மனம்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 4,530
ரொம்ப நாட்களுக்கு பிறகு அன்றைக்கு என் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தது. ஒரு 300, 400 ரூபாய் இருக்கும். 50, 20-ம் கொஞ்சம் இருந்தது. காலையிலேயிருந்தே மனசு சரியில்லாதது போலத்தான் இருந்தேன். நான் வேலைப் பார்க்கும் மெடிக்கல் ஹோல்சேல்ஸ் ஓனர் திட்டினதுனாலவா?.. எப்பவும் திட்டு வாங்கிறது தானே? பின்னே ஒரு வேளை என் நண்பர்கள் ஊரில் இல்லாததா? என்னனு தெரியல. ஆனா ஏதோ வெறுமையாக இருந்ததால் அப்படியே கடைத்தெரு பக்கம் நடக்க ஆரம்பித்தேன். மணி 6, 7 தாண்டியிருக்கும்னு சொல்ல முடியாது அப்படியொரு வெளிச்சம். பைக், கார் ஹாரன் காதை கிழித்துக் கொண்டியிருந்தது. அது ஒரு 10 அடி, 15 அடி ரோடாகத்தான் இருக்கும். சரியாக என்னால அளந்து சொல்ல முடியல. கார், பஸ் ஏதும் நமக்கு பின்னாடி வந்தா நாம ரோட்டிலிருந்து இறங்கித்தான் போக கூடிய அளவு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, இடது புறத்தில் நான்கு, ஐந்து நட்டு வைக்கப்பட்ட நீல நிற டியூப் லைட்டுகள். ஓட்டல் கடைகள் இருப்பதற்கான அடையாளம். பேசாம ஃபுல்லா சாப்பிட்டுட்டு போயி தூங்கிடலாம் பணம்தான் இருக்கே, அப்படியும் தூக்கம் வரலைன்னா, அதுதான் புக்கு இருக்கே… எடுத்துப் படிக்கலாம். புக் என்றதும் எனக்கு ஞாபகம் வந்தது. ம் ஒரு நல்ல புத்தகம் வாங்கலாம் தெளிவான யோசனை பிறந்தது.
கண்கள் சற்று விரிந்து புத்தகக் கடையைத் தேட ஆரம்பித்தது. இதே சைடுல ஒரு புக் ஷாப் இருக்கேன்னு வேகமாக நடந்தேன்.
என் வயதுடைய என் பள்ளி பருவ நண்பன் ஒருவன் பல்சரில் எதிரே வந்து கொண்டிருந்தான். அவன் தலையைச் சற்று சாய்ந்தவாறு இருந்தது. தோள்பட்டையோடு அது சாய்ந்து ஒட்டியிருந்தது. நிச்சயம் அதன் நடுவே ஒரு செல்போன் இருக்கணும், சிரித்துக் கொண்டே என்னைக் கடந்தான். அந்தச் சிரிப்பு எனக்கானதா? இல்லை அந்த செல்போனால வந்ததா? தெரியல. அடிக்கடி அவனை இந்தப் பொசிஷனிலே நான் பார்க்கிறேன். அவன் கடந்து போவதை பார்த்து கொண்டேயிருக்கும் போதுதான் தெரிந்தது நான் புக் ஷாப் அருகே நிற்பது. ரோட்டிலிருந்து சற்று இறங்கி போக வேண்டும்.
ராயல் புக் ஷாப் அதன் வெளியே ஒரு பெரிய கறுப்புக் கலர் இரும்பு ஸ்டாண்டில் ஒரு சில புத்தகங்களும், வார இதழ்களும் மாட்டியிருந்தன. புக் ஷாப் வெளிப்புறம் கண்ணாடியால் பார்டிசன் செய்திருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு புத்தகக்கடை முழுவதுமாக கண்ணாடி வழியே தெரியும். இங்கு கூரியர் சர்வீஸ் உண்டு என்று வெளியே சின்னதாக எழுதியிருந்தார்கள். அதற்கு கீழ் “பேப்பர் போட சிறுவர்கள் தேவை’ சின்னதாக கம்ப்யூட்டரில் எழுதி ஒட்டியிருந்தார்கள்.
போன வாரம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில நிறைய புத்தகம் வாங்கினேன்னு என் நண்பன் பெருமையா பீத்திக்கிட்டது எனக்கு அப்ப அப்ப மனசுல வந்து போய்ட்டே இருந்தது. அதோடு என்னோட ஷெல்பிலேயும் இருந்த புத்தகமெல்லாம் படிச்சு முடிச்சாச்சு இனிமே புதுசா வாங்கினாதான் படிக்க முடியும். கண்ணாடிக் கதவை வெளியே இழுத்து கொண்டு உள்ளே நுழைந்தேன். என்ன வேண்டும் என்பது போல் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு 21-வயது பையன் பார்த்தான். அவன் படிய தலை வாரியிருந்தான் சின்ன மீசை. தாடி டிரிம் செய்தது போல கொஞ்சம் முளைத்திருந்தது. ஏதோ தீவிரமாக கணக்குப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். பக்கத்தில் கால்குலேட்டர்.
“”புக்ஸ் பார்க்கணும்” என்றேன்
அந்த பக்கம் என்று கூறிக்கொண்டே புருவத்தைச் சற்று தூக்கி அவன் பார்வையால் எனக்கு திசை காண்பித்தான்.
“”செருப்பை வெளியே விட்டுடுங்க”
“”ஓ சாரி” என்றேன் … திரும்பாமல் காலை மட்டும் என் முதுகுக்கு பின்னால நீட்டி செருப்பை வெளியே உதறிவிட்டேன்.
அது ஒரு 10-க்கு 10 அளவுடைய சின்னக் கடை. இருந்தாலும் எங்க ஊரில் புத்தகம் வாசிப்பவர்களுக்கு அது ஒரு பெரிய கடைதான். மூன்று புறமும் புத்தகங்களால் அடுக்கப்பட்டு சிமெண்ட் பூசாத செங்கல்கட்டு வீடுபோல இருந்தது.
புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று உரசிக் கொண்டு நின்று கொண்டு இருந்தன. ஒரு சில இடத்தில் ஒவ்வொன்றும் இன்னொரு புத்தகத்தின் மேல் முழுவதுமாக சாய்ந்து படுத்திருந்தன.
அந்த சாய்ந்திருந்த புத்தகத்தை அதை போலவே என் தலையை சாய்த்து படித்தேன். “காதல் மயக்கம்’ என்றிருந்தது.
“ஓ அதான் மயங்கிருக்கோ’
கடைக்கு நடுவே சின்ன ஸ்டாண்டு ஒன்று 5 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. காதல், காமம், கல்வி, சிந்தனை, தொழில்முனைவோர், சுயசரிதை, வரலாறு, கவிதை, கதை, நாவல், ஜோதிடம்.. இப்படி பல வெரைட்டி புத்தகங்கள். ஒரு சில ஆங்கில புத்தகங்களும் இருந்தது. அந்தப் பக்கமே நான் போகவில்லை. நான்கு நல்ல புத்தகங்களை எடுத்தேன், விலையைப் பார்த்தேன். மூடிவிட்டு திரும்ப அதே இடத்திலேயே வெச்சுட்டேன். விலை இரண்டு டிஜிட்ல இருக்கிற மாதிரி தேடினேன். “ரகசிய திருமணப் பொருத்தம் அறிய’ ன்னு ஒரு புக் இருந்தது. வேகமாக எடுத்தேன். சற்று தலையைத் திருப்பி கடைக்காரப் பையனை பார்த்துக் கொண்டேன். என் ராசி, நட்சத்திரத்திற்கு எப்படி போட்டிருப்பார்கள் என்று வேகமாகத் திருப்பினேன். சே டக்ன்னு வரமாட்டேங்குது … ம்கூம் ஒண்ணும் புதுசா போடலன்னு பார்த்துட்டு வெச்சுட்டேன்.
இப்படியே நான் ஒவ்வொன்றா புரட்டிக்கிட்டு இருந்த சத்தம் கேட்டதோ, என்னவோ “”என்ன புக் சார் வேணும்?” என்றான்
சிறுகதைகள், நாவல் உள்ள புக்ஸ்
“”நீங்க நிற்கிறதுக்கு அப்படியே மேல அந்த ரோ- லதான்”
“”சரி பார்க்கிறேன்”
அவன் சொன்ன மாதிரியே அந்த வரிசை முழுக்க தமிழில் சிறந்த சிறுகதைகள் உள்ள புத்தகங்கள் இருந்தன.
பி.எஸ்சி., கெமிஸ்டிரி படிச்சுட்டு மெடிக்கல் ஹோல் சேல்ஸ் வேலை பார்த்தாலும் எனக்குள்ளேயிருந்த தமிழ் ஆர்வம் இப்படி ஏதாவது நல்ல புத்தகம் படிக்க தோன்றத நினைச்சு அப்ப அப்ப பெருமை பட்டுக்குவேன்.
ஜெயகாந்தன், ஜெயமோகன், சுஜாதா…ன்னு இப்படி புத்தகங்கள் நிறையப் படிச்சுருக்கேன். இன்னைக்கும் இது மாதிரி ஒரு நாலு புத்தகத்தைதான் எடுத்து வைத்தேன். என்னுடைய பாக்கெட் பணத்திற்கு அடக்கமாக ஒன்றிரண்டு புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்தேன். இப்போ கையிலே இரண்டு புத்தகங்கள் பக்கம் குறைவாகவே இருந்தது. ஆனா விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இது இரண்டு நைட்டுலேயே முடிஞ்சுடுமே என்று முனங்கிக்கொண்டேன்.
ஜெயகாந்தனின் சிறுகதைகள் புத்தகத்தை திரும்ப வைத்தது. மனசுக்கு கேட்கல மீண்டும் அதை எடுத்தேன்.
இப்போ கை கனத்தது. பணம் லேசானது.
“அத எடுத்துக்கிட்டு இது இரண்டையும் வெச்சுடலாமா? ஊகூம்… இதுவும் வேணும்’ இப்ப யோசனை தாவி தாவி ஓடிக்கொண்டேயிருந்தது குரங்கைப்போல.
இப்போ ஒரு மின்னல் மாதிரி என் மூளையில் ஒரு யோசனை வந்து போனது ஜெயகாந்தன் புக்கை கறுப்புப் பணம் மாதிரி கணக்குல காட்டாம விட்டா என்ன?
இதுவும் ஏதோ ஒரு புத்தகத்தில் ஓர் எழுத்தாளர் புத்தகம் வாங்க காசில்லாமல் திருடி படித்ததை எழுதி வைத்த ஞாபகம் – அவர் காசில்லாமல் தான் திருடி படித்தார், நம்மகிட்டதான் காசு இருக்கே? அதுக்கு அடக்கமா வாங்கினா என்ன? அடுத்த ஒரு கேள்வி.
எவ்வளோ புக் இருக்கு ஒண்ணு எடுத்தா என்ன? அதுதான் இரண்டு புக் வாங்குறோம்ல,
இரண்டு வாங்கினா ஒன்று ப்ரி பை டூ கெட் ஒன்
எப்படிக் கொண்டு போவது? என்று யோசித்தேன். அந்த கடைக்கு நடுவேயிருந்த அந்த 5 அடி ஸ்டாண்டு எனக்கும் கடைக்காரனுக்கும் இடையே மறைப்பாக ஏற்பட்டிருந்தது. இந்த திரை கூட என்னைத் திருட தயார் படுத்தியது.
அன்னைக்கு சட்டையை “டக்’ செய்யாமலிருந்தேன். இதை இங்கு வைக்கிறதை விட வேற இடம் கிடைக்காது என்று சட்டையை தூக்கி உள்ளே பேன்ட்க்கும் இடுப்புக்கும் நடுவே அந்த கடையில் நிறுத்தியிருந்தது போலவே அதை நிறுத்தினேன்.
இஇபய காமிரா ஏதும் வைத்திருப்பார்களோ? என்று கடையின் நான்கு மேல் மூளையிலும் பார்த்தேன். அங்கே கவுண்டரில் ஏதும் டி.வி. இருக்கிறதா? என்றும் பார்த்தேன். ஒரு வேளை காமிரா வைத்திருந்தாலும் அதன் டிஸ்ப்ளே டிவியில் தெரியுற மாதிரி வைத்திருப்பார்களே… இப்பல்லாம் சின்ன சின்ன ஓட்டலில் கூட இப்போ காமிரா வைத்து டிவில டிஸ்ப்ளே செய்து கேஷ் கவுண்டர்ல நிறுத்தியிருப்பாங்க. சாப்பிடறது, கை கழுவுறது, ஏன் பணத்தை கல்லாவுல வாங்கி போடறவுக கூட அதுல தெரியுமே பணத்தை போட்டுட்டு அவரே அதுல தெரியுரோமான்னு பார்த்துக்குவாரு. இதெல்லாம் என் மூளையில ஒரு செகண்டுல வந்து போனது. இப்படி யோசிச்சுட்டு இருந்தாலும் என் கை என் மூளை செகண்டுல பல ஞாபகத்தை கொண்டு வந்ததைவிட வேகமாக புத்தகத்தை மறைச்சிட்டு இருந்தது.
புத்தகத்தோட கால் இஞ்ச் மட்டும் தான் பேன்ட்டுக்குள் போயிருந்தது முக்கால் பாகம் மேலே துருத்திக் கொண்டு சட்டைக்கு வெளியே தள்ளிக் கொண்டு தெரிந்தது. அதைச் சற்று சமப்படுத்துவது போல வயிறை கொஞ்சம் உள்ளே இழுத்துக் கொண்டேன். கொஞ்சமாகத்தான் மறைந்தது. இன்னும் சற்று துருத்திக் கொண்டேயிருந்தது. இன்னைக்கு மதிய சாப்பாடு கொஞ்சம் நிறைய சாப்பிட்டதோட விளைவு. இப்படி இடம் கிடைக்க மாட்டேங்குது. என்ன செய்வது என்று யோசித்து புத்தகத்தை இன்னும் கால் இஞ்ச் பேன்ட்டுக்குள் தள்ளினேன். இதற்குமேல் தள்ள வழியில்லை என்று உறுதிப்படுத்தி கொண்டேன்.
இழுத்து வயிறை உள்ளே தள்ளியவாறே அந்த இரண்டு புத்தகத்தோடு கடைப் பையனிடம் சென்றேன். அவன் வாங்கி ஒரு சிரிப்போடு அதை வாங்கிப் பார்த்தான்.
“”நல்ல புத்தகம் எடுத்திருக்கீங்க சார். இரண்டுமே படிக்க நல்லாயிருக்கும்”
“”நான் ரொம்ப நேரம் இங்க நின்னுட்டு இருந்த நல்லாயிருக்காது நீ பில்ல போடு எடத்த சீக்கிரம் காலி பண்ணும்” – முனங்கிக் கொண்டேன்.
“”சார் 320-ரூபாய் – 300 ரூபாய் கொடுங்க”
பணத்தைத் கொடுத்து பில்லை வாங்கிக் கொண்டு வேகமாகக் கடையை விட்டு இறங்கினேன். சற்று நடையை வேகப்படுத்தினேன். கடைக்கு நேர் எதிரே இரண்டு பேர். ஒருவன் நடுவில் நிறுத்தியிருந்த பைக் சீட்டு மீது ஒரு காலை தூக்கி வைத்திருந்தான். இன்னொருவன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். இருவரும் என்னைப்பார்த்து ஏதோ பேசுவது போல தெரிந்தது.
“ஐய்யோ நான் திருடினதைப் பார்த்துட்டாங்களா?’ மனம் படபடப்புடன் அந்த இடத்திலிருந்து அவர்கள் பார்வையை விட்டு சற்று விலகினேன். இப்போது பார்த்தேன் அவர்களுடைய பார்வை அந்த புக் கடையை நோக்கியிருந்தது. நானும் என்ன அப்படி பார்க்கிறார்கள் என்பது போல அந்த கடைப்பக்கம் திரும்பினேன். அங்கு ஓர் அழகான பெண் ஒருத்தி புத்தகக்கடைக்குள் நின்றிருந்தாள்.
சே…இதைதான் ரசிக்கிறாங்களா. கொஞ்ச நேரத்துல பயந்துட்டோமே… நாம அந்த பொண்ண கவனிக்கல இப்ப எனக்கு அந்த காட்சி தேவையில்லாததாக இருந்தது. இப்படி திருடிட்டோமே மாட்டியிருந்தா எவளோ அசிங்கமாயிருக்கும்? இருக்கிற காசுக்கு வாங்கியிருக்கலாம் இல்ல. கொஞ்சம் காசு குறைக்க சொல்லியிருக்கலாம். அப்படிக் குறைக்கச் சொன்னா பண்ணியிருப்பானே அவன்.
திருட்டுப் பொருள் நிக்காதுனு சொல்வாங்களே? அப்போ இந்த புத்தகம் நம்மட்ட இருக்காதோ? இலக்கியத்தின் மேலுள்ள காதலா? ஜெயகாந்தன் மேலுள்ள வெறியா? ஏன் இப்படி திருடினேன்?
“சே மனசு சரியில்லனு தானே கடைத் தெருப்பக்கம் வந்தேன். இப்போ ரொம்ப மோசமாயிடுச்சே… சே… என்ன மனசு? குரங்கு மனசு சூப்பரா தாவுது’.
அப்போ நான் அந்த கடையை விட்டு நான்கு கடை தள்ளி வந்து நின்று கொண்டிருந்தேன். என் யோசனையைக் கலைத்ததுபோல் என்னை உரசிக் கொண்டு ஒருவர் டிவிஎஸ் எக்சலில் போனார். அந்த வண்டியின் முன் காலியிடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைத்து கட்டியிருந்தது. பேலன்ஸ் பண்ண முடியாமல் தான் என்னை உரசியிருப்பார்னு நான் ஊகித்துக் கொண்டேன். அந்த வண்டி அதே புத்தகக்கடைக்கு நேராகப் போய் நின்றது. ஒரு பெரிய ஹாரன் விரலை எடுக்காமல் கொடுத்துக் கொண்டேயிருந்தார். உள்ளே தான் ஓர் அழகான பொண்ணு புக் வாங்க வந்திருக்கே. அவன் எப்படி இந்த ஹாரனைக் கவனிப்பான்னு நான் நினைத்துக் கொண்டே பார்த்தேன். உள்ளேயிருந்து வேகமாக ஓடி வந்த அந்த பையன் அந்த வண்டிக்காரரை மிக பவ்யமாக வணங்கி அந்தப் புத்தகப் பார்சலோடு வண்டியை பிடித்துக் கொள்ள, அந்த நபர் மெதுவாக ஒரு காலை தாங்கித் தாங்கி நடந்தார். அவர் ஊனமுற்றவராக இருக்கக் கூடும்.
நான் பலமுறை இந்த கடையைத் தாண்டி செல்லும் போது உள்ளே அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சற்று சிவப்பு நிறம்.. பெரிய மீசை முன் தலை கொஞ்சம் முடி கொட்டியிருக்கும். ஓரு மூக்கு கண்ணாடியும் போட்டிருந்தார். வலது கால் நன்றாகியிருந்தது. இன்னொரு கால் எந்த சலனமும் இல்லாமல் வேறுதிசையில் திரும்பியிருந்தது. இடது கையை அந்த காலின் முட்டியில் அழுத்தியவாறு நடந்தார். என் இதயத்தில் யாரோ அழுத்தியது போல வலி சட்டென ஏற்பட்டது. மனசு சுட்டது. “சே எவ்ளோ கஷ்டப்பட்டு புத்தகங்கள் வாங்கிட்டு வந்து விற்கிறார். நாம இவளோ கேவலமான வேலைப் பார்த்துட்டோமே. கொண்டு போயி வெச்சுடலாம். ஒரு வேளை வெக்கிறபோது மாட்டிகிட்டா? திருடினதை திரும்ப வெக்கிறபோது மாட்டிடுவாங்கனு சொல்வாங்களே என்ன செய்வது?
ரொம்ப குழம்பி போனேன். பக்கத்தில ஒரு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. சே என்னைப் பார்க்கையிலே கேவலமா தெரியுதுன்னு திரும்பிக் கொண்டேன். பாக்கெட்டைப் பார்த்தேன் 160 ரூபாய் இருந்தது. திருடின அந்த புக்கின் விலை 200 ரூபாய். என்ன பண்றது? புக்கைத் திருப்பிக் கொடுத்திடலாமா? இல்ல புக்குக்கு உண்டான பணத்தை கொடுத்திடலாமா? புக்கை கொடுத்தா, அந்த பையன் இருப்பானே? என்ன நினைப்பான்? கூட ஒரு அழகான பொண்ணு வேற உள்ளேயிருக்கே… சரி புக்குக்கு உண்டான பணத்தை கொடுத்திடலாம் என் மனசு சரியான முடிவுக்கு வந்தது. பணத்தை எப்படிக் கொடுப்பது? அந்த ஓனர்கிட்ட தனியா கொடுக்கலாமா? அந்தப் பையன் பில் போட மறந்துட்டான்னு சொல்லிடலாமா. சே அப்புறம் அந்த பையன இனி நம்ப மாட்டாரே? அவனை நம்பிக் கடைய விடமாட்டாரே. டேபிள் மேல பணத்தை வெச்சுடலாமா? ம்.. இது தான் சரியான முடிவு… என்று எண்ணி வேகமாக கடைக்கு அருகே சென்று நின்று கொண்டேன்.
என் பாக்கெட்டிலிருந்து எல்லா நோட்டையும் கையில் எடுத்து சுருட்டி வைத்துக் கொண்டேன். மெதுவாக கடைக்குள்ளே சென்றேன்.
“”என்ன சார் வேறேதும் புக்கா? அந்த பையன் கேட்டான். கூடவே அந்த ஓனரும் என்னை பார்த்தார்.
“”ஆமா வேற புக் பார்க்கலாம்னு”
“”டே சாருக்கு இப்ப வந்திருக்கிற புக்கெல்லாம் காட்டு” என்று அந்த ஓனர் இப்போது என்னிடம் பேசினார்.
நான் வேறொரு பக்கம் திரும்பி பார்ப்பது போல பார்த்துக் கொண்டே என் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை டேபிளுக்குக் கீழே வீசினேன். இப்போ வீசிய இடத்தைப் பார்த்தேன் அங்கு நான் வீசிய இடத்தில் ரூபாய் நோட்டுகளைக் காணவில்லை. அடடா ரொம்ப வேகமாக போட்டுவிட்டேனா? எங்க ஓடினதுனு தெரியலையே என்று நினைத்துக் கொண்டே வேகமாகக் கடையை விட்டு வெளியே வந்தேன்.
“”சார் சார்” என்று என்னை கூப்பிட்டுக் கொண்டே காலை கெந்தி கெந்தி அந்த ஓனர் வந்தார்.
“”உங்க பணம்னு நினைக்கிறேன் உங்க காலுக்கு பின்னாடி கெடந்துச்சு இந்தாங்க” இப்போ இதயம் சற்று நின்று விட்டு துடித்தது.
“”இல்ல சார் அது என்னோடது இல்ல. நான் கொண்டு வந்த எல்லா பணத்துக்கும் புக் தம்பிகிட்டதான் வாங்கினேன். அது உங்க பணம் தான். உங்களுக்குத் தெரியாம விழுந்திருக்கும். கவனிச்சிருக்க மாட்டிங்க” என்று சொல்லிட்டு நகர்ந்தேன்.
“”ம் யாரோ விட்டுட்டாங்க போல” என்று தனக்குதானே சொல்லி கொண்டு மெதுவாகக் காலை வைத்து உள்ளே போனார் அந்த கடை ஓனர்.
ஏதோ மனது பாதி திருப்தியடைந்துவிட்டது போல நான் நடக்க ஆரம்பித்தேன்
– மார்ச் 2014