மனைவி அமைவது எல்லாம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2025
பார்வையிட்டோர்: 13,499 
 
 

மணிமேகளை மணியை பார்த்தாள்,ஒன்பது என்று காட்டியது,இன்னும் தூக்ககலக்கமாக இருந்தது,இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என்று நினைத்து மறுப்படியும் படுத்து தூங்கிப் போனாள்,சற்று நேரத்தில் எழுந்து பார்க்கும் போது மணி பதினொன்றை தாண்டியிருந்தது ஆறுதலாக எழுந்து கண்ணாடி முன் நின்று முகத்தை கூர்ந்து கவனித்தாள்,ஏதாவது சுருக்கங்கள் தெரிகின்றதா என்று,அப்படி எதுவும் தெரியவில்லை,தலைமுடி கருகருவென்று இருந்தது,எந்த வெள்ளை முடிகளும் வெளியில் தெரியவில்லை,அது போதும்,அழகு சாதன நிலையத்திற்கு போய் தலைக்கு அடித்த கலர் போகவில்லை கண்கள் சிவந்து போய் இருந்தது,துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நுழைந்தவள் பல் தேய்ச்சி குளித்து வெளியே வரும் போது மணி பன்னிரெண்டு,முகத்தை மெதுவாக துடைத்து கொண்டே கண்ணாடி முன் போய் நின்றாள்.விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் கண்டாடி மேஜையின் மீது அலங்கோலமாக கிடந்தது,அதில் சிலவற்றை எடுத்து முகத்தில் பூசினாள்,கண்ணுக்கு மை போட்டவள் இரவில் கலட்டிய நகைகளை எடுத்து மறுப்படியும் போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள்.

காப்பி போடுவதற்கு சோம்பேறித்தனமாக இருந்தது,நேற்றே நாளைக்கு வேலைக்கு வருவதற்கு முடியாதும்மா என்று கூறுயிருந்தாள் ராணி.தற்போது அவள் மீது கோபம் வந்தது.கையில் போனை எடுத்தவள் பகல் சாப்பாட்டை ஓடர் செய்து விட்டு,வாழைப்பழம் ஒன்றை எடுத்து சாப்பிட்டு சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சியை ஓட விட்டாள்,அப்போது கைத்தொலைப் பேசியில் அவளது தோழி கல்பனா அழைத்தாள்,உடனே கையில் போனை எடுத்து ஹலோ என்றாள்.எப்படி இருக்க போனில் கதைப்பதுவும் குறைந்து போய்விட்டது,வீட்டில் அப்படி என்னத்தை பன்னி தொலைக்கின்ற என்று குறைபட்டாள் கல்பனா,வேலை எதுவும் இல்லை,புதிதாக லேடிஸ் கிளப் ஒன்று ஆரம்பித்து இருக்கின்றார்கள்,நம்ம குடியிருப்பாளர்கள்,அதற்கு போய் வருவதால் நேரம் இல்லை உன்னிடம் கதைப்பதற்கு என்றாள் மணிமேகலை,இது எவ்வளவு நாட்களாக நடக்கின்றது,எனக்கு தெரியாமல்,ஏற்கெனவே நம்முடைய கிளப்பிலும் மெம்பராக இருக்கின்றாய்,பிறகு ஏன் அதிலும் என்றாள் கல்பனா,பொழுது போகவில்லை,தொடங்கி மூன்று வாரம் தான் ஆகின்றது,உன்னிடம் சொல்வதற்கு மறந்து போய் விட்டது என்றாள் மணிகேகலை

உன் இரண்டு பிள்ளைகளையும் மறந்து விட்டீயா என்றாள் கல்பனா,இல்லை இல்லை அவர்களுக்கு போன் போட்டு கதைத்து விடுவேன் என்றாள் அவசரமாக,நீ எனக்கு போன் பன்னவில்லை என்றாலும் பரவாயில்லை,அவர்களுக்கு அடிக்கடி போனை போட்டு நலம் விசாரித்து விடு,கடல் கடந்து இருக்கின்றார்கள்,இங்கையே படித்து இருக்கலாம்,உன் பிடிவாதத்தில் அவர்களை வெளியில் அனுப்பி படிக்க வைக்கும் பாஸ்கர் பாவம்,உனக்கு உடனே சுள்ளென்று வந்து விடும் என்றாள் கல்பனா,நீ எப்போதும் பாஸ்கரை விட்டுக் கொடுக்க மாட்டியே,என் வாழ்க்கையே பாஸ்கரனை கட்டி ஆட்டம் கண்டுவிட்டது இன்னும் அவருக்கு வரிந்துக் கட்டிக் கொண்டு வந்து விடு என்றாள் கோபமாக மணிமேகலை,உன்னிடம் சண்டை போட நான் போன் பன்னவில்லை,இன்று படம் பார்க்க போவதாக இருக்கின்றோம்,உனக்கு வரமுடியுமா என்று கேட்பதற்கு போன் பன்னினேன் என்றாள் கல்பனா.உடனே மணிமேகலை எத்தனை மணிக்கு நானும் வருகின்றேன் என்றாள்.சரி உனக்கும் சேர்த்து டிக்கட் புக் பன்னி விடுகிறேன்,ஆறு மணிக்கு படம் பார்த்து முடித்து வெளியில் சாப்பிட்டு வந்து விடலாம் என்றாள் கல்பனா.

சரி சரி என்று போனை வைத்தாள் மணிமேகலை.பெல் அடிக்கும் சத்தம் கேட்டது,ஜன்னலில் எட்டிப் பார்த்தாள்,கையில் உணவோடு ஒருவன் வெளியில் நின்றான்,கதவை திறந்து உணவை பெற்றுக் கொண்டு தேங்ஸ் கூறியவள்,மறுப்படியும் கதவை பூட்டி விட்டு,சாப்பிட தயாராகினாள்.சாப்பாட்டு வாசனை மூக்கை துளைத்தது அவசரமாக கைகளை கழுவிக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்,அவளுக்கு அந்த சாப்பாடு அவ்வளவாக பிடிக்கவில்லை,மட்டன் கறி வாசம் மட்டுமே,இதை விட நான் நன்றாக சமைத்து இருப்பேன் என்று நினைத்தப் படியே சாப்பிட்டு முடித்தாள்

அப்போது பாஸ்கரன் போன் பன்னினான்,ஹலோ என்றாள் மணிமேகலை, சாப்பிட்டீயா என்றான் அவன்,ஆமாம் என்றாள்,வாங்கிய மீன் அப்படியே இருக்கு,இன்று குழம்பு பன்னிட்ட தானே என்றான் அவன்,இல்லை நாளைக்கு பன்னுறேன்,இப்போது வெளியில் வாங்கி சாப்பிட்டேன்,பின்நேரம் படம் பார்க்கப் போகின்றோம் கல்பனாவுடன்,இரவில் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவேன் என்று பட படவென்று கூறி,அவனை பதில் பேசவிடாமல் தகவலை கூறிவிட்டு மணிமேகலை போனை வைத்து விட்டாள்.அவன் ஆரம்பத்தில் கோபபட்டான்,இருபது மூன்று வருடமாகியும் கோபம் படுவதில் அர்த்தம் இல்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.அவள் திருந்த வேண்டும்,அதற்கு வாய்பில்லை,அதனால் நாங்கள் அமைதியாக போய் விடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தான் அவன்.

காதல் திருமணம் யாரிடம் போய் குறை சொல்வது,ஒரு காலத்தில் அவள் செய்து கொண்ட உடையலங்காரம் முதல் எல்லாம் பிடித்திருந்தது, அதில் மயங்கி விழுந்தவன் தான்,தற்போது கவலைப் படுவதில் அர்த்தம் இல்லை,ஏதோ அந்த வயது எதையும் ஆசையாக,ஆவலாக பார்த்த கண்களுக்கு தற்போது அதையே அருவருப்பாக பார்க்க தோன்றுகின்றது,தன்னை அழகுப் படுத்திக் கொள்ளவும்,ஆடம்பரமாக வாழ மட்டுமே தெரிந்த மணிமேகலைக்கு வாழ்க்கையின் அர்த்தம் இன்னும் புரியவில்லை அதை நினைக்கும் போது பாஸ்கரனுக்கு கசப்பாக இருந்தது,இரண்டு பிள்ளைகள் கணேசன்,காயத்திரி அவர்களுக்கும் வளர்ந்து விட்டார்கள்,இருவரையும் மேற்படிப்புக்காக வெளியில் அனுப்பியே தீரவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றாள் மணிமேகலை.எவ்வளவோ பாஸ்கரன் எடுத்துச் சொன்னான்,எதுவும் அவள் காதில் வாங்கவில்லை.அவன் அரைமனத்தோடு அனுப்பி வைத்தான்,தற்போது மகளுக்கு பத்தொன்பது வயது,மகனுக்கு பதினெட்டு வயது,இருவரும் சேர்ந்தே சென்றதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.போய் இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றது பாஸ்கரனுக்கு தான் அதை நினைத்து கவலை மணிமேகலைக்கு தங்களுடைய பிள்ளைகள் வெளியில் படிக்கின்றார்கள் என்ற பெருமை மட்டுமே மேலோங்கியிருந்தது.

பாஸ்கரன் அடிக்கடி பிள்ளைகளிடம் போனில் கதைத்துக் கொள்வான்,மணிமேகலை எப்போதாவது தான் போன் பன்னுவாள்.அது பிள்ளைகளுக்கும் தெரியும்,மகனுக்கு அம்மாவின் மேக்கப் முதல் லேடிஸ் கிளப் மட்டும் பிடிக்காது,மகள் கொஞ்சம் பொறுத்து போய் விடுவாள்.அவர்களுக்கும் பொழுது போக வேண்டாம்,தனியாக இருக்கின்றார்கள் அப்பாவிடம் அவ்வளவு பேச்சி வார்த்தை இல்லை,எப்போதும் இருவருக்கும் சண்டை தான் இவர்கள் கதைப்பதை விட கதைக்காமல் இருப்பதுவே நல்லது என்று காயத்திரி நினைப்பது உண்டு,தற்போது அது தான் நடக்கின்றது வீட்டில்,அம்மாவின் உலகம் தனி உலகம் ,வித விதமாக ஆடைகள் போடுவதற்கும், தன்னை அழகுப் படுத்திக் கொள்வதிலும் இருக்கும் அக்கறை வேறு எதிலும் இல்லை என்பது நன்றாகவே தெரியும் மகளுக்கு.அதை அவ்வளவாகப் பெரிதுப் படுத்த மாட்டாள் அவள்.கணேசனுக்கு இது எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது,குடும்பத்தை கவனிக்காமல் லேடிஸ் கிளப் தலைவியாகவும்,நேரத்திற்கு ஒரு உடை அணிந்துக் கொண்டு கண்ணாடி முன்பு நேரத்தை வீணாக்குவதாகவும்,அப்பாவிற்கு நேரத்திற்கு சமையல் பன்னிக்கூட போட மாட்டேன்கிறார்கள் என்று அக்காவிடம் கூறி வருத்தப் படுவான்,சரி விடுடா அது அவர்களுக்கு சந்தோஷம்,அதை ஏன் நாங்கள் தடுக்க என்பாள் காயத்திரி.

எல்லா பொறுப்புகளையும் முடித்து விட்டு அவர்கள் பொழுது போவதற்காக இதில் ஈடுபடுவதை ஒத்துக் கொள்ளலாம்,முழு நேரமும் இதில் உட்கார்ந்து இருந்தால் அப்பாவிற்கு கோபம் வரும் தானே என்பான்.

கணேசன்,நீ சொல்வது ஒருவகையில் ஏத்துக்க வேண்டிய விடயம் தான்,அது அம்மாவிற்கு புரிய மாட்டேங்குது,அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து பழகிவிட்டார்கள்,அப்பா கொஞ்சம் வசதியாக இருப்பதால் அம்மாவின் ஆடம்பர செலவையெல்லாம் சமாளிக்கின்றார்,இல்லை என்றால் அவர் பாடு திண்டாட்டம் தான் என்றாள் காயத்திரி,அம்மாவை எப்படி அப்பா காதலித்தார் என்றான் கணேசன்.யாருக்கு தெரியும்.கட்டியப் பிறகு தானே முழுவதும் தெரிய வருகின்றது என்றாள் காயத்திரி.அப்ப எல்லோரும் லவ் பன்னும் போது ஏமாத்துறாங்கள் உண்மாயாக இல்லை என்றான் அவன்.அது அப்படி இல்லை,அவர்களின் தப்பு தப்பாக தெரிவது இல்லை லவ் பன்னும் போது என்று காயத்திரி சிரித்தாள்.நான் யாரையும் லவ் பன்னி ஏமாற மாட்டேன் என்றான் அவன்.பார்த்து கட்டினால் மட்டும் எல்லாம் சரியாக இருக்குமா அதுவும் இது மாதிரி தான் என்றாள் அவள்.நான் கட்டவே மாட்டேன் என்றான் கணேசன்.இப்படி சொன்னவர்கள் பல பேர்.அது எல்லாம நடக்கும் போது நடக்கும் என்றாள் அவள்.

அம்மா மாதிரி யாரும் அமையாமல் இருந்தால் சரி என்றான் அவன்.அதை எப்படி நீ முடிவு எடுப்ப,உனக்கு இது தான் என்று இருந்தால் அது தான் நடக்கும்.அப்பா நினைத்தாரா அம்மா இப்படி இருப்பார்கள் என்று அப்பா வாழ்ந்துக் கொண்டு தானே போறார் என்றாள் அவள்.எனக்கு இப்படியெல்லாம் வாழ முடியாது என்றான் அவன்.அப்பா அப்படி நினைத்து இருந்தால் நமக்கு இப்படி வாழ்க்கை அமைந்து இருக்காது.எதற்கும் அவசரப் பட்டு முடிவு எடுகாகாதே எப்போதும் என்றாள் அவள்.சரி அது நடக்கும் போது பார்த்துக் கொள்வோம் என்றான் அவன்.அம்மாவைப் பற்றி அக்காவும்,தம்பியும் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் போது இருவருக்கும் இப்படியெல்லாம் வாக்குவாதமும் ஏற்படும்.இருவரும் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி படிப்பதால்,குடும்ப கதைகளை அடிக்கடி கதைத்துக் கொள்வார்கள்.மற்ற மாணவர்கள் வேற்றுமொழி என்பதால் காயத்திரிக்கும் கணேசனுக்கும் அது வசதியாக இருந்தது.

நீ ஏதும் அம்மா மாதிரி ஆகிவிடாதே என்பான் கணேசன்,இந்த ஊரில் அனைவரும் அப்படி தானே இருக்கின்றார்கள்.ஏன் நம்நாட்டு பசங்க மட்டும் அதை ஏத்துக்குவது இல்லை என்றாள் காயத்திரி,அறையும் குறையுமாக ஆடை அணிவது,மேக்கப் போடுவது,நினைத்தவுடன் காதலர்களை மாற்றிக் கொள்வது,இது எல்லாம் இவர்களுக்கு சரிப்படும்,நம் ஊரில் இவைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தாத்தா பாட்டி காலம் முதல் கட்டுப்பாடுடன் தானே இருந்தது நம் நாடு,நம்ம மாதிரி பலர் வெளிநாடுகளுக்கு வந்து படிக்கின்றோம்,இந்த நாட்டு கலாச்சாரத்தையும் போகும் போதுசேர்த்து தூக்கிட்டு போய் பரப்பிவிடுகின்றோம் என்று சிரித்தான் கணேசன்,இப்போது உலகமே மாறிப் போய்விட்டது,அதற்கு ஏற்ற மாதிரி நம்மை நாங்கள் மாற்றிக் கொள்வது தப்பில்லையே என்றாள் காயத்திரி.இந்த ஊரில் தப்பில்லை எப்படியும் வாழலாம்,நம் ஊரில் அறையும் குறையுமாக வெளியில் போனால்,நம்ம பசங்க பார்க்கும் பார்வையே வேறு விதமாக இருக்கும்,அது உனக்கே தெரியும் தானே என்றான் கணேசன்.அது என்னமோ உண்மை தான்,தற்போது பொண்ணுங்க அதற்கும் பழகிவிட்டார்கள் என்றாள் காயத்திரி.

அம்மா தற்போது இன்னொரு லேடீஸ் கிளப்பில் சேர்ந்து இருப்பதாக சொன்னார்களே அன்று என்றாள் காயத்திரி,ஆமா ஆமா நானும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்,இது எதில் போய் முடியுமோ என்றான் அவன்.ஊருக்கு போய் அப்பாவிற்கு உதவியாக இருக்க வேண்டும் அவர் பாவம்,ஓடி ஓடி உழைக்கின்றார்.அந்தளவிற்கு வீட்டில் அவருக்கு சந்தோஷம் இல்லை என்று பெருமூச்சி விட்டான் கணேசன்.எப்படியும் நீ அப்பாவின் கம்பனியை பாரம் எடுக்கும் மட்டும் அவருக்கு கொஞ்சம் பொறுப்புகள் அதிகம் தான் என்றாள் காயத்திரி.படிப்பை முடித்து விட்டு ஊருக்கு எப்போது போவோம் போல் இருக்கு என்றான் கணேசன்,எனக்கு அப்படி இல்லை இந்த ஊரே பிடித்திருக்கு என்றாள் காயத்திரி உனக்கு பிடிக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம்,ஊரில் என்றால் தனியாக அனுப்புவதற்கே யோசனையாக இருக்கும் என்றான் அவன்,பேசாமல் இங்குள்ள நம்ம ஊரு பையனாக பார்ப்போமா என்றான் கிண்டலாக அவன்.அம்மா தகுதிக்கு இல்லை என்று ஆர்பாட்டம் போடுவார்கள் என்றாள் அவள்.நாங்கள் யாரை கட்டினாலும் அம்மா திருப்தி அடைய மாட்டார்கள்,அதற்காக அவர்களுக்காக நம்ம வாழ்க்கையையும் வீண்ணடிக்க முடியாது.அப்பா இருக்கார் தானே,அவர் பார்த்துக் கொள்வார் என்றாள் காயத்திரி.

மணிமேகலை அயன் செய்து அடுக்கி வைத்திருந்த புடவையில் ஒன்றை எடுத்து கட்டினாள்.அதற்கு ஏற்றவகையில் நகைகளை போட்டுக் கொண்டாள்,முகத்திற்கு ஏற்கெனவே மேக்கப் போட்டு முடித்திருந்ததால்,தலையை சீவி தூக்கி கொண்டையை போட்டாள்,பொட்டை வைத்தவள் கண்ணாடியில் எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்து விட்டு போனை எடுத்து அவர்களுடைய கம்பனி கார் டிரைவரை அழைத்தாள்,சொல்லுங்க அம்மா என்றான் பழனி,வீட்டுக்கு வந்து என்னை தியேட்டரில் கொண்டுப் போய் விடனும் என்றாள் அதிகாரமாக,அம்மா ஐயாவுடன் வெளியில் வந்து இருக்கேன் என்று இழுத்தான் எரிச்சலாக சரி என்று போனை வைத்தவள்,டாக்ஸி புக் பன்னி விட்டு வெயிட் பன்னினாள்.சற்று நேரத்தில் டாக்ஸி வந்தது.அரைமணி நேரத்தில் தியேட்டரில் இறங்கி விட்டாள் அவள்,அப்போது பழனி ரிங் பன்னினான் அம்மா வேலை முடிந்தது வரட்டுமா அம்மா என்றான்,வேண்டாம் நான் வந்து விட்டேன்,படம் முடிந்து சாப்பிட்டு உனக்கு ரிங் பன்னுகிறேன் அப்போது என்னை வந்த அழைத்துக் கொண்டு போ என்று பதிலை எதிர் பாக்காமல் வைத்து விட்டாள்.

பழனிக்கு திக்கென்றது,இன்றைக்கு நான் வீட்டுக்கு எத்தனை மணிக்கு போக முடியும் என்று தெரியவில்லையே கடவுளே,என்று மனதில் நினைத்துக் கொண்டான் அவன்.

மணிமேகலையை கண்டதும் கல்பனா வந்து அவளை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.உனக்காக தான் உள்ளே போகாமல் வெளியில் நின்கின்றேன்,மற்றவர்கள் எல்லோரும் உள்ளே சென்று விட்டார்கள் என்றப் படி இருவரும் உள்ளே சென்று அவர்கள் இருக்கையில் அமர்ந்தார்கள்.சற்று நேரத்தில் படம் தொடங்கியது.இடைவேலையின் போது கல்பனா நண்பர்களுடன் கலகலப்பாக இருந்தாள்.படம் முடிந்தப் பிறகு,சாப்பிட போனார்கள்,அங்கும் ஒரே சிரிப்பும்,அரட்டையுமாக நேரம் போவதே தெரியாமல் இருந்தார்கள்.பழனி மனைவி அஞ்சலை இரண்டு தரம் போன் பன்னி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்கள்,எனக்கு தனியாக இருக்க பயமாக இருக்கின்றது என்றாள் அவள்.இன்று கொஞ்சம் தாமதமாகும் நீ வீட்டை பூட்டி விட்டு உள்ளே இரு என்றான் அவன்,அவளும் சரியென்று வாய் சொன்னாலும்,கிராமத்தில் வளர்ந்தவள் அவள்,பழனியை கைபிடித்து இந்த ஊருக்கு வந்தவள்,வந்த நாள் முதல்,யாரை பார்த்தாலும் மனதில் திக்திக்கென்று தான் இருக்கும் அவளுக்கு.

விளக்கை அணைக்காமல் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பழனிக்காக காத்திருந்தாள் அஞ்சலை.மணிமேகலை கல்பனா நண்பர்களுடன் சாப்பிட்டு முடித்தாள்.அப்போது மகள் காயத்திரி அழைத்தாள்.மணிமேகலை மகளுடன் கதைத்து விட்டு போனை கல்பனாவிடம் கொடுத்தாள்,அவள் வாங்கி வீடியோ ஆன் பன்னி அனைவரையும் அறிமுகப் படுத்தி வைத்தாள் காயத்திரிக்கு,அனைவருக்கும் ஹாய் ஆன்டிஸ் என்றாள் காயத்திரி சரி ஆன்டி நான் வெளியில் போகனும் என்று போனை வைத்து விட்டாள்.மணிமேகலை அனைவரிடமும் என் பொண்ணும்,பையனும் வெளியூரில் படிக்கின்றார்கள் என்று பெருமையாக சொன்னாள்.என்ன தான் வெளியூரில் இருந்தாலும் நம் பக்கத்தில் இருக்க மாதிரி வருமா என்றாள் கல்பனாவுடன் வந்ததில் ஒருத்தி.ஏன் அப்படி நினைக்க,அவர்களுக்கு அது நல்லது தானே என்றாள் கல்பனா,மணிமேகலை ஆமா ஆமா இரண்டு பேருக்கும் தனியாக இயங்குவதற்கான தைரியம் நிறையவே இருக்கு தற்போது எல்லாம் என்றாள் அவள்.அதுவும் சிக்கல் தானே,நம்மை கேட்க்காமலே முடிவு எடுப்பார்கள் என்றாள் இன்னொருத்தி.நம்மிடம் வளரும் பிள்ளைகள் மட்டும் நம்மிடம் கேட்டா முடிவு எடுக்கின்றார்கள் இல்லையே அவர்கள் இஷ்டத்திற்கு முடிவு எடுக்கின்றார்கள் என்றாள்.

மணிமேகலை.இன்னொரு நாட்டில் தனியாக சமாளித்து,படித்து வருவதே பெரிய விடயம் அதை பாராட்டனும் என்றாள் மறுப்படியும் அவள்.

நேரத்தை பார்த்தாள் பதினொன்று தாண்டியிருந்தது.சரி புறப்படுவோமா என்றாள் கல்பனாவிடம் மணிமேகலை.சரி சரி என்று அனைவரும் புறப்பட்டார்கள். மணிமேகலை பழனியை வரும்படி கூறிவிட்டு தான் வெளியில் வந்தார்கள்.கல்பனா அவள் நண்பர்களுடன் சேர்ந்து போவதாக சொன்னாள்.பழனி வந்து சேர்ந்தான்.மணிமேகலை வாகனத்தில் ஏறிக் கொண்டாள் கல்பனாவிற்கும் மற்ற நண்பர்களும் கையை அசைத்து விட்டு புறப்பட்டாள்.பழனியிடம் எத்தனை மணிக்கு உங்க ஐயா வீட்டுக்கு போனார் என்றாள் அவனிடம்.எட்டு மணிக்கு எல்லாம் போய் விட்டார் அம்மா என்றான் அவன்.இந்த அம்மா என்ன என்னிடம் அவங்க வீட்டுக்காரரை விசாரிக்குது என்று மனதில் நினைத்துக் கொண்டே வாகனத்தை ஓட்டினான்.மணிமேகலை வீடும் வந்து விட்டது அவள் இறங்கி கொண்டாள் வாகனத்தை அவர்கள் வீட்டில் நிறுத்தி விட்டு பேருந்து நிலையத்திற்கு அவசரமாக போனான் பழனி.எத்தனை மணிக்கு வண்டி வருமோ என்ற பதட்டத்துடன் நின்றான் அவன்.சற்று நேரத்தில் வண்டி வந்தது ஏறி வீட்டுக்கு போய் சேரும் போது மணி பன்னிரெண்டு தாண்டியிருந்தது.மெதுவாக கதவை தட்டினான் மனைவி ஜன்னலில் எட்டி பார்த்து விட்டு கதவை திறந்தாள்.கண் கலங்கி இருந்தது ஏன் இவ்வளவு நேரம் என்றாள் அஞ்சலை.வேலை என்றால் அவர்கள் சொன்ன நேரத்திற்கு ஓடனும்.ஏன் நீ பயந்து விட்டீயா என்றான் ஆறுதலாக.ஆமாம் நான் தனியாக இருந்து பழக்கம் இல்லை.அம்மா,அப்பா,தம்பி யாராவது வீட்டில் கூடவே இருப்பார்கள் என்றாள் அவள்.எப்போதுமே தைரியமாக இருக்கனும்.எதற்கும் பயந்து பயந்து இருந்தாலே ஒரு நாளும் நிம்மதியாக வாழமுடியாது என்றான் பழனி.

நீங்கள் இலகுவாக சொல்லுவீங்கள் எனக்கு புது இடம் யாரை பார்த்தாலும் பயமாக இருக்கின்றது என்றாள் அஞ்சலை.என் முதலாளி அம்மாவை பாரு,அவர்களும் தனியாக தான் இருக்கின்றார்கள்.ஐயா லேட் ஆகி தான் வீட்டுக்கே போவார்.அது மட்டும் அந்தம்மா தனியாக அவர்களுக்கு தேவையானதை செய்துக் கொண்டு சந்தோசமாக தான் இருக்கின்றார்கள் என்றான் பழனி.அவர்களுக்கு என்ன பணக்காரர்கள் என்றாள் அஞ்சலை.தைரியத்திற்கு பணக்காரர்கள் பிச்சைகாரர்கள் என்பது எல்லாம் இல்லை.

நீ மாறனும் என்றான் அவன்.சரி நானும் இன்னும் சாப்பிடவில்லை நீங்க உடம்பை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றாள் அஞ்சலை.ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் என்று அதட்டி விட்டு அவசரமாக தண்ணி அள்ளி ஊற்றிக் கொண்டு வந்தான் பழனி.இருவரும் சாப்பிட்டார்கள் கருவாட்டு குழம்புடன் சாதம் சாப்பிட நன்றாகத் தான் இருந்தது.எனக்காக காத்திருக்காமல் நேரத்திற்கு சாப்பிட்டு விடு என்றான் பழனி அஞ்சலையிடம்.அது எப்படி முடியும் நீங்க வந்தப் பிறகு தான் சாப்பிடுவேன் என்றாள் அவள்.

மணிமேகலை தன்னிடம் இருந்த சாவியில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே போனாள்.பாஸ்கரன் ஆழ்ந்த தூக்கம்.லைட்டை போட்டு நைட்டி எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள் அவள்.லைட்டை போட்டவுன் பாஸ்கரனின் தூக்கம் களைந்தது.ஒருத்தன் இரவு தூங்கும் போதும் நிம்மதியாக தூங்க கூட முடியாது என்று மனதில் மணிமேகலையை சபித்துக் கொண்டே பெட்ஷீட்டை தலையோடு இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தான்.மறுப்படி லைட்டை அணைக்கும் மட்டும் பாஸ்கரனுக்கு எரிச்சலாக இருந்தது.மணிமேலை அவசரம் இல்லாம் அவள் வேலைகளை முடித்து லைட்டை அணைத்து விட்டு படுக்கும் போது பாஸ்கரனுக்கு சுத்தமாக தூக்கம் போய்விட்டது.அவள் படுத்தவுடன் தூங்கி போனாள்.அவனுக்கு பழைய நினைவுகள் ஓடியது மணிமேகலை அப்பாவின் நிறுவனமும்,அவன் வேலை செய்த நிறுவனமும் பக்கம் பக்கம் இருந்தது.இரு நிறுவனங்களுக்கும் பொதுவான ஒரு உணவகமே இருந்தது அனைவரும் அங்கு தான் காப்பி சாப்பிட,அரட்டை அடிக்க,பகல் சாப்பிட என்று வந்துப் போவார்கள் அப்படி அங்கு வந்தவள் தான் இந்த மணிமேகலை.கருகருவென்று அடர்த்தியான முடி உதட்டோரத்தில் ஒரு மச்சம்.அளவான மேக்கப் என்று பார்க்க அழகாக இருந்தாள்.அவளின் மிடுக்கான நடை,சுட்டெரிக்கும் கண்கள் அவளை பார்க்கும் அனைவருக்கும் அவளிடம் நெருங்க நினைக்காத தோற்றம் அவளுடையது.

அப்படி இருக்கும் மணிமேகலையை பாஸ்கரனுக்கு பிடித்தது.அவளுக்கு தெரியாமல் அவளை கவனிக்க ஆரம்பித்தான்.விதவிதமான ஆடைகள்,விலை உயர்ந்த கைபைகள் என்று அவள் ஒவ்வொரு நாளும் ஒரு விதமாக வந்து போனதை ரசித்தவன் தான் பாஸ்கரன்.அவளிடம் போய் பாஸ்கரன் மெதுவாக தன் காதலை சொல்லும் போது கூட அவள் ஆச்சிரியப் படவில்லை.நிதானமாக பதில் சொன்னாள்.எனக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை நீங்கள் வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவளின் உறுதியான பேச்சி பாஸ்கரனுக்கு அவள் மீது ஈர்ப்பு அதிகமானது.அவனும் விடாமல் பின் தொடர்ந்தான்.நாட்கள் ஓடியது.மணிமேகலை பாஸ்கரனை தேட ஆரம்பித்தாள்.அவனை ஒரு நாள் காணவில்லை என்றாலும் மனம் அவனை தேட ஆரம்பித்தது.அவன் தன்னை பின் தொடர்வதும் அவளுக்கு பிடித்திருந்தது.இந்த விடயம் மணிமேகலை அப்பாவின் காதுக்கு எட்டியது.அவர் ஆத்திரப் படவில்லை.பாஸ்கரனை அழைத்து கதைத்து விட்டார்.அவனை துடிப்பான பேச்சி,வாழ்க்கையில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற அவனின் தன்னம்பிக்கை அவருக்கு பிடித்திருந்தது.உடனே மகளின் விருப்பத்தையும் தெரிந்துக் கொண்டு திருமணம் செய்து வைத்து விட்டார்.ஆரம்பித்தில் ஓரளவிற்கு நன்றாக தான் வாழ்ந்தார்கள்.போக போக பல பிரச்சினைகள் எட்டிப் பார்த்தது.மணிமேகலையின் பிடிவாதம் பாஸ்கரனைக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.அவன் தனியாக கம்பனி ஆரம்பித்தது முதல் அனைத்திற்கும் மணிமேகலை பிரச்சினை மட்டுமே போட்டாள்.நான் இனி வேலை செய்யப் போவதில்லை என்று ஆரம்பித்த பிரச்சினைகள்,பிள்ளைகளை வெளியில் அனுப்பி தான் படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதத்தில் முடிந்தது என்று சொல்ல முடியாது.

பாஸ்கரனுக்கு பெருமூச்சி வந்தது.திரும்பி படுத்து தூங்க முயற்சி செய்து தூங்கியும் போனான்.விடிந்ததும் அவசரமாக எழுந்து புறப்பட்டான்.தாமதமாக போவது அவனுக்கு எப்போதுமே பிடிக்காது.மணிமேகலை தற்போது எழும்புவதற்கு சந்தர்ப்பம் இல்லை.ராணி சற்று தாமதமாக தான் வருவாள்.காப்பி போட்டு குடிப்பதற்கு அவனுக்கு வெறுப்பாக இருந்தது.போய் கம்பனி கென்டீனில் சாப்பிட்டு காப்பி குடிப்போம் என்று நினைத்துக் கொண்டான்.அப்போது பழனி வந்து காரை துடைப்பது தெரிந்தது யன்னல் வலியாக.

வெளியில் வந்து போவோமா பழனி என்றான் பாஸ்கரன்.போவோம் ஐயா என்றான் அவன்.போகும் வலியில் சாப்பிட்டீயா பழனி என்றான் பாஸ்கரன்,ஆமாம் ஐயா தோசை செய்து சட்னி செய்து வற்புருத்தி சாப்பிட வைத்து அனுப்பியது அஞ்சலை என்றான். குடும்பத்திற்காகவே உழைக்கும் எனக்கு ஒரு காப்பி போட்டு கொடுக்க வீட்டுல் ஆள் இல்லை.மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று மனதில் நினைத்துக் கொண்டவன் முகத்தில் வேதனை கலந்த சிரிப்பு ஒன்று எட்டி பார்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *