மனம் மாறிற்று




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சுந்தரம், என்ன இருந்தாலும் உன் மாமனார் சொல் வது ரொம்ப சரி. அவர் உயர்ந்த அந்தஸ்தில் பட்டணத்தில் இருக்கும்போது, நீ தனியாக வாடகைக்கு அறை எடுத்துக்கொண் டிருப்பது பிசகுதான். அவருக்கு நீ அருமையாக ஒரே மாப்பிள்ளை. நீ தனியாக இருப்ப தென்றால் அவருக்கு என்னமாய் இருக்கும் ? ஊராருந் தான் என்ன நினைப்பார்கள் ?” என்றாள் அவன் தாய்.
“இல்லை அம்மா, எனக்கென்னவோ அது பிடிக்க வில்லை. ஒருத்தர் வீட்டில் எதற்காகப் போய் இருப்பது என்றுதான் தோன்றுகிறது. நெருங்கிப் பழகினால் அலட் சியம் தோன்றிவிடும்.”
“மாமனார் வீடு ஒருவர் வீடா ! கூடவே இருந்தால் யாருக்கு அலட்சியம் ஏற்படும் ? வெகு அழகு நீ பேசுவது. வேட்டகத்திற்குப் போகப் பிள்ளைகள் துடித்துக்கொண் டிருப்பார்கள். உன் தினுசு எதிலும் தனி. அது எதுவா னாலும், இவ்வளவு நாள் உன்னை ஹாஸ்டலில் விட்டுக் கண்ட சோறு உனக்கு ஒத்துக்கொள்ள வேணுமே என்று நானும் உன் அப்பாவும் பட்ட விசாரம் கொஞ்ச மில்லை. எங்களுக்குப் பட்டணத்தில் குடித்தனம் போட வகையிருக்கிறதா ? அதுவும் இல்லை. கண்டபடி பிள் ளையை விட்டுக் கவலையற்று இருப்பதற்கு ஒவ்வொருத் தரைப்போலப் பத்தெட்டுத்தான் நான் பத்தெட்டுத்தான் நான் பெற்றேனா? அதுவும் இல்லை. ‘ஏதோ பகவான் கொடுத்த பிச்சை, நமக்கு ஒரே பிள்ளை. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று. அவனையும் படிப்பு படிப்பு என்று இவர் இப் படிச்சோத்துக்கு அலைய வீட்டுவிட்டாரே. நாம் இங்கே வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோமே என்று நான் பட்ட விசாரம் அந்தப் பகவானுக்குத்தான் தெரியும். ஏதோ நீ ஊருக்கே ஒசத்தியாகப் பாஸ் பண் ணின சந்தோஷம் எல்லாக் கஷ்டத்தையும் மறக்க வைத்தது. பெரியவாள் புண்ணியத்தில் உனக்கு நல்ல இடத் தில் பெண் கிடைத்தது. மாமனாரும் உன்னை வருந்தி அழைக்கிறார். ஆட்சேபணை ஏதும் சொல்லாமல் போய் இரு. வெந்ததும் வேகாததும் சாப்பிட்டு எங்கே உன் உடம்பு கெட்டுப் போகிறதோ என்று நான் கவலைப் படாமல் இருப்பேன்” என்று அவன் தாய் ஒரு பெரிய பிரசங்கம் செய்து, “என்ன, நீங்கள் சொல்லுங்கள் ” என்று தன் கணவனையும் அவனுக்குப் புத்தி சொல்லும் படி கேட்டாள். அவரும், அவள் சொல்லை முழுதும் ஆமோதித்ததோடு நில்லாமல், “உன் பிள்ளை போக்கே அலாதி. அழகும் அந்தஸ்துமாகப் பெண்டாட்டி கிடைக் கும்போது கல்யாணம் செய்துகொள்ள இவனுக்குச் சிபாரிசு வேண்டியிருக்கவில்லையா ? அதுபோலத்தான். போடா போ, அவர் அவ்வளவு வருந்தி அழைக்கும் பொழுது நம் மரியாதையை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா? மாட்டேன் என்றால் நன்றாய் இருக்குமா? பேசாமல் போய் அவரோடு இருக்க வேண்டியதுதான் என்று கண்டிப்பாய்க் கூறிவிட்டார்.
பிள்ளைகள் வேட்டகத்திற்குப் போக ஆசைப்படு வதும் பெற்றோர் மறுப்பதுந்தான் உலகில் சகஜம். அது சுந்தரத்தின் விஷயத்தில் மட்டும் மாறி இருந்தது. அதற் குக் காரணம், பணக்காரர்களிடத்தில் அவனுக்கு ஏற்பட் டிருந்த காரணமற்ற வெறுப்புத்தான். ‘அவர்கள், கர்வ மும் ஆடம்பரமும் தலைக்கேறியவர்கள் என்பதாக அவர் களை ஒரு தனிப்பட்ட ஜாதியாராக விலக்கி வைத்திருந் தான். தான் பணக்காரன் அல்ல என்பதனால், அவர்களுக் குத் தன்னிடம் மதிப்பே இராது. கூடவே வசித்தால் பின்னும் இளப்பமாகி விடுவோம்’ என்று நினைத்துத்தான் மாமனாரோடு வசிக்க அவன் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவன் பெற்றோர் அவ்வாறு நினைக்கவில்லை. இது அவனது மனக்கற்பனை என்று தள்ளிவிட்டார்கள். அவன் வேட்டகத்தில் இருந்தால், சாப்பாட்டு விஷயத்தில் அவ னுக்குக் குறைவில்லை என்ற திருப்தி அவர்களுக்கு உண் டாகும். அந்தத் திருப்தியை அவர்கள் அடையும்படி செய்வது அவன் கடமை அல்லவா?
அவன் தகப்பனார் சொல்லிக் காண்பித்தது போல், இந்தக்கல்யாணத்திற்கே அவனுக்குப் பலத்த ஆட்சேபணை இருந்தது உண்மையே. மாகாணத்துக்கே முதலாவதாகத் தான் தேறாவிட்டால் தனவந்தரான சந்திர சேகர சர்மா தனக்குப் பெண் கொடுக்க முன்வருவாரா?’ என்பது அவன் சொன்ன ஆட்சேபங்களுள் ஒன்று. தன வந்தர் பெண்ணை மணப்பதனால், சுதந்தரத்தை இழப்ப தோடு, மனைவிக்கும் அடிமையாக வேண்டிவரும் என்பது மற்றொன்று. இப்படியாகப் பல ஆட்சேபணைகள் அவ னுக்குத் தோன்றின. ஆனால் உலக அனுபவம் வாய்ந்த அவன் பெற்றோர் தங்களுக்குக் கிடைக்க இருக்கும் பாக்கி யத்தை இழக்கச் சம்மதிக்கவில்லை. அதுவும், சந்திர சேகர சர்மாவைப் போன்ற கொழுத்த பணக்காரர் தங் கள் பிள்ளைக்குப் பெண் கொடுக்க வலிய வரும்போது, அதை மறுக்கும் தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? ஆகவே, சுந்தரம் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியவனானான். பிறகு மனைவியின் அழகிய உருவம் அவனையும் அறியாமல் அவன் இருதயத்தில் இடம்பெற்று விட்டதென்பதை அவன் எங்கு ஒப்புக்கொள்ளப் போகிறான்?
அவன் பி. ஏ. ஆனர்ஸில் சம்ஸ்கிருதத்தில் மாகாணத் துக்கே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தான். அவனுக்குப் ‘புரொபஸர்’ வேலையில் மிகுந்த ஆசை இருந்தது. உலகத் தொண்டைச் சேர்ந்த வேலை என்றே அதைக் கருதி யிருந்தான்.
மாகாணத்துக்கே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றிருந் தும் ‘புரொபஸர்’ வேலை ஒன்றும் எளிதில் கிடைப்பதாக இல்லை. வேலை ஏ தாவது கிடைக்கும் வரையில் அவன் சட்ட கலாசாலையில் சேர்ந்து படிப்பது என்று ஏற்பாடாயிற்று. அவன் மனைவி சுகன்யையின் காலேஜுப் படிப்பு இன்னும் முடியவில்லை. பலத்த விவாதத்துக்குப் பிறகு அவன் தன் மாமனார் வீடு சென்று வசித்தான். ஆனால் அங்கே சங் தோஷமாயிருக்க அவனால் என்னவோ சாத்தியமாகவில்லை. இவர்கள் கண்களில் நாம் பல குறைகளை உடையவர் களாகத் தோன்றுகிறோம்’ என்று மனம் கற்பித்தது. அந்தக் குறைகளைக் குறைகளாகவே அவன் நினைத்துக் கொண்டான். அவன் கல்யாணத்துக்கு முன் அந்தக் குறைகள் ஒருபோதும் அவனுக்குத் தோன்றினதே இல்லை. இப்பொழுது மட்டும் தோன்றுவானேன்?
அவன் மாமனார் சந்திரசேகர சர்மா அவன் மனம் இருந்த நிலையை ஒருவாறு சீக்கிரமே ஊகித்துக் கொண்டார். ஆனால் அவர் அதை மாற்ற நினைத்துச் செய்த வழி தான் சரியில்லாமல் போயிற்று. அவன் சந்தோஷம் அடைய வேண்டும் என்றெண்ணி நிறையப்பொருள் செலவு செய்து அவர் அவனுக்குப் பரிசுகள் வாங்கி வழங்கினார். அது அவர், தம் பணப் பெருமையைத் தன்னிடம் காட்டு வதாக அவனுக்குத் தோன்றிற்று. அவற்றைப் பெற்றுக் கொள்ளவே அவன் மறுத்தான். அது அவர் மனத்தைப் பெரிதும் வருத்திற்று.
“பணக்காரப் பிள்ளைகள் கூடாதென்று பெண்ணைக் கொண்டுபோய் எங்கோ தள்ளினீர்களே ! இப்பொழுது பாருங்கள். அவனுக்கு உங்கள் அன்பையே அறிந்து கொள்ள முடியவில்லை. நம் பெண்ணின் அருமையை மட்டும் எங்கே தெரிந்துகொள்ளப் போகிறான் ?” என்று சொல்லி, அவர் மனைவி, பணக்கார மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்காததற்கு அவரை இடித்துக் கூறி அவர் வேதனையை அதிகப்படுத்துவாள். ‘ஒரு கெடுதலைத் தவிர்க்க எண்ணி இன்னொன்றை ஏற்றுக்கொண்டுவிட்டோமே’ என்று கவலை கொண்டார் அவர். பணக்காரப் பிள்ளை களிடம் நவீன நாகரிக மோகத்தால் உண்டான கெட்ட பழக்கங்கள் அவருக்கு அடியோடு பிடிக்கவில்லை. தம்பதி களின் சந்தோஷ வாழ்க்கைக்கே அவை கெடுதலாக முடியுமென்று நினைத்தார். ஏழைப் பிள்ளைகளிடத்தில் நல்லொழுக்கத்தை அதிகம் எதிர்பார்க்கலாம் என்பது அவர் எண்ணம். அந்த எண்ணத்திற்கு இணங்க, சுந்தரம் உத்தமமான பிள்ளையென்று ஹாஸ்டலில் பெயர் வாங்கி யிருந்தான். வடமொழியில் மாகாணத்தில் முதலாக வும் தேர்ச்சி பெற்றிருந்தான். உத்தியோகத்துக்காக முக்கியமாக ஆங்கிலப் படிப்பே படித்த சர்மா இப் பொழுது சிறிது காலமாகத்தான் சம்ஸ்கிருத கிரந்தங் களிலுள்ள எவ்வளவோ அருமையான விஷயங்களைப் புதையல்போலக் கண்டு அனுபவித்து வந்தார். சம்ஸ் கிருத மோகத்தில் அவர் படித்த புத்தகங்களுக்கும் கேட்ட கதைகளுக்கும் கணக்கே இல்லை. அப்படி அவர் மகா பாரதத்திலுள்ள சியவனோபாக்கியானம் என்னும் கதை யைக் கேட்ட ஓர் இரவுதான் அவருக்கு ஒரு பெண் பிறந்தாள். அதிலிருந்து அக் குழந்தைக்குச் சுகன்யை என்ற பெயரே பொருந்துமென்று அவர் தீர்மானித்து விட்டார். அழகிய பெயர்களைத் தாங்கி நிற்கும் அவ லட்சணமான பெண்களைப் போலல்லாமல், அப்பெயர் சுகன்யைக்கு முற்றும் பொருந்தியிருந்தது. அழகும் குணமும் ஒருங்கே அமையப் பெற்று விளங்கினாள் அவள். படிப்பிலும் அதிகப் புத்திசாலி என்று பள்ளியிலும் வீட்டிலும் பெயரெடுத்தாள். அவளுக்குப் பின் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் குழந்தைப் பருவத்தி லேயே இறந்துபோகவே, இவளும் ராஜகுமாரியாகிய சுகன்யையைப் போலவே, தாய்தந்தையருக்கு அருமை யான ஒரே மகளாகிவிட்டாள்.
பெண்ணுக்கு வரன் தேடத்தான் தந்தை மிகவும் சிரமப்பட்டுப் போனார். சாதாரணமான பெண்ணைப் பெற்ற தந்தைகளே தம் பெண்ணை ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கக் கஷ்டப்படும்போது, சுகன்யை போலச் சகல குணமும் பொருந்திய பெண்ணைப் பெற்ற தந்தையைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா ?
சுந்தரத்தைக் கண்டபோது சர்மா வெகு சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். ஏன்? ஹாஸ்டலில் அவன் நன்னடக்கையும், சம்ஸ்கிருத மொழியில் அவனுக்கு இருந்த அறிவும் அவன் பணக்காரனாக இல்லாதிருந்ததுமே அதற்குக் காரணமாயின. பெண்கள் விரும்பும் பேரழகு அவ்வளவாக அவனுக்கு இல்லையே என்று அவர் சிறிது தயங்கினார். ஆனால், அவர் மகள் சுகன்யை, அப்பா, புருஷர்களுக்கு அழகா முக்கியம்? படிப்பும் குணமுமல்ல வா பெரிது?” என்று சமாதானம் கூறிவிட்டாள். ‘டெஸ்டி மோனா ஒதெல்லோவை எதற்காக மணந்தாள்? ரூபத் திற்காக அல்லவே!’ என்று அவள் மனம் தானே சொல் லிக்கொண்டது. இப்போது கலாசாலையில் ஷேக்ஸ்பிய நாடகங்களை அவள் கொஞ்சம் படிக்கிறாளல்லவா? அவளுக்கு இருந்த புத்தகப் படிப்பு மோகத்தில், தன் வாழ்க்கையையும் அதுபோலச் சித்திரித்துக்கொள்வதில் அவளுக்கு மிகுந்த ஆசைதான். அப்படியும் அவள் பெரிய தியாகம் ஒன்றும் செய்துவிடவில்லை. அவளுக்கு வரும் கணவன் அதிக அழகில்லையே தவிர, ஒரே அவலட்சண மானவனல்ல. சுகன்யையின் தாய்க்கு மட்டும் மாப்பிள்ளை பணக்காரனல்ல என்பதில் சிறிது வருத்தமே தவிர, மற்றப்படி அவர்களுக்கு இந்தக் கல்யாணத்தில் முழுதும் சந்தோஷந்தான்.
இப்போது சுந்தரத்தின் போக்கு அவர்களுக்கு ஒன் றும் புரியாமல் இருந்தது. அவன் தன் மனைவியுடன் இக்காலத்து வாலிபர்களைப் போல வெளிப்படையாக அன்பு காட்டி நடந்துகொள்ளவில்லை. அது சுகன்யையின் பெற்றோரைப் பின்னும் கவலைக்குள்ளாக்கியது. பலர் முன்னிலையிலே புதுத் தம்பதிகள் சரசமாக நடந்துகொள் வதைத் தன் கணவன் விரும்பவில்லை என்பதைச் சுகன்யை விரைவில் கண்டுகொண்டாள். அப்படி நடந்துகொள்ளு வது அவளுக்கே பிடிக்காது. அவள் இதை அவனிடம் சொன்னபொழுது அவன் அவளை நம்பவில்லை. அதுதான் அவளுக்கு வருத்தத்தையும் வேதனையையும் அளித்தது. அவள் அவன் மனக் குறிப்பைத் தெரிந்துகொள்ளும் பொழுது, அவன் மட்டும் ஏன் அவள் வெளிப்படையாகச் சொல்லியும் நம்புவதாக இல்லை? இதற்குக் காரணம் என்ன என்று யோசித்தும் அவளுக்குப் புலப்படவில்லை.
தவிர, ஆடவர்களுக்கு அழகு முக்கியமல்ல என்று சுகன்யை பேச்சுவாக்கில் சொன்னதைச் சந்திரசேகர சர்மா தம் பெண்ணின் பெருமைக்கு எடுத்துக் காட் டென்று நினைக்கும்படி சுந்தரத்திடம் கூறிவிட்டார். கபடமற்ற அந்தச் சொற்கள் விபரீதப் பயனைத்தான் அளித்தன. சுகன்யை தன் கணவனும் தானும் இருக் கப் போவது பற்றிக் கற்பனையுலகில் கட்டியிருந்த இன்ப மாளிகைகளை அவை நொடியில் தகர்த்தெறிந்து விட்டன. அவனுக்கு அழகில்லை, பொருளுமில்லை. அவனை மணந்ததில் சுகன்யை மகத்தான தியாகம் செய்திருக் கிறாள் ; அல்லது தியாகம் செய்திருப்பதாக நினைக்கிறாள். இவ்வாறு அவன் எண்ணினான். பிறகு கேட்க வேண்டுமா? சுந்தரத்துக்கு மனை வியின் பேரிலேயே பிசகுகள் தோன்ற ஆரம்பித்தன.
ஒரு நண்பர் வீட்டு விருந்திற்கு அவர்கள் எல்லோரும் சென்றனர். சுகன்யை மெல்லிய ஜார்ஜெட் புடைவை உடுத்துக்கொண்டு கிளம்பினாள். சுந்தரத்துக்கு அதைக் காணும்போதே வெறுப்பாக இருந்தது. அதைத் தெரிந்து கொண்ட சுகன்யை, வீடுவந்த பிறகு, அவனிடம், உங்களுக்கு ஜார்ஜெட் புடைவை பிடிக்கவில்லையா? அப்படி யானால் இனி நான் அதை ஒருபோதும் கட்டிக்கொள்ள வில்லை” என்றாள். இந்த வார்த்தைகள் அவனைச் சந் தோஷப்படுத்துமென்று நம்பியே அவள் சொன்னாள். எனக்காகத்தானா அவ்வளவு மெல்லிய புடைவை உடுத்துவது பிசகென்று உனக்கே தோன்றவில்லையா ?” என்று அவள் மேலேயே பாய்ந்தான். அந்தச் சொற்கள் அவள் கற்புணர்ச்சிக்கே ஒரு குற்றச்சாட்டாகப் பட் டன. அவளுக்குப் பொறுக்க முடியாத துக்கமும் கோப மும் பொங்கி வந்தன. ஆனால், அவள் பேசாமலிருக்க முடிந்ததே தவிரத் தன் மனக் கசப்பை வெளியிட முடிய வில்லை. அவள் கலாசாலையில் படிக்கும் நாகரிகப் பெண் தான். ஆனாலும், பெற்றோர் அவளை வளர்த்திருந்த முறை யினால், கணவனை எதிர்த்துப் பேசுவது என்பது அவளுக்குச் சாத்தியமில்லை.
இப்படியே தினமும் ஏதாவது ஒரு சிறு வேற்றுமை அவர்களுக்குள் கிளம்பிக்கொண்டே இருந்தது. முதலில் சிறிதாக இருக்கும்; அதுவே பெரிதாகிவிடும். சுந்தரம் தனக்கு இது பிடிக்கவில்லை என்று முதலிலேயே சொல்லி விட்டால், இந்த மாதிரிச் சங்கடம் நேர்வதற்கு இடமே இராது. அவனுடைய இஷ்டம்போல் நடப்பதைத்தான் சுகன்யை விரும்பினாள். அவனோ முதலில் ஒன்றும் சொல்வதில்லை; எல்லாம் ஆன பிறகு குற்றம் கண்டு பிடித்துத் தன் வெறுப்பைக் காட்டுவதே அவனுக்கு வழக்கமாகப் போயிற்று. ‘வேண்டுமென்று செய்த குற்ற மல்லவே’ என்று அவள் வருந்துவாள். ‘இது குற்ற மென்றே தெரியாத விஷயங்களில் இவருடைய மனத் துக்குள் புகுந்து அறிய முடியுமா?” என்று பொருமி அழும்பொழுது, அவன் அவள் செயலை நீலிச் செயலென்று எண்ணுவான். அதைக் குறிப்பாகவும் வெளி யிடுவான். “உன் சிவந்த கண்களைக் கண்டு உன் பெற்றோர் நான் உன்னைத் துன்புறுத்துவதாக நினைத்துக் கொள்வார்கள் என்று கோபிப்பான். அவள் என்ன செய்வாள், பாவம்! புத்தகங்களில்தான் ஸ்திரீகளின் கண்ணீரைப் புருஷர்கள் காணச் சகிக்க முடியாது போலும்!
அன்று அவள் கலாசாலையில் நாடகம் நடக்க இருந் தது. முன்னெல்லாம் அவள, கதாநாயகன், நாயகி வேஷத் துக்குக் குறைந்து நடித்ததில்லை ; அவளுக்கு நடிப்பதில் அவ்வளவு விருப்பம். இப்போது அவள், தன் கணவனை உத்தேசித்து, அதில் கலந்துகொள்ளவே சம்மதிக்கவில்லை. அவன் மனந்தான் விபரீதமாய் இருக்கிறதே ! தன் விருப் பையோ வெறுப்பையோ அவன் முன்கூட்டி வெளியிடுவ தும் இல்லையே ! அவள் தோழிகள் உபாத்தியாயினிகள் வற்புறுத்தலின்பேரில், ஒரு சிறிய பாத்திரமாக நடிக்க அவள் இசையும்படி ஆயிற்று. நாடகம் பார்க்கத் தன் கணவனைத் தன்னோடு வரும்படி அவள் வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அவன் அதற்குக் கடைசி வரையில் யாதோர் ஆட்சேபமும் சொல்லவில்லை. அதனால் அவன் வருவானென்றே அவள் நம்பினாள். ஆனால், அன்று அவள் புறப்படுவதற்கு முன்பே, அவன் வேறெங்கோ செல்லத் தயாரானான். அதைக் கண்ட சுகன்யை, “நீங்கள் என்னுடன் வரவில்லையா?” என்று ஆவலாய்க் கேட் டாள். இல்லை” என்று சுந்தரம் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். “நீங்கள் வரப்போவதாக அல்லவோ நான் நினைத்திருக்கிறேன்? அப்படித்தான் கலாசாலையில் எல்லாரிடமும் சொல்லியும் இருக்கிறேன்” என்றாள். தனக்காக இல்லாவிட்டாலும், அவர்களிடம் தான் சொல்லியிருப்பதற்காகவாயினும் அவன் வரக்கூடாதா என்று அவள் நினைத்தாள் போலும். அதற்காகவே தான் நான் வரவில்லை. உன் தோழிகள், உபாத்தியாயினி கள் இவர்கள் முன்னிலையில் உனக்கு அவமானத்தை உண்டுபண்ண நான் விரும்பவில்லை ” என்றான்.
“அவமானமா? எதற்காக?” என்றாள் சுகன்யை ஆச்சரியத்துடன்.
அழகோ பணமோ ஒன்றுமில்லாத என்னை மணந்ததில், புராணகாலத்துச் சுகன்யை சியவனரை ததுபோல், நீயும் தியாகம் செய்திருக்கிறாய் அல்லவா? நம் இருவரையும் சேர்த்துப் பார்த்து உன் தியாகத்தை யும் அதனால் உனக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் நினைத்து அவர்கள் வருந்த நான் விரும்பவில்லை என்று கடுமை யாகக் கூறி, அவள் பதிலுக்காகக் காத்திராமலே வெளி யில் சென்றுவிட்டான். அவன் மனக்கசப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது, தன் சொற்கள் அவளை எவ்வளவு தூரம் வருத்தும் என்பதை அவன் சிந்திக்கவே தயாராக இல்லை.
பாவம்! சுகன்யை, தாய்தந்தையருக்கு அருமை யான ஒரே மகள். கடுஞ் சொற்களைக் கேட்டறியாதவள். ஒருவர் கடிந்துகொள்ளும்படி அவள் நடந்துகொண்டதும் இல்லை. அவனிடத்தில் சரியாகவே நடக்க விரும்பினாள். அவ்விதம் இருக்க, இப்பொழுது அவன் கூறிய கடுஞ் சொற்கள் அவள் இருதயத்தைப் பிளக்காமல் என்ன செய்யும்?
அவனை மணந்ததே தியாகமா? யார் அவ்விதம் சொன்னது? அழகில்லை. படத்தில் எழுதிப் பார்க்கும் அழகு வேண்டுமென்று அவள் ஒருபோதும் ஆசைப்பட்ட தில்லையே! அவளுடைய பணமெல்லாம் அவனுடைய தாக இருக்கும்பொழுது, அவனுக்குப் பொருளில்லை என்று எதற்காக நினைப்பது? அப்படியும் மனது துன்புறும் பொழுது பணம் ஒரு சிறிதும் உதவி செய்யக் காணோமே! தியாகம் என்ற நினைவு அவளுக்கு இல்லாவிட்டாலும், அவள் எவ்வளவோ பணிந்து நடந்துகொண்டும் அவன் புறக்கணிக்கிறானே. அதையும் அவள் பொறுத்துக் கொண்டு வருவதை ஏன் தியாகமென்று சொல்லக் கூடாது ? அவள் நினைக்காவிட்டாலும், பார்ப்பவர்களுக் காவது அப்படித் தோன்றும்படி அவன் செய்கிறானே!
அவள் மனம் யோசனையில் ஆழ்ந்தது. ஆம், அவளை அவன் சுகன்யையோடு ஒப்பிட்டது ஓரளவுக்குப் பொருத்தமாய் இருந்தது. அவனும் அவள் தந்தையு மாகச் சேர்ந்து அவள் வாழ்க்கையைச் சுகன்யையின் வாழ்க்கையைப் போலச் சிறிது அமைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அசுவினி தேவர்கள் தோன்றி, சியவனருடைய உருவத்தை மாற்றினார்களே. இவன் மனத்தை மாற்ற எந்தத் தேவர்கள் தோன்றப் போகி றார்கள் ? இவ்விதம் அவள் மனம் தவித்தது. அப்போது அவளுக்கு இருந்த மனவேதனையைச் சகித்துக்கொண்டு கலாசாலையில் சிரித்துப் பேச அவளால் முடியாதென்று அவளுக்குத் தோன்றிற்று. அவள் வேஷம் சிறியதே. ஆனாலும் அவள் மனம் இருந்த நிலையில் அதைக்கூட நடிக்க முடியாதென்றே கருதினாள். அவள் கலாசாலைக்கே போகாவிட்டால் திடீரென்று று அவள் வராததற்குக் காரணம் கேட்பார்களே ; அதைப்பற்றி அவள் கவலைப் படப் போவதில்லை. நாடகத்தில் அவளுக்குப் பதிலாக யாரையாவது வைத்து நடத்திக்கொள்ளட்டும். மன வருத்தத்தை மறைத்துக்கொண்டு பின்னும் துன்பத்தை வளர்த்துக்கொள்ள அவளால் முடியாது. தலைவலி என்று அவள் அறையில் போய்ப் படுத்துக்கொண்டாள். இது தெரிந்ததும், அவள் தந்தை மிகவும் கவலையில் மூழ் னார். காரணத்தை அவர் ஒருவாறு ஊகித்துத்தான் இருந்தார். ஆனாலும் அவர் அன்பாய்க் கேட்ட பல கேள்விகளுக்கு, “அப்பா, ஒன்றும் இல்லை. நான் சிறிது ஓய்வாக இருக்க விரும்புகிறேன் ” என்று அவள் கூறி விடவே, அவர் சும்மா இருக்க வேண்டியதாயிற்று.
அவள் படுக்கையில் படுத்துக்கொண்டுதான் இருந் தாள். சரீரத்திற்கு ஓய்வுதான். ஆனால், மூளை மட்டும் ஓயாமல் வேலை செய்தது. ‘அவர் மனத்தை மாற்றுவது எப்படி ? அவரைக் குறைவாக நான் நினைக்கவில்லை என்பதை எந்தச் செய்கையால் அவருக்கு நிரூபிப்பேன் ?’ அவள் மூளை குழம்பிற்று. அவள் எவ்வளவு நேரம் அந்நிலையில் இருந்தாளோ அவளுக்கே தெரியாது. அறை யில் ஏதோ காலடிச் சத்தம் கேட்டது; மின்சார விளக்கை யாரோ ஏற்றினார்கள். அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கணவன் வெளியிலிருந்து வந்து சட்டைகளைக் கழற்றிக் கொண்டிருந்தான்.
அவளைப் படுக்கையில் காணவே, அவன் திடுக்கிட் டான். அவள் கலாசாலை நாடகத்தில் இருப்பாளென் றல்லவோ அவன் நினைத்திருக்கிறான்? நாடகம் முடிந்து அவள் வந்திருக்க நியாயமில்லை; மணி இப்பொழுதுதான் எட்டு ஆகிறது. அவள் போகவே இல்லையா? ஏன், அவனுக்காகவா? அவள் நாடகத்தில் எடுத்துக்கொண்ட வேஷம் என்ன ஆயிற்று? ஒரு நிமிஷம் விஷயம் ஒன்றும் புரியாமல் நின்றான். ‘அவ்வளவும் மாய்மாலமா ? என்று கோபம் கொண்டான். மறுகணமே, ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் இவள் கலாசாலை போவதையே நிறுத்தும்படி அவ்வளவு ஆழத் தில் தைத்துவிட்டதா என் வார்த்தை? அட பிர மாதமே! என்று தோன்றிற்று. நாளை தசரா விடு முறைக்காக அவன் தன் சொந்த ஊருக்குப் போவதாய் இருக்கிறான். விடுமுறைக்குப் பிறகும் அங்கேயே தங்கு வதாக உத்தேசித்தான். அழகிய இள மனைவியிடத்தில் அவனுக்கு அன்பும் ஒருபுறம் இருக்கத்தானே இருக்கிறது. அவளிடத்தில் மனஸ்தாபத்தோடு பிரிய அவனுக்கு மன மில்லை. கோபம் தானாகவே தணிந்தது. “நீ காலேஜுக் ப் போகவில்லையா?” என்று கேட்டான். அவன் குரலில் இருந்த சாந்தம் அவளுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத் தது. ‘தலைவலி ‘ என்று அவள் சொன்ன காரணத்தை அவன் நம்பாவிட்டாலும் அதை ஒருவாறு ஏற்றுக்கொண் டவனைப்போல், “இப்பொழுது தேவலையா?” என்று கேட்டுக்கொண்டே, நாடகத்தில் உன் வேஷத்திற்கு என்ன செய்தார்கள்?” என்றான். “நான் வர முடியா தென்பதைச் சொல்லி அனுப்பிவிட்டேன். யாரையாவது வைத்து நடத்தி யிருப்பார்கள். அது அப்படி ஒரு முக்கிய வேஷமல்லவே. அந்தப் பாத்திரத்தை விலக்கிவிட்டு நடத் தினாலும் பாதகமில்லைதான்’ என்று சாதாரணமாய் விடை அளித்தாள். சிறிது பொறுத்து அவர்கள் விசேஷம் ஏதும் நடக்காதவர்கள்போல் சாப்பிடச் சென்றனர். தந்தை அவள் தலைவலியைப் பற்றி மட்டும் விசாரித்து வேறொன்றும் காண்பித்துக் கொள்ளாதது அவளுக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தது.
மறுநாள் சுந்தரத்தின் தாயிடமிருந்து அவனுக்கு வந்த கடிதத்தில் சுகன்யையையும் அழைத்து வரும்படி அன்பாய் எழுதியிருந்தாள். சுகன்யை வருவாளா? சில நாளாவது கிராமத்தில் வசிக்க அவளால் முடியுமா? சுந்தரம் அதை அவளிடம் சொல்லவே தயங்கினான். ஆனால், சுகன்யைக்கு அது தெரிந்ததும் வருவதாகவே சொன்னாள். சற்றுச் சாந்தமாக இருந்த அவன் மனத்தை மறுபடியும் கிளப்பிவிட அவளுக்குப் பயமாகவே இருந்தது.
அவள் தந்தைக்கும் பெண்ணை அனுப்பி வைக்கும்படி சம்பந்தியிடமிருந்து மரியாதையாக ஒரு கடிதம் வைத் திருந்தது. தாய்தந்தையர்கள் தங்களுக்குள் பலத்த வாக்கு வாதத்துக்குப் பிறகு, சுகன்யையை அனுப்பச் சம் மதித்தனர். என்ன இருந்தாலும், பெண்கள் புக்ககத்தில் சிறிது நாளேனும் இருக்கத்தானே வேண்டும்?
கிராமவாசம் அவளுக்கு மிகவும் புதிது. பட்டண வாசத்துச் சௌகரியத்திலேயே பிறந்து வளர்ந்தவள். எந்த வேலையையும் ஆட்களை ஏவிச் செய்துகொள்ளும் பழக்க முடையவள். தனக்கு வேண்டிய சிறுவேலையைத் தானாக செய்துகொள்ளுவதுகூட அவளுக்குச் சிரமமாக இருக் குமே என்று சுந்தரத்துக்குக் கவலையாக இருந்தது. கிண றடியிலும் ஆற்றங்கரையிலும் குளிப்பது அவளுக்குப் பழக்கமில்லை என்றெண்ணி அவளுக்காகப் பிரத்தியேக ஸ்நான – அறை கட்டச் செய்தான். சதா அவளுக்குச் சௌகரியங்கள் செய்வதிலேயே அவன் மனம் சென்று கொண்டிருந்தது. என்ன செய்தாலும், கிராமத்துச் சிறு வீட்டைப் பட்டணத்துப் பங்களாவாக மாற்றிவிட முடியுமா?
அவன் தாய்க்கு ஒத்தாசையாக அவள் ஏதாவது சிறு வேலை செய்வதைக் கண்டாலும், அவன் மனம் ஒரு பக்கம் சந்தோஷத்தையும் ஒரு பக்கம் கவலையையும் மேற்கொண் டது. அவள் சகஜமாய் நடந்துகொள்ளுகிறாள் என்பதில் சந்தோஷம். பழக்கமில்லாததால் அவளுக்குச் சிரமம் ஏ ற்படுமே என்பதில் கவலை.
ஒரு நாள் காலையில் அவன் காபி குடித்துக்கொண் டிருந்தபொழுது அவன் தாய் அருகில் வந்து உட்கார்ந் தாள். “சுந்தரம், என் மனம் நிரம்பியிருப்பதை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?” என்று ஆரம் பித்தாள். “எதற்கு இந்தப் பூர்வ பீடிகை ?” என்பதாகச் சுந்தரம் அவளை நோக்கினான். அவன் தாய் சொல்லப் போவது தன் மனைவியைப் பற்றித்தான் என்பது அவ னுக்கு உடனேயே தெரிந்தது. சுகன்யை எனக்கு நாட்டுப் பெண்ணாய் வர நான் என்ன தவம் கிடந்தேனோ! அவளி டம் அடக்கம், மரியாதை, சமர்த்து எல்லாம் உருக்கொண் டிருக்கின்றன. பணமும் அழகுங்கூடக் கிடைத்துவிடும். இந்தக் குணம் கிடைக்காதப்பா ” என்றாள். இந்த வார்த்தைகள் அவளுடைய இருதய பூர்வமாக வெளி வந்தன.
“அம்மா, உன் நாட்டுப் பெண் உனக்கு உயர்வாகத் தோன்றுகிறாள். அதில் என்ன அதிசயம்! உன்னுடைய பெருந்தன்மைதான் காரணம்” என்றான் சுந்தரம்.
“அப்படிச் சொல்லாதே ! ஓரெழுத்துப் படித்து விட்டாலும் சரி, இரண்டு காசு இருந்தாலும் சரி, எல்லாம் தலைகீழாய் நிற்கிறார்கள். நம்மைக் கண்டு அவர்களுக்குப் பரிகாசமும் இளப்பமுந்தான். சுகன்யை யைப் பார். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவள் போல் அல்லவா நடக்க ஆசைப்படுகிறாள் ! நான் எது செய்யப் போனாலும், அவள், ‘அம்மா அம்மா’ என்று முந்திக் கொண்டு வந்துவிடுகிறாள். அவளைத் தடுத்து உட்கார வைப்பது கஷ்டமாகப் போய்விடுகிறது. என்னவோ அப்பா, நீ நல்ல அதிருஷ்டசாலி ; ஆயிரங்காலம் நன்றாயிருக்கவேண்டும். அவ்வளவுதான் நான் விரும்புவது என்று அவள் கண்களில் நீர் ததும்பச் சொன்ன போது, சுந்தரம் ஆனந்தசாகரத்தில் முழுகியே போனான்.
சுகன்யை பணக்காரப் பெருமையோ கர்வமோ சிறிதும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அண்டை அயல் வீட்டிலுள்ள பெண்களெல்லாம் அதிசயித்தார்கள். ‘குறை குடம் தளும்பும் நிறைகுடம் தளும்புமா? அவள் பிறக்கும்போதே செல்வத்தில் பிறந்து வளர்ந்தவள் அல் லவா?” என்று அவர்களே அதற்குக் காரணமும் கூறிக் கொண்டார்கள். அவள் மாமியாரிடம் அவர்கள் அவள் என்ன சாப்பிடுகிறாள் என்பது முதல் விசாரித்ததைப் பார்த்தால், அவள் தங்களைப்போல் சாதாரண உணவையேதான் அருந்துகிறாளோ என்றுகூட அவர்கள் சந்தேகிப்பதுபோல இருந்தது. கிராமத்துக் குடியான வர்கள் கூட அவளைப் பார்க்க வந்து போனார்கள்!
“சின்ன அம்மாளைப் பார்க்க வந்தோம்” என்று அவர்கள் சுந்தரத்தின் தாயிடம் சொல்லும் பொழுது, ”வாருங்கள்.நன்றாய்ப் பாருங்கள்” என்பாள் அவள். சுகன்யையின் அழகையும் நாகரிகத் தோற்றத்தையும் கண்டு அதிசயித்து, ‘ராசாத்தியாட்டமல்ல இருக்காங்க! சின்ன ஐயரு படிப்புக்கும் புத்திக்கும் ஏற்ற பெஞ்சாதி தான். சாமி புண்ணியத்திலே நல்லாயிருக்கட்டும். என்று அவர்கள் சொல்வதை அவன் அறையில் இருந்த வாறே கேட்டு மகிழ்வான்.
ஏற்கனவே அவன் படிப்பினால் கிராமத்தில் அவனுக்கு அசாத்திய மதிப்பு ஏற்பட்டிருந்தது. சுகன்யையை மனைவி யாகப் பெற்றதனால் அது பின்னும் அதிகரித்திருப்பதைக் கண்டான். கர்வமும் பெருமையும் பணக்காரர்கள் தலைக்கு ஏறியிருக்கும் என்பதாக முன்னமே அவன் தீர் மானமாக நினைத்திருந்தான். உலகமும் அப்படி நினைக் கிறது. இந்தக் கெடுதலான குணங்கள் அவன் மனைவி யிடத்தில் சிறிதும் இல்லை என்பதைக் கண்டு ஊராரும் அதிசயிக்கிறார்கள். அவனும் நேரிலே காண்கிறான். அவன் மனம் அன்பும் ஆனந்தமும் நிறைந்து பொங்கியது. முன்பு மனைவியிடம் தோன்றிக்கொண்டிருந்த குற்றங்க ளெல்லாம் எங்கோ ஓடி மறைந்தன.
அவர்களுடைய நிலையே இப்பொழுது மாறி இருக்கிறது. முன்பு அவள் வீட்டில் அவன் வசித்தான். இப்பொழுது அவன் வீட்டில் அவள் இருக்கிறாள். பட்டணத்தில் அவள் அந்தஸ்துக்கு அவன் குறைந்த வனாகத் தோற்றினான். இங்கே அப்படி அல்ல. அவன் கிராமத்தில் அவனுக்குச் செல்வாக்கு உண்டு, மதிப்பு உண்டு. பட்டணத்தில் அவள் பெற்றோர் அவளுக்காக உயிரையும் கொடுக்கத் தயார்; இவன் வேண்டுமென்பதே இல்லை. இங்கே இவன்தான் அவளுக்குச் சகலமும்.அவன் ஆதரவு இருப்பதனாலேயே அவள் அந்தச் சிறு கிராமத்தில் இருக்க முடிகிறது. பட்டணத்தில் அவள் பணக்காரி. பணக்கார வழக்கங்கள், நாகரிக மோகம் இவற்றில் புரள்பவளாகத் தோன்றினாள். செல்வராகிய சந்திரசேகர சர்மாவின் அருமைப் புத்திரியாக அங்கே இருந்தாள். இங்கே அவள் வெறும் சுகன்யை. அவளுடன் பிறந்த அழகும் குணமுமே இங்கே அவளோடு வந்திருக்கின்றன. அவற்றை அவன் கண்களுக்குத் தெரியவொட்டாமல் மறைத்த திரை இப்போது விலகிவிட்டது. மனிதனது செயற்கையின் கோணலினால் மறையாத இயற்கைத் தேவி தன் இயல்பான எழிலுடன் விளங்கும் அந்தச் சிறிய ஊரில்தான் சுகன்யையின் இயற்கையான எழிலும் குண மும் சுந்தரத்தின் கண்களுக்குப் புலப்பட்டன. அவள் தன் இருதயபீடத்தில் சுந்தரத்தை வைத்துப் பூசிப்பதை அவன் தெளிவாக உணர்ந்தான். இடம் மாறியது. அவன் மனமும் மாறியது.
சுந்தரம் கிராமத்தின் அழகையெல்லாம் அவளுக்குக் காண்பிக்க ஆசைகொண்டு குளிர்ந்த மாஞ் சோலைகளிலும் தென்னஞ் சோலைகளிலும் அவளை உலாவ அழைத்துச் செல்வான். சாயங்காலங்களில் தெளிந்த நீரோடு கூடிய ஆற்று மணலில் உட்கார்ந்து நம் கவிகள் எவ்விதம் ஆங்கிலக் கவிகளைவிட இயற்கை வருணனையில் மேம் பட்டவர்கள் என்பதை உதாரணங்களோடு அவளுக்கு எடுத்துக் காண்பிப்பான். இம்மாதிரி நேரங்களில் பொழுதுபோவதே அவர்களுக்குத் தெரியாது. அவனுடைய அறிவில் அவள் தன்னை முற்றும் மறந்து ஈடுபட்டுவிடுவாள். அவனும் அவள் விஷயங்களைக் கிர கிக்கும் வேகத்தைக் கண்டு மகிழ்ந்தே போவான். இப்படி யாக நாட்கள் சென்றதே அவர்களுக்குத் தெரியவில்லை.
சுகன்யை இப்பொழுது என்ன நினைக்கிறாள்? கிராம வாழ்க்கை அவளுக்குச் சுவர்க்க வாழ்க்கையாக மாறி யிருக்கிறதா? ஆம், அவள் கணவன் அதை அவளுக்கு அவ்விதந்தான் அமைத்துவிடுகிறான். அவன் அன்பையும் அவன் தாய்தந்தையரும் கிராமத்தாரும் அவளி டத்தில் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் கண்டு, தன்னைவிடப் பாக்கியசாலி யாருமில்லை என்று தான் அவள் நினைக்கும்படி இருந்தது. இயற்கை எழிலுக்கும் வஞ்சகமற்ற அன்புக்கும் உறைவிடம் கிராமம் என்ற சிறப்பு எல்லோருக்கும் பொதுவானது. அந்தச் சிறப்பினால் சுகன்யை இன்பத்தை அடைந்தது பெரிதல்ல. தன் கணவனது உள்ளத்தில் மறைந்திருந்த அன்பை வெளிப்படுத்தி அவனை மாற்றிய இடமாக அது அமைந்ததுதான் அதனுடைய தனிச் சிறப்பு.
மறுபடியும் பட்டணம் சென்றால் அவன் மாறி விடுவானோ என்று அவள் சிறிது பயந்ததற்குக் காரணமே இல்லாமல் போயிற்று. அவன் பிறகு மாறவே இல்லை. அவன்தான் சுகன்யையின் உள்ளத்தை உணர்ந்து விட்டானே; ஒரு முறை இதழ் விரிந்த மலர் மறுபடியும் குவிந்து மொட்டாவது உண்டா?
– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.
– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.