கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 4,773 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-35

34. நந்திபுர விண்ணகரம்

சித்திரை மாத பௌர்ணமி நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலவில் குளித்துக் கொண்டிருந்த காஞ்சி நகரின் வீதிகளில் குழந்தைகள் கூச்சலிட்டபடி விளைாயடிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி வம்பளந்து கொண்டிருந்தனர். வைகுந்த பெருமாள் கோயிலில் அர்த்தஜாம பூஜைக்கான மணி ஒலித்தது. 

கோயிலின் அருகே நடந்து கொண்டிருந்த யாத்ரீகர் களைப் போல்காணப்பட்ட இருவர், மணியோசையைக் கேட்டு நின்றனர். நரைத்த தாடியுடன் இருந்த வயோதிக யாத்ரீகர், “உள்ளே போகலாமா ?” என்று கேட்டார். இளந் தாடியுடன் அருகில் நின்று கொண்டிருந்தவர் தலையை ஆட்டினார். இருவரும் கோயிலுக்குள் சென்றனர். 

உள்ளே விளக்கு வெளிச்சம் அதிகமில்லை. கோயில் வறுமையால் வாடிக்கொண்டிருந்தது என்பது நன்கு புலப் பட்டது. பட்டர் பூஜையை முடித்து விட்டுக் கர்ப்பக்கிரகத்தி லிருந்து வெளியே வந்தபோது, அங்கே நின்ற இரண்டு யாத்ரீகர்களைக் கண்டதும், மீண்டும் கர்ப்பக்கிரஹத்துக் குள் சென்று, திருவடிகளையும், நீரையும் கொண்டு வந்து ஆசீர்வதித்துப் பிரசாதங்களை வழங்கினார். பிறகு, கர்ப்பக் கிருகத்தை மூடிவிட்டு, வெளியே வந்தார். வெளித் திண்ணையில் இளைப்பார அமர்ந்தார். யாத்ரீகர்களும், சற்றுத் தள்ளி திண்ணையில் அமர்ந்தனர். 

“அர்த்த ஜாமப் பூஜைக்கு எந்நாளுமே இவ்வளவு நேரம் ஆகிவிடுமா?” என்று வயோதிக யாத்ரீகர், கேட்டார். 

பட்டர் தூணில் சாய்ந்தவாறே, தீவட்டி வெளிச்சத்தில் யாத்ரீகர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர்கள் வெளியூரி லிருந்து வந்திருப்பவர்கள் என்று எண்ணியவராய் அலட்சியமாக, “இந்த நேரத்திலாவது பூஜை நடக்கிறதே பெருமாள் அந்த வகையில் அதிர்ஷ்டக்காரர்தான்” என்றார். 

“ஏன் அப்படி? கோயிலுக்கு அமிர்தகணத்தார் உண்டா இல்லையா? அவர்களுடைய நிர்வாகம் நடை பெறுகிறதா இல்லையா?” 

“இருக்கிறார்கள். இருந்து என்ன செய்ய முடியும்? கோயிலுக்கு மான்யங்களும், வரும்படியும் நிறைய இருந்தா லல்லவா கோயிலில் அருளிருக்கும்.” 

“மன்னரின் மான்யங்கள் உண்டே?” என்றார், வயோதிக யாத்ரீகர். 

“சைவக் கோயில்களுக்குத்தான் அதிகம் உண்டு. வைணவக் கோயில்களைப்பற்றி யாருக்கும் அக்கறையே இல்லை.” 

“ஏன், மன்னர் கவனிப்பதில்லையா?” 

“ஐயா, பரம்பரையான ராஜகுலத்தைச் சேர்ந்தவர் களுக்குத்தான் பக்தி, ஆசாரம், பாரம்பரியச் சீலங்கள் எல்லாம் இருக்கும். இப்போதிருக்கும் மன்னர் குறுக்கு வழி யில் சிம்மாசனம் ஏறியவர். அவருக்கு இதிலெல்லாம் அக் கறை கிடையாது” என்றார்,பட்டர். குரலில் விரக்தி தொனித்தது. 

இதைக் கேட்டதும் வயோதிக யாத்ரீகர், இளம் யாத்ரீகரைப் பார்த்தார். இளம் யாத்ரீகர் திகைப்படைந்த 

வராய் பட்டரை வெறிக்கப்பார்த்தவாறு அமர்ந்திருந்தார். 

திடீரென்று பட்டருக்குச் சந்தேகம் தோன்றவே, “உங்களுக்கு எந்த ஊர்?” என்று பயந்தவாறு கேட்டார். 

“எங்களுக்குத் திருவேங்கடம்” என்றார் வயோதிக யாத்ரீகர். 

பட்டர் பயம் தெளிந்து நிம்மதி அடைந்தார். வயோதிக யாத்ரீகரைப் பார்த்து, “திருவேங்கடத்திலிருந்தா வருகிறீர்கள்?” என்று வியந்து கேட்டார். “மகா புண்ணியவான்கள். உங்களைக் காண்பதே பெரும் பாக்கியம். திருவேங்கடப் பெருமான் அருகிலிருக்கும் பாக்கியம் பெற்றவர்கள்” என்று புகழ்ந்தார். பிறகு பாடத் தொடங்கி விட்டார். 

“வந்தாய்; என் மனம், 
புகுந்தாய்; மன்னிநின்றாய்- 
நந்தாத கொழுஞ்சுடரே! 
எங்கள் நம்பீ! 
சிந்தாமணியே! திருவேங்கட மேய 
எந்தாம்!- இனியான் 
உனை என்றும் விடேனே” 

என்று பாடி விட்டு, “ஐயா, எங்கள் நம்பி எழுந்தருளி யிருக்கும் திருவேங்கடத்தை நான் கண்டதில்லை. உங் களைக் கண்டு விட்டேன். அடியாரைக் கண்டாலே, அரங்கனைக் கண்ட மாதிரி தான். இன்று இரவு நீங்கள் இருவரும் என் இல்லத்தில் திருவமுதுண்டு செல்ல வேண்டும்” என்று வேண்டினார். 

வயோதிக யாத்ரீகர், “உங்கள் அழைப்புக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், நாங்கள் இரவில் அமுதுண்டாகி விட்டது. மன்னிக்கவேண்டும்” என்றார். பிறகு, “மன் னரைப் பற்றி ஏதோ விவரம் கூறினீர்களே?” என்று கேட் டார். 

“ஆமாம், ஆமாம். இப்போதிருக்கும் மன்னர், வயதில் சிறியவர். பதினான்கு ஆண்டுகளுக்கு முன், இந்நாட்டை ஆள உரிமையுள்ள இளவரசன் ஒருவனிருந்தான். ஏதோ சதி செய்து அவனை விரட்டி விட்டு, இந்த அரசனை சிம்மா சனத்தில் ஏற்றிவிட்டார்கள்.” 

“மக்கள் அல்லவா இவரை அரியணையில் ஏற்றிய தாகக் கேள்விப்பட்டோம்.’ 

“அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்போதிருந்த பட் டத்து இளவரசன், கொஞ்சம் துடுக்கானவன். இப்போ திருக்கும் மன்னருடைய தகப்பனார்தாம் மந்திரியோடு சேர்ந்து சதிசெய்து, இவரைச் சிம்மாசனத்தில் ஏற்றிவிட்டார். குறுக்கு வழியில் சிம்மாசனம் கிடைத்தவருக்கு, மக்களின் நம்பிக்கைகளைப் பற்றியோ, ஆசாரங்களைப் பற்றியோ என்ன அக்கறை இருக்கப் போகிறது? திருவேங்கடத்திலிருந்து வந்திருக்கும் உங்களைப் பார்த்த பிறகு தான் என் மனம் மகிழ்ச்சியாயிருக்கிறது” என்றார், பட்டர். 

“அரசர் இளைஞர்தானே. இனிமேல்தான் பக்குவம் வரும். கோயில் குளங்களைப் பற்றிய எண்ணங்கள் இனிமேல் தானே அவருக்கு ஏற்படும்.” 

“ஏற்படுமோ, ஏற்படாமலே போகுமோ, ஒரு வேளை, தீவிர சைவராக இருந்தால், பெருமாள் கோயில்களை இடிக்கக்கூட உத்தரவிட்டு விடலாம்” என்று கூறிப் பெருமூச்சு விட்டார், பட்டர். 

“நீங்கள் அஞ்சுவதற்கு ஆதாரமே இல்லையே. இது வரை ஆண்ட மன்னர்கள் சைவக் கோயிலையோ அல்லது வைணவக் கோயிலையோ இடித்ததாகச் செய்தி இல் லையே. ஒரு வேளை, இந்த மன்னருக்கு பெருமாள் மீது பக்தி ஏற்படலாமே.” 

“பகவான் என்ன நினைக்கிறாரோ” என்றார், பட்டர். குரலில் அவநம்பிக்கை தொனித்தது. 

“நீங்கள் இப்போது பாடினீர்களே, அது யார் பாடிய பாடல்?” 

“திருமங்கை மன்னர் பாடியது. ஆலி நாட்டுக் குறுநில மன்னர். பகவத்கைங்கர்யத்தில் மூழ்கிவிட்டார்!” 

“ஓ…! அவரா? நாகப்பட்டினத்து பௌத்த விஹாரத் தைக்கொள்ளையிட்டாரே, அவர்தானே?” என்று கேட்டார் வயோதிக யாத்ரீகர். 

“கொள்ளையிட்டால் என்ன? அதில் என்ன தவறு? இங்கே வைணவக் கோயில்களில், விளக்கேற்றக் கூடக் காசு இல்லாதபோது, பௌத்த விஹாரத்துக்கு அவ்வளவு செல்வம் ஏன்? புத்தருக்கு தங்கத்தில் சிலை எதற்கு? அதனால் தான், அதைப் பறித்து, வைணவக் கோயில்களைக் கட்டினார். இந்தக் கைங்கர்யத்தில் என்ன தவறு?” என்று கோபத்துடன் கேட்டார், பட்டர். பிறகு, “நம்முடைய மன்னர்கள், நம்முடைய கோயில்களைச் சரிவரக் கவனித் திருந்தால், திருமங்கை மன்னர் ஏன் பௌத்த மடத்தை நாடப் போகிறார்? எல்லாம் நம்முடைய மன்னர்களின் குற்றம் தான்” என்று படபடத்தார். 

“என்ன இருந்தாலும், கொள்ளையடித்திருக்க வேண் டாம். பகவத் கைங்கர்யத்துக்குக் காசு தேவைப்பட்டால் ஆலி நாட்டுக் குடி மக்களிடம் வரிப்பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே.” 

“ஓ… நீங்கள் பகவத் கைங்கர்யத்துக்கு நாட்டு மக்களைக்கொள்ளையடிக்கச் சொல்கிறீர்கள் !வரி என்னும் பெயரால் மக்கள் அனைவரையும் கொள்ளையடிக்க வேண்டுமா? வைணவக் கோயில்களுக்காக ஏழைச் சைவர்களும் வரி கொடுக்க வேண்டுமா? மக்கள் எல்லாரை யும் கொள்ளையடிப்பதைவிட, கொழுத்த செல்வம் பெருகி யுள்ள ஒரு இடத்தில் செல்வங்களை திருமங்கை மன்னர் பறித்தது மேல்தான்” என்றார், பட்டர். 

இதைக் கேட்டு இளம் யாத்ரீகர் சிரித்தார். அவரை பட்டர் சுட்டிக் காட்டி, “இவர் பேசாமல் அமர்ந்திருக்கிறாரே” என்றார். 

“நீங்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேனே” என்றார், இளம் யாத்ரீகர். பிறகு, “திருமங்கை மன்னர் காஞ்சிக்கு வந்திருக்கிறாரா?” என்று கேட்டார். 

“அந்த மகான் வந்து வழிபடும் நிலையிலா இந்தக் கோயில் இருக்கிறது? ஏதோ முந்திய சக்கரவர்த்தி இந்தக் கோயிலைக் கட்டினார். எங்கள் துரதிர்ஷ்டம், அவர் போர்க் களத்தில் இறந்துவிட்டார். மனுநீதிப்படி அரசாண்டார். அவர் இருந்திருந்தால், இந்தக் கோயிலை இன்னும் பெரிதாக்கி நலமுறச் செய்திருப்பார். அந்தச் சக்கரவர்த்தி விட்டுப்போன பணியைச் சிறக்கவைக்க, இப்போதிருக்கும் மன்னருக்கு எங்கே அக்கறை இருக்கப் போகிறது” என்றார் பட்டர் அலுப்புடன். 

“கவலைப் படாதீர்கள். காலம் வரும். பெருமாளை இன்னும் பக்தியோடு வேண்டுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமங்கை மன்னரே இந்தப் பரமேச்சுர விண்ணகரத்தைத் தேடி வந்து பாடும் காலம் வரும்” என்று கூறியபடியே எழுந்தார், இளம் யாத்ரீகர். எழுந்து நின்ற வாறே, “திருமங்கை மன்னர், பல்லவ நாட்டுக் கோயில் களைப் பற்றிப் பாடவில்லையோ ?” என்று கேட்டார். 

“ஏன் இல்லை? மாமல்லபுரத்து ஜலசயனத்தையும், தலசயனத்தையும் நெக்குருகிப் பாடியிருக்கிறாரே! அது மட்டுமா? பெருமாளையும் பாடி, அவர் உறைந்திருக்கும் ஊரையும் புகழ்ந்து பாடியிருக்கிறார். அந்த மகானை ஈர்க்க வைக்கும் கோயில் காஞ்சியில்தானில்லை” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார் பட்டர். 

“பல்லவ நாட்டில் எந்த ஊரைப் புகழ்ந்திருக்கிறார்?” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் இளம் யாத்ரீகர். 

“தெற்கே உள்ள நந்திபுரத்தை” என்று கூறிவிட்டு, பாடல்களில் சில வரிகளைப் பாடினார் பட்டர். 

“கொம்பு குதிகொண்டு 
குயில் கூவ, மயில் ஆலும், 
எழில் ஆர் புறவு சேர் 
நம்பி உறைகின்ற நகர் 
நந்திபுர விண்ணகரம் !… 
பொங்கு புனல் உந்துமணி 
கங்குல் இருள் சீறும் 
ஒளி எங்கும் உளதால், 
நங்கள் பெருமான் உறையும்
நந்திபுர விண்ணகரம் !…
மண்ணில் இதுபோல் நகர் 
இல்லை என வானவர்கள் 
தாம் மலர்கள் தூய், 
நண்ணி உறைகின்ற நகர்
நந்திபுர விண்ணகரம்.” 

பாடிவிட்டுச் சொன்னார்: “திருமங்கை மன்னரின் மனதைக் கவர்ந்த அந்த அழகான நகரில் அமைந்திருக்கும் பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்கிறவருக்குத்தான், என் மகள் கோதையை மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன்’ அவருடைய குரலில் பெருமிதம் தோன்றியது. 

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நந்திபுரத்தைக் காண வேண்டும் போலிருக்கிறதே” என்றார் வயோதிக யாத்ரீகர். 

“தவறாமல் போய்ப் பாருங்கள். அங்கு சென்றால், ‘அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே’ என்று திருமங்கை மன்னர் திருவாய் மலர்ந்திருக்கிறார்” 

இரு யாத்ரீகர்களும் அங்கிருந்து புறப்பட்டு, கைலாச நாதர் கோயில் வழியாக நடக்கத் தொடங்கினர். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், வீதியில் மக்கள் நடமாட்டமில்லை. இளம் யாத்ரீகர், தணிந்த குரலில், “மந்திரியாரே ஊரில் சில ருக்கு என்ன அபிப்பிராயம் இருக்கிறது பார்த்தீர்களா?” என்று கேட்டார். குரலில் மிகுந்த வேதனை தொனித்தது. 

“இந்த எண்ணத்தை மாற்றியாக வேண்டும், மகா ராஜா” என்றார், வயோதிக யாத்ரீகர். 

“இதே எண்ணம் நிலைத்து வருங்காலத்திலும் இப்ப டியே தான் பேசும்படியாகிவிடும். உண்மையில் நடந்தவைகளை மக்கள் நன்கு புரிந்துகொள்ளும்படிச் செய்ய வேண்டும்” என்றார், இளம் யாத்ரீகர் கவலையுடன். 

“தாங்கள் முடி சூடியபோது நிகழ்ந்தவைகளை ஒரு பொதுஇடத்தில் கற்களில் செதுக்கி விடவேண்டும். ஒன்று செய்யலாம், மகாராஜா. இந்த வைகுந்தப் பெருமாள் கோயிலை பெரிதாகக்கட்டிக்கோயில் சுவரில் தாங்கள் முடி சூடிய வரலாற்றை விவரமாகச் சிற்பங்களில் செதுக்கி அவற் றின் அடியில் எழுத்துக்களால் விளக்கமும் பொறித்து விட லாம்.” 

“நல்ல யோசனை தான். இன்று ஒரு முக்கிய விஷயத் தைத் தெரிய முடிந்தது” என்று கூறிப் பெருமூச்சு விட்டான் இளம் யாத்ரீகராக இருந்த பல்லவமல்லன். பிறகு, “சித்திர மாயனே சிம்மாசனம் ஏறியிருந்தால், என்ன ஆகியிருக் கும் ?” என்று கேட்டான். 

வயோதிக யாத்ரீகராகத் தோற்றமளித்த ராஜன் நம்பூதிரி சொன்னான்: “அவர் ஏறியிருந்தாலும், கடைசியில், தாங்கள் தாம் சக்ரவர்த்தியாக முடி சூடியிருப்பீர்கள்,” 

“அதெப்படி முடியும், அவன் அரியணை ஏறிய பிறகு?” என்றான்,பல்லவமல்லன். 

“சித்திரமாயன் முடி சூடியிருந்தால், சில தினங்களுக் குள்ளேயே உதயசந்திரன் தன் சபதத்தை நிறைவேற்றி யிருப்பான். சித்திரமாயன் தப்பி ஓடி, பாண்டிய மன்னரின் பாதுகாப்பில் இருப்பதால்தான், உதயசந்திரனால் ஒன்றும் செய்ய இயலவில்லை” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“விரைவிலேயே தளபதியின் சபதம் நிறைவேறு வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து விட வேண்டியதுதான். பாண்டியநாடு சென்ற தூதன் இன்னும் திரும்பவில்லையே” என்றான், பல்லவமல்லன். பிறகு சொன்னான்: “பூசாரி பேசியதிலிருந்து, வைணவர்கள் என்மீது அபிமானம் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.” 

“அதுபற்றித் தாங்கள் கலங்க வேண்டியதில்லை. இந்த வைகுந்தப் பெருமாள் கோயிலைப் பெரிதாக்கி நலமுறச் செய்து, திருமங்கை மன்னரையும் வரவேற்று, சிறப்பித்து விட்டால், எல்லாம் சரியாகிவிடும்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“அந்தப் பூசாரி சொன்னதிலிருந்து நந்திபுரத்துக்கு ஒருமுறை போய் வரலாம் என்று நினைக்கிறேன்” என்றான், பல்லவமல்லன். 

“மகாராஜா, அந்த நகர் குறுநில மன்னர் பல்லவடி அரையரின் ஆளுகையில் இருக்கிறது. அண்மையில் தளபதியின் யோசனையின் பேரில், அந்நகரமும், கோட்டை யும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோட்டையைப் பலப்படுத் துவதில் அரையர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அவருக்குத் தங்கள்மீது அபிமானம் கிடையாது. சித்திர மாயனிடம் அன்பு கொண்டவர்.” 

“என்னுடைய அதிகாரத்துக்குட்பட்ட ஒரு குறுநில மன்னரிடம் நமக்கு என்ன பயம்? அவரால் ஏதாவது ஆபத்து விளையும் என்று அஞ்சுகிறீர்களா?” 

“எதற்கும் நாம் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டி யதுதான். தாங்கள் அங்கு போவதாயிருந்தால், ஒரு சிறு படையுடனாவது செல்லவேண்டும்” என்றான், ராஜன் நம்புதிரி. 

இருவரும் பேசிக்கொண்டே ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தைக் கடந்து சென்றபோது, பல்லவமல்லன், “இந்த ஆசிரமத்துக்கு எதிர்ப்பு அதிகரித்திருக்கிறதே !” என்றான். 

“அதுபற்றி நாம் அக்கறை கொள்ளவேண்டாம், மகா ராஜா. எல்லா மக்களுடைய நம்பிக்கைகளையும் ஆதரிக்க வேண்டியதுதான் நம்முடைய கடமை. ஒரு சாராரின் நம்பிக்கைக்கு எதிராக மற்றவர்கள் போர்க்கொடி உயர்த்துவது மதியீனம், இதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.” 

“ஏற்கனவே உள்ள சமூக விதிமுறைகளுக்கும், ஆசாரங் களுக்கும் எதிராக ஒரு இயக்கம் செயல்படும்போது…” 

“அந்த இயக்கத்தாருக்கு ஒரு தத்துவத்தின் மீதோ, ஒரு நெறியின் மீதோ நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு. அவர் களுடைய நம்பிக்கைகளும், ஆசாரங்களும் எல்லோருக்கும் இசைந்தவையாயிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய நடவடிக்கை, மற்ற சமுதாயத்தாருக்குத் தொந்திரவையோ, ஆபத்தையோ விளைவிக்கு மானால் தான் அதைப்பற்றி அரசு, அக்கறை கொள்ளவேண்டும். எங்கோ ஓர் ஆசிரமத்துக்குள், பரமாச்சாரியின் போதனை களை நம்புபவர்கள், அவருடைய தியானப்பயிற்சி முறை களைப் பயிலுவதை மற்றவர்கள் எதிர்ப்பதில் பொரு ளில்லை. ஒரு பொது இடத்தில், அவர்கள் பயில்கிறார்கள் என்றால், அதைத் தடுக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால், ஒரு தனி இடத்தில், ஒரு சாரார் அமைதியான முறையில், தாங்கள் நம்புவதைக் கடைப்பிடிப்பதைத் தடுப்பது அநீதியாகும்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“ஆனால் ஆசிரமத்துக்குள் நடைபெறும் நடவடிக் கைகள், சமூகப்பழக்க வழக்கங்களுக்கும், விதிமுறை களுக்கும் மாறாக இருந்தால்?” 

“ஆசிரமத்துக்குள்தானே நடைபெறுகின்றன. பொது இடத்தில் அல்லவே? அதற்காகத்தானே, யோகியின் சீடர்கள் ஆசிரமத்துக்கு உள்ளே பயிற்சியைப் பெறுகிறார் கள். அங்குள்ள நடவடிக்கைகள் அதில் ஈடுபடும் சாதகர் களை மட்டுமே சார்ந்தவை. அவற்றுக்கும் சமூகத்துக்கும் தொடர்பில்லை. நிர்வாணமாயிருப்பது, சமூக ஒழுக்க விதிமுறைகளுக்குப் புறம்பானது. ஆனால், படுக்கையறை யிலேயோ அல்லது குளியலறையிலேயோ ஒருவன் நிர்வாணமாயிருப்பதைத் தவறு என்று குறை கூறமுடியுமா? அதே போலத்தான், ஒரு ஆசிரமத்துக்குள் நடைபெறுவதும். மேலும், ருத்திர பரமாச்சாரி, தம்முடைய நெறிமுறை களை வெளியே பிரசாரமாகக்கூடச்செய்வதில்லை. இந்தச் சமூகத்தோடு அவர் தொடர்பு கொள்வதுகூட இல்லை. ஆசிரமத்துக்குள்ளேயே, ஒரு சமூகம் உருவாகி, இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆசிரமத்துக்கு, இமயமலைச் சாரலிலிருந்தும், குமரி முனையிலிருந்தும் பலர் வந்து, தியானம் பயின்று, சித்தி அடைந்திருக்கிறார்கள். கர்ம யோகம், ராஜயோகம், பக்தியோகம் என்று கடவுளை உணர அமைந்துள்ள சில வழிகளைப்போல், பரமாச்சாரி யின் குண்டலினி யோக முறையும் ஒரு வழி. அந்த வழி ஒரு சாராருக்கு அருவருப்பாயிருக்கிறதென்றால், அது அவர் களின் அறியாமையே தவிர வேறல்ல. அறியாமைக்கு அரசு ஆதரவு கொடுக்கக் கூடாது” என்று ராஜன் நம்பூதிரி, அழுத்தமாகக்கூறினான். 

“மந்திரியாருக்குப் பரமாச்சாரியின் யோகமுறையில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது” என்று கூறிச் சிரித்தான் பல்லவமல்லன். 

“இன்னும் இல்லை, மகாராஜா. எனக்கு இப்போது அதற்கு நேரமும் இல்லை. யோகியின் தத்துவங்களும், யோக முறைகளும் இன்றையச் சமூகக் கண்ணோட்டத்தில், ஒரு காமக்களியாட்டமாகத் தென்படலாம். ஆனால், அதில் ஈடுபடுபவர்கள், சமூகத்தின் மத்தியில், மற்றவர்களைவிட மன விகாரங்களற்றவர்களாகத்தானிருக்கிறார்கள். நாம் தாம் சில வக்கிரங்களை மனத்தின் உள்ளேயே பூட்டி வைத்து, மனத்தை அழுக்காக்கி, இழிநிலையில் வைத்திருக்கிறோம். இன்று சமூகத்தில் திரிபவர்கள்தாம் இரட்டை வாழ்வு வாழ்கிறார்கள். தினமும் திருட்டுத்தனமான ஒழுக்கச் சீர்கேடுகளைக் காண்கிறோம். இந்தப் போலித்தனமான வாழ்க்கையைத்தான் ருத்திர பரமாச்சாரி கண்டிக்கிறார்” என்றான் ராஜன் நம்பூதிரி. பிறகு, “ஒரு சாராரின் விருப்பத்துக்காக, மற்றொரு சாராரின் நம்பிக்கைகளை ஒடுக்குவது அநீதியாகும். அரசு விலகியிருந்து கவனிக்க வேண்டுமே தவிர, அந்த மாச்சரியங்களுக்குள் மூழ்கிவிடக் கூடாது” என்றான். 

இருவரும் அரண்மனையை அடைந்தபோது, காவல் வீரன் ஒருவன் விரைந்து வந்து, “பாண்டியநாடு சென்ற தூதன் திரும்பி வந்திருக்கிறான். சக்கரவர்த்தியின் தரிசனத் துக்காகக் காத்திருக்கிறான்” என்று அறிவித்தான். 

தூதனை உள்ளே அழைத்து வருமாறு உத்தரவிட்டு, அரண்மனைக்குள் சென்ற பல்லவ மல்லன், “மந்திரியாரே, உங்களுடைய நண்பர் தளபதியின் சபதம் நிறைவேறும் கட்டம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன்” என்றான். 

சற்று நேரத்தில் தூதன் உள்ளே வந்தான். சக்கரவர்த்தி யிடம் பாண்டிய மன்னனின் ஓலையைக் கொடுத்தான். பல்லவமல்லன் ஓலையை ராஜன் நம்பூதிரியிடம் கொடுத்து, “நீங்கள் படியுங்கள்” என்றான். 

ராஜன் நம்பூதிரி ஒலையைப் பிரித்து, பல்லவ மல்லன் கேட்கும்படியாக உரக்கப்படித்தான். 

“பல்லவமன்னருக்கு நாம் அறிவிப்பது இதுவே. சித்திரமாயனுக்கு உரிமையுள்ள சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். என்னிடம் அடைக்கலமாயிருக்கும் அவரைப் பல்லவ நாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று தூதனுப்பினீர்கள். சித்திரமாயன் கட்டாயம் பல்லவ நாட்டுக்கு வரத்தான் போகிறார். அவர் வரும்போதுபல்லவ நாட்டு அரியணை காலியாக இருக்கும். மாறவர்ம இராச சிம்மபாண்டியன்” 

இதைக்கேட்டு பல்லவ மல்லன் சிரித்தான். “ஓ…அவர் வருவாரோ? வரும்போது, அரியணை காலியாக இருக் குமோ ? ஓஹோ…ஹோ…”என்று உரக்கச் சிரித்தான். பிறகு, ராஜன் நம்பூதிரியிடம், “மந்திரியாரே, நம்முடைய தளபதியின் சபதம் நிறைவேறும் கட்டம் நெருங்கிவிட்டது. சீனத்து மங்கையின் மருக்கொழுந்துக்கு சீக்கிரமே நல்ல உரம் கிடைக்கப் போகிறது… அவர் வருவாராம்; வரும் போது, பல்லவ அரியணை காலியாக இருக்குமாம்” என்று பற் களைக் கடித்தான். “நாளைக் காலை தளபதியாருடன் நீங்கள் அரச மண்டபத்துக்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு, அந்தப்புரத்தை நோக்கி நடந்தான். 

பிரும்மஸ்ரீராஜன் நரைத்த பொய்த் தாடியையும், தலை மயிரையும் கழற்றாமல், வேஷத்துடனேயே தன்னுடைய மாளிகைக்குச் செல்ல இரதத்தில் ஏறினான். 

மறுநாள் காலையில் உதயசந்திரன் அரண்மனைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, பாண்டிய நாட்டுக்குச் சென்று திரும்பிய தூதன் அவனைக் காண வந்தான். பாண்டிய மன்னரின் பதிலைக் கூறிவிட்டு, “தளபதி அவர் களுக்கு ஓர் ஓலை இருக்கிறது” என்று கூறியபடியே, இடை யில் செருகியிருந்த ஓலையை எடுத்து நீட்டினான். 

உதயசந்திரன் வியப்புடன் ஓலையை வாங்கியபடியே, “எனக்கு ஓலையா? யாரிடமிருந்து?” என்று வியந்து கேட்டவாறு, ஓலையைப் பிரித்துப் பார்த்தான். முதலில் ஒலையைப் பிரித்துப் படிக்காமல் கடைசியிலிருந்த முத்திரை யைக் கவனித்தான். திகைப்பும் வியப்பும் அடைந்தவனாய் தூதனை நிமிர்ந்து பார்த்தான். 

“மகாராணியைக் கண்டாயா? எப்படிச் சந்தித்தாய்?” பரபரப்புடன் வினவினான். 

“ஆமாம், தளபதியாரே. இந்த ஓலையை நேரில் என்னிடம் கொடுத்தார்கள்” என்றான் தூதன். 

தூதன் சொன்னதைக்கவனிக்காமலேயே ஓலையைப் படிக்கத் தொடங்கிவிட்டான், உதயசந்திரன்- 

“பல்லவ தளபதி உதயசந்திரனுக்கு என் உயிரைக் காப் பாற்றி அனுப்பி வைத்ததுநினைவிலிருக்கும். என்னை அப்போதே நீ கொன்றிருந்திருக்கலாம். இப்போது பாண்டிய நாட்டில் சிறைப்பட்டிருப்பதைப் போல்தான் உணர்கிறேன். இங்கே அரண்மனையும், ஏவலாட்களும் பாண்டிய மன்ன ரின் விருந்தோம்பலும் என் மனத்திற்குச் சாந்தியளிக்க வில்லை. சித்திரமாயனுக்காக பல்லவப் படையோடு நீ, இங்கே வருவாய். அப்போது, என்னையும் பல்லவ நாட்டுக்குக் கொண்டு சென்று, ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தில் சேர்ப்பித்து விடு. நான் கேட்கும் ஒரே உதவி இது தான். வாழ்க்கையில் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி விட்ட எனக்கு, இனி பரமாச்சாரியின் ஆசிரமந்தான் மன அமைதியைத் தரும். மனச் சாந்திக்காகத் தவிக்கிறேன். இதை யாவது நீ தருவாய் என்று எண்ணுகிறேன்- பிரேம வர்த்தினி.” 

ஓலையைப் படித்ததும் உதயசந்திரனின் நினைவு கடந்த காலத்தை நோக்கித் தாவியது. பிரேமவர்த்தினி மீது மிகுந்த இரக்கம் தோன்றியது. எதிரே நின்று கொண்டிருந்த தூதனிடம், “மகாராணியை எப்படிச் சந்தித்தாய்?” என்று ஆவலுடன் கேட்டான். 

“நான் ஊர் திரும்புவதற்கு முந்தின நாள் இரவு, மகா ராணியாரின் அந்தரங்க மெய்க்காப்பாளன் என்னை இரகசி யமாகச் சந்தித்து, அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். இந்த ஓலையைத் தங்களிடம் இரகசியமாகச் சேர்ப்பிக்கும் படி மகாராணியார் கொடுத்தார்கள்” என்றான், தூதன். 

தூதனை அனுப்பிவிட்டு, அரண்மனைக்கு விரைந் தான் உதயசந்திரன். அவனைக் கண்டதுமே பல்லவ மல்லன், “தளபதியாரே, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் சேதி வந்திருக்கிறது” என்று கூறியவாறு, பாண்டிய மன்னரின் ஓலையை அவனிடம் கொடுத்தான். 

ஓலையைப் படித்துவிட்டு உதயசந்திரன் தலை நிமிர்ந்தபோது,பல்லவ மல்லன், “சித்திரமாயன் இங்கே வருவானாம். பாண்டிய மன்னருக்கு என்ன திமிர். அவனுடைய முழு உடலும் இங்கே வர வேண்டிய அவசிய மில்லையே. உங்களுடைய காதலியின் செடிக்கு அவனு டைய தலைமட்டும் போதுமே” என்று கூறிச் சிரித்தான். 

“சக்கரவர்த்தி ஆணையிட்டால், இப்போதே ஆயத் தம் செய்கிறேன்” என்றான் உதயசந்திரன். 

“தளபதியாரே, விரைவில் பாண்டிய நாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள். நான் ஏற்கெனவே நந்திபுரத்துக்குப் போக எண்ணியிருந்தேன். அந்த ஊர் பாண்டிய நாட்டுக்கு அருகே இருப்பதால், நமக்கும் வசதியாகிவிட்டது. நான் முதலில் நந்திபுரம் போகி றேன். நீங்கள் படையுடன் விரைவில் வந்து சேருங்கள். நந்திபுரத்திலிருந்து நாம் இருவரும் சேர்ந்தே பாண்டிய நாட்டுக்குச் செல்லலாம்” என்றான், பல்லவ மல்லன். 

அப்போது ராஜன் நம்பூதிரி குறுக்கிட்டு, “நந்திபுரத்துக் கோட்டையில் சக்கரவர்த்தி இளைப்பாறலாமே. உதய சந்திரன் பாண்டியனையும், சித்திரமாயனையும் வெற்றி கொண்டு திரும்பும்போது, சக்கரவர்த்தி சேர்ந்து காஞ்சிக்குத் திரும்பி விடலாமே” என்றான். 

பல்லவ மல்லன் சிரித்தான். “ஏன்? தளபதியின் சபதத்தை அவரேதான் நிறைவேற்ற வேண்டுமா என்ன, நானும் உதவக்கூடாதா?” என்றான். 

“பாண்டிய நாட்டைப் பணிய வைக்கத் தளபதி ஒருவரே போதுமே, தாங்கள் சிரமப்பட வேண்டாமே என்ற எண்ணத்தில் கூறினேன்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“நானும் பாண்டிய நாடு போகப் போகிறேன். நான் போய்ச்சேரும்போது, பாண்டியநாட்டுச் சிம்மாசனம் காலி யாக இருக்கவேண்டும்” என்று கோபம் தொனிக்கக் கூறி னான்,பல்லவமல்லன். பிறகு, “நந்திபுரத்துக்கு நான் செல்வ தற்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள். இன்றே பல்லவடி அரையருக்குச் சேதியனுப்புங்கள்” என்றான். 

“பல்லவடி அரையர் விஷயத்தில் சற்று எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். அவரைப் பூரணமாக நம்ப வேண்டாம்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“மந்திரியாரே, ஒரு குறுநில மன்னரைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அவரால் ஏதாவது தீங்கு நேருமென்று சிறிது சந்தேகம் தோன்றினாலும், திரும்பும்போது, அவரைத் தேர்க்காலில் கட்டி, காஞ்சிக்குக் கொண்டு வந்துவிடலாம்” என்றான், பல்லவ மல்லன். பிறகு, “பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கும் விஷயம் இரகசியமாகவே இருக்கட்டும். நான் யாத்திரை போவது போல் முதலில் நந்திபுரத்துக்குப் போய்ச் சேர்கிறேன். நீங்கள் விரைவில் மற்ற ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான். 

35. வெற்றி 

கும்பகோணத்திலிருந்து தெற்கே மூன்று மைல் தூரத் தில் நாதன் கோயில் என்று ஓர் ஊர் இருக்கிறது. இதற்கு பழைய காலத்தில் நந்திபுரம் என்று பெயர். இந்த ஊரை நந்தி வர்மன் அழகு படுத்தினான். திருமங்கை ஆழ்வார், நந்தி பணி செய்த நகர், நந்திபுர விண்ணகரம் என்று பாடியுள்ளார். இந்த ஊர் பலத்த கோட்டைப் பாதுகாவலுடன் அக்காலத்தில் விளங்கியது. இது பல்லவ நாட்டின் தென்திசைக் கோட்டை யாகவும் அக்காலத்தில் விளங்கியது. 

பல்லவ சக்ரவர்த்தி பல்லவ மல்லனின் வரவால், நந்தி புரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சக்கரவர்த்தி, தங்கள் ஊருக்கு வந்ததை எண்ணி, மக்கள் பெருமையில் பூரித்துப் போயிருந்தனர். அந்தப் பகுதியின் குறுநில மன்னரான பல்லவடி அரையர், பல்லவ சக்ரவர்த்தியை எதிர்கொண்ட ழைத்து, நந்திபுரத்துக்கு இட்டுச் சென்றார். 

திருமங்கை மன்னரின் கவனத்தைக் கவர்ந்த அந்த ஊரைக் காணவும், அங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை தரிசிக்கவும் பல்லவ சக்கரவர்த்தி, யாத்திரை வந்திருப் பதாகக் கேள்விப்பட்டு, அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள், சக்கரவர்த்தியைக் காணத் திரண்டு வந்தவண்ண மிருந்தனர். 

சக்கரவர்த்தி, தமது சிறு படையுடன் நந்திபுரத்தில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுப்பார் என்ற செய்தியை அறிந்ததும் மக்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். மன்னரை எதிர் கொண்டு வரவேற்ற பல்லவடி அரையர், சக்கரவர்த்தியுடன் நந்திபுரத்திலேயே தங்கியிருந்தார். 

சக்கரவர்த்தி நந்திபுரத்துக்கு வந்த பத்தாம் நாள் இரவு, காவல் வீரன் ஒருவன் பல்லவமல்லனிடம் விரைந்துவந்து, ஓர் ஓலையைக் கொடுத்து, “யாரோ ஒருவன் இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பிக்கும்படி கொடுத்து விட்டு ஓடி மறைந்து விட்டான்” என்று அறிவித்தான். 

ஓலையைப் பிரித்துப் பார்த்த பல்லவமல்லன், திடுக் கிட்டான். உள்ளூரப் பயம் தோன்றியது. கோபமும் கொந்தளித்தது. அந்தக் காவல் வீரனிடம், பல்லவடி அரையரை அழைத்து வருமாறு உத்தரவிட்டுவிட்டு மீண்டும் ஓலையைப் படித்தான். 

“பல்லவர் சக்கரவர்த்தியே, வசமாக அகப்பட்டுக் கொண்டுவிட்டீர்கள். பல்லவடி அரையர் சதி செய்து பாண்டியனை நந்திபுரத்துக்கு அழைத்திருக்கிறார். பாண்டிய மன்னருக்கு உதவியாக சேர, சோழ மன்னர்களின் படை களும் தயாராகிவிட்டன. அமாவாசையன்று பெரும்படை நகரை நெருங்கும்போது நீங்கள், பல்லவடி அரையரால் சிறை பிடிக்கப்பட்டிருப்பீர்கள். இதிலிருந்து தப்ப வேண்டு மானால், பல்லவடி அரையரை வெளியேற்றி விட்டுக் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ளுங்கள். பல்லவ சேனாதி பதி உதயசந்திரனுக்கும் சேதி அனுப்பியிருக்கிறேன். அவர் வந்துதான் உங்களை மீட்க முடியும். பல்லவ தளபதி படை யுடன் வரும்வரை, நந்திபுரக்கோட்டையை விட்டு வெளி யேற வேண்டாம்.” 

ஓலை எழுதியனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பல்லவ மல்லன் குழம்பினான், பொறிக்குள் வசமாக அகப் பட்டுக்கொண்டதாக எண்ணிக் குமுறினான். அன்றே நந்தி புரத்தைவிட்டுகாஞ்சிக்கு விரைந்தாலும், இனி பயனில்லை. ஓலையில் குறிப்பிட்டிருந்த அமாவாசை கழிந்து மூன்று நாட்களாகிவிட்டன. பாண்டியர் படை அநேகமாகப் பல்லவப்பிரதேசத்தை நெருங்கியிருக்கும். பல்லவமல்லன் இனி காஞ்சிக்குப் புறப்பட்டால், பாண்டியர் படை துரத்தி வந்து பிடித்துவிடும். 

பல்லவ மல்லனைப் பயமும், கோபமும் ஒரே சமயத் தில் அலைக்கழித்தன. செய்வதறியாது திகைத்தான். தன்னு டன் வந்திருந்த படைத் தலைவனைக் கூப்பிட்டனுப்பி, ஆலோசனை செய்தான். தன்னுடன் வந்திருக்கும் சிறுபடை கோட்டையைப் பாதுகாக்கப் போதுமானது என்பதை அறிந்து, சிறிது ஆறுதலடைந்தான். 

படைத் தலைவனோடு பல்லவமல்லன் உரையாடிக் கொண்டிருந்தபோது, பல்லவடி அரையர் வந்தார். 

“சக்கரவர்த்தி அழைத்தீர்களாம்” என்று கூறியவாறே, பல்லவமல்லனை வணங்கி நின்றார். அவருக்கு ஆசன மளித்து அமரச் சொன்னான், பல்லவ மல்லன். 

“பல்லவடி அரையரை சில நாட்களுக்கு என்னுடைய விருந்தாளியாக ஏற்றுக்கொள்ள எண்ணுகிறேன்” என்றான். 

பல்லவடி அரையர் புரியாமல் குழம்பினார். “சக்கர வர்த்தியை இங்கு விருந்தாளியாக ஏற்றிருப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வேளையில், தாங்கள் என்னை விருந்தாளியாக…?” என்று புரியாமல் வினவினார் அரையர். 

பல்லவமல்லன் சிரித்துக் கொண்டே, “விருந்தோம் பலில் தாங்கள் கைதேர்ந்தவர்கள். பல விருந்தினர்களை இங்கே வரவேற்க வேண்டியிருக்கும். என்னுடைய விருந் தோம்பல் எப்படி இருக்கும் என்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்றான். 

“தங்களுடைய உத்தரவின் பேரில், இந்நகரம் அழகு படுத்தப்பட்டு, கோட்டையும் பலப்படுத்தப்பட்ட பிறகு, தாங்கள் இப்போதுதான் முதன்முறையாக இங்கே வருகை தந்திருக்கிறீர்கள். தாங்கள் இங்கிருக்கும் வரை அடியேனுடைய விருந்தினராக இருப்பதுதான் முறை. நான் தங்க ளுடைய விருந்தாளியாக இருப்பது…” 

“என்னை உங்கள் விருந்தாளியாக ஏற்றிருக்கும்போது இன்னும் சில விருந்தாளிகளுக்கும் அழைப்பு அனுப்பியிருக் கிறீர்கள் போலிருக்கிறது!” என்று பல்லவ மல்லன் சிரித்துக் கொண்டே கேட்டான். சிரிப்பில் தொனித்த கேலியை அரை யர் உணர்ந்து மனம் குழம்பினார். 

“சக்கரவர்த்தி சொல்வது புரியவில்லையே” என்றார்.

“பாண்டியமன்னரும், சித்திரமாயனும் இங்கே விருந்தி னராக வரப்போகிறார்கள் போலிருக்கிறது” என்றான், பல்லவமல்லன். 

இதைக்கேட்டதும் பல்லவடி அரையர் பதறிப்போய் ஆசனத்திலிருந்து எழ முயன்றார், ஆனால் அதே சமயம், அவருக்குப் பின்னாலிருந்து இரண்டு கைகள், அவருடைய தோளைப்பற்றி அழுத்தி மீண்டும் அமரவைத்தன. மிரண்டு போய்த் திரும்பினார். பின்னால் ஆயுதம் தாங்கிய இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். அரையரின் கால்கள் வெடவெடவென நடுங்கின. 

“சக்கரவர்த்தி சொல்வது புரியவில்லையே” என்று வாய் குழறியபடிக் கூறினார். 

“இதைப் படித்தால் புரியும்” என்று கூறியபடி பல்லவ மல்லன் ஓலையை அவரிடம் நீட்டினான். நடுங்கிய கரங்க ளால் பல்லவடி அரையர் ஓலையை வாங்கிப் பார்த்தார். படித்தபோது, அவருடைய உடல் நடுங்கத் தொடங்கியது. 

“மகாப்பிரபு, அவ்வளவும் பொய்…பொய்…” என்று கூவிக்கொண்டே, பல்லவமல்லனின் கால்களில் நெடிஞ் சாண் கிடையாக விழுந்தார். 

“அரையரே, இந்த ஓலை பொய்யாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். இது பொய்தான் என்று நிரூபணமாகும் வரை, நீங்கள் என் விருந்தாளி யாகவே இருங்கள்” என்று கூறிய பல்லவ மல்லன் வீரர் களைப் பார்த்தான். மறுகணம், வீரர்கள் பல்லவடி அரை யரை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். 

பல்லவமல்லன் அப்போதே உதயசந்திரனுக்கு ஒரு தூதனை அனுப்பினான். நந்திபுரக் கோட்டைக் காவலைப் பலப்படுத்தினான். கோட்டைக் கதவை அடைத்துவிடவும், அகழிப்பாலத்தை உயரே தூக்கிவிடவும் உத்தரவிட்டான். நந்திபுரத்தில் உறையும் பெருமாளை நினைந்து பிரார்த்தித் தான். 


காஞ்சியில் மக்கள் பரபரப்படைந்திருந்தனர். படை யெடுப்புக்கான ஆயத்தங்கள் நடைபெற்றதை அறிந்த மக்கள், எந்த நாட்டின் மீது போர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் குழம்பினார்கள். இன்னும் நான்கு தினங்களில் படை புறப்படுவதாயிருந்தது. அந்தச் சமயத் தில்தான், உதயசந்திரனைத் தேடி ஒரு தூதன் வந்தான். 

அப்போது, உதயசந்திரனும் முதன்மந்திரி பிரும்மஸ்ரீ ராஜன் நம்பூதிரியும் போர்ப்படையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். 

தூதன் கொடுத்த ஓலையைப் படித்த உதயசந்திரன் திடுக்கிட்டான். ஓலையை ராஜன் நம்பூதிரியிடம் கொடுத் தான். ராஜன் நம்பூதிரி ஓலையைப் படித்துப் பார்த்தான். 

“தளபதி உதயசந்திரனுக்கு-பாண்டிய மன்னர், சேர, சோழப் படைகளின் உதவியையும் பெற்று, பெரும் படை யுடன் நந்திபுரத்துக்கு அமாவாசையன்று புறப்படுகிறார். பல்லவடி அரையரின் சதி. பல்லவ சக்கரவர்த்திக்கும் செய்தி யனுப்பி, கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ளும்படி கூறி யிருக்கிறேன். நீ உடனே புறப்பட்டால், சக்கரவர்த்தியைக் காப்பாற்றலாம். இல்லையேல், சித்திரமாயன் பல்லவ சிம்மாசனம் ஏறுவது உறுதி. படையுடன் சித்திரமாயனும் வருகிறான். என்னுடைய முந்திய ஓலை கிடைத்திருக்கும்.” 

“ஓ…! மகாராணிதானே…?” என்று முனகியபடியே ராஜன் நம்பூதிரி நிமிர்ந்து உதயசந்திரனைப் பார்த்தான். 

உதயசந்திரன் ஆமோதித்துத் தலையை அசைத்தான். 

“நான் இன்றே புறப்படுகிறேன். மூன்று நாட்களில் நந்தி புரத்தை அடைந்து விடுவேன். சித்திரமாயன் எப்படியும் இங்கே வந்து சேர்வான். ஒன்று, அவனுடைய தலைமட்டும் வரும்; இல்லையென்றால், அவனே உயிருடன் இங்குவந்து சேர்வான். இதில் ஏதாவது ஒன்று நிச்சயம்” என்றான். 

“நிச்சயம் நீ அவனுடைய தலையுடன் திரும்புவாய்” ராஜன் நம்பூதிரி மிக்க நம்பிக்கையுடன் சொன்னான். 


நந்திபுரத்தை நெருங்கிய பாண்டிய மன்னனும், சித்திர மாயனும் ஏமாற்றமடைந்தனர். தாங்கள் வரும்போது, பல்லவமல்லனைப் பல்லவடி அரையர் சிறைப்படுத்தி விட்டுத் தங்களை எதிர்கொண்டு வரவேற்பார் என்று நம்பி வந்தவர்கள் கோட்டை வாயில் அடைபட்டிருந்ததையும், கோட்டை பலத்த காவலுடன் இருந்ததையும் கண்டு திகைத்தனர். 

தடையின்றி இலகுவில் நந்திபுரத்துக்குள் புகுந்து பல்லவ மல்லனைப் பிடித்துக் கொன்றுவிடலாம் என்று ஆசையுடன் வந்த சித்திரமாயன் மிகுந்த ஏமாற்றத்துக் குள்ளானான். பாண்டியப்படை கோட்டையை முற்றுகை யிட்டது. கோட்டையைத் தாக்கித் தகர்க்க முடியவில்லை. பல்லவ மல்லனின் வீரர்கள் கோட்டை மதில்களிலிருந்து பாண்டிய வீரர்களை தீவிரமாக எதிர்த்தார்கள். 

நந்திபுரக்கோட்டை முற்றுகையிடப் பட்டிருந்ததால், கோட்டைக்குள் உணவுப் பொருட்கள் எதுவும் வெளியே இருந்து செல்லமுடியாது. ஆகவே சில தினங்களில் கோட் டைக்குள் இருக்கும் மக்களும், பல்லவ மல்லனும் பசி யினால் துடித்துப் போய் கோட்டையைத் திறந்து வந்து சரணடைந்துதான் ஆகவேண்டும் என்ற நம்பிக்கையி லிருந்தான் பாண்டியமன்னன். 

ஆனால், முற்றுகையிட்ட இரண்டாம் நாள் நண் பகலில் உதயசந்திரன் பல்லவப் படையுடன் வந்து விட்டான். பல்லவப் படை பாண்டியனின் படையைச் சூழ்ந்து கொண்டது. பாண்டியன் பேரதிர்ச்சிக்குள்ளானான். பல்லவப் படை அங்கு எப்படி வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பல்லவடி அரையர் இரட்டை வேடம் போட்டுத் தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணினான். 

பல்லவப் படை சூழ்ந்ததும், பாண்டியப் படையில் குழப்பம் ஏற்பட்டது. பாண்டியப் படை தப்பி ஓட முடியாதபடி ஒரு பக்கம் நந்திபுரத்துக் கோட்டை மறித்துக் கொண்டிருந்தது; மறுபக்கம், பல்லவப் படை மறித்துக் கொண்டது. 

சற்று நேரத்தில், நந்திபுரக் கோட்டையின் வெளியே இரத்த ஆறு ஓடத் தொடங்கிவிட்டது. உதயசந்திரனின் தலைமையில் பல்லவப் படை மிகத் திறமையுடன் தாக்கி யது. குதிரைப்படையின் தலைவனான தேவசோமா களத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தான். நூற்றுக் கணக்கான தலைகள் அவனுடைய வாள் வீச்சினால் மண்ணில் உருண்டன. களுபந்தாவின் தலைமையில் செயல்பட்ட படைவீரர்கள் எதிரிகளின் தலைகளைப் பந்தாடினார்கள். பாண்டியனுடைய படையும் துணைக்கு வந்திருந்த சேர, சோழப் படைகளும், மழைநீரில் உப்புக் குவியல் கரைவதுபோல் கரையத் தொடங்கின. 

உதயசந்திரன் ஒரு மேடான இடத்தில் குதிரையி லிருந்தவாறு போர்க் களத்தைக் கவனித்துக் கொண்டி ருந்தான். அவனுடைய கண்கள் சித்திரமாயனைத் தேடிக் கொண்டிருந்தன. 

போர்க்களத்தில் சித்திரமாயனை முதலில் அடை யாளம் கண்டுகொண்ட தேவசோமா விரைந்து உதயசந்திரனிடம் சென்றான். 

“தேடிவந்த இரை இங்கேதான் இருக்கிறது” என்று கூறி மேல் திசையில் சுட்டிக் காட்டினான். 

அத்திசையில் சற்று தூரத்தில் சித்திரமாயன், குதிரையி லிருந்தவாறு, தீவிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த பாண்டியப் படையின் ஒரு பிரிவைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் உதயசந்திரன் தன் குதிரையை அத்திசையில் திருப்பினான். 

”நானும் வருகிறேன்” என்றான் தேவசோமா. 

“வேண்டாம். நீ இங்கிருந்தே கவனித்துக் கொண்டிரு. இப்போது நான் போவது என் சொந்தக் கடமையை முன்னிட்டு, நானேதான் அதை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறியபடியே வாளை உருவிக்கொண்டு, குதிரையை வேகமாகக் களத்துக்குள் செலுத்தினான் உதயசந்திரன். 

அவன் போர்க்களத்தில் இறங்கியதைக் கண்ட பல்லவப் படை உற்சாகமடைந்தது. பாண்டியப் படை பீதியடைந்தது. சித்திரமாயனை நெருங்கியதும், உதயசந்திரன், “சித்திரமாயா! உன்னைத்தான் தேடிவருகிறேன். என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று உரத்த குரலில் கேட்டான். 

உதயசந்திரனைக் கண்டதும், ஒருகணம் சித்திரமாய 

னின் கண்களில் பீதி தென்பட்டது. உடனே சமாளித்துக் கொண்டான். 

“ஓ…! நீயா? அந்தச் சீனத்துக்காரியின் காதலன். உனக்கு என்னை யாரென்று நினைவிருக்கிறதா?” என்று அலட்சியமாகக் கேட்டான். 

“மறந்துவிடவில்லை.”

“என்னவென்று?” 

“சித்திரமாயனென்று.” 

“பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்குத் திமிரா உனக்கு? நீ கூலிக்குப் பணிபுரியும் சேவகன். பல்லவநாட்டு ராஜா நான். மறந்துவிட்டாயோ?” 

“நீ ராஜாவல்ல. ஒரு கொடிய ராஜநாகம். நாகமாவது சத்தியத்திற்குக் கட்டுப்படும். நீ, அதைவிடக் கொடிய பிறவி.” 

“ஆ நீசனே…”-சித்திரமாயன் ஆக்ரோஷத்துடன் வாளை ஓங்கியபடியே உக்கிரத்தோடு உதயசந்திரன் மீது பாய்ந்தான். அவனுடைய வீச்சிலிருந்து விலகிய உதய சந்திரன் பயங்கரமாகச் சிரித்தான். 

“சித்திரமாயா, வீரப் போட்டியில் உன்னை அழைத் தேனே நினைவிருக்கிறதா? இப்போதும் உன்னோடு போரிட எனக்கு ஆயுதம் தேவையில்லை. ஆனால் உன் தலையை அறுத்து எடுக்கத்தான் இந்த வாள். உன்னை வீழ்த்த என் கையே போதும்” என்று கூறியபடியே, இடது கையில் வாளை ஏந்தியபடி, குதிரையிலிருந்து கீழே குதித்தான். 

தரையில் நின்ற உதயசந்திரன் மீது தன் குதிரையை வேகமாகச் செலுத்தினான், சித்திரமாயன். மின்னல் வேகத் தில் விலகி ஒதுங்கிய உதயசந்திரன், அதே வேகத்தில் தன்னைக் கடந்த குதிரையின் பிட்டத்தில் உதைத்தான். சித்திரமாயனின் குதிரை தடுமாறியபடி முன்னங்கால்களை மடக்கி முன்பக்கமாகச் சரிந்து விழுந்தது. சித்திரமாயன் குதிரையிலிருந்து கீழே குதித்து விட்டான். மிகுந்த ஆக்ரோ ஷத்துடன், ஓங்கிய வாளுடன் உதயசந்திரன் மீது பாய்ந் தான். உதயசந்திரன் எம்பிக் குதித்து, காலினால் சித்திர மாயனின் தலையைத் தாக்கினான். சித்திரமாயன் வீறிட்ட லறியவாறு, தலையைக் கையால் பற்றிக் கொண்டு, சுருண்டு விழுந்தான். மறுகணம், அல்லிமலர் இதழ்போல் ஒளிர்ந்த உதயசந்திரனின் வாள், சித்திரமாயனின் தலையை வெட்டி வீழ்த்தியது. வெட்டுண்டு தரையில் கிடந்த உடல் ஒரு பாம்பைப் போல் நெளிந்தது. 

தரையில் உருண்ட தலையை, வாளின் நுனியில் செறுகித் தூக்கியபடி அதை உற்றுப் பார்த்தான். சித்திர மாயனின் கண்கள் திறந்திருந்தன. 

ஓ…! அப்போது அந்தத் தோற்றம் கொடுரமாயிருந்தது. ராஜநாகத்தின் நினைவு வந்தது. 

“பல்லவ நாட்டுநச்சுப்பாம்பே, உன் தலை லீனாவின் மருக்கொழுந்திற்கு நல்ல உரம்” என்று கூறியபடியே உதயசந்திரன் உரக்கச் சிரித்தான். பிறகு, தன்னுடைய குதிரையில் ஏறினான். 

பாண்டியப்படை அக்காட்சியைக் கண்டு பீதியினால் அலறியபடி ஓடத் தொடங்கியது. சித்திரமாயனின் தலையை வாள் நுனியில் தூக்கிப் பிடித்தவாறு உதய சந்திரன் குதிரையில் சென்றதைப் போர்க்களத்தில் அனை வரும் கண்டனர். கோட்டை மதில் மீதிருந்தவாறு போரைக் கவனித்துக் கொண்டிருந்த பல்லவ மல்லனும் அந்தக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்தான். உதயசந்திரன் மீது தோன்றிய நன்றிப் பெருக்கால் நெகிழ்ந்தான். 

பல்லவப்டை உற்சாகமடைந்து ஆரவாரித்தது. சூரியன் அஸ்தமனமாகி இரண்டு நாழிகைக்குள் பாண்டியப் படை, தோற்றுப் பின் வாங்கி, ஓடத் தொடங்கிவிட்டது. பல்லவப் படையின் வெற்றி முழக்கத்தை கேட்ட பல்லவ மல்லன் கோட்டைக்கதவைத் திறக்க உத்தரவிட்டான். 

கோட்டைக் கதவு திறக்கப்பட்டவுடன், பல்லவ மல்லன் வெளியே பாய்ந்து வந்து, உதயசந்திரனை மார்புறத் தழுவிக் கொண்டான். 

“சக்கரவர்த்திக்கு என்னுடைய காணிக்கை” என்று, கூறிய உதயசந்திரன், அருகில் நின்ற தேவசோமா தூக்கிப் பிடித்திருந்த வாளினை வாங்கினான். அதன் நுனியில் செருகியிருந்த சித்திரமாயனின் தலையை பல்லவ மல்ல னின் காலடியில் வைத்தான். 


இரவு பல்லவப் பாசறையை மேற்பார்வையிட்டுக் காண்டிருந்தான் உதயசந்திரன். அப்போது, பாண்டி யனைத் துரத்திச் சென்ற பல்லவப் படையின் ஒரு பகுதி திரும்பிக் கொண்டிருந்தது. அதன் தலைவன், உதயசந்தி ரனை நெருங்கிச் சென்று, “பாண்டியப் படை நிம்பவனத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான். பிறகு, “பாண்டியர்களைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் பின்தங்கிச் சரணடைந்திருக்கிறார்” என்றான். 

“பாதுகாவல் தலைவனிடம் ஒப்படைத்து விடு” என்றான், உதயசந்திரன். 

“தளபதி அவர்களே, தங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று சொல்லிச் சரணடைந்தார். அவர் ஒரு பெண்.” 

இதைக் கேட்டதும் உதயசந்திரன் வியப்புற்றான். படைத்தலைவனின் பின்னாலிருந்த இரு வீரர்கள் அழைத்து வர, வெண்பட்டுடுத்தி வந்த பெண்ணைத் தீவட்டி ஒளியில் கண்ட உதயசந்திரன், மிகுந்த வியப்பினால் பேச முடியாமல் ஒரு கணம் நின்றான். பிறகு விரைந்து சென்று, “மகா ராணியாரே…!” என்றழைத்தான். மேற்கொண்டு பேச முடியாமல், அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். 

வெண்பட்டுடுத்தி, நெற்றியில் திருநீறணிந்தவாறு தோற்றமளித்த பிரேமவர்த்தினியைக் கண்டு பிரமித்துப் போனான். முன்னம் ஒருநாள், போட்டி அரங்கத்தின் மேடையில் அவன் கண்ட அவளுடைய தோற்றம் நினை வில் தோன்றியது. 

ஓ…! எவ்வளவு மாற்றம் ! ஊனையும், உள்ளத்தையும் ஒடுங்கச் செய்த அந்தக் கம்பீரம் எங்கே…? இப்போது இந்த முகத்தில் எவ்வளவு சாந்தி ! கண்களில்தான் என்ன தெளிவு! கண்டு, வியந்தபடி நின்றான் 

“உதயசந்திரா, உன்னுடைய வீரர்கள் என்னைச் சிறைப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள்” என்றாள், பிரேமவர்த்தினி. அவளுடைய இதழ்களில் முறுவல் தோன்றியது. 

“மகாராணி, மன்னிக்க வேண்டும். தங்களை அறியா ததால் சிறைப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் கள் உங்களுடைய வீரர்கள். நீங்கள் பாண்டியப் பை யுடன் வந்திருப்பது தெரிந்திருந்தால், முதலில் உங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வீரர்களை அனுப்பியிருந்திருப்பேன்” என்றான், உதயசந்திரன். 

“பாண்டியப்படை பல்லவ மல்லனை இங்கேயே கொன்றுவிட்டு, நேரே காஞ்சிக்குள் நுழைவதாகத்தான் ஏற்பாடு. காஞ்சியில், சித்திரமாயன் முடிசூடப் போவதாக நம்பியதால், என்னையும் உடன் அழைத்து வந்தான். எனக்குத் தெரியும், நீ வருவாய் என்று” என்றாள் பிரேம வர்த்தினி. 

“மகாராணியின் எண்ணம் எப்படியும் நிறைவேறு கிறது” என்றான், உதயசந்திரன். 

“நான் இன்னும் மகாராணியல்லவே” என்றாள், பிரேமவர்த்தினி. 

“தாங்கள் என்றும் மகாராணிதான்” என்று கூறி, கைகூப்பி வணங்கினான். 

உதயசந்திரன் அவளை மகாராணி என்றழைத்ததைக் கேட்டதுமே, சுற்றி நின்ற வீரர்கள் பரபரப்படைந்தனர். மிக்க மரியாதையுடன், அவளை விட்டு விலகி நின்றனர். 


மறுநாட் காலையில், உதயசந்திரன் காஞ்சிக்குப் புறப்படத் தயாரானான். பல்லவப் படையின் பெரும் பகுதி பாண்டியனைத் துரத்திக்கொண்டு செல்லவேண்டும் என்றும், தேவசோமாவும், களுபந்தாவும் படையை நடத்திச் செல்லவேண்டும் என்றும், உதயசந்திரன் ஒரு சிறு படை யுடன் காஞ்சிக்குத் திரும்புவதென்றும், விரைவிலேயே உதயசந்திரன், பல்லவப் படையுடன் திரும்பி வந்து சேர்ந்து கொள்வதென்றும் முடிவாகியது. பாண்டியப் படையை பாண்டிய நாடு வரை துரத்திச் சென்று ஒடுக்கிவிட்டுப் பல்லவப்படை திரும்பும்வரை பல்லவ மல்லன், ஒரு சிறு படையுடன் நந்திபுரத்திலேயே தங்குவது என்றும் முடி வாயிற்று. 

நந்திபுரத்துப் பெருமாள் கோயிலின் முன்பு எல்லாரும் கூடியிருந்தார்கள். உதயசந்திரனோடு போவதற்காக ஒரு சிறு படை அணிவகுத்து நின்றது. ஒரு ரதத்தின் உச்சியில் சித்திரமாயனின் தலை ஒரு ஈட்டியில் செருகப்பட்டுக் கட்டப்பட்டிருந்தது. அதே ரதத்தின் சக்கரத்தில் பல்லவடி அரையர் கட்டப்பட்டிருந்தார். 

ஐயோ பாவம், இரதம் காஞ்சியை நோக்கிப் பயண மாகும்போது, சக்கரத்தோடு அவருடைய உடல், மேலும் கீழுமாக சுழலும். காஞ்சிக்கு ரதம் போய்ச் சேரும்போது, அவரது உயிரற்ற சடலந்தான் சக்கரத்திலிருக்கும். 

பெருமாள் கோயிலின் மணியோசை கேட்கத் தொடங் கியது. பூஜை முடிந்து, பிரசாதங்கள் வினியோகமான பிறகு, உதயசந்திரன் விடைபெற சக்கரவர்த்தியை நெருங்கினான். 

“சக்கரவர்த்தியிடம் ஓர் வேண்டுகோள். காஞ்சிக்கு என்னோடு ஒருவரை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டி நின்றான். 

“ஏன்? அவர் காஞ்சிக்கு வரக்கூடாதவரா?” என்று கேட்டார், பல்லவமன்னன். 

“நான் அழைத்துச் செல்பவர், பழைய பல்லவ மகாராணியார்தாம். 

“ஆ…!” – வியந்து கூவினான், பல்லவமன்னன். சற்று சிந்தித்தான். பிறகு, “தளபதியாரே…” என்று ஏதோ கேட்க முனைந்தான். அதற்குள் உதயசந்திரன் குறுக்கிட்டுச் சொன்னான்: 

“நேற்று பாண்டிய படையிலிருந்து பிரிந்து வலிய வந்து, நம்மிடையே சேர்ந்திருக்கிறார்கள்.” 

“ஓ…! மகாராணியும் பாண்டியப்படையோடு வந்தார் களா? தளபதியாரே, இதில் பாண்டியனின் சூழ்ச்சி ஏதாவது இருக்கலாம்” என்றான்,பல்லவமன்னன் சந்தேகத்துடன். 

“சக்கரவர்த்தி அவர்களே, ஒரு இரகசியத்தைக் கூற இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த வெற்றிக்குக் காரணமே மகாராணி அவர்கள்தாம். தங்களுக்கும் எனக் கும் பாண்டியப் படையெடுப்பைப் பற்றி முன்கூட்டியே எச்சரித்துத் தூது அனுப்பினார்கள்.” 

“ஆ..! அப்படியா…” – பல்லவ மன்னனால் வியப்பை அடக்க முடியவில்லை. 

“மகாராணியார் இந்த உதவியைச் செய்திருக்கவில்லை யென்றால், பல்லவ நாட்டு வரலாறே இதற்குள் மாறி யிருக்கும்” என்றான், உதயசந்திரன். 

பல்லவ மன்னன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவனாய், உதயசந்திரனின் கைகளைப் பற்றிக்கொண்டு, “தளபதி யாரே, மகாராணியை இப்போதே நான் காண வேண்டும். என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்” என்றான். 

சிறிது நேரத்தில் ஓர் அலங்காரப்பல்லக்கு அங்கு வந்து இறங்கியது. அதிலிருந்து பிரேமவர்த்தினி இறங்கி, பல்லவ மன்னனை நோக்கி வந்தாள். பல்லவ மன்னன் மிகுந்த ஆர்வத்துடனும், வியப்புடனும் அவளைப்பார்த்தான். 

“பல்லவநாட்டுக்கு நான் வர, சக்கரவர்த்தியின் அனுமதி வேண்டி வந்திருக்கிறேன்” என்றாள் பிரேம வர்த்தினி. 

பல்லவமன்னன் இருகரங்களையும் கூப்பி வணங்கிய படி, “தாயே, உங்கள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி எதற்கு?” என்றான். 

பிரேமவர்த்தினியின் கண்கள் கலங்கின. பல்லவ மன்னனை நிமிர்ந்து பார்த்தாள். 

“என்னை ஆசீர்வதியுங்கள், தாயே” என்று கூறித் தலைதாழ்த்தி வணங்கி நின்றான் பல்லவமன்னன். 

பிரேமவர்த்தினி இருகரங்களையும் உயர்த்தி, அவன் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தாள். அப்போது அவள் கண்களிலிருந்து இரு துளி கண்ணீர் பல்லவமன்னனின் சிரசில் விழுந்து தெறித்தன. 

“தாயே, காஞ்சியில் எந்த அரண்மனை வேண்டுமோ அதில் தாங்கள் தங்கலாம்” என்றான், பல்லவமன்னன். 

பிரேமவர்த்தினியின் உதடுகளில் புன்முறுவல் தோன் றியது. “எனக்கு அரண்மனை தேவையில்லை. ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தில்தான் தங்கப் போகிறேன். என் மனதுக்கு அங்குதான் சாந்தி கிட்டும்” என்றாள். 

பல்லவமன்னன் பல்லக்கு வரை சென்று பிரேம வர்த்தினியை வழியனுப்பி வைத்தான். 

உதயசந்திரன் விடைபெற்றபோது, “தளபதியாரே, தங்கள் சபதம் நிறைவேறிவிட்டது. மருக்கொழுந்துக்கு உரமிட்டுவிட்டு, விரைவில் திரும்பி வாருங்கள். உங்களுக்கு இன்னும் நிறையப் பணி இருக்கிறது” என்றான், பல்லவ மன்னன். 

இதைக் கேட்டு உதயசந்திரன் உள்ளுரத் துணுக் குற்றான். பாண்டியப் படையெடுப்புக்குப் பிறகு, காஞ்சியில் ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தில் தியான முறை களைப் பயின்று, மனதுக்கு அமைதியைத் தேடலாம் என்று எண்ணியிருந்த உதயசந்திரன், “இன்னும் நிறையப் பணி இருக்கிறது” என்று பல்லவமல்லன் கூறியதைக் கேட்டுச் சிறிது சோர்வடைந்தான். 

பாவம், உதயசந்திரன். இன்னும் பதினெட்டுப் போர்க் களங்களில் பல ஆண்டுகளுக்கு, பல்லவமல்லனுக்காகத் திரியவேண்டியிருக்கும் என்பதை அப்போது அவன் அறியவில்லை. 

அது மட்டுமா? 

அவனுடைய அயராத வீரமும், திறமையும்தான் பல்லவ ஆட்சியை ஸ்திரப்படுத்தப் போகின்றன என்பதை யோ, தமிழக வரலாற்றில் அவனுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதையோ, பல்லவப் பட்டயங்களில் அவனு டைய பெயர் பொறிக்கப்பட்டு, புகழடையப் போகிறது என்பதையோ அவன் அப்போது அறியவில்லை. 

அவனுடைய எண்ணமெல்லாம், மருக்கொழுந்து மங்கையாக, கப்பலில் அவனோடு வந்து அவனை ஆட் கொண்டலீனாவைப்பற்றித்தாம். 

அவளுடைய நினைவிலேயே, காஞ்சியை நோக்கிப் பயணமானான். 

(முற்றும்) 

குறிப்பு : 1 

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் சுவரில் வரிசைக் கிரமமாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு, அவற்றின் கீழ் விளக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. அவை, 13 பகுதி களாக உள்ளன. அவற்றில் சில பகுதிகள், துரதிஷ்டவசமாக, மிகவும் சிதைந்து போய்விட்டன. ஒரு நாடகத்தைப் போல் காட்சியளிக்கும் அந்தச் சிற்பங்களும், அவற்றின் விளக்கங் களும் கூறும் செய்தி: 

பரமேஸ்வரபோத்தரையர், சுவர்க்கவாசியாகிவிட்ட தாலும், பல்லவராஜ்யம் பெருங்குழப்பத்தில் இருப்பதாலும் கடிகையாரும், மூலப்பிரகிருதியாரும், அமைச்சரும், இரணியவர்ம மகாராசனை அணுகி, ராஜ்ய பாரத்தை ஏற்க வேண்டினர். இரணியவர்மர், தம்முடைய மைந்தர் நால்வரி டமும் யார் அரியணை ஏற விரும்புகிறீர் என்று கேட்டார். முதல் மூன்று மைந்தர்கள் மறுத்துவிட்டனர். பன்னிரண்டு வயதுடைய கடைசி மகனான பல்லவமல்லன் எழுந்து, “நான் போவேன்” என்று, வணங்கி நின்றான். இரணியவர்மர் மகிழ்ந்தாலும் வயதில் சிறியவன் என்பதால், அவனை அனுப்ப மறுத்தார். தரணிகொண்ட போசர், “அவன் முன்பு மகா விஷ்ணுவை வணங்கியதால், சக்கரவர்த்தியாகிறான்; ஆகவே, மறுக்க வேண்டாம்” என்றார். பிறகு, பல்லவ மல்லன், முடிசூடப் புறப்பட்டான். பல்லவடி அரையர், அவனைச் சேனையுடன் எதிர்கொண்டு, யானை மீதமர்த்தி அழைத்து வந்தார். நகரத்தார்களும், காடக முத்தைரையரும் எதிர்கொண்டு சென்று, அரண்மனைக்கு அழைத்து வந்து, நந்திவர்மன் என்னும் அபிஷேகப்பெயர் சூட்டி, மகுடா பிஷேகம் செய்தனர்…… 

குறிப்பு : 2 

பல்லவ மல்லன், தன்னுடைய 21ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிட்ட உதயேந்திரப் பட்டயத்தில், உதய சந்திரனின் வீரச் செயலைப்பற்றிப் பொறித்திருந்த செய்தி: 

‘வில்வலம் என்னும் நகருக்கு அதிபதியும், வேகவதி ஆற்றின் தலைவனுமான, பூசான் வமிசத்தைச் சேர்ந்த உதய சந்திரன்’ என்று இந்தப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. பட்டயம், மேலும் குறிப்பிடும் செய்தி: 

தமிழ் அரசர்களால் நந்திபுரக் கோட்டையில் பல்லவ மல்லன் முற்றுகையிடப்பட்ட செய்தியை அறிந்த உதய சந்திரன், அதைத் தாளாமல், விரைந்து சென்று, அல்லிமலர் இதழ் போல் மின்னிய தன்னுடைய வாளால், பல்லவ அரசன் சித்திரமாயனை வெட்டி வீழ்த்திவிட்டு, எதிரிப் படைகளையும் நிம்பவனம், சூதவனம், சங்கிரகிராமம் முதலிய மற்ற இடங்களையும் வென்று, பல்லவ ராஜ்யம் முழுவதையும் பல்லவனிடம் ஒப்படைத்தான்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *