வரப்போகிறோம்!” என்றான் பாலாஜி. 

இந்தச் சம்பாஷணைகளுக்குப் பிறகு செம்பவளத் தீவுக்குப் போவதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் மறுபடியும் மனதைக் குழப்பிக் கொள்ளவே இல்லை. எப் பொழுது புறப்படுவது? எப்படிப் போவது? வழித்துணைக்கு இன்னும் யார் யாரை அழைத்துப் போவது? கையில் என் னென்ன கொண்டு போவது? என்பதைப் பற்றியே அவர் கள் அட்வக்கேட் சச்சிதானந்தரையும் கலந்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்கள். 

இவர்களுடைய திட்டத்தில் ராதைக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. பிரயாணத்தைத் தடுக்க அவள் எவ் வளவோ முயற்சி செய்து பார்த்தாள். அவர்களோடு தானும் போக விரும்பிப் பிடிவாதம் செய்து பார்த்தாள். அவளுடைய முயற்சிகள் ஒன்றும் பலிக்காமல் போகவே தெய்வம் விட்டவழி என்று சும்மா இருப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அதற்கிடை யில் செம்பவளத் தீவுக்கு யாத்திரை ஆரம்பிக்க ஜோதிவர் மன் துரிதமாக ஏற்பாடுகளைச் செய்வதில் ஈடுபட்டான். 

செம்பவளத் தீவுக்கு விமானத்தில் பிரயாணம் செய் தால் சௌகரியமாயிருக்குமென்று ஜோதிவர்மனும் பாலாஜியும் நினைத்தார்கள். இதற்காக அவசியமானால் ஒரு ஹெலிகொப்டர் விமானத்தையே விலைக்கு வாங்கி விடலாமென்று பாலாஜி யோசனை சொன்னான். ஆனால், ஜனசஞ்சாரமிருப்பதாகத் தெரியாத புதிய தீவுகளில் விமானத்தில் செல்லுவது அபாயகரமானதென்றும் பெரும்பாலான இதரதீவுகள் மலைப்பாங்காகவும் அடர்ந்த காடுகளாகவும் இருப்பதாகத் தெரிவதினால் அவற்றில் விமானங்கள் இறங்கவே முடியாதென்றும் விமானக் கம் பெனிகள் கூறிவிட்டன. ஜோதிவர்மனின் திட்டத்துக்குக் கப்பல் கம்பெனிகளும் உதவி புரிவதாயில்லை. ஜன நட மாட்டமிருக்கும் தீவுகளுக்கு வேண்டுமானால் போக லாமே தவிர, இனம் தெரியாத தீவுகளுக்குப் புதிய கடல் பாதையில் போவது அபாயகர மானதென்று கப்பல் கம்பெனிக்காரர்கள் எச்சரித்தனர். லட்சத்தீவுகள் கூட்டத்தைச் சுற்றி மர்மமான பாறைகள் ஜலமட்டத்திற்குக கீழே மறைந்திருப்பதாகவும் அந்தப் பகுதிகளில் கப்பல்கள் போவது அபாயகரமானதென்றும் கப்பல் கம்பனிகளின் சொந்தக்காரர்கள் கைவிரித்து விட்டனர். 

கடைசியில் ஒரு நாள் செம்பவளத் தீவுக்குப் போக ஏற்பாடு செய்து விட்டதாக ஜோதிவர்மன் அறிவித்த பொழுது அப்படியா? பறந்து போகிறோமா? அல்லது படகில் போகிறோமா? என்று விசாரித்தான் பாலாஜி. 

படகில் போகிறோம் பெரியப்பா! படகு என்றால் சாதாரண நாட்டுப் படகு இல்லை. சுமார் அறுபது எழுபது பேர்கள் விரைவில் போகக் கூடிய பெரிய இயந்திரப்படகு. என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு ஆங்கிலோ இந்திய நண்பன் கடற்படையில் சேர்ந்திருக்கிறான். வில்லியம் என்பது அவன் பெயர். என்னைப்போலவே அவனும் சரித் திர ஆராய்ச்சியில் பற்றுடையவன். அவனிடம் விஷயத் தைச் சொல்லி யோசனை கேட்டேன். கடற்படையில் இருந்து ஒரு இயந்திரப் படகை இரவல் வாங்கிக் கொண்டு நம்முடன் வருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனோடு கூட இன்னும் நான்கு கடற்படை அதிகாரிகளும் வருகிறார் கள். ஊர் சுற்றிப் பார்க்கவும் வேட்டையாடவும் அவர் கள் வருகிறார்கள், அவர்கள் வருவதினால் போக்குவரத்து வசதி நமக்குக் கிடைப்பதோடு நல்ல வழித்துணையும் வலு வில் கிடைக்கிறது. வில்லியம் இன்னொரு விஷயமும் சொன்னான். அவன் கொண்டு வரப்போகும் இயந்திரப் படகில் ரேடியோ வசதியும் இருக்கிறதாம். செம்பவளத் தீவில் நாம் எங்கு சுற்றினாலும் கரையில் நிறுத்தி வைக் கும் படகுடன் இடைவிடாமல் நாம் ரேடியோ மூலம் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கலாம். நமக்கு எதிர் பாராத துன்பம் ஏதாவது ஏற்பட்டால் படகில் இருப்ப வர்கள் ஆயுதபாணிகளாக விரைந்து வந்து உதவி புரியவும் இது உபயோக மாயிருக்கும். இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பெரியப்பா?” என்றான் ஜோதி, 

“நாம் தனிமையாகப் போவதைவிட நம்முடன் இன் னும் சிலர் வருவது சிலாக்கியம்தான் ஜோதி. எதற்கும் நாம் எல்லோருமே ஆயுதபாணிகளாகப் போவது நல் லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் இரண்டு துப்பாக்கிகளையும் நாம் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம்” என்று பாலாஜி யோசனை கூறினான்.  

