மன்னிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 2,645 
 
 

“அம்மா… ஆ. அய்யோ…” என்று ஆட்டோவுக்குள்ளிருந்து அலறல் சத்தம். ஆட்டோவும் மின்சார வேகத்தில் மருத்துவமனையில் வந்து நின்றது.

இளம் பெண்ணை ரெண்டுபேர் சேர்ந்து தூக்கி வேகமாக ஓர் அறைக்குள் சேர்த்தனர்.

“டாக்டர் கேஸ் ரொம்ப சீரியசா இருக்கு” செவிலியர் ஒருவர் சொன்னதும்.

“அந்தப் பாரத்துல எல்லாம் அந்தப் பொண்ணோட கணவர்கிட்ட கையெழுத்து வாங்கிடுங்க” டாக்டர் சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தார்.

“பாவம்! அவ என்ன பண்ணுவா”

“பச்சப்புள்ள எப்புடித்தான் வலியத்தாங்குறாளோ” மருத்துவமனை வளாகத்துக்குள் வார்த்தைகள் உலா வந்து கொண்டிருந்தன.

“பெத்தவங்க தப்புனால பிள்ளைங்க அனுபவிக்கிறாங்க”

சமஞ்சு ரெண்டு மூணு வருசம் தான் இருக்கும். பதினாறு வயசு தான் ஆகுது. அதுக்குள்ளசு சுகன்யாவுக்கு கல்யாணம்.

சுகன்யாவை பெண் பார்க்க வந்திருந்தனர். மாப்பிள்ளை வடிவேலன் கொத்தனார் வேலை. வயது இருபத்தெட்டை தாண்டி ஒரு மாதம் ஆகிவிட்டது. படிப்போ எட்டாங்கிளாசுதான்.

“டேய் சின்னு…இந்த வரன தட்டிக்கழிக்காத அவதான் சமஞ்சுட்டாள். என்னடா ரோசன பண்ணுறே.. சமஞ்ச புள்ளய வீட்ல வச்சுருக்கலாமா. இன்னோம் ரெண்டு பொட்டப் பிள்ளைக சின்னஞ் சிறுசா இருக்குலே” சுகன்யாவின் பாட்டி கிசுகிசுத்தாள்.

மாப்பிள்ளைவீட்டாருக்கு பெண்ணைப் பிடித்துப்போக.

“வர்ற முகூர்த்தத்திலேயே கல்யாணத்த வச்சுருவோம்” மாப்பிள்ளை அப்பா சொன்னதும் கூரையில் பல்லி “இச்… இச்….” என சத்தமிட்டது.

“ஒன்னோட வாய் முகூர்த்தம் சகுனம் நல்லா இருக்குப்பா” பெரியவர் ஒருவர் சொல்ல தட்டை மாற்றிக்கொண்டார்கள்.

இல்லறம்னா என்னானே தெரியாமல் அந்தக் கொடுமைக்கு ஆளான சுகன்யா தான் பிரசவத்தால் துடித்துக்கொண்டு இருக்கிறாள்.

கால்கள் அங்குமிங்கும் நடைபோட்டு சோர்ந்து கொண்டிருந்தன. கண்கள் சிவந்து வாடிக் கொண்டிருந்தன வடிவேலனுக்கு.

“வ்….வா….இய்யா…. ” குழந்தை அழும் சத்தம்.

ஒரு நொடி நின்றான். அழும் சத்தத்தை கவனித்தான். “டாக்டர்! என்னாச்சு” படபடத்த முகத்துடன் உதடு மெல்ல திறப்பதற்குள், கண்களின் வார்த்தைகளை உணர்ந்து.

“கவலப்படாதப்பா, ஓம் மனைவிக்கு பெண் குழந்தை ஆனா…”

“டாக்டர்”

“ஆப்ரேசன் செய்ற அளவுக்கு தாயோட ஓடம்பு இல்ல. சின்ன வயது. ஒல்லியான தேகம். எப்புடியோ ஆப்ரேசன் செஞ்சு குழந்தைய காப்பாத்திருக்கோம். அவள ஒழுங்கா பாத்துக்கோ, போயி பாரு”

வார்த்தைகளுக்கு செவி சாய்த்தவாறு தன் குழந்தையை கையில் வாங்கினான். எடை குறைந்தும், ஒரு கால் சூம்பியும் இருந்தது. அவனது கண்கள் அவனை அறியாமல் கசிந்து கொண்டிருந்தன.

“பெண்ணின் திருமண வயது இருபத்தொன்று” மருத்துவமனைச் சுவரில் எழுதியிருந்ததை அவனது கண்கள் உற்று நோக்கின. சுகன்யாவின் கண்கள் மயக்கத்தோடு உறவாடிக் கொண்டிருந்தன.

“எனக்கு இருபத்தெட்ட தாண்டிருச்சு” இவளுக்கு பதினாறு கூட முடியல. இப்புடித்தானே பல எடத்துல கல்யாணம் நடக்குது. வாசலைப் பார்த்தான். பகல் நேரத்தில் இருட்டாக தென்பட்டது.

சுகன்யாவின் அருகே அமர்ந்தான். அவனது கண்கள் மன்னிப்பு வேண்டி கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தன.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *