மருக்கொழுந்து மங்கை






(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
22. சித்திரமாயனின் திட்டங்கள்

இளவரசன் சித்திரமாயன் மிகுந்த உற்சாகத்துடனிருந் தான். காலையில் யவனச் சேரியின் அருகே, கொள்ளை பற்றிய புலன் விசாரணைக்காகச் சென்று கொண்டிருந்த ஒற்றர் படையின் துணைத் தலைவன் இரதத்தினால் மோதுண்டு மாண்டுவிட்டான் என்ற செய்திதான் அவனு டைய உற்சாகத்துக்குக் காரணம்.
யவன வணிகரின் வீட்டில் அவனுடைய ஏவலினால் நடத்தப்பட்ட கொள்ளை பற்றிய சில முக்கியமான தடயங்கள், ஒற்றர் தலைவனின் வசம்தானிருந்தன. சாதாரணத் தெரு விபத்து என்று மற்றவர்கள் நம்பும்படி அவனைக் கொலை செய்தாகிவிட்டது. கொள்ளை பற்றிய துப்புஇனி யாருக்கும் கிடைக்காது.
இருந்தாலும், சித்திரமாயனுக்கு மனத்தில் அமைதி யில்லை. பெண் கொலை சம்பந்தமாகப் பிடிபட்ட அவனு டைய அந்தரங்கக் காவல் வீரன் இன்னும் முதன்மந்திரியின் வசம்தானிருந்தான். அவனை வைத்துக்கொண்டு முதன் மந்திரி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி அவனால் அனுமானிக்க முடியவில்லை. சக்கரவர்த்தி வந்த தும் அவரிடம் அந்த வீரனை ஒப்படைத்து, தன் மீது குற்றம் சாட்டுவாரோ என்ற அச்சம் அவனை மிகவும் வாட்டியது.
சக்கரவர்த்தி, நீதி தர்மத்தில் மிகுந்த அக்கறை உள்ளவர். தன் மகன் என்று கூடப் பாராமல் கடும் தண்டனை வழங்கினால்கூட அதிசயமல்ல. அப்படி ஓர் இக்கட்டான நிலையில், தான் சிக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தபோது, முதன் மந்திரியின் மீது அளவுமீறிய கோபமும், வெறுப்பும் தோன்றின.
அவரைக் கொல்லத் திட்டமிட்ட சதியும் வெற்றி பெறா தது அவனுடைய மன அமைதியை மேலும் குலைத்தது. இன்னும் அரண்மனை வீரர்கள், இலங்கை வீரர்களைத் தேடிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இரணியவர்மரின் வசம் இருக்கிறார்கள் என்ற உண்மை சித்திரமாயனுக்குத் தெரியாது. சக்கரவர்த்தி திரும்பி வருவ தற்குள் தன்மீது எவ்விதக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாத படிச் செய்துவிட வேண்டும் என்ற தவிப்பிலிருந்தான்.
இதற்கிடையில், ஆட்சியில் அவனுடைய நடவடிக் கைகளுக்குத் தோன்றிய எதிர்ப்புக்கள் அவனுக்குக் கோபத்தை மூட்டின. வருங்காலத்தில் சக்கரவர்த்தியாய் அரியணை ஏறப்போகும் தன்னுடைய கட்டளைகளுக்கு மக்கள் பணிய மறுத்தது அவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஆட்சி அலுவல்களில் யாருடைய யோசனையையும் அவன் கேட்கத் தயாராயில்லை.
சக்கரவர்த்தி போருக்குப் புறப்பட்டபோது, இளவரச னான தன்னைத்தான் ஆட்சியில் இருத்திவிட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர், ஆட்சிப் பொறுப்பை பிரேமவர்த்தினியிடம் கொடுத்தது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மன்னர் அவ்விதம் முடிவெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சித்திரமாயனின் ஒழுக்கமற்ற நடத்தை. அவனிடம் அப்போதே ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தால் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி விடுவான் என்று பயந்தார். மேலும் தரணி கொண்ட போசர், அவனி டம் ஆட்சிப் பொறுப்பை விடச் சம்மதிக்கவில்லை.
மற்றொரு காரணம் பிரேமவர்த்தினி மீது அவருக்கு இருந்த மோகம். முதன் மந்திரியிடம் ஆலோசனை கேட்ட போது, மன்னருக்கு அவள் மீதிருந்த மோகத்தை உணர்ந்த மந்திரி அவளிடமே ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கும்படி கூறினார். மகாராணி, தம்முடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பாள் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார் முதன் மந்திரி. அவள், தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வாள் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.
சித்திரமாயனுக்குப் பக்கபலமாக, மந்திரி சபையின் இரண்டாவது மந்திரி, அச்சுதப் பட்டர் இருந்தார். சித்திர மாயனின் போக்குக்கெல்லாம் அவர் வளைந்து கொடுத் தார். அச்சுதபட்டரின் ஒரே குறிக்கோள், முதன் மந்திரிப் பதவியைப் பெற்றுவிடவேண்டும் என்பதுதான். பதவிக் காக எவ்வளவு ஈனத்தனமாக நடக்கவும் தயாராயிருந்தார். அன்று காலையில் ஒற்றர் படைத்தலைவனைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரதம் அவருடை யதுதான்.
அச்சுதபட்டரின் துணைகொண்டு சித்திரமாயன், தன்னுடைய அதிகார வெறியை வளர்த்துக் கொண்டிருந் தான். சில கோட்டத் தலைவர்கள் அவன் மீது வெறுப்புக் கொண்டிருந்ததையும், குறுநில மன்னர்களில் ஒருவரான இரணியவர்மருக்கு அவன்மீது அபிமானம் கிடையாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். வருங்காலத்தில் அவனை அரியணை ஏறவிடாமல் தடுக்க அவர்கள் எல்லாரும் முயல்வார்களோ என்ற சந்தேகம் அவனுக்குத் தோன்றியிருந்தது. அவனுடைய அச்சத்தைப் போக்க அச்சுதபட்டர் ஒரு யோசனை கூறியிருந்தார்.
ஒரு கோட்டத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர்களும், நகரத் தலைவர்களும் சேர்ந்துதாம் ராஜ வமிசத்தைச் சேர்ந்த ஒருவரை, அந்தக் கோட்டத்துக்குத் தலைவராகத் தேர்ந் தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத்தான் சக்ரவர்த்தி கோட்டத்துத் தலைவராக நியமிப் பார். இது பல்லவ ஆட்சியில் நெடுங்காலமாக இருந்துவரும் ஆட்சிமுறை. இப்போதுள்ள ஊர்த்தலைவர்களையும், நகரத் தலைவர்களையும் நீக்கிவிட்டு, சித்திரமாயனுக்கு அடங்கிய நபர்களை, தலைவர்களாக நியமித்து விட்டால், பிறகு, இளவரசனுக்கு வேண்டிய ராஜவமிசத்தினர்களில் சிலரைக் கோட்டத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்க வாய்ப்பாக இருக்கும்.
இந்த அருமையான திட்டத்தின் பேரில்தான் மகா ராணி, ஊர்த்தலைவர்களையும், நகரத்தலைவர்களையும், மெள்ள, மெள்ள ஒவ்வொருவராக நீக்கிக் கொண்டிருந்தாள். சக்கரவர்த்தி திரும்பி வருவதற்குள் சில கோட்டங்களில் தனக்கு வேண்டியவர்களைத் தலைவர்களாகத் தேர்ந் தெடுக்க வைத்துவிடவேண்டும் என்ற முடிவிலிருந்தான், சித்திரமாயன்.
இந்தத் திட்டத்தின் உள் நோக்கத்தையும், விளைவை யும் எண்ணித்தான் முதன்மந்திரி மிக்க கவலை கொண்டிருந்தார்.
பதவிகளை விரும்பி சித்திரமாயனின் அபிமானத்தைப் பெற ராஜ வமிசத்தைச் சேர்ந்த பலர் முயன்று கொண்டி ருந்தனர். ஆகையால், சித்திரமாயனுக்கு ஆதரவாகப் பலர் இருந்தனர். சில வணிகர்களும், சித்திரமாயனிடம் அபிமானம் கொண்டிருந்தனர். அவன் மூலமாக, சில வரிச்சலு கைகள் பெற்று, கொள்ளை லாபமடிப்பதில் ஈடுபட்டி ருந்தனர். தனக்கு ஆதரவாயுள்ளவர்களுக்குப் பல பதவி களைக் கொடுக்க சித்திரமாயன் திட்டமிட்டிருந்தான். சித்திர மாயனின் அந்தரங்கத்தில் இதற்கெல்லாம் மேலாக ஒரு பயங்கரத் திட்டமிருந்தது-
சக்கரவர்த்தியையே எவ்விதத்திலும் நீக்கிவிட்டு, அரியணையில் தான் அமரவேண்டும் என்ற திட்டம்தான்.
சக்கரவர்த்தி இருக்கும்வரை தன்னுடைய விருப்பம் போல் திரிய முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.
ஒருமுறை சக்கரவர்த்தி அவனிடமே கோபத்தோடு கூறியது, அவன் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அவர் சொன் னார்: “ஒரு நாட்டை ஆள்வதற்குள்ள தகுதி ஒருவனுக் கில்லையென்றால், அவன் அரியணையைத் துறந்து விட்டுக் காட்டுக்குச் செல்வதுதான் மேல். மக்களின் மகிழ்ச்சிதான் மன்னனின் லட்சியம். இந்த லட்சியத்தை ஏற்காதவன், அரியணை ஏறவே தகுதி இல்லாதவன்.”
சித்திரமாயனுக்கு அண்டை நாட்டு மன்னர்களின் ஆதரவு கிட்டுமானால், மிகவும் உதவியாக இருக்கும் என்று யோசனை கூறினார் அச்சுத பட்டர். பாண்டிய நாட்டின் அபிமானத்தைப் பெற, பாண்டிய இளவரசனை காஞ்சிக்கு விஜயம் செய்யும்படி ஒரு தூதுவன் மூலமாக அழைப்பு அனுப்பியிருந்தான்.
சித்திரமாயனின் திட்டங்கள் சரிவர நிறைவேறு மானால், நாட்டிலுள்ள அதிகாரிகளும், தலைவர்களும் அவனை ஆதரிப்பவர்களாகவே அமைந்து விடமுடியும். அதன் பிறகு, அவன் மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய விருப்பம் போல் ஆட்சி செலுத்தமுடியும்.
ஆனால், அவனுடைய திட்டங்கள் ஒவ்வொன்றுக் கும் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தோன்றத் தொடங்கியது மட்டுமல்லாமல், முதன் மந்திரி அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது அவனுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது.
முதன்மந்திரியின் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கூறி, அவரை நீக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவருக்கு ஆதரவாக இரணிய வர்மர் இருந்தது அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. தலைநகரில் இரணியவர்மர் தம்முடைய படையுடன் தங்கி யிருந்தது அவனுக்கு இடைஞ்சலாகவும் இருந்தது. தாம் திரும்பி வரும் வரை இரணியவர்மரைக் காஞ்சியில் இருக்கும்படி சக்கரவர்த்தி ஆணையிட்டிருந்ததால் சித்திர மாயன் அவருக்கு எதிராக ஏதும் செய்ய இயலாதவனா யிருந்தான். கோட்டைத் தளபதி பொறுப்பிலிருந்து மகா ரா ணி அவரை விடுவித்து விட்டதும், அவர் கோபம் கொண்டு, தம்முடைய மண்டலத்துக்குச் சென்று விடுவார் என்று அவன் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. காஞ்சி மக்களின் நலனுக்கான பணிகளில் இரணியவர்மர், தம் முடைய படைகளை ஈடுபடுத்தியிருந்ததும் அவனுடைய கோபத்தைக் கிளறியது. மக்கள், இரணியவர்மரைப் புகழ்ந்து, அவனுக்கு எதிரேயே வாழ்த்தொலிகள் எழுப்பத் தொடங்கியிருந்தார்கள்.
இவற்றைப் பற்றிச் சிந்தித்து சித்திரமாயனின் மனம் உளைந்து கொண்டிருந்த அதே வேளையில் அச்சுதபட்டர், அரண்மனையின் அந்தப்புரத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில், அவர் தமக்கு வேண்டிய சலுகைகளை மேகலாவின் உதவியினால் பெற்றுக் கொள்வார். மகாராணியோ, சித்திரமாயனோ தம் முடைய திட்டத்திற்கு ஒத்துவரமாட்டார்கள் என்று கருதி னால், மேகலாவின் உதவியை நாடுவார்.
மேகலாவின் பேராசையை அவர் நன்கு அறிந்தி ருந்தார். அவளை வருங்கால மகாராணி என்றும், இப்போது கூட ஆட்சியில் அவளுக்கும் உரிமை உண்டென்றும் அடிக்கடிக் கூறி அவளைத் தூண்டி விட்டிருந்தார்.
அச்சுதபட்டர் அவளைச் சந்திக்கக் காத்திருப்பதாக தாதி ஒருத்தி அறிவித்ததும் மேகலா, அவரை உள்ளே அழைத்துவர ஆணையிட்டாள்.
“சின்ன மகாராணியாருக்கு அடியேன் வணங்கு கிறேன்” என்று தலைதாழ்த்தி வணங்கினார். பிறகு, “வட மொழிக்கடிகை பற்றி முன்பு தங்களிடம் கூறியிருந்தேன். இப்போது…” என்று தயங்கியவாறே கூறினார்.
“இதுபற்றி இளவரசரிடம் கூறுவதுதானே?” என்றாள், மேகலா.
“வடமொழிக் கடிகை மக்களின் அபிமானத்தைப் பெற்றது. புகழ்பெற்ற கடிகை. அதனால் இளவரசர் தயங்கு வார். ஆனால்,நம்முடைய ஆணைகளை மீறுபவர்களைக் கண்டிப்பது நம்முடைய கடமையல்லவா?” என்றார், அச்சுதபட்டர். பிறகு, “கடிகை நிர்வாகிகள் பயப்பட வேண்டும் என்பதற்காக உங்களுடைய உத்தரவு என்று கூறினேன். சேச்சே எவ்வளவு அலட்சியமாகப் பேசி விட்டார்கள். என் மனம் கொதிக்கிறது சின்ன மகாராணி யாரே” என்று படபடத்தார்.
“என்ன சொன்னார்கள்?” என்று பரபரப்புடன் கேட் டாள், மேகலா.
“ஐயோ, அதை என் வாயால் திரும்பக் கூறக்கூடாது.”
“ஒளியாமல் கூறும் மந்திரியாரே” என்று சீறினாள், மேகலா.
“நாட்டியக்காரிக்கெல்லாம் பயப்பட முடியாதாம்” என்று வாய் பொத்தியபடி மெல்லக் கூறினார், அச்சுத பட்டர்.
“ஓஹோ…” மேகலா கோபத்தினால் கொதித்தெழுந் தாள். அச்சுதப்பட்டர் தொடர்ந்து தூபம் போட்டார்: “அரசு விதித்திருந்த வரியைச் செலுத்த மாட்டார்களாம் இதில் சின்ன ராணியார் தலையிட வேண்டிய அவசியம் இல்லையாம். வரிகேட்கச் சென்ற நம்முடைய அதிகாரியைச் சில மாணவர்கள் அடித்து மாடியிலிருந்து உருட்டி விட்டார்கள்” என்றார்.
“மந்திரியாரே, இப்போதே வீரர்களை அழைத்துச் செல்லுங்கள். படைத் தலைவனுக்கு என் முத்திரை மோதி ரத்தைக் காண்பியுங்கள்” என்று தன் முத்திரை மோதிரத்தை மந்திரியிடம் கொடுத்தாள். “என்னைக் கேவலமாகப்பேசிய கடிகைக்காரர்களை நாய்களைப் போல் அடித்துக்கொல் லுங்கள். கடிகையை இடித்துச் சூறையாடுங்கள். போங்கள் சீக்கிரம்” என்று இரைந்தாள்.
மேகலாவின் கோபத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட மகிழ்ச்சியில் அச்சுதபட்டர் அங்கிருந்து விரைந்து சென்றார்.
லீனாவைக் கண்ட பிறகுதான் உதயசந்திரனுக்கு ஏற்பட்டிருந்த மனக்கலக்கம் மறையத் தொடங்கியது. லீனாவும் அவனும் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அவனுடைய நினைவில் மேகலாவின் நினைவு குறுக்கே வந்து கொண்டிருந்தது.
சின்னராணியின் அழகுக்கும், லீனாவின் அழகுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம் ! ராணியின் அதீதமான கவர்ச்சியினுள்ளே மூழ்கி, எப்படி மூச்சுத்திணறி விட்டான். காட்டாற்று வெள்ளம், நுங்கும் நுரையுமாகச் சீறிப் பாயும் போது, எவ்வளவு அழகும் கம்பீரமுமாக இருக்கிறது. ஆனால், அதில் சிக்கிக் கொண்டால் எப்படிச் சுற்றிச் சுழன்று, மூச்சுத்திணறி தண்ணீரின் ஆழத்துக்குள் அமிழ்ந்து விட வேண்டியிருக்கும். அப்படித்தானே, மேகலாவின் அணைப்புக்குள் சிக்கியிருந்தபோது, தத்தளித்துவிட்டான்.
‘ஓ… என்ன உணர்ச்சி அது… ! அந்த உணர்ச்சியின் ஆதிக்கத்தில் நம்மை இழந்து, பரவசத்தில் கிடப்பதையா ருத்திரபரமாச்சாரி, மகா சுகத்தின் முதல்படி என்றார்? அப்படியானால், முதல்படியிலேயே அவ்வளவு அதிர்ச்சி யிருந்தால் மகா சுகத்தை உணரும்போது, இந்த உடலால் அதைத் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா….? இதோ, தெளிந்த ஓடை நீராக, இனிமையாகச் சலசலக்கும் லீனாவின் அழகில் வெறி இல்லை, கொந்தளிப்பு இல்லை, வேகம் இல்லை. உள்ளார்ந்த ஓர் இனிமை இருக்கிறதே….!’
லீனாவின் அமைதியான அழகு, உதயசந்திரனின் மனத்தில் இனிமையைப் பொழிந்து கொண்டிருந்தது. முந்தின நாள் இரவில் அரண்மனையில் பெற்ற அனுபவத் தால் அவனுள்ளே கிளர்ந்திருந்த உணர்ச்சிகள் மெல்ல மெல்ல மேலெழுந்தன. லீனாவின் சிவந்த அதரங்கள், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினை வூட்டின-
இரண்டுநாட்களுக்கு முன் அவளைச் சந்தித்துவிட்டுப் பிரிந்தபோது, மிகுந்த வேட்கையுடன் அவளை மார்போடு அணைத்து அதரங்களில் முத்தமிட்டான். அப்போது லீனாவின் பூவுடல் நடுங்கியதை உணர்ந்தான். அவனு டைய அணைப்பிலிருந்து முதலில் திமிறினாள். பிறகு சரணடைந்து விட்டாள். நீண்ட முத்தத்தின் பின் விடுபட்ட லீனாவின் கண்களில் நீர் முட்டியிருந்ததைக் கண்டதும் உதயசந்திரன் பதறிப்போனான். அவளுடைய மனத்தைப் புரிந்து கொள்ளாமல் வலிந்து தவறிழைத்துவிட்டோமோ என்று எண்ணி, மனம் உளைந்தான். லீனா, புது அனுபவத் தின் அதிர்ச்சியிலிருந்தாள். முதல் முத்தத்தின் புதுமையும், பரபரப்பும் எதிர்பாராமல் கிடைத்துவிட்ட வாய்ப்பினால் ஏற்பட்ட அளவு மீறிய மகிழ்ச்சியும் அவள் கண்களில் கண்ணீரைச் சுரக்க வைத்து விட்டன. அதைப் புரிந்து கொள்ளாத உதயசந்திரன், “லீனா, உன் மனதைப் புரிந்து கொள்ளாமல் நான் இப்படி…” என்று சொல்லி முடிப்பதற்குள் லீனா, அவன் கையைப் பற்றிக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கத் தெம்பில்லை. வெட்கம் ஒருபுறம் பாடாய்ப்படுத்தியது.
“ஏதோ பயந்து விட்டேன்” என்றாள் தரையை நோக்கி யபடியே. பிறகு மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப்பார்வையில் தெரிந்த மிரட்சி, அவனுக்கு அவள் மீது இரக்கத்தை உண்டு பண்ணியது. சிறு உணர்ச்சியைக் கூட, அது இன்ப உணர்ச்சியாயிருந்தாலும், தாங்க முடியாத அளவுக்கு அவள் உடல் அவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்டான். அனிச்ச மலர், முகர்ந்து பார்த்தால் குழைந்துவிடுமாம். லீனாவின் உடல், பார்வை யிலேயே குழைந்துவிடும்.
ஓ….இந்த மலரை எவ்வளவு ஜாக்கிரதையாக அணுக வேண்டும்….
“என்ன, வந்ததிலிருந்தே ஒரே சிந்தனை?” என்று லீனா வின் குரல்தான் அவனைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. அவளை வெறியோடு பார்த்தான். அவனுடைய கண்களில் தெரிந்த உணர்ச்சிகளின் சாயல்கள், அவளைச் சிலிர்க்க வைத்தன.
“நேற்று எங்கே போய்விட்டீர்கள் ? நீங்கள் வருவீர்கள் என்று மாலையில் வெகுநேரம் எதிர்பார்த்தேன்” என்றாள் லீனா.
“நேற்று ஒரு யோகியின் ஆசிரமத்துக்கு நானும் ராஜ னும் போயிருந்ததோம். அந்த யோகி, என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு அவளை வேட்கையுடன் பார்த்தான்.
“என்ன சொன்னார்?”-லீனா குழைந்தபடி கேட்டாள்.
அவளுடைய கையைப் பற்றி வருடியபடியே உதயசந் திரன் சொன்னான்: “உலக சுகங்களை நன்றாக அனுபவியுங்கள் என்றார். உலக அனுபவந்தான் கடவுளைக் காணும் வழியாம்.”
“உலக அனுபவமென்றால்…?”
“உலக அனுபவமென்றால்…. இப்படி அருகில் வாயேன் சொல்கிறேன்” என்று கூறியபடியே சட்டென்று அவளை இழுத்து அணைத்தான். அப்போது அவன் மார்பில் கிடந்த மருக்கொழுந்து மாலை, உறுத்தியது.
“ஓ…இதுதான் உலகமோ?” என்று லீனா, அவனுடைய காதருகே முனகினாள். பிறகு, அவன் மார்பில் கிடந்து உறுத்திக் கொண்டிருந்த மாலையைக் கழற்றிக் கீழே போட்டாள்.
“எனக்கு நீதான் உலகம். உன் அருகில் இருப்பதுதான் இனிமையான அனுபவம்” என்றான், உதயசந்திரன்.
“யோகி இப்படியா போதனை செய்தார்?” என்று கேட்டுக்கொண்டே அவனைப் பார்வையால் வருடினாள். அந்த இனிமை அவன் உடல் முழுவதும் பரவிப் பரவச மூட்டியது.
“இப்படித்தான்” என்று முனகியவாறே அவளை இன்னும் இறுக அணைத்தான். இறுக்கத்தின் உணர்ச்சியில் லீனா உருகத் தொடங்கினாள். அவளுடைய கட்டுடல் அவனுடைய ஆதிக்கத்தில் நெளிந்தது, படர்ந்தது.
சற்றுத் தூரத்தில் சலசலப்புக் கேட்டது. உதயசந்திரன் திரும்பிப் பார்த்தான். ஒரு புதருக்கடியில் ராஜநாகம் நெளிந்து ஊர்ந்தபடி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. உதயசந்திரன் சட்டென்று லீனாவை விலக்கிவிட்டுக் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்தான்.
“ஐயோ, எறிந்துவிடாதீர்கள், பாவம்” என்று கூறிய வாறு அவனுடைய கையைப் பற்றிக் கொண்டாள், லீனா.
”பாவமா? ராஜநாகம், கொடிய விஷம். இந்தத் தோட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது ஆபத்து.
“இது என்னோடு நட்புக்கொண்டுவிட்டது. தினமும் இதை இந்தப் போதிமரத்தடியில் பார்க்கிறேன். பழகி விட்டது. நம்மை இது ஒன்றும் செய்யாது” என்றாள் லீனா.
“ஒ…! ராஜநாகம் கூட உனக்கு அடங்கிவிட்டதா லீனா, உன் அழகைப் பார்த்துத்தான் அது மயங்கி உன்னோடு சிநேகமாகிவிட்டது” என்று கூறிய உதயசந்திரன், கையி லிருந்த கல்லைக் கீழே போட்டுவிட்டு, அவள் முகத்தை ஏந்தினான்.
தோப்பில் ஏதோ ஒரு மரத்திலிருந்து குயில் கூவியது. இன்னொரு மரத்திலிருந்து ஓர் அணில், தன் துணையை அழைத்தது கேட்டது.
லீனாவின் கண்கள் மூடிக்கிடந்தன. உடலில் பரவிக் கொண்டிருந்த உணர்ச்சிகள், ஒவ்வோர் அங்கத்திலும் தேங்கி, பரவசப்படுத்தின. உதயசந்திரனின் கரங்கள் பரவிய இடங்களிலெல்லாம் உணர்ச்சிகள் பொங்கின. ஆனந்தப் பெருக்கால் பொங்கிப் பூரித்த அவளுடைய அங்கங்களின் அந்தரங்கமான ஸ்பரிசமொழி அவனுக்குப் புரிந்தது.
சற்று சுய உணர்வை எட்டிய லீனா, மெல்ல இறுக்கத் திலிருந்து திமிறினாள். அப்போது இரண்டு சிட்டுக் குருவி கள் மரக்கிளையில் வந்து அமர்ந்து கொண்டு கொஞ்சத் தொடங்கின. இடையிடையே அவர்களையும் கவனித்தன. “ஓ… புது அனுபவமா ? இதோ, எங்களைப்போல் கொஞ்ச வேண்டும்” என்று கூறியது போலிருந்தது அவற்றின் பார்வை.
அணைப்பை நெகிழ்த்தாமலே, லீனாவின் காதில் மெல்லிய குரலில், “அந்தக் குருவிகள் பேரானந்த தியானத் தில் இருக்கின்றன” என்றான், உதயசந்திரன். அவளைப் பார்வையால் அள்ளினான். அந்தப் பார்வையின் தீவிரத்தைத் தாளாமல் லீனா, துவண்டாள். இருவருடைய பார்வை யும் கிளையிலிருந்த சிட்டுக்களின் சிங்காரச் சேட்டைகளில் பதிந்தது.
அந்தக் காலை நேரக் குளுமையும், தோப்பின் இயற்கை அழகும், பறவைகளின் காதல் கூவல்களும், தோப்பினூடே இசைபாடிக் கொண்டிருந்த தென்றலும், மருக்கொழுந்தின் மணமும், இளமையும் அங்கு ஒரு நாடகத்தையே நடத்திக் கொண்டிருந்தன.
பெரிய போதிமரத்தின் வேரில் சாய்ந்திருந்த உதய சந்திரனின் மார்பில் மாலையாகப் பின்னிக் கிடந்த லீனா, வேட்கைத் தீயில் கற்பூரமாகக் கரைந்து கொண்டிருந்தாள். அவளுடைய மூச்சின் உஷ்ணத்தில், உதயசந்திரன் வெந்து கொண்டிருந்தான்.
உணர்ச்சியின்ஆணைகளுக்கு இரண்டு அடிமைகள் பணிந்து கொண்டிருந்தார்கள். சூழ்நிலை மறந்துவிட்டது. செடிகளும், கொடிகளும் காற்றில் தலைகளை அசைத்து, அவர்களை ஆமோதித்தன. பெரிய மரங்கள் அவர்களை வெளியுலகத்திலிருந்து மட்டுமல்லாமல் சூரியனிடமிருந் தும் மறைத்துக் காவலிருந்தன. தென்றல் அவர்கள் இரு வருக்கும் ஊடே இடைவெளியைத் தேடித் தோற்றுக் கொண்டிருந்தது. மரக்கிளையிலிருந்து வேடிக்கை பார்க்க வேகமாகக் கீழே இறங்கிய ஒரு பெண் அணில், சற்று தள்ளி இரண்டு கால்களில் நின்றவாறு அவர்களைப் பார்த்தது. பிறகு, அதற்கு வெட்கம் வந்துவிட்டது போலும். திரும்ப மரத்தின் மீதே ஏறிக்கொண்டது. பறவைகள் சாட்சிகளா யிருந்தன.
இரு உயிர்கள், மகாசுகத்தின் முதற்படியில் ஏறிக் கொண்டிருந்தன.
23. தவறாகக் கையாண்ட தத்துவம்
வடமொழிக் கடிகையின் முன்னால் படைவீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். மக்களின் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டிருந்தது. கடிகையின் பிரதான வாயிலின் முன்னால் உள்ள மைதானத்தில், கடிகை மாணவர்கள் கூடியிருந்தார்கள்.
கடிகைக்குள் மந்திரி அச்சுதபட்டர், கடிகையின் தலைவர் ஜேஷ்டபதி சோமாயாஜியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“அதிகாரியைத் தாக்கிய ஐந்து மாணவர்களைச் சிறைப் பிடித்துப் போகும்படி உத்தரவு. அதை நிறைவேற்றத்தான் படைவீரர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார், அச்சுதபட்டர்.
“அத்தனை மாணவர்களில் தாக்கியவர்கள் யாரென்று எப்படிக் கண்டுபிடிக்க இயலும் ? மேலும் அதிகாரி திமிராக நடந்து மாணவர்களையும், பண்டிதர்களையும் அவமான மாகப் பேசியதால்தான், மாணவர்கள் கோபம் கொண்டனர்” என்றார், ஜேஷ்டபதி சோமயாஜி.
“தவறு செய்த மாணவர்கள் சரணடையாவிட்டால், படை வீரர்கள் கடிகைக்குள் நுழைவார்கள்” என்றார் அச்சுத பட்டர்.
“மந்திரியாகிய தாங்களே இப்படி அச்சுறுத்துவது நியாயமா?”
“குற்றவாளிகளைத் தண்டிப்பதும் மந்திரியின் கடமை தான்” என்று கோபத்தோடு சொன்னார் மந்திரி.
“மாணவர்கள் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் சோமயாஜி.
“குற்றவாளிகளைத் தண்டிக்கத்தான் அரசு உத்தரவே தவிர மற்றவர்களை அல்ல.”
“குற்றவாளி யாரென்று குறிப்பிட இயலாதபோது என்ன செய்வது?”
“செய்த குற்றத்துக்காக கடிகை, அபராதமாக இருபதி னாயிரம் பொற்காசுகள் தருவதானால் மன்னிக்கலாம்” என்றார் அச்சுதபட்டர்.
“இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித் தால் கடிகையால் தாங்க முடியாது. மந்திரி அவர்களே, நீங்கள் இருபதினாயிரம் பொற்காசுகளைப் பறிப்பதும் ஒன்றுதான், கடிகையை மூடச் சொல்வதும் ஒன்றுதான்” என்றார் சோமயாஜி கோபத்துடன்.
“கடிகையை மூடினாலும் அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. கடைசியில் உங்கள் முடிவென்ன?”
“எங்களால் அவ்வளவு காசுகள் தர இயலாது.” “இதுதான் முடிவா? நன்றாக யோசித்துச் சொல்லுங் கள், இருபதினாயிரம் பொற்காசுகள் தருவதானால் படை யைத் திருப்பி அனுப்பி விடுகிறேன்.”
“நான்தான் சொல்லிவிட்டேனே, இல்லையென்று” என்றார் சோமயாஜி உறுதியுடன்.
அச்சுதபட்டர் கோபத்துடன் எழுந்து வாசலுக்கு விரைந்தார். முற்றத்துப் பகுதியில் மாணவர்களின் கூட்டத் தைப்பார்த்ததும், “அதிகாரியைக் காயப்படுத்திய மாணவர் கள் சரணடையுங்கள். இல்லையென்றால் கடிகை சூறை யாடப்படும்” என்றார்.
உடனே ராஜன் நம்பூதிரி முன்னால் வந்து, “நான் சரணடைகிறேன்” என்றான். மற்ற மாணவர்கள் திகைத்தனர். அதிகாரியைத் தாக்கிய மாணவர்களில் ராஜன் நம்பூதிரி இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவன் வலியச் சரணடைந்ததைக் கண்ட மற்ற மாணவர்களிடையே பரபரப்புத் தோன்றியது.
மற்றொரு மாணவன் முன்னால் வந்து, “நான் சரணடைகிறேன்” என்றான். பிறகு, அவனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாணவனாக சரணடையத் தொடங்கினர்.
அச்சுதபட்டர் திகைத்தார். கடிகை மாணவர்கள் அனைவரும் சரணடைவதாகக் கூறிக் கொண்டிருந்தது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அனைவரையும் சிறைப்பிடிக்க முடியுமா? கடிகையின் வெளியே வீதியில் மக்கள் கூட்டம் கூடியிருந்தது.
“இதென்ன கேலியா செய்கிறீர்கள்?” என்று கோபத் தில் கர்ஜித்தார், அச்சுதபட்டர்.
“மதிப்புக்குரிய மந்திரி அவர்களே, குற்றம் புரிந்த அதிகாரிக்காக எங்களைத் தண்டிக்க வந்துவிட்டீர்கள். உங்கள் அதிகாரிதான் முதலில் எங்களை அவமானமாகப் பேசினார். உங்களுடைய நேர்மையான நீதிக்குப் பணியக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றான் ராஜன் நம்பூதிரி.
“தம்பி, படைவீரர்கள் உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று இரைந்தார் மந்திரி.
“தெரியும் ஐயா, இரத்த ஆறு ஓடும். மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்து நிற்பார்கள். கடைசியில் அநியாயம் உங்கள் தலைமையில் வெற்றியடையும்” என்றான் ராஜன் நம்பூதிரி. மற்ற மாணவர்களிடையே சிரிப்பொலி எழுந்தது.
“அரை நாழிகை நேரம் தருகிறேன். அதற்குள் அதிகாரி யைத் தாக்கிய ஐந்து மாணவர்களும் சரணடைய வேண் டும். இல்லையென்றால் பல படைவீரர்கள் கடிகைக்குள் நுழைவார்கள்” என்றார் அச்சுதபட்டர்.
“ஐந்தென்ன, நாங்கள் ஐந்நூறு மாணவர்கள் வேண்டு மானாலும் சரணடைகிறோம். எதற்காக ஐந்து மாணவர் களை மட்டும் கொடுமைக்குள்ளாக்க வேண்டும்?” என் றான் ராஜன் நம்பூதிரி.
“நான் பேசத் தயாரில்லை. அரை நாழிகை தான் காலக் கெடு” என்று கூறிவிட்டு, வாசலைத்தாண்டி, படைவீரர் களை நோக்கிச் சென்றார், அச்சுதபட்டர்.
வீதியில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திலும் சலசலப்புத் தோன்றியிருந்தது. படைவீரர்கள் எதற்காக வந்திருக் கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. மக்களைக் கலைந்து செல்லும்படி மந்திரி ஆணையிட்டார். ஆனால் கூட்டம் கலையவில்லை.
மந்திரி கொடுத்திருந்த அரை நாழிகைக் கெடு முடிந்தது. மந்திரி, படைவீரர்களைக் கடிகையினுள் செல்லும்படி உத்தரவிட்டார். படைவீரர் கடிகையை நெருங்கியதும், உள் முற்றத்திலிருந்த மாணவர்கள் அனைவரும் வாசலுக்கு வந்து, படிகளின் குறுக்கே அமர்ந்து விட்டார்கள். படைவீரர்கள் அவர்களைத் தாண்டிக் கொண்டுதான் செல்ல வேண்டும். வீரர்கள் கோபத்துடன் பாய்ந்தார்கள். மாணவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் ஆயுதங் தாங்கிய வீரர்களின் முன்னால் மாணவர்கள் என்ன செய்ய இயலும்? இரண்டு மாணவர்களின் தலைகள் வெட்டுண்டு படிகளில் உருண்டன.
எங்கும் பீதி சூழ்ந்து கொண்டது. அந்தச் சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த உதயசந்திரன், நிலைமையைப் புரிந்து கொண்டான். வாசலில் நுழைய முயன்று கொண்டிருந்த வீரர்களில் இருவர் மீது ஆக்ரோஷத்தோடு பாய்ந்தான். மறுகணம், இரு வீரர்களும் துடிதுடித்துக் கீழே சாய்ந்தார்கள் அதே சமயம் ஒரு குதிரை வீரன், உதயசந்திரனை அணுகி னான், உதயசந்திரனின் கை, மின்னல் வேகத்தில் குதிரையின் கழுத்தைத் தாக்கியது. குதிரை இரத்தம் கக்கியபடி கீழே சாய்ந்தது. குதிரையிலிருந்து வீரன் கீழே விழுந்து குதிரைக்கு அடியில் சிக்கிக் கொண்டான்.
அதைக் கண்டதும், மக்கள் கூட்டத்துக்குத் தெம்பு வந்துவிட்டது. கூட்டம் படைவீரர்களைத் தாக்கத் தொடங் கியது. கடிககையின் வாசல், ஒரு போர்க்களம் போல் காட்சி யளித்தது. அந்தச் சமயத்தில் சாதாரண உடையில் வந்து சேர்ந்த இரணியவர்மரின் படைவீரர்கள், கூட்டத்தோடு சேர்ந்து அரண்மனை வீரர்கள் மீது பாய்ந்தார்கள். சில விநாடிகளுக்குள் அரண்மனை வீரர்கள், பின்னடைந்து ஓடத் தொடங்கினர். கூடவே மந்திரியும் குதிரையில் ஏறித் தப்பினார்.
சற்று நேரத்துக்குப்பின் அந்த இடம் வெறிச்சோடி விட்டது, ஆள் நடமாட்டமே இல்லை. வீதியிலும் கடிகை யின் வாசற்படிகளிலும் எட்டு வீரர்கள் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்தனர். குதிரையின் சடலம் வீதியின் ஓரத்தில் கிடந்தது, கடிகையின் பிரதான வாசற்கதவை அடைத்து விட்டனர். வெட்டுண்ட இரு மாணவர்களின் சடலங்களைக் கடிகைக்குள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
கடிகைக்குள் எல்லாரும் பீதியினால் குழம்பிப் போயி ருந்தார்கள். உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் எல்லாருக் கும் தைரியமூட்டிக் கொண்டிருந்தனர். தாக்க வந்த படை யினர் ஏன் பின் வாங்கி ஓடினர் என்பது ஒருவருக்கும் புரிய வில்லை. கூட்டத்தினரிடையே சாதாரண உடையில் இரணியவர்மரின் படைவீரர்கள் இருந்தது யாருக்கும் தெரியாது. மக்கள் ஆயுதம் தாங்கி வந்து கடிகையைக் காத் தனர் என்று நம்பினர். மீண்டும் அரண்மனை வீரர்கள், தண்டிக்க வரலாம் என்ற பயமிருந்தது. கடிகைத் தலைவர், ஜேஷ்டபதி சோமயாஜி, முதன் மந்திரியைச் சந்திக்க விரைந்தார்.
முதன் மந்திரியின் மாளிகைக்குள் ஜேஷ்டபதி சோம யாஜி நுழைந்ததுமே, முதன் மந்திரி விரைந்து வந்து, சோமயாஜியின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, அவருடைய கால்களைப் பற்றிக் கொண்டார்.
“என்னை மன்னியுங்கள் சோமயாஜி. உங்களுக்குக் கொடுந்துன்பம் நேர்ந்துவிட்டது. என்னை மன்னியுங்கள்” என்றார்.
சோமயாஜி பதறிப்போய், குனிந்து முதன்மந்திரியைத் தூக்கினார். “ஓ… என் காலில் தாங்கள் விழுந்து வணங்கு வதா? அபச்சாரம்” என்றார்.
முதன் மந்திரி மெய் நடுங்க, கண் கலங்கி நின்றார். “என்னை மன்னியுங்கள்” என்றார், நாத்தழுதழுக்க.
சோமயாஜியும் கண் கலங்கினார். “என் குழந்தைகள் இருவரை வெட்டிச் சாய்த்து விட்டார்களே. உங்களுடைய ஆட்சியிலா இந்தக் கொடுமை?” என்று கூறிப் பொங்கி அழுதார்.
சோமயாஜியின் தோளைப் பற்றியணைத்து ஆசனத் தில் இருத்தித் தாமும் அருகில் அமர்ந்து கொண்டார், முதன் மந்திரி.
“மந்திரி அவர்களே, இனி நான் பல்லவ நாட்டில் இருப்பது நல்லதல்ல. கடிகையை வேறு எங்காவது அமைத்துக் கொள்கிறேன்” என்றார், சோமயாஜி.
“தாங்கள் எல்லாம் தெரிந்த ஞானி. வேதங்களைக் கரை கண்டவர். தாங்களே இப்படி மனம் கலங்கிப் பேசலாமா? நடைபெற்றவை அனைத்துக்கும் நானே பழியை ஏற்றுக் கொள்கிறேன். தாங்கள் தாம் அடியேன் மீது கருணை கொண்டு மன்னிக்க வேண்டும். சிறிது சுணக்கம் ஏற்பட்டு விட்டது. இல்லையென்றால் ஒரு கேடும் நடைபெற்றிராமல் சாதாரண உடைகளில் நான் அனுப்பியிருந்த வீரர்கள், அரண்மனை வீரர்களை விரட்டியிருந்திருப்பார்கள்” என் றார், முதன் மந்திரி.
“கடிகை வாசலிலேயே இரண்டு பிள்ளைகள் வெட் டுண்டு உருண்டதை இந்தக் கண்களால் காண நேரிட்டு விட்டது, மந்திரி அவர்களே” என்று கூறி, மீண்டும் குலுங்கி அழுதார், சோமயாஜி.
“தாங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், நான் ஏற்கிறேன்.”
“மந்திரி அவர்களே, எங்கள் கடிகையின் புகழ் உங்க ளுக்குத் தெரியும். சரஸ்வதி குடியிருக்கும் கோயில் படிகளில், அவளுடைய குழந்தைகளையே வெட்டி இரத்தக் கறை ஏற்படுத்தியபின், கடிகை இந்த நாட்டுக்குத் தேவை யில்லை” என்றார்,சோமயாஜி.
அவருடையகைகளைப்பற்றிக் கொண்டு முதன்மந்திரி இறைஞ்சினார். “சோமயாஜி அவர்களே, ஆள்பவர்கள் தோன்றுவார்கள், மறைவார்கள். ஆனால் நாடு என்றும் நிலைத்திருக்கும். இன்றைய மகாராணியும், ராஜகுமாரனும் நாளை மறையலாம். நாட்டைக் கருதித்தாம் நாம் செயல்ப வேண்டுமே தவிர, அவ்வப்போது ஆள்பவர்களின் மீதுள்ள கோபதாபங்களைக் கருதியல்ல. தங்களுடைய மனவேதனையை நான் உணர்கிறேன். நடந்துவிட்ட சம்ப வம், என் மனத்தையும் பெரிதும் பாதித்து விட்டது. தாங்கள் சாந்தியடையுங்கள். இந்த நாட்டையும் என்னையும் மன்னி யுங்கள்” என்று முதன்மந்திரி இருகரங்களையும் கூப்பி வணங்கினார். கண்களில் நீர் மல்க வேண்டி நின்றார். பிறகு சொன்னார், “நான் தங்களுக்கு உறுதி கூறுகிறேன். கடிகைக்கு இனி ஒரு தீங்கும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். இது உறுதி.”
ஜேஷ்டபதி சோமயாஜி சற்று சாந்த மடைந்தார். பல்லவ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி பரிதாபமாக வணங்கி வேண்டியபோது, கடிகைத் தலைவர் நெகிழ்ந்து விட்டார். முதன்மந்திரி சொன்னார்: “ஒரு நாட்டின் பெருமையும், கலாச்சாரமும் வெறும் சோற்றுக்காக உழைக்கும் கூலி களால் அல்ல. சிந்தனையாளர் களால் தாம். அறிவாளிகளை உருவாக்கும் கடிகையின் பெருமையை உணராத அச்சுத பட்டர், என் மந்திரி சபையில் இருப்பதை எண்ணி நான் தலைகுனிகிறேன். சக்ரவர்த்தி வந்ததும் தங்களுக்கு நேர்ந்த கொடுமை களுக்கெல்லாம் ஈடு செய்ய வைக்கிறேன்.”
“இந்தப் பல்லவ சாம்ராஜ்யமே நினைத்தாலும், கடிகைப்படிகளில் உயிர் நீத்த இரு மாணவர்களைத் திரும்ப எனக்களிக்க முடியுமா, முதன் மந்திரி அவர்களே?”
“ஈடு செய்ய முடியாத துன்பத்தைக் காலம்தான் தணிக்க முடியும். தங்கள் கடிகையில் நடந்துவிட்ட சம்ப வம், இந்தச் சாம்ராஜ்யத்துக்கே இழுக்குத்தான். இந்த இழுக்கை இந்த அரசு தேடிக்கொடுத்து விட்டது. இதற்கு எவ்வளவு பிராயச்சித்தம் செய்தாலும் தீராது” என்றார் முதன் மந்திரி.
கடிகைத்தலைவர் விடைபெற்றபோது, முதன் மந்திரி, “உதயசந்திரனை அரண்மனை வீரர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வீரர்களை தாக்கி வீழ்த்தி ஒரு குதிரையையும் கொன்றதற்காக அவனைத் தேடுகிறார்கள். இப்போது அவன் எங்கே இருக்கிறான்? அவனுடைய நண்பன் உங்கள் கடிகையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன்” என்றார்.
“ஸ்ரீராஜன் நம்பூதிரி என்னும் மாணவனின் நண்பன் அவன். இப்போது அவன் எங்கள் கடிகைக்குள் தானிருக்கிறான்.”
“அவனை வெளியே விடாதீர்கள். அவனை ஆபத்து சூழ்ந்திருக்கிறது. அவன் உங்கள் கடிகையிலிருப்பது வெளியே தெரிய வேண்டாம்” என்றார் முதன்மந்திரி. பிறகு, “உங்கள் மாணவர்களிடம் என் வருத்தத்தை தெரிவி யுங்கள்” என்றார்.
கடிகைத் தலைவர் விடைபெற்றுச் சென்றதும் முதன் மந்திரி ஒரு காவல் வீரனை அழைத்து, “நீ சீனத்தோப்புக்குச் சென்று, டெங்லீயிடம், உதயசந்திரன் வந்தால் அவனை ஒளித்து வைக்கும்படி சொல். அவனை அரண்மனை வீரர்கள் தேடுகிறார்கள் என்று கூறு. அவனுக்கு ஆபத்து என்பதையும் தெரிவித்து, ஜாக்கிரதையாக இருக்கச் சொல்” என்று கட்டளை இட்டார். பிறகு ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்துக்குச் செல்வதற்காகப் பல்லக்கில் ஏறினார்.
அரண்மனையில் மந்திராலோசனை மண்டபத்தில் சித்திரமாயன் குறுக்கும் நெடுக்குமாக கோபத்துடன் நடந்து கொண்டிருந்தான். சற்று தள்ளியிருந்த ஆசனத்தில் அமர்ந் திருந்த மேகலா ஓரக் கண்ணால் அருகே அமர்ந்திருந்த மகா ராணி பிரேமவர்த்தினியைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மந்திரி அச்சுதபட்டர், கைகட்டியபடி நின்று கொண்டி ருந்தார். படைவீரர்களைத் தெருக்கூட்டம் விரட்டியடித்து விட்டது என்ற செய்தியைக் கேட்டுவிட்டு சித்திரமாயன் குமுறிக் கொண்டிருந்தான்.
“தெருக்கூட்டத்திற்குப் பயந்து திரும்பி ஓடி வந்திருக் கிறீர்களே, வெட்கமாயில்லை? அந்தக் கூட்டம் முழுவதை யும் ஒழித்துவிட்டல்லவா வந்திருக்க வேண்டும்” என்று அச்சுதபட்டரைப் பார்த்து இரைந்தான்.
“கூட்டத்தினரும் ஆயுதம் தாங்கியல்லவா தாக்கி னார்கள். பயிற்சி பெற்ற போர்வீரர்களைப் போலல்லவா சாடினார்கள்” என்றார் அச்சுதபட்டர். அவர் குரல் பயத்தி னால் நடுங்கியது. “அப்படி மக்கள் கும்பலாக வந்து தாக்கு வார்கள் என்று தெரிந்திருந்தால், இன்னும் அதிகமாக வீரர்களை அழைத்துச் சென்றிருந்திருப்பேன்” என்றார்.
அப்போது மகாராணி பிரேமவர்த்தினி குறுக்கிட்டு, “படை வீரர்களோடு கடிகைக்குப் போனதே தவறு” என்றாள்.
மேகலா உடனே குறுக்கிட்டு, “முதலில் வரி கேட்கச் சென்ற நம்முடைய அதிகாரியை அடித்துவிரட்டினார்களே” என்றாள்.
மேகலா குறுக்கிட்டதை விரும்பாத மகாராணி அவள் பக்கம் திரும்பாமலேயே மந்திரியைப் பார்த்துக் கோபத் துடன், “படை வீரர்களை அழைத்துச் செல்லும்படி உங் களுக்கு நான் உத்தரவு தரவில்லையே” என்றாள்.
அச்சுதபட்டர் திகைப்புற்று நடுங்கியவராய் வாய் புதைத்தபடி, “சின்ன ராணியாரின் அனுமதி பெற்றுத்தான் சென்றேன்” என்றார்.
மகாராணிக்கு உள்ளுரக் கோபம் எழுந்தது. திரும்பி மேகலாவை முறைத்துப்பார்த்தாள். மேகலா அலட்சியமாக வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தாள். மகாராணி கோபத்தை உள்ளடக்கியவாறே மந்திரியிடம் திரும்பி, அரண்மனையின் உத்தரவை நிறைவேற்றும்போது உங்கள் அறிவையும் உபயோகித்து, நிலைமைக்குத் தகுந்தபடி நடந்திருக்க வேண்டும். இப்படி அவமானப் பட்டுத் திரும்பியிருக்க வேண்டியதில்லை. இது எனக்கு மல்லவா அவமானம்” என்றாள்.
அவளுடைய குரலில் ஒலித்த கடுமை, மந்திரியை நடுங்க வைத்தது. தன்னிடம் கேளாமல் மேகலாவிடம் மந்திரி உத்தரவு பெற்றதை எண்ணிக் கோபம் கொண்டாள். ஆட்சிப் பொறுப்பில் மேகலா தலையிடுவது பிரேமவர்த்தி னிக்கு எரிச்சல் மூட்டியிருந்தது.
மந்திரி பயந்துபோய் வாய் பொத்தியபடி, “கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். மன்னித்துக் கொள்ளவேண் டும்” என்றார். பிறகு, “அங்கிருந்து கலைந்த கூட்டம், வேறு பல இடங்களுக்கும் சென்று சேதம் விளைவித்திருக்கிறது. சிலர் ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்துக்குள் நுழைந்து, கல்லெறிந்திருக்கிறார்கள். ஆசிரமத்து மரங்கள் பலவற்றை வெட்டி சேதப்படுத்தி விட்டார்கள்” என்றார்.
“யாரோ தூண்டிவிட்டிருப்பதால் தான் இப்படியெல் லாம் நடைபெற்று இருக்கிறது. சைவவைணவ பிரமுகர்கள் தாம் ஆசிரமத்தைத் தாக்கத் தூண்டியிருப்பார்கள்” என் றான், சித்திரமாயன்.
“பொதுவாகவே மக்களுக்கு ஆசிரமத்தின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. சில தினங்களுக்கு முன், கைலாச நாதர் கோயில் மைதானத்தில், சிவாச்சாரியார் உபந்நியாசம் செய்தபோது, ஆசிரமத்தைத் தாக்கிப் பேசினார். வட மொழிக் கடிகையில் பண்டிதராயிருக்கும் ஸ்ரீபரந்தாமனும் தெப்பக்குளத்துக்குப் பக்கத்தில் உபந்நியாசம் செய்தபோது, ருத்திர பரமாச்சாரியைப் பழித்தாராம். இவர்களுடைய பேச்சுக்கள்தாம் மக்களைத் தூண்டியிருக்க வேண்டும்” என்றார், அச்சுதப்பட்டர்.
“பரமாச்சாரியின் கோட்பாடுகளும், ஆசிரமமும் அரண்மனையின் அபிமானத்தைப் பெற்றவை. மகாராணி எந்த மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைக்கிறார்களோ, அது தான் மக்கள் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள். என்னுடைய முப்பாட்டனாருக்குப் பாட்டனாரான மகேந் திரபல்லவர், முதலில் சமண சமயத்தவராக இருந்தவர்தாமே. திருநாவுக்கரசர் தாமே அவரை சைவ சமயத்துக்கு மாற்றி னார். இப்போது, மகாராணியார், யோகியின் தத்துவங்களை ஆதரிக்கிறார்கள். மக்களும் அதைப் பின்பற்றுவது தான் அவர்களுடைய கடமை. இல்லையென்றால், சைவ வைணவக் கோயில்களையும், மடங்களையும் இடிக்க த்தரவிட வேண்டியிருக்கும்” என்றான் சித்திரமாயன், கோபத்துடன்.
மகாராணி பிரேமவர்த்தினி அவன் கூறியதை ஆமோ தித்துத் தலையை அசைத்தாள். பிறகு, அவள் மந்திரியிடம், “ஆசிரமத்துக்குக் கேடு விளைவிப்பவர்கள் கடுந்தண்ட னைக்குள்ளாவார்கள் என்று பறையறையச் சொல்லுங்கள். தீங்கு விளைவிப்பவர்களை சிறைப்பிடித்து முச்சந்தியில் கழுவேற்றுங்கள்” என்று ஆணையிட்டாள்.
“நம்முடைய வீரர்களைத் தாக்கியவர்களை நம்மவர் களால் அடையாளம் காட்ட முடியமா?” என்று கேட்டான், சித்திரமாயன்.
“கூட்டத்தில் எப்படிக் கண்டிருக்க முடியும் ? முதலில் மக்கள் பீதியடைந்து சும்மாதானிருந்தார்கள். ஆனால் திடீ ரென்று நம் வீரர்களில் இருவரை ஒருவன் தாக்கவே, நிலைமை மாறிவிட்டது” என்றார், மந்திரி.
“யார் அவன் அவ்வளவு துணிவுள்ளவன்?”
“வீரப்போட்டியில் ஆயுதமில்லாமல் போரிட்டானே, அவன் தான். ஒரு குதிரையைக் கையினால் அடித்தே கொன்றுவிட்டான் ! அவன் தாக்கியதால்தான் மக்கள், தெம் படைந்து தாக்கத் தொடங்கினர்!”
“ஓ, அவனா…?” என்றாள். மேகலா, “குதிரையையே கையினால் வீழ்த்தி விட்டானா?” என்று வியப்புடன் கேட்டாள்.
“ஆமாம் தேவியாரே. ஒரே அடிதான் அடித்தான். குதிரை அந்த இடத்திலேயே ரத்தமாகக் கக்கி, விழுந்து விட்டது.
“எவ்வளவு திறமை!” – மேகலா வியந்தாள்.
“அவனைப்பாராட்டிக்கொண்டிருக்க இதுவா நேரம்? நம்முடைய படைக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக் கிறான்” என்று மகாராணி கோபத்துடன் கூறியவாறே, அருகிலிருந்த படைத் தலைவனிடம், “அவன் எங்கிருந் தாலும் தேடிப்பிடித்துக் கொண்டுவரவேண்டும். அவனை உயிருடன் பிடிக்க முடியவில்லையென்றால், அவனுடைய பிணத்தையாவது கொண்டுவா. போ, அவனை வேட்டை யாடுங்கள்” என்றாள்.
மேகலா துணுக்குற்றாள். மனம் பதைபதைத்தது. உதயசந்திரனின் அழகிய முகம் நினைவில் தோன்றியது. பரபரப்படைந்தாள். தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் சோர்ந்து படுத்தாள்.
உதயசந்திரனுக்குத் தீங்கு ஏதும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலை அவளைப் பற்றிக்கொண்டது. அவனைப் பற்றிய நினைவு உடலில் பரவசத்தை மூட்டிக் கொண்டிருந்தது. அன்று அவன் திடீரென்று விலகி ஓடியதி லிருந்து அவளுடைய மனநிலை சரியாக இல்லை. அவனைப் பற்றிய எண்ணங்களே அவளை சதா அலைக் கழித்துக் கொண்டிருந்தன.
தன்னை மறந்த நிலையில் அவனை நெருங்கியதையும், அதுநாள் வரை அவள் அனுபவித்திராத புதுமையான உணர்ச்சி அலைகளின் இனிமையை உணர்ந்ததையும் எண்ணியெண்ணி லயித்தாள். விவரிக்க இயலாத ஆனந்த லாகிரியில் மூழ்கித் திளைத்ததை எண்ணியபோதெல்லாம் அவள் உடல் பரவசமடைந்தது. காதல்தான் பேரின்பத்தின் முதற்படி என்று பரமாச்சாரி சொன்னது நினைவில் வந்தது.
யோகி சொன்ன பரியங்க யோகத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே உதயசந்திரன் பிரிந்து ஓடிவிட்டானே என்ற ஏமாற்றம் மேகலாவை மிகவும் வாட்டியது. ஏக்கம் பற்றிக் கொண்டது.
பேரானந்தத்தின் குறுக்கு வழி என்றாரே ! வழியின் ஆரம்பக் கட்டத்திலேயே உணர்வுகள் இவ்வளவு வேகத் தோடு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்கிறதே! பேரானந்த உணர்வை நெருங்கும்போது, இந்த உணர்வுகளின் சக்தி…! ஓ….! வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது போலிருக்கிறதே…
மேகலாவின் மனம் குழம்பியது. தான் உண்மை யிலேயே பேரொளியைக் காணும் தவிப்பிலா உதய சந்திரனை நாடுகிறோம் என்ற சந்தேகம் தோன்றியது. அவனுடைய கவர்ச்சியான முகமும், வெறியூட்டும் கட்ட மைந்த உடலும் தனக்குள் தோற்றுவிப்பது வெறும் காம வெறியாக அல்லவா தோன்றுகிறது என்று எண்ணினாள்.
உண்மையிலேயே அவன் மீது மாளாத காதலா கொண்டு விட்டாள்? அவனுக்காக அவள் எதையும் தியாகம் செய்யத் தயாரா? அந்த அரண்மனையையும், வருங்கால மகாராணி என்னும் பதவியையும் துறந்துவிட்டு, அவனுடன் பரியங்கயோகம் பயில அவள் தயார் தானா?
அவளுக்கு அரண்மனை வேண்டும். அதிகாரம் வேண்டும். உதயசந்திரனும் வேண்டும்…காமம் தணிய வேண்டும்…
அவளுக்குத் தேவை சுகானுபவம். அதைப் பெறு வதில் தான் என்ன தவறு? அவள் வருங்கால மகாராணி. பல்லவ சாம்ராஜ்யமே அவளுடைய அனுபவத்துக்குத் தானே. உதயசந்திரன் அவளுடைய பிரஜை. மகாராணி யின் அடிமை. அடிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்…
ஆனால், அவளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. உதயசந்திரன் திடீரென்று ஏன் விலகி ஓடினான்? மெய்மறந்து லயிப்பில் இருந்தவன், மேலும் தொடராமல் ஏன் விலகினான்? ராணி என்னும் அந்தஸ்து உணர்வு, அவனைப் பாதித்திருக்குமோ; பயந்திருப்பானோ?… அப்படித்தானிருக்கும். அவனுடைய பயத்தைப் போக்க வேண்டும்…ஓ!அந்த சில விநாடிகளில் அனுபவித்த சுகம்…
தன்னுடைய மெய்க்காவல் வீரனை அழைத்தாள். “உதயசந்திரன் என்னும் ஒருவனைச் சிறைபிடிக்க அரண் மனைப் படைத்தலைவனுக்குக் கட்டளை இடப்பட்டி ருக்கிறது. நீ உடனே படைத்தலைவனைச் சந்தித்து, உதய சந்திரனுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காமல் பிடித்து என்னிடம் கொண்டு வரச்சொல். அவனுக்குச் சிறு காயம் கூடப் பட்டுவிடக்கூடாது, ஜாக்கிரதை” என்று உத்தர விட்டாள். அதன் பிறகுதான் அவள் மனம் நிம்மதி யடைந்தது.
24. மயானத்தில் மனக்கொதிப்பு
யோகிருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்துப்பிரதான வாயிலை நெருங்கியதுமே தரணிகொண்ட போசர் திடுக் கிட்டார். ஆசிரமத் தோட்டத்தின் ஒரு பகுதி பாழாகிக் கிடந் தது. வடமொழிக் கடிகையிலிருந்து சிதறி ஓடிய மக்கள் கூட் டம் வழியிலிருந்த ஆசிரமத்தில் கோபத்தைத் தணித்துக் கொண்ட விதத்தைக் கண்டு முதன் மந்திரி மனம் வருந் தினார்.
முதன் மந்திரியை யோகி பரமாச்சாரி எதிர்கொண்டு வரவேற்றார். யோகியின் கைகளைப் பற்றிக்கொண்ட முதன்மந்திரி, “சுவாமி, மக்கள் கூட்டம் அறியாமையால் தங்கள் ஆசிரமத் தோட்டத்தைப் பாழ்படுத்திவிட்டது” என்றார்.
ருத்திர பரமாச்சாரி சிரித்தபடியே, “முதன் மந்திரி அவர் களே, உங்கள் பிரஜைகளின் கோபத்துக்கு இங்குதான் வடிகால் கிடைத்தது. இங்கு காணப்படும் காட்சி, அவர் களுடைய உணர்வுகளின் முத்திரைகள்” என்றார்.
“சுவாமி, இப்படி நடைபெற்றதற்கு மிகவும் வருந்து கிறேன். மன்னிக்க வேண்டும். இதைக் கேள்விப்பட்டுத் தான் வருகிறேன். மக்கள் சார்பில் நான் தங்களிடம் மன்னிப் புக் கேட்கிறேன்.”
“இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? இதுபற்றி நான் ஏதும் குற்றம் சாட்டினாலல்லவா மன்னிப்பு பற்றிய பிரச்னையே எழுகிறது. சில நாட்களுக்கு முன் ஓர் இரவில் வீரர்களால் விரட்டப்பட்ட மக்கள், குடும்பம் குடும்பமாக இந்தத் தோப்பில் சரண் புகுந்தார்கள். இன்று, அதே காஞ்சி மக்கள்தாம் தோப்பைப்பாழ்படுத்தியிருக்கிறார்கள். மக்கள் மீது எந்தக் குறையுமில்லை. காஞ்சி மக்கள் திருப்தியின்றிக் குமைகிறார்கள் என்பதுதான் இதற்குப் பொருள். அவர் களைத் திருப்திப்படுத்த ஆட்சி தவறிவிட்டது. மக்களின் மனத்தில் ஆரோக்கியமில்லை” என்றார், யோகி.
“உண்மைதான் சுவாமி. மக்கள் அதிருப்தியோடு தானிருக்கிறார்கள். அந்தக் கோபந்தான் இங்கே தாக்கி யிருக்கிறது. மேலும், காஞ்சி மக்களுக்குத் தங்கள் மீது சந்தேகம் வேறு தோன்றியிருக்கிறது” என்றார், மந்திரி.
“என் மீது சந்தேகமா?”
“உங்களுடைய போதனைகள் மீதுதாம். உங்களுடைய கோட்பாடுகள் சமூகத்தைப் பாதிக்கும் என்று அஞ்சுகிறார் கள்.”
இதைக் கேட்டு ருத்திர பரமாச்சாரி கலகலவெனச் சிரித்தார். “சமூகம் உயர்வதற்கே என்னுடைய தத்துவங்கள் தாம் ஒரே வழி. இந்தக் கோட்பாடுகள் யாரையும் போரிடச் சொல்லவில்லை. வஞ்சகமாக வாழச் சொல்லவில்லை. பேராசை பிடித்து அலையச் சொல்லவில்லை. எல்லாரை யும் இன்பமாக, சுதந்திரமாகப் பயமின்றி வாழச் சொல் கிறேன். அதற்கான வழிமுறைகளைப் போதிக்கிறேன். இது எப்படி சமூகத்தைக் கெடுக்கும் ?” என்று கேட்டார். பிறகு, சொன்னார்:
“ஒருவகையில், நான் கூறும் வாழ்க்கை நெறியை சமூகம் ஏற்பது கடினந்தான். நான் சமூகத்துக்குப் போதிப் பதில்லை. சமூகத்தால் என்னுடைய நெறிகளைப் புரிந்து கொள்ள முடியாது. அவனவனுடைய சுதர்மப்படி வாழத் தூண்டும் இந்த எளிமையான வாழ்க்கை நெறியை பல கட்டுப்பாடுகளை விதித்து, மனிதனின் இயல்பான சுதந்திர உணர்வுகளை ஒடுக்கும் இன்றைய நாகரிகச் சமுதாயத்தால் புரிந்து கொள்ளமுடியாது. இது, தனிப்பட்டவனின் மனதைச் செப்பனிடும் ஒரு சாதனம். இது, ஒட்டு மொத்தமான சமுதாயத்துக்குப் புரியாது. நான் போதிப்பது ஒரு மதமோ அல்லது வழிபாடோ அல்ல. இது ஒரு தத்து வம் கூட இல்லை. இது ஒரு வாழ்க்கை நெறி. கடவுளை உணர்வதற்கு இது ஒரு இலகுவான குறுக்கு வழி. இந்தப் பாதையில் மேடுபள்ளம் கிடையாது. கல், முள் கிடையாது. ரம்மியமான மலர்த் தோட்டத்தின் வழியே செல்லும் ஒற்றையடிப் பாதையைப் போன்றது இது. பேரானந்த நிலையைத் தனிப்பட்டவன் தான் உணரமுடியுமே தவிர, சமுதாயமல்ல. ஆகையால்தான், சமுதாயத்தைப் பற்றிநான் அக்கறை கொள்வதில்லை. தனிப்பட்டவனின் மனம், ஆரோக்கியமடைந்தால், சமுதாயம், தானாக ஆரோக்கி யத்தைப் பெற்றுவிடும். இது உங்கள் அரசியலுக்கும் பொருந்தும். எந்த நாடு தனிமனிதனின் அடிப்படை மன உணர்வுகளை மதிக்கவில்லையோ அந்த நாடு வெறும் சிறைச்சாலைதான்.’
முதன் மந்திரி மிகுந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, மெல்ல, “உங்கள் ஆசிரமத்தில் நடைபெறும் பயிற்சிகளில் காதல் உறவு இருப்பதாகக் கூறுகிறார்களே” என்று கூறினார்.
“நூற்றுக்கணக்கான தியான முறைகள் உண்டு. சாத கனின் மனப்போக்குக்குத் தகுந்த முறை எதுவோ அதைப் பயிற்றுவிக்கிறேன். காதலும் அவற்றுள் ஒன்று.” என்றார் யோகி. முதன் மந்திரி வியந்து கேட்டுக் கொண்டிருந்தார்.
யோகி சொன்னார்: “வைத்தியரின் சோதனை அறை யில், நோயாளி சிகிச்சைக்காக நிர்வாணமாகப் படுத்திருந் தால், அதைப் போய் பார்த்துவிட்டு, ‘ஐயோ, நிர்வாணமா யிருக்கிறார்களே’என்று ஓலமிடுவதில் அர்த்தமில்லையே. அதேபோல்தான், என்னுடைய ஆசிரமமும் ஒரு சிகிச்சை நிலையம். இங்கு மனதுக்கு வைத்தியம் நடைபெறுகிறது. என்னுடைய ஆசிரமத்திற்கு வருபவர்கள், தங்கள் மனத்தின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் அழுக்குகளையெல்லாம் வெளிப்படுத்தி சுத்தப்படுத்துவதற்காக வருகிறார்கள். மனம் என்பது பலவித ஆசைகளையும், கொடூரங்களை யும் உள்ளடக்கிய ஓர் எரிமலை. உள்ளே குமுறும் உணர்வு களை அமைதியான முறையில் ஒரு பாதுகாப்பான இடத்தில் ஆபத்தின்றி மெல்ல மெல்ல வெளிப்படுத்தாவிட்டால், அவை குபீரென்று வெடித்துச் சீறி எழுந்துவிடுகின்றன. சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வஞ்சகம், சூது போன்ற கொடுமைகள் நிகழக் காரணம் இதுதான். என்னுடைய ஆசிரமத்தில் மனிதனின் மனப் பெட்டகத்தை நாசூக்காகத் திறந்து, உள்ளிருந்து குமுறும் உணர்வுகளுக்கு அமைதியான முறையில் வடிகால் அமைத்துக் கொடுக்கிறேன். இங்கே, காதல் உறவுச் சிகிச்சை யில் மன அழுக்குகளைப் போக்கிவிடப் பயில்கிறார்கள். மன அழுக்குகளும், வக்கிரங்களும் மறைந்தால்தாம் தியானம் கிட்டும். என்னுடைய ஆசிரமம் ஒரு வைத்தியக் கூடம். இங்கு எது நடந்தாலும் அதற்கும் வெளியே இயங்கும் சமுதாயத்துக்கும் தொடர்பே கிடையாது. நான் கூறும் தியான நெறியின் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் இதை, காமவெறியைத் தூண்டும் கேளிக்கை என்று தவறாகப் பிரசாரம் செய்யும் மூடர்களும் உண்டு. உண்மையை உணராத மூடர்களின் பிரசாரத்தை நம்புபவர்களும் இருக்கிறார்கள்.”
“வைதீகர்கள்தாம் இதற்கு எதிர்ப்பு” என்றார், மந்திரி.
“வைதீகர்கள் எதற்குத்தான் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை? சைவ வைதீகர்கள், வைணவத்துக்கு எதிரிகள். வைணவவைதீகர்கள் சைவத்துக்கு எதிரிகள். அவர்கள் இரு வரும், மற்ற தத்துவங்களுக்கு எதிரிகள்” என்று கூறிச் சிரித் தார் பரமாச்சாரி. பிறகு சொன்னார்: “நான் கூறும் கோட்பாடு களும்,தத்துவங்களும் புதிதல்லவே. வைதீகர்கள் போற்றும் பிரஹதாரண்யக உபநிஷதத்தில், அக்கினி காரியத்தைப் பற்றிப் பேசும்போது, இந்த யோகத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. வடக்கே இமயமலைச் சாரலில், இருநூறு ஆண்டு களுக்கு முன்பிருந்த போதிதர்மர் என்ற ஞானி,நான் போதிக் கும் யோக சாதனை பற்றித்தான் போதித்து வந்திருக்கிறார். பௌத்த குருமார்களில் மிகச் சிறந்தவராக விளங்கிய நரோப்பா என்பவர் இதே நெறியைத்தான் தீவிரமாகப் போதித்தார். சைவர்கள் போற்றும் திருமூலரும் இந்த நெறியைப் போற்றுகிறார். ஏற்பவர்கள் ஏற்கட்டும், மூடர்கள் ஒதுங்கட்டும்.”
“நாட்டில் மூடர்களின் கூட்டம் அதிகமாகும்போது, அறிவாளிகள் சங்கடப்பட வேண்டியிருக்கிறது” என்றார், மந்திரி. “மூடத்தனத்தைப் போக்க வேண்டியதும் உங்களு டைய ஆட்சியின் கடமைகளில் ஒன்றாயிற்றே” என்று கூறிச் சிரித்தார் யோகி.
“கடமையை ஆற்றுவதில் பல பிரச்சினைகள். நான் இப்போது வந்தது, உங்களுடைய உதவியை நாடித்தான். நீங்கள் கூறியபடி மக்கள், மிகுந்த அதிருப்தியோடிருக் கிறார்கள். மக்களின் நன்மைக்காக, மகாராணியிடம் நீங்கள் அறிவுரைகள் கூறவேண்டும். நீங்கள் மகாராணியின் குரு என்ற முறையில் உங்களை வேண்டுகிறேன்” என்றார் மந்திரி.
ருத்திர பராமாச்சாரி சிரித்தார். “பல்லவ நாட்டின் முதன் மந்திரி சொல்ல முடியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்?”
“சுவாமி, நான் மகாராணியின் ஊழியன்; நீங்கள் குரு. உங்கள் சொல்லை மகாராணி மீறமாட்டார்கள்” என்று கூறிய மந்திரி, மகாராணியின் வரிகள் பற்றிய ஆணை களையும், சில முக்கிய பிரமுகர்களைச் சிறைப் பிடித்திருப் பது பற்றியும் விவரமாகக் கூறினார். வடமொழிக் கடிகை யில் நடைபெற்ற சம்பவங்களையும் கூறினார்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண் டிருந்தருத்திர பரமாச்சாரி, “என்னைத் தேடி வருபவர்களுக்கு மட்டும் வாழ்க்கையில் திசை காட்டும் பணியைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறேன். இந்நாட்டுப் பிரச்னை யில் நான் தலையிட்டுத் தீர்க்க முடியும் என்று நம்புகிறீர் களா?” என்று கேட்டார்.
“உங்கள் சொல்லுக்கு மகாராணி மதிப்பளிப்பார்கள். மக்கள் மீது அன்பு காட்டச் சொல்லுங்கள். படைப்பின் முழுமையிலுமே காதலைச் செலுத்தப் பயிற்றுவிக்கும் தாங்கள் மகாராணியை குறைந்தபட்சம் அவருடைய
ப நாட்டுமக்களிடமாவது அன்பும், இரக்கமும் காட்டச் சொன்னால் போதும்” என்றார் மந்திரி.
“முயற்சி செய்து பார்க்கிறேன்.”
“மிக்க நன்றி, சுவாமி. தாங்கள் இந்த உதவியைச் செய்ய முடிந்தால், இந்த நாடே தங்களுக்கு நன்றி செலுத் தும்” என்று கூறி முதன் மந்திரி விடைபெற்றார்.
லீனா, வெகுநேரம் தோட்டத்திலேயே இருந்தாள். உதயசந்திரன் அவளைவிட்டுப் பிரிந்து சென்ற பிறகும் தோட்டத்தை விட்டுச் செல்ல அவளுக்கு மனமில்லை. உள்ளம், ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவளுக்குத் துணையாக மரக்கிளைகளிலிருந்த பறவை இனங்களுடன் ஏதோ பேசிக் களித்தாள். சுற்றுப்புறமும் மரம், செடி, கொடிகளும் அவளுடைய உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு, அவளோடு சேர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுபோல் உணர்ந்தாள். சற்றுமுன் உதய சந்திரனுடனிருந்ததை நினைத்து நினைத்துப் பரவசமடைந் தாள். உடலின் ஒவ்வோர் அங்கத்திலும் வலி இருந்து கொண்டிருந்தாலும், அந்த வேதனையிலும் இன்பம் ஊறி உடல் முழுவதும் பரவிய விந்தையை நினைத்து லயித்தாள். போதி மரத்தடியில் கசங்கிக் கிடந்த மருக்கொழுந்து மாலையை எடுத்து மரக்கிளையில் தொங்கவிட்டாள். தோட்டம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாள். வீட்டுக்குப் போகவே மனமின்றி, மீண்டும் போதிமரத்தடிக்கே வந்து அமர்ந்தாள். அந்த இடத்தில் பெற்ற இன்ப சுகத்தை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு, வேரின் மீது சாய்ந்து கிடந்தாள். புது அனுபவத்தை எண்ணியெண்ணி ரசித்தாள். பொழுது கழிந்ததே தெரியவில்லை. நண்பகலாகிவிட்டது.
டெங்லீயின் மனைவி அவளைத் தேடிக்கொண்டு வந்தாள். போதி மரத்தடியில் களைப்புற்று உறங்கிக் கொண் டிருந்த லீனாவை எழுப்பினாள். முதன் மந்திரியிடமிருந்து ஆள் வந்திருப்பதைத் தெரிவித்தாள். லீனா பரபரப்புடன் வீட்டை நோக்கி விரைந்தாள்.
வீட்டினுள் டெங்லீ கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். முதன் மந்திரியின் காவல் வீரன் உதய சந்திரனைப்பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றதைச் சொன்னார். லீனா பதறிப்போனாள்.
“கெட்டிக்காரப் பையன் தான். இலகுவில் அகப் பட்டுக் கொள்ளமாட்டான். அவன் இங்கே வந்தால் தோட்டத்தில் ஒளிந்திருக்கும்படி செய்து விடலாம்” என்றார் டெங்லீ.
“தாத்தா, அவர் எங்கே இருக்கிறார் என்று பார்த்து வாருங்களேன்” என்றாள் லீனா.
“அவனைத் தேடிப்போவதுதான் ஆபத்து. எங்காவது யாருக்கும் தெரியாத இடத்தில் பதுங்கியிருந்தால் சரிதான்.”
“காஞ்சி நகர் அவருக்குப் புதிது. எங்கே பதுங்கத் தெரியும்? அவரைத் தேடி வீரர்கள் பௌத்த கடிகைக்குப் போயிருப்பார்கள். அவர் அங்கு போவதாகத்தான் சொல்லிச் சென்றார். போகிற வழியில் சமஸ்கிருதக் கடிகை யில் அவருடைய நண்பரைக் காணப்போயிருந்திருப்பார். போன இடத்தில் கலகம் ஏற்பட்டிருந்திருக்கும்” என்றாள் லீனா கவலையுடன். அவளுக்கு மனம் பதைபதைத்தது. “தாத்தா, அவருடைய கடிகைக்குப் போனால் விவரம் தெரியும். அங்காவது விசாரிக்க முடியுமா பாருங்களேன்” என்றாள்.
டெங்லீயும் பதற்றமடைந்திருந்தார். அவனைப்பற்றிய விவரமறியத் துடித்துக் கொண்டிருந்தார். லீனாவின் யோசனைப்படி அவர் பௌத்த கடிகைக்குப் புறப்பட்ட போது, நான்கு குதிரை வீரர்கள் அங்கே வந்து உதய சந்திரனைப் பற்றி விசாரித்தார்கள்.
“எப்போதாவது அபூர்வமாக வருவான்” என்றார் டெங்லீ.
“பெரியவரே, பொய் சொல்லித் தப்பிக்கமுடியாது. இன்று காலையில் இங்கு வந்துவிட்டுத்தானே பிறகு கோட்டைக்குள் திரும்பியிருக்கிறான்” என்றான் ஒரு வீரன்.
ஆமாம், இன்று வந்தான். இனி எப்போது வரு வானோ ? நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்றார் டெங்லீ. அவர் குரல் நடுங்கியது. அருகில் நின்ற லீனா,
“அவர் இங்கே அடிக்கடி வருவது கிடையாது. எதற் காக அவரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“மகாராணியின் கட்டளை. படைவீரர்களைத் தாக்கி விட்டுத் தப்பி ஓடிவிட்டான். எதற்காகத் தேடுவோம்? பிடித்துக் கழுவில் ஏற்றத்தான்” என்றான், இன்னொருவீரன்.
லீனாவின் முகம் பீதியினால் வெளுத்துவிட்டது. வீரர் கள் நால்வரும் டெங்லீயின் வீட்டினுள் புகுந்து சோதனையிட்டனர். உதயசந்திரன் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டபின் சென்றார்.
டெங்லீயின் வீட்டில் எல்லாரும் நடுங்கிக் கொண்டி ருந்தனர். லீனாவுக்கு எப்படியாவது உதயசந்திரனைச் சந்தித்து எச்சரிக்க வேண்டும் என்ற தவிப்பு. ஒரு வேளை அவன் அவளைத் தேடி அங்கு வந்தாலும், அவனை எங்கே ஒளித்து வைப்பது? வீரர்கள் எல்லா இடங்களிலும் தேடு வார்களே. அவனை அழைத்துக் கொண்டு சீனத்துக்கே திரும்பி விட்டால் என்ன என்று எண்ணினாள். அதுதான் உசிதம்போல் அவளுக்குத் தோன்றியது.
அவனைச் சந்தித்தாலல்லவா திட்டத்தை நிறைவேற்ற லாம். அவனை எங்கே தேடுவது?…..
லீனாவின் பரபரப்பு அதிகமாகியது. நிலை கொள்ளா மல் தவித்தாள். அவளுடைய யோசனையின் பேரில் டெங்லீபௌத்த கடிகைக்குப் புறப்பட்டார்.
அதேசமயம், உதயசந்திரன் வடமொழிக் கடிகையின் மேல்மாடியிலிருந்தான். ஜேஷ்டபதி சோமயாஜி அவனைக் கடிகையை விட்டு வெளியேறக் கூடாது என்று எச்சரித் திருந்தார். அவனை அரண்மனை வீரர்கள் தேடிக்கொண் டிருந்த செய்தி கடிகை முழுவதும் பரவிவிடவே கடிகை மாணவர்களும், ஊழியர்களும் அவனை ஒளித்து வைப் பதில் தீவிரமாயிருந்தனர்.
உதயசந்திரன் பணிபுரிந்து கொண்டிருந்த பௌத்த கடிகையில்தான் பரபரப்பு அதிகமாயிருந்தது. ஒரு நாளுக் குள் பலமுறை, வீரர்கள் பௌத்த கடிகைக்குச் சென்று தேடி விட்டனர். எப்படியும் உதயசந்திரன் பௌத்த கடிகைக்கு வருவான் என்ற நம்பிக்கையில் இரண்டு வீரர்கள் கடிகை யின் எதிரேயிருந்த மரத்தடியில் காத்திருந்தனர்.
பௌத்த கடிகையைச் சேர்ந்தவர்கள் பீதியடைந்தி ருந்தனர். அவன் அகப்பட்டு விடக்கூடாதே என்ற கவலை அனைவரையும் பற்றிக் கொண்டது. அவன் கடிகைக்கு வந்தால், அவனை இரகசியமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட, கடிகைத் தலைவர் முடிவு செய்திருந்தார்.
யோகி ருத்திர பரமாச்சாரி மகாராணியைக் காண வந்திருக்கிறார் என்ற செய்தி கேட்டு, பிரேமவர்த்தினி திகைப் புற்றாள். வழக்கமாக, அவள்தான் அவரை அழைத்துவர இரதத்தை அனுப்பிவைப்பாள். இப்போது யோகியே வலிய அவளைக் காண வந்திருப்பதன் நோக்கமென்ன என்று சிந்தித்தவாறே, யோகியை வரவேற்க விரைந்தாள்.
முதலில் யோகி அவளிடம் தியானம் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிவிட்டுச் சொன்னார்: “மகாராணி, புயல் காற்றின் நடுவே இருந்துகொண்டு இரைச்சலைத் தடுக்க முயல்வது மதியீனம். உன்னுடைய மன அமைதி குலைவதற்குக் காரணம், ஆட்சியில் உள்ள பிரச்சினைகள்தாம். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இளவரசனை அடக்கிவை, பிரச்சினைகளுக்கெல்லாம் அவன் தான் காரணம். அவனுடைய தலையீட்டை தவிர்க்க வில்லையென்றால், விரைவில் பல்லவநாடு கொதித்தெழுந்துவிடும்.”
இதைக்கேட்டு மகாராணி திகைப்புற்றாள். “சுவாமி, சித்திரமாயன் தான் வருங்காலச் சக்ரவர்த்தி” என்றாள்.
“வருங்காலத்தில்தானே? இப்போதில்லையே? அவ னுடைய நடத்தையால் அவன் அரியணையே ஏற முடியா மல் போய்விட்டால்?”
“அப்படித் தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அவன்தான் பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசன். அரியணை ஏற உரிமை உள்ளவன்.”
“மன்னனின் சக்தியைவிட மக்களின் சக்தி பெரிது. சக்ர வர்த்தியாக அரியணை ஏறவேண்டிய இளவரசன், மக்க ளின் வெறுப்புக்கு ஆளாவது நல்லதல்ல. உலகப்புகழ் பெற்ற சமஸ்கிருத கடிகையை உன்னுடைய வீரர்கள் தாக்கியதும், கடிகை வாசலிலேயே இரு மாணவர்களின் உயிர்களைப் பறித்ததும் எவ்வளவு கொடுமை. இந் நாட்டுக்கே பெருமையளித்துக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் ஸ்தாபனத்தை அரசாங்கம், கவனத்தோடு, பய பக்தியுடன் ஆதரிப்பதைவிட்டு, தாக்குவது எவ்வளவு மதி யீனம். மற்ற நாட்டு நாகரிக மனிதர்கள், இந்நாட்டைப்பற்றி என்ன நினைப்பார்கள் ? மகாராணி, இப்போது என்ன தவறு நடைபெற்றாலும், அந்தப் பழி உன் மீதுதான் விழுகிறது” என்றார், யோகி.
“கடிகைச் சம்பவம் எனக்கும் மனக்கலக்கத்தைத்தான் உண்டு பண்ணியிருக்கிறது” என்றாள், பிரேமவர்த்தினி.
“நீ மகாராணி என்பதை மறந்துவிடாதே. தருமத்தை காக்கவேண்டியது உன் கடமை. இளவரசனைக் கட்டுப் படுத்து. அவனை ஆட்சியில் தலையிட அனுமதியாதே. அவன் மனைவி மேகலாவும் ஆட்சியில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறேன். அவள் தன் போக்கில் ஆணைகளை இடுகிறாளாம். கடிகைச் சம்பவத்திற்கு அவளுடைய தலை யீடுதான் காரணம் என்று கேள்வி. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தவில்லையென்றால், பிறகு நீதான் வருந்த வேண்டி வரும்” என்றார், யோகி. பின்பு சொன்னார்: “இன்னொன்றும் சொல்கிறேன், தேவையானால், நாட்டின் நலனையும், உன்னுடைய நலனையும் கருதி, அவனைச் சிறைப்பிடித்து வைப்பது நல்லது. சக்கரவர்த்தி வந்ததும் அவரிடம் ஒப்படைத்துவிடு.”
இதைக் கேட்டு, பிரேமவர்த்தினி திடுக்கிட்டாள். “சுவாமி, இளவரசனைச் சிறைபிடிப்பதா ?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“மகாராணி, நியாயத்தைக் காக்க, தன் மகனையே சோழ மன்னன் கொன்றிருக்கிறானே. உன் நன்மையைக் கருதிச் சொன்னேன்” என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார், யோகி.
ருத்திர பரமாச்சாரி சென்ற பிறகு, மகாராணி மன அமைதியின்றித் தவித்தாள். சித்திரமாயனை அடக்குவது அவளால் இயலுகிற காரியமா? இப்போது மகாராணி என்ற அதிகாரத்தில் அவனுக்கு எதிராகச் செயல்பட்டால், பிற் காலத்தில் அவன் அரியணை ஏறும்போது தன்னுடைய நிலை என்னவாகும் என்பதைப்பற்றிச் சிந்தித்தாள். சிந்திக்க சிந்திக்க மனம் குழம்பியது. என்ன செய்வதென்று புரிய வில்லை.
டெங்லீயின் பல்லக்கு காஞ்சிக் கோட்டைக்குள் சென்று, பௌத்த கடிகையை நோக்கிச் சென்று கொண்டி ருந்த போது, எதிரே மக்கள் கூட்டம் திரண்டு வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், பல்லக்கை வீதியின் ஓரத்தில் இறக்கச் சொல்லி, பல்லக்கிலிருந்து இறங்கி, ஒதுங்கி நின்று கவனித்தார். பெரும்கூட்டம் அலைமோதியபடி வந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே இரண்டு பாடைகள் தூக்கி வரப்பட்டன. அவ்வளவு கூட்டத்திலும் நிசப்தம் நிலவியது. மக்கள் நடந்தபோது எற்பட்ட காலடி யோசைதான் அலையோசைபோல் எழுந்தது. பாடை களின் முன்னால் வடமொழிக் கடிகையின் தலைவர் ஜேஷ்டபதி சோமயாஜி, தலைகுனிந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அருகில் ராஜன் நம்பூதிரி தீச்சட்டியை ஏந்தியபடிச் சென்றான். அவனுக்கருகே, தலையில் முண் டாசு கட்டிய ஒருவன் செகண்டியை அடித்துக் கொண்டு சென்றான். பாடைகளைச் சுற்றிலும் காஞ்சியில் உள்ள எல்லாக் கடிகைகளின் மாணவர்களும், பண்டிதர்களும், நிர்வாகிகளும் மௌனமாக நடந்து சென்றனர். ஊர் மக் களும் தொடர்ந்து சென்றனர். தீச்சட்டியுடன் ராஜன் நம்பூதிரியைக் கண்டதும் டெங்லீ, கூட்டத்தைக் கூர்ந்து கவனித்தார். உதயசந்திரனைத் தேடினார். காணவில்லை. அந்தக் கூட்டத்தில் அவன் இல்லையென்பதை அறிந்துமன நிம்மதியடைந்தார்.
கூட்டத்தில் சென்றவர்களிடம் பாடைகளைப் பற்றி விசாரித்தார். “வடமொழிக் கடிகையில் இரண்டு மாணவர்களை அநியாயமாக அரண்மனை வீரர்கள் கொன்று விட்டார்கள். இறுதிச் சடங்குக்காக மயானத்துக்குப் போகிறோம்” என்றான் ஒருவன்.
டெங்லீ,பல்லக்குத் தூக்கிகளிடம் பல்லக்கை மயானத் துக்குக் கொண்டுவரும்படி கூறிவிட்டு அவரும் அந்த இறுதி ஊர்வலத்துடன் சென்றார். ஊர்வலம் அரச வீதியைக் கடந்து, தேரோடும் வீதியை நெருங்கியதும் மக்கள் கூட்ட மும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் நிலவிய மெளனம் காஞ்சி நகரையே அழுத்து வது போலிருந்தது. ஊர்வலம் காஞ்சி நகர் எல்லையில் ஓடிக்கொண்டிருந்த வேகவதீ ஆற்றின் கரையை அடைந்து நின்றது.
மயானத்தில் இறுதிச் சடங்கு முடிந்து, சிதைகளுக்குத் தீ மூட்டப்பட்ட பிறகு, அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் உயரமான வேர்மீது ராஜன் நம்பூதிரி ஏறி நின்றான்.
“காஞ்சிப் பெருமக்களே, குருமார்களே,நண்பர்களே…” என்று கூவியழைத்தான். கூட்டத்தினர் அவனை வியப் புடன் கவனித்தனர். ராஜன் நம்பூதிரி உணர்ச்சி வயப் பட்டுப் பேசத் தொடங்கினான்.
இரண்டு மாணவர்களை அநியாயமாகப் பலி கொடுத் துவிட்ட சம்பவத்தை மிக உருக்கமாக வர்ணித்தான். மக்கள் நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர். இரண்டாவது மந்திரி அச்சுத பட்டர் இருபதினாயிரம் பொற்காசுகள் கேட்டதைப் பற்றி ராஜன் நம்பூதிரி சொன்ன போது, கூட்டம் கோபத்தினால் கொந்தளித்தது.
“இன்று ஆளும் மகாராணியாரும், இனி ஆளப் போகும் இளவரசரும்தான் நம்மை ஆதரிக்க வேண்டி யவர்கள். ஆதரித்து அணைக்க வேண்டிய கைகள், கொலை செய்து, கொடுமைப்படுத்தி விட்டன. கொடுமை நேரும்போது நாம் யாரிடம் முறையிட்டு ஆறுதல் பெற வேண்டுமோ அவர்களே நம்மைக் கொடுமைப்படுத்தும் போது, நாம் யாரிடம் போய் முறையிட முடியும் ? நாமே நம்முடைய கண்ணீரில் ஆறுதலடைந்து கொள்ள வேண் டியதுதான். காஞ்சிப் பெருமக்களே, நம்மை ஆள்பவர் களின் இதயத்தில் கருணையையும், நல்லெண்ணத்தையும் உண்டு பண்ணும்படி கைலாசநாதரை வேண்டிப் பிரார்த்திப் போம். ஆள்பவர்கள் கொடிய நச்சுப் பாம்புகளாகி விட்டார்கள்…’
ராஜன் நம்பூதிரியின் பேச்சு, எல்லாரையும் உருக வைத்தது. கடைசியில், ராஜன் நம்பூதிரி சொன்னான்: “காஞ்சிப் பெருமக்களே, கிட்டத்தட்ட முன்னூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய பல்லவச் சக்கரவர்த்தியின் மூதாதையரான குமார விஷ்ணு பல்லவர் காலத்தில், இதே கடிகையில் மயூரசன்மன் என்ற இளைஞன் கல்விகற்க வந்தான். அவனை அன்றைய பல்லவ ஆட்சி, அவமானப் படுத்தி, கடிகையிலிருந்து விரட்டியது. அந்த மயூரசன்மன் பல்லவ ஆட்சி மீது வன்மம் கொண்டு, வடக்கே சென்று, ஒரு படையையே திரட்டிக் கொண்டு வந்து, இந்த நாட்டை எதிர்த்தான். கடைசியில் பல்லவ மன்னர் பணிந்து, அவனையும் ஓர் அரசனாக ஏற்றுக் கொண்டார். அந்த மயூரசன்மன்தான் கதம்பக் குலத்தைத் தோற்றுவித்தவன். இன்றும் இதே கடிகையைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு பல்லவநாடு கொடுமை இழைத்திருக்கிறது. அன்று நேர்ந்த கொடுமையால் பல்லவநாடு ஒரு பகுதியை மயூரசன் மனுக்கு இழந்தது. இன்று நேர்ந்த கொடுமையால், பல்லவ நாடுக்குத் தீங்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்று இறை வனைப் பிரார்த்திப்போம். ஒன்றை மறந்து விடாதீர்கள், இன்று கடிகைக்கு நேர்ந்த கொடுமையைப் போல், நாளை உங்களுக்கும் நடக்காது என்று யாராலும் உறுதி கூற முடி யாது. எல்லாவற்றையும் ஊமைகளாயிருந்து பொறுத்துக் கொண்டு, கண்ணீர் சிந்துவதைத் தவிர, உங்களுக்கு வேறு வழியில்லையா? சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்தியுங்கள். அறிவாளிகள் உறங்காதீர்கள். சிந்தியுங்கள்”
ராஜன் நம்பூதிரியின் பேச்சு பலருடைய சிந்தனை களைக் கிளறிவிட்டது. தாங்கள் மனிதர்கள், ஆடு மாடு களைப் போன்ற அறிவில்லாத ஜீவன்கள் அல்ல என்ற உண்மை அப்போது பலருக்குப் புரியத் தொடங்கியது. தங்களுக்குத் தோன்றியதைப்பற்றிப் பேசி விவாதித்தவாறே, கலைந்து செல்லத் தொடங்கினர்.
டெங்லீ கூட்டத்தை விலகி நடக்கத் தொடங்கிய போது, அவரருகே ஒருவன் நெருங்கி, “தாத்தா” என்று மெல்லக் கூப்பிட்டது கேட்டுத் திரும்பினார். பாடைகளின் முன்னால், தலையில் முண்டாசு கட்டியபடி செகண்டி யடித்துக் கொண்டு வந்தவன், அவரருகில் நின்று கொண்டி ருந்தான். அவருடைய காதருகே, “லீனாவைத் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்” என்றான்.
டெங்லீ வியப்புடன் அவனை உற்றுப் பார்த்தார். ஏதோ பேச வாயெடுத்தார். அவன் கண்களாலேயே சைகை காட்டிப் பேச வேண்டாம் என்று தடுத்தான். அவன் தான் உதயசந்திரன் என்பதைத் தெரிந்துகொண்டதும் அவருக்கு வியப்புத் தாளவில்லை.
“என்னைப் பற்றிப் பயப்படவேண்டாம். விரைவில் இதுபோல் ஏதாவது வேடத்தில் வீட்டுக்கு வருவேன். தைரியமாயிருங்கள்” என்று கூறிவிட்டு, உதயசந்திரன் கூட்டத்தோடு கலந்து மறைந்துவிட்டான்.
– தொடரும்…
– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.
– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க... |