கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 997 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. அதிகாரத் திமிர்

பண்டைக்காலக் கல்விமுறைக்கும் இக்காலக் கல்வி முறைக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. வங்கிகளுக்கும், கம்பெனிகளுக்கும் குமாஸ்ாதக்களை உருவாக்கும் இக் காலக் கல்வி முறையிலிருந்து முற்றும் மாறுபாடானது அக் காலத்தியக் கல்விமுறை. பழங்காலக் கல்விமுறையினால் பண்பாடும், கலாச்சாரமும் வளர்ந்தன. வீரமும் தன்னம் பிக்கையும் பெருகின. அறிவு, மேம்பட்ட நிலையில் உயர்ந்தது.அறம்,பொருள், இன்பம் நுகரவும், நன்னெறிக்கு ஏற்ற முறையில் பயிலவுமே பண்டைக்காலக் கல்வி உதவியது. 

இந்திய வரலாற்றிலேயே-உலக வரலாற்றில்கூட பல்லவ ஆட்சியில்தான் சகல கலைகளும் ஒரே சமயத்தில் மேம்பட்டுத் திகழ்ந்தன. எல்லாக் கலைகளுக்கும் ஏற்ற சிறந்த கலைக்கூடங்களும், கல்லூரிகளும் காஞ்சி நகரில் பல இருந்தன. இன்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி நகரின் கல்விச்சிறப்பு மேலோங்கி இருந்தது. 

சமந்தபத்திரர், பூஜ்யபாதர் முதலிய புகழ்பெற்ற சமண ஆசிரியர்கள், காஞ்சிக் கடிகைகளுக்கு விஜயம் செய்தார் களாம். மாபெரும் பௌத்த ஞானியான அரவண அடிகள், காஞ்சி பௌத்த கடிகையில்தான் தத்துவங்களைப் போதித் தார். காஞ்சிமா நகரிலிருந்துதான் தர்ம பாலர் என்ற ஞானி, நாலந்தா பல்கலைக் கழகத்துக்குப் பேராசிரியராகச் சென் றார். சீனாவிலும், ஜப்பானிலும் பௌத்தமடத் தலைவராக இருந்த போதி தர்மர், காஞ்சிபுரத் தமிழர்தாம். 

தமிழும், வடமொழியும் அந்நாளில் காஞ்சியில் கொழுத்து வளர்ந்தன. காஞ்சி நகரின் வடமொழிக் கடிகை, பாரதம் முழுவதும் மிகுந்த புகழையும், செல்வாக்கையும் பெற்றிருந்தது. இக்கதையின் காலகட்டத்திற்குக் கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் கல்வி நிலையம் தோன்றிவிட்டது. ‘நியாயப் பிரவேசம்’ என்னும் தர்க்க சாஸ்திரத்தை எழுதிய திண்ணாகர், அந்த சமஸ்கிருதக் கடிகையில் பணியாற்றினார். மகாகவி தண்டி, அலங்கரித்த கடிகை அது. அங்கு பதினான்கு கலைகள் கற்பிக்கப் பட்டன! அவற்றுடன் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், புராணம், மீமாம்சம், நியாயம், தர்ம சாஸ்திரம், மருத்துவம், இசை, பொருள் நூல், வில்வித்தை ஆகிய பதினெட்டு வித்தைகளும் அங்கு கற்பிக்கப்பட்டன. 

அவ்வளவு புகழ்வாய்ந்த சமஸ்கிருத கடிகையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஸ்ரீராஜன் நம்பூதிரி, தானும் அந்தக் கடிகையில் தங்கிக் கல்வி பயிலப் போவதை எண்ணிப் பரபரப்படைந்திருந்தான். 

அவன் கடிகையில் போய்ச் சேர்வதற்கு முந்தினநாள் இரவு,நடுஜாமத்துக்குப் பின்னும் அவனும் உதயசந்திரனும் பௌத்த கடிகையின் மாடி வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

ராஜன் நம்பூதிரி சொன்னான்: 

“உதயசந்திரா, உன்னை விட்டுப் பிரிந்திருக்கவே பயமாயிருக்கிறது. நானும் உன்னோடு இந்தப் பௌத்த கடிகையிலேயே ஏதாவது பணி புரிந்து கொண்டு இருந்து விடுகிறேனே?” 

“நீ ஒரு சைவன். வேதங்களையும் ஆகமங்களையும் கற்றவன். உனக்குப் பொருத்தமான துறையில்தான் உன் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். இடையில் விட்டுப்போன கல்வியை இங்கே நீ தொடரலாம். என் னைப் போல் உடல் உழைப்புக்கு நீ தகுந்தவனல்லன். நீ அறிவு ஜீவி. உன்னுடைய மேதாவிலாசம், இந்நாட்டுக்குக் கூட உதவலாம். நானும் காஞ்சியில்தானே இருக்கிறேன். தினமும் நாம் சந்தித்துக் கொள்ளலாம்” என்று உதயசந்திரன் ஆறுதல் சொன்னான். 

“காஞ்சி நகரைப் பற்றிக் கேள்விப்பட்ட காலத்தில் இங்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது, சந்தர்ப்பம் என்னை இங்கே இழுத்துக் கொண்டு வந்திருக் கும்போது, என்னுள்ளே பயம் சூழ்கிறது, நண்பா. நகரத்துக் குள் வந்தபோது உனக்கு விழுந்த சவுக்கடியை நினைக்கும் போதெல்லாம், மனத்தில் உற்சாகம் மறைந்துவிடுகிறது.” 

“நீ மட்டும் அப்போது என்னைத் தடுத்து இழுத்துக் கொண்டு வந்திராவிட்டால் நான், அவன்மீது பாய்ந்திருப் பேன்” என்றான் உதயசந்திரன். கோபத்தில் பற்கள் நெறி பட்டன. 

“இந்நாட்டின் இளவரசன் அவன். வருங்காலச் சக்கர வர்த்தி. அவனை தாக்குவதென்றால்…” 

“ஒரு சக்கரவர்த்திக்கு இருக்க வேண்டிய பெருங் குணம் அவனிடம் இல்லையே. ஒரு சாதாரண ஊர்க்காவல் வீரனைப் போலல்லவா அன்று என்னை விரட்டியடித் தான்” என்று கூறியவாறே, சவுக்கடியினால் இன்னும் ஆறாமலிருந்த புண்ணைத் தடவினான், உதயசந்திரன். 

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென்று தெருவில், பல கூக்குரல்கள் கேட்டன. இருவரும் திடுக் கிட்டு எழுந்து, மாடியிலிருந்தவாறு தெருவை நோக்கி னார்கள். தெருவில் ஆண்களும், பெண்களும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். நாலாபுறமும் சிதறி ஓடிவந்தவர்களில் பலர், பௌத்த கடிகைக்குள்ளும் நுழைந் தார்கள். கூட்டத்துக்குப் பின்னால் ஐந்தாறு குதிரை வீரர் கள், ஓடியவர்களை சவுக்கால் அடித்து விரட்டிக்கொண்டு வந்தார்கள். பௌத்த கடிகையினுள் நுழைந்தவர்கள் போக, தெருவில் தொடர்ந்து ஓடிய மற்றவர்கள், அலறிக்கொண்டே அடுத்த தெருவில் மறைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு குதிரை வீரர்கள் பாய்ந்து சென்றார்கள். 

பௌத்த கடிகைக்குள் கூடிவிட்ட மக்கள், பயத்தினால் பிரமை பிடித்தவர்கள் போலிருந்தார்கள். குழந்தைகள், பயத் தினால் வீறிட்டலறிக் கொண்டிருந்தனர். கடிகைத் தலை வரிடம் ஒரு பெண், “குதிரை வீரர்கள் எங்கள் குடிசைகளை யெல்லாம் தீ வைத்துத் தெருவிலே விரட்டியடித்துவிட்டார் கள்” என்று கூறி அழுதாள். 

“எங்கள் சேரி முழுவதையுமே எரித்து விட்டார்களே, பாவிகள்” என்று ஒருவன் வடதிசையைச் சுட்டிக்காட்டிய படி விம்மியழுதான். அவன் காட்டிய திசையில் சற்று தூரத்தில், பெரும்புகை எழுந்து வானோக்கி உயர்ந்து கொண்டிருந்தது, நிலவொளியில் நன்கு தெரிந்தது. 

கடிகையின் பிரதான கட்டடத்திலும், சுற்றியிருந்த தோட்டங்களிலும், அதனுள் ஆங்காங்கே அமைந்திருந்த சிறு கட்டடங்களிலும் அந்த அப்பாவி மக்கள் தங்குவதற் கான ஏற்பாட்டைச் செய்வதில் முனைந்தார், கடிகைத் தலைவர். கடிகையில் உறங்கிக் கொண்டிருந்த மற்ற மாண வர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர். எல்லாரும் அகதி களுக்கான உதவிகளைச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இரவு முழுவதும் உதயசந்திரனும், ராஜன் நம்பூதிரியும் உறங்காமல் அந்த அகதிகளுக்கு உதவி செய்வதில் முனைந்திருந்தனர். 

”நாம் இந்நகருக்குள் வந்த நேரம் சரியில்லை போலிருக் கிறது,ராஜன்” என்றான், உதயசந்திரன். அப்போது அவர்கள் இருவரும் அகதிகளுக்காகப் படுக்கைகளை விரித்துக் கொண்டிருந்தார்கள். 

“பாவம் எப்படிப் பரிதவித்து நிற்கிறார்கள் பெண்கள், பீதியினால் பேசும் சக்தியைக்கூட இழந்து, பைத்தியங் களைப் போல் விழிக்கிறார்கள். ஒரு நாட்டின் தலைநகரில் அந்நாட்டின் மக்களே அகதிகளாக மாறுவது போன்ற கொடுமை சகிக்க முடியாதது” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“சக்கரவர்த்தி, போர்க்களத்தில் இருக்கிறார். மகாராணி ஆள்கிறாள். நீ சொன்னது போல், அவளுக்கு இப்போது தீட்டு நேரம் போலிருக்கிறது. புத்தி, சமநிலையில் இல்லாமல் தான் இப்படித் தன்னுடைய பிரஜைகளையே துன்புறுத்துகிறாளோ என்னவோ” என்றான், உதயசந்திரன். பிறகு, “இங்கே ஒவ்வொரு திங்களும், மூன்று நாட்களுக்கு இப்படித் தான் எதாவது சங்கடங்கள் வந்து சேருமோ என்னவோ?” என்று கூறி சிரித்தபோது, அந்தப் பக்கம் வந்த கடிகைத் தலைவர், அவனுடைய சிரிப்புக்குக் காரணம் கேட்டார். அவன் சொன்னதும், அவர் “ராஜன் சொன்ன தத்துவத் திலும் உண்மை இருக்கிறது. இதைப் பற்றி நம்முடைய கடிகையின் வைத்தியப் பகுதி மகா பண்டிதர் ஞானபாலர், அடிக்கடி கூறுவார்” என்று சொல்லிவிட்டு கட்டடத்தின் வேறு பகுதியை நோக்கி விரைந்தார். 