ஜோதிவர்மன் நண்பனான காப்டன் வில்லியம் கொச்சியிலிருக்கும் கடற்படையைச் சேர்ந்த தனது மேலதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக எழுதித் தமது ரஜாவைக் கழிக்கவும் அதே சமயம் ரஜாக்காலத்தில் உபயோகமான தொரு சரித்திர ஆராய்ச்சி நடத்தவும் ஒரு இயந்திரப் படகைக் கொடுத்துதவ வேண்டுமென்று கேட்டபொழுது இவ்விஷயத்தில் கடற்படை அதிகாரிகள் விசேஷமான சிரத்தை காட்ட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ஜோதிவர்மன் ஓலைச்சுவடிகளுட னும் சர்ப்பச் சின்னங்களுடனும் கொச்சிக்கு நேரில் சென்று தனது வம்சவரலாற்றை அதிகாரிகளுக்கு எடுத்துச் சொன் னான். பாலாஜி சச்சிதானந்தர் முதலியவர்களைப்போல கடற்படை அதிகாரிகளும் தேவதேவியின் அமானுஷ்யமான சக்தியை நம்பத் தயங்கிய பொழுதிலும் புராதனமான செம்பவளத்தீவைக் கண்டு பிடிப்பது விசேஷ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாயிருக்கும் என்றும் இதற்கு இந்திய தேசிய கடற்படை சகலவிதமான உதவிகளையும் தயங்காமல் அளிக்குமென்றும் உறுதி கூறினார்கள். 

ஜூன் மாதம் 28-ம் திகதி வியாழக்கிழமை தூத்துக் குடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் புறப்படுவ தென்றும் அதில் காப்டன் வில்லியமும் இரண்டு மாலுமி களும், இரண்டு அதிகாரிகளும் ஒரு றேடியோ எஞ்சினி யர் ஆகியவர்களும் கூடவருவதென்றும் ஏற்பாடாயிற்று. நெருக்கடியான நிலைமை ஏதாவது ஏற்பட்டால் அதைச் சமாளிக்கச் சுழல் துப்பாக்கிகளையும் இயந்திரத் துப் பாக்கிகளையும் எடுத்துச் செல்லுமாறு காப்டன் வில்லிய முக்கு கடற்படைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். 

இந்த ஏற்பாட்டின்படி ஜூன் 26-ம் திகதியே பாலா ஜியும் ஜோதிவர்மனும் முனிசாமியும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். ஒலைச் சுவடிகளின் மொழி பெயர்ப்பையும் சர்ப்ப மோதிரத்தையும் மட்டும் ஜோதி வர்மன் தன்னுடன் எடுத்துக் கொண்டு வந்தான். ஓலைச் சுவடிகளையும் சர்ப்பச் சின்னம் பதித்த ஸ்வர்ண மாலை யையும் பத்திரமாகப் பழைய இரும்புப் பெட்டியிலேயே வைத்து முன்போலவே பூட்டினான். ஜமீன் நிர்வாகத்தை சச்சிதானந்தரிடம் ஒப்படைத்துத் தனக்கு எதிர்பாராமல் ஏதாவது நேரிட்டுவிட்டால் சொத்துக்களை எப்படிப் பட்டுவாடாச் செய்வதென்பதைப் பற்றியும் ஒரு உயில் எழுதி வைத்தான். “சந்ததியில்லாமல் நான் இறக்க நேரிடும் பட்சத்தில் என் வம்ச பரம்பரையாக வந்த பொறுப்பை நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் மிகுந்தவருக்கு எனது அட்வக்கேட் உசிதாசாரப்படி என் சொத்துக்களை வழங்கலாம். அவ்வித துணிவுள்ளவர் யாரும் முன்வராத பட்சத்தில் என் பெரியம்மா ராதை சொத்துக்களை அவ ருடைய ஜீவிய காலம்வரை அனுபவித்துவிட்டுப் பிறகு அவள் விருப்பம் போலச் செய்யலாம் என்று ஜோதிவர் மன் தனது உயிலில் எழுதி வைத்தான். 

இவ்விதமான முன்னேற்பாடுகளுடன் ஜோதிவர்மன் 2500 வருடங்களாக வாழையடி வாழையாக வந்த ஒரு ரகசியத்தை ஆராயும் பொருட்டு ஜூன் மாதம் 28-ம் திகதி வியாழக்கிழமை மாலை தனது கோஷ்டியுடன் தூத் துக்குடித் துறைமுகத்திலிருந்து மர்ம பூமியான செம்ப வளத்தீவை நோக்கி இயந்திரப் படகில் பிரயாணமானான்.

– தொடரும்…

– 1957ம் வருட ம்,மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மலைக்கன்னி என்ற தலைப்பில் இக்கதை வீரகேசரி நாளிதழில் பிரசுரமாயிற்று. ‘SHE’ என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியது. வீரகேசரியில் பிரசுரமாகிய கதை ஓட்டத்தைப் பாதியாமலும் சுவை குன்றாமலும் சிறிது சுருக்கி மாற்றி எழுதியிருக்கிறேன்.

– மலைக்கன்னி, முதற் பதிப்பு: ஜூலை 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *