மருக்கொழுந்து மங்கை






(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-35
31. சித்திரமாயன் தப்பினான்

சிறைச்சாலையைத் தகர்த்து, அரசுப்படையை விரட் டிய மக்களுக்கு உற்சாகம் பெருகியது. தங்களால் படைவீரர் களையே விரட்டியடிக்க முடிந்தது என்று உணர்ந்தபோது, மக்கள் கூட்டம், தன்னுடைய சக்தியைப் புரிந்து கொண்டது. மக்களின் ஒன்று திரண்ட சக்தியின் எதிரே, மன்னன் ஒரு துரும்பு என்ற உண்மை புலப்பட்டபோது, அதுவே வெறி யாக மாறிவிட்டது. கூட்டத்தில் யாருக்குமே சிந்திக்கும் திறனில்லை, பைத்தியக்காரத்தனமான இரத்தவெறி, கூட்டத்தைத் தலைமை தாங்கிச் சென்றது.
அரசவீதியை அடைந்தபோது, மக்கள் கூட்டம், காட் டாற்று வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருந்தது. அதில் ஒழுங்கில்லை, கட்டுப்பாடில்லை. என்ன செய்கிறோம் என்ற உணர்வும் இல்லை. தலைவனில்லை. ஒவ்வொரு வனும் தலைவனாயிருந்தான்.
உதயசந்திரன் தலைமையில் ஏற்கெனவே அரண்ம னையை நோக்கிச் சென்ற மக்கள், அரண்மனையை நெருங்கி விட்டார்கள் என்ற செய்தி, அரண்மனைக்கு எட்டியபோது, சித்திரமாயனின் தைரியம் மறைந்துவிட்டது. கோட்டைத் தளபதியையும், ஊர்க்காவல் படைத் தலைவரையும் மக்களைத் தடுத்து நிறுத்தும்படி ஏவினான். அரசுப்படை, அரண்மனைக்கு முன் அணிவகுத்து நின்றது.
அரண்மனைக்குள் மகாராணியின் அறையில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லாருடைய முகங்களிலும் கவலை குடிகொண்டிருந்தது.
லீனாவின் உடலை தர்மாசன மண்டபத்தில் கிடத்தி உதயசந்திரன் பேசிய விவரத்தை ஒற்றன் கூறியதைக் கேட்டபோதுசித்திரமாயனின் முகம் பீதியினால் வெளுத்து விட்டது.
“எல்லாம் உன்னால் வந்த வினைதான்” என்று பிரேம வர்த்தினி கோபத்துடன் சித்திரமாயனை நோக்கிக் கூறினாள். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. சித்திர மாயன் அப்போது பதில் சொல்லும் நிலையில் இல்லை.
அருகிலிருந்த மேகலா, “இப்போது என்ன வந்து விட்ட து. ஒரு கோழையைப் போல் பதறுகிறீர்கள் ? கையா லாகாத மக்கள் கூட்டத்தைக் கண்டு இவ்வளவு பயமா?” என்றாள் அலட்சியமாக.
அவளை நோக்கிக் கோபமாகத் திரும்பிய மகாராணி, “உன்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. பேசாமல் வாயை மூடிக்கொண்டிரு” என்றாள்.
“ஏன்? பல்லவ நாட்டின் நிர்வாகத்தில் எனக்கும் அக்கறை உண்டு” என்றாள் மேகலா கோபத்துடன்.
“அக்கறை கொள்ளும் உரிமை பல்லவ குலத்தவருக் குத்தான் உண்டு” என்றாள் மகாராணி.
“நான் இளவரசரின் மனைவி.”
“உன்னை இந்த அரண்மனைக்குள் நுழையவிட்டதே பெரிய தவறு.”
“நான்தான் பல்லவ நாட்டின் வருங்கால மகாராணி என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று வெடித்தாள் மேகலா.
“அருகதை இல்லாதவளுக்கு அந்தப் பதவி கிட்டுகிறது. உன்னுடைய சிறுமதியால்தான் இந்நாட்டின் ஆட்சியில் தலையிட்டு வந்தாய். உன்னால்தான் இப்போது பெருங் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. உன்னால்தான் கடிகையில் பலர் இறக்க நேரிட்டது. எல்லாம் உன்னால் வந்தவினை” என்று இரைந்து கத்தினாள், பிரேமவர்த்தினி.
மகாராணியின் கோபத்தைக் கண்டு மேகலா நடுங்கி விட்டாள். கண்கள் கலங்கின. கோபத்துடன் திரும்பி சித்திர மாயனைப் பார்த்தாள். அவன் தலை குனிந்தவாறு ஏதோ சிந்தனையிலிருந்தான். அங்கிருக்கப் பிடிக்காதவளாக எழுந்து, கோபத்துடன் விரைந்து வெளியேறினாள்.
மகாராணியின் கோபம் சித்திரமாயன் மீது திரும்பியது.
“சக்கரவர்த்தியாக முடிசூட ஆசை இருக்கிறதே தவிர, அதற்கான அருகதை உனக்கு இருக்கிறதா? இன்று மக்க ளையே பகைத்துக்கொண்டு பெரிய ஆபத்தை உண்டாக்கி விட்டாயே” என்றாள்,மகாராணி கோபத்துடன்.
அவள் அவ்விதம் பேசி அவன் கேட்டதில்லை. அப் போது அவள் அவனைக் குற்றம் சாட்டியபோது, பதில் கூற இயலாமல் நின்றான். உள்ளூர எழுந்த கோபம், கையா லாகாத உணர்வாக மெலிந்து தேய்ந்து கொண்டிருந்தது. அவனுடைய முகம் பீதியினால் வெளுத்துவிட்டது.
மகாராணியின் உடல், பயத்தினால் நடுங்கிக் கொண்டி ருந்தது.ஓ…! பேரழகியான பிரேமவர்த்தினி, அதற்குள் எப்படி உருமாறிவிட்டாள் !களை இழந்து, முகம் வெளுத்து, மகாராணி என்னும் ஸ்தானத்தின் கம்பீரம் மறைந்து, உள்ளத்தில் நிரம்பியிருந்த கர்வம் பங்கப்பட்டு, ஒரு பாமரப் பெண்ணைப் போல் பரிதாபமாக நின்றாள்.
எல்லாவற்றுக்கும் சித்திரமாயன்தான் காரணம் என் பதை நினைத்தபோது, அவன் மீது மிகுந்த கோபம் எழுந்தது.
பாவி, நீயும் கெட்டு, இந்த நாட்டையும் கெடுத்து, என்னையும் வாழவிடாமல் செய்துவிட்டாயே… அவள் மனம் பொறுமியது.
தாளமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்டவ ளாய் சித்திரமாயனைப் பார்த்தாள். அவன் நிலை குலைந்து செய்வதறியாது பரிதாபமாக நின்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு காவல் வீரன் பரபரப்புடன் வந்து, மக்கள் கூட்டம் அரண்மனையை நெருங்கிவிட்டதையும், படை வீரர்களுக்கும், மக்களுக்கும் இடையே பலத்த போராட்டம், அரண்மனையின் அகழிக்கு வெளியே நடைபெறுவதாகவும் அறிவித்தான்.
உடனே அரண்மனைக்குள்ளிருந்த தன்னுடைய மெய்க்காவல் வீரர்களை அழைத்து வர உத்தரவிட்டான், சித்திரமாயன்.
உதயசந்திரன், அரண்மனையை நெருங்கியபோது, அரண்மனையை படை வீரர்கள் அணிவகுத்துக் காத்து நின்றனர். அரண்மனைக் கோட்டையைச் சுற்றி பாதுகாவ லாக அமைந்திருந்த அகழியின் குறுக்கேயுள்ள பாலம், உயரே தூக்கப்பட்டிருந்தது.
மக்கள் கூட்டம், அகழியை நெருங்கியதுமே, அகழிக்கு வெளியே அணிவகுத்து நின்ற படைவீரர்கள், கூட்டத்தின் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினர். கரை புரண்டு சீறிப் பாயும் வெள்ளம், எதிர்ப்பட்டதையெல்லாம் அள்ளிக் கொண்டு போவதுபோல், மக்கள் கூட்டம் படைவீரர் களைச் சூழ்ந்துகொண்டது.
பொலபொலவென பல உடல்களும், தலைகளும் வெட்டுண்டு, அகழிக்குள் விழுந்தன. மலையருவி பாய்ந்து, பெருந்தீயை அணைப்பதுபோல், படைவீரர்கள் மீது குவிந்த மாபெருங் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அரசுப் படையினர் திணறினர். அரண்மனையின் எதிரே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து சாய்ந்தனர். கூட்டத் தினூடே இரணியவர்மரின் வீரர்களும் சாதாரண உடையி லிருந்தவாறு போரிட்டதால் இரு பக்கமும் உயிர்ச் சேதம் அதிகரித்துக் கொண்டிருந்தது. உதயசந்திரனும், தேவசோ மாவும் மக்களை உற்சாகப்படுத்திப் போராட்டத்தைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் தீச் சுடரில் கற்பூரம் கரைந்தது மாதிரி, படை வீரர்கள் கரைந்து விட்டனர். அதே சமயம், சிறைச்சாலையைத் தகர்த்துவிட்டு வெறியோடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் கூட்டமும் அங்கு வந்து சேர்ந்தது. வெறிக் கூச்சலிட்டவாறே அகழியில் குதித்து அரண்மனையை நோக்கி நீந்தத் தொடங்கினர். ஏற்கனவே வெட்டுண்டு அகழியில் விழுந்த உடல்களை முதலைகள் கவ்விக்கொண்டு போயிருந்த தனால், அகழியில் நீந்தியவர்களைத் தாக்க முதலைகள் இல்லை. அகழியைத் தாண்டியவர்கள், பாலத்தை உயரே தூக்கிப் பிணைந்திருந்த கயிற்றைக் கழற்றிவிட்டார்கள். பாலம், பிணைப்பிலிருந்து விடுபட்டு, பேரிரைச்சலோடு சரிந்து, அகழியின் விளிம்பில் மடாரென்று விழுந்தது. மக்கள் கை கொட்டி ஆரவாரித்தனர். சிறுகணவாய் வழியாக வெள்ளம் சீறிப் பாய்வதுபோல் மக்கள் பாலத்தின் வழியாக அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர்.
ஊளையிட்டுக் கொண்டும், உறுமிக்கொண்டும், ஏசிக் கொண்டும் அரண்மனையின் படிகளில் கூட்டம், பாய்ந்து ஏறியது. கோட்டைத் தளபதி சுந்தரவர்மரும், ஊர்க்காவல் படைத் தலைவரும் ஒரு கணம் வாசல் முகப்பில் தென் பட்டனர். மறுகணம், கூட்டத்தோடு ஐக்கியமாகி விட் டனர், கூட்டம் முன்வாசற்படிகளைக் கடந்து அப்பாற் சென்றபோது, அவ்விருதலைவர்களின் உடல்கள் படிகளில் சிதைந்து சிதறிக்கிடந்தன.
மக்கள்,அரண்மனையின் பெரிய முற்றத்தை அடைந்த போது, கோயிற் கதவு போன்ற பிருமாண்டமான வாசற்கதவு அடைத்திருந்தது. காவல் வீரர்கள், பதறி ஓடிவிட்டனர். களுபந்தாவும், வேறு சிலரும் உலக்கைகளினால் கதவை இடித்து உடைத்தனர். கதவு பிளந்து வீழ்ந்ததும், மக்கள் வெள்ளம், அரண்மனைத் தோட்டத்துக்குள் பாய்ந்தது. தோட்டத்துச் செடிகளையெல்லாம் நாசம் செய்தவாறே முன்னேறிக் கொண்டிருந்த மக்களுக்கு எதிரே, முதன்மந்திரி அச்சுதபட்டர் இரு கைகளையும் கூப்பியவாறு ஓடி வந்தார்.
“மகா ஜனங்களே, சித்திரமாயனை முடி சூட விடா தீர்கள். நாட்டைப் பாழாக்கிவிட்டான்” என்று கூவினார்.
“பிடியுங்கள் சித்திரமாயனை, விடாதீர்கள்” என்று தேவசோமா கூச்சலிட்டபடி அரண்மனைக்குள் பாய்ந்து ஓடினான். கூட்டம், அச்சுதபட்டரையும் இழுத்துக் கொண்டு, உள்ளே ஓடியது.
உதயசந்திரனும், தேவசோமாவும் அரண்மனைக்குள் சித்திரமாயனைத் தேடினார்கள். தேவசோமாவின் இருகை களிலிருந்த இரண்டு வாட்களில் ஒன்றை உதயசந்திரன் வாங்கிக் கொண்டான். ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்து தேடினார்கள். எதிர்ப்பட்ட காவலாளிகள் பயந்து ஓடி ஒளிந்தார்கள்.
மக்கள் கூட்டம் அரண்மனைக்குள் சென்றபோது, அங்கு யாரும் இல்லை. ஆத்திரமடைந்த கூட்டம் ஒரு கதவுக்குப் பின்னே ஒளிந்திருந்த காவலாளியைப் பிடித்து விசாரித்தது. சித்திரமாயனும் மெய்காவல் வீரர்களும் வெளி யேறி ஒரு நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது என்று அவன் கூறியதும், மக்களின் ஆத்திரம் முழுவதும் அச்சுதபட்டர் மீது திரும்பியது. சித்திரமாயனின் அறை முழுவதும் அச்சுத பட்டரின் இரத்தமும் சதைகளும் எலும்புகளும் சிந்திச் சிதறின.
அரண்மனைக்குள் சித்திரமாயனைக் காணாமல் ஏமாற்றமடைந்த உதயசந்திரனுக்கு அந்தப்புரச் சுரங்கப் பாதையின் நினைவு வந்தது. கூட்டத்தை விட்டு நழுவி, தோட்டத்தில் இறங்கி அந்தப்புரத்தை நோக்கி ஓடினான். கையில் வாளுடன் ஓடிவந்த உதயசந்திரனைக் கண்ட தாதி யர்கள் வீறிட்டு அலறினர்.
“எங்கே சித்திரமாயன்?” உதயசந்திரன் ஆங்காரத் தோடு கேட்டான், தாதியர்கள் பயத்தில் பேசமுடியாமல் நடுங்கி நின்றனர். ஒருத்தியின் தலைமுடியைப்பற்றி உலுக்கினான்.
“இளவரசரைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று அழுதாள்.
“மகாராணி…?”
தாதி படுக்கையறையை சுட்டிக் காட்டினாள். உதய சந்திரன் உள்ளே பாய்ந்தான். அங்கு யாரும் இல்லை. சாள ரத்தின் வழியாகப் பாய்ந்தான். சுரங்கப்பாதையின் துவா ரத்தை அடைத்திருந்த கல், சற்று விலகி இருந்தது. உதயசந்தி ரன் அந்த அறைக்குள் ஓடினான், அதேவேளையில் சுரங்கப் பாதையில் இறங்கிக் கொண்டிருந்த மேகலா, உதயசந்திர னின் குரலைக் கேட்டு சற்றுத் தயங்கி நின்றாள். அந்தக் கணத்தில் அவளுடைய சிந்தையில் ஒரு திட்டம் உருவாகி யது. உடனே சுரங்கப்பாதையிலிருந்து வெளிப் பட்டு விரைந்து வந்தாள். உதயசந்திரன் சுரங்கப்பாதையிருந்த அறைக்குள் வந்தபோது மேகலா அவனை நோக்கி ஓடி வந்தாள்.
“வா உதயசந்திரா, நல்ல வேளையில் வந்தாய். எல் லாரும் ஓடிப்போய் விட்டார்கள். இனி இந்தப் பல்லவ நாடு நம் கையில்தான்” என்று பரபரப்புடன் கூறினாள்.
உதயசந்திரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். மேகலா மீண்டும் சொன்னாள்: “எல்லாரும் தப்பிப் பாண்டிய நாட் டிற்கு ஓடுகிறார்கள். இனி சிம்மாசனத்திற்கு நான் தான் வாரிசு. நான்தான் இந்நாட்டின் மகாராணி. புரிகிறதா உதய சந்திரா, இனி நான் தான் மகாராணி.”
வாளேந்தியிருந்த அவனுடைய கையைப் பற்றிக் கொண்டாள். “நான் மகாராணியாகும்போது நீதான் மகா ராஜா புரிகிறதா? நாம் இருவரும் இந்நாட்டை ஆளலாம்” என்றாள் உற்சாகத்துடன்.
உதயசந்திரன் அவளை உற்றுப் பார்த்தான். “நான் சிம்மாசனம் ஏற வரவில்லை. பழிவாங்க வந்திருக்கிறேன்” என்று உறுமினான்.
“பழிவாங்கு. இந்தப் பல்லவ பரம்பரை முழுவதை யுமே பழிவாங்கு. பிறகு நாம்தாம் இந்நாட்டை ஆளப் போகி றோம்” என்றாள் மேகலா. முத்துப் பற்கள் தெரியச் சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பு அவனுக்கு அப்போது எரிச்சலை ஊட்டியது. அவள் கையை உதறினான்.
“எங்கே அவர்கள்? எப்படித்தப்பித்து ஓடுகிறார்கள் ?” என்று இரைந்தான்.
“அதோ சுரங்கப்பாதை. போ, பழி வாங்கு” என்று சுரங்கப்பாதையைச் சுட்டிக் காட்டினாள்.
உதயசந்திரன் சுரங்கவாயிலை நோக்கிப் பாய்ந்து சென்றான்.
“போ,மகாராணியைக் கொன்றுவிட்டு வா. இனிநான் தான் இந்நாட்டின் மகாராணி. நான் தான் மகாராணி” என்றாள் மேகலா.
அவள் கூறியது அவன் காதில் விழவில்லை. ஒரு கணத்தில் சுரங்கவாயிலுக்குள் நுழைந்து மறைந்து விட்டான்.
மேகலாவின் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. ஓ… பல்லவ குலத்தினர் எல்லாரும் ஓடிவிட்டனர். மகாராணியை சுரங்கப்பாதைக்குள் உதயசந்திரன் கொன்று விடுவான். இனி பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒரே மகாராணி நான்தான்…
தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எண்ணி மிகுந்த உற்சாகமடைந்தாள். அப்போது வெளியே யாரோ விரைந்து வரும் காலடி ஓசை கேட்கவே முன்பக்கத்து அறைக்கு வந்தாள். முற்றத்தில் தேவசோமா, கையில் வாளுடன் விரைந்து வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டு பீதியுற்று வாசற்கதவிற்குப் பின்னே ஓடி ஒளிந்தாள், மேகலா.
உதயசந்திரனைத் தேடி வந்த தேவசோமா, அரண் மனை அந்தப்புரத்தின் முன் அறைக்கதவின் பின்னே யாரோ ஓடி ஒளிவதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்தான்.
“கதவிற்குப் பின்னால் யார் ? வா வெளியே” என்று இரைந்தான்.
மேகலா, பீதியினால் நடுங்கியபடியே ஒளிந்து நின் றாள். பயத்தினால் அவளால் நகரக்கூட முடியவில்லை. மறுகணம் தேவசோமா கதவை இடது கையினால் படீரென்று இழுத்து அதே வேகத்தால் வலது கையிலிருந்த வாளைப்பாய்ச்சினான்.
வீல் என்று கதறியபடி மார்பிலிருந்து குருதி கொப் பளிக்க மேகலா வெளியே சரிந்து அவன் காலடியில் குப்புற விழுந்தாள்.
“சீ…ஒரு பெண்ணா ?” என்று அருவருப்புடன் முனகிய படியே சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு கீழே கிடந்தவளை காலினால் மிதித்துப் புரட்டினான். “ஓ…! நீயா? இந்நாட்டின் எதிர்கால மகாராணியல்லவா!” என்று முனகினான்.
அந்தப்புரத்தில் ஆள் அரவமே இல்லை. மயான அமைதி… காலடியில் கிடந்த மேகலாவை உற்றுப் பார்த்தான். ஒரு பெண்ணைக் கொன்று விட்டோமே என்று ஆற்றாமை. அருவருப்புடன் முகத்தைச் சுளித்தான். அப் போது அரண்மனையின் மற்றொரு பகுதியில் புரட்சிக் காரர்களின் இரைச்சல் மிகுந்து கேட்கவே அந்தப்புரத்தை விட்டுத் திரும்பி அரண்மனையை நோக்கி விரைந்தான்.
சுரங்கப் பாதையினுள் நுழைந்த உதயசந்திரன், கண் களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து பார்த்தான். சுரங்கத் தினுள்ளே சற்று தூரத்தில் இரண்டு தீவட்டிகளின் ஒளி தெரிந்தது. தீவட்டிகளை நோக்கி விரைந்து ஓடினான்.
அவனுடைய காலடி ஓசையைக் கேட்டு, சுரங்கத் தினுள் சென்று கொண்டிருந்தவர்கள் ஓடத் துவங்கினர். உதயசந்திரன் தீவட்டிகளை இலக்கு வைத்து ஓடினான். நெருங்கியபோது, அவர்களுள் சித்திரமாயன் இல்லை என்பதையும், அவர்கள் பெண்கள் என்பதையும் அறிந்து ஏமாற்றமடைந்தான். அந்த ஏமாற்றம் கடும் கோபமாக மாறியது.
இரு தாதியர்கள் தீவட்டிகளை, ஏந்தி வழிகாட்ட மகாராணி பிரேமவர்த்தினி, விரைந்து சென்று கொண்டிருந்தாள்.
உதயசந்திரன் பாய்ந்து சென்று அவள் கையைப் பற்றினான்.
“மகாராணி, இனி தப்பிக்க முடியாது. இன்றோடு இந்நாட்டைப் பிடித்த பிசாசு, ஒழியட்டும்” என்று கூறிய படியே, கையிலிருந்த வாளை ஓங்கினான். தீவட்டிகளைப் பிடித்திருந்த தாதியர்கள் பயத்தினால் அலறினார்கள்.
உதயசந்திரன் தன் உணர்வையே இழந்து விட்டான். அவனுள் கொலை வெறி தாண்டவமாடியது. சித்திரமாயன் தப்பிவிட்டான் என்ற எண்ணம், அவனுடைய சுய அறிவையே பேதலிக்கச் செய்துவிட்டது. ஒரு பெண்ணைக் கொலை செய்ய முயல்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல், வாளேந்திய கையை ஆவேசத்தோடு ஓங்கினான்.
பயத்தோடுநிமிர்ந்து பார்த்த பிரேமவர்த்தினி, கொலை வெறியுடன் நின்றுகொண்டிருந்தவனைக் கண்டு நடுங்கி னாள். ஒரு கணம் அவனுடைய முகம் நினைவில் வந்தது.
வீரப்போட்டி மைதானத்தில் பார்த்த முகம், அவன் யார் என்பதைப் புரிந்துகொண்டாள். பெயர்கூட நினைவில் வந்துவிட்டது. சட்டென்று கீழே மண்டியிட்டு ஒரு கை யால் அவன் காலைப் பற்றிக் கொண்டாள். “உதயசந்திரா, எனக்கு உயிர்ப் பிச்சைக் கொடு. கொன்று விடாதே” என்று கெஞ்சி அழுதாள்.
அவனுடைய பெயரை, அவள் உச்சரித்ததைக் கேட் தும், உதயசந்திரன் சிலிர்த்தான். அறிவு, விழிப்படையத் தொடங்கியது.
சீச்சீ. சித்திரமாயனைப் பழி வாங்கத் தேடிவந்தவன், இப்படி ஒரு பெண்ணைக் கொலை செய்ய நிற்கிறேனே…
குனிந்து அவளை உற்றுப் பார்த்தான். அவளுடைய பயம்கலந்த பார்வை, தீவட்டிகளின் ஒளியில் பரிதாபமாகத் தெரிந்தது. அவள் கண்களில் முட்டி நின்ற கண்ணீரும் பயப் பிராந்தியும் அவனை நெகிழ வைத்தன.
ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் மகாராணி அவன் பாதங்களைப்பற்றிக் கெஞ்சும் பரிதாபத்தை எண்ணி மனம் கூசினான். அவள் முகத்தை உற்று நோக்கினான். அவளு டைய முகம் பீதியினால் வெளிறிப் போயிருந்தது.
ஒய்யாரம் எங்கே…? கம்பீரம் எங்கே…?
அவள் மீது மிகுந்த இரக்கம் தோன்றியது.
“எழுந்திருங்கள். சித்திரமாயன் எங்கே?”-என்று கேட்டான். மண்டியிட்டிருந்த பிரேமவர்த்தினி, எழுந்து நின்றாள்.
“அவன் அப்போதே மெய்க்காவல் வீரர்களோடு தப்பி ஓடிவிட்டான்” என்றாள். அவனுடைய வலுவான பிடியில் சிக்கியிருந்த அவள் கையில் வலி தோன்றியது.
“எங்கே போகிறான்?”
“தெரியவில்லை.”
“நீங்களும் அவன் கூட ஓட வேண்டியதுதானே?”
“அவன், மேற்கு வாயில் வழியாகத் தப்பிவிட்டான். நான் போவதற்குள் மக்கள் கூட்டம் அங்கேயும் வந்து விட்டது”.
“ஓ… அதனால்தான் இந்த வழியோ… நீங்கள் எங்கே போவதாக எண்ணம்?”
“தெரியாது… சுரங்க வாசலின் வெளியே மெய்க் காவலர்கள் குதிரைகளுடன் எனக்காகக் காத்து நிற்கிறார் கள். அவர்கள் என்னை எங்கே கொண்டு போகிறார்களோ தெரியவில்லை” என்றாள். குரல் பயத்தினால் நடுங்கியது. கையில் வலி அதிகமாகவே, முகத்தைச் சுளித்தாள். அதைக் கண்ட உதயசந்திரன், அப்போதுதான் அவளுடைய கையை வலுவுடன் தான் பற்றியிருந்ததை உணர்ந்தான். அவள் கையை விடுவித்தான், பற்றியிருந்த இடம் கன்றிப் போயிருந்தது.
“நீங்கள் போகலாம்” என்று கூறி வழி விட்டு விலகி நின்றான் உதயசந்திரன்.
“உதயசந்திரா, இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்று நாத் தழுதழுக்கக் கூறி, அவனைக் கைகூப்பி வணங்கினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
உதயசந்திரன் இரக்கத்தோடு பார்த்தான்.
அவளுடைய முகத்தில் சோகம் படர்ந்த புன்னகை ஒன்று தோன்றியது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். பிறகு, விரைந்துநடக்கத் தொடங்கினாள். தாதியர் இருவரும் அவளுக்கு முன்பாக நடக்கத் தொடங்கினர்.
உதயசந்திரன் ஒரு தாதியிடமிருந்து தீவட்டியை வாங்கினான். “ஒரு தீவட்டி உங்களுக்குப் போதும். மகாராணியை ஜாக்கிரதையாகக் கொண்டு சேருங்கள். சீக்கிரம் போங்கள். மக்கள் கோட்டைக்குள் தான் கலகம் செய்கிறார்கள், கோட்டைக்கு வெளியே இன்னும் பரவவில்லை. சீக்கிரம் வெளியேறிப் போங்கள்” என்று கூறிவிட்டு அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
அவர்கள் தூரத்தில் மறைந்ததும் கையிலிருந்த தீவட் டியை உயரத் தூக்கிப்பிடித்தபடி திரும்பி நடக்கத் தொடங்கி னான். சித்திரமாயனைத் தப்பவிட்டு விட்டோமே என்ற எண்ணம் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
சுரங்கப்பாதையிலிருந்து வெளியேறி அந்தப்புரத்தின் முன் அறைக்கு வந்தபோது, அறையின் வாசலில் கிடந்த மேகலாவைக் கண்டு துணுக்குற்றான். தீவட்டியை வீசி யெறிந்துவிட்டு அவளை நோக்கி ஓடினான். குருதி வெள் ளத்தில் பிணமாகக் கிடந்தவளின் அருகே மண்டியிட்டு அவளை உற்றுப்பார்த்தான். சற்று முன்பு அவள் அவனிடம் பேசியவை நினைவில் வந்தன.
“ஓ… உனக்குத்தான் எவ்வளவு பேராசை, பல்லவ நாட்டின் மகாராணியாவதில்” என்று முனகியபடி அவளையே வெறிக்கப்பார்த்தான். அவளுடைய முகத்தில் உயிர் பிரிந்த பிறகும் ஏமாற்றத்தின் சாயல் தென்பட்டது. அவள் மீது பரிதாபம் கொண்டான்.
“அட பேதைப்பெண்ணே, எதற்கும் அருகதை வேண் டாமா? உன் ஆசை ஒரு நொடியில் பொசுங்கிவிட்டதே. மகாராணியுடன் நீயும் தப்பி ஓடியிருக்கலாமே. உன் தலைவிதி இப்படி.”
அவளைப் பற்றிய கடந்த கால நினைவுகள் மனத்தில் உளைந்தன. அவன்மீது அவள் கொண்டிருந்த மோகம்; அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்; கடைசி யில் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், கோபம் எல்லாம் மனத்தில் வட்டமிட்டன.
அவள் மீது மிகுந்த பரிவு தோன்றியது. இரக்கத்தோடு அவளைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் நெஞ்சில் குமைந்து கொண்டிருந்த தீராத தாபங் களும், ஆசைகளும் மார்பு வழியே வழிந்து கொண்டிருந்த இரத்தத்தோடு வெளியேறிவிட்டன.
உதயசந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவளை மெல்லத் தூக்கி, அருகே இருந்த மஞ்சத்தில் படுக்க வைத்தான்.
32. புதிய மரபு
காஞ்சி அரண்மனையிலிருந்து சித்திரமாயனும், மகாராணியும் தப்பி ஓடி விட்டனர் என்பதை அறிந்த மக்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். பல்லவ நாட்டைப்பிடித்திருந்த வியாதி விலகி விட்டதாக எண்ணி நிம்மதியடைந்தனர். ஆனால், அதேசமயம் பல்லவ சிம்மாசனம் காலியாக இருந்ததை உணர்ந்தபோது மக்கள் குழம்பினார்கள், ஒன்றேகால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்லவ சிம்மா சனத்தை அலங்கரித்த சிம்மவிஷ்ணு பல்லவருடைய சந்ததி, சித்திரமாயனுடன் முடிவடைந்துவிட்டது.
இனி சிம்மாசனத்தில் அமர யாருக்கு அருகதை ?
சித்திரமாயனுக்கு ஒரு சகோதரன் இருந்திருந்தால், அவனை அரியணையில் ஏற்றியிருக்கலாம். இனி அந்த வமிசத்தில் அரசாள யாருமில்லை என்ற நிலை வந்தபோது மக்கள் மனத்தில் குழப்பம் எழுந்தது.
நகரப் பிரமுகர்களும், மற்ற தலைவர்களும், அது பற்றியே மூன்று நாட்களாக யோகி ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தில் கூடி ஆலோசித்தனர். பரமாச்சாரியின் ஆசி ரமம் போராட்டத்தின் மையமாக விளங்கத் தொடங்கி யதிலிருந்து, எல்லாத் தலைவர்களும் அங்கே கூடிப்பேசத் தொடங்கினர். ஆசிரமத்தின் பெரிய தோட்டத்தில் இரதங் களும்,பல்லக்குகளும் குதிரைகளும் வருவதும் போவதுமா யிருந்தன.
அவ்வளவு அமளியிலும் ஆசிரமத்தின் மத்திய கட்ட டத்தில் ருத்திர பரமாச்சாரியும், சீடர்களும் எதைப்பற்றியும் கவலைப்பட்டுக் கொள்ளாமல் தங்கள் யோக சாதனையில் ஈடுபட்டிருந்தனர். சீடர்கள், யோகம் பயிலாத வேளை களில் கலவரத்தின்போது காயமடைந்து அங்கே கொண்டு வரப்பட்டிருந்தவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். மற்ற வேளைகளில் வெளியே தோட்டத் தில் வந்து நின்றுகொண்டு அங்கு வருவோரையும் போவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘ஐயோ பாவம் ஏன்தான் இந்த மனிதர்கள் அமைதியாக வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாமல் இப்படி பரபரப் படைந்து தவிக்கிறார்களோ’ என்று எண்ணுவது போலிருந் தது சீடர்களுடைய பார்வை. வெளி உலகத்தில் நடை பெறும் சூறாவளியான இயக்கங்கள் அந்த ஆசிரமவாசி களைப் பாதித்ததாகவே தெரியவில்லை. அந்த ஆசிரமமே பற்றி எரிந்தால் கூட விலகி நின்று, நெருப்பை வேடிக்கை பார்க்கும் மனப்பக்குவம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆசிரமத்துக்குள் அமைதி நிலவிக்கொண்டிருந்த அதே வேளையில் அந்தக் கட்டடத்தை அடுத்த பகுதியில் பலர் நிம்மதி இழந்து நாட்டுப் பிரச்னைகளைச் சுமந்து தவித்துக் கொண்டிருந்தார்கள்.
மகாராணியால் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த பல துறைகளின் தலைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வர்களை வெறிகொண்ட மக்கள் கொலை செய்துவிட்டனர். ஆகவே, காஞ்சி நகர் ஆள்வாரற்று அநாதையாகக் கிடந்தது. தற்காலிகமாக காஞ்சியின் பாதுகாப்புப் பொறுப்பை இரணி யவர்மர் ஏற்றிருந்தார்.
கிளர்ந்தெழுந்த காஞ்சி மக்களை அமைதிப்படுத்துவது தான் பெரும்பாடாகிவிட்டது. மக்களுக்கு யார்மீதெல்லாம் வெறுப்பும் பொறாமையும் ஏற்பட்டிருந்ததோ அவர்களை யெல்லாம் கொல்லத் தொடங்கிவிட்டனர். இரண்டு நாட்களுக்கு காஞ்சி நகரில் மக்கள் காட்டுமிராண்டிகளைப் போல் கொலைவெறிபிடித்து அலைந்தனர். அவர்களை அடக்கி, காஞ்சியில் அமைதியை நிலை நாட்டுவது தான் இரணியவர்மருக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் கொடுமை இழைக்கத் தொடங்கினர். அதே சமயம், சித்திரமாயனிடம் அபிமானம் கொண்டிருந்த சில பிரமுகர் களும், அரச குலத்தைச் சார்ந்தவர்களும், வணிகர்களும் மறைமுகமாகச் சமூக விரோதிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரணியவர்மர் மூன்றே நாட்களில் எல்லாவற்றையும் ஒடுக்கினார். பிடிபட்ட சமூக விரோதிகளை முச்சந்தியில் கழுவேற்றினார். காஞ்சி நகரில் நான்காம் நாள் காலையி லிருந்து அமைதி நிலவத் தொடங்கியது.
அன்றைய ஒரே பிரச்னை பல்லவ சிம்மாசனம் காலி யாகக் கிடந்ததுதான். அரியணைக்கு வமிசாவழிப்படி தூய்மை குன்றாமல் பிறந்தவராக அமைய வேண்டுமே என்ற கவலை, தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. மக்க ளுக்குப் பாரம்பரியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் பிடிமானமும் இருந்தது. தலைவர்கள் தங்கள் இஷ்டப்படி யாரையாவது சக்ரவர்த்தியாக ஏற்றுக்கொண்டுவிட்டால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அரச குலத்தைச் சாராத சாதாரணக் குலத்தில் பிறந்த மேகலா, சின்னராணியாக இருந்ததையே மக்கள் விரும்பவில்லை. பல்லவ சாம்ராஜ் யத்தின் சக்ரவர்த்தியாக இருப்பவர், அரச குலத்தில் வேறு இரத்தக் கலப்பில்லாமல் உதித்தவராக இருக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு மிகுந்த அக்கறை இருந்தது.
சித்திரமாயனோடு ஒரு வமிசத்தின் தொடர்ச்சி முற்றுப் பெற்றுவிட்டது. இனி யாரை சக்கரவர்த்தியாக்குவது?
இந்தக் கேள்விதான் காஞ்சி நகரில் ஒவ்வொருவர் வாயி லிருந்தும் வந்து கொண்டிருந்தது. இதற்கு விடை கிடைக் காமல்தான் தலைவர்கள், பரமாச்சாரியின் ஆசிரமத்தில் கூடி மூன்று தினங்களாக ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் குமைந்து கொண்டிருந்தனர்.
இரணியவர்மரை சக்கரவர்த்தியாக முடிசூடும்படி தரணி கொண்ட போசரும், வேறு சில தலைவர்களும் வேண்டினர். “நீங்கள் கலப்பற்ற ராஜ வமிசத்தைச் சார்ந்த வர்கள். இறந்து போன சக்ரவர்த்தியின் தாயாதிக் கிளை யைச் சேர்ந்தவர்கள். சில போர்க்களங்களில் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது காஞ்சி மக்கள் மிகுந்த மரியாதையும் வைத்திருக் கிறார்கள். நீங்கள் அரியணை ஏறி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது பொருத்தமாகவே இருக்கும்” என்றார், தரணி கொண்ட போசர்.
