மயக்கத்தின் மறுபக்கம்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 102

“இன்னும் எத்தனை நாளைக்குடா இந்த நாற்காலிக்கு ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கப் போற? பட்டப் படிப்புன்னா என்ன எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு இருக்கா? உன்னைப் படிக்க வைக்க நான் எவ்வளவு கடன் வாங்கினேன் தெரியுமா?” – தந்தையின் குரல் இடி போல ஒலித்தது. அது ஆதங்கத்தை விட அதிகாரம் கலந்த சலிப்பைக் கொண்டிருந்தது.
அரங்கநாதன் எதையும் செவிமடுக்காதது போல வானத்தைப் பார்த்தான். அங்கு காகங்கள் வட்டமிட்டன. அந்த வீட்டின் கூரையிலும், அவனது மனதின் கூரையிலும் இதே வட்டம்தான் சுழன்றுகொண்டிருந்தது.
“தம்பி… நாங்க உனக்காகத்தான் வாழறோம். நீ ஒரு நல்ல வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சு, இந்தக் கடனையெல்லாம் அடைச்சு நாங்க நிம்மதியா கண்ணை மூடணும்னு பார்த்தா… நீ பாட்டுக்குக் குத்துக் கல்லாட்டம்…” அம்மாவின் வார்த்தைகள் தேய்ந்து, இறுதியில் அழுகையாக மாறியது.
அவனின் அமைதி இந்த வீட்டில் அவனுடைய மிகப்பெரிய ஆயுதமாக மாறியிருந்தது. ஆனால், அந்த ஆயுதம் காலப்போக்கில் அவனையே காயப்படுத்திக் கொண்டிருந்தது.
“அண்ணே… நீ நல்லாத்தானே படிச்ச? அப்புறம் ஏன் இப்படி? தெருவுல போறவங்க, வர்றவங்க எல்லாம் என்னைப் பார்த்துப் கேலியா பேசுறப்ப, எனக்கு அப்படியே கழுத்துல கயிற்றைப் போட்டுத் தொங்கலாம் போல இருக்கு!” சின்னத்தம்பியின் குரலில் அவமானம் கொப்பளித்தது. அது பாசம் அல்ல, சமுதாய பயம்.
தம்பியின் இந்த வார்த்தை அவனது அமைதியின் அணைக்கட்டை முதன்முதலில் அசைத்தது. கோபமோ, கொந்தளிப்போ வெளிப்படவில்லை. ஆனால், கேணிக்குள் நீர் உறைவது போல, அவனுள் ஒரு விடயம் மெல்ல குடியிருக்க ஆரம்பித்தது. இந்த மௌனம் இனிமேல் அவனது பலவீனம் அல்ல, அது ஒரு மனநோயின் ஆரம்பம். எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு ‘மயக்கம்’ அவனுக்குத் தேவைப்பட்டது.
ஒருநாள், ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏகவுரி அம்மன் ஆலயத்தின் ஆலமரத்தடியில் அவன் அமர்ந்திருந்தான். இங்கேயும் அவன் சும்மா இல்லை. அவனுள் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தான்.
“என்ன தம்பி, ஒரு வாரமா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கீங்க? நீங்க யாரு? எதுக்காக இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க?” அர்ச்சகர் அன்பாக விசாரித்தார்.
அரங்கநாதன் சுழன்றான். அவனது கண்களில் இதுவரை இல்லாத ஒரு வெறி தெரிந்தது.
“நீங்க யாரு என்னைக் கேள்வி கேட்க? நான் யாரா இருந்தா உங்களுக்கு என்ன? நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க!”
அந்தக் கோயில் அர்ச்சகர் அவனது ஆவேசமான பதிலைக் கேட்டு ஒரு கணம் ஆடிப் போனார். இவன் நல்ல மன நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அவனிடமிருந்து விலகி தனது திருப்பணிகளில் கவனத்தை திரும்ப செலுத்தலானார்.
மற்றொரு நாள் முனியாண்டவர் கோவில் வளாகத்தில் அவன் தூங்கிக் கொண்டிருந்த போது, பூசாரி அவனை எழுப்பினார்.
“தம்பி, இது என்ன சத்திரமா? இல்ல வழிப்போக்கர்கள் தங்குமிடமா? போய் உருப்படியா வேலையைப் பாருப்பா. இந்த வயசுல இப்படிச் சோம்பேறியா!”
அவர் பேசி முடிப்பதற்குள், அரங்கநாதன் பாய்ந்து எழுந்தான்.
“யோவ், இது என்ன உன் வீட்டுச் சொத்தா? மரியாதையாப் போயிடு. இல்லைன்னா மரியாதை கெட்டுப் போயிடும்!”
அந்தப் பூசாரி அவனது மூர்க்கத்தனமான வார்த்தைகளை கேட்டு மனம் நடுங்கி அவனிடம் இருந்து வேகமாக விலகிச் சென்றார்.
அவனுள் இருந்த அமைதி, இப்போது வெற்றுக்கோபமாக, தப்பிக்கும் எண்ணமாக, தன்னை நியாயப்படுத்தும் ஒரு நோயாக மாறிவிட்டது.
அவன் செல்லாயி அம்மன் கோவில் வளாகத்தை சில காலம் வலம் வந்தபடி இருந்தான். அப்போது ஒரு நாள், கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒரு மகளிர் கூட்டத்திலிருந்து ஓர் இளம்பெண், அவனை நோக்கி ஓடிவந்தாள். அவளது சிங்கப்பூர் வாழ்க்கையின் பிரகாசம் அவளது புடவையில் மின்னுவது போலிருந்தது.
“டேய், அரங்கா! நல்லா இருக்கியாடா?”
“ஏய் மாதவி! நீயா? சின்னப்பள்ளிக் கூடத்தில் பார்த்தது. இப்ப ஆளைப் பார்த்தா அடையாளமே தெரியல. அம்சமா இருக்க! இப்ப எங்க இருக்க? என்ன பண்ற?”
“நான் சிங்கப்பூர்ல ஒரு பெரிய நிறுவனத்தில வரவேற்பாளரா இருக்கேன்டா,” என்றாள், அவளது பேச்சில் கொஞ்சம் கர்வமும், நிறைய காந்தம் போன்ற ஈர்ப்பும் கலந்திருந்தது.
“சரி, நீ திரும்ப சிங்கப்பூருக்கு எப்ப போகப் போற?”
“இன்னும் ரெண்டு வாரம் இங்க இருப்பேன்டா.”
“சரி, இங்க வா, உட்கார்ந்து பேசலாம்.”
“வேண்டாம்டா, எங்க ஊர்ப்பொண்ணுங்க எல்லாம் கூட வந்திருக்காங்க. நாளைக்கு ஒரு இடம் சொல்றேன். அங்க வா. தனியாப் பேசிக்கலாம்.”
மாதவி நெருங்கி வந்தாள். அவனது காதருகில், மறுநாள் சந்திக்கும் ரகசிய இடத்தைப் பேசும்போது அவளது கூந்தலின் வாசம், அவனது நிம்மதியை ஒரு நொடியில் சிதைத்தது.
மறுநாள், அரங்கநாதன், மாதவி சொன்ன வீர தேவன் கோவில் பூங்காவிற்கு வந்து சேர்ந்தான். அந்தக் கோவில் ஓர் ஓரத்தில், சனி மூலையில் அமைந்திருக்க, அதைச் சுற்றிப் பம்பரமாய் வளர்ந்திருந்த அனேக மரங்கள் அழகாகவும் அடர்த்தியாகவும் அருகருகே நின்று கொண்டிருந்தன.
மாதவி அவனை அழைத்துக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தாள். நாவல் மரத்தின் மேலே சிட்டுக்குருவிகள் சலசலக்க, குயில்கள் அவர்களது அசைவுகளைக் கண்டு சங்கீதம் பாடுவது போல அவனுக்குத் தோன்றியது.
அவள் பேசப்பேச, அவனது இறுக்கமான மனதின் சுவர்கள் தகர்ந்தன. அவளின் காந்த கதிர்கள் அவனை ஏகாந்த புதருக்குள் இழுத்துச் சென்றன. வேலை, குடும்பம், பொறுப்பு… இவையெல்லாம் அவளது கவர்ச்சி முன் காணாமல் போயின.
சிங்கப்பூர் உலகத்தைப் பற்றி அவள் பெருமையாகப் பேசப்பேச, அவனது வெறுமையான பட்டப் படிப்பு அலங்கோலமாய் அங்கே அவமானப்பட்டு நின்றது. ஆனாலும் அவளிடம் இருந்து கிடைக்கும் ஆனந்த மயக்கமே இப்போதைக்கு போதும் என்று அவனுக்கு அப்போது தோன்றியது.
அடுத்த சில நாட்கள், மாலை வேளைகளில், அந்தப் பூங்காவில் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும், அலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டனர். அவர்களின் பரிமாற்றங்கள் பல நாட்கள் நீடித்தது. அவளுக்கு இது ஒரு விடுமுறை காலத் தேவை. அவனுக்கோ அன்றாட கடமைகளையும் பொறுப்புகளையும் மறக்கச் செய்வதற்கான ஒரு புது வகையான போதையாக இருந்தது. அவனது வருங்காலத்தைப் பற்றிய எண்ணங்களை மறக்கடிக்கக் கூடிய ஒரு வகை மயக்கத்தையும் அது தந்தது. அரங்கநாதன் மாதவியிடம் முற்றிலும் மயங்கி போனான்.
மாதவி சிங்கப்பூருக்குச் சென்ற மறுநாள் முதல், தினமும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை, அவன் புறவழிச் சாலை ஓரத்தில் உள்ள அரச மரத்தடியில் காத்திருந்தான்.
அவளது ஒரு நிமிட அழைப்பிற்காக, இருசக்கர வாகனத்தில் பாதி அமர்ந்தும், பாதி நின்றும், ஒரு யோகியின் அதீத தியான நிலைபோல் அவன் உவகையுடன் காத்திருந்தான். அந்த ஒரு மணிநேரம், அவனுக்கு, நிஜ உலகை மறக்கச் செய்யும் ஒரு போதையாக அவனுக்கு மாறி போனது.
அப்போது அவனைப் பார்க்கின்ற பலரும், “ஐயனார் கோவில் அரிவாள் வீரன் சிலைபோல இருக்கிறானே!” என்று எண்ணி ஏமாந்து போவதுண்டு. அவன் ஒரு நிழல் உலக மனிதனாகி விட்டான்.
பதினோராம் நாள். மாலை 6:02 மணி.
மாதவியின் அழைப்பிற்காக அவன் தனது உயிரையே நிறுத்தி, காற்றில் கரைந்து, ஆவியாகக் காத்திருந்தான்.
மிதமிஞ்சிய வேகத்தில், நிலை தடுமாறி வந்த ஒரு குடிமகனின் கனத்த இருசக்கர வாகனம், உலகை மறந்த, ஆத்மார்த்தமான அந்த யோகியின் மீது மோதிவிட…
அரங்கநாதனின் கனவுலகக் காதல் போதை, ஒரே நொடியில், உடல் என்னும் நிஜத்தின் மீது பட்டு, உயிரற்ற சடலமாய் உருமாறிப் போனது.
“ஒரு சூடு சொரணை இல்லாதவனிடம் இனிமேல் நான் எப்படி இருப்பது?” என்று கோபித்துக் கொண்டு, அவனது உயிர் வேறு எங்கோ விரைந்து வெளியேறியது.
அதே சமயம், சிங்கப்பூரில்…
மாதவி தனது ஆடம்பர வீட்டில், சாப்பாட்டுக் கூடத்தில், சமையல்காரன் தயாரித்திருந்த விரால் மீன் குழம்பும், இறால் வறுவலும் பரிமாறப்பட்ட சாப்பாட்ட மேசையின் முன்பு அமர்ந்திருந்தாள்.. அப்போது அவளது அலைபேசி ஒருமுறை சிணுங்கி, நின்றுவிட்டது (அது அரங்கநாதனின் இறுதி அழைப்பு). அதை அவள் பொருட்படுத்தவில்லை.
அவள் தனது மேலாளரின் மகனிடம் “ஹலோ மோகன்… இன்னும் அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம் வாங்க. எனக்கு பசி தாங்க முடியல. நான் இப்போதான் சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். சீக்கிரம் வாங்க?” என்று செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள். அங்கே சாப்பாட்டுக்கூடத்திற்கு அருகில் சுகந்தமும் சாந்தமும் நிறைந்த ஆனந்தமான படுக்கை அறை அவளது இரவு பசியை இதமாக தீர்த்துக் கொள்வதற்காக மிகுந்த ஆவலோடு தயார் நிலையில் அவளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தது.
காதல் மயக்கம் இன்னும் தெளியாததால், அரங்கநாதனின் ஆவி சிங்கப்பூரின் மேலே, பறந்தபடி, மாதவியைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.