மறு பக்கம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 5,360
நான்காவது மாடியின் மேல் தளத்தில் வெயில் காய்ந்து கொண்டு வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவர் தான் நமது கதையின் ஹீரோ பாலா. இவர் முன்னால் வேர்க்கடலைத் தொலிகள் நிரம்பிய கிண்ணம், ஒரு சிறிய பாக்கெட் டயரி, ஒரு பேனா.
என்னடா ஏதேனும் தீர்வு கிடைத்ததா, கேட்டுக்கொண்டே பிளாஸ்டிக் பாயில் அமர்பவன் பாலாவின் நண்பன் வினோ.
இவர்கள் இருவருக்கும் என்னதான் தீர்வு வேண்டும். யார் இவர்கள்? கதை எழுத்தாளர்களா, ரகசிய உளவாளிகளா? இல்லை.
இருவரும் பெயர் பெற்ற பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள். தன் நண்பன் சச்சினைப் பற்றி கவலையுற்று அவனுக்காக யோசிக்கிறார்கள்.
முந்தைய நாள் பள்ளி விட்டு வீட்டுக்கு வரும்போது இருவரும் பேசிக் கொண்டதை நினைவு கூர்ந்தான் பாலா.
##
என்ன வினோ கேள்விப்பட்டாயா. சச்சின டி.சி வாங்கச் சொல்லிட்டாங்களாம். அவனால நம்ப ஸ்கூலோட நூறு சதவிகித தேர்ச்சி பாதிக்கும் னு மானேஜ்மென்ட் நெனச்சதால இந்த முடிவாம்.
ஆமாம். கேள்விப்பட்டேன். மொத்தம் அஞ்சு பேர்ல நம்ப சச்சினும் ஒருத்தன். பாவம் எல்லாரும். நம்ப கணக்கு வாத்தியார் கூட சொன்னாரு. இவங்கெல்லாரும் எட்டாம் கிளாஸ்லேர்ந்தே வருட இறுதித் தேர்வில் கணிதப் பாடத்தை இருமுறை எழுதி தான் பாஸ் செய்றாங்களாம். .
என்ன அநியாயம் வினோ. ஊக்கம் கொடுத்து முன்னேற்ற ரெண்டு வருஷம் போதாதா? அப்படியே டி.சி கொடுக்கறதுதான் முடிவுன்னா அத எட்டாம் வகுப்பிலேயே ஏன் கொடுக்கல. யார் கேட்பது இவர்களிடத்தில். இவர்கள் வச்சது தான் சட்டம்.
###
ஒன்றாம் வகுப்பில் என் பிள்ளையை இங்கு சேர்க்கும்போது நூறு சதவிகிதத் தேர்ச்சி நிச்சயம் என வாக்கு கொடுத்தீர்களே இப்போது இப்படிச் சொன்னால் எப்படி எனக் கூக்குரலிட்ட சச்சினின் அப்பாவிற்கு பள்ளி நிர்வாகம் அளித்த பதில்
எங்களுக்கு உங்கள் குழந்தைகள் மேல் மிகுந்த அக்கறை உள்ளது. அதனால் தான் இப்படிச் செய்கிறோம். உங்கள் மகனைத் திறந்த வெளி முறையில் வீட்டிலிருந்தே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுத வையுங்கள். அவன் எளிதில் தேர்வு பெறுவான். அதன் பின் நாங்கள் நடத்தும் கல்லூரியிலேயே முன்னாள் மாணவன் என்ற முறையில் சேர்த்துக் கொள்கிறோம். கவலை வேண்டாம் என்பதுதான்.
மிகுந்த குழப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக் கொண்டு வெளியேறிய சச்சினின் அப்பாவின் முகம் நினைவிலிருந்து அகலாத நிலையில் சச்சினின் உற்ற நண்பர்களான பாலாவும் வினோவும் தீர்மானித்தார்கள்.
இது போன்ற பள்ளிகளின் நூறு சதவிகிதத் தேர்ச்சியின் மறு பக்கத்தை வெளி உலகிற்கு காட்டி மக்களை தெளிவு படுத்துவதே இனி தங்களின் நோக்கம் என்று.