மறுநாட் காலையில் ராஜன் நம்பூதிரி, வடமொழிக் கடிகைக்குப் புறப்பட்டபோது உற்சாகமாயிருந்தான். பௌத்த கடிகையின் தலைவர் கொடுத்த அறிமுக ஓலை யைப் பெற்றுக்கொண்டு உதயசந்திரனுடன் வடமொழிக் கடிகைக்குப் புறப்பட்டான். கடிகையை நெருங்கியதும் அவனுக்கு உள்ளூர பயம் எழுந்தது. 

கடிகையில் சேர்ப்பார்களா? மொட்டைத் தலையில் இன்னும் மயிர் நன்றாக வளரவில்லை. உடல் உறுப்பில் அராபியர்கள் உண்டாக்கிவிட்ட ஊனம்… 

என்னை முதலில் பிராமணனாக ஏற்பார்களா…? ஓ… கடவுளே…. 

ராஜன் நம்பூதிரியின் உடல் பயத்தினால் சிலிர்த்தது. நடை தளர்ந்தது. அதைக் கவனித்த உதயசந்திரன், “என்ன ராஜன், கடிகையை நெருங்கும்போது தளர்வடைகிறாய்?” என்று கேட்டவாறு அவனுடைய தோளை அணைத்தவாறு நடந்தான். 

“உதயசந்திரா, என்னை முதலில் பிராமணனாகவாவது ஏற்பார்களா?”- ராஜன் நம்பூதிரி கேட்டான். 

“ஓ… இதற்கா இவ்வளவு சோர்ந்து போனாய்? பிராமணன் என்பவன் உள்ளத்தால்தான் பிராமணனா கிறான். உடலால் அல்ல. அந்தக் கடிகையில் உள்ளோர் குறுகிய மனத்தினராக இருக்க மாட்டார்கள். தைரியமாக வா”. 

புகழ்பெற்ற அந்த மாபெரும் கடிகையை நெருங்கியதும் அதன் கட்டடங்களின் அமைப்பையும், விசாலத்தையும் கண்டு பிரமித்துநின்றனர். கடிககையின் தலைவர், ஜேஷ்ட பத சோமயாஜி, அவர்களை வரவேற்றுப் பேசிக்கொண் டிருந்தார். ராஜன் நம்பூதிரியின் வரலாற்றைக் கேட்டு மனம் நெகிழ்ந்தார். அவனை அங்கு மாணவனாக ஏற்றுக் கொண்டு, அவன் இழந்திருந்த முப்பிரி நூலையும், சாஸ்திர முறைப்படி அவனுக்கு அணிவிக்க நல்ல நாள் கணித்தார். 

வடமொழிக் கடிகையில் ஸ்ரீராஜன் நம்பூதிரியை விட்டுவிட்டு உதயசந்திரன் பிரிந்தபோது, இருவரும் தினமும் மாலையில் கைலாசநாதர் கோயில் வாசலில் சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டனர். 

கடிகையை விட்டுப்புறப்பட்டு, கைலாசநாதர் கோயி லின் வடக்கு மாடவீதி வழியாக உதயசந்திரன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இரு புரவிகள் கடும் வேகத்தில் வந்ததைக் கண்டு வீதியை விட்டு விலகி ஒதுங்கி நின்றான். குதிரைகள் அவனைக் கடந்து சென்றபோது, வெள்ளைக் குதிரையிலிருந்த சித்திரமாயனின் பார்வை, உதயசந்திரன் மீது விழவே, சட்டென்று குதிரையை நிறுத்தினான். கடிவாளத்தின் வலி பொறுக்காமல் குதிரை கனைத்தவாறே முன்னங்கால்களைத் தூக்கியவாறு சில விநாடிகள் நின்றது. உதயசந்திரனும் வியப்புடன் இளவரசனை ஏறிட்டுப் பார்த்தான். மறுகணம் குதிரை பாய்ந்து சென்று மறைந்தது. 

தன்னை அடையாளம் தெரிந்து கொண்டுதான் இளவரசன், குதிரையை நிறுத்தினான் என்பதைப் புரிந்து கொண்ட உதயசந்திரன், தன்னை அவன் துன்புறுத்தியதற் காக இரக்கம் கொண்டு, ஏதாவது சமாதானமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்வான் என்று எதிர்பார்த்து ஏமாந்தான். 

திமிர்… அதிகாரத் திமிர்… சந்தர்ப்பம் கிடைத்தால் உன்னைப் பந்தாடி விடுவேன்… ஐயோ பாவம், பல்லவ சாம்ராஜ்யம், இவனைச் சக்கரவர்த்தியாக ஏற்க வேண்டிய தலைவிதி… 

உதயசந்திரன், கிழக்கு மாடவீதிக்கு வந்தபோது, கோயி லுக்குள் செல்லலாமா என்று நினைத்தான். “ராஜன் வரும் போது அவனுடன் போய்க் கொள்ளலாம்” என்று முனகிய வாறு, சந்நிதிக்கு எதிரே இருந்த தெருவில் நுழைந்தான். அப்போது எதிரே ஒரு இரதம், உதயசந்திரனைக் கடந்த போது, அதில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கம்பீர மாக அமர்ந்திருந்ததையும், அருகே பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் இருந்ததையும் கண்டான். வீதியில் சென்று கொண்டிருந்த மக்கள் மிக்க மரியாதையுடன் விலகி நின்றதைக் கவனித்தான். அருகே நின்றுகொண்டிருந்த ஒரு வயோதிகரை நெருங்கி, “இரதத்தில் போகிறவர் யார்?” என்று கேட்டான். 

அந்த வயோதிகர், அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “இவர்தாம் இரணியவர்மர். பக்கத்திலிருப்பவன் அவருடைய மகன் பல்லவமல்லன். ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர். தென் மண்டலத்து ராஜா இவர்தாம். இப்போது, இங்கே கோட்டைத் தளபதியாக இருக்கிறார்” என்றார். 

இரணியவர்மரின் தோற்றம் அவனைக் கவர்ந்தது. அவருடைய பரந்த முகமும், முறுக்கேறிய மீசையும், ஆஜானுபாகுவான உடலமைப்பும், கண்களில் தெரிந்த வீரக்களையும் அவனை ஆட்கொண்டன. அவருக்கு அருகே அமர்ந்து, துறுதுறுவென்று நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் அழகிய உருவம், அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

திமிர் பிடித்த இளவரசனும் ராஜ வமிசம்தான்; இவர் களும் ராஜவமிசம் தான்…அவன் மூஞ்சியும், பார்வையும் கொடிய பாம்பு மாதிரி. எங்கோ காட்டுமிராண்டியின் குகைக்குள் பிறக்க வேண்டியவன், அரண்மனையில் வந்து பிறந்து தொலைத்துவிட்டான். கடவுளும் சமயத்தில் இப்படி மறதியாக உயிர்களை இடம் மாற்றி வைத்து விடுவார் போலிருக்கிறது… 

கடவுளின் படைப்புத் தொழிலை ஆராய்ந்தவாறே பௌத்த கடிகையை நோக்கி நடக்கத் தொடங்கினான். கடிகையை அடைந்தபோது, அவனுக்காக ஒரு செய்தி காத்தி ருந்தது. டெங்லீ என்ற ஒரு வயோதிகச் சீனர், அவனைத் தேடி வந்ததாகவும், தம்முடைய இருப்பிடத்தைத் தெரிவித் திருப்பதாகவும் கடிகையின் காவலாளி கூறியதைக் கேட்டு மிகுந்த உற்சாகமடைந்தான். 


இரணியவர்மரின் இரதம், முதன் மந்திரியின் மாளிகை யின் முன் நின்றதும், முதன் மந்திரி, அவரை எதிர்கொண்டு வரவேற்று, மாளிகையினுள் அழைத்துச் சென்றார். இரணியவர்மர் கோபத்தால் குமுறிக் கொண்டிருந்தார். 

“எல்லாம் கேள்விப்பட்டேன்” என்றார் முதன் மந்திரி. 

“நல்ல தந்திரம் செய்திருக்கிறார்கள். நேற்று மகாராணி யைச் சந்தித்தபோது எவ்வளவு திமிராகப் பேசினாள் தெரியுமா?” என்று கூறி, பற்களைக் கடித்தார். 

“பல்லவ நாட்டின் மகாராணியல்லவா!” என்றார் தரணிகொண்டபோசர். 

“மகாராணி… பெரிய மகாராணி” என்று கைகள் இரண்டையும் விரித்துக் காட்டி இரைந்தார், இரணியவர்மர். கோபமும் வெறுப்பும் அவருடைய குரலில் நிரம்பி யிருந்தன. பிறகு சொன்னார்: “அவள் என்ன சொன்னாள் தெரியுமா? ‘என்னுடைய கட்டளைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் கோட்டைத் தளபதி பதவியிலிருந்து விலகிக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை’ என்றாள். நான் விலகிக் கொள்ளவேண்டுமாம். சக்கரவர்த்தியல்லவா என்னைக் கோட்டைத் தளபதியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். 

“கடைசியில் பாவம் நகரசுத்திப் பணியாளர்களைக் காப்பாற்ற முடியவில்லையே?” என்றார் முதன் மந்திரி. 

“கோட்டைத் தளபதி என்ற முறையில் நகரத்தின் பிரஜைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது. ஆகையால் காஞ்சியில் எந்தச் சமூகத்தினருக்காவது கேடு விளையும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்” என்றார், இரணியவர்மர். 

“ஓ…. அதனால்தான் உங்களைக் கோட்டைத் தளபதி பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டார்களோ?” என்றார், முதன் மந்திரி. 

“உங்களுக்கும் செய்தி எட்டிவிட்டதா?” 

“அரண்மனை உத்தரவை நேற்று இரவு உங்களிடம் கொண்டுவந்து கொடுத்த அதிகாரிதான் அந்த உத்தரவைப் பற்றிய செய்தியை எனக்கும் தெரிவித்துவிட்டுச்சென்றான்.” 

“இப்போது கோட்டைத் தளபதியாக யார் நியமிக்கப் பட்டிருக்கிறார்?” 

“சுந்தரவர்மர்” 

“ஹீம்…” என்று உறுமினார், இரணியவர்மர். “சக்கர வர்த்தி நியமித்த என்னை நீக்க இவளுக்கு என்ன துணிச் சல்?’ என்றார். 


“நேற்று நடு ஜாமத்துக்குப் பிறகு, கோட்டை வீரர் களைக் கொண்டேநகரசுத்திப்பணியாளர்களின் சேரியைத் தீக்கிரையாக்கியிருக்கிறார்கள்” என்றார் முதன் மந்திரி. 

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த பல்லவ மல்லன், “கொஞ்சப் பேர் எங்கள் மாளிகையில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்” என்றான். 

“இன்று அதிகாலையிலேயே அவர்கள் அனைவரை யும் குடியேற்ற ஏரிக்கரைக்குப் பக்கத்திலுள்ள நிலத்தில் ஏற்பாடு செய்துவிட்டேன்” என்றார் முதன்மந்திரி. 

“நான் என் படையை அழைத்துக் கொண்டு என்னு டைய மண்டலத்துக்குப் போய்விடலாம் என்றிருக்கிறேன். இந்தத் தான்தோன்றி ராணியின் கட்டளைகளுக்குப் பணிந்துகொண்டு என்னால் இங்கு இருக்கமுடியாது. இவளுக்கு இவ்வளவு திமிரா?”-கோபத்தில் குமுறினார் இரணியவர்மர். “இளவரசனுமல்லவா திமிர் பிடித்து அலைகிறான்” என்றார். 

“கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இப்போது நாட்டில் ஆங்காங்கே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. வல்லம் கிராமத்தில் மகாராணியின் உத்தரவை அறிவிக்கச் சென்ற அதிகாரியை அடித்து, முகத்தில் கரும்புள்ளி குத்தி அனுப்பியிருக்கிறார்கள். இதெல்லாம் நல்லதற்கல்ல. நாட்டின் ஆட்சியைப் பலவீனப்படுத்திவிடும்” என்றார் மந்திரி.

“இந்த ராணியின் மூஞ்சியிலும் கரும்புள்ளிகளை, காஞ்சி மக்கள் குத்தினால் நன்றாயிருக்கும்.” 

“மக்களே தண்டல்காரராக மாறுவது ஆபத்து. சக்கர வர்த்தி இல்லை என்ற தைரியத்தில்தானே சோழ நாட்டைச் சேர்ந்த ஆலிநாட்டுக் குறுநில மன்னன், நம்முடைய நாகப் பட்டினத்துப் புத்த விஹாரத்தைக் கொள்யைடித் திருக்கிறான்.” 

“பௌத்த விஹாரந்தானே? போகட்டும்” என்றார் இரணியவர்மர், அலட்சியமாக. 

“இன்று பௌத்த விஹாரத்துக்கு ஒரு வைணவனால் நேர்ந்த கதி, நாளை நம்முடைய கைலாசநாதர் கோயிலுக் கும், வடமொழிக் கடிகைக்கும் வேறு ஒரு முடவெறியனால் நேரலாமே?” என்றார் முதன்மந்திரி. 

இரணியவர்மர் மௌனமாயிருந்தார். முதன்மந்திரி தொடர்ந்து சொன்னார்: “சக்கரவர்த்தி இல்லாதவேளையில் நீங்கள் தலைநகரைவிட்டுச் செல்வது நல்லதல்ல. சக்கர வர்த்தி உங்களைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லாத தற்கு காரணமே நீங்கள் காஞ்சியில் இருக்க வேண்டும் என்பதால்தான். இவர்கள் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இப்போதுதான் நாம் விழிப்புடனிருக்க வேண்டும். கோபத்தில் நிதானம் இழந்துவிடக்கூடாது. நீங்களும் போய் விட்டால், மகாராணிக்குத் தெம்பு ஏற்பட்டுவிடும்” என்றார். 

இரணியவர்மரும் பல்லவ ராஜவமிசத்தைச் சேர்ந்தவர் தாம். ஆதியில், சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னர் காலத்திலிருந்துதான் பல்லவநாடு, ஒரு சாம்ராஜ்யமாக மாறுவதற்கான முயற்சியில் இறங்கியது. சிம்ம விஷ்ணு வின் மகன்தாம் புகழ்பெற்ற மகேந்திரவர்மன். அந்த சிம்ம விஷ்ணுவுக்கு பீமவர்மன் என்று ஒரு சகோதரர் இருந்தார். அவருடைய பேரனுடைய பேரன்தாம் இந்த இரணிய வர்மர். 

இவர் பல்லவ சாம்ராஜ்யத்தின் தென்மண்டலத்தில் குறுநில மன்னராயிருந்தார். குறுநில மன்னர்கள், பல்லவச் சக்ரவர்த்தியைத் தவிர வேறு யாருக்கும் பணியமாட்டார் கள். அதனால்தான் மகாராணியின் கட்டளைகள், இரணிய வர்மருக்குக் கோபத்தை மூட்டின. 

கடைசியில், இரணியவர்மர் ஓரளவு மன அமைதி யடைந்து, முதன்மந்திரியின் யோசனையை ஏற்றுக் கொண்டார். உள்ளூரக் கோபம் புகைந்து கொண்டிருந்தது. 

11. ராஜ நாகம் 

இளவரசன் சித்திரமாயன், தீவிரச் சிந்தனையில் ஆழ்ந் திருந்தான். அருகில் அவனுடைய அந்தரங்க மெய்க்காப் பாளனான வாணராயன் நின்று கொண்டிருந்தான். அவனு டைய முகத்திலும் கவலை குடிகொண்டிருந்தது. 

“தரணி கொண்டாருடைய மாளிகைக்குள் போகக் கூடவா உன்னால் முடியவில்லை?” என்று சித்திரமாயன், கோபத்தில் இரைந்தான். 

“அவருடைய மாளிகையில் இப்போது பாதுகாப்பு அதிகமாகி விட்டது. மாளிகைத் தோட்டத்துக்குள்ளிருக்கும் சிறையில்தான் அவனை வைத்திருக்கிறார்கள்” என்றான், வாணராயன். 

“அறங்கூர் அவையத்துக்கு அவனை அனுப்புவதாக இருந்தாரே, ஏன் அனுப்பவில்லையாம்?” 

“முதன் மந்திரி என்ன தந்திரம் பண்ணுகிறார் என்று தெரியவில்லை, இளவரசே.” 

“அவனிடமிருந்து இதற்குள் மந்திரி, உண்மையைக் கறந்திருப்பாரே. அவன் ஒருவன்தான் சாட்சி. உனக்கு அது புரிகிறதல்லவா?- சித்திரமாயனின் கேள்வியில் தொனித்த கோபம், வாணராயனை நடுங்க வைத்தது. 

“முதன்மந்திரியிடமல்லவா அகப்பட்டுக் கொண் டான்” என்றான் வாணராயன், கவலையுடன். 

“எல்லாம் உன்னுடைய முட்டாள்தனத்தினால் விளைந்ததுதான். அந்தப்பெண்ணின் உடலை அந்த மடை யனிடம் ஒப்படைத்ததுதான் தவறு. அவன் பிடிபட்ட போது குறுவாளை எறிந்து அவனையும் கொன்றுவிட்டு நீ தப்பி வந்திருக்கலாம். நீயும் ஒரு கோழை மாதிரி அவன் பிடிபட்டதும், ஓடி வந்திருக்கிறாய்” என்று எரிந்து விழுந் தான், சித்திரமாயன். 

வாணராயன், தலையைக் குனிந்தபடி நின்றான். “இலங்கைத் தீவிலிருந்து வந்திருக்கும் வீரனைக் கூட்டிவரச் சொன்னேனே ?” என்றான், சித்திரமாயன். 

“அவன் வருகிற நேரந்தான். அதோ அவனை அழைத்து வரச் சென்றவனே வந்துவிட்டான்.” 

அப்போது உள்ளே வந்த ஒரு வீரன், இலங்கை வீரனை அழைத்து வந்திருப்பதாகக் கூறினான். இலங்கை வீரனை உள்ளே அழைத்து வருமாறு உத்தரவிட்டான், சித்திரமாயன். பிறகு, வாணராயனிடம், “அவனோடு பேசும்போதுநீ வெளியே இரு. நீயும் உடனிருந்தால்,அவன் மனம்விட்டுப் பேசக் கூசுவான். நான் கூப்பிட்ட பிறகு நீ உள்ளேவா” என்றான். 

வாணராயன் விரைந்து வெளியேறி, வாசலில் நின்று கொண்டான். சற்று நேரத்தில் இலங்கை வீரனை அழைத்துக் கொண்டு வந்த காவல்வீரன், அவனை இளவரசனிடம் விட்டுவிட்டு வெளியேறினான். 

அந்த இலங்கை வீரன், உதயசந்திரனுடன் கப்பலில் வந்தானே கொடுக்கு மீசைக்காரன்; அதே தேவசோமா தான். அவனுக்கு ஆசனம் கொடுத்து உபசரித்தான், சித்திர மாயன். தேவசோமா, சுற்று முற்றும் வியப்புடன் பார்த்தான். பல்லவ இளவரசன் தன்னை ஒரு பொருட்டாக மதித்து அரண்மனைக்கு அழைத்தது, அவனுக்குப் பிரமிப்பா யிருந்தது. 

“தேவசோமா, இன்று அந்நிய நாட்டுப் போட்டி வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்திருந்தேன். போட்டிக் காக நீங்கள் ஒத்திகை பழகுவதைப் பார்க்கத்தான் வந்திருந் தேன்” என்று பேச்சை ஆரம்பித்தான் சித்திரமாயன். 

“தங்களைப் பார்த்தேன், இளவரசே. தாங்கள் வெகு நேரம் இலங்கை வில்லாளியின் திறத்தைக் கண்டு வியந்து நின்றதையும் கவனித்தேன்” என்றன், தேவசோமா. 

“ஓ….ஆமாம். அந்த வில்லாளி மகா சூரனாயிருக் கிறானே ! அவனுடைய வில் திறமையைக் கண்டு பிரமித் துப்போனேன். அவன் பெயர் என்ன?” 

“சுகததாசா. இலங்கைத் தீவிலேயே, ஏன் உலகத்தி லேயே, இவனை மிஞ்சிய வில்லாளி கிடையாது, இளவ ரசே” என்று பெருமையாகக் கூறினான் தேவசோமா. 

“நான் கண்டேனே ! அற்புதம். தூரத்தில் மூன்று மரங் களுக்கப்பால், அம்மரங்களின் கிளைகளினூடே தெரிந்த இலக்கைக் குறி வைத்து அவன் அம்பெய்ததைப் பார்த் தேன், ஓ….! மூன்று மரங்களிலிருந்தும் ஒரு இலையைக் கூடச் சேதப்படுத்தாமல் அம்பு, கிளைகளினூடே புகுந்து, மூன்று மரங்களையும் கடந்து, இலக்கைத் தாக்கியதே! அற்புதமான திறமை” என்று புகழ்ந்தான், சித்திரமாயன். பிறகு சொன்னான் : “பல்லவ சாம்ராஜ்யமும், இலங்கை அரசும் நெருங் கிய நட்புறவு கொண்டவை. என்னுடைய பாட்டனாருக்கு முப்பாட்டனாரான நரசிம்மவர்மபல்லவர் காலத்திலிருந்தே நட்பும், உதவியும் தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கின்றன. நரசிம்மவர்மர் காலத்தில் இலங்கை அரசின் உதவிக்காக எங்கள் கடற்படையே சென்றது.” 

“நானும் இதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இளவ ரசே. இலங்கைத் தீவு, இந்தத் தமிழகத்திற்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறது.” 

“இப்போது எனக்கு ஓர் உதவி தேவைப்படுகிறது. அதாவது, பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு பெரிய உதவியை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன்” என்று சித்திரமாயன் கூறியதும், தேவசோமா உணர்ச்சி வசப்பட்டவனாய், “இளவரசே,தங்களுக்காக என் உயிரை வேண்டுமானாலும் பணயம் வைக்கிறேன்” என்றான். 

“நான் கேட்கும் இந்த உதவியை மட்டும் நீ நிறைவேற்றி வைத்தால், இந்த நாடு உன்னுடைய உதவியை ஒரு நாளும் மறக்காது, தேவசோமா. இலங்கையிலிருந்து வந்திருக்கும் வீரர்களுக்கு நீதானே தலைவன்?’ 

“மூன்று பேர்கள் மட்டுமே வந்திருக்கிறோம். இலங்கை மன்னர் என் தலைமையில்தான் அனுப்பியிருக்கிறார்.” 

“சுகததாசா மூலமாகத்தான் இந்த உதவியை நிறைவேற்றி வைக்க முடியும். தலைவன் என்பதால் நீதான் அவனை இதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும்.” 

“தங்கள் கடமையை நிறைவேற்றி வைக்க வேண் டியது எங்கள் கடமை. இளவரசே” என்றான், தேவசோமா. 

“என்னுடைய விருப்பம் நிறைவேறினால் உங்கள் எல்லாருக்கும் என்னுடைய உதவி கிட்டும். நீங்கள் இலங்கைக்குத் திரும்பும்போது, மிகுந்த செல்வங்களோடு செல்ல வாய்ப்பு உண்டு.’ 

‘இளவரசே, தங்களுடைய வெகுமதிகளை விடத் தங்களுடைய அன்பைத்தான் நான் பெரிதென மதிக்கிறேன்.’ 

“நீ கொஞ்சம் வெளியே போய் இரு. என்னுடைய மெய்க்காப்பாளன் மற்ற விஷயங்களை உனக்குத் தெரியப் படுத்துவான்” என்று கூறிய சித்திரமாயன், கையைத் தட்டினான். வெளியே காத்து நின்ற வாணராயன், உள்ளே வந்ததும் தேவசோமா வெளியே சென்றான். 


மாலையில் பௌத்த கடிகையிலிருந்து வெளியே புறப்பட்ட உதயசந்திரன் மிகுந்த உற்சாகத்தோடிருந்தான். அந்த நேரத்தில் ராஜன் நம்பூதிரியைச் சந்திப்பதாகச் சொன்னதை மறந்தே போனான். அவர்கள் இருவரும் முதன் முதலாக கைலாசநாதர் கோயிலுக்குள் சென்று வருவது என்று முடிவு செய்திருந்தார்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, டெங்லீதங்கியிருந்த சீனத் தோப்பை விசாரித் துக் கொண்டு சென்றான். 

காஞ்சிக் கோட்டைக்கு வெளியே தெற்கு மதிலை அடுத்துப் பல மரங்கள் அடர்ந்த ஒரு பெரிய தோப்பு இருந்தது. அதில் சீனக் குடியிருப்பு ஒன்று அமைந்திருந்தது. வாணிபத்துக்காகக் காஞ்சிக்கு அடிக்கடி வரும் சீன வணிகர்கள் சிலர், அந்தத் தோப்பில் ஒரு சிறு குடியிருப்பை அமைத்திருந்தார்கள். மொத்தம் இருபது வீடுகளிருந்தன. அவற்றில் டெங்லீயின் வீடும் ஒன்று. இதைப் போல வேறு சில குடியிருப்புக்களும் கோட்டைக்கு வெளியே அமைந் திருந்தன. காஞ்சியின் நெருக்கடியையும், கூட்டத்தையும் இரைச்சலையும் விரும்பாத செல்வந்தர்கள், கோட்டைக்கு வெளியே தோப்புகளில் மாளிகைகளைக் கட்டியிருந்தனர். 

காஞ்சிக் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வந்த உதயசந்திரன், சற்று தயங்கி நின்றான். இனி அவன் கோட்டைக்குள் மறுநாள் காலையில்தான் போக முடியும். அஸ்தமனத்துக்குப் பிறகு கோட்டை வாயிலையும் மூடி விடுவார்கள். அகழிப் பாலத்தையும் உயரே தூக்கி விடு வார்கள். அன்று இரவு, கோட்டைக்கு வெளியே இருந்த பௌத்த விஹாரத்தில் தங்குவது என்று முடிவு செய்தவாறு சீனத் தோப்பை நோக்கி நடக்கத் தொடங்கினான். 

வழியில் ஒரு பெரிய தென்னந்தோப்பு குறுக்கிட்டது. அதன் வழியாகச் சென்றபோது, தோப்பை அடுத்திருந்த நந்தவனத்தினுள் ஒரு சிறு கோயில் இருந்ததைப் பார்த்தான். 

இந்த இடத்தில் ஏன் கோயில்? காடு மாதிரி இருக்கும் இந்த இடத்தில் யார் வந்து தரிசனம் செய்யப் போகிறார்கள்… என்று சிந்தித்தவாறே நடந்தான். 

டெங்லீயின் வீட்டை அடைந்த போது உதயசந்திரனை முதலில் வரவேற்றது, மருக்கொழுந்தின் வாசனைதான். வீட்டுத் திண்ணையில் மருக்கொழுந்துச் செடிகள் வளர்ந்திருந்த மண் பானைகளிருந்தன. செடிகளின் அடிமண்ணில் தெரிந்த ஈரத்திலிருந்து லீனா சற்று நேரத்துக்கு முன்புதான் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றியிருக்கிறாள் என்று நினைத்த படியே வாசற்படியைக் கடந்து உட்பக்கம் எட்டிப் பார்த் தான். உள் அறையில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து ஏதோ ஓர் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த டெங்லீ, திரும்பி னார். உதயசந்திரனைக் கண்டதும் உற்சாகத்தில் உரத்த குர லில் வரவேற்றார். அவருடைய குரலைக் கேட்டுவீட்டினுள் ளிருந்து லீனா ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து மற்றப் பெண்களும் முன் அறைக்கு விரைந்து வந்தனர். 

லீனா கவலையிலிருந்து சற்று தெளிவடைந்திருந்தாள். உதயசந்திரனைக் கண்டதும் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சி அவனுக்கு உற்சாகமூட்டியது. சற்று நேரம் டெங்லீ யுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் பேசிக் கொண்டிருந் தான். பிறகு வீட்டுத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டுவதாக அவனை அழைத்துக் கொண்டு லீனா தோட்டத்துக்குள் சென்றாள். போகும்போதே அவனுக்காக மருக்கொழுந் தைச்சரமாகக் கட்டிப்பந்துபோல் சுருட்டி வைத்திருந்ததைக் கொடுத்தாள். அதை வாங்கி முகர்ந்து ரசித்துக் கொண்டே அவளைத் தொடர்ந்து தோட்டத்துக்குள் நடந்தான். 

இப்போதுலீனாவிடம் கவர்ச்சி சற்று கூடியிருப்பதாக உணர்ந்தான். கண்வலி வியாதியுள்ள கண்களைப் போல் இடுங்கியிருந்த அவளுடைய கண்கள்கூட அவனுக்கு அப்போது அழகாகத் தோன்றின. அவள் கண்களிலிருந்த குழந்தைத்தனம், அவன் மனத்துக்கு இதமாயிருந்தது. 

அவள் முன்னே உற்சாகமாக நடந்து சென்றபோது, அவளுடைய நடையழகும், பின்னழகும் அவன் மனத்தில் குறுகுறுப்பை உண்டுபண்ணின. தோட்டத்தின் எல்லாப் பகுதிகளையும் காட்டினாள். அங்கிருந்த பழமரங்கள், தென்னந்தோப்பு, மலர் செடிகள் எல்லாவற்றையும் காட்டி அவள் வர்ணித்துக் கொண்டிருந்தபோது, ‘அத்தனை அழகும் லீனாவிடந்தானிருக்கிறதே’ என்று அவனுடைய மனம் சொல்லிற்று. அவனுடைய பார்வை தன்மீது ஆழப் பதிந்ததை உணர்ந்த லீனாவின் முகம் சட்டென்று நாணத் தால் சிவந்தது. 

வெட்கப்பட்டபோது அவளுடையகண்கள் இன்னும் சுருங்கியது வேடிக்கையாகவும் இருந்தது, கவர்ச்சியாகவும் இருந்தது. கப்பலிலோ, மாமல்லபுரத்திலோ அவளை அவன் நன்கு கவனிக்கவில்லை. அப்போதிருந்த சூழ்நிலை யும், அவளை அவன் கூர்ந்து கவனிக்கும்படியாகவும் இல்லை. ஆனால் இப்போது சாவதானமாகக் காண நேர்ந்த போது தான் அவளுடைய அழகின் தன்மை முழுவதையும் உணரத்தொடங்கினான். 

தினமும் அவனுடைய பார்வையில் பட்டுக் கொண் டிருந்த தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இல்லாத ஒருவிதக் கவர்ச்சி, சீன நாட்டு லீனாவுக்கு இருப்பதாக எண்ணினான். தினமும் பார்த்து அலுத்துப்போன தமிழ்ப் பெண்களின் சாடைகளிலிருந்து வேறுபட்டு அமைந்திருந்த லீனாவின் அழகு, அவனை மிகவும் கவர்ந்தது. அவள் இடுப்புக்கு மேல் சட்டை அணிந்திருந்ததே கவர்ச்சியாயிருந்தது. 

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்களும் பெண் களும் சட்டை அணிவதில்லை. ஒரு துண்டைத்தான் மார்பில் போர்த்தியிருந்தார்கள். செல்வந்தர்கள், மார்பில் ஆபரணங்கள் அணிந்திருந்தார்கள். பெண்கள் மார்பைக் கச்சையால் கட்டியிருந்தார்கள். பாமரப் பெண்கள், கச்சை கூட அணியாமல் திறந்த மார்புடனிருந்தனர். தமிழ் நாட்டில் குடிபுகுந்திருந்த யவனர்களும், சீனர்களும் மட்டுமே சட்டை அணிந்திருந்தார்கள். அந்தப் பெண்கள் சட்டையணிந்து திரிந்ததைக் கண்டு தமிழர்கள் வியந்தார்கள். ‘மெய்ப்பை புக்கும் யவனர்’ என்றும், ‘மெய் மூடும் சீனர்’ என்றும் அவர் களை அழைத்தனர். பிற்காலத்தில் வெளிநாட்டு முகமதியப் பெண்களும் ஆண்களும் சட்டையணிந்திருந்தார்கள். அவர்களை, ‘படம்புகு மிலேச்சர்’ என்று தமிழர் கூறி வந்தனர். 

லீனாவின் சிரிப்பும், சிரித்தபோதுகண்கள் இடுங்கி ஒரு குழந்தையைப் போல் மலர்ந்த முகமும், உயரத்துக்கேற்ற எடுப்பான கவர்ச்சிமிக்க அங்கங்களும், தமிழைக் கிளி கொஞ்சுவதுபோல் விசித்திரமாக உச்சரித்த விதமும் உதய சந்திரனின் மனத்தை ஆட்கொண்டன. 

“இந்த தோட்டத்தில், ஒரு குழி அளவுக்கு மருக்கொழுந் தைப் பயிரிடப் போகிறேன்” என்றாள் லீனா. 

“மருக்கொழுந்து வாணிபத்தில் இறங்கிவிடப் போகிறாயா?” 

“இங்கே மருக்கொழுந்துக்கு நல்ல விலை இருக்கிறதாமே!” 

“செல்வம் சேர்க்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டதோ?” 

“எனக்கும் பொழுது போக வேண்டாமா ? தந்தையை இழந்த துக்கத்தை இந்தச் செடிகளோடும், கொடிகளோடும் பழகித்தான் மறக்க வேண்டும்” என்றாள், லீனா. அவளு டையகண்கள் கலங்கின. 

அவளுக்கு நேர்ந்த துன்பத்தைப் பற்றிய நினைவு, அப்போதையச் சூழ்நிலையைப் பாதித்துக் கொண்டிருந் தது. உதயசந்திரன் சிந்தையைத் திருப்ப முயன்றான். 

“நான் பௌத்த கடிகையில் பணியாற்றச் சேர்ந்து விட்டேன்” என்றான். 

“ஓ… உங்களுக்கு அந்தப் பணி பிடித்திருக்கிறதா?” 

“ஆமாம். கடிகையில் தங்கியிருக்கும் மாணவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு என்னுடையது. மாணவர் களோடு பழகுவது உற்சாகமாயிருக்கிறது.” 

“உங்கள் கடிகையிலிருந்து தினமும் நீங்கள் வெளியே வர முடியுமா? அனுமதி தருவார்களா?” 

“ஏன்?” 

“சும்மா கேட்டேன்” என்றாள் லீனா. அருகிலிருந்த ஒரு செடியை அவளுடைய விரல்கள் வருடிக் கொண்டிருந்தன. 

“கடிகையில் என்னுடைய பணிக்குக் குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. எப்போது வேண்டு மானாலும் நான் வெளியே வரலாம் போகலாம்” என்று கூறி அவளை உற்றுப்பார்த்தான். அவனுடைய பதிலில் அவள் மகிழ்ச்சியடைந்ததைப் புரிந்து கொண்டான். 

“போட்டி நடைபெறப் போகிறதே. பார்க்க வருவீர்களா?” லீனா ஆவலுடன் கேட்டாள். 

“கட்டாயம் வருவேன்.” 

“நாங்களும் வருவோம்” என்று உவகையுடன் கூறியவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். 

அப்போது அருகே இருந்த செடிகளுக்கிடையில் சல சலப்புக் கேட்டதைக் கவனித்த லீனா, தலையைத் திருப்பிப் பார்த்தாள். சட்டென்று உதயசந்திரனை அப்பால் தள்ளி னாள். பின்னால் நகர்ந்த உதயசந்திரன் திகைப்புற்றான். லீனா இடப்புறத்தில் சுட்டிக்காட்டினாள். சற்றுத்தள்ளி ஒரு பெரிய நாகம் ஆள் உயரத்திற்கு எழும்பிப் படமெடுத்து நின்றதைக் கண்ட உதயசந்திரன் திடுக்கிட்டான். நாகம், சற்றும் சலனமில்லாமல் கம்பீரமாக அவர்களை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. 

உதயசந்திரன் தலையைத் திருப்பிச் சுற்றுமுற்றும் தரையை நோக்கினான். பிச்சிப்பூச் செடியினருகில் கிடந்த கல் ஒன்றைச் சட்டென்று குனிந்து எடுத்தான். அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட லீனா அவன் கையைப் பற்றிக் கொண்டாள். 

“ஐயோ, வேண்டாம். அசையாமல் அப்படியே இருங் கள். அது தானாகப் போய்விடும். நாகத்தைக் கொல்லக் கூடாது என்பார்கள்” என்றாள் லீனா. 

“இது சாதாரண நாகமல்ல. ராஜநாகம். கையை விடு. ஒரே எறியில் அதனுடைய தலையைச் சிதறடித்து விடுகிறேன்” என்றான் உதயசந்திரன். 

“குறி தவறிவிட்டால் நம்மீது பாய்ந்துவிடும். நாம் தப்பமுடியாது. அசையாமலிருங்கள்.” 

“குறி தவறாது. ஒரே எறி. கையை விடு.” 

“வேண்டாம் பயமாயிருக்கிறது. அதோ, தலையைக் கீழே போடுகிறது. போய்விடும்.” 

எழும்பி நின்ற நாகம், தலையைச் சுருக்கியவாறே மெல்லக் கீழே சரிந்து, தரையில் ஊர்ந்து புதருக்குள் மறைந்து விட்டது. லீனா பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந் தாள். அவனுடைய கையை இறுகப் பற்றிக்கொண்டாள். 

“போக விட்டுவிட்டாயே. கொன்றிருக்கலாம். இது ராஜ நாகம். பொல்லாதது” என்றான் உதயசந்திரன். பிறகு, “பயந்துவிட்டாயா?” என்றான். 

“இவ்வளவு பெரிய நாகத்தைப் பார்த்ததே இல்லை. ராஜநாகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

“மலைகள், காடுகளில் தாம் இது இருக்கும். மனித சஞ்சாரம் உள்ள இந்த இடத்திற்கு எப்படியோ வழி தவறி வந்திருக்கிறது. இந்த ராஜநாகம் ஒரு நேரத்தில் வெளியிடும் விஷம், ஏழு யானைகளைக் கொன்றுவிடுமாம். இது, நல்ல பாம்புகளையும் மற்றப் பாம்புகளையும் மட்டுமே ஆகார மாகக் கொள்வதால் தான் இதற்கு ராஜநாகம் என்ற பெயர் வந்தது. மிகவும் கொடியது.” 

“ஓ…! அது படமெடுத்து ஒரு ஆள் உயரத்திற்கு நின்ற போது எவ்வளவு அழகாயிருந்தது! என்ன கம்பீரம். அது நம்மை உறுத்துப் பார்த்தது தான் பயங்கரமாயிருந்தது” என்றாள் லீனா. 

“நாகத்திற்கு இமைகள் இல்லை. அதனால்தான் அதனு டைய பார்வை கொடூரமாயிருக்கிறது. பாம்பு, முயல் போன்ற பிராணிகள் அந்தப் பார்வையின் கொடுரத்தைத் தாங்க முடியாமல் மயங்கிச் செயலிழந்து விடும். இந்த ராஜ நாகத்தின் கண்களைக் கண்டதும் எனக்கு இந்நாட்டின் இளவரசனின் நினைவுதான் வந்தது. இதைத் தப்பவிட்டு விட்டாயே. திமிர் பிடித்த ராஜகுமாரன் மீது எறிவதாக நினைத்து இந்த ராஜநாகத்தையாவது கொன்று போட்டிருப் பேன்” என்றான் உதயசந்திரன். 

“இளவரசன் மீது இவ்வளவு கோபமா?” 

“இந்த மாதிரிக் கொடிய பாம்பாகப் பிறந்து காடுகளில் திரிய வேண்டியவன், தவறிப்போய் அரண்மனையில் பிறந்து விட்டான்.” 

“இவர்தாம் இந்நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூடப் போகிறவர். மகாவிஷ்ணுதான் மன்னராகப் பிறப்பார்கள்.’ 

“மகாவிஷ்ணு தனக்குப் பதிலாக நரமாமிசம் தின்னும் கொடிய ஒரு ராட்சசனை இந்நாட்டில் இளவரசனாகப் பிறக்கும்படி அனுப்பிவிட்டார். இந்த நாட்டின் மீது விஷ்ணு வுக்கு என்ன கோபமோ.” 

இதைக் கேட்டுலீனா சிரித்தாள். புதருக்குள் ராஜநாகம் ஊர்ந்து சென்ற சலசலப்புக் கேட்டது. 

“தோட்டத்துக்குள் வரும்போது ஜாக்கிரதையாக வரவேண்டும். இது கொடிய நாகம். சாதாரண நல்ல பாம்பு மனிதனைக் கண்ட உடன் பயந்து ஓடும். ராஜநாகம், எதிர்க் கும். இருட்டுகிறது. வீட்டுக்குப் போய்விடலாம்”என்றான், உதயசந்திரன். 

லீனா, இன்னும் அவனுடைய கையைப் பற்றிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்பரிசம் அவனுள்ளே இன்பக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 

‘இன்னும் பயம் போகவில்லையா? கை நடுங்கு கிறதே” என்று கனிவோடு கேட்டவாறு அவளுடைய கையை மெல்ல வருடினான். 

நாணத்தால் அவளுடைய பார்வை, தரையை நோக்கியது.  

தூரத்தில், காஞ்சிக் கோட்டையில் அந்தி நேரத்தை அறிவிக்கும் கொம்பொலி கேட்டது. 

12. சுரங்கப்பாதை 

டெங்லீயின் வீட்டில் அன்றிரவு உதயசந்திரனுக்கு நல்ல விருந்து. டெங்லீ, அருகிலிருந்து அவனை உபசரித்தார். 

“நன்றாகச் சாப்பிடு. இந்த வாலிப வயதில் நன்றாகச் சாப்பிடவேண்டும். நான் உன்னைப் போலிருந்தபோது, இதைப் போல் இரண்டு மடங்கு சாப்பிடுவேன். வெட்கப் படாமல் சாப்பிடு” என்று டெங்லீ உபசரித்தார். லீனா, பரிவோடு பரிமாறினாள். 

அன்று வயிறும், மனமும் நிரம்பியவனாய் டெங்லீ யின் வீட்டிலிருந்து உதயசந்திரன் புறப்பட்டபோது, இரவு எட்டு நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. அவனை இரவு அங்கு தங்கிவிட்டுக் காலையில் போகுமாறு டெங்லீ வேண்டினார். ஆனால், உதயசந்திரன் கோட்டைக்கு வெளியே இருந்த பௌத்த விஹாரத்தில் தங்கப் போவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான். 

தெருவிலிருந்த தீப்பந்த விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. நிலவின் ஒளி மட்டுமே மேகங்களினூடே மங்க லாகப் பரவியிருந்தது. வழியிலிருந்த தென்னந்தோப்பை உதயசந்திரன் நெருங்கியதும் தயங்கி நின்றான். அடர்ந்த தோப்பாதலால் இருள் மண்டிக்கிடந்தது. தோப்பினூடே ஒரு சிறு பாதை இருந்ததால், நேரே அது வழியாக நடந்தால், தோப்பைக் கடந்து விடலாம். உதயசந்திரனுக்கு உள்ளூர பயம். நாகப் பாம்பின் நினைவு, அவனை அச்சுறுத்தியது. ஓலைகளின் சலசலப்பு அவனை மிரள வைத்தது. எப்படி யும் போய்த்தான் ஆகவேண்டும். மனதைத் திடப்படுத்திக் கொண்டு பாதையில் நடக்கத் தொடங்கினான். 

கொஞ்ச தூரம் சென்றதும் பாதை சரியாகத் தெரிய வில்லை. தென்னை மரங்களினூடே எழுந்த நிலவொளி போதவில்லை. தயங்கியபடி நின்றான். தோப்புக்குள் சற்று தள்ளி ஒளி தெரிந்தது. ஏதோ ஒரு கட்டடத்துக்குள் தீப்பந்தம் எரியும் ஒளி என்பதைப் புரிந்து கொண்டான். அங்கு சென்றால், அங்கிருப்பவர்களைத் தனக்குப் பாதை யைக் காட்டும்படித் துணைக்கு அழைக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த ஒளியை இலக்கு வைத்து நடந்தான். 

அந்த ஒளி வந்த இடம், மாலையில் அவன் கண்ட சிறு கோயிலாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டான். தோப்பிலிருந்து நந்தவனத்தை நெருங்கியதும், கோயிலி னுள் ஓர் ஆள் இருப்பது தெரிந்தது. நந்தவனத்திலும் ஆங் காங்கே மரங்களிருந்ததால் அவற்றின் மீது மோதிவிடாமல் ஒளியை நோக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்தான். கோயிலை நெருங்கியதும் கோயில் சாளரத்தின் வழியாக எட்டி உள்ளே பார்த்தான். உள்ளே எரிந்து கொண்டிருந்த தீவட்டியின் ஒளியில் ஒரு பெரிய சிவலிங்கம் தெரிந்தது. 

“அடேயப்பா, எவ்வளவு பெரிய சிவலிங்கம்” என்று முணுமுணுத்தபடியே கைகூப்பி வணங்கினான். உள்ளே யாரும் இல்லை. அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டான். 

சிவலிங்கம் இருந்த கர்ப்பக் கிருஹத்தில் திடீரென்று வெளிச்சம் அதிகமாகியது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை. கர்ப்பக் கிருஹத்தைச் சுற்றிலும் சுற்சுவர்கள். அதிலிருந்த சாளரமும் கல்லினால் கட்டப்பட் டதுதான். ஒரே ஒரு வாசல் மட்டுந்தானிருந்தது. வெளிச்சம் வாசல் வழியாகவும் வரவில்லை. உதயசந்திரன் திகைப் புடன், வெளிச்சம் கூடிக் கொண்டு வந்ததைக் கவனித்தான். யாரோ தீவட்டியை ஏந்தியபடி கர்ப்பக் கிருஹத்துக்குள் வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால், கர்ப்பக் கிருஹத்துக்கு வேறு வாசல் இல்லையே என்று எண்ணிக் குழம்பினான். 

சற்று நேரத்தில், ஒருவன் தீவட்டியைப் பிடித்துக் கொண்டு லிங்கத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்டான். அவனுடைய கோலத்திலிருந்து அவன் அந்தக் கோயிலின் பூசாரி என்பதை உதயசந்திரன் புரிந்துகொண்டான். பூசாரி, தீவட்டியை சுவரிலிருந்த ஒரு கொக்கியில் செருகி விட்டு, மீண்டும் சிவலிங்கத்தின் பின்னால் மறைந்தான். 

உதயசந்திரன் பரபரப்படைந்தான். மெல்ல நகர்ந்து கர்ப்பக் கிருஹத்தின் பின்பக்கச் சுவர் அருகே சென்று சாளரத்தின் வழியே கவனித்தான். 

ஓ… சிவலிங்கத்தின் பின்னே சுரங்கப்பாதை ! லிங்கத் தைச் சுற்றியுள்ள தளம், பெரிய சதுரக் கற்களால் பரப்பப் பட்டிருந்தது. அவற்றில் ஒரு பெரிய சதுரக்கல் மட்டும் தரை யிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு, சுவர்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. பூசாரி, அந்தக் கல்லை எடுத்து, சுரங்க வாயிலை அடைத்துவிட்டுத் தீவட்டியை அணைத்தான். கர்ப்பக் கிருஹத்தில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தீவட்டி மட்டும் ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. பூசாரி, கர்ப்பக் கிருஹத்தை விட்டு வெளியேறி வாசலுக்குச் சென்றான். 

உதயசந்திரன் ஓசைப்படுத்தாமல் நடந்து கோயிலின் முன் பக்கம் சென்று எட்டிப்பார்த்தான். வெளியே, வாசலில் இருந்த கல் திண்ணையில் பூசாரி அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். உதயசந்திரனுக்கு ஓர் எண் ணம் தோன்றியது. மெல்ல, பூசாரியின் பின் பக்கமாய்ப் போய் நின்றான். பூசாரி, அப்பர் பாடல் ஒன்றை முணு முணுத்துக்கொண்டிருந்தான். தென்னை ஓலைகள் காற்றில் எழுப்பிய சலசலப்பில் அவன் பாடியது சரியாகக் கேட்க வில்லை. பூசாரியின் பிடரியில் பட்டென்று ஓர் அடி அடித் தான், உதயசந்திரன். மறுகணம் மூச்சுப் பேச்சின்றி பூசாரி மயங்கிச் சாய்ந்தான். 

உதயசந்திரன் தெரிந்து வைத்திருந்த தற்காப்புப் போர் முறையில் இதுவும் ஒன்று. மனித உடலில் எந்தெந்த இடத் தில் தட்டினால் உணர்வை இழக்கச் செய்யலாம் என்ற வித் தையை நன்கு அறிந்திருந்தான். கீழே சாய்ந்த பூசாரியைத் தாங்கித் திண்ணையில் படுக்கவைத்தான். இனி பூசாரி விழிப்பதற்கு ஆறு அல்லது ஏழு நாழிகைகளாவது ஆகும். 

பரபரப்புடன் கோயிலுக்குள் சென்ற உதயசந்திரன், சுரங்கப் பாதையை மூடியிருந்த கல்லைப் பெயர்த்தெடுத்துச் சுவரில் சாய்த்து வைத்தான். பூசாரி அணைத்து வைத்திருந்த தீவட்டியைப் பற்ற வைத்துக்கொண்டு சுரங்கப்பாதையில் இறங்கினான். பல படிகளில் இறங்கி சமதளத்துக்குச் சென்ற தும் எதிரே நீண்டு ஒரு பாதை போவது தெரிந்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. பாதையில் நடக்கத் தொடங்கினான். ஆங்காங்கே பெரிய தூண்கள் அமைந்திருந்தன. தீவட்டியின் வெளிச்சத்தில் அவைகளின் நிழல்கள் பயமுறுத்தின. வெகுநேரம் நடப்பது போல் உணர்ந்தான். தீவட்டியின் நெடி எங்கும் பரவியது. 

திடீரென்று உதயசந்திரன் நின்றான். அவனுள்ளே போராட்டம் நிகழத் தொடங்கிவிட்டது.- 

இதென்ன வீண்வேலை? எதற்காக இப்படி நடந்து கொண்டிருக்கிறேன்? இது எங்கே கொண்டுபோய்ச் சேர்க்குமோ? இதில் ஏதேனும் இரகசியம் இருக்கும். ஏதோ பெயருக்கு கோவிலுக்குள் நந்தவனம் போல் அமைத்து, உள்ளே சுரங்க வாயிலை இணைத்திருக்கிறார்கள். பூசாரி இந்தச் சுரங்கப்பாதையின் காவல் வீரனாகத்தானிருப்பான்… இதில் ஆபத்து ஏதேனும் இருக்குமோ? வலியப் போய் ஆபத்தில் சிக்குவானேன்? திரும்பிவிடுவோமா ?…. 

உதயசந்திரன் தீவட்டியைப் பிடித்தபடி அசையாமல் நின்றான். எதிரே தெரிந்த தூண் ஒன்று பூதாகாரமாய் நின்று கொண்டிருந்தது. உள்ளூரப் பயமிருந்தாலும், மேலும் தொடர்ந்து சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகரித் தது. முன்னோக்கி நடக்கத் தொடங்கினான். ஒரு இடத்தில் பாதை வலது பக்கமாய் பிரிவதற்கான அறிகுறி தெரிந்தது. ஆனால் வலது பக்கம் வழியேதுமில்லை, சுவர்தானி ருந்தது. 

அந்தச் சுவரில் பாதைக்கான இரகசிய ஏற்பாடு ஏதா வது இருக்கலாம் என்று எண்ணியவனாய் வலதுபுறச் சுவரைத் தொட்டுப் பார்த்தான். கற்களால் சுவர் கட்டப் பட்டிருந்தது. அதை அப்போது ஆராய்வதை விட்டுவிட்டு தொடர்ந்து பாதையில் நடந்தான். சற்று நேரம் நடந்த பிறகு, படிக்கட்டுகள் தெரிந்தன. அவனுடைய இருதயம் வேக மாகத் துடிக்கத் தொடங்கியது. படிகளில் இறங்கினான். படி கள், வளைந்து, வளைந்து மேலே ஏறியது. ஒரு இடத்துக்கு வந்ததும், உயரே வட்ட வடிவத்தில் ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. தீவட்டியை சுரங்கத்தினுள்ளேயே மேற்படியி னருகே இருந்த தூணில் சாய்த்து வைத்துவிட்டு, துவாரத் தின் வழியாக எட்டிப் பார்த்தான். அங்கே ஒரு மண்டபம் தெரிந்தது. 

துவாரத்தின் வழியாக மண்டபத்தினுள்ளே சென்ற உதயசந்திரன், இருளில் மறைந்து நின்றவாறு, சாளரத்தின் வழியே அடுத்த அறையைக் கவனித்தான். வியப்புத் தாளாமல் கல்லாகச் சமைந்து நின்றான். அவனால் நம்பவே முடியவில்லை. கப்பலில் சந்தித்த தேவசோமாவும், சுகத்தா சாவும் அங்கிருந்தனர்! அவர்களுடன் இளவரசனும் இருந் தான். அவர்களோடிருந்த வேறொருவனை எங்கோ பார்த்த நினைவு இருந்தது. யோசித்தான்- 

ஓ…இவன் இளவரசனோடு குதிரையில் துணைக்கு வந்தானே, அவனல்லவா… ! இந்நேரத்தில் கூடி என்ன பேசு கிறார்கள்? இலங்கைத் தேவசோமாவுக்கும், பல்லவ இளவர சனுக்கும் என்ன தொடர்பு ?…. 

உதயசந்திரன் உன்னிப்பாகக் கவனித்தான். 

“எங்கே போய்விட்டாய்?”- சித்திரமாயன் கேட்டான்.

“கோட்டைக்கு வெளியே போட்டி மைதானத்துக்குப் போயிருந்தேன். திரும்புவதற்குள் கோட்டையை அடைத்து விட்டார்கள். லிங்கப் பாதையில் வந்தேன்” என்றான் வாண ராயன். 

அவன் கூறிய லிங்கப்பாதை என்பது, சிவலிங்கத் துக்குப் பின்னால் உள்ள சுரங்கப் பாதைதான் என்பதை உதயசந்திரன் புரிந்து கொண்டான். 

“இவர்களும் இப்போதுதான் வந்தார்கள். உன்னால் தான் சுணக்கம். எல்லாவற்றையும் இவர்களிடம் விவர மாகச் சொல்” என்று கூறிவிட்டு, சித்திரமாயன் அந்த அறை யைவிட்டு வெளியேறினான். பிறகு, அறையில் நடை பெற்ற பேச்சு வார்த்தைகளை உதயசந்திரன் உன்னிப்பாகக் கேட்டான். 

“இடத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டாயல்லவா?” என்று வாணராயன் கேட்டான். 

சுகததாசா, தலையை ஆட்டினான். வாணராயன் தொடர்ந்து பேசினான். “போட்டி மைதானத்தில் பார்வை யாளர் பகுதியில் உனக்கு நான் காட்டிய ஆசனத்துக்கு எதிரே இருக்கின்றனவே இரண்டு மரங்கள்; நன்றாக கவனித்துக் கொண்டாயா?” 

”உம்…”- தலையை அலட்சியமாக அசைத்தான் சுகத தாசா. 

“மைதானத்துக்கு வெளியே அடுத்திருப்பது, கல்லால மரம். அதன் பின்னே இருப்பது புளியமரம். நீ புளிய மரத் தின் மீது ஏறி இருந்துதான் குறி வைக்க வேண்டும். முன்னே இருக்கும் கல்லாலமரம்; உன்னையும், நீ ஏறியிருக்கும் புளிய மரத்தையும் நன்றாக மறைத்துக் கொண்டிருக்கும். நாளை நீ புளியமரத்தில் ஏறி, மைதானத்திலுள்ள பார்வையாளர் பகுதி யில் நான் காட்டிய ஆசனம் நன்கு தெரிகிறதா என்று சோதித் துப்பார்த்துக் கொள். போட்டி வீரர்கள் நுழையும் வாசலை யடுத்து மேல் புறமாக உள்ள மேடையில் மூன்றாவது ஆசனம். நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். இலக்குநன்கு தெரிவதற்கு மரக்கிளைகளை வெட்ட வேண்டுமானால், நாளை வெட்டிக் கொள்” என்றான் வாணராயன். 

“போட்டியின் முதல்நாளே வேலையை முடித்து விட்டால் என்ன ?” என்று கேட்டான், தேவசோமா. 

“வேண்டாம். முதல் நாள் காவல் பலமாயிருக்கும். இரண்டாம் நாள் தான் சற்று அயர்வார்கள். இரண்டாம்நாள் தான் மகாராணியின் பரிசளிப்பு நடைபெறும். நான் கூறு வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். இரண் டாம்நாள், பரிசளிப்புக்கு முன்பாக, கடவுள் வணக்கம் நடை பெறும். அதன்பின், போருக்குச் சென்றிருக்கும் சக்கரவர்த்தி யின் வெற்றிக்காகப் பிரார்த்தனை நடைபெறும். முதலில் கடவுள் பிரார்த்தனை முடிந்ததும், மூன்று முறை கொம்பு ஊதுவார்கள். பிறகுதான் போர் வெற்றிக்கான பிரார்த்தனை நடைபெறும். கடவுள் பிரார்த்தனை முடிந்து, மூன்றாவது முறை கொம்பு ஊதி முடிக்கும்போது உன் வேலையை முடித்துவிடு. அந்தச் சமயத்தில் எல்லாரும் எழுந்து நின்று கொண்டிருப்பார்கள். நான் காட்டிய ஆசனத்துக்குக் குரியவரும் எழுந்துதான் நிற்பார். நான் சொன்னவற்றை யெல்லாம் மனத்தில் வாங்கிக் கொண்டாயா?” என்று கேட் டான், வாணராயன். 

“ஓ…” என்று தலையை ஆட்டினான், சுகததாசா.

“நான் சொன்னவற்றையெல்லாம் திரும்பச் சொல்.”

சுகததாசா, ஒன்று விடாமல் திரும்பக்கூறினான்.

வாணராயன் திருப்தியடைந்து, சுகததாசாவின் தோளில் தட்டினான். 

“அந்த நபர் யார்?”- தேவசோமா கேட்டான். 

“உங்களுக்கு அந்த இரகசியம் இப்போதே தெரிய வேண்டிய அவசியம் இல்லை” என்றான் வாணராயன். 

“ஒருவேளை அந்த நபர் வேறு ஆசனத்தில் அமர்ந்து விட்டால்?” என்று சந்தேகத்தோடு கேட்டான், தேவசோமா. 

“அமரமாட்டார். ஒவ்வொருவருடைய அந்தஸ்தையும் அனுசரித்து ஆசனம் போடப்பட்டிருக்கிறது. அவரவர் களுக்குரிய ஆசனங்களில்தாம் அமர்வார்கள். அதில் சந்தேகப்பட வேண்டியதே இல்லை. 

“உங்கள் விருப்பம் நிறைவேறும்” என்று உறுதியுடன் சொன்னான்,சுகததாசா. 

வாணராயன் மகிழ்ச்சியுடன், சுகததாசாவின் தோளில் தட்டினான். “நாம் இப்போது பிரிவோம். இனி நான் உங் களைச் சந்திக்க மாட்டேன். நீங்களும் என்னைச் சந்திக்க முயல வேண்டாம். காரியம் முடிந்ததும் நீங்கள் நேரே உங் கள் விடுதிக்குப் போய் விடுங்கள். நீங்கள் கப்பல் ஏறும் நாளன்று, உங்களுடைய வெகுமதிகள், மாமல்லபுரத்துறை முகத்துக்கே வந்து சேரும். நான் இனி உங்களை மாமல்ல புரத் துறைமுகத்தில்தான் சந்திப்பேன். பல்லவ நாட்டின் ஆசியையும், பெரும் செல்வத்தையும் நீங்கள் போகும் போது கொண்டு செல்லலாம். உங்கள் மீது மிகுந்த நம் பிக்கை வைத்திருக்கிறோம்” என்றான். 

“நம்பிக்கை வீண் போகாது” என்றான் சுகததாசா. 

வாணராயன், வாசலை நோக்கிக் கையைத் தட்டி னான். வேல்பிடித்த ஒரு காவல் வீரன் உள்ளே விரைந்து வந்தான். 

“இவர்களை விடுதியில் கொண்டு போய் விட்டுவிடு” என்றான் வாணராயன். எல்லாரும் அந்த அறையை விட்டு வெளியே சென்றார்கள். 

உதயசந்திரன் சாளரத்தை விட்டு விரைந்து விலகிச் சென்று, சுரங்கத்தினுள் நுழைந்து மறைந்தவாறு எட்டிப் பார்த்தான். மண்டபம் இருண்டு கிடந்தது. அங்கு யாரும் வரவில்லை. அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தூணில் சாத்தி யிருந்த தீவட்டியை எடுத்துக் கொண்டு படிகளில் விரைந்து இறங்கத் தொடங்கினான். 

பெரிய சதி நடக்கிறது. வீரப்போட்டி நடைபெறும் போது யாரையோ கொலை செய்யப் போகிறார்கள்… மூன்றா வது ஆசனம்…. புளியமரம்… இரண்டாம் நாள் பரிசளிப்புக்கு முன்… கடவுள் பிரார்த்தனை நடக்கும் போது… புளியமரத் தின் மீதிருந்து எப்படி…? 

ஓ… சுகததாசா பெரிய வில்லாளி அல்லவா? அடே யப்பா கப்பலில் கொள்ளைக்காரர்களை அவனுடைய அம்புகள் எவ்வளவு கச்சிதமாகத் தாக்கின! பாய்மரக் கம்பத்திலிருந்து அவ்வளவு தூரத்தில் குறி வைத்து அடித்து வீழ்த்தினானே! நல்ல ஆளாகத்தான் பார்த்து சதிகாரர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். சுகததாசா, குறி தவறமாட்டான். ஒரே அம்பு போதும். அந்தப் பரிதாபத்துக்குரிய நபர் யார் ? பல்லவ நாட்டின் முக்கிய நபராகத்தானிருக்க வேண்டும். இல்லையென்றால், இளவரசனே தலையிடுவானா ? ராஜ் யம், ஆட்சி என்றால், இதெல்லாம் நடந்து கொண்டுதானி ருக்கும் போலிருக்கிறது… அந்த நபர் யாராயிருக்கும் ?…. யாரா யிருந்தால் எனக்கென்ன? ஏதோ ஒரு ராஜீய காரியம். எனக் கென்ன இதில் அக்கறை? இரண்டாம் நாள், போட்டி மைதா னத்திலிருந்து கொலையைப் பார்க்கலாம்…. ஓ! நான் ஒருவன்தான் சாட்சி! இந்த உலகத்தில், அது பற்றிய உண்மையைக் கூறக் கூடியவன் தேவைப்பட்டால், நான் ஒருவன்தான் சாட்சி…! 


ஒரு இடத்தில் வந்ததும் நின்று கவனித்தான். அந்த இடத்தில்தான் சுரங்கப்பாதை பிரிவதுபோல் சில அறிகுறி கள் தோன்றின. இடது பக்கத்துச் சுவரை ஆராய்ந்தான். தீவட்டியை சுவர் அருகே பிடித்தான். சதுரமான கற்களால் சுவர் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு கல்லையும் கையினால் அழுத்திப் பார்த்தான். ஒரே ஒரு கல் மட்டும் இலேசாக அசைவது போலிருந்தது. உதயசந்திரன் உற்சாக மடைந்தான். தீவட்டியை அருகிலிருந்த தூணில் சாய்த்து வைத்துவிட்டு,அசைந்த கல்லை இருகரங்களாலும் மேலும் அசைத்துப் பார்த்தான். கல் நன்றாக அசைந்து கொடுத்தது. இடைவெளியும் தோன்றியது. இடைவெளிக்குள் விரல் களை நுழைத்துக் கல்லை இழுத்தான். கல் நகர்ந்தது. முழு பலத்தையும் கொடுத்து அதை வெளியே இழுத்தான். சுவரி லிருந்து கல் விடுபட்டு வெளிய வந்தது. கல்லைக் கீழே சுவற்றில் சாத்திவிட்டுக் கல் பெயர்த்துவந்த பொந்து வழி யாக எட்டிப் பார்த்தான். உள்ளே இருள். ஒன்றும் தெரிய வில்லை. தீவட்டியை எடுத்துத் துவாரத்தின் வழியாகக் காட்டினான். அங்கும் ஒரு சுரங்கப்பாதை நீண்டு சென்றது. 

ஆவல், அவனை உந்தியது. பொந்து வழியாக உள்ளே புகுந்து நடக்கத் தொடங்கினான். பாதை போன விதத்திலிருந்து அது மீண்டும் அரண்மனையின் வேறொரு பகுதிக்குச் செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். 

அவனுக்கு உள்ளூரப் பயம் எழுந்தது. இரகசியப் பாதை ஒன்றில் தானிருந்ததை உணர்ந்து உடல் சிலிர்த்தான். அரண்மனை இரகசியத்தில் வலியப் போய் மாட்டிக் கொண்டதாக எண்ணி, மனம் உளைந்தான். ஆனால் அவன் கால்கள் அவனை இழுத்துக் கொண்டு சென்றன. அந்தப் பாதையின் முடிவிலும் படிக்கட்டுகள் தோன்றின. அவற்றில் ஏறிச் சென்றபோது படிகள் ஓரிடத்தில் முடிந்து விட்டன. அதற்குப் பிறகு பாதை ஏதும் இல்லை. 

அந்த இடத்தில் கட்டாயம் ஒரு வாசல் இருக்க வேண்டும். வாசல் எப்படி அடைபட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்தான் அங்கும் சுவற்றில் ஒரு கல்லினால்தான் வாசல் அடைபட்டிருந்தது. கல்லை நகர்த்திவிட்டு பொந்து வழியாக எட்டிப் பார்த்தான். மறுபக்கம் ஒரு சிறு அறை இருந்தது. வெளிச்சம் ஏதும் இல்லை. அதை அடுத்த அறையில் மிக மெல்லியதாக விளக்கொளி தெரிந்தது. 

உதயசந்திரன் சுரங்கத்தினுள்ளிருந்து வெளிப்பட்டு அறைக்குள் சில வினாடிகள் நின்று கவனித்தான். 

அங்கிருந்த அலங்காரச் சின்னங்கள், அவனைப் பிரமிக்க வைத்தன. அரண்மனையைச் சேர்ந்த அந்தப்புரம் என்று யூகித்துக் கொண்டான். 

அந்தப்புரம் என்றால், ராஜகுமாரியும் இருக்க வேண் டுமே. அவள் எங்கே ஒய்யாரமாகத் தூங்குகிறாளோ…? 

உதயசந்திரன், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். அறைக்குள் ஒவ்வொரு இடமாக உற்றுப் பார்த்தான். அவனுடைய பார்வை, சாளரத்தை அடுத்தாற் போல் கீழே தாழ்ந்தபோது… 

ஓ…! உதயசந்திரனின் கண்கள், நிலை குத்தின. சாளரத் துக்கு அடுத்துப் போடப்பட்டிருந்த ஹம்ஸதூளிகா மஞ்சத் தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்மீது பார்வை விழுந்ததும் இதயத் துடிப்பு, ஒரு கணம் நின்றுவிட்டது போலிருந்தது. 

புராணக் கதைகளில் தேவலோக அப்ஸரஸ்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இந்திர சபையைச் சேர்ந்த தாசிகளான ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற வர்களின் அழகைப் பற்றிக் கதைகளில் கேட்டிருந்தான். அப்படி ஒரு பிரமிப்பூட்டும் பேரழகு, மஞ்சத்தில் கண்மூடிக் கிடந்ததைக் கண் இமைக்காமல் பார்த்து நின்றான். 


அந்த அழகியின் தலைமாட்டில் எரிந்துகொண்டிருந்த அகல் விளக்கின் ஒளி, அவளுடைய மேனியில் மிருது வாகப் படர்ந்திருந்தது. தனிமையில் ஆடை நெகிழ்ந்து நிச் சிந்தையாகத் தூங்கிக் கொண்டிருந்த ஓர் அழகியின் அருகில் தான் நின்று கொண்டிருந்ததை எண்ணியதும், அவனுள் பரபரப்பு அதிகமாகியது. சாளரத்தின் வழியாகக் கையை நீட்டினால் அவளைத் தொட்டுவிடலாம். அவ்வளவு அருகில் நின்று கொண்டிருந்தவனின் மனம் தத்தளித்தது. 

அவளுடைய இதழ்களில் புன்முறுவல் தோன்றி மறைந்ததிலிருந்து அவள் ஏதோ ஓர் இனிமையான கனவிலிருக்கிறாள் என்று நினைத்தான். அவனுடைய பார்வை, கட்டில் நெடுகிலும் பரவியது. 

மல்லாந்து படுத்திருந்தவளின் மேலாக்கு விலகி, மார்க் கச்சை மட்டும் தெரிந்தது. அந்தக் கச்சையின் முடிச்சும் அவிழ்ந்து, கச்சையும் தளர்ந்து விலகியிருந்தது. மூச்சு விட்டபோது மார்பகங்கள் உயர்ந்தும், தாழ்ந்தும் அசைந்த அழகும், முழங்கால்களுக்குமேல் ஆடை விலகிக் கிடந்த தால் ஒளிவிட்ட தொடைகளின் அழகும், அவள் படுத்துக் கிடந்த கோலமும் உதயசந்திரனை சில வினாடிகள் நிலை குலைய வைத்துவிட்டன. 

ஒரு பெண்ணை அப்படி ஒரு கோலத்தில் அவன் கண்டதில்லை. பெண்ணின் அங்கங்களுக்கு மனத்தைக் கிறங்க வைக்கும் காந்த சக்தி உண்டென்பதை அப்போது முதன் முறையாக உணர்ந்தபோது அவன் உடலில் விவரிக்க இயலாத கிளர்ச்சி தோன்றியது. 

நிலைமறந்து உறங்கும் ஒரு பெண்ணின் உடலை அருகே நின்று அப்படிப் பார்ப்பது சரியல்ல என்று அவனு டைய கண்ணியமான உள்ளம் தடுக்கவே, அவ்விடத்தை விட்டு உடனே விலகிச் செல்ல நினைத்தான். அவனுடைய பார்வை மீண்டும் அவள் முகத்தில் பதிந்தது. 

ஓ…எவ்வளவு அழகு…! 

அவள், கண்களை விழித்து அவனைப் பார்ப்பது போலிருந்தது. அவன் அதிர்ந்து போனான். மறுகணம் பாய்ந்து சென்று சுரங்கப் பாதையில் நுழைந்து, கல்லைத் தூக்கி வாசல் பொந்தை அடைத்துவிட்டு, தீவட்டியை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக விழுந்தடித்துக் கொண்டு விரைந்தான். 

பயம், அவனை உந்தித் தள்ளியது. மூச்சு இரைத்தது. வியர்வையில் குளித்தபடி சிவலிங்கத்தின் பின்னே போய்ச் சேர்ந்தான். சுரங்க வாயிலைக் கல்லினால் அடைத்து விட்டுக் கர்ப்பக் கிருஹத்திலிருந்து வெளியே வந்தான். பூசாரி இன்னும் கல் திண்ணையில் மயங்கியே கிடந்தான். 

உதயசந்திரன் தீவட்டியைப் பிடித்துக் கொண்டு தென்னந்தோப்பை நோக்கி விரைந்தான். தோப்பைக்கடந்து வீதியை அடைந்ததும், தீவட்டியை அணைத்து எறிந்து விட்டு பெளத்த விஹாரத்தை நோக்கி நடந்தான். பௌத்த விஹாரத்தை அடைந்த பிறகுதான் அவனுக்கு ஏற்பட்டிருந்த படபடப்பு குறைந்தது. மடத்தில் படுத்திருந்த போது உறக்கம் வராமல் தவித்தான். அந்தப் பெண் யாராயிருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டான். 

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *