மனதில் ஓசைகள்





தென் சென்னை. வெளிச்சத்தை நாடி நகரும் இரவு. இரண்டரை மணி இருக்கும்.
ராஜீவ் காந்தி சாலையில் ஊர்ந்து சென்ற கார் சோழிங்கநல்லூரைத் தாண்டி நாவலூருக்கு முன் இடப்புறம் திரும்பி ஈசிஆர் சாலையை நோக்கி நகர்ந்தது. தெருவில் வண்டி நின்றதும், அதிலிருந்து இறங்கிய ஆள் குடி போதையில் தடுமாறிக் கொண்டே மங்கலான வெளிச்சத்தில் தெரிந்த கடைசி வீட்டுக்கு முன் சற்று நின்றான். அது சரியான வீடுதானா என கணிப்பது போல் நின்றவன், காம்பவுண்டை கடந்து உள்ளே நுழைந்து முன் வாசல் கதவருகே போனான். ‘முட்டாள், உள்ளே தாழ் போட்டிருக்கும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, பின் தலையில் இலேசாக தட்டிக் கொண்டு, வீட்டைச் சுற்றி நடந்து பின் பக்கத்து கதவின் முன் நின்றான். கதவின் கைப்பிடியை சுழற்றிப் பார்த்தவனுக்கு புன்சிரிப்பு வந்தது. கதவுடன் போராட வேண்டாம் என்ற திருப்தி போலும். சமையிலறையில் நுழைந்தவன் கீழே இருந்த ஏதோ ஒரு பொருளை இடறிவிடவே, அது சத்தம் எழுப்பியது. வாயைப் பொத்திக்கொண்டு ஒரு பக்கமாக ஒதுங்கினான். நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அவனுடைய நிம்மதி குலையுமாறு சமையலறையில் பளிச்சென்று மின்விளக்கு வெளிச்சத்தைப் பரப்பியது. வந்தவன் முகத்தில் வியர்வை படர்ந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கு ஏற்கெனவே மற்றொருவன் பதுங்கியிருந்தான். பதுங்கியவன் எப்படி உள்ளே வந்தான்? ‘நான் எப்படி இப்போது பின் வழியாக வந்தேனோ அப்படித்தான் வந்திருப்பான்’. தன் முகத்தை கண் பார்வை தடைபடாமல் கறுப்புத் துணியால் மறைத்துக் கொண்டிருந்தது அவன் திருட வந்திருப்பான் என்பதை நிச்சயப் படுத்தியது. முகமூடிக்காரன் கத்தியுடன் குடிபோதைக்காரன்மேல் திடீரென்று பாய்ந்தான்.
அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் படுத்திருந்த வாணி திடுக்கிட்டு படுக்கையில் உட்கார்ந்தாள். கீழே யார் வந்திருப்பார்கள்? நிச்சயம் வீட்டை கொள்ளையடிக்க திருடனோ, திருட்டு கும்பலோ வந்திருக்க வேண்டும். காவல் துறைக்கு ஃபோன் தட்டினாள். போலீஸ் வருவதற்கு அரைமணிக்குமேல் ஆகலாம். வாணி கீழ் தளத்துக்குப் போனாள். முன் வாசல் கதவு உள்ளயிருந்து போட்டிருப்பதைப் பார்த்த திருப்தியுடன் வாணி சமையல் அறைப்பக்கம் நடந்தாள். சமையலறையில் விளக்கொளியைப் பார்த்ததும் தயங்கியவளுக்கு உள்ளேயிருந்து தடபுடா சத்தம் வந்ததும் பீதியால் கவ்வப்பட்டு உறைந்து நின்றாள். உள்ளே என்ன நடக்கிறது?
எட்டிப்பார்த்தவள் ‘வீல்’ என்று கூச்சிலிட்டாள். முகமூடி போட்டிருந்தவன் கையில் இரத்தம் சொட்டும் கத்தி. அவன் ஒருமுறை வாணியைப்பார்த்துவிட்டு அடுத்த வினாடி பின்கதவைத் திறந்து ஓடி இருளில் மறைந்தான். வாணி அவனைத்துரத்தலாம் என கதவை நோக்கி ஓடும்போது அவள் காலடியில் இரத்த வெள்ளத்தில் மார்பில் கத்தி சொருகப்பட்டு கீழே விழுந்து கிடந்தான் சுந்தர் – வாணியின் கணவன். மறுபடியும் ‘வீல்’ என்று கூச்சிலிட்டாள். “ஐயையோ, சுந்தர்…சுந்தர்…” என்று அலறினாள். ஒரு மூலையில் உட்கார்ந்து கதறினாள்.
வரிசையாக வந்து நின்ற போலீஸ் வண்டிகளிலிருந்து தப தபவென்று இறங்கி வந்த காவல் துறையினர் வீட்டைச்சுற்றி சூழ்ந்து கொண்டனர். வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் சமையல் அறையில் இரத்தத்தில் தோய்ந்துகிடந்தவனின் உடலைப் பார்த்து தலையை ஆட்டிக்கொண்டு நின்றனர். கத்திக் குத்துப் பட்டவனின் உயிர் எப்போதோ போய்விட்டது புரிந்தது. பிரேத பரிசோதனை போன்ற இத்யாதி ஏற்பாடுகள் நடந்தன.
வாணியை விசாரித்ததில் சுந்தரை கொலை செய்தது முகமூடி அணிந்த ஓர் ஆண் என்பதைத்தவிர வேறு விவரம் கிடைக்கவில்லை. முகமூடிக்காரன் கொலை செய்ய உபயோகித்த கத்தியில் கைரேகை எதுவுமே இல்லை. மேலும் கொலை செய்தவன் வந்து போனதற்கு எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை. சுந்தர் அடிக்கடி குடி போதையுடன் நடுநிசி தாண்டி வீட்டுக்குள் பின் கதவு வழியாக தடுமாறி வருவது பற்றியும், பின் கதவை தாழ் போடாமல் அவள் விடுவதையும் வாணி அழுகைக்கு நடுவே விவரித்தாள். முகமூடிக்காரனுக்கும் பின் கதவு பூட்டப் படாமலிருந்தது தெரிந்திருக்க வேண்டும். எப்படி?
கொலையாளியை பல மாதங்கள் தேடியும் காவல் துறையால் கண்டுபிடிக்க இயலாததால் எந்தவித நிரூபணமும் இல்லாமலே சுந்தர் கொலை வழக்குக்கோப்பு மூடப்பட்டு, தீர்மானிக்கப் படாத வழக்காகியது.
ஆஸ்திரேலியா போகும் விமானம் சிங்கப்பூர் தாண்டி பறந்து கொண்டிருந்தது. அதில் பிஸினெஸ் கிளாஸ் பகுதியில் சொகுசான இருக்கையில் வாணியும் அவளுடைய கல்லூரி காதலன் முரளியும் சிரிப்பும் மெல்லிய குரலில் பேச்சுமாக இருந்தனர்.
முரளி வாணியைப் பார்த்து, “இதோ பார்… என்னன்னு தெரியுதா?”
வாணி துணுக்குற்றாள். “அன்னிக்கி ராத்திரி நீ போட்டுக்கிட்டு வந்த கறுப்பு முகமூடித் துணியா இது? இன்னுமா வைச்சுருக்கே? தூக்கிப் போடலையா?”
“சென்னையிலே இதை தடயமா விடக்கூடாது பாரு…சிட்னியிலே இறங்கினவுடனே முதல் காரியமா குப்பைத் தொட்டியிலே போடறேன் சரியா?”
சிட்னியில் இனி வாழப் போகும் காதல் வாழ்க்கை ஒரு பக்கம், முரளி வீசிய கத்திக்குத்துடன் விழுந்து கிடந்த சுந்தரின் உடல் கிடந்த காட்சி இன்னொரு பக்கம் என அவர்கள் மனதில் ஓசைகள் தொடர்ந்தன.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |