கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 3,388 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

காலை மணி 7.00.

என்றைக்கும் போல் நான்கு சுவர்களுக்குள் மாலதி சுறுசுறுப்பாக இருந்தாள் . கையும் காலும் பரபரத்தது.

”ராகுல் ! படிக்கிறீயா. ..?” இடையே குரல் கொடுத்தாள்.

”படிக்கிறேன்ம்மா..!” கூடத்தில் அவன் குரல் ஒலித்தது.

ராகுல்… இவளின் ஒரே பையன். ஐந்து வயது சிறுவன். ஒன்றாம் வகுப்பில் படிக்கிறான். மாலதி வழக்கம்போல் இவனை காலை ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டு விட்டாள். பல் துலக்கி, காபி கொடுத்து, காலைக்கடன்கள் முடித்து புத்தகம் சிலேட்டு பல்பம் கொடுத்து உட்கார வைத்துவிட்டாள்.

இவளுக்கு மகனை மழலை ஆங்கில போதனையில் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனாலும் அனுப்பியே ஆகவேண்டிய கட்டாயம், சூழ்நிலை. !

உதவி, ஒத்தாசைக்கு அம்மா, அப்பா; மாமன், மாமி; கணவன்.. எவருமில்லை.

அலுவலக வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பவள். கூடவே குழந்தையை எப்படி கொண்டு போக முடியும். .? பாதுகாப்பிற்காக அப்பள்ளியில் விட்டிருக்கிறாள்.

மாலதிக்கு இந்த நிற்கதி நேற்று முந்தாநாள் ஏற்பட்டதல்ல. ராகுலுக்கு இரண்டு வயது தொடங்கி மூன்றாவது முடிவதற்குள் நேர்ந்து விட்டது.

மாலதிக்கு மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதற்கு அவகாசமில்லை. அவனுக்கென்று ஒரு ஆட்டோ அமர்த்தியிருக்கிறாள். அது ஐந்தாறு தெருக்கள் சுற்றி குறைந்தது இருபது குழந்தைகளையாவது அடைத்துச் செல்லும்.

மாலை பள்ளிக்கூடம் விட்டதும் ராகுலுக்கு அங்கேயே டியூசன். நான்கிலிருந்து ஐந்து மணி வரை. அவன் வகுப்பு ஆசிரியைச் சொல்லி

கொடுக்கிறாள். மாதம் முந்நூறு ரூபாய். கிட்டத்தட்ட இருபது பிள்ளைகள் படிக்கிறார்கள்.

பிள்ளைகளுக்கு டியூசன் வைத்தால் நன்றாகப் படிப்பார்கள். அதுவும் வகுப்பு ஆசிரியையே பாடம் எடுத்தால் சலுகை முறையில் பாஸ் போட்டு விடுவாள். இல்லையென்றால் பெயிலாக்கி விடுவாள் என்ற பயமெல்லாம் மாலதிற்குக் கிடையாது. இவள் அலுவலகம் விட்டு வரும்வரை பையன் ஓரிடத்தில் பத்திரமாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்காக இப்படி விட்டு வைத்திருக்கிறாள்.

ராகுல் டியூசன் முடித்து ஆட்டோவில் வருவதற்கும், இவள் அலுவலகம் விட்டு வீடு திரும்புவதற்கும் சரியாக இருக்கும்.

மாலதி சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

காலை இட்லி. மதிய சமையலெல்லாம் முடிந்து விட்டது. இனி அவளுக்கும் மகனுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு புறப்பட வேண்டும். அவனுக்கு டப்பாவிலும், இவளுக்கு அடுக்கிலும் மதிய உணவைக் கட்டினாள்.

அடுத்து ராகுலை அழைத்து குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, புத்தகப்பை, தண்ணீர் பாட்டில் எல்லாம் தயாராக எடுத்து வைத்து, அவனுக்குத் தட்டில் இரண்டு இட்லிகளைக் கொடுத்துவிட்டால் போதும். மாலதி குளித்து முடித்து உடை மாற்றவும் இவன் சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருக்கும்.

சரியாக 8.30 க்கெல்லாம் வாசலில் ஆட்டோ அலறும்.

அவள் யாருக்காக வாழ்கிறாள். உயிர் வாழ வேண்டிய கட்டாயம் .அவளுக்காக வாழ்கிறாள்.!!

மாலதி அடுப்பு வேலைகளை முடித்துவிட்டு. ..

”ராகுல் ! குளிக்கலாம் ! ” அழைத்தாள்.

”இதோ வந்துட்டேனம்மா ! ” அவனும் புத்தகம், சிலேட்டு, பல்பங்களை எடுத்து பைக்குள் திணித்து விட்டு தாயிடம் ஓடினான்.

அவள் …அவனைக் குளிப்பாட்டி செய்ய வேண்டியவைகளை செய்து, தானும் குளித்தாள்.

அறையில் வந்து ஆடைகள் அணிந்தாள்.

வாசலில் ஆட்டோ குரல் கொடுத்தது.

”அம்மா ! போயிட்டு வர்றேன் ! ” ராகுல் குரல் கொடுத்து ஓடினான்.

”போயிட்டு வா. ” இவள் உள்ளிருந்தே குரல் கொடுத்து அனுப்பினாள்.

அது பறந்தது.

இவள் அறையை விட்டு வெளியில் வந்து, தன் தேவைகளை முடித்து, ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தம் வந்தாள்.

பேருந்தில் நேற்றை விட இன்றைக்கு கூட்டம் அதிகம் இருந்தது. கொஞ்சம் சிரமப்பட்டு… இடி, நெருக்கல், நொறுக்கல்களைச் சகித்துக்கொண்டு ஏறினாள்.

கூடிய சீக்கிரம் ஒரு ஸ்கூட்டி வாங்கி இந்த தொல்லைகளைத் தவிர்க்க வேண்டும் ! என்று மனம் கணக்குப் போட்டது. அப்படி இவள் வாங்கி விட்டால்… ராகுலையும் இவளே அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் விட்டுவிட்டு, சிரமமில்லாமல் அலுவலகம் செல்லலாம். தனக்குப் பேருந்து செலவு, கஷ்டம், மிச்சம் . அவனுக்கும் ஆட்டோ செலவு மிச்சம்.

அதற்கு குறைந்தது ஐம்பதாயிரமாவது வேண்டும். கொஞ்சம் பணம் கட்டி, மீதி கடன் வாங்கி மாதாமாதம் கட்டி அடைத்து விடலாம்.! – யோசித்தவளுக்கு அப்படி கடன் வாங்கி வண்டி வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இந்த அளவிற்கு பிராவிடண்ட் பண்டில் பணம் சேர்ந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம்.! மனதை மாற்றினாள்.

அதற்குள் அதன் விலை ஏறிவிட்டால். .? நினைக்க சொரக்கென்றது.

‘ மனம் கணக்குகள் போடுகிறது, திட்டங்கள் தீட்டுகிறது. ஆனால் நினைத்து நடப்பது சொற்பம்.! ‘ என்பதில் இவளுக்கு ரொம்ப வருத்தம்.

‘ நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ! ‘ – உண்மை. !!

மாலதி எப்படி எப்படியெல்லாமோ வாழ்ந்தாள். என்னெவெல்லாமோ கற்பனை செய்து கொண்டிருந்தாள். காதலனே கணவனாக வர கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாம் அப்படி வாழ வேண்டும், இப்படி வாழ

வேண்டும். வாழ்வில் கஷ்டமே கூடாது என்றெல்லாம் நினைத்திருந்தாள். ஆனால் நடந்ததெல்லாம் வேறு. .!

குடிசை வீட்டில் தென்றல் நுழையும்போது சுகமாக இருக்கும். அந்த தென்றலே கொஞ்சம் பலமாக அடித்தால். .. கூரை ஓலைகள் தூக்கும்.!

புயலாக நுழைந்து விட்டால். ..???

கூரை பிய்ந்து…குடிசை அழிந்து, சின்னாபின்னமாகப் போகும்.!

காலக் காற்று…. காதலென்னும் தென்றலாகத்தான் இவள் வாழ்வில் நுழைந்தது. காலப் போக்கில் புயலாக மாறி இவளைச் சிதறடித்து விட்டது.!

அப்பப்பா ! எத்தனைக் கஷ்டங்கள், சோதனை, கொடுமைகள் !!

அத்தனைகளையும் தாங்கிக்கொண்டு, தாண்டி வந்து, இன்று… இவள் தாயும் பிள்ளையுமாக உயிரோடு இருப்பது அதிசயம்.

இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி வந்திருக்கிறோமே. .! சமயத்தில் நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு நடுங்கும். பிரமிப்பாள். அதற்காக… இவள், கடந்த காலங்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. குப்பைகளாக அப்போதே ஒதுக்கித் தள்ளி விட்டாள். இப்போது…. இவள் துணையே வேண்டாமென்று குறிக்கோளோடு வாழ்கிறாள். அதனால்தான் இவள் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு பிள்ளையுடன் வேறு இடம் வந்து வாழ்கிறாள்.

தாயும் மகனும் காலையில் வீட்டைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்களென்றால் மாலைதான் திறப்பு. இரவு சமையல், படுக்கை, தூக்கம். இனி… இப்படித்தான் வாழ வேண்டுமென்று இவளாகவே விரும்பி வகுத்துக்கொண்ட வாழ்க்கை.!

ஆனால். .. வகுத்தது போன்றா நடக்கின்றது வாழ்க்கை. ..?!

அத்தியாயம்-2

நிர்மல் – விமல் ஏற்றுமதி அலுவலகம்.

இன்று எப்படியாவது தன் மனத்தைத் திறந்து காட்டிவிட வேண்டுமென்கிற முடிவிலிருந்தான் சுதாகர். வயது 30. அழகன்.

மணி ஒன்பதைத் தாண்டியும் மாலதி இருக்கை காலியாக இருப்பதை பார்த்து மனசு துடித்தது.

‘ ஏன். .? என்னாச்சு.! திடீரென்று மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்று மருத்துவமனை சென்றிருக்காளா. .? இவளுக்கு உடல்நிலை சரி இல்லை…. விடுப்பா.?! பேருந்து கிடைக்காமல் தவிக்கின்றாளா. .? இல்லை அது தாமதமா. .? ‘ என்று பலவாறு நினைத்து அவனாகவே கவலைப் பட்டான்.

மாலதி நேரம் தவறி வந்ததே கிடையாது.!! அவளுக்கோ, மகனுக்கோ உடல்நிலை சரியில்லை. அதனால் மருத்துவமனைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். எந்த மருத்துவமனை ..? இல்லை , பேருந்து விபத்து, பழுதா. நடுவழியில் நிற்கின்றாளா. .?! ‘ அவன் நினைப்பும் தவிப்பும் பன்மடங்காகியது. நிலைகொள்ளாமல் தவித்தான்.

” சார் ! ” – அருகில் கடைநிலை ஊழியன்.

” என்ன கருப்பன். ..? ”

” ஐயா ! உங்களை உடனே வரச் சொன்னாங்க. ” பணிவாய் சொன்னான்.

இவன் எழுந்தான். அனிச்சையாய் கண்களை மாலதியைப் பார்த்து வாசல் பக்கம் ஓடி திரும்பியது. மேலாளர் அறைக்குள் நுழைந்தான்.

தணிகாசலம் பைல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தலைக்கு மேல் காந்தி சிரித்தார். குளிர் சாதனம் கும்மென்ற ஒலியுடன் குளிரை உமிழ்ந்தது.

” உட்காருங்க. .” இவனை நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னார்.

அவர் அமரச் சொன்னால் இவனுக்குக் கடுமையான வேலை இருக்கிறது என்று அர்த்தம் !

தயக்கத்துடன் அமர்ந்தான்.

‘ உடனே வெளியூருக்குப் போ ! – துரத்தப் போகிறாரா. .? ‘ பயத்துடன் பார்த்தான்.

அலுவலகத்தில் பிரம்மச்சாரியாக இருப்பது கஷ்டம்.! திறமைசாலியாக இருப்பது உபத்திரவம்.!! சின்ன வேலை, பெரிய வேலை எந்த வேலையாக இருந்தாலும் துரத்துவார்கள்.

‘ என்ன வேலை சொல்லப் போகிறார். .?! ‘ – சுதாகர் அவரைக் கலக்கமாய்ப் பார்த்தான்.

இவனுக்கு வெளியூர் செல்வதைப் பற்றி ஆட்சேபனை இல்லை. எத்தனை நாட்களுக்கு மாலதியைப் பார்க்காமல் பிரிந்து இருக்கப் போகிறோமோ என்கிற கவலை கலக்கம்தான் தற்போது.

தணிகாசலம் நிமிர்ந்து அமர்ந்தார். இவனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார்.

” வேலையா சார். .? ” இவன் கேட்டான்.

” ம். …ம் ”

” என்ன வேலை சார். ? ”

” ஒரு நல்ல வேலை. உனக்கு பதவி உயர்வு கொடுக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கு ! ”

சுதாகர் இதை எதிர்பார்க்கவில்லை. நம்பமுடியவில்லை.

” எனக்குப் பக்கத்துல துணை மேலாளர்! ” அவர் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

” சார்ர்ர் .! ” வியர்த்தான், வியந்தான்.

” உண்மை சுதாகர் ! ” தணிகாசலம் அழுத்தம் திருத்தமாக சொல்லி அதை உறுதி செய்தார்.

” எ. .. எப்படி சார். .?!…” இன்னும் அவன் வியப்பு அடங்கவில்லை.

” அதுதான் தனியார் கம்பெனி.! இங்கே… திறமை, தகுதிக்குத்தான் வேலை, முன்னுரிமை. அப்புறம்தான் மூத்தவர், இளையவர் கணக்கு. ”

”……………….”

” சுதாகர் ! உங்க வேலைத் திறமையை மேலிடத்துக்கு தெரிவிச்சேன். இந்த பதவிக்கு சிபாரிசு செய்தேன். சம்மதம்ன்னு கடிதம் போட்டிருக்காங்க. பதவி உயர்வுன்னா இடம் மாற்றலிருக்கும். உனக்குக் கிடையாது. காரணம். .. என் உதவிக்கு நீ. பக்கத்து அறைதான் உனக்கு ” சொன்னார்.

சுதாகருக்கு மகிழ்ச்சி. வானில் பறந்தான்.மிதந்தான்.

” இதைச் சொல்லத்தான் உங்களை அழைச்சேன். இன்னும் ரெண்டு நாள்ல உங்க பதவி உயர்வுக்கான உத்தரவு தரேன். வாழ்த்துக்கள் ! ” சொல்லி கை நீட்டினார்.

சுதாகர் சட்டென்று எழுந்து அவருக்கு கை குலுக்கிவிட்டு வெளியே வந்தான்.

மாலதி அப்போதுதான் இருக்கையில் வந்து அமர்ந்து வியர்வையைத் துடைத்தாள்.

சுதாகருடன் பேச்சுவார்த்தையில் இருந்ததால் அவள் தணிகாசலம் கண்களில் மாட்டவில்லை பிழைத்தாள்.

‘ கண்ணாடி அறையிலிருந்து கொண்டு தணிகாசலத்தின் கழுகுக்கு கண்களுக்கு யாரும் தப்ப வழி இல்லை. சந்தோசப் பேச்சு பேசிக்கொண்டிருக்கும்போது அவளை அழைத்து ஏன் பாட்டு விட்டு மனதை நோகடிக்க விடுமென்று விட்டிருப்பார். அடுத்து மாட்டும்போது சேர்த்து தாக்கிக்கொள்ளலாமென்று விட்டும் பிடித்திருக்கலாம். ! எப்படியோ இன்று தப்பி விட்டாள்! ‘ – நினைக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதேசமயம் தன் பதவி உயர்வு சேதி அவளுக்குச் சொல்ல வேண்டும் என்று மனசு துடித்தது.

‘ இன்றைக்கு இவளிடம் மனத்தைத் திறக்க வேண்டும் என்று நினைக்கும்போதே பதவி உயர்வு ! மாலதி எவ்வளவு அதிர்ஷ்டசாலி ! ‘ இருக்கையில் அமர்ந்து சிலிர்த்தான். மனசுக்குள் சிரித்தான்.

மாலை பேருந்து நிறுத்தத்தில் சொல்லிக் கொள்ளலாம் ! – மனதை மாற்றினான்.

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ! – அடக்கமாய் அமர்ந்தான்.

‘ வேலைக்குத்தான் பதவி உயர்வு ! – பைல் பிரித்தான். அக்கறையாய் மூழ்கினான்.

சுதாகர் வேலையில் ஆழ்ந்து விட்டால் அப்படியே ஒன்றிவிடுவான்.

மாலை ஐந்தடிக்கும் போதுதான் மாலதி நினைவு வந்தது.

‘ எப்படி மனசைத் திறப்பது. .? ‘ திடீர் பயம் உதித்தது.

முன் பின்னாக அவளுடன் சேர்ந்து பேருந்து நிறுத்தம் வந்தும் மனம் துணியவில்லை.

‘ மாலதி எல்லோரிடமும் அளவாக பேசியே பழக்கம். இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ. .? ‘ அவனுக்குள் தயக்கம் வந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

‘ காதலைச் சொல்லாமல் விடுபவன் கோழை ! ‘ எங்கோ படித்தது நினைவு வந்தது. விளைவு. .? கொஞ்சமாய் மனம் துணிந்தது.

” மா. . மாலதி. .! ” தடுமாற்றத்துடன் அழைத்தான்.

” என்ன. .? ” அவள் இயல்பாய் திரும்பி கேட்டாள்.

” ஒரு நல்ல சேதி. எனக்குப் பதவி உயர்வு வரப்போகுது !”

” சந்தோசம் ! ” முறுவலித்தாள்.

”’துணை மேலாளர் ! ”

” மகிழ்ச்சி ! ”கொஞ்சமும் ஆச்சரியம் காட்டாமல் அவள் சொன்னது இவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஏமாற்றமாக இருந்தது.

அது அவள் இயல்பு. எவர் துக்கமும், தொல்லையும், மகிழ்ச்சியும் பாதிக்காதது அவள் குணம் ! – மனம் மாறினான்.

” அப்புறம். .. அப்புறம். ..” தடுமாறினான்.

மாலதி மெளனமாக பார்த்தாள்.

” நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா அடுத்து ஒரு சேதி…”

” சொல்லுங்க. .? ”

” நீங்க ஏன் மறுமணம் செய்துக்கலை. .? ”

”தோணல. ..”

” என்னைப்பத்தி என்ன நினைக்கிறீங்க. .? ”

” நல்லவர் ! ”

” நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆட்சேபனை உண்டா. .? ”

” உண்டு ! ”

அலட்டாமல் சொல்லும் அவளை வியப்பாய் பார்த்தான்.

” கொஞ்ச காலம் நீங்க என் மேல வச்சிருக்கிற பார்வை சரி இல்லே சுதாகர். அதனால நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு மறுமணத்தைப் பற்றி எந்த நினைப்பும் கிடையாது” நிறுத்தி நிதானமாய், தெளிவாய் சொன்னாள்.

இவனுக்கும் தைரியம் வந்தது.

” வாழ்க்கையில் துணை அவசியம் மாலதி. . உங்க கடந்த கால வாழ்க்கை எனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்கவும் விரும்பல. கணவன் – மனைவி விரிசல் விலக்கிட்டீங்க. விவாகரத்து வாங்கிட்டீங்க என்பதுதான் எனக்குத் தெரிஞ்ச சேதி. என்னைப் பொறுத்த வரைக்கும் உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்க தொலைச்ச வாழ்க்கையை என்னோடு தொடரலாம் என்கிறதுதான் என் நெனப்பு. ”

” எனக்கு உங்களை பிடிச்சிருக்கு என்கிறதுனால உங்களுக்கு என்னை பிடிக்கனும்ன்னு அவசியமில்லே. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லுங்க. நான் வருத்தப்படமாட்டேன். பிடிச்சிருக்கு. .! ஆனா. .. இன்னின்ன கெட்டது உங்களிடம் இருக்கு. திருத்திக்கோங்கன்னு சுட்டிக்காட்டினா திருத்திக்கிறேன். உங்க மனசுக்குப் பிடிச்சபடி நான் மாறி வாழ தயாராய் இருக்கேன். உங்க முடிவை. . இப்போ, இந்த நிமிஷம் இங்கேயே சொல்லனும்ன்னு அவசியமில்லே. நிறுத்தி , நிதானமா யோசிச்சி ரெண்டு நாள், ஒரு வாரத்துலகூட பதில் சொல்லலாம். கடைசியா ஒன்னு. .. நான் உங்களுக்கு நல்ல கணவனாய் மட்டுமில்லாம உங்க குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் இருப்பேன். இது உறுதி. அதில் எந்தவித ,மாற்றமும் கிடையாது. என் மனசைத் திறந்து சொல்லிட்டேன். இனி முடிவு உங்க கையில். வர்றேன் ! ” படபடவென சொல்லி அதற்கு மேல் நிற்க துணிவில்லாமல் நடந்தான்.

மாலதி அப்படியே ஆணி அடித்து நின்றாள். !

அத்தியாயம்-3

வாழ்க்கை என்பது நல்லதும் கேட்டதும். மகிழ்ச்சி வரும்போது குதித்தும்., துன்பம் வரும்போது துவள்வதும் , துக்கப்படுவதும் மனித

இயல்புகளென்றாலும் இரண்டையும் சமமாகப் பாவித்து…. வண்டி பூட்டிய மாடுகளாய் …பள்ளம் வரும்போது வேகத்தைக் குறைத்து நிதானப்படுத்துவதும், மேடு வரும்போது வலிமை கொண்டு முண்டி இழுத்து வண்டியை இழுப்பதும்தான் வாழ்க்கை. அப்போதுதான் வண்டி சமமாக ஒரே சீராக ஓடி இலக்கு என்னவோ அதை அடையும்.

சுதாகர் என்பவன் யார். .? – அலுவலக ஊழியன், சகதொழிலாளி.!

அவனெப்படி…..? நல்லவன், வல்லவன். ??.!

அவன் ஏன் நம்மைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படவேண்டும். .?!

இவள் வாழ்க்கை ஒரே சீராக இல்லையே என்கிற பரிவு, பச்சாதாபம்.

வண்டியில் மாட்டிய மாடொன்றைக் காணோம், இல்லை. நாம் தலை கொடுத்து அதை ஏன் சீராக்க கூடாது ..? ! என்கிற எண்ணம், மனம்.

சரிப்படுமா. .? ??

அவன் பின்னணி என்ன ? அம்மா, அப்பா… யார் ? அவர்கள் சம்மதிப்பார்களா. .?

‘ பாவி ! மாடும் கன்னுக்குட்டியையும் ஓட்டி வந்திருக்கானே ! ‘ என்று கதறுவார்கள்.

” உனக்குன்னு ஒருத்தி எங்கோ ராணி மாதிரி பொறந்திருக்காடா. நீ இன்னொருத்தன் எச்சிக்கு ஆசைப்படுறீயேடா. .! ? ” – சொல்வார்கள்.

‘ சமூகம் , ஒருத்தனோடு வாழ்ந்து விட்டு வந்த பெண்ணொருத்தியை அப்படித்தான் கேவலமாக பார்க்கிறது.

எச்சிலை என்பது ஒருத்தர் உபயோகப்படுத்தியது. அது மீண்டும் உபயோகப்படுத்த முடியாதது. அடுத்தவர் உபயோகப்படுத்துவது அவமானம். தூக்கி எறியக்கூடியது.!

ஒருத்தனோடு வாழ்ந்துவிட்டு வந்த பெண் அப்படி தூக்கி எறியக்கூடியவளா. .? வாழத் தகுதி இல்லாதவளா. .? நிச்சயமாக இல்லை.!!

உபயோகமில்லாதது என்று ஒரேயடியாக தூக்கி புறம் தள்ளுவது என்பது மடமை! . – இப்படியெல்லாம் சிந்தித்த மாலதி பேருந்து வர ஏறினாள்.

ராகுல் வந்து வீடு வாசல்படியில் சோர்ந்து அமர்ந்திருந்தான்.

மகனின் துவண்டு போன முகத்தைக் கண்டதுமே மாலதிக்குத் திக்கென்றது.

” என்னப்பா செய்யுது. .? ” பதறி வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

அது சுட்டது.!!

எந்த மருத்துவரிடம் செல்வது..? இது சாதாரண சுரமா. .? விஷசுரமா. .? – மனம் குழம்பி அல்லாடியாது.

இப்போது துணை இருந்தால் அழைத்துச் செல்ல வசதியாக இருக்குமே ! – நினைத்தது.

தனி மரம் தோப்பாகாது. ஆனால் பலன் தராது, காய்க்காது என்று எதிர்பார்ப்பது சரியில்லை. துணை இருந்தால் துணிச்சல் வரும், பலம் வரும் என்பது உண்மை. துணை இல்லையென்றாலும் துணிச்சலும், தைரியமும் தனியே நிற்பவர்களைத் தேடி வரும் என்பதும் உண்மை. மாலதி இரண்டு வருட காலங்களாக துணை இல்லாமல் பழக்கப்பட்டுவிட்டாள். தன் தேவைகளைத் தானே செய்யக் கற்றுக் கொண்டுவிட்டாள். ஆகையால் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை உடனே செய்தாள். வீட்டை திறந்து தோல் பை, ராகுல் புத்தகப்பைகளையெல்லாம் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு அவனுடன் வாசலுக்கு வந்தாள்.

தங்களைக் கடந்து சென்ற ஆட்டோ ஒன்றைக் கைதட்டி அழைத்தாள்.

அது வட்டமடித்துக் கொண்டு வந்து இவர்கள் எதிரில் நின்றது.

” பாஸ்கர் டாக்டர் வீட்டுக்குப் போ ” – குழந்தையுடன் ஏறி அமர்ந்தாள்.

அவர் குழந்தை வைத்திய நிபுணர், கைராசிக்காரர். இந்த கலியுகத்திலும் அவருக்கு இருபது ரூபாய்தான் மருத்துவக் கூலி. அவர் மருத்துவத்தை.. மற்றவர்களைப் போல் தொழிலாக நினைத்து வாங்கி கொட்டி பைகளை நிரப்பிக் கொள்ளாமல்… குழந்தைகளைக் காக்கும் தொண்டு, சேவையாக செய்கிறார். அவரிடம் எந்த பிள்ளை எந்த நோயுடன் சென்றாலும் குணமாகும். இனாமாக செய்தால் எதுவும் இளப்பமாகத் தெரியும் என்பதால் இந்த கூலி.

கிளினிக்கில் கூட்டம் அலை மோதியது.

எல்லாத் தாய்மார்களும் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சிலருக்கு கணவனும் துணையாக வந்திருந்தான். எல்லார் முகத்திலும் கவலை. பெற்றதுகளுக்கு ஒன்றென்றால் பெற்றவர்களுக்கு வருத்தம், கவலை வருவது அனிச்சை.

குழந்தைகள் நோயில் வாடி, வதங்கிய அல்லித் தண்டுகளாய் அவர்கள் தோளில், மார்பில் சாய்ந்து கிடந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அழும் குழந்தைகளைத் தகப்பன்மார்கள் தோளில் தூக்கி தட்டிக் கொண்டு அலைந்தார்கள், ஆறுதல் படுத்தினார்கள்.

ராகுல் அவர்களை ஏக்கமாகப் பார்த்தான்.

அப்பா இல்லாத கவலையா. .? ! – மாலதிக்கும் மனசைப் பிசைந்தது.

மகன் பார்வையைத் திருப்பி நேராக்கிக் கொண்டாள்.

அது அவனுக்கு கஷ்டமாகத்தானிருந்தது. ஆனாலும் வேறு வழி இல்லை.!

சீக்கிரம் தன் முறை வந்து காட்டி எப்போது திரும்புவோமென்று கவலைப்பட்டாள்.

அரைமணி நேரத்தில் இவள் முறையும் வந்தது.

டாக்டர். . ராகுலை அக்கறையாய்ப் பரிசோதித்தார்.

” சாதாரண சுரம்தான்ம்மா. கவலைப் படத் தேவை இல்லே !” சொல்லி மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்தார்.

மாலதிக்கு நிம்மதி மூச்சு வந்தது.

கடைக்கு வந்து மருந்துகள் வாங்கினாள். கடைக் கடிகாரம் மணி ஒன்பதைத் தொட. …இனி சமைக்க முடியாது ! பட்டது.

இரண்டு கடைகள் தள்ளி ராகுலுக்கு ரொட்டியும், உணவு விடுதியில் தனக்கு இரண்டு இட்லிகளையும் கட்டிக் கொண்டாள்.

தாயும் மகனும் மீண்டும் ஆட்டோ ஏறி வீடு வந்து இறங்கினார்கள்.

‘ இந்நேரம். . வீட்டில் கணவனிருந்தால் கண்டிப்பாய் அடுப்பு மூட்டியே ஆக வேண்டும். சப்பாத்தி, தோசை ஏதாவது ஒரு பலகாரம் செய்ய வேண்டும். இப்போது அது தேவை இல்லை. பிறருக்காகக் கஷ்டப்படத் தேவை

இல்லை. இல்லாமல் இருப்பதும் ஒருவகையில் லாபம். ! ‘ என்று நினைக்கும்போதுதான். …

சுதாகர் மனக்கண்ணில் வந்தான்.

எனக்கென்ன பதில் ..? கேட்டான்.

என்ன பதில். .? இவளுக்குள் திக்கென்று ஒரு அடைப்பு. !

– தொடரும்…

– ஆகஸ்ட் 1, 2001ல் குங்குமச் சிமிழ் இதழில் பிரசுரமான குறுநாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *