மறதி






(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இண்டர்வியூ ஹாலில் உட்கார்ந்திருந்தான் பிரேம்குமார். அடிவயிற்றில் இனம்புரியாத பயம் கல்வியது. காத்திருந்தான் கவலையோடு.

‘பிரேம்குமாரா? உள்ளே போங்க!’ சொல்லிவிட்டு நகர்ந்தான் ஆபீஸ் பாய்.
எழுந்தான். ‘இன்’ செய்திருந்த பாண்ட் சர்ட்டை சரிசெய்துகொண்டு, தலையை நேர் செய்துகொண்டு எட்டிப்பார்த்து, “மே ஐ கம் இன்?” என்றான்.
“எஸ்… உட்காருங்கள்” என்ற பெண்குரலைக் கேட்டு அதிர்ந்து நிமிர்ந்தான். ‘ஆ…இது… இ… இவள்?காமினியாச்சே? இவளா இங்கு எம்.டி?’
கனவிலிருந்தவனை நனவுலகுக்குக் கொண்டு வந்தாள் காமினி. “உங்கள் சர்டிஃபிகேட்டுகளைக் கொடுங்கள்”. கேட்டு வாங்கி திருப்பிக்கொடுத்துவிட்டு, ஆழமாய் அவனைப் பார்த்தாள். பின், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, “மறதியின் சுவை என்ன?” என்றாள்.
பிரேம் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான். இது மருந்து கம்பெனி. எவ்வளவு நாசூக்காக கேட்கிறாள். கல்லூரிக் காலத்தில் காதலித்து சந்தர்ப்பவசத்தால் பிரிந்ததை வைத்து, தன்னை குத்தும் கேள்வியாகக் கேட்டவளைப் பாராட்டுவதா? பதில் சொல்வதா? இண்டர்வியூ முடிவு என்ன ஆகும் என்று கேள்வியிலேயே தெரிந்து கொண்டான்.
ஒரு நொடிக்குள் மூளையில் மின்னல் பளிச்சிட, “மறதியின் சுவை கசப்பு” என்றவன், தனக்குள் நினைத்துக் கொண்டான். ‘உன்னை மறந்து வந்துவிட்டேன் என்று மட்டும் நினைக்காதே….! சூழல் கைதிகளுக்கு, மறதி மட்டுமல்ல, இப்போது அவர்கள் வாழும் வாழ்க்கையின் சுவையும் கசப்புதான்!’
– குமுதம் 25.9.2013.