மயிலும் குயிலும்




பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப் பூக்கும் செடிகளும் வளர்ந்து செழிப்பாகப் பார்ப்பதற்கு அழகாக இருந்தன.
அங்குள்ள மக்கள் பக்கத்து வயல்வெளிகளில் நெல் மற்றும் தானியங்களைப் பயிரிடுவார்கள். விதைக்கும் நாளிலும் அறுவடை நாளிலும், மற்ற நாட்களிலும் அம்மரங்கள் அடங்கிய பாதையில்தான் செல்வார்கள்.
அந்தப் பூஞ்சோலை கிராமத்தில் ஒரு மயிலும் குயிலும் வாழ்ந்து வந்தன. அவை சுதந்திரமாக அங்குள்ள பழங்களையும் தானியங்களையும் சாப்பிட்டு வந்தன. மயில் தோகை விரித்து ஆடும்பொழுது வயல்வெளிகளில் வேலை பார்க்கும் மக்கள் அது ஆடுவதையும் அதன் அழகையும் தங்களுடைய வேலையை மறந்து ரசித்துப் பார்ப்பார்கள்.
அதே போல குயில் பாடும்போது, அதன் இனிமையை மெய்மறந்து கேட்டு ரசிப்பார்கள். இதனால் மயிலுக்கும் குயிலுக்கும் மிகவும் பெருமையாக இருந்தது. இருந்தாலும் மயிலுக்கும் குயிலுக்கும் மனதில் குறையிருந்தது.
அது என்னவென்றால் –
மயிலுக்குத் தான் அழகாய் இருந்தாலும் தனது குரல் சரியில்லையே என்று வருத்தம். அதே போல குயிலுக்குத் தன் குரல் இனிமையாக இருந்தும் பார்ப்பதற்குத் தான் அழகாக இல்லையே என்று வருத்தம்.
ஒருநாள், மரத்தின் கிளையில் மயில் மிகுந்த வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தது. அப்போது அங்கு வந்து குயில், “”என்ன மயிலண்ணா, மிகவும் கவலையோடு உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று பாசத்தோடு கேட்டது.
“”ஒன்றுமில்லை தம்பி. நீல வண்ணத்தோடு நீண்ட தோகையும் எனக்குக் கொடுத்த இறைவன், உன்னைப் போன்று இனிமையான குரலைக் கொடுக்காமல் கேட்கச் சகிக்க முடியாத குரலைக் கொடுத்துவிட்டானே என்று வருத்தமாக இருக்கிறது” என்றது மயில்.
உடனே குயில், “”எனக்கு மட்டும் என்னவாம்? குரலில்தானே இனிமை இருக்கிறது. தோற்றத்தில் என்னை அழகில்லாமல் படைத்துவிட்டானே! என் குறையை யாரிடம் சொல்வேன்?” என்று புலம்பியது.
சிறிது நேரம் யோசித்த மயில், “”நாம் இப்போதே நம்மைப் படைத்த இறைவனிடம் முறையிடுவோம். நமது மனக்குறையை அவரிடம் சொல்வோம்…” என்றது.
மயிலின் யோசனை குயிலுக்கும் சரியெனப் பட்டது.
உடனே இரண்டு பறவைகளும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கின.
அவர்களது பிரார்த்தனைக்கு மனமிறங்கி, இறைவன் அவர்கள் முன்பு தோன்றினார்.
மயிலும் குயிலும் அவரை வணங்கி, தங்களின் குறைகளைக் கூறின.
அதைக் கேட்ட இறைவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். பிறகு இரக்கத்தோடு அவற்றைப் பார்த்த இறைவன், “”உங்களில் ஒருவர் இனிமையான குரலையும் மற்றவர் அழகிய தோற்றத்தையும் பெற்றுள்ளீர்கள். ஆனால் உங்கள் இனமான காக்கையைப் பற்றி நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே? காக்கை எவ்வளவு கருப்பு? அதைவிட அண்டங்காக்கை இன்னும் கருப்பு. அவற்றின் குரலும் கேட்கச் சகிக்காது. அவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நீங்கள் எவ்வளவோ தேவலாம் அல்லவா? உங்களுக்கு நல்லதாக ஒன்றாவது கிடைத்திருக்கிறதே என்று திருப்திப்படுங்கள்” என்று புத்திமதி கூறினார்.
அப்போது மயில் அவரை நோக்கி, “”சுவாமி, எங்களைக் காட்டிலும் தாழ்வான காக்கையைப் பற்றி உதாரணம் காட்டினீர்கள். உண்மைதான். ஆனால் எங்களைப் போன்ற கிளிகளை மறந்து விட்டீர்களே. அவற்றுக்கு மட்டும் நல்ல அழகான உடல் வண்ணமும் இனிமையான குரல் வளமும் உள்ளனவே? அவற்றைக் கொடுத்தது நீங்கள்தானே? எங்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?” என்று வாதிட்டது.
சற்று நேரம் யோசித்த இறைவன், அவற்றைப் பார்த்து, “”அழகு, இனிய குரல் இரண்டையும் பெற்றிருப்பதால்தான், அந்தக் கிளிகள் மனிதர்களால் கவரப்பட்டு, கூண்டில் கிடந்து துன்பப்படுகின்றன. அவை தங்கள் சுதந்திரத்தை இழந்து வாழ்நாள் முழுவதும் துன்பப்படுகின்றன. கிளிகளைப் போல உங்களுக்கும் குரல், அழகு கொடுக்க நான் தயார். அந்தக் கிளிகளைப் போல சுதந்திரத்தையும் உரிமையையும் இழக்க நீங்கள் தயாரா?” என்று கேட்டார்.
அதைக்கேட்ட மயிலும் குயிலும் திடுக்கிட்டன. “”எங்களை மன்னிக்க வேண்டும் சுவாமி. இருக்கின்ற ஒன்றே போதும். இந்த சுதந்திரத்தையும் உல்லாச வாழ்க்கையையும் இழக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. சிறைத் துன்பத்தை நினைத்தாலே உடம்பெல்லாம் பதறுகிறது. இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்க நினைத்தது தப்புதான்! உங்களை எதிர்த்துப் பேசியதற்கு எங்களை மன்னியுங்கள்” என்று மயிலும் குயிலும் ஒரே குரலில் கூவின.
இறைவன் அவற்றைப் பார்த்து, “”மன திருப்தியே மனமகிழ்ச்சி! நீங்கள் மனம் மாறியதே எனக்குப் போதும். நன்றாக, ஒற்றுமையாக வாழுங்கள்” என்று கைகளை உயர்த்தி அவற்றை ஆசிர்வதித்துவிட்டு மறைந்தார்.
மயிலும் குயிலும் மனநிறைவோடும் மனநிம்மதியோடும் பூஞ்சோலை கிராம மக்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ச்சியூட்டி சந்தோஷமாக வாழ்ந்தன.
– எம்.ஜி.விஜயலெக்ஷ்மி கங்காதரன் (ஏப்ரல் 2013)