“நான் தாயாதிக் கிளையைச் சேர்ந்தவன் என்ற ஒரு காரணத்துக்காகவே, மறுக்கிறேன். இப்போது நான் அரியணை ஏறினால், நான் சதிசெய்து அரியணையில் ஏறிவிட்டதாக மக்கள் நினைப்பார்கள். என்னைப்போல் அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் பலர் இருக்கிறார்களே, அவர்களில் யாராவது முடிசூடட்டும்” – என்று கூறி, இரணியவர்மர் மறுத்து விட்டார்.
நாட்டை ஆள வேறு பொருத்தமான நபரைத் தேர்ந் தெடுப்பதில் நகரப் பிரமுகர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இரணியவர்மரைத் தவிர, அரச குலத்தைச் சார்ந்த வேறு யாருமே தகுதி உள்ளவராகத் தோன்றவில்லை. அரச குடும் பத்தைச் சார்ந்த பலர், சக்ரவர்த்தியாக விருப்பம் கொண்டு நகரப் பிரமுகர்களின் அபிமானத்தைப் பெற போட்டி போட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் உதயசந்திரன் மட்டும் எதிலும் தலையிடாமல் ஆசிரமத்து மாடியில் முடங்கிக் கிடந்தான். அவனுக்கு நேர்ந்த துன்பத்தை யாரால் நிவர்த்திக்க முடியும்? லீனாவின் மருக்கொழுந்துச் செடிகளில் இரண்டைக் கொண்டு வந்து ஆசிரமத்தில் நட்டான். அந்தச் செடிகளைப் பார்த்துப் பார்த்துப் பொங்கியழுதான். சில வேளைகளில் வெறிக்கப்பார்த்தவாறு பைத்தியக்காரனைப்போல் அமர்ந் திருந்தான்.
சித்திரமாயன் தப்பி விட்டது அவனுடைய மனதை மிகவும் பாதித்திருந்தது. அவனுடைய கோபத்துக்கு வடி கால் இல்லை. கோபத்தினால் உள்ளூர வெந்து கொண்டி ருந்தான். ராஜன் நம்பூதிரி அவ்வப்போது வந்து ஆறுதல் கூறினான். தேவசோமாவும், களுபந்தாவும் அவனுக்குத் துணையாக ஆசிரமத்திலேயே தங்கியிருந்தனர்.
டெங்லீ, அவனைத் தம்மோடு வந்து விடும்படி அழைத்தார். ஆனால், உதயசந்திரன் மறுத்துவிட்டான். மூன்று நாட்களுக்குப் பிறகு, அன்றுதான் அவன் ஆசிர மத்துக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். ஆசிரமத் தோட்டத்தின் குளுமையும் சூழ்நிலையும் தெம்பளிப்ப தாயிருந்தன.
அன்று ஆசிரமத்துத் தோட்டத்தில், காஞ்சி மக்களின் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. நகரப் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்த தலைவர்களும், குறுநில மன்னர் களும் கைலாசநாதர் கோயிலில் கூடி சந்நிதி முன்பாக சக்ர வர்த்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற செய் தியை அறிந்ததும் ஊர் மக்கள் திரண்டு, கைலாசநாதர் கோயிலை நோக்கிச் செல்லத் தொடங்கினர். ஆசிரமத் திலிருந்து எல்லாத் தலைவர்களும் ஒரு சேர, கைலாசநாதர் கோயிலுக்குப் புறப்படுவதைக் காண மக்கள் ஆசிரமத் தோட்டத்திலும் கூடியிருந்தனர்.
காலையில் உதயமாகி, ஏழரை நாழிகைக்குப் பிறகு, ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தில் கூடிய தலைவர்களும், பிரமுகர்களும் தங்கள் தங்கள் வாகனங்களில் கோயி லுக்குப் புறப்பட்டார்கள். ஆசிரமத்தின் பிரதான வாயிலில் கூடி நின்ற மக்கள், ஒவ்வொரு வாகனமும் கடந்து சென்ற போது மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள். வாகனங் களில் சென்றவர்கள் யார் யார் என்று மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தார்கள்.
இரணியவர்மர், தம்முடைய மகன் பல்லவமல்ல னையும் இரதத்தில் அழைத்துச் சென்றார். அவருடைய இரதம், வாசலைக் கடந்தபோது, பெருத்த ஆரவாரம் எழுந்தது. சிறுவன் பல்லவமல்லன், உற்சாகத்துடன் கூட்டத்தை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தான்.
தரணிகொண்ட போசர் தம்முடைய இரதத்தில் ராஜன் நம்பூதிரியையும் அழைத்துக் கொண்டுப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பு, ருத்திர பரமாச்சாரியைச் சந்தித்து அவரையும் உடன் வருமாறு அழைத்தார்.
“எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே. சக்கர வர்த்தியாக யார் பொறுப்பேற்றாலும் எனக்கு அதுபற்றி என்ன?” என்று கூறினார், பரமாச்சாரி.
ஞானிகளுடைய போக்கை எண்ணி வியந்தவாறே இரதத்தில் ஏறப்போன தரணி கொண்ட போசர், ஒரு மரத்தடி யில் உதயசந்திரன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்ததைக் கண்டதும், சற்று தயங்கினார்.
“அவனைக் கூப்பிட வேண்டாம். வெளியே எங்கும் வர மறுத்துவிட்டான். இங்கேயே நிம்மதியாக இருக்கட்டும்” என்றான்,ராஜன் நம்பூதிரி.
அவனை இரக்கத்தோடு பார்த்து வருந்தியவாறு இரதத் தில் ஏறினார், தரணிகொண்டபோசர்.
கைலாசநாதர் கோயிலுக்குள் முக்கியமானவர்கள் அனைவரும் சென்ற பிறகு, வெளிவாசற்கதவை அடைத்து விட்டார்கள். மக்கள், கோயிலுக்கு வெளியே கூடியிருந் தனர். இனி கோயிலின் வாயிற்கதவு திறக்கப்படும் போது பல்லவநாட்டுக்கு ஒரு சக்ரவர்த்தி கிடைத்திருப்பார் என்ற எண்ணத்தில் மக்கள் காத்திருந்தனர்.
கோயிலின் உள்ளே வெளிச்சுற்று மண்டபத்தில் எல்லாரும் அமர்ந்திருந்தனர். ஒரு பகுதியில் பல நகரங்களி லிருந்து வந்திருந்ந நகரத் தலைவர்களிருந்தார்கள். அவர் களுக்கு முன்பாக, சில கோட்டத் தலைவர்கள் அமர்ந் திருந்தனர். தென்பகுதியில் வணிகசபைத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் எல்லாருக்கும் முன் வரிசை யில் சீன வணிக சபையின் தலைவரான டெங்லீ அமர்ந் திருந்தார். வடபுறத்தில் காஞ்சி நகர் கடிகைகளின் தலைவர் களிருந்தனர். அவர்களுக்கு நடுநாயகமாக சமஸ்கிருதக் கடிகையின் தலைவர் ஜேஷ்டபதி சோமயாஜி அமர்ந்திருந்தார்.
“நான் எவ்வளவு கற்றிருந்தால்தான் என்ன, சிறைப்பட வேண்டும் என்ற விதியும் எனக்கிருந்திருக்கிறது. அது ஒரு புதுமையான அனுபவந்தான். ஒரு முறையாவது ஒருவன் சிறைச்சாலையில் அடைபட்டால்தான் சுதந்திரத்தின் தன்மையும், புரியும்” என்று அருகிலிருந்த பௌத்த கடிகை யின் தலைவரிடம் கூறிக்கொண்டிருந்தனர்.
“நேற்று மாலை யோகி பரமாச்சாரியின் பேச்சை ஆசிர மத்தில் கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீங்கள் இப்போது வாழ்வதே ஒரு சிறைச்சாலை தான். இன்றைய வைதீக மதத்தார்கள் பல கட்டு திட்டங்களை திணித்து, இந்தச் சமுதாயத்தையே ஒரு மாபெரும் சிறைச் சாலையாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். காலம் காலமாகப் பயப்பிராந்தியுடன் அதிலிருந்து பழகிப் போனீர்கள். சுதந்தி ரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாமலேயே போய் விட்டது என்றார். எவ்வளவு உண்மை அது. இன்று மத நம்பிக்கைகள் பயத்தின் அடிப்படையில் தானே ஆட்சி செலுத்துகின்றன. பயமற்ற சுதந்திர வாழ்வு என்றால் அது எவ்வளவு ரம்மியமானது, ஆனந்தமானது என்பதை அந்த ஆசிரமத்துக்குள் சென்றாலே புரிந்து கொள்ளலாம்” என்று வியந்து கூறிக்கொண்டிருந்தார் பௌத்த கடிகைத் தலைவர்.
“மகாராணி அந்த ஆசிரமத்தின் மீது அபிமானம் கொண்டிருந்ததால், மக்கள் பரமாச்சாரியின் மீது கோபம் கொண்டிருந்தனர்” என்றார் சோமயாஜி.
“ஆனால் புரட்சிக்குழு அந்த ஆசிரமத்தில்தானே செயல்பட்டது. மக்கள் போராடியபோது காயம்பட்ட மக்களை எடுத்துச் சென்று அங்கேயும் சிகிச்சையளித் திருக்கிறார்களே. இப்போது மக்களுக்கு பரமாச்சாரியின் மீதிருந்த கோபம் தணிந்துவிட்டது” என்றார் பௌத்த கடிகைத் தலைவர்.
முன் வரிசையில் குறுநில மன்னர்கள் சிலர் அமர்ந்தி ருந்தனர். எல்லாருக்கும் முன்னே குறுநில மன்னர்களான இரணியவர்மரும், காடக முத்தரையரும் அமர்ந்திருந்தனர். இரணியவர்மரின் அருகே, அவருடைய கடைசி மகன் பல்லவமல்லன் அமர்ந்திருந்தான். இரணியவர்மருக்குப் பின்னால் அவருடைய மற்ற மகன்களான ஸ்ரீமல்லன், இரணமல்லன், சங்கிராமல்லன் ஆகிய மூவரும் அமர்ந்திருந் தனர். அவர்கள் மூவரும் பல்லவநாட்டின் வடக்கு, மேற்கு தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள கோட்டங்களின் தலைவர் களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தரணிகொண்ட போசரின் அழைப்பின் பேரில் அவர்கள் மூவரும் காஞ்சிக்கு வந்திருந்தனர்.
“பல்லவடி அரையர் தம்முடைய படையோடு புறப் பட்டு விட்டதாகச் செய்தி வந்ததே. இன்னும் வந்து சேர வில்லையே” என்றார் காடக முத்தரையர்.
“சித்திரமாயனின் அழைப்பின் பேரில் வருகிறார். எந்த சமயத்திலும் வந்து சேரலாம். சித்திரமாயன் ஓடி விட்ட செய்தி வழியிலேயே அவருக்குக் கிடைத்துத் திரும்பிப் போய்விடக் கூடாது” என்றார் இரணியவர்மர்.
கோயிலின் கண்டாமணி மூன்று முறை ஒலித்தது. தரணிகொண்ட போசர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.
“கைலாசநாதரின் அருளால் நாம் எல்லாரும் இங்கே கூடியிருக்கிறோம். பல்லவ சாம்ராஜ்யம் இப்போது சக்கர வர்த்தியின்றி அநாதையாக இருக்கிறது. இளவரசர் சித்திர மாயனும், மகாராணியும் நாட்டைவிட்டே வெளியேறி விட்டனர். மக்களின் தீர்ப்பு அது. தெய்வத்தின் செயல். மகாராணியின் அடக்குமுறை ஆட்சி கடவுளருளால் முடிவடைந்து விட்டது. இப்போது இந்நாட்டுக்கு ஒரு சக்ரவர்த்தியைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் நம்மை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
“இப்போது நம் நாடு ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறது. தெற்கே பாண்டியநாடு,நம்மீது கண் வைத்திருக் கிறது. சித்திரமாயனும், மகாராணியும் பாண்டிய நாட்டில் தான் அடைக்கலம் புகுந்திருப்பதாக ஒற்றர்கள் மூலம் அறிகிறோம். சித்திரமாயன் எப்படியும் பாண்டியனுடைய தவியைப் பெற்று, இங்கே படையெடுத்து வரலாம். வடக்கே, சாளுக்கிய மன்னர் நம்நாட்டின் மீது படை யெடுக்க ஆயத்தம் செய்வதாகவும் ஒற்றர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
“ஒரு தலைமுறைக்கு முன் முடிந்த பகையைத் திரும்ப வும் புதுப்பிக்க சாளுக்கியன் எண்ணுகிறான் போலும். இப்போது கங்க நாட்டோடு போரிட்டு, போர்க்களத்தில் நம்முடைய சக்ரவர்த்தியை இழந்துவிட்டோம். ஓநாய்கள், மானைக் சுற்றி வளைப்பது போல், நம்முடைய எதிரிகள் நம்மீது பாய சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். இதே சமயம், உள்நாட்டிலும் மக்கள் அமைதியாக இல்லை. மகாராணியின் அடக்குமுறைக் காலத்தில், சித்திரமாயனின் கொடுமைகளாலும், வரிப்பளுவினாலும் மக்கள், மனம் கசந்து போயிருக்கின்றனர். சித்திரமாயனிடம் சலுகைகள் பெற்று மேம்பாடடைய எண்ணிய பல சுயநலமிகள், இன்று காஞ்சிக்குள்ளேயே நமக்கு எதிராகச் சதி செய்து கொண்டி ருக்கிறார்கள். இன்னும் அபாயம் நீங்கவில்லை.”
தரணிகொண்ட போசரின் பேச்சை எல்லாரும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நாட்டின் பிரச்சினைகளை அவர் விவரித்தபோது, மலைத்தனர். ஒரே சமயத்தில் இவ்வளவு பிரச்சினைகளையும் எப்படிச் சமாளிக்க முடியும் என்ற கவலையும் எழுந்தது.
தரணி கொண்ட போசர் தொடர்ந்து பேசினார்.
“இவ்வளவு பிரச்சினைகளையும் நாம் உடனடியாகச் சமாளித்து ஆகவேண்டும். அதற்குத் தகுதி வாய்ந்த ஒரு சக்கரவர்த்தி நமக்கு இப்போது வேண்டும். கலப்பில்லாத தூய்மையான ராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருக்கின் றீர்கள்… அரியணையில் ஏற யார் வருகிறீர்கள்?”
இந்தக் கேள்வி மண்டபம் முழுவதும் பரவி, எல்லா ருடைய கவனத்தையும் ஈர்த்தது. அரசக் குலத்தைச் சாராத வர்கள், அங்கே கூடியிருந்த அரச குலத்தவர்களை ஆவ லுடன் கவனித்தனர். அரச குலத்தவர்கள் எல்லாரும் மௌனமாயிருந்தனர். சிறுவன் பல்லவ மல்லன் எல்லா ருடைய முகங்களையும் வியப்போடு உற்றுப் பார்த்தான். பிறகு மெல்லத் தன் தந்தையிடம், “அப்பா, நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றால் என்ன?” என்று கேட்டான்.
இரணியவர்மர், தம்முடைய வாயில் விரலை வைத்து மறைத்து, பேசக்கூடாது என்று அவனை எச்சரித்தார். பிறகு, குனிந்து அவனுடைய காதில், “சக்கரவர்த்தியாக இருப்பது மிகவும் கஷ்டம். நிம்மதியாக இருக்க முடியாது” என்றார்.
தரணிகொண்ட போசர், அரச குலத்தவர்கள் பக்கம் பார்த்து மீண்டும் வேண்டுகோளை விடுத்தார். “ராஜ குலத்தைச் சார்ந்தவர் யாராவது இந்த மாபெரும் பொறுப்பை ஏற்றுத்தான் தீரவேண்டும், மக்களின் அபிமானத்தைப்பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் யாரேனும் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.”
அப்போதும் யாரும் முன்வரவில்லை. தரணி கொண்ட போசர் சொன்னார்: “உங்களில் யாரும் முன்வர வில்லை என்றால், கடவுளின் சந்நிதானத்தின் முன்பாக குடஓலை போட்டுத்தான் பார்க்க வேண்டும். கடவுள் முன்னால், ஓலையில் எவருடைய பெயர் வருகிறதோ அவர், முடிசூடியே ஆகவேண்டும். அதைவிட, உங்களில் யாராவது மனமுவந்து ராஜ்யபாரத்தை ஏற்க முன் வருவது நல்லது.”
எல்லாரும் அரச குலத்தவரை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நேரம் மௌனம் நிலவியது.
தரணி கொண்ட போசர் மீண்டும், “அரியணையில் யார் ஏறப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திடீரென்று சிறுவன் பல்லவ மல்லன், எழுந்து நின்று, “நான் போவேன்” என்றான். அவனுடைய குரல், கணீரென்று மண்டபம் முழுவதும் ஒலித்தது. எல்லாரும் திகைத்தனர். ராஜ வமிசத்தைச் சேர்ந்த சிலருக்குத் தாங்கள் சக்ரவர்த்தியாக முடிசூட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர்களில் யாராவது எழுந்து சம்மதம் தெரிவிப்பதற்குள், சிறுவன் எழுந்து அறிவித்துவிட்டது, சிலருக்குச் சினத்தை மூட்டியது.
பல்லவ மல்லன் அறிவித்ததைக் கண்ட இரணிய வர்மர், “ஆ…!” என்ற வியப்பினால் கூவினார். அவனு டைய கையைப் பற்றி இழுத்து அமரச் செய்ய முயன்றார்.
தரணி கொண்ட போசரின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. “இரணியவர்மரே, தாங்கள் அவனைத் தடுக்க வேண்டாம். முந்தைய பிறவியில் அவன் விஷ்ணுவை மனமாரப் பூஜித்ததன் விளைவுதான் இன்று, அவனுடைய வாயில் தெய்வ வாக்காக வந்திருக்கிறது. இதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்வோம். கைலாசநாதர் சந்நிதியில் எழுந்த வாக்கு இது” என்றார்.
இரணியவர்மர் பரபரப்புடன் எழுந்து நின்று, “தரணி கொண்ட போசரே, இவன் சிறுவன். பன்னிரண்டு வயது தான் ஆகிறது” என்றார். அவருடைய குரலில் பதற்றம் தெரிந்தது.
அப்போது, ஜேஷ்டபதி சோமயாஜி சொன்னார்: “இங்கு வயது முக்கியமல்ல, இரணியவர்மரே. இங்கு கூடியி ருக்கும் ராஜகுல மக்கள் யாருக்கும் இல்லாத துணிவும், விரைவும் இவனுக்கு இருக்கின்றன. நீங்கள் எல்லாரும் தயங் கினீர்கள், இவன் துணிந்து, ‘நான் போவேன் என்றானே!” இது தெய்வவாக்குத்தான். தாங்கள் இதை மறுக்க வேண்டாம்.”
இதைக் கேட்ட மற்றதலைவர்களும்,ஆமோதித்தனர், ஆரவாரம் செய்தார்கள். இரணியவர்மர் ஏதோ கூற முனைந்தார். அதற்குள் தரணிகொண்ட போசர் குறுக் கிட்டுப் பேசினார்-
“பல்லவ மல்லன், பல்லவ ராஜ குலத்தின் சந்ததியில் எவ்வித அப்பழுக்கும் இல்லாதவன், இதுவரை அரசாண்ட சிம்மவிஷ்ணு பல்லவவமிசத்தை ஸ்தாபித்த சிம்ம விஷ்ணு பல்லவச் சக்ரவர்த்தியின் தம்பியான பீம வர்ம பல்லவரின் வழியில் தேன்றியவன். இன்று ஒரு வம்சத்தின் சகாப்தம் முடிவு பெற்று, பீமவர்ம வம்சத்தின் சகாப்தம் தொடங்குகிறது.
“இரணியவர்மரே, இந்த தெய்வீக ஏற்பாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்”.
இரணியவர்மர் மீண்டும் ஏதோ மறுத்துக் கூற எழுந் தார். ஆனால் அதற்குள் ராஜன் நம்பூதிரி எழுந்து நின்று, உரத்த குரலில், “பல்லவ ராஜகுல திலக, பல்லவச் சக்கர வர்த்தி பல்லவ மல்லன் வாழ்க…” என்றான். உடனே அவனுடைய குரலைத் தொடர்ந்து, மண்டபமே அதிரும் படி யாக எல்லோரும், “வாழ்க… வாழ்க…” என்று வாழ்த்தொலி எழுப்பி ஆசிர்வதித்தார்கள்.
கைலாசநாதர் கோவிலின் கண்டாமணி ஒலிக்கத் தொடங்கியது. மணியோசை கேட்டதும் வீதியில் கூடியிருந்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. சக்கரவர்த்தி கிடைத்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மக்கள், தங்களுக்குச் சக்ரவர்த்தியாக வருகிறவர் யார் என்பதைப் பார்க்க, கோவில் வாசலை நோக்கி முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள்.
தரணி கொண்ட போசர் அழைத்து வர, கழுத்தில் பெரிய மாலை அணிந்தவாறு, கோவிலின் முன் மண்டபத் துக்கு வந்த பல்லவ மல்லனைக் கண்டதும் மக்கள் திகைப்பிலாழ்ந்தார்கள்.
கம்பீர புருஷனை எதிர்பார்த்த இடத்தில், முகத்தில் பால் வடியும் அழகு மிகுந்த சிறுவன் பல்லவ மல்லனைக் கண்ட கூட்டம், வியப்படைந்து பார்த்துக் கொண்டிருந்தது. பல்லவ மல்லன் சிரித்தபடியே மக்களை நோக்கி தன்னு டைய வலது கரத்தை ஆட்டினான். மக்கள் உற்சாக மடைந்தனர். கூட்டத்திலிருந்த ஒருவன், “பல்லவ சக்ர வர்த்தி பல்லவ மல்லன் வாழ்க” என்று குரல் கொடுக்கவே கூட்டம், கைகொட்டி வாழ்த்தொலி எழுப்பியது. பல்லவ மல்லனை ஜெயவாரணம் என்ற பட்டத்து யானையில், ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.
ஊர்வலம் கோட்டை வாயிலை நெருங்கியபோது, குறுநில மன்னர் பல்லவடி அரையர் தம்முடைய சிறு படை யுடன் யானைமீது அமர்ந்தவாறு கோட்டைக்குள் வந்து கொண்டிருந்தார். சித்திரமாயனின் வேண்டுதலின்பேரில் சிறுபடையுடன் வந்தார். ஆனால், காஞ்சிக் கோட்டையை நெருங்கியதுமே காஞ்சியைப் பற்றிய செய்தியை அறிந்தார். பல்லவ அரியணைக்கு அரசன் யாருமில்லை என்பதை அறிந்ததுமே காஞ்சிக் கோட்டைக்குள் விரைந்தார். உள்ளூர ஓர் ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தால், அரியணையைக் கைப் பற்றி விடலாம் என்று எண்ணியிருந்தார். கோட்டைக்குள் அவருக்கு எதிரே வந்து கொண்டிருந்த ஊர்வலத்தைக் கண்டதும் திகைப்படைந்தார்.
சற்று தூரத்தில் ஜெயவாரணத்தின் மீது பல்லவ மல்லன் அமர்ந்தவாறு, மக்கள் சூழ வந்து கொண்டிருந் ததைக் கண்டார். சட்டென்று யானைமீதிருந்து இறங்கி, குதிரையில் ஏறிக்கொண்டார், அவருடைய படையைச் சேர்ந்த வீரனொருவன் அவரை அணுகி, ஊர்வலத்தைப் பற்றிய விவரத்தைக் கூறினான்.
பல்லவடி அரையருக்கு உள்ளூரக் கோபம் மூண்டது. பொறாமை உடலெல்லாம் தகித்தது, “இரணியவர்மரின் மகனுக்கா அரியணை” என்று பொறுமினார். அந்த வேளை யில் தம்மால் ஏதும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து, முகத்தில் மலர்ச்சியை வலிய வரவழைத்துக் கொண்டு புதுச் சக்ரவர்த்தியை எதிர்கொண்டழைத்துச் செல்வதற்காக பல்லவ மல்லனை நோக்கி விரைந்தார்.
எதிரே அரையரைக் கண்டதும் ஊர்வலத்தை நிறுத்தி னார் இரணியவர்மர். அரையர் பல்லவ மல்லனை வாழ்த்தி வணங்கிவிட்டு, இரணியவர்மரை மார்போடணைத்துக் கொண்டார். அந்தக் காட்சியைக் கண்ட தரணிகொண்ட போசர் உள்ளூரச் சிரித்தார். அருகிலிருந்த ஜெயவர்மரிடம் “பல்லவடி அரையர் நன்றாக நடிக்கத் தெரிந்திருக்கிறார்” என்றார்.
பல்லவடி அரையரின் யானை முன்னே அழைத்துச் செல்ல, பல்லவமல்லன் பட்டத்து யானை ஜெயவாரணத்தின் மீது அரண்மனையை நோக்கிப்பவனி சென்றான்.
அரண்மனையில் பட்டாபிஷேகச் சடங்குகள் நடை பெற்றன. இரண்டாம் நந்திவர்மன் என்று அபிஷேகப்பெயர் ஏற்று, பல்லவமல்லன் சிம்மாசனம் ஏறினான்.
பல்லவமல்லன் சக்கரவர்த்தியாக முடி சூடியதும், முதல் பணியாக, தனக்கு ஒரு முதன் மந்திரியை நியமிக்க வேண்டியிருந்தது. தரணிகொண்ட போசர், தமக்கு எழுபது வயதுக்கு மேலாகி விட்டதென்றும், இனி வாழ்க்கையை அமைதியாக கழிக்கப் போவதாகவும் கூறி, பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அவருடைய ஆலோசனையின் பேரில், ராஜன் நம்பூதிரியைத் தனக்கு முதன் மந்திரியாக நியமித்து பல்லவ மல்லன் அரச மண்டபத்தில் அறிவித்தான்.
எதிர்பாராத அந்த அறிவிப்பைக் கேட்டு ராஜன் நம்பூதிரி திடுக்கிட்டான். பரபரப்புடன் எழுந்தான். அருகி லிருந்த தரணி கொண்ட போசர், அவன் கையைப் பற்றி, “மறுத்து விடாதே, சக்கரவர்த்தி முடிசூடிய பிறகு அறி விக்கும் முதல் உத்தரவு இது. தெய்வவாக்காகக் கருதி ஏற்றுக் கொள். இந்தப் பதவிக்கு நீ பொருத்தமானவன்தான். உன் னுடைய கல்வி உனக்குத் துணை நிற்கும்” என்றார்.
ராஜன் நம்பூதிரியின் உடல் சிறிது நடுங்கியது. பல்லவச் சக்கரவர்த்தியை அடிபணிந்து எழுந்து நின்றான். ராஜன் நம்பூதிரிக்கு முதன் மந்திரிக்குரிய தலைப்பாகையை பல்லவ மல்லன் தன் கைப்பட அணிவித்து, முத்திரை மோதிரத்தையும் கொடுத்தபோது, தரணிகொண்ட போசர் உரத்த குரலில், “பல்லவ சாம்ராஜ்ய முதன்மந்திரி பிரும்ம ஸ்ரீராஜன் வாழ்க” என்றார். அதைத் தொடர்ந்து மண்டபத் தில் வாழ்த்தொலிகள் எழுந்தன.
33. ஈரேழாண்டுத் தவம்
பல்லவ சாம்ராஜ்யத்தின் அரியணைக்குச் சக்கர வர்த்தி கிடைத்துவிட்டார். தமிழக வரலாற்றில், பல்லவ ஆட்சியும் சோழ ஆட்சியும் மகோன்னத நிலையிலிருந்தன. சோழ மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நன்கு வேரூன்றத் தொடங்குவதற்கு அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தொண்ட மண்டலத்தில் பல்லவ வமிசத்தினர் ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ பல்லவர்களின் ஆட்சி, தமிழ்நாட்டில் அறுநூற்றைம்பது ஆண்டுகள் நடைபெற்றது. பல்லவ ஆட்சி மிக உன்னத நிலையிலிருந்த கால கட்டத்தில் தான் இக்கதையின் சம்பவங்கள் நிகழ்ந்தன. பன்னிரண்டு வயதில் சக்ரவர்த்தியாக முடிசூடிய பல்லவமல்லன், எழுபத் தேழு வயது வரை அரசாண்டான். இந்திய வரலாற்றி லேயே-உலக வரலாற்றில் என்று கூடச் சொல்லலாம்-ஓர் அரசன் அவ்வளவு நீண்ட காலம் ஆண்டதில்லை. அவனு டைய காலத்தில் தான் பொறாமை கொண்ட அண்டை நாட்டவர்களாலும், வடக்கே இருந்த சாளுக்கியர்களாலும் மிகுந்த தொந்திரவுகள் இருந்தன. பதினெட்டுக்கும் மேற் பட்ட போர்களில் ஈடுபட்டு, பல்லவ ஆட்சியை காப் பாற்றி,பலப்படுத்த வேண்டியிருந்தது.
பல்லவ மல்லன் முடிசூடியபோது, பன்னிரண்டு வயதுச் சிறுவனாயிருந்ததால், அவன் சார்பில் ஆட்சிப் பொறுப்பை இரணியவர்மர் மேற்பார்வையிட்டார். மக்கள் அமைதி அடைந்து விட்டார்கள், மகாராணியும், சித்திர மாயனும் நாட்டை விட்டுத் தப்பி ஓடியதை எல்லாம் விரை வில் மறந்து விட்டார்கள். ஆனால் உதயசந்திரன் மட்டும் மறக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். பாண்டிய நாட்டுக்குத் தப்பிச் சென்றவனை இனி பழிவாங்குவது முடிகிற காரியமா? சபதம் நிறைவேறவில்லையே என்ற தவிப்பு, அவனை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது.
எதிலும் பிடிப்பற்று ஆசிரமத்தில் தங்கியிருந்தான். சித்திரமாயனைப் பழிவாங்கும் வெறி முள்ளைப் போல் உறுத்திக் கொண்டேயிருந்தது.
ஒரு நாள் இரவு யாரிடமும் கூறாமல் பாண்டிய நாட்டை நோக்கிப் புறப்பட்டான். அங்கு சென்ற பிறகு தான், பாண்டிய மன்னனின் பாதுகாப்பிலிருந்த சித்திர மாயனை அணுகுவது இலகுவில் இயலாத காரியம் என்பதை உணர்ந்தான். கடைசியில் தனது முயற்சியில் தோல்வியுற்று மிகுந்த ஏமாற்றத்துடன் பல்லவ நாடு திரும்பினான்.
பாண்டிய நாட்டிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய உதயசந்திரனை உற்சாகப்படுத்துவதற்கு, ராஜன் நம்பூதிரி எவ்வளவோ முயன்று பார்த்தான். தன்னோடு முதன் மந்திரி யின் மாளிகையில் தங்குமாறு அழைத்தான். உதயசந்திரன் மறுத்து விட்டான். ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தி லிருந்து அவருடைய போதனைகளிலும், தியானப் பயிற்சி களிலும் ஈடுபட்டால் தன்னுடைய மனதுக்கு அமைதி கிட்டும் என்ற எண்ணத்தில் சில காலம் ஆசிரமத்திலேயே தங்கினான்.
ஆசிரமத்திலிருந்த உதயசந்திரனை, ராஜன் நம்பூதிரி அடிக்கடி சென்று பார்த்து ஆறுதல் சொன்னான். யாருடைய ஆறுதலும் அவனுடைய மனதுக்கு அமைதியைக் கொடுப் பதாயில்லை.
டெங்லீயின் வீட்டுக்கு அடிக்கடிபோய், தோட்டத்தில் மருக்கொழுந்து செடிகளின் நடுவேயிருந்த லீனாவின் சமாதி அருகே பல நாழிகைகள் அவளோடு களித்திருந்த சம்பவங் களை எண்ணி எண்ணி மறுகிக் கண்ணீர் சிந்தினான்.
அவனுக்குப் பொறுப்பான ஒரு பணியைக் கொடுத் தால் கடந்த காலத்தை மறக்க முயலுவான் என்று எண்ணிய தரணிகொண்ட போசர், அவனைக் காஞ்சிக் கோட்டையின் தளபதியாக நியமிக்க ஏற்பாடு செய்தார்.
கோட்டைத் தளபதி பதவியில் கருத்தை ஊன்றி னாலும், கடந்த கால நினைவுகள் உதயசந்திரனை விட்டு விலகவில்லை. சித்திரமாயனைப் பழி வாங்கும் எண்ணம், அவனை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கோட்டைத் தளபதியாகப் பதவி ஏற்றதும் அவனுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது. குதிரைப்படைத் தலைவனாக நியமிக்கப் பட்டிருந்த தேவசோமாதான் அவனுக்கு வாள் வீச்சுப் பயிற்சியளித்தான். அப்போது, உதயசந்திரன் வாளினை வீசிய போதெல்லாம், ஒவ்வொரு வீச்சையும் சித்திர மாயனை நோக்கி வீசுவதாகக் கற்பனை செய்தான். விற் பயிற்சியின் போது எய்த அம்பெல்லாம், சித்திரமாயன் மீது பாய்ந்ததாகக் கற்பனை செய்தான். காலாட்படைத் தலைவ னாயிருந்த களுபந்தாவிடம் மற்போர் பயின்றபோது, எதிரியைத் தரையில் உருட்டிப் புரட்டிய போதெல்லாம், சித்திரமாயனை மண்ணோடு புரட்டியதாக எண்ணினான்.
அவனுடைய மனநிலை அறிந்த யோகி ருத்திர பரமாச்சாரி அவனுள் புதைந்து கிடந்த பழி உணர்வை அகற்றிவிட முயன்றார். அவருடைய போதனைகளிலும், தியானப் பயிற்சியிலும் உதயசந்திரன் ஈடுபட்டான். மனத்தில் சிறிது அமைதி கூடுவது போலிருந்தது. ஆனால், மனத்தின் ஆழத் தில் நன்கு புதைந்து விட்ட துக்கத்தை அவனால் அகற்றவே இயலவில்லை. துக்கம் மேலெழுந்த போதெல்லாம், சித்திரமாயனைப் பழி வாங்கும் உணர்வும் கொந்தளித்தது.
ஒருநாள் யோகி பரமாச்சாரியோடு தனித்திருந்த போது, அவரிடம் தன் மனத்தில் புதைந்துகிடந்தவைகள் அனைத் தையும் வெளிப்படுத்தினான். அவனைப் பேசவிட்டு பரமாச்சாரி கேட்டுக் கொண்டிருந்தார். வயிற்றுக்குள் போயி ருந்த நஞ்சை, வாந்தியெடுக்க வைத்து வெளியேற்றுவது போல், அவன் மனதில் புதைந்துகிடந்த சம்பவங்களை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.
லீனாவை முதன் முதலில் கப்பலில் சந்தித்தது, அவளுக்காக கொள்ளையரோடு போரிட்டது; அவள் மீது அவன் கொண்டிருந்த காதல்; டெங்லீவீட்டுத் தோட்டத்தில் ஒரு நாள், அவளோடு நிலைமறந்து அனுபவித்த இன்பம்; அவளை இழந்த சம்பவம்; அவன் எடுத்துக் கொண்ட சபதம், எல்லாவற்றையும் ஒரு வித லயிப்புடன் கூறினான்.
“காதல் இன்பத்தை லீனாவுடன் ஒரு முறை அனுபவித்தாயே, அந்தச் சமயத்தில் நீ உணர்ந்ததென்ன?” என்று கேட்டார், ருத்திர பரமாச்சாரி.
“ஓ…! அந்த அனுபவத்தை எப்படி விவரிக்க முடியும் சுவாமி? அது ஒரு அனுபவம், எனக்கே உரிய அனுபவம்” என்றான், உதயசந்திரன் லயிப்புடன்.
“அதை இப்போது நினைவில் கொண்டு வந்து பார். அந்தச் சமயத்தில் நீ எப்படியெல்லாம் நடந்துகொண்டாய்; எப்படியெல்லாம் உன் உடல் தவித்தது; இயங்கியது. உணர்வுகள், எப்படி உன் உடலை ஆட்டிப்படைத்தன. நினைத்துப்பார்.”
“அந்தச் சமயத்தில் உலகமே மறந்துவிட்டது. இந்த உடல் கூட இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒரே ஆனந்த பரவசம் நாங்கள் இருவரும், எங்கெங்கோ காற்றில் மிதந்து உயர உயரப் போவது போலிருந்தது. எங்கும் ஆனந்தமயமான உணர்வுகள் நிரம்பி, அந்த உணர்வு களுக்குள் மூழ்கி, ஒருவருக்குள் ஒருவர் ஐக்கியமாகிக் கரைந்து, கடைசியில் நானே இல்லாமல் போய்விட்டேன்!” என்றான் உதயசந்திரன். அந்த அனுபவத்தைக் கூறிய போது பரவசமடைந்தான்.
ருத்திர பரமாச்சாரியின் வதனத்தில் புன்முறுவல் தோன் றியது. “உதயசந்திரா, இந்த ஆன்மபூர்வமான ஆனந்த உணர் வைவிடவா, சித்திரமாயனை பழி வாங்கும் உணர்வு இனிமையை தருகிறது? இவ்வளவுலயிப்பும், தான் என்னும் உணர்வையே இழந்து பரவசப்படும் அற்புத நிலையும், பழிவாங்கும் வெறிக்கு இருக்கவா செய்கிறது?” என்று கேட்டார்.
“சுவாமி, பழி உணர்வு என்னுள் ஆனந்தத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், லீனாவை இழந்த நினைவு எழும் போதெல்லாம், என்னுடைய சபதம், என்னுள்ளே ஆவேசத்தை எழுப்புகிறதே, நான் என்ன செய்யட்டும்?” என்று பரிதாபமாகக் கேட்டான், உதயசந்திரன்.
மிகுந்த கருணையுடன் அவனுடைய தோள்மீது கையை வைத்து வருடியபடிருத்திரபரமாச்சாரி சொன்னார்: “லீனாவுடன் நீ பெற்ற அனுபவத்தை மீண்டும் பெற முடியு மானால், அந்த ஆனந்த நிலையிலிருந்து படிப்படியாக ஆன்மீக உணர்வில் ஏறமுடியுமே. உன்னைப் பற்றி யிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை யடையலாமே.”
“அதெப்படி முடியும், லீனா மறைந்த பிறகு?”
“லீனா மறைந்துவிட்டாள். தோன்றியவையெல்லாம் மறைந்து கொண்டுதானிருக்கும். ஆனால் நீ அனுபவித்த காதல் உணர்வு மறைவதில்லை. மீண்டும் காதலிக்க முடியுமே.”
“லீனாவைக் காதலித்த மனத்தால் இன்னொருத்தியைக் காதலிக்க முடியுமா,சுவாமி?”
“காதலுக்கு லீனா ஒரு சாதனம். காதல் உணர்வுகள் நிலையானவை. காதல் அனுபவங்களும் நிலையானவை. அவற்றைத் தரும் சாதனங்கள் தோன்றலாம், மறையலாம். ஒரு சாதனம் மறைந்துவிட்டால், அதே அனுபவத்துக்கு இன்னொரு சாதனத்தைப் பெற்றுக்கொள்வதில் என்ன தவறு? காதல் என்பது, ஒரே ஒரு பொருள் மீதோ அல்லது ஒரு நபர் மீதோ மட்டும் தோன்றும் குறுகிய உணர்வல்ல. அது, பரந்து பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் அற்புத மான ஓர் ஆன்மீக உணர்வு. எதையும் காதலிக்க முடியும். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காதலிக்க முடியும். அதுவே மகாசுகம். அந்தப் பக்குவத்தைப் பெறுவதுதான் பேரானந்த நிலை” என்றார், யோகி.
“இனி எனக்குக் காதல் தோன்றும் என்ற நம்பிக்கை இல்லை.”
“உன்னால் இனியும் காதலிக்க முடியும். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மனிதனுடைய காதலுக்காகத்தான். காதலிக்கும் தன்மையைப் பயிற்சி மூலமாகப் பெற்று விட லாம். உன்னை நீயே கவனி. ஒரு பார்வையாளனைப்போல் விலகி இருந்து உன் உணர்வுகளைக் கவனி” என்று போதித் தார் யோகி.
உதயசந்திரன் தனித்திருந்தபோது, பரமாச்சாரி சொன்ன வற்றைச் சிந்தித்துப் பார்த்தான். சில நாட்களுக்கு முன், ஆசிரமத்துச் சீடர்களுக்கு அவர் போதித்தவை நினைவில் தோன்றின. அப்போது பரமாச்சாரி சொல்லியிருந்தார்:
“உன்னிடம் கோபம் தோன்றினால், கோபப்படு. கோபத்தைப் பற்றி அக்கறை கொள்ளவேண்டாம். பேராசை தோன்றுமானால் பேராசைகொள். அதைப்பற்றிக் கவலைகொள்ளவேண்டாம். காமவெறியனாக இருப்பாயா னால் அப்படியே இரு. அது ஒரு குறையல்ல. எல்லாம் உன்னுடைய தன்மைகளே. எதையும் நீ வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. உன்னுடைய இயல்பான குணங்களை எதிர்த்துப் போராடாதே. ஆனால், அதே சமயம் உன்னுடைய கோபம், பேராசை, பொறாமை, காமம் ஆகிய எல்லா உணர்வுகளையும் உற்றுக் கவனி. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். அந்த உணர்வுகளோடு நீயும் ஒன்றிவிடாதே. ஒரு பார்வையாளனைப்போல் விலகி ப யிருந்துகண்காணித்துக் கொண்டிரு. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளின் தன்மையை நீ அறிவாய். உன்னை அவை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். அப்போது, உனக்கே சிரிப்பு வரும். உன் னுடைய குணங்களை கவனித்து நீ சிரிக்கச் சிரிக்க, அவற்றி லிருந்து நீ விலகி, விடுதலை பெறுவதை உணர்வாய். உணர்வுகள் உன்னுடைய ஆளுகைக்குள் அடங்கிவிடும்.’
மற்றொரு நாள் ஒரு சீடன், “சுவாமி என்னதான் மனதைக் கட்டுப்படுத்தினாலும் காம உணர்விலிருந்து விடுபட முடியவில்லையே. காதலியை நாடித்தானே ஓடு கிறது” என்று கேட்டபோது யோகி சொன்னார்:
“காமசுகத்தில் திளைத்திருக்க ஆவல் கொண்டால், அந்த உணர்வை எதிர்த்துப் போராடாதே. அதில் ஈடுபடு. அதில் தவறு ஒன்றுமில்லை. உடலின் இயல்பான வேட்கை தான். அந்த அனுபவத்தைக் கூர்ந்துகவனி. அந்த வேளை யில் உன்னுடைய சக்தியெல்லாம் எப்படி இயங்குகிறது என்று பார், உடலின் அசைவுகளைக் கவனி. இரு உடல்கள் எப்படியெல்லாம் தவிப்பதைத் தீர்த்துக் கொள்ளத் தவிக் கின்றன என்பதைப் பார். இருதயம் ஒழுங்கின்றித் துடிப்ப தையும், உடல் முழுவதும் சூடேறித் தகிப்பதையும், மூச்சு கட்டுப்பாட்டை மீறி இரைப்பதையும் உணரலாம். எல்லா உணர்வுகளும் மெல்ல உன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து மீறி, தாமாகச் செயல்படும் கட்டத்தை நெருங்கும். உடல் முழுவதுமே உன் ஆட்சியிலிருந்து விடுபட்டு, உணர்வு களின் ஆதிக்கத்தில் சிக்கித் தீவிரமாக இயங்கத் தொடங்கும் நிலையை எட்டும். உணர்வு உச்சநிலையை நெருங்கும் நேரத்தில் எதுவுமே உன் கட்டுப்பாட்டில் இராது. இவை எல்லாவற்றையும் அப்போது கூர்ந்து கவனி. அந்த அனு பவத்தில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியிருப்பதை உணர்வாய், எல்லாமே மிக நுணுக்கமானவை; விசித்திர மானவை. சிக்கலானவை! காம நுகர்ச்சி போன்று, வேறு எதுவுமே அவ்வளவு நுணுக்கமும், விசித்திரமும் கொண்ட தல்ல. இந்த நுகர்ச்சியில்தான் உடலும் உள்ளமும் பூரண மாக இணைந்து ஈடுபடுகின்றன. மனம் இலேசாகிறது. ஆனால் இவற்றையெல்லாம் விலகியிருந்து கவனிக்கும் போது, நீ மட்டும் அதில் ஈடுபடுவதில்லை. சாட்சி பூதனாக இருந்து கவனிக்கிறாய். நடைபெற்றதெல்லாம் யாருக்கோ நேர்ந்தைப்போல் நீ மட்டும் விலகியிருந்து உன்னைக் கவனிக்கும்போது அதுவே ஒரு பேரானந்த அனுபவம். இதே போல் நீ கோபப்படும் போதும், ஆசைப்படும் போதும் பொறாமைப்படும்போதும், துக்கப்படும்போதும், மகிழ்ச்சியடையும்போதும், பழிவாங்க எண்ணும்போதும் உன்னிடமிருந்து விலகி, உன்னைக் கவனி. இந்தக் கவனம் நீண்டு கொண்டே போனால், அறியாமை அகன்று பேரொளியைக் காண்பாய்.”
ருத்திர பரமாச்சாரி சொன்னபடி, உதயசந்திரன், தன்னுள்ளே அடங்கியிருந்த பழிவாங்கும் உணர்வைக் கவனிக்கத் தொடங்கினான். அந்த உணர்வு, அவனைப் பாடாய்ப் படுத்தியது, தூண்டியது. வெறிக் கூச்சலிட்டது. முரண்டியது. உள்ளிருந்தே அரித்தது. எல்லாவற்றையும் கவனித்தான். ஆனால் அதை மனத்தை விட்டுமட்டும் நீக்க அவனால் இயலவில்லை. முள்மாதிரி உள்ளிருந்து உறுத்திக் கொண்டிருந்தது.
ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் ஆசிரமத்திலேயே தங்கியிருந்தான் உதயசந்திரன். தன்னுடைய முழுநேரத் தையும் அரசுப் பணிக்காகச் செலவிட்டான். பல்லவ மல்லன், சக்ரவர்த்தியாக முடிசூடிய ஐந்தாவது ஆண்டில், பல்லவ சாம்ராஜ்யத்தின் தளபதியாக உதயசந்திரன் நியமிக்கப்பட்டான். உதசயந்திரனின் திறமையையும் துணி வையும் ஏற்கெனவே அறிந்திருந்த தரணி கொண்ட போசரும், இரணியவர்மரும் அவனைத் தளபதியாக்க சிபாரிசு செய்தனர். பல்லவ சாம்ராஜ்யம், முதன் மந்திரி, பிரும்ம ஸ்ரீராஜன் நம்பூதிரியின் அறிவையும், தளபதி உதயசந்திரனின் வீரத்தையும் துணையாகப் பெற்றிருந்தது.
தளபதிப் பதவி, உதயசந்திரனின் மனதுக்கு உற்சாக மூட்டியிருந்ததென்றாலும், அவனுடைய மன ஆழத்தில் பதிந்துவிட்ட லீனாவின் நினைவும், சபதமும் அவனை விட்டு நீங்குவதாயில்லை. அவனுடைய மனநிலையை அறிந்த மன்னன் பல்லவமல்லன் சொன்னான்: “தளபதியை எண்ணும்போதுதான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அவருடைய வீரத்தையும் திறமையையும் எண்ணிப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய வீரர், ஒரு சிறு விஷ யத்தை மனதில் போட்டுக்கொண்டு பதினான்கு ஆண்டு களாக அமைதியின்றித் தவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.”
“காதலின் சக்தி மிகப் பெரிது. அவருடைய காதலி அவர் மடியில் உயிரை விட்டபோது, அவர் எடுத்த சபதம் அது. அதை நிறைவேற்றும் வரை, அந்த ஏக்கம் அவரை விட்டு மறையாது” என்றான், ராஜன் நம்பூதிரி.
“காதலுக்கு அவ்வளவு சக்தி உண்டா ? ஒரு ஆண், ஒரு பெண்ணை நாடுகிறான். இது ஒரு பெரிய விஷயமா? புலவர்கள் இதைப் பெரிதாகப் புகழ்ந்து பாடுவதும், உதயசந்திரனைப் போல் பலர் இதே நிலையில் உழலுவதும் வேடிக்கை தான்” என்றான் பல்லவ மல்லன்.
“பிரபு. தங்களுக்கு காதலிக்க இதுவரை சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டது. காதலைப் பற்றித் தாங்கள் அறிவதற்கு முன்பே, தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
“ராணியை நான் விரும்பவில்லையா? அது காதல் தானே? அவள் மீது எனக்கு அன்பு இருக்கிறதே.”
“மகாராஜாவுக்கு ஒரு மகாராணி தேவை. இந்த நாட்டைப் பிற்காலத்தில் ஆள, ஒரு ராஜகுமாரனைப் பெற்றெடுப்பதும் தேவை. இந்தத் தேவைகளின் அடிப் படையில், ஒரு நாட்டு இளவரசியை கடமைக்காகத் திரு மணம் செய்திருக்கிறீர்கள். மனைவி என்ற பந்தத்தினால், அன்பு பாராட்டுகிறீர்கள். மகாராணியாரைப் பற்றித் தங்க ளுடைய மனைவி என்ற உறவுக்கு அப்பால் தாங்கள் கற் பனை செய்ததுண்டா?” என்று கேட்டான் ராஜன் நம்பூதிரி.
பல்லவ மல்லன், யோசித்தான். ராஜன் நம்பூதிரி தொடர்ந்து கேட்டான்- “பிரபு, எப்போதாவது மகாராணி யாரை காணவேண்டுமென்று தவியாகத் தவித்திருக் கிறீர்களா? நீங்கள் மகாராணியாரை நெருங்கும்போது, எப்போதாவது தன்னை மறந்த நிலையை அடைந்திருக்கிறீர்களா? எந்தச் சமயத்திலாவது, தாங்களும் மகாராணி யாரும், உயிரே ஒன்றாக இணைவதுபோல் உணர்ந்த துண்டா?”
இந்தக் கேள்விகளை பல்லவ மல்லன் மிகுந்த வியப் புடன் கவனித்தான். பிறகு சொன்னான்: “மகாராணியை நான் சில சமயம் ஆசையோடு காண, அந்தப்புறம் போகி றேன். இன்பத்தை அனுபவிக்கிறேன். அதெல்லாம்?”
“அது வெறும் இச்சைதான். இந்த உடல், அவ்வப் போது தணித்துக்கொள்ளும் ஒருவித பசி அது, அவ்வளவு தான். ஆனால், காதல் அதற்கும் அப்பாற்பட்டது. அதில் காமம் உண்டு, வெறியும் உண்டு. ஆனால் எல்லாம் உயி ரோடு இணையும் மாபெரும் இயக்கம் என்கிறார், ருத்திர பரமாச்சாரி. காதல் வயப்பட்டு, இரு உடல்கள் சேரும் நேரத் தில், இரு உயிர்களுமே கலந்து ஒன்றாகிவிடுகின்றன, என் கிறார்” என்றான், ராஜன் நம்பூதிரி.
“நான் அந்தக் காதலை எப்படி அடைவது?”- பல்லவ மல்லன் ஆவலுடன் கேட்டான்.
ராஜன் நம்பூதிரி சிரித்தான். “மகாராஜா,காதல் என்பது நினைத்தவுடன் பெறக்கூடிய ஒன்றா என்ன? உள்ளத்தில் தானாகத் தோன்றும் உணர்வு அது. எந்தச் சமயத்திலும் தோன்றலாம். எந்த வயதிலும் தோன்றலாம். அதனுடைய நிலைக் களம் மனமே தவிர, உடல் அல்ல” என்றான் ராஜன் நம்பூதிரி.
“மந்திரியாருக்கு இதில் அனுபவம் உண்டோ?” என்று பல்லவ மல்லன் கேட்டான்.
“இன்னும் இல்லை பிரபு. என் காதலைத் தூண்டும் அளவுக்கு ஒரு பெண்ணும் என் எதிரே இன்னும் தென்படவில்லை.”
“பின்னே காதலைப் பற்றி நுணுக்கமாகப் பேசுகிறீர்களே?”
“ருத்திர பரமாச்சாரியின் தத்துவங்களைக் கேட்டிருக் கிறேன். காதலைப் பற்றிய அவருடைய விளக்கம் மிக அற்புதமானது. தத்துவங்களைத் தெரிந்திருக்கிறேனே தவிர இன்னும் அனுபவத்தில் உணரவில்லை, பிரபு.”
“மனைவியைக் காதலிக்க முடியாதா?”
“ஏன் முடியாது? ஆனால், காதலைப் பலவந்தமாக வரவழைக்க முடியாதே. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் தீவிரமான காதல் உணர்வு பல ஜென்மங்களாகத் தொடரும் ஒரு ஜென்மாந்திர உணர்வு என்று எண்ணுகி றேன். அப்படி ஒரு ஜென்மாந்திரத் தொடர்பு, வாய்க்கும் மனைவியுடனிருக்குமானால் மனைவிமீது காதல் தோன்ற முடியுமென்று எண்ணுகிறேன்” என்றான் ராஜன் நம்பூதிரி.
பல்லவமல்லன் சிந்தித்தவாறு சற்று நேரம் மெளன மாய் இருந்தான்.
“இந்த இரகசியத்தை பூரணமாக அறிய வேண்டு மானால், யோகி பரமாச்சாரியிடம் பாடம் கேட்கலாமே” என்றான் ராஜன் நம்பூதிரி.
“எனக்கு அவர் மீது நம்பிக்கை விழவில்லை. வெறும் காதல் உணர்வு மூலம் பேரின்பத்தை அடையலாம் என் கிறார்! எனக்கு அவருடைய தத்துவங்களில் ஈடுபாடில்லை. உதயசந்திரன், பதினான்கு ஆண்டுகளாக ஆசிரமத்தில் இருக்கிறாரே, என்ன கண்டார்? அவருடைய மனச்சஞ்சலம் நீங்கியபாடில்லையே” என்றான் பல்லவ மல்லன். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, ராஜன் நம்பூதிரியைப் பார்த்து, “எனக்கு ஒன்று தோன்றுகிறது. பாண்டிய மன்னனுக்கு ஒரு தூதனை அனுப்பலாமா?” என்று கேட்டான்.
“எதற்காக மகாராஜா?”
“சித்திரமாயனை பல்லவ நாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு, ஒரு தூதனை அனுப்புவோம். பாண்டியமன்னன் மறுத்தால், பாண்டியநாட்டின் மீது உதய சந்திரனை படையெடுத்துச் செல்லும்படி ஆணையிடு வோம். தளபதி, தம்முடைய சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.”
“நல்ல யோசனைதான், பிரபு. இதற்குத் தளபதியும் உடன்படுவார்” என்றான், ராஜன் நம்பூதிரி.
“சரி. காதல் ஆராய்ச்சியை நாம் பிறகு வைத்துக் கொள் வோம். உடனே பாண்டிய நாட்டுக்கு ஒரு தூதனை அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்” என்றான், பல்லவமல்லன்.
ஒரு நாள் மாலை. ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத் துக்கு ராஜன் நம்பூதிரி சென்றான். யோகியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான்- “சுவாமி, இன்னும் உதயசந்திரனின் மனதை விட்டுப் பழிவாங்கும் உணர்வு மறையவில்லையே. அவனுக்காக, பாண்டிய நாட்டின் மீதே படையெடுக்கவும் சக்ரவர்த்தி தயாராக இருக்கிறார்.”
‘ஓ…! பழி வாங்குவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை மன்னர் உண்டாக்கிக் கொடுக்க நினைக்கிறாரா? அப்படியாவது பழி வாங்கட்டும். அதன் பிறகுதான், அவனுடைய உள்ளத்தில் குத்தியிருக்கும் முள் வெளிப்படும். அதுவரை, அவன் மனம் உழன்றுகொண்டுதானிருக்கும்” என்றார், ருத்திர பரமாச்சாரி.
“பழி வாங்கும் எண்ணம் கெட்டதல்லவா?” என்றான் ராஜன் நம்பூதிரி.
“கெட்டது, நல்லது என்று பிரித்து வைத்துக்கொண்டி ருப்பதால்தான் மனத்தில் அழுக்குகள் படிகின்றன. கடவுளு டைய படைப்பில், கெட்டது என்பதோ நல்லது என்பதோ இல்லை. ஒரு செயலுக்கு அப்படி வர்ணத்தைக் கொடுத்துக் கொண்டு, அல்லல்படுகிறோம். கொலை, தீயசெயல் என்றால், போர்க்களத்தில் நடைபெறுகின்றனவே லட்சக் கணக்கில் கொலைகள்! செயல் ஒன்றுதான். ஆனால், இடத்துக்குத் தகுந்தபடி வர்ணம் பூசுகிறது, மனிதனின் அறியாமை. ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்துவதை, ஒருத்தியின் சம்மதமின்றி வலுக்கட்டாயமாக அணைப் பதைக் கற்பழிப்பு என்று குற்றம் சாட்டுகிறோம். ஆனால், ஒவ்வொரு கணவனும், மனைவியிடம் இந்தக் குற்றத்தைத் தானே செய்து கொண்டிருக்கிறான். பலவந்தமாகப் பொருளைப்பிடுங்குவதற்கு, கொள்ளை என்று பெயரிட்டுத் தூற்றுகிறோம். அதே செயலை, அரசு புரியும்போது, அதற்கு வரி என்று பெயரிட்டு, அமைதியடைகிறோம். கொடுமை என்றோ, கருணை என்றோ இயற்கையில் எதுவுமில்லை. துச்சாதனனை பீமன் பழி வாங்கினானே; அவனுடைய ரத்தத்தைப் பாஞ்சாலி கூந்தலில் தடவிக்கொண்டாளே! துரியோதனாதிகள் அனைவரையும் பழி தீர்த்தார்களே ! வாலியையும், இராவணனையும் இராமன் கொன்றானே! அத்தனையும் தீச்செயல்களா? எல்லாமே மனித உணர்வு களோடு இசைந்த இயல்பான நடவடிக்கைகள் தாம். துச்சாதனனைப் பழி வாங்கியிராவிடில், பாஞ்சாலியால் மோட்சத்துக்குப் போயிருக்க முடியாது. உள்ளத்தில் படிந் திருந்த குரோதம் என்னும் அழுக்கு, துச்சாதனனின் இரத்தத் தால் கழுவப்பட்டு, பாஞ்சாலியின் உள்ளம் தூய்மையான தினால்தான் மோட்சத்துக்கு அவளால் செல்லமுடிந்தது. மனத்தில் ஏதாவது ஏக்கமும், அழுக்கும் இருக்கும்வரை, பேரானந்த நிலையை அடைய முடியாது. உதயசந்திரன், தன் மனத்தின் அழுக்கைத் துடைக்கட்டும்” என்றார், பரமாச்சாரி.
“சுவாமி, தங்களுடைய ஆசிரமத்தில் பதினான்கு ஆண்டுகளாக இருக்கிறான். கடந்த கால நினைவுகளை மறந்து மன அமைதி அடைவான் என்று எதிர்பார்த்தேன்” என்றான், ராஜன் நம்பூதிரி.
“இதற்குள் அவனுடையமனம் அமைதி அடைந்திருக்க வேண்டும். ஆனால் சில ஆசைகள், சிலருடைய மனங் களில் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. மனத்தை விட்டு அந்த ஆசை அகல, சிலருக்கு வெகுகாலம் பிடிக்கிறது. அந்த ஆசையை அடக்குவதைவிட, விரைவில் நிறைவேற்றிக் கொண்டால், மனம் விரைவிலேயே சாந்தியடைந்துவிடும். ஈரேழு ஆண்டுகள் ஓர் ஆசையை மனத்தில் புதைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே போராடிக்கொண்டிருக்கிறான். இப்போது, தவம் பலிப்பதைபோல், அவனுடைய சபதம் நிறைவேறுவதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது. அவனவனு டைய இயல்பை மாற்ற வேண்டியதில்லை. உதயசந்திரன் ஒரு போர்வீரனுக்குள்ள இயல்புகளை உடையவன். அவனிடமிருக்கும் கோபம், வேகம், ஆத்திரம், பழிவாங்கும் வெறி எல்லாம் இயற்கையே. அவன் போக்கிலேயே போகட்டும். மனம் சாந்தியடையட்டும்” என்றார், ருத்திர பரமாச்சாரி.
– தொடரும்…
– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.
– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க... |