கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 985 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7. தலைநகரில் கொலை 

காஞ்சிமா நகரில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வீரத்திருவிழா நடைபெற்றுவந்தது. அப்போதுநடைபெறும் வீரப்போட்டிக்குப் பல நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கு கொள்ள வருவதுண்டு. போட்டி நடைபெறுவதற்கு நாலைந்து நாட்களுக்கு முந்தியே வீரர்களும் பார்வையாளர் களும் வரத் தொடங்கிவிடுவார்கள். பல்லவச்சக்கரவர்த்தி, இதற்கென்றே பல குழுக்களை அமைத்து, ஒவ்வொரு பொறுப்பை அளிப்பது வழக்கம். போட்டியை முன்னிட் டுப் பல்லவ சாம்ராஜ்யத்தின் குறுநில மன்னர்களும், முக்கியத் தலைவர்களும் ஒரே சமயத்தில் காஞ்சியில் கூடும் போது காவலர்களின் கெடுபிடி அதிகமாயிருக்கும். 

அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யம், இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கோட்டமும் ஒரு தலைவரின் பொறுப்பில் விடப்பட்டு ஆளப்பட்டு வந்தது. கோட்டத் தலைவர்கள், அரச குலத் தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பல கோட்டங்கள் ஒரு மண்டல ஆட்சிக்குட்பட்டவை. மண்டலங்களை ஆட்சி செய்த தலைவர்கள், குறுநிலமன்னர்கள் என்றழைக் கப்பட்டனர். அவர்கள் மிகுந்த அதிகாரம் பெற்றிருந்தனர். அரச குலத்தில் மிக நெருங்கிய இரத்த சம்பந்தம் உள்ளவர் கள்தான் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்து வந்தனர். குறுநில மன்னர்களுக்குத் தனிக்கொடியும், போர்ப்படையும் இருந்தன. காஞ்சியில் நடைபெறும் முக்கியமான விழாக் களின் போது குறுநிலமன்னர்களும், கோட்டத் தலைவர் களும் தலைநகரில் கூடும்போது அவர்களுடையபரிவாரங் களின் சலசலப்புநகரையே அதிர வைத்துவிடும். 

இப்போது பல்லவச் சக்கரவர்த்தி போர்க்களம் போயி ருந்ததால் காஞ்சிநகர் ஒளி இழந்திருந்தது. மன்னர் போர்க் களம் போயிருந்த வேளையில் ஒரு விழாவை ஆடம்பர மாகக் கொண்டாடுவது கூடாது என்பதால், குறுநில மன்னர் களும், பல கோட்டத் தலைவர்களும் வீர விழாவுக்கு வர வில்லை. இருபத்துநான்கு கோட்டத் தலைவர்களுள் ஆறு தலைவர்கள் மட்டுமே வந்திருந்தனர். 

அவர்கள் வந்ததற்கு வேறு காரணமும் இருந்தது. அப்போது சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக ஆண்டுகொண்டி ருந்த மகாராணியின் போக்கு அவர்களுக்குப் பிடிக்க வில்லை. அது பற்றிப் பல்லவ நாட்டின் முதன் மந்திரியிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, யோசனை கேட்பதற் காக வீரப்போட்டியைக் காரணமாக வைத்து வந்திருந்தனர். வழக்கமாக உள்ள ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், இருபது மெய்க்காவலர்களை மட்டும் அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வந்திருந்தனர். 

வீரப்போட்டியை முன்னிட்டு நகரத்துக்கு வந்திருந்த கோட்டத் தலைவர்கள், வீரர்கள் ஆகிய எல்லாருடைய சௌகரியங்களும் எப்படிக் கவனிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மேற்பார்வையிட, பல்லவ சாம்ராஜ்யத்தின் முதன் மந்திரி, பிரம்மஸ்ரீ தரணிகொண்ட போசர், தம்முடைய மெய்க்காவல் வீரர்கள் புடை சூழ, வீதியில் வந்து கொண்டிருந்தார். 

அவருக்கு வயது எழுபதைத் தாண்டிவிட்டது. அந்த வயதிலும் வலுவுடனிருந்தார். முகத்தில் நல்ல தேஜஸ். பார்வையிலேயே ஒருவருடைய இதயத்தை ஆராய்ந்து விடும் தீட்சண்யம். அவரைக் கண்டதும் மக்கள், மிக்க மரியாதையுடன் விலகி நின்று வணங்கினார்கள். 

முதன்மந்திரியிடம் எல்லாரும் பக்தியும் பயமும் கொண்டிருந்தனர். தரணி கொண்ட போசரின் கல்வியறி வும், ஆட்சித் திறமையும் வெளிநாட்டினரைக்கூட பிரமிக்க வைத்தன. பல்லவ சக்கரவர்த்தியே தரணி கொண்ட போசர் மீதுமிகுந்த அபிமானமும், மரியாதையும் வைத்திருந்ததால், மற்ற தலைவர்கள் அவரைக்கண்டு அஞ்சினர். பல்லவசாம் ராஜ்யத்தில் எந்தக் கோட்டத்தில் எது நடைபெற்றாலும், அவருக்குத் தெரியாமல் மறைக்க முடியாது. அவருடைய கண்காணிப்பில் இயங்கிய ஒற்றர் படை, மிகத் திறமையுடன் செயலாற்றியது. 

முதன் மந்திரியின் பல்லக்கு, கைலாசநாதர் கோயிலை நெருங்கியபோது, ஆண்களும், பெண்களுமாகப் பலர் ஓடிவந்து பல்லக்கின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி அழுதார்கள். பல்லக்கிலிருந்து இறங்கிய தரணி கொண்ட போசர், சுற்றும் முற்றும் பார்த்தார். கோயில் சந்நிதிக்கு எதிரே இருந்த வீதியின் இருமருங்கிலும் கடைகள் இடிந்துகிடந்தமையைக் கண்டார். கடைக்காரர்கள் அழுது கொண்டே விவரத்தைக் கூறினார்கள். 

“இளவரசர் செய்ததில் என்ன தவறு? கோயில் வாசலில் கடைகளைப் பரப்பி கோயிலின் வீதியழகையும் கெடுத்து, மக்கள் நடமாட முடியாமலும் இடைஞ்சல் செய்தீர் களே. இரண்டு நாட்களுக்கு முன்பே கடைகளை அகற்றி விட வேண்டும் என்று இளவரசர் எச்சரித்துவிட்டாரே’ என்றார், முதன் மந்திரி. 

“எங்கள் கடைகளும் இடிந்துவிட்டன. பொருட்களை யும் சூறையாடி விட்டனர். நாங்கள் இனி எங்கே போவோம்? இவ்வளவு நஷ்டத்தை நாங்கள் தாங்க முடியுமா?” என்று ஒரு கடைக்காரர் விம்மி அழுதார். 

“கோயில் வாசலை அசுத்தப்படுத்தியது உங்கள் குற்றம். குற்றம் உங்கள் மீதிருக்கும்போது, நான் என்ன செய்யமுடியும்?” 

“காக்க வேண்டிய இளவரசரே எங்களை கொடூர மாகத் தண்டித்தால் நாங்கள் எப்படி வாழ்வது?” என்று ஒரு கடைக்காரரின் மனைவி அழுதாள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையும் அழுதுகொண்டிருந்தது. 

“உங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈடாக நாளை அரசாங்க பண்டாரத்தில்* பொற்காசுகள் பெற்றுக்கொள் ளுங்கள். ஒரு நிபந்தனை. இனி, கோயிலைச் சுற்றிக் கடை கள் போட்டுக் கோயிலின் புனிதத்தைக் கெடுக்கக் கூடாது” என்று கூறிவிட்டுப் பல்லக்கில் ஏறினார், பிரம்மஸ்ரீதரணி கொண்ட போசர். அவருடைய பல்லக்குப் புறப்பட்ட போது, மக்கள் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினார்கள். 

அந்தச் சமயத்தில், அவருடைய பல்லக்கை நோக்கி மூன்று குதிரைகள் விரைந்து வந்தன. நடுவில் வந்த குதிரை மீதுஐம்பது வயது மதிக்கத்தக்க, ஆஜானுபாகுவான ஒருவர் அமர்ந்திருந்தார். மீசை நரைத்திருந்தாலும் கம்பீரம் இருந்தது. அவர் காஞ்சி நகரின் பாதுகாவல் படையின் தலைவர். 

*அரசாங்கப் பொக்கிஷ அலுவலகம். 

பல்லக்கை நெருங்கியதும் குதிரைகளில் இருந்தவர்கள் பரபரப்புடன் கீழே குதித்தார்கள். பாதுகாவல் படைத்தலை வர் மட்டும் பல்லக்கை நோக்கி விரைந்தார். முதன் மந்திரிக்கு வணக்கம் செலுத்திவிட்டு நின்றார். 

“ஜெயவர்மரே, தற்செயலாக இந்தப் பக்கம் வந்தேன். இந்த இடிபாடுகளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்” என்றார், முதன் மந்திரி. பிறகு கேட்டார், “தாங்களும் இப் போதுதான் வருகிறீர்களா?” 

இதைக் கேட்ட ஜெயவர்மர் துணுக்குற்றார்-கோயில் வாசலில் நடைபெற்ற காரியம் இவருக்குத் தெரிந்துதான் வந்து பார்க்கிறாரோ…? இப்போதுதான் வருகிறீர்களா என்ற கேள்விக்கு என்ன அர்த்தம் ?… உமக்கு முந்தியே நான் வந்து பார்க்கிறேனே; நகரத்தின் பாதுகாவல் பொறுப்பிலிருக்கும் நீர் வந்து பார்க்க இவ்வளவு காலதாமதமாயிருக்கிறதே என்று குத்திக் காட்டுகிறாரோ…? பழுத்த கிழமானாலும் வலுத்த கிழம்… 

“இப்போதுதான் செய்தி வந்தது….” என்று கூறி விட்டுப்பல்லக்கை மிக நெருங்கி நின்று முதன் மந்திரியிடம், “இளவரசர் இப்படிச் செய்யலாமா? எல்லா விஷயங் களிலும் தலையிட்டுக் குழப்புகிறார்” என்று மெல்லச் சொன்னார். 

“இன்று இரவு, கோட்டத்தலைவர்கள் என்னைக் காண வருகிறார்கள். நீங்களும் வாருங்கள். பல விஷயங்கள் பற்றி யோசிக்கலாம். நீங்கள் வரும்போது, தனியாக வாருங்கள். ஆரவாரம் வேண்டாம்” என்று கூறிவிட்டுச் சென்றார், முதன்மந்திரி. பல்லக்கு மறைந்தவுடன், சற்று தள்ளி நின்ற மக்கள், ஜெயவர்மரைச் சூழ்ந்துகொண்டு, கடைகள் இடிக்கப்பட்ட விவரத்தைக் கூறினார்கள். 


அன்று இரவு முதன் மந்திரியின் மாளிகைக்கு ஜெயவர் மர் சென்றபோது, ஏற்கனவே சில பல்லக்குகள், மாளிகை யைச் சுற்றி அமைந்திருந்த தோட்டத்தில் இறக்கி வைக்கப் பட்டிருந்தன. மாளிகையினுள் அவர் சென்றபோது, அங்கே சில கோட்டத் தலைவர்கள் கூடியிருந்தார்கள். கோட்டத் தலைவர்களிடையே நடுநாயகமாக அமர்ந்திருந்த முதன் மந்திரி தரணி கொண்ட போசரின் முகத்தில் கவலை படர்ந் திருந்தது. கோட்டத் தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். 

குன்றக் கோட்டத் தலைவர் கோபத்தில், “இந்த அடங் காப் பிடாரியின் கெடுபிடிக்கு என்று முடிவு வருமோ?” என்றதும், முதன்மந்திரியின் கோபக்குரல் கணீரென்று ஒலித்தது. 

“குன்றக் கோட்டத் தலைவரே, வார்த்தைகள் வரம்பு மீறக் கூடாது. நீங்கள் இப்போது குறிப்பிட்டது, பல்லவ நாட்டு மகாராணியை.” 

குன்றக் கோட்டத் தலைவர், பதறிப்போய் வாய் குழறியபடி, “மன்னிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும்… எனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாளமுடியாமல் பேசி விட்டேன்… முதன்மந்திரி அவர்கள் மன்னிக்க வேண்டும்” என்றார். 

“உங்களுக்கு என்ன அவமானம் நேர்ந்துவிட்டது? அரசாங்கத்தின் கட்டளை எந்த விதமாக வந்தாலும் அதை நிறைவேற்றி வைக்க வேண்டியதுதானே உங்களது கடமை” என்றார், முதன்மந்திரி. 

“கட்டளை வழக்கப்படி வரவில்லையே. எனக்குத் தகவல் இன்றியே கட்டளைகளை என்னுடைய கோட்டத் தில் அறிவிப்பது, இதுநாள் வரை இல்லாத வழக்கமல்லவா? தலைநகரிலிருந்து வரும் கட்டளைகள் அனைத்தும், என் மூலமாக அல்லவா என்னுடைய கோட்டத்து மக்களுக்கு அறிவிக்கப்படவேண்டும்.” 

“அது ஒரு சம்பிரதாயமே தவிர வேறென்ன?” 

“ஆட்சியில் சம்பிரதாயங்களுக்கு வலுவுண்டே. வழக்கத்தை மீறினால், மக்களுக்கு எங்கள் மீது என்ன மதிப்பு இருக்கும் ? நேரடியாகவே காஞ்சி தலையிடுமானால், கோட் டங்களுக்கு நாங்கள் தலைவர்களாக இருப்பதில் அர்த்தமே இல்லையே” என்று குறுக்கிட்டுக் கூறினார் களத்தூர்க் கோட்டத் தலைவர். 

அவர் மேலும் சொன்னார்: “வல்லம் கிராமம் என்னு டைய கோட்டத்தைச் சேர்ந்தது. ஊர்மன்றத் தலைவரை மகாராணியே பதவி நீக்கம் செய்து உத்தரவு அனுப்பி யிருக்கிறார். ஊர்த் தலைவரை மக்கள், என் முன்னிலை யில்தான் கோயில் சந்நிதியில் தேர்ந்தெடுத்தார்கள். அவரை நீக்குவது என்றால் என்னைக் கலந்து ஆலோசித்துத்தான் நீக்க வேண்டும். அதுதான் சம்பிரதாயம். வல்லம் கிராமத் தில் இது விஷயமாக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக இப்போதுதான் செய்தி கிடைத்தது.” 

தரணிகொண்டபோசர், சற்று நேரம் மௌனமா யிருந்தார். செங்கரைக் கோட்டத் தலைவர், மெல்லச் சொன்னார்: “மகாராணியாரின் நடவடிக்கைகள் நியாயந்தா னென்று முதன்மந்திரி அவர்கள் முடிவு கட்டினால், கோட்டங்களின் பொறுப்புக்களை மந்திரி அவர்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.” 

“கோட்டத் தலைவர்களே, உங்களுடைய பிரச்சினை எனக்குப் புரிகிறது. உங்களுடையமனக் கசப்பின் காரணங் களையும் நான் உணர்ந்து கொண்டேன். கோட்டத் தலைமையை காஞ்சியே ஏற்றுக் கொள்வது, நிர்வாக நடை முறைக்கு ஒவ்வாத காரியம். நீங்கள் செய்திருக்கும் உதவியை சக்கரவர்த்தி என்றும் மறக்க மாட்டார். நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து அளித்திருக்கும் படைபலம்தானே இன்று மன்னருக்குத் துணையாகப் போர்க்களம் போயிருக்கிறது” என்றார், தரணிகொண்ட போசர். 

“மன்னர் இருந்தால்தான் இந்தப் பிரச்சனையே எழுந்திருக்காதே” என்றார், புலியூர் கோட்டத்தலைவர். 

“முதன்மந்திரியார் தவறாக எடுத்துக் கொள்ளமாட் டார் என்றால், ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன்” என்றார் செங்காட்டுக் கோட்டத் தலைவர். 

முதன்மந்திரி, புன்முறுவலுடன் அவரைப் பார்த்தார். 

“மகாராணியாரை விட இளவரசர் சித்திரமாயனின் தொந்தரவுதான் சகிக்க முடியவில்லை. மக்களுக்கு அவரால் மிகுந்த தொந்தரவு ஏற்படுகிறது” என்றார், செங்காட்டுக் கோட்டத் தலைவர்; பிறகு சொன்னார்: “காஞ்சியில் பெண்கள் வெளியில் வரவே பயப்படுகிறார்களாமே?” 

இதைக் கேட்டதும் காஞ்சியின் பாதுகாவல் தலைவர், ஜெயவர்மர் படபடப்புடன் பேசத் தொடங்கினார். “இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், முதன்மந்திரி அவர்களே, இன்று இரவு ஒரு கொடிய சம்பவம் நிகழ்ந்து விட்டது. கோயிலுக்குச் சென்ற ஒரு பெண்ணைச் சில குதிரை வீரர்கள் கடத்திக் கொண்டுபோய் விட்டார்கள்.” இதைக் கூறியபோது, ஜெயவர்மனின் மீசை, கோபத்தால் துடித்தது. 

அந்தச் செய்தியைக் கேட்ட கோட்டத் தலைவர்கள் வியப்பினால் கூவினார்கள். முதன்மந்திரி கேட்டார் : “மேற்கொண்டு அது பற்றிய விவரம் தெரியுமா?” 

“கடத்திக் கொண்டு சென்றவர்கள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் பெற்றோர்கள் என்னி டம் வந்து முறையிட்டு அழுதார்கள். நான் சில வீரர்களை இது பற்றி ஆராயும்படி அனுப்பியிருக்கிறேன். காளிக்குப் பலியிடும் கூட்டம் நம் நாட்டில் இன்னும் உலவுகிறது” என்றார், ஜெயவர்மர். 

“உங்கள் வீரர்கள் போய்ப்பயனில்லை. அந்தப்பெண் ணின் உடலை கோட்டை அகழியிலிருந்து எடுத்து, இதற் குள் பெற்றோர்களிடம் சேர்த்திருப்பார்கள்” என்றார், தரணி கொண்ட போசர். 

“ஓ…! பெண்ணைக் கொன்றுவிட்டார்களா?” பதற்றத்துடன் கேட்டார் ஜெயவர்மர். 

“கொலை மட்டுமா ?… கற்பழிப்பும் நடைபெற்றிருக்கிறது.” 

“ஐயோ…” உடல் பதறக் கூவினார், ஜெயவர்மர். பிறகு, நாத்தழுதழுக்கச் சொன்னார்: “முதன்மந்திரி அவர்களே, காஞ்சி நகரின் பாதுகாவல் தலைவனாக இருக்க நான் அருகதையற்றவன். ஒரு பெண்ணுக்கு இந்நகரில் இப்படி ஓர் அநீதி இழைக்கப்பட்ட பிறகு, நான் இந்நகருக்குத் தலைவனாக இருக்கவேகூடாது.” 

இப்படிக் கூறிவிட்டு தம்முடைய உடைவாளை இடுப்பிலிருந்து அவிழ்த்து, முதன்மந்திரியிடம் நீட்டினார். முதன்மந்திரி, வாளைப் பெற்றுக்கொள்ளாமல், ஜெயவர் மரைப் பார்த்துச் சொன்னார்: “ஜெயவர்மரே, இனிதான் உங்களுடைய பணி மிகவும் தேவை. உங்களுடையகடமை உணர்வையும், உங்கள் மீது இந்நகர மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நான் நன்கு அறிவேன். மன்னர் இல்லாத இந்தச் சமயத்தில் தாங்கள் பதவியிலிருந்து விலகுவது சரியல்ல. நீங்கள் விலகிவிட்டால், தீயவர்களின் துணிச்சல் அதிகமாகிவிடும். மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார் கள். வாளை இடுப்பில் அணியுங்கள்” 

ஜெயவர்மர் சற்று தயங்கினார். வாளை நீட்டியபடியே இருந்தார், முதன் மந்திரி. அவருடைய தோளைத் தொட்டு, “ஜெயவர்மரே, இதை என்னுடைய ஆணையாக ஏற்று, வாளை இடையில் அணியுங்கள்” என்றார். 

ஜெயவர்மனின் படபடப்பு இன்னும் தணியவில்லை. முதன்மந்திரியின் ஆணையை ஏற்று, உடைவாளை அணிந்து கொண்டார். “இந்தக் கொடுமைக்குப் பழிவாங் கியே தீரவேண்டும். குற்றவாளிகளை மக்கள் முன்னிலை யில் கழுவேற்றினால்தான் என் மனக்கொதிப்பு அடங்கும்” என்றார். பிறகு, “உங்களுக்கு எப்படி இந்த விவரம் தெரிந் தது? பெண்ணின் உடலை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார். 

“என்னுடைய ஒற்றர்படையின் திறனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறிச் சிரித்தார் முதன்மந்திரி. பிறகு சொன்னார்:”என் வீரர்களை விரைவில் அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. அகழியை அடுத்தாற் போலிருக்கும் காளி கோயிலை ஒட்டிய தோட்டத்திலுள்ள மண்டபத்தில் கொடுமை நிகழ்ந்துள்ளது. அவளுடைய உடலை அகழி யில் வீசியபோதுதான் என் வீரர்கள் போய்ச்சேர்ந்தார்கள். இதற்குக் காரணமானவன் தப்பிவிட்டான். துணை இருந்தவன் மட்டும் அகப்பட்டிருக்கிறான்.” 

“அவன் மூலமாகக் குற்றவாளி யார் என்பது தெரிந் திருக்கலாமே” – ஆவலுடன் கேட்டார் ஜெயவர்மர். 

“இன்னும் முழு உண்மையும் தெரியவில்லை. இன்று இரவுக்குள் பிடிபட்டவனிடமிருந்து உண்மை தெரிந்து விடும். இவனை அறங்கூர் அவையத்தில்* விசாரிக்கும் போது மக்களுக்கும் உண்மை தெரியவரும்” என்றார் முதன் மந்திரி. பிறகு, “என்னுடைய வீரர்கள் இன்னும் தாமதித்திருந் தால், பெண்ணின் உடல்கூடக் கிடைத்திருக்காது. அகழியில் உள்ள முதலைகளுக்கு இரையாகியிருக்கும். இப்போது அகப்பட்டவனும் தப்பிப்போயிருந்திருப்பான். நமக்குத் துப்பே கிடைத்திருக்காது” என்றார். 

“பிடிபட்டவனைக் காராகிரகத்துக்கு அனுப்பிவிட்டீர்களா?” 

“என் கண்காணிப்பில்தான் சிறைவைத்திருக்கிறேன். நாளை அறங்கூர் அவையத்தாரிடம் ஒப்படைத்து விடு வேன். அறங்கூர் அவையத்தில் நாளை விசாரணை நடை பெறும்போது நீங்களும் உடனிருந்து கவனியுங்கள்” என்று முதன் மந்திரி கூறிவிட்டுக் கோட்டத் தலைவர்களிடம் தம் கவனத்தைச் செலுத்தினார். 

“உங்கள் ஆலோசனையைக் கேட்கத்தான் நாங்கள் வந்தோம்.” என்றார் புலியூர் கோட்டத் தலைவர். 

“தற்போது நீங்கள் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் விரைவில் மகாராணியைச் சந்திப் பேன். இதுபற்றிப் பேசிப் பார்க்கிறேன்” என்றார் முதன் மந்திரி. 

“நான் ஒன்று சொல்லலாமா?” என்று குறுக்கிட்டார் ஜெயவர்மர். முதன் மந்திரி தலையை அசைத்தார். 

“ஆசிரமத்தின் மீது எனக்குக் கொஞ்சம் சந்தேகம்.” 

*நகர நீதிமன்றம் 

“எதுபற்றி? யோகி பரமாச்சாரியின் தியானமுறை பற்றியா?” என்று கேட்டுச் சிரித்தார் முதன்மந்திரி. 

“அவருடைய ஆசிரமம் இருக்கும் தோப்பு முழுவதையும் அவருக்கு மான்யமாக ராணியார் கொடுத்து விட்டார்…” 

“அதனால் என்ன? மந்திரிசபையிடம் ஆலோசனை கேட்டுத்தான் கொடுத்திருக்கிறார்.” 

“அதற்குச் சொல்ல வரவில்லை. ராணியார் அடிக்கடி ருத்திர பரமாச்சாரியை அரண்மனைக்கு வரவழைத்து, மரியாதை செய்வது பற்றி…. ” என்று சந்தேகத்தோடு பேசினார் ஜெயவர்மர். 

“குருவுக்கு மரியாதை செலுத்துவதில் என்ன தவறு? மகாராணியாருக்கு அவருடைய போதனைகளில் ஈடுபாடு.” 

“மக்களிடையே அந்த ஆசிரமம் பற்றி நல்ல எண்ணம் இல்லை. எதிர்ப்பு இருக்கிறது. தாங்கள் ஒரு முறை அங்கு விஜயம் செய்து பார்ப்பது நல்லது என்று எண்ணுகிறேன்.”

இதைக் கேட்டு முதன்மந்திரி கலகலவெனச் சிரித்தார். “ஏன்? நானும் அவருடைய யோகமுறையைப் பயிலவா?” என்று கேட்டு மீண்டும் சிரித்தார். 

“மகாராணியாரின் சர்வாதிகாரப் போக்குக்கு யோகி யின் போதனையும் காரணமாக இருக்கலாமோ?” என்று கேட்டார் களத்தூர் கோட்டத் தலைவர். 

“யோகி பரமாச்சாரிக்கு அரசியலில் ஈடுபாடு கிடை யாது. ஏதோ ஒருவிதத் தியானமுறையைப் பயிற்றுவிக் கிறார். அதற்காக ஆசிரமம் அமைத்திருக்கிறார். ஆசிரமத்தின் வளர்ச்சிக்காக அரண்மனையின் சலுகைகளைப் பெற முயல்வதில் என்ன தவறு? பொறாமை கொண்டவர்கள் ஊரில் எதையாவது சொல்லித்திரிவார்கள்” என்றார் முதன் மந்திரி. பிறகு “மகாராணியாரின் சர்வாதிகாரப் போக்குக்கு இளவரசர் தாம் காரணம்” என்றார். 

அப்போது ஜெயவர்மர் குறுக்கிட்டுச் சொன்னார்: 

“சித்திரமாயனின் நடவடிக்கைகளை மகாராணியார் கண்டிப்பதாகவும் தெரியவில்லை. சித்திரமாயனை அவனு டைய மனைவி ஆட்டிப்படைக்கிறாள். உண்மையில் நாட்டை ஆள்பவர் மகாராணியா அல்லது ராணியாரின் மருமகளா என்பதே புரியவில்லை” என்றார். பிறகு, “நகரத்தின் எல்லையில் நகரசுத்திப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பு நிலம் முழுவதும் இரண்டா வது மந்திரி அச்சுதப்பட்டரின் மைத்துனருக்கு மான்யமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது ராணியாரின் மருமகளின் ஏற்பாடு என்று தகவல் கிட்டியிருக்கிறது” என்றார். 

‘அதை நான் முன்பே மறுத்துவிட்டேனே” என்றார் முதன்மந்திரி. 

“இன்று மாலைதான் அங்கு பறையடித்து அறிவித்தார் கள். என் வீரர்கள் கேட்டதற்கு இளவரசரின் உத்தரவு என்றார்களாம்.” 

“ஓ..” – முதன்மந்திரி சிந்தனையில் ஆழ்ந்தார். தமக் குள்ளேயே, “அச்சுதப்பட்டர் இதை தடுத்திருக்கலாமே” என்று முனகினார். 

“இது மாதிரியான விஷயங்களெல்லாம் மந்திரிசபை யின் முன் விவாதிக்கப்பட்ட பின்தான் முடிவாகும். ஆனால் இப்போது அந்த நடைமுறைகளை நிறுத்திவிட்டு, இளவரசரே உத்தரவு பிறப்பிப்பதென்றால்… அச்சுதப் பட்டர், சின்ன ராணி மேகலாவைத் தூண்டிவிட்டுத் தம்முடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வதாகத் தெரிகிறது.” – செங்கரைக் கோட்டத் தலைவர் பொருமினார். 

“நாட்டின் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக் கும் போது, கோட்டத் தலைவர்களுக்கும் அறிவித்து விட்டுத் தான் செய்யப்படுவது வழக்கம், எந்த விதிமுறை களைப்புகுத்துவதாக இருந்தாலும், மந்திரிசபையைக்கூட்டி, சபையின் ஆலோசனைகளைப்பெற்ற பிறகே செயலுக்குக் கொண்டு வரப்படும். இப்போது, கட்டளைகள் நேரடியாக அரண்மனையிலிருந்து செயல்படுத்தப்படுவது கவ லையை அளிக்கிறது” என்றார் களத்தூர் கோட்டத்தலைவர். 

“நீங்கள் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாக இருங் கள். நானும் இதுபற்றிச் சிந்திக்காமல் இல்லை. நீங்கள் வீரப் போட்டியைப் பார்த்துவிட்டு, நிம்மதியாக உங்கள் கோட் டங்களுக்குச் செல்லுங்கள்” என்றார் முதன் மந்திரி. அவருடைய குரலில் கவலை தொனித்தது. 

கூட்டம் முடிந்து கோட்டத் தலைவர்கள் விடை பெற்றுச் சென்றபோது, அவர்களிடம் உற்சாகமில்லை. முதன்மந்திரியின் வாக்கில் நம்பிக்கை வைத்து ஓரளவு மனச் சமாதானத்துடன் சென்றனர். கடைசியாக, காஞ்சிநகர் பாது காவல் தலைவர் விடைபெற்றபோது, “வீரப்போட்டி நடை பெறும் சமயத்தில் உங்கள் ஊர்க்காவல் படையினரை ஜாக் கிரதையாகக் கண்காணிக்கும்படி செய்யுங்கள். வீரத்திரு விழாவின் ஆரவாரத்தைப் பயன்படுத்தி வேறு ஏதாவது தீமைகள் நேரலாம். விழிப்புடனிருங்கள்” என்றார் முதன் மந்திரி. 

“அப்படி ஏதாவது நடைபெறலாம் என்று எதிர்பார்க் கிறீர்களா?” என்று ஜெயவர்மர் கவலையுடன் கேட்டார். 

“முன் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னேன். அவ்வளவுதான்” என்றார் முதன்மந்திரி. 

ஜெயவர்மர், தம்முடைய மாளிகைக்குத் திரும்பிய போது, மனம் குழம்பிப்போயிருந்தார். தலைநகரிலேயே கொடுமையான குற்றங்கள் நடைபெற்றதை அறிந்து, மனம் கலங்கியிருந்தார். 

8. பிரேமவர்த்தினி 

பல்லவநாட்டுப் பெரிய நகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவற்றில்தாம் வழக்குகள் விசாரணை செய்யப்படும். அதில் தலைவராக அமர்ந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குபவரை, மந்திரிசபையின் ஆலோசனை யைக் கேட்டே மன்னர் நியமிப்பது வழக்கம். 

அந்த அவைத் தலைவரின் தீர்ப்பை எதிர்த்து முறை யிட, தலைநகரான காஞ்சியில், தர்மாசனம் என்ற மன்றம் ஒன்றிருந்தது. அந்த மன்றத்தில் மன்னரே அமர்ந்து மேல் முறையீட்டைக் கேட்டுத் தீர்ப்பு வழங்கி வந்தார். இக்காலத்தில் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று இருப்பது போன்ற ஓர் அமைப்பு, அக்காலத்திலும் இருந்தது. 

அந்த அறங்கூர் மன்றங்களில் அக்காலத்திலேயே லஞ்சம் இடம் பெற்றிருந்தது என்று பல்லவ மன்னரான மகேந்திரவர்மனே குறிப்பிட்டுள்ளார்.* 

*இக்கால நீதிமன்றங்களைப் பற்றிய செய்திகளைப் படித்துப் பொருமிக் கொண்டிருக்கும் வாசகர்கள், ‘பழங்காலத்தில்கூட நீதிமன்றங்களில் ஊழல் இருந்ததே!’ என்று மனச்சாந்தி அடைந்துகொள்ளலாம். 

காஞ்சிமாநகரின் அறங்கூர் அவைத் தலைவரின் வீட்டுக் கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அந்நேரத்தில் வீடு தேடி வந்தவரைக் கண்ட அறங்கூர் அவைத் தலைவர் திகைப்புற்றார். தம்மைத் தேடி வந்திருப்பவர், பல்லவ சாம்ராஜ்யத்தின் இரண்டாவது மந்திரி அச்சுதப்பட்டர் என்பதை அறிந்த தலைவருக்குக் கையும் காலும் ஓட வில்லை. 

“உம்மிடம் ஒரு முக்கியமான காரியமாக வந்திருக் கிறேன்” என்றார் அச்சுதப்பட்டர். 

“மந்திரி அவர்கள் சொன்னதைச் செய்யக் காத்திருக் கிறேன்” என்றார் தலைவர், குழைந்தபடி. 

“உம்முடைய பதவிக்காலம் முடிய இன்னும் இரு திங்களே இருக்கின்றன. மேற்கொண்டு ஓராண்டிற்கு உம்மையே தலைவராக நியமிக்க நான் முயற்சி செய்யலாம் என்று எண்ணுகிறேன்” என்றார் அச்சுதப்பட்டர். 

இதைக் கேட்டதும் தலைவர் இன்னும் குழைந்தபடி, “மிக்க மகிழ்ச்சி. தங்கள் உதவியை ஒருநாளும் மறக்க மாட்டேன்” என்றார். 

“எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்.” 

“தாங்கள் கட்டளையிட்டாலே செய்யக் காத்திருக்கிறேன்.” 

“நாளை அறங்கூர் அவைக்கு ஒரு குற்றவாளி கொண்டு வரப்படுவான். முதன்மந்திரியின் சார்பில் அவனைக் கொண்டு வருவார்கள்.” 

“நான் என்ன செய்யவேண்டும்?” என்று தலைவர் சந்தேகத்துடன் கேட்டார். 

“அவனை விடுதலை செய்துதீர்ப்புக் கூறவேண்டும்.” 

“ஆ….!” தலைவர் பயத்தினால் அலறிவிட்டார். “விசாரிக்காமல் எப்படித் தீர்ப்புக் கூறமுடியும் ?” என்று பதற்றத்துடன் கேட்டார். 

“நடந்தது இதுதான். ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறாள். அவைக்குக் கொண்டுவரப்படும் குற்றவாளி, குற்றத்துக்கு உடந்தையே தவிர, அந்தக் குற்றத்தைப் புரியவில்லை. பெண்ணின் சடலத்தை அகழி யில் வீசியபோது அகப்பட்டுக் கொண்டான்.” 

“இது மாபெரும் குற்றமல்லவா? எப்படி விடுதலை செய்ய முடியும் ? அதுவும், அறங்கூர் அவையத்தில் நகரத்து மக்களும் வந்திருப்பார்களே.” 

”இதற்குத் தகுந்த சாட்சி ஏதும் கிடையாது. குற்றவாளி தப்பிவிட்டான்.” 

“முதன்மந்திரியிடமிருந்து வரும் வழக்காயிற்றே” என்று பயந்து நடுங்கி நின்றார் தலைவர். 

“இதில் மிகமுக்கியமான நபர் தலையிட்டிருப்பதால் தான் நான் வந்திருக்கிறேன். நீர் அவனுக்குக் கொலை தண் டனை வழங்கிவிட்டால் பிறகு, அவன் குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துவிடுவான்.” 

அறங்கூர் அவைத்தலைவர் தயங்கினார். அச்சுதப் பட்டர் சொன்னார், “நீர் தயங்க வேண்டியதே இல்லை. உம்முடைய தீர்ப்பைப் பொறுத்துத்தான் உம்முடைய பதவி காலத்தை ஓராண்டுக்கு நீட்டுவது பற்றிப் பரிசீலிக்கப்படும். இதை மனத்தில் கொண்டு நாளை நீர் தீர்ப்புக் கூற டு வேண்டும்.” 

“உண்மையான குற்றவாளி யார்?” 

“அது ராஜாங்க இரகசியம். அதை நான் சொல்வதற் கில்லை. இளவரசருக்கு வேண்டிய ஒரு நபர். அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, இளவரசருக்கு. நீர் செய்யும் இந்த உதவி, இந்த சாம்ராஜ்யத்துக்கே செய்யும் உதவி மாதிரி. இதற்குமேல் நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்று கூறிவிட்டு, தலைவரின் பதிலை எதிர்பாராமலே எழுந்து வாசலை நோக்கி நடந்தார் அச்சுதப்பட்டர். 

அங்கிருந்து புறப்பட்ட அவருடைய பல்லக்கு, அரண் மனையின் தோட்டத்தில் போய் இறங்கியது. அரண்மனை யில் இளவரசன் சித்திரமாயன், அவருக்காக ஆவலுடன் காத்திருந்தான். 


மறுநாள் காலையில் முதன்மந்திரி தரணி கொண்ட போசர், அரண்மனைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது அவருடைய மெய்க்காவல் வீரன் ஒருவன், அவருக்கு எதிரே பணிவுடன் நின்றான். 

“அறங்கூர் அவையத்துக்குக் குற்றவாளியை அழைத் துச் செல்ல வேண்டாம். நம்முடைய கண்காணிப்பிலேயே இருக்கட்டும். அவனை விடுவிக்கவோ, கொலை செய்யவோ முயற்சி நடக்கலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கட்டளை இட்டுவிட்டுப்பல்லக்கில் ஏறினார், முதன்மந்திரி. 

அரண்மனையின் பிரதான மண்டபத்தினுள் முதன் மந்திரி சென்றதுமே, மகாராணியின் மெய்க்காவலர் இருவர் அவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். உள் மண்டபத்தில் நுழைந்ததுமே, மகாராணி பிரேமவர்த்தினி யின் கவர்ச்சி, அந்த மண்டபம் முழுவதும் பரவி நிறைந் திருப்பது போல் உணர்ந்தார், முதன் மந்திரி. மகாராணியின் அருகில் இளவரசன் சித்திரமாயன் இருந்ததைக் கண்டதும் சற்றுத் தயங்கி நின்றார். 

“முதன் மந்திரியாரே, வாருங்கள். இங்கே இளவரசன் தானிருக்கிறான். சும்மா வாருங்கள்” என்று வரவேற்றாள் பிரேமவர்த்தினி. 

முதன் மந்திரி, வலிய புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, சம்பிரதாயமாக மகாராணிக்கும், இளவரச னுக்கும் வணக்கம் செலுத்திவிட்டுத் தன்னுடையஆசனத் தில் அமர்ந்தார். 

மகாராணியின் அழகும், கம்பீரமும் உலகப்பிரசித்தம். தரணி கொண்ட போசர், அவளைச் சந்திக்கும் போதெல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். அவளுடைய கம்பீரம், எதிராளியின் சிந்தனையைப் பாதித்து விடக் கூடிய அளவுக்கு அதீதமானது. 

“வீரப்போட்டிக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகி விட்டதா?”- மகாராணி கேட்டாள். 

“எல்லாம் நல்லபடியாக நடைபெறுகின்றன. ஆனால், மக்களிடந்தான் உற்சாகமில்லை.” 

“ஏன்….” 

“மன்னர் இல்லாதது ஒன்று. இடைஇடையே அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் வேறு” என்று கூறிவிட்டுப் பக்கத்திலிருந்த இளவரசனைப்பார்த்தார். 

“என்ன சங்கடங்கள்?” – மகாராணி கேட்டாள். 

“கைலாசநாதர் கோயிலின் முன்னாலிருந்த அங்காடிகள் இடிக்கப்பட்டன…” 

முதன் மந்திரி கூறி முடிப்பதற்குள் சித்திரமாயன் குறுக்கிட்டு, “அதற்குத்தான் நீங்கள் ஈடுகட்ட உத்தரவு கொடுத்து விட்டீர்களே” என்றான். 

“பொருள் நஷ்டந்தானே? இடிக்கப்பட்டபோது அவர் களுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்தை எந்த நஷ்டஈடும் தணிக்காதே.” 

“கோயில் வீதியைச் சுத்தப்படுத்தி அழகு படுத்தியது தவறு என்கிறீர்களா, மந்திரி அவர்களே?” என்று கேட்டான். 

“இளவரசரின் நோக்கத்தில் நான் தவறு கூறவில் லையே. அப்படி அவர்கள், புனிதமான இடத்தில் கடை பரப் பியதும் தவறுதான்.” 

“பின்னே ….” 

“நிறைவேற்றிய விதந்தான் மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது, தேவியார் அவர்களே” என்று மகாராணியைப் பார்த்துப் பதில் சொன்னார் மந்திரி. 

தன்னைப் பார்த்து பதில் கூறாமல் ராணியிடம் கூறியது சித்திரமாயனுக்குக் கோபத்தை மூட்டியது. 

“நீங்கள் நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டது தான் தவறு” என்றான் கோபத்துடன். 

“இளவரசர் முதலில் நஷ்டஈட்டை அறிவித்துவிட்டுப் பிறகு இடித்திருக்க வேண்டும். அதுதான் முறை. ஆட்சியின் பண்பும் அதுதான்.” 

“ஓ… எனக்குப் பண்பாட்டைக் கற்றுத் தர முயல்கிறீர்களா” என்று சீறினான், சித்திரமாயன். 

“நான் கற்றுத் தரவில்லை இளவரசே, எடுத்துச் சொல் கிறேன்” என்று கூறி, மெல்லச் சிரித்தார், முதன் மந்திரி. அந்தச் சிரிப்பில் உள்ளடங்கியிருந்த கோபத்தையும், ஏளனத்தையும் புரிந்து கொண்ட மகாராணி, குறுக்கிட்டுக் கூறினாள்: “இளவரசன் சிறுவன் தானே. போகப்போகத் தெரிந்து கொள்வான். இளம் இரத்தம். நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றதுடிப்பு.” 

கூடுமானவரை இளவரசர், அவசரப்பட்டு ஆட்சிப் பொறுப்பில் தலையிடாமலிருந்தால் நல்லது” என்றார், மந்திரி. 

“ஏன்? ஆட்சியில் எனக்கு அக்கறை இருக்கக் கூடாதா?” கோபத்துடன் கேட்டான் சித்திரமாயன். 

முதன் மந்திரி புன்முறுவல் மாறாமலே பதில் சொன் னார். “இளவரசருக்குக் கோபம் வருகிறது. அக்கறை இருக்க வேண்டியதுதான். இந்த நாட்டை வருங்காலத்தில் ஆள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், இப்போது ஆட்சியின் நடைமுறைகளில் அவசரப்பட்டுத் தலையிடும்போது, நிர்வாகக் குழப்பங்கள் ஏற்படும் என்று தான் சொல்கிறேன்.” 

அந்தச் சமயத்தில் இளவரசனைக் காண யாரோ காத்திருப்பதாக ஒரு காவல் வீரன் வந்து அறிவிக்கவே, இளவரசன் அந்த மண்டபத்தை விட்டு அவசரமாக வெளியேறினான். சித்திரமாயன் சென்றதும், மந்திரி, மகாராணி யிடம், “தேவியார் இளவரசரைக் கண்டித்து அடக்கினால் நல்லது என்று எண்ணுகிறேன்” என்றார். 

“கண்டித்து அடக்கும் அளவுக்கு அவனால் என்ன கேடு விளைகிறது, முதன்மந்திரியாரே ?” என்று பிரேமவர்த்தினி கேட்டபோது, அவளுடைய குரலில் தொனித்த கோபத்தை மந்திரி புரிந்து கொண்டார். மகாராணி தொடர்ந்து பேசினாள். “காஞ்சி நகரை அழகுபடுத்த அவன் விரும்பி யது தவறா ? கோயிலைச் சுற்றி அசுத்தப்படுத்திக் கொண்டிருந்த அங்காடிக்காரர்களை அப்புறப்படுத்தியது தவறு என்கிறீர்களா? நான்தான் அவனுடைய முயற்சிக்கு ஊக்கமளித்தேன்.” 

தரணி கொண்ட போசர் முகம் கோணாமல் புன்முறு வலுடனேயே பதில் சொன்னார். “மக்களின் மனப்போக்கை தேவியாருக்குத் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை.” 

“அதற்காக மக்கள் எப்படி நடந்து கொண்டாலும் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?” 

“தண்டிக்க வேண்டிய தருணம் வரும்போது தாட் சண்யம் காட்ட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் புழக்கத்திலுள்ள நடைமுறைகளை மாற்றியமைக்க நாம் விரும்பும்போது, நிதானமாகத்தான் செயல்பட வேண் டும். மன்னர் போர்க்களம் சென்ற பிறகு, காஞ்சிநகரில் மக்களின் பாதுகாப்புக்குக் கூடக் குந்தகம் நேரிடுகிறது.” 

இதைக் கேட்டதும் மகாராணி கோபத்துடன், “மந்திரியாரே! மன்னர் இல்லாததால் இப்போது என்ன தீமை நடந்துவிட்டது ? சக்கரவர்த்தி இல்லாத வேளையில் நான் நல்ல முறையில் ஆளவில்லை என்று குறை கூறுகிறீர்களா?” என்று கேட்டாள். 

“மன்னிக்க வேண்டும் மகாராணியாரே. அந்த எண்ணத்தில் நான் சொல்லவில்லை. மன்னர் இல்லாத சமயத்தில் ஆட்சியில் கொடுமை எதுவும் நடைபெற்றதாக அவச்சொல் மக்களிடமிருந்து வந்துவிடக்கூடாது என்று தான்…. தங்களை நம்பித்தான் ஆட்சிப்பொறுப்பை மன்னர் ஒப்படைத்திருக்கிறார். தாங்கள் ஆட்சித் திறனில் குறைந்த வரல்லர். பொதுவாக மக்களின் மனத்தில் திருப்தி இல்லை என்பதைத்தான் தெரிவிக்கிறேன். தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை.” 

மகாராணி, கோபம் தணிந்தவளாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். 

“மந்திரி அச்சுதபட்டருடைய உறவினருக்கு இளவர சரே நிலமான்யம் வழங்கிவிட்டார்” என்றார், முதன் மந்திரி. 

“ஏன், நாட்டின் இளவரசனுக்குத் தனக்கு வேண்டிய வர்களுக்கு மான்யம் வழங்கும் உரிமை இல்லை என்கிறீர்களா?” 

“அந்த இடம் நகரசுத்திப் பணியாளர்களின் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டு, மக்களிடையே அறிவிப்பும் மன்னர் இருக்கும்போதே செய்தாகிவிட்டது. இப்போது, அதை மறுத்து ஒருவருக்கு மான்யமாக வழங்குவது நியாயமில் லையே. மேலும் இந்த மாதிரி மான்யங்கள் பற்றிய விஷயங் களை முன்கூட்டியே மந்திரிசபையில் விவாதித்து, ஆலோ சனை பெற்ற பிறகு தான் முடிவு செய்யவேண்டும்.” 

“ஓ… ஒவ்வொரு விஷயத்துக்கும் மந்திரிசபையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமோ? அப்படியானால் மன்னர் எதற்கு? படைகள் எதற்கு?” – மகாராணி படபடப்புடன் கேட்டாள். 

முதன் மந்திரி அமைதியாக, “மந்திரி சபையின் ஆலோசனைப்படி நடப்பதற்கு” என்றார். 

“நான் அதற்குத் தயாரில்லை.” 

“தேவியாரின் முடிவு இதுதானென்றால் இந்நாட்டிற்கு மந்திரிகளே தேவையில்லை. நான் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியவாறே முதன்மந்திரி, தம்முடைய கைவிரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றினார். 

மகாராணி திடுக்கிட்டாள். “நான் பொதுவாக மந்திரி சபையைக் குறிப்பிட்டேனே தவிர, முதன் மந்திரியைக் குறிப்பிடவில்லையே. நீங்கள் முத்திரை மோதிரத்தை கழற்ற வேண்டிய அவசியமில்லை. அணிந்து கொள்ளுங்கள்” என்றாள். 

“மந்திரி சபைக்கு நான்தான் தலைவன். சபையின் கௌரவம் குறையாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது” என்றார், முதன்மந்திரி, திடமாக. 

மகாராணி சற்று நேரம் தரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். பிறகு மந்திரியைப் பார்த்து, “உங்களு டைய கடமையை நான் உணர்கிறேன். வேறு எதாவது சொல்லவேண்டுமா?” என்று அலுப்புடன் கேட்டாள். 

“கோட்டத் தலைவர்களிடம் கொஞ்சம் அதிருப்தி நிலவுகிறது” என்றார் மந்திரி. 

“என்ன?” 

“அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல், அவர்களுடைய கோட்டங்களில் நம்முடைய ஆணைகளை மக்களுக்கு அறிவிப்பதை அவர்கள் விரும்பவில்லை.” 

“அரசின் கட்டளையை ஒவ்வொரு கோட்டத் தாரிடமும் அனுமதி பெற்றுத்தான் நிறைவேற்ற வேண்டுமோ?” என்று கோபத்துடன் கேட்டாள் மகாராணி. 

“வேண்டும் என்று விதிமுறை இல்லை. ஆனால் அதுதான் சம்பிரதாயம். நாம் அவர்களை மதிக்கிறோம் என்று அர்த்தம்.” 

“கோட்டத் தலைவர்கள் நம் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் தாமே? 

“இருந்தாலும், அவர்கள் சாதாரண பிரஜைகளைப் போலல்லவே. அவர்கள் கோட்டங்களின் தலைவர்கள், ராஜப்பிரதிநிதிகள்.” 

“ஓ….” – மகாராணி ஏளனமாக முகத்தைச் சுளித்தாள். “யாராயிருந்தாலும், அரசின் ஆணைக்கு உட்பட்டவர் கள்தாம். அவர்களிடம் கேட்டுக்கொண்டுதான் கட்டளைகளைச் செயல்படுத்துவதென்பது வழக்கத்திலிருந்தால், அது மோசமான வழக்கமே. அதை மாற்றியமைக்க வேண்டியதுதான்” என்றாள். பிறகு, “வேறு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?” என்று கேட்டாள். 

“நேற்று ஒரு கொடுமை காஞ்சியில் நடைபெற்று விட்டது” என்றார் தரணிகொண்டபோசர். 

“கடைகளை இடித்ததைத்தானே சொல்லவருகிறீர்கள்?” என்று எரிச்சலுடன் கேட்டாள் மகாராணி. 

“அங்காடிகள் இடிக்கப்பட்டது மிகவும் அற்பமான விஷயம், தேவியாரே; நேற்று நடைபெற்ற கொடுமை பல்லவ ஆட்சிக்கே அவமானமானது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு மரணமடைந்தாள்.” 

“ஆ…”- மகாராணி திடுக்கிட்டாள். “காஞ்சியிலா? மந்திரியாரே யார் அந்தக் கொடுமையைச் செய்தவன்? அந்த அபலை யார் ?’ – படபடப்புடன் வினவினாள். 

“குற்றவாளி தப்பிவிட்டான். கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் கடத்திச் சென்று கொடுமை புரிந்திருக்கிறான். பெண்ணின் சடலம்தான் அகழியில் அகப்பட்டது.” 

மகாராணியின் முகம் பயத்தினால் வெளுத்துவிட்டது. தலையைக் குனிந்து சிந்தித்தவாறு அமர்ந்திருந்தாள். “குற்றவாளியை எப்படியும் கண்டுபிடித்துத் தண்டித்தே ஆகவேண்டும்” என்றாள் ஆவேசத்துடன். 

அப்போது உள்ளே வந்த சித்திரமாயன், “எந்தக் குற்றவாளியை?” என்று கேட்டவாறு, மகாராணியின் அருகேயிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். 

“நேற்று ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்ற வாளியை” என்று கூறிய முதன் மந்திரி, இளவரசனைக் கூர்ந்து பார்த்தார். 

“ஓ…. கொலையா? குற்றவாளி அகப்பட்டானா?” என்று கேட்டான் இளவரசன். 

“தப்பிவிட்டானாம்” என்று கூறிவிட்டு, மகாராணி யைப் பார்த்து, “நான் விடைபெறுகிறேன், தேவியாரே” என்றார், முதன்மந்திரி. 

அவருடன் அரண்மனை வாயில்வரை சென்ற இளவ ரசன், பல்லக்கில் மந்திரி ஏறப்போகும் தருணத்தில், “நேற்று யாரோ ஒரு குற்றவாளியைப் பிடித்திருப்பதாகத் தகவல் வந்ததே” என்றான். 

மந்திரி ஒன்றும் புரியாதவர்போல் அவனைத் திரும்பிப் பார்த்தார்.”அப்படியா…? என்ன குற்றமாம்?” என்று கேட்டார். 

“அது முதன் மந்திரிக்கல்லவா தெரிந்திருக்கும்.”

தரணிகொண்டபோசர் மெல்லச் சிரித்தார். “நகரில் நடைபெறும் குற்றங்கள் அனைத்தையும் நான் தெரிந்து வைத்துக் கொள்ள முடியுமா ? குற்றவாளியைக் காவல் படையினர் சிறைப்படுத்தியிருப்பார்கள்” என்றார். 

“இன்று அறங்கூர் அவையத்தில் அவனை ஒப்படைப் பதாகக் கூடச் செய்தி கிடைத்ததே.” 

“இளவரசர் யாரோ ஒரு குற்றவாளியின்மீது இவ்வளவு அக்கறை கொண்டு கேட்கிறீர்களே, குற்றவாளி தங்களுக்குத் தெரிந்தவனா?” என்று கேட்ட முதன்மந்திரி, சித்திரமாயனை உற்றுப் பார்த்தார். 

சித்திரமாயன் துணுக்குற்றான். “இல்லை, ஏதோ தகவல் வந்தது. அவ்வளவுதான்” என்று கடுகடுப்புடன் கூறினான். பிறகு மெல்ல, “முதன் மந்திரி, இரவு பகலென்று பாராது பணியாற்றுவது அறிந்து மிக்க மகிழ்ச்சியடை கிறேன்” என்று கூறிவிட்டுக் குறும்பாகச் சிரித்தான். 

“தாங்கள் எதை மனத்தில் கொண்டு இதைச் சொல்கி றீர்கள் என்று புரியவில்லையே.” 

“நேற்று இரவு, நடு ஜாமத்துக்கு மேலும் உங்கள் மாளிகையில் கோட்டத் தலைவர்களின் கூட்டம் நடை பெற்றதைத்தான் சொல்கிறேன்.” 

“ஓ… அதைக் குறிப்பிடுகிறீர்களா?” 

“கோட்டத் தலைவர்களுக்குப் பகலில் நேரம் வாய்க்க வில்லை போலிருக்கிறது.’ 

முதன் மந்திரி சிரித்துக் கொண்டே, “அப்படித்தான் நினைக்கிறேன். அரசாங்கப் பணியென்றால், இரவு பகல் பார்க்க முடியுமா? எப்போது நேரம் கிடைக்கிறதோ அப் போதுகவனிக்க வேண்டியதுதானே” என்றார். 

“ஆமாம், ஆமாம், முதல் மந்திரியாயிற்றே. பல்லவ சாம்ராஜ்யத்தின் மந்திரி சபைத் தலைவருக்கு எந்நேரமும் பணியாற்ற வேண்டிய கடமை இருக்கிறதே” என்று கூறி மெல்ல நகைத்தான், சித்திரமாயன். 

“இளவரசருக்கு என்னுடைய மந்திரிசபை பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கிறது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியவாறே பல்லக்கில் ஏறப்போன முதன் மந்திரி, சட்டென்று திரும்பி, “நான் மட்டுமென்ன, என் மந்திரிசபையில் உள்ள மற்றவர்களும் இப்படியே நேரம் காலம் பாராமல் பணியாற்றுகிறார்கள், இளவரசே! நேற்று கூட இரவு நடு ஜாமத்துக்கு மேல் இரண்டாவது மந்திரி, அச்சுதப்பட்டர், அறங்கூர் அவைத் தலைவரின் இல்லத் துக்குச் சென்று வந்தார்!” என்று கூறிவிட்டுப் பல்லக்கில் ஏறினார். கடைக்கண்ணால் சித்திரமாயனைக் கவனித்தார். அவனுடைய முகம் இறுகிப் போயிருந்தது. கண்களில் குரோதம் நிரம்பியிருந்தது. 


தரணிகொண்ட போசர், தம்முடைய மாளிகையை அடைந்தபோது, அவருக்காகக் காத்திருந்த ஜெயவர்மர், பரபரப்புடன் விரைந்து பல்லக்கை நெருங்கி வந்தார். 

“குற்றவாளியை அறங்கூர் அவையத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று கட்டளை இட்டீர்களாமே?” என்று கேட்டார். 

“அனுப்பி என்ன பயன் ? அவைத் தலைவர் அவனை விடுதலை செய்யக் காத்திருக்கிறார்.” 

“ஆ….!” வியப்புத் தாளாமல் கூவினார், ஜெயவர்மர். “ஆமாம். விசாரணையெல்லாம் பெயருக்குத்தான் நடைபெறும்.” 

“அவைத் தலைவர் நேர்மையானவராயிற்றே.’ “நேற்றுவரை” என்று கூறிச் சிரித்தார் முதன் மந்திரி. 

“நம்பவே முடியவில்லையே” என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார், ஜெயவர்மர். 

“அரசியல் காரியங்களில் சிலர் எப்படியெல்லாமோ மாறி, ஈனத்தனமாக நடந்து கொள்வார்கள். பதவி ஆசை, ஒருவனை எவ்வளவு இழிந்த செயலையும் செய்ய வைத்துவிடும். ஜெயவர்மரே, எல்லாரும் உங்களைப் போல் நேர்மைக்காக ஒரு நொடியில் பதவியைத் துறக்கமுன் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார் முதன் மந்திரி. 

ஜெயவர்மர் பெருமூச்சு விட்டார். “யார்தான் ஈனர் களாக மாறுவார்கள் என்றில்லையா? நீதி வழங்கும் அறங்கூர் அவைத் தலைவர் கூடவா…?” என்று வெறுப்பு டன் தலையில் அடித்துக்கொண்டார். பிறகு, மிகுந்த ஆவலு டன் “குற்றவாளிதான் யார்? அதாவது தெரிந்ததா?” என்று கேட்டார். 

“சற்றுப் பொறுங்கள். சீக்கிரமே உங்களுக்கு உண்மை தெரியவரும்” என்றார் முதன்மந்திரி. 

“இந்தக் குற்றவாளியைச் சிறைக்கு அழைத்துச் செல்லட்டுமா?” 

“இப்போது இவன் என் பொறுப்பிலேயே இருக்கட்டும்” என்றார், முதன்மந்திரி. 

9. தியானப் பயிற்சி 

அரண்மனைத் தோட்டத்தில் குதிரை பூட்டிய இரதம் ஒன்று வந்து நின்றது. அது அரண்மனையை சேர்ந்த அலங்கார இரதம். மிக முக்கியமான நபரை அரண்மனைக்கு அழைத்து வரவேண்டுமென்றால், அந்த இரதந்தான் அனுப்பப்படும். 

அந்தக் காலத்தில், இரதங்கள், போர்ப்படையில்பயன் படுத்தப்படவில்லை. பெரிய நகரங்களில் ராஜகுடும்பத்தினரும், பிரபுக்களும் செல்வதற்காக, குதிரை பூட்டிய சிறு இரதங்களிருந்தன. செல்வச் செழிப்புக்குத் தக்கபடி இரதங் கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மன்னர்களும், மகாராணி களும் செல்லும் இரதங்கள் மட்டும் இரு குதிரைகள் பூட்டப் பட்ட வனவாயிருந்தன. அப்படி ஓர் அலங்கார இரதந்தான் அரண்மனைத் தோட்டத்தில் வந்து நின்றது. 

யோகி ருத்திர பரமாச்சாரி, அதிலிருந்து இறங்கினார். ஐம்பது வயதிருக்கும். அடர்ந்த குட்டையான தாடியும், மீசையும் முகத்துக்கு வசீகரத்தையும், கண்ணியமான தோற்றத்தையும் கொடுத்தன. அடர்த்தியான தலைமுடி தோளில் புரண்டு கொண்டிருந்தது. கண்களில் தோன்றிய ஒளி, சுற்றுப்புறம் முழுவதும் பரவி, ஆக்கிரமிப்பது போலிருந்தது. 

இரண்டு ஆண்டுகளாக காஞ்சி மக்களின் கவனம் அவர் மீது திரும்பியிருந்தது. அவருடைய சக்தியைப் பற்றிப் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நீர் மேல் நடப்பார். நெருப்பில் படுப்பார் என்றெல்லாம் வதந்தி பரவி யிருந்தது. சித்துசக்திகள் கைவரப்பெற்றவர் என்று மக்கள் நம்பியதால், அவர் மீது மக்களுக்குப் பயம் தோன்றியிருந்தது, வைதிகர்கள் அவருக்கு எதிரிகளாயிருந்தனர். பேரின்ப உணர்வைப்பெற அவர் பயிற்றுவித்த தியான முறையைப் பற்றிப்பலர், பலவிதமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய ஆசிரமத்தையே காஞ்சி நகரத்திலிருந்து அப் புறப்படுத்திவிட வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 

சிற்றின்பத்தின் அடிப்படையில் கூட பேரின்பத்தை அடையலாம் என்ற அவருடைய போதனை, வைதிகர் களைத் திகைக்க வைத்தது. ஆண்-பெண் உறவிலேயே குண்டலினி சக்தியை மலரவைத்துப் பேரொளியைக் காணமுடியும் என்ற அவருடைய எளிமையான சித்தாந்தம், அவருடைய ஆசிரமத்தினுள் ஒரு பயிற்சியாகவே போதிக் கப்பெற்று வந்ததை அறிந்து வைதிகர்கள் திகைத்தனர். எதிர்த்துப் பிரச்சாரம் கூடச் செய்தனர். 

சமண, பெளத்த சமயங்களின் செல்வாக்கு ஒழிக்கப் பட்டு சைவ, வைணவ சமயங்கள் செல்வாக்கிலிருந்த காலம் அது. நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சைவ சமயத்தை நன்கு வேரூன்ற வைத்திருந்தார்கள். ஆழ்வார்கள், வைண வத்தைப் பலப்படுத்தியிருந்தார்கள். அந்த வேளையில், ருத்திரப் பரமாச்சாரியின் சித்தாந்தம் வைதிகர்களிடையே கோபத்தை மூட்டியதில் வியப்பில்லை. அரண்மனையின் ஆதரவு அவருக்கு இருந்ததால், வைதிகர்களால் அவருக்குத் தீங்கிழைக்க முடியவில்லை. 

இரதத்திலிருந்து இறங்கி அரண்மனை அந்தப்புரத்தின் வாயிலை நெருங்கியபோது, மகாராணியின் தாதியர் இருவர் எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். மகாராணியின் பேட்டி மண்டபத்துக்குச் சென்றதும் தாதியர் இருவரும் வெளியே நின்றுவிட்டனர். ஒருத்தி மற்றவரிடம், “இந்த வயதிலும் எப்படி இருக்கிறார் பார்த்தாயா? எவ்வளவு கம்பீரம்! முகத்தில் தான் எவ்வளவு களை ! அவருடைய கண்களைப் பார்த்தாயா?” என்று வியப்புடன் கேட்டாள். 

“ஐயோ, அவருடைய கண்களை என்னால், ஏறிட்டே பார்க்க முடியாது. அவருடைய பார்வைக்குத் தான் எவ் வளவு சக்தி. பார்த்தவர்களை அப்படியே மயக்கிவிடும் போலிருக்கிறது!” என்றாள், மற்றொருத்தி. 

“பெரிய மகான் என்கிறார்களே.” 

“சித்துசக்தி உள்ளவராம். இல்லையென்றால், மகா ராணி இவருக்கு இவ்வளவு மரியாதை செலுத்துவார்களா.” 

“அவருடைய ஆசிரமத்திலே ஏதோ நடக்கிறதாமே” என்று கூறியவள், மெல்ல இரகசியக் குரலில், “காதல் லீலைகளைச் சொல்லிக் கொடுக்கிறாராமே, அப்படியா?” என்று கேட்டாள். 

மற்றொருத்தி இரகசியமாகச் சொன்னாள். “நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். அவருடைய யோக முறையில் அதுவும் ஒன்றாம். யார் வேண்டுமானாலும் தீட்சை பெறலாமாம். நாமும் ஒரு நாள் அங்கே போய்ப் பார்க்கலாமா?” 

தாதிகள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, தலைமைத் தாதி அந்தப் பக்கம் வரவே, தாதிகள் இருவரும் மெல்ல அவ்விடத்தை விட்டு அகன்றனர். 

ருத்திர பரமாச்சாரியைப் பேட்டி மண்டபத்தின் வாயி லில் கண்டதுமே மகாராணி பிரேமவர்த்தினி பக்தியோடு எதிரே சென்று வரவேற்றாள். மான்தோல் ஆசனத்தில் அமரச் செய்தாள். குனிந்து அவரை வணங்கி நின்ற அவ ளுடைய நெற்றிப் பொட்டில் தம்முடைய வலது நடுவிரலின் நுனியினால் தொட்டு அழுத்தினார். அப்போது மகாராணி யின் முதுகுத் தண்டில் ஒருவித உணர்வு பரவி நடுங்க வைத்தது. 

“உணர்வுகளை நன்றாகக் கவனிக்கிறாயா?” என்று கேட்டார் யோகி. 

எதிரே இருந்த ஆசனத்தில் மகாராணி அமர்ந்தவாறே

“தொடர்ந்து முடியவில்லையே, சுவாமி. தியானிக்கும் போது எண்ணங்கள் இடையே வந்துவிடுகின்றன” என்றாள். 

ருத்திரபரமாச்சாரி புன்முறுவலுடன் கனிவோடு அவளைப் பார்த்தார். 

“எண்ணங்களைப் பற்றிய கவலை எதற்கு? அவை வரும் போகும். மனம், எண்ணங்களுடைய பாதை. எண்ணங்கள் அங்கு உலவத்தான் செய்யும். அவைகளுக்கு இடையே போய் நீயும் சிக்கிக் கொள்ளாமல், விலகி நின்று எண்ணங்களைக் கவனி.” 

“ஒரு எண்ணம் மனத்தில் தோன்றி மறைந்ததும், அடுத்த எண்ணம் வந்துவிடுகிறதே, சுவாமி.” 

பரமாச்சாரி சிரித்தார். 

“இரண்டு எண்ணங்களுக்கு இடையே கவனி.”

“இடைவெளியே இல்லையே, சுவாமி.’ 

“இருக்கிறது. அந்த இடைவெளியில் தான் கடவுள் இருக்கிறார். இடைவெளியைக் கவனி.” 

“முடியவில்லையே. பிரச்சினைகள் அதிகமாகும் போது மனம் அதுபற்றித்தான் சிந்திக்கிறது” என்று அலுத் துக் கொண்டாள் பிரேமவர்த்தினி. 

“நாட்டை ஆளும் பொறுப்பிலிருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டேதானிருக்கும்.” 

“நாட்டுக்காக சில காரியங்களைச் செய்யும்போது மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. நாட்டுக்காக கொஞ்சம் தியாகம் செய்யக்கூடத் தயங்குகிறார்கள்.” 

“சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு அவனும், அவனைச்சுற்றியிருப்பவைகளும் தாம் முக்கியம். நாடு, தியாகம் என்பவற்றைப் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை இருக்காது. ஒரு பிரஜை எதிர் பார்ப்பவையெல் லாம் நிம்மதியான வாழ்க்கையையும் அதற்குத் தகுந்த பாது காப்பை ஆட்சி கொடுக்கிறதா என்பதைப் பற்றியும் மட்டுந்தான். அவனுடைய சொத்து சுதந்திரங்களைப் பாதிக்கும் படியான எந்த விதி முறைகளையும் ஏற்றுக்கொள்ள முன் வரமாட்டான்” என்றார், யோகி. 

“அதனால்தான் பிரச்சினை அதிகமாகிறது. நிம்மதி யாக இருந்து தியானம் செய்ய முடியவில்லை. எண்ணங் களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. நிறுத்த முயன்றால், அதிகமாகத்தான் வந்து சூழ்கின்றன.” 

இதைக் கேட்டு யோகி சிரித்தார். 

“நான்தான் தியானம் என்னும் ஓடத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேனே. ஓடத்தைச் செலுத்தவேண்டியது தான் உன் வேலை. ஓடத்தைச் சுற்றித் தண்ணீரில் தொடர்ந்து வரும் குப்பைகளையும் அழுக்குகளையும் பற்றி நீ கவலைகொள்ள வேண்டியதில்லை. எண்ணங்களோடு போராடவே வேண்டாம். ஒரு எண்ணத்தைத் தடுக்க முனைந்தால், ஓராயிரம் எண்ணங்கள் படையெடுக்கும். அவற்றை எதிர்த்து எதிர்த்து அலுத்துவிடுவாய். எண்ணங் களை அவற்றின் போக்கில் வரவிட்டுக்கவனித்துக் கொண் டிரு. அவைகளாக வரும், வந்தபடியே போய்விடும். பழகப் பழக எண்ணங்களே இல்லாத நிலையை எட்டிவிடலாம்” என்றார். 

“அந்த நிலையை என்னால் அடைய முடியுமா சுவாமி?” 

“பயிற்சியினால் அடையலாம். அந்தப் பேரானந்த நிலையை அடையவேண்டும் என்று எண்ணி எண்ணி ஏங்கவும்கூடாது. அது தானாக வந்தடையும். இந்த எளிமை யான தியான முறையைப் பழகிவா” என்றார், ருத்திர பரமாச்சாரி. 

சிறிது நேரம் அவளுக்குத் தியானப் பயிற்சியளித்து விட்டுச் சென்றார். அவர் அரண்மனைக்கு வந்துவிட்டுப் போனதினால் மகாராணியின் மனத்தில் நிம்மதியும், புத்துணர்வும் ஏற்பட்டன. ஆட்சிப் பிரச்சினையில் அவள் சோர்வுற்றபோதெல்லாம் ருத்திர பரமாச்சாரியின் அறிவுரைகள் தெம்பூட்டின. 


அன்று யோகி வருவதற்கு முன் பிரேமவர்த்தினி மிகுந்த சஞ்சலத்துக்குள்ளாகியிருந்தாள். போர்ச் செலவை முன்னிட்டு வரி விஷயமாக அவள் இட்ட கட்டளை களுக்குப் பல ஊர்களில் எதிர்ப்புத் தோன்றியிருந்ததாக வந்த செய்திகள், அவள் மனத்தில் கவலையை ஏற்படுத்தி யிருந்தன. கட்டளைகளை அறிவிக்கச் சென்ற அதிகாரியை வல்லம் என்ற ஊரில் அடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பிய செய்தியைக் கேட்டதும் மகாராணியின் கோபம் கொந்தளித்தது. அந்த ஊர் முழுவதையும் சூறை யாடித் தீக்கிரையாக்கி விடவேண்டுமென்ற வெறி தோன்றி யது. அதே சமயத்தில் முதன்மந்திரி அவளுடைய மனத்தை இன்னும் கல்லாக்கிவிட்டுப் போயிருந்தார். ருத்திர பரமாச் சாரியின் வருகைதான் அவளுடைய மனத்தில் சாந்தியை ஏற்படுத்தியது. அவர் சென்ற பிறகும் தியானத்தைத் தொடர்ந்தாள். 

தியானத்தில் அமர்ந்திருந்த பிரேமவர்த்தினிக்கு மனம் ஒடுங்கவில்லை. எண்ணங்கள் சுற்றிச் சூழ்ந்தன. அவற்றை விட்டு விலகியிருந்து கவனிப்பதைவிட்டு, எண்ணங்களுக் குள் சிக்கிப் போயிருந்தாள். 

சேச்சே, தியானம் பண்ணும்போது இதென்ன எண்ணங்கள் குறுக்கே வருகின்றன..இரண்டு எண்ணங் களுக்கு இடையே கவனிக்கச் சொன்னாரே… வாசலில் யாரோ எட்டிப் பார்ப்பது போலிருக்கிறதே. காலடி ஓசை கேட்டதே… கண்களைத் திறக்கவா…. 

மகாராணி கண்களைத் திறந்தாள். வாசலில் இளவ ரசன் சித்திரமாயன் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தான். 

“சின்னம்மாவின் தியானம் கலைந்துவிட்டதோ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். 

“தியானம் சரியாகவே செய்ய முடியவில்லை” என் றாள், பிரேமவர்த்தினி. 

‘தியானம் பூஜை எல்லாம் வயதானவர்களுக்குத்தான். உங்களுக்கு எதற்கு இதெல்லாம் ? துறவியாகப் போகிறீர் களா?” என்று கேட்டுச் சிரித்தான் இளவரசன். 

“தியானத்தில் மனநிம்மதி கிடைக்கும்” என்றாள் மகாராணி.  

“சின்னம்மா,நம்முடைய எதிரிகளை ஒழிக்காதவரை நிம்மதியாக இருக்கவே முடியாது. நாம் எது செய்தாலும் மக்களிடையே எதிர்ப்பைத் தூண்டிவிடும் சதிவேலை நடைபெறுகிறது.” 

“நீ யாரைச் சந்தேகிக்கிறாய்?” 

“நம்முடைய முதல் எதிரி, தரணிகொண்டபோசர் தான். நேற்று இரவு நடு ஜாமத்தில் அவருடைய மாளிகையில் கோட்டத் தலைவர்கள் இரகசியமாகக் கூடிப் பேசியிருக்கிறார்கள்.” 

“கோட்டத் தலைவர்களின் ஒப்புதல் இல்லாமல் நாம் கட்டளைகளை அனுப்புகிறோம் என்று அவர்கள் அதிருப்தி யடைந்திருக்கிறார்களாம். 

“அரசகட்டளைக்கு யாருடைய ஒப்புதல் வேண்டும்? உண்மை என்ன தெரியுமா? தந்தையார் ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போனதில் சிலருக்குப் பொறாமை.” 

“நீ சிறுவன் என்பதால் என்னிடம் பொறுப்பை அளித்தார்.” 

“அந்தப் பொறுப்பை ஒரு பெண்ணை நம்பிக் கொடுத் தாரே, தங்களை நம்பவில்லையே என்ற பொறாமைதான்.’ 

“ஓ…”-பிரேமவர்த்தினியின் புருவங்கள் சினத்தால் நிமிர்ந்தன. “யாருக்கு நம்மீது வெறுப்பு” 

“இரணியவர்மர் நம்முடைய தாயாதி வழியில் உள்ள வர். ஏற்கனவே பாட்டனார் இராசசிம்மவர்மர் காலத்தி லிருந்து அவருக்கு அதிகச் சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கைலாசநாதர் கோயிலைக் கட்டும் பொறுப்பு முழுவதையும் பாட்டனார் அவரிடந்தானே விட்டிருந்தார்.” 

“இப்போது கூடப் போருக்குப் பெரும் படையைத் திரட்டி உதவியவரே அவர்தானே.” 

“வழக்கமாகப்போர்க்களங்களில் அவரே முன்னின்று ஒரு பகுதிக்குத் தலைமை தாங்கிப் போரிடச் செல்பவர், இந்த முறை, தாம் போர்க்களம் போகாமல், வீரர்களை மட்டும் அனுப்பி வைப்பானேன்? அவருடைய மனத்தில் ஏதோ சதித்திட்டம் இருக்கலாம்” என்றான் சித்திரமாயன். 

“இரணியவர்மருடைய நடத்தையிலிருந்து ஏதாவது தெரியவருகிறதா?” 

“நேற்று கோயில் வாசலில் அங்காடிக்காரர்கள் கூடி ஊர்வலமாக அவருடைய மாளிகைக்குச் சென்று முறையிட் டிருக்கிறார்கள். குறைகளை நேரே இங்கே அரண்மனைக்கு வந்து மகாராணியிடம் முறையிடுவது தானே. அங்காடிக் காரர்களை விசாரிப்பதற்கு அவர்தாம் கூப்பிட்டனுப் பினாராம். காஞ்சிநகரில் நடப்பவைகளைப் பற்றி விசாரிப்பதற்கு அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை ?’ 

மகாராணி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதைக் கண்டு பொருமுகிறார்களோ என்று எண்ணிச் சீற்றம் கொண்டாள். 

“கோட்டைக் காவலுக்கு மட்டுந்தானே அவர் தளபதி. அவர் இதில் தலையிடவேண்டிய அவசியம் என்ன?” என்றான்,சித்திரமாயன். பிறகு, “தரணிகொண்டபோசர் அடிக்கடி இரணியவர்மரின் மாளிகைக்குப் போய்வருகிறார். இப்போது கூட அங்குதான் போயிருக்கிறார்” என்றான். 

அந்தச் சமயத்தில் பணியாள் வந்து வாசலில் காவல் வீரன் ஒருவன் காத்திருப்பதாக அறிவித்தான். காவல் வீரனை உள்ளே அனுப்பும்படி உத்தரவிட்டான், சித்திர மாயன். சற்று நேரத்தில் உடலில் இரத்தக் காயங்களுடன் ஒரு வீரன் உள்ளே வந்தான். 

“கோட்டை வாசலுக்கு அருகில் மக்கள் கும்பலாகக் கூடி அங்கு சென்றிருந்த காவல் வீரர்களைத் தாக்கி விரட்டினார்கள்” என்றான். 

“கும்பலுக்கு என்ன காரணம்?” – மகாராணி கேட்டாள். 

“நகர சுத்திப் பணியாளர்கள் கோட்டைத் தளபதி இரணியவர்மரைப் பார்த்துவிட்டு அந்த வழியாகத் திரும்பி யபோது, கோட்டைவாசல் பக்கத்திலிருந்த ஒரு காவல் வீரனைக் கேலி செய்து துன்புறுத்தினார்கள். சற்று தள்ளி நின்று கொண்டிருந்த நானும் இன்னும் இரண்டு வீரர்களும் அவனுடைய உதவிக்காக விரைந்தோம். கூட்டத்தினர் திடீரென்று எங்களைத் தாக்கத் தொடங்கிவிட்டனர்…” 

சித்திரமாயன் குறுக்கிட்டு, “நீ சுத்த வீரன், உடனே இங்கே ஓடிவந்துவிட்டாய். மடையா ! தாக்கியவர்களில் நாலைந்து பேர்களையாவது வெட்டிச் சாய்த்துவிட்டு வந்து நின்றால் பெருமையாக இருந்திருக்கும். நீ அடிபட்டு ஓடி வந்த கதையைச் சொல்ல வந்தாயாக்கும். சீ, போ வெளியே” என்று இரைந்தான். 

அந்த காவல் வீரன் நடுநடுங்கிப் பின்வாங்கி வெளியேறினான். 

“அவர்களுக்கு என்று ஒதுக்கியிருந்த குடியிருப்பு நிலத்தை அச்சுதப்பட்டரின் மைத்துனருக்கு மான்யம் வழங்கியதன் விளைவு. எல்லாம் உன்னுடைய மனைவி மேகலாவினால் வந்தவினை இது” என்றாள் பிரேமவர்த்தினி. 

“அரசு எதையும் யாருக்கும் மான்யமாக வழங்கும். அதை யார் கேட்க முடியும்? இரணியவர்மரின் மாளிகையி லிருந்தல்லவா கூட்டம் வந்ததாம். அவர்தாம் கலகத்தைத் தூண்டிவிட்டிருப்பார். அவருடைய பக்கபலம் இல்லை யென்றால் பாமர மக்கள் இவ்வளவு துணிவார்களா?” என்றான் சித்திரமாயன். 

“அச்சுதப்பட்டருக்கு உதவ வேண்டுமென்று உன் மனைவி விரும்பினால் பொன்னை வழங்கட்டுமே. இப்படி ஆட்சிப் பொறுப்பில் தலையிட்டுக் குழப்ப வேண்டாம். அவளை நீ கண்டித்து வைப்பது நல்லது. அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க நீ ஆணையிட்டதால் வந்த சங்கடந்தானே இது” என்றாள் மகாராணி. 

“நமக்கு வேண்டியவர்களுக்கு நாம் சலுகை காட்டித் தானே ஆகவேண்டும். இதைக் கேட்க மக்களுக்கு என்ன திமிர்” என்று இரைந்தான் சித்திரமாயன். 

“முதன் மந்திரிகூட இப்போது அங்கே போயிருப்ப தாகத்தானே சொன்னாய்?” 

“ஆமாம், அவரும் சேர்ந்துதான் தூண்டிவிட்டிருப்பார். இதையெல்லாம் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.” 

“கேவலம், கீழ் நிலையில் உள்ள பணியாட்களின் கூட்டம் காவல் வீரர்களையே அடித்து விரட்டுவ தென்றால்… சித்திரமாயா, இதுபோல் இனியாரும் செய்யத் துணியாத அளவுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்” என்று மிகுந்த கோபத்தோடு கூறினாள், மகாராணி. 

“சின்னம்மா, உங்கள் பெயரைச் சொன்னாலே காஞ்சி நகர் முழுவதும் நடுங்கும்படி செய்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு கோபத்துடன் வெளியேறினான் சித்திரமாயன். 


அதே சமயம், இரணியவர்மருடைய மாளிகையில், முதன் மந்திரி பேசிக் கொண்டிருந்தார். இருவருடைய முகங்களிலும் கவலை படர்ந்திருந்தது. கோட்டை வாசல் அருகே நடைபெற்ற கலவரம் பற்றிய செய்தி, அவர் களுக்கும் எட்டியிருந்தது. 

“காவல் வீரர்களை மக்கள் எதிர்த்துத் தாக்குவது என்பது எவ்வளவு மோசமான நடிவடிக்கை. இதை முளை யிலேயே கிள்ளிவிடவேண்டும். என் வீரர்களை அனுப் பட்டுமா, கலவரம் செய்தவர்களைத் தண்டிக்க ?” என்று கேட்டார், இரணியவர்மர். அவருடைய குரலில் கோபம் தொனித்தது. 

“இனி உங்களுடைய வீரர்கள் அந்த அப்பாவி மக் களின்பாதுகாப்புக்குத்தான் தேவைப்படுவார்கள்” என்றார் முதன் மந்திரி. 

“பாதுகாவலுக்கா? தண்டனை கொடுக்க வேண்டும் முதன் மந்திரி அவர்களே. இதை இப்படியே விட்டுவிட்டால் நாளை இந்நகரத்தில் ஒரு எறும்புகூட அரசை எதிர்க்கத் தொடங்கிவிடும்.” 

“தண்டனையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதைப் பற்றி இதற்குள் இளவரசரும் மகா ராணியும் முடிவு செய்திருப்பார்கள். பாவம் அப்பாவி மக்கள். தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குடியிருப்புநிலம் பறிபோய்விட்டதே என்ற தவிப்பில் எழுந்த கோபந்தான் கோட்டைவாயிலில் கொந்தளித்திருக்கிறது. மக்களின் நியாயமான உணர்வுகளையும் அரசு மதிக்கவேண்டும். இது சித்திரமாயனின் மனைவி மேகலாவினால் வந்த வினை. மந்திரி அச்சுதப்பட்டர் அவள் மூலமாக இதை சாதித்துக் கொண்டார். இந்த முட்டாள் சித்திரமாயனும் மனைவி சொல்லுக்குத் தலையாட்டி உத்தரவு பிறப்பிக்க ஏற்பாடு செய்துவிட்டான்” என்றார், முதன்மந்திரி. 

“இளவரசன் சிறுபிள்ளைத் தனமாக ஏதோ செய்யப் போய்…” 

முதன் மந்திரி குறுக்கிட்டார்; “அரசாட்சியில் சிறு பிள்ளைகள் தலையிடக்கூடாது” என்றார். 

அப்போது அருகில் அமர்ந்து அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் பல்லவ மல்லன், “ஏன் தலையிடக்கூடாது? நல்ல காரியத்துக்காக யார் வேண்டு மானாலும் தலையிடலாமே?” என்று வெடுக்கெனச் சொன்னான். 

தரணிகொண்ட போசரின் முகத்தில் முறுவல் தோன்றி யது. சிறுவன் பல்லவமல்லனின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினார். “ஓ… நீ அருகில் இருப்பதை மறந்துபோய் விட்டேன். நல்ல காரியமாக இருந்தாலும் சிறுவர்கள் பெரியவர்கள் மூலம் தாம் தலையிடவேண்டும. நீ இந்த வீட்டில் உன் தந்தையைக் கேட்காமல் எதாவது செய் வாயா?” 

“முக்கியமான விஷயமாக இருந்தால் கேட்பேன்.” 

“அரசாட்சியில் ஒவ்வொரு விஷயமும் முக்கிய மானது தான்” என்றார், இரணியவர்மர். பல்லவமல்லனின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். பிறகு, “பெரியவர்கள் பேசும்போது குறுக்கே பேசுவது மரியாதை இல்லை என்று சொல்லியிருக்கிறேனே” என்றார். 

பல்லவமல்லன் தன் தந்தையைப் பார்த்து முத்துப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு மௌனமானான். 

“இன்றோ நாளையோ, அநேகமாக இன்று இரவு கூட அரண்மனை வீரர்கள் நகரசுத்திப் பணியாளர்களைத் தண்டிக்க முற்படலாம்” என்றார், முதன் மந்திரி. “அதை நீங்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். 

“மகாராணியிடம் சொல்லித் தடுத்துவிட முடியாதா?”

“மகாராணியார் சம்மதித்தாலும், இளவரசர் சம்மதிக்க வேண்டுமே. அவன் சம்மதித்தாலும் அவன் மனைவி சம்மதிக்க வேண்டுமே!” 

“இளவரசரா நாட்டை ஆள்கிறார்? மகாராணி தானே” என்று குறுக்கிட்டுச் சொன்னான், பல்லவமல்லன். 

“நன்றாகக் கேட்டாய்” என்றார், முதன் மந்திரி. 

“குறுக்கே பேசுகிறாயே” என்றார் இரணியவர்மர், தம் மகனைப் பார்த்து. பல்லவமல்லன், சிரித்தபடியே ஒரு கையால் தன் வாயைப் பொத்திக் கொண்டான். 

“சித்திரமாயனின் போக்கு சரியில்லை. என்னை அவன் மதிப்பதே இல்லை. அவனை முன்னிட்டுத்தான் சக்கரவர்த்தி என்னைப் போர்க்களம் போகவிடாமல் தடுத்துவிட்டார். நகரத்தில் நானிருந்து, அவனால் ஏதாவது பெரிய விபரீதம் ஏற்பட்டுவிடாமல் மறைமுகமாகக் கண்கா ணிக்கும்படி மன்னர், போருக்குப் போகும்போது வேண் டிக்கொண்டார். அதனால்தான் நான் என்னுடைய மண்ட லத்துக்குப் போகாமல் காஞ்சியில் தங்கியிருக்கிறேன். இது உங்களுக்குத் தெரியாததல்ல. சித்திரமாயனின் அலட்சி யத்தைப் பொறுத்துக் கொண்டு இங்கிருக்க எனக்குப் பிடிக்கவில்லை” என்றார், இரணியவர்மர். 

“சக்கரவர்த்தி விரைவில் போரை முடித்துக் கொண்டு திரும்பி வந்தால் நல்லது. சக்கரவர்த்திக்குப் பிறகு இளவரசர் அரியணை ஏறினால் நாட்டின் நிலை என்னவாகுமோ? எண்ணிப் பார்க்கவே பயமாயிருக்கிறது” என்றார் முதன் மந்திரி மிகுந்த கவலையுடன். 

“அவன் பட்டத்துக்கு வருவதற்குள் நம் காலம் முடிந்து டும்” என்று கூறிச் சிரித்தார், இரணியவர்மர். 

“என்ன நிச்சயம்? சக்கரவர்த்திக்கு வயது ஐம்பதை நெருங்கிவிட்டது” என்றார், மந்திரி. பிறகு, “இரண்டாவது மந்திரி அச்சுதப்பட்டர் மகாராணியின் போக்குக்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உள்ளூர முதன் மந்திரிப் பதவியைப் பெறவேண்டும் என்ற ஆசை” என்றார். 

“அச்சுதப்பட்டர் பேராசை பிடித்தவராயிற்றே. அவரு டைய உறவினருக்கு மான்யம் வழங்கியதால் தானே இந்தக் குழப்பம். யவன வணிகர்களுக்கு ஏதோ சலுகைகள் காட்டி இவரும் ஆதாயம் பெறுவதாக வதந்தி.’ 

“ஆட்சியில் இருப்பவர்களின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படிச் சிலர் வந்து வாய்த்து விடுகி றார்கள். முகஸ்துதியிலேயே முன்னேறுகிறார்கள். சரி, இப்போது இந்தப் பாமர ஜனங்களை எப்படிக் காப்பாற்று வது?” என்று கேட்டார், முதன் மந்திரி. 

“அரண்மனையிலிருந்து உத்தரவைப் பெற்றுக் கொண்டு வரும் வீரர்களைத் தடுத்து நிறுத்த இந்த சாம்ராஜ் யத்தில் யாருக்கும் அதிகாரம் கிடையாதே” என்றார், இரணி யவர்மர். பிறகு, “நீங்களும் இது பற்றிச் சிந்தியுங்கள். நானும் யோசிக்கிறேன். ஏதாவது வழிதோன்றுகிறதா பார்க்கலாம். மகாராணியை இன்று சந்தித்துப் பேசிப் பார்க்கிறேன்” என்றார். 

இரணியவர்மரின் மாளிகையிலிருந்து முதன் மந்திரி வெளியேறிய போது, உற்சாகமிழந்து சோர்வுற்றிருந்தார். 

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *