மனசுக்குள் மாலதி…





அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-16
‘மகனை விட வேறு என்ன வேலை..?’ – மாலதி அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுப்பு சொல்லிவிட்டாள்.

அலுவலகமே திரண்டு வந்து ராகுலைப் பார்த்தது. எல்லோருமே வருத்தப்பட்டார்கள்.
சுதாகர் ரொம்ப ரொம்ப அக்கறையாய் விசாரித்தான்.
“நீங்க வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு வாங்க மாலதி. நான் பையனுக்குத் துணை இருக்கேன்!” சொல்லி உதவிக்கு வந்தான்.
“இல்லே இருக்கட்டும்” மறுத்தாள்.
மாலதி ஒரே நாளில் இளைத்துத் துரும்பாக போனது அவனுக்கு வலித்தது.
“சாப்பாடு. .?” கேட்டான்.
“ஓட்டல்!”சொன்னாள்.
“நான் வாங்கி வர்றேன்”எழுந்தான்.
“உங்களுக்குத் சிரமம் வேணாம்!”
“சிரமமில்லை மாலதி!”
“என்னால முடியலைன்னா. உங்களை அழைக்கிறேன்.”வெட்டி பேசினாள்.
“நீங்க யார்கிட்டேயும் ஒட்டமாட்டீங்களா மாலதி. ..?”சுதாகர் பொறுக்க முடியாமல் கேட்டான்.
“ஒட்டினா மனசு ஒட்டிடும் சுதாகர்.!”
“எவர் தயவும் தேவைக்கு இல்லே. யார் உதவியும் வேணாம். எல்லோரையும் உதறி தள்ளிட்டு இப்படி தனி மரமாவே எத்தனைக் காலம் வாழ்வீங்க மாலதி. .? செத்தா… நாலு பேர் தூக்கிப் போறதுக்காவது பழகனும்!”சொன்னான்.
“நான் எல்லோரையும் ஒதுக்கித் தள்ளலை சுதாகர். ஆண்தான் வெறுப்பு. அந்த வெறுப்பைப் பெண்களும் பார்த்து பயப்படுறாங்க. என்னிடம் நெருங்காம ஒதுங்குறாங்க. நானும் கவலைப்படலை. யார் தயவும் தேவை இல்லாம. ..எதையும் தனியா செய்யனும், சந்திக்கனும் என்கிற துணிச்சல் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. செத்தா நாலு பேர் தூக்கத் தேவை இல்ல. இன்னைக்கு எல்லா சாவுகளும் நாலு சக்கர வாகனத்துல போகுது. தயவு செய்து எனக்குத் தொந்தரவு கொடுக்காதீங்க சுதாகர். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!”கையெடுத்துக் கும்பிட்டாள்.
அதற்கு மேல் அங்கு எப்படி இருக்க முடியும். .?!!
‘ரொம்ப முரண்டு! என்ன பெண்ணிவள். .?’ சுதாகர் வெறுத்து வெளியே வந்தான். ஆனாலும் அவள் மேல் கசப்பில்லை.
‘இவளுக்குள் இத்தனை வெறுப்பென்றால் மனதில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ?!!’ மனம் படக்கென்று யோசித்தது.
அதே சமயம் மருத்துவமனைக்குள்…. .
‘என்னை விட்டுடுங்க சுதாகர். உங்களுக்காக வசந்தா காத்திருக்கிறாள்.!’மாலதி அவனுக்காக வேண்டி மகனுக்கருகில் அமர்ந்தாள்.
ஒரு வார விடுப்பில் ராகுல் முற்றிலுமாக குணமாகி விட்டான்.
மாலதி மறுபடியும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டாள்.
“சாலையில் பார்த்து நடக்க வேண்டும்!”என்று மகனுக்குப் புத்திமதி சொல்லி பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் வந்தாள். .
மாலை.
அலுவலகம் விட்டுத் திரும்பும்போதுதான் அந்த அதிர்ச்சி, அதிசயம் இவள் கண்ணில் பட்டது.
‘சுதாகரை யார் காதலிக்கிறாள் என்று நினைத்தாளோ… அவள் சிவாவின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்து அவனுடன் சிரித்து பேசி சென்றுகொண்டிருந்தாள். .
‘நிஜமா… பொய்யா. ..!!’ தன் கண்களை நம்பமுடியாமல் மாலதி உற்றுப் பார்த்தாள்.
சத்தியமாக அவளேதான்.!!!
‘எப்படி! எப்படி. .?’ இவளுக்குள் வண்டு குடைந்தது.
‘உதவி செய்யப் போனவளை இணைத்துப் பார்த்தது நம் தவறு.!’ மனசு உறுத்த…அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டாள்.
மறுநாள் மதியம். அலுவலக சாப்பாட்டு அறையில்,”வசந்த்!”என்று அழைத்தாள்.
“என்ன. .?”அவள் சாப்பிடுவதை நிறுத்தி இவளை பார்த்தாள்.
“நீயும் சிவாவும். ..”
“காதலிக்கிறோம்!”வசந்தா எந்தவித தங்கு தடையுமின்றி சொன்னாள்.
“சந்தோசம்!”சொல்லி பேச்சை முடித்துக்கொண்டாள்.
ஆனாலும் மனம் என்னவோ நிறைவாய் இல்லை. எதனால் இந்த குறை. ? இவளுக்குத் தெரியவில்லை.
‘சுதாகரை வசந்தா காதலிக்கவில்லை!’ இது நெருடலாக இருந்தது.
‘சுதாகர் மீண்டும் தனக்குத் தொல்லை கொடுப்பான்!’ என்கிற பயம் இவளையும் அறியாமல் வந்து அச்சத்தை ஏற்படுத்தியது.
‘மருத்துவமனையில் அப்படி முகத்திலடிப்பது போல சொல்லியும் அவன் நம் பக்கம் திரும்புவான். .?!’ யோசித்தாள்.
‘திரும்பமாட்டான்! அப்படி திரும்பினால். …????’ அதுவே குடைச்சலாக இருந்தது.
வெறுக்க வெறுக்க விரும்புவதும். விலக விலக நெருங்குவதும்தானே மனித இயல்பு.!!
அப்படி ஆனால். .??…
‘நம்மை மீறி எதுவும் நடந்து விடப் போவதில்லை. ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும். மாற்றுவோம்!’ நெஞ்சுக்குள் துணிவை வரவழைத்துக் கொண்டாள்.
‘ஆணென்ன அவ்வளவு மோசம். ஒருவன் மோசமென்றால் அந்த தோற்றம் வளர்ச்சி வர்க்கமே மோசமா. .?!’ மனதின் மறுமொழியை ஒதுக்கினாள்.
மனசு அப்படியே நகர்ந்து…. வெங்கடகிருஷ்ணன் பக்கம் சென்றது.
‘ஆயிரம்தான் அநியாயக்காரனாக இருந்தாலும், ராகுலை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்ததிற்காவாவது ஒரு மூன்றாவது மனிதன் என்கிற முறையில் ஒரு நன்றி சொல்லி இருக்கலாம்.!’நினைத்தாள்.
‘தேவை இல்லை. ஈவு இரக்கமே இல்லாத மனிதனுக்கு இம்மி அளவு இளகுவது பாவம்! அவன் ராகுலைத் தொட்டதே குற்றம்!’ அதையும் ஒதுக்கினாள்.
என்றாலும். … விதி இவளுக்கு வேறொரு ரூபத்தில் வளைய வந்தது.
அடுத்த நாள் மாலை வெங்கடகிருஷ்ணன் இவள் பேருந்து நிறுத்தத்தில் நின்றான்.
‘ஏன் நிற்கிறான், எதற்கு நிற்கிறான், தனக்காக நிற்கிறானா, வேறு எவருக்காகவாது நிற்கிறானா..???’. அடுக்கடுக்காக கேள்விகள். இதயம் படபடத்தது.
இவள் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றதும்தான் தாமதம். ..
“நான் உனக்காக நிற்கிறேன் மாலதி!”சொல்லி… அவன் அருகில் வந்தான்.
இவளுக்குப் பயத்தில் லேசான நடுக்கம் வந்தது.
“ஏன். ?….”மறைத்துக்கொண்டு கேட்டாள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும். ..”
“எ. .. என்ன பேசனும். .?”
“காயத்ரிகிட்ட நீ என்ன சொன்னே. .?”
“எல்லாம் சொன்னேன்.!”
“அவளா கேட்டாளா….?”
“இல்லே நானா சொன்னேன்!”
“நான் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஆறுமாசத்துக்கு மேல ஆகுது. நீ வேலை செய்யும் அலுவலகம், குடியிருக்கும் வீடு… எதுவும் எனக்குத் தெரியாது. ஆனாலும்…. உன்னை நான் கடைத்தெருவில் நிறையத் தடவை பார்த்திருக்கேன். என் அறை நண்பர்கள், அறிமுகமானவர்கள் எவரிடமும். .. நீ என் முன்னாள் காதலி, மனைவி, குணாதிசயம் இப்படின்னு நான் வாய் திறந்து ஒரு வார்த்தை யாரிடமும் சொன்னது கிடையாது. நீ மட்டும் ஏன்… என்னைப்பத்தி காயத்ரிகிட்ட சொல்லனும். ?”நேருக்கு நேராகக் கேட்டு அவள் கண்களை பார்த்தான்.
“அவள் என் உயிர் தோழி!”இவளும் சளைக்காமல் பதில் சொன்னாள்.
“நீ சொன்னதால எனக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா…? என்னைக் காதலிச்சு, கலியாணம் வரைக்கும் வந்தவள் இப்போ என்னை மறந்துடுங்க. மன்னிச்சிக்கோங்க சொல்லி விலகிட்டாள்.”
“சந்தோசம்!”
“மாலதி! மனுசன் திருந்தி வாழ வாய்ப்பே இல்லையா. .?”
“பிறவிக்குணத்தை மாற்ற முடியாது என்கிறது என் அபிப்பிராயம்.!”
“மாத்த முடியும் மாலதி. நான் மாறி இருக்கேன்.!”
“நம்பிக்கை இல்லே! நாய் வால் நிமிராது.!”
“காலம் என்னை மாத்திடுச்சி. பணத்துக்காக நான் எவ்வளவு மாட்டமா நடந்திருக்கேன்னு உன் விவாகரத்து பிரிவு எனக்கு சொல்லி கொடுத்துடுச்சு. உன்னைக் கொடுமைப் படுத்தினதுக்காக நான் வெட்கப்பட்டேன், வேதனைப்பட்டேன். இனி இப்படி நடக்கவே கூடாதுன்னு மாறிட்டேன்.!”
“சந்தோசம்!”
“இந்த சந்தோசம் சரி இல்லை மாலதி! வார்த்தைகள் அடிமனசுலேர்ந்து வரலை.”
“சரி. நீங்க மாறினதுக்கு சந்தோசம்.! அடுத்து. .?”
“இனி என்ன சொன்னாலும் காயத்ரி காதுல ஏறாது.!”
“சரி. நான் அவளிடம் உங்களை பத்தி சொன்னது தப்பு. மன்னிச்சுடுங்க.”சொல்லி வந்த பேருந்தில் ஏறி மறைந்தாள்.
‘இவன் உண்மையிலேயே திருந்தி விட்டானா. திருந்தியவன் போல் நடிக்கிறானா. பாதிப்பு இவனால் பின் விளைவுகள் நமக்கு ஏற்படுமா. .? சங்கடங்கள் கொடுப்பானா. .?’அவளுக்குள் கேள்விகள் முளைத்தன.!
அத்தியாயம்-17
‘காயத்ரி ஆபத்திலிருந்து தப்பிவிட்டாள்!’ என்று மாலதி நினைத்தாலும். …
வலி. ..? – நினைக்க வருத்தமாக இருந்தது.
‘அந்த சண்டாளன் மறுபடியும் அவளை மயக்கிக் கட்டிக் கொண்டுவிட்டால். ..?!’ நினைக்க சொரக். திக்கென்றது.
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்துவிட்டான் அவன். விதியே என்று நொந்து கிடந்தவள் காயத்ரி. அவள் மனதுக்கு மருந்து தடவுவது போல பேசி, மயக்கி, மறுமண ஆசையை த் தூண்டிவிட்டுவிட்டான்.
இனி உணர்ச்சிகள் அடங்கு என்றால் அடங்குமா. .? கஷ்டம்.!
ஆனாலும் முடியும்.! மனம் நினைத்தால் எதையும் மாற்றமுடியும்.!!
காயத்ரிக்கு இவன் பொருத்தமில்லை. நல்லவனாகப் பார்க்கலாம். இல்லையென்றால்…. இந்த தடுமாற்றம் வேறொரு சேற்றில் விழா வாய்ப்புண்டு. அதற்குள் காயத்ரி மனசு தெளிய வேண்டும்.
வாழ்வில் இரண்டாவது முறையாக தவறு செய்துவிட்டோமேங்கிற நினைப்பில் வாழ்க்கையை வெறுத்திருக்கலாம். இல்லை…. என் போல் ஆண் வாடையே வேண்டாமென்று கூட தன்னிடம் சொல்லலாம். காயத்ரி இவனைப் பேசி அனுப்பிவிட்டு என்ன செய்து கொண்டிருக்கிறாள். அவள் மனம் என்ன. .? – என்று நினைக்கும்போதுதான். ..
கும்பிடப்போனது தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி காயத்ரி தலை தெரிந்தது. அவள் மாலதி வீடு நோக்கி வந்தாள்.
இவள் இருப்பிடம் விட்டு சட்டென்று எழுந்தாள்.
வாசலுக்கு வந்து அவளை….
“வா..! வா…!”என்று மலர்ந்து வரவேற்றாள்.
அவள் உள்ளே நுழைந்த அடுத்த வினாடியே …
“ராகுல் எங்கேடி. .?”பரபரப்பாக கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் காயத்ரி.
“அவன் வெளியே விளையாட போயிருக்கான்.”சொன்னாள்.
“அவனுக்கு விபத்துன்னு கேள்வி பட்டேன் உண்மையா. .?”
“ஆமாம்!”
“எப்படி இருக்கான். ?”
“நல்லா இருக்கான்.!”
“இப்போ சரியாகிடுச்சா. .?”
“ஆயிடுச்சு”
“நான் பத்து நாள் வெளியூர் போயிருந்தேன். இப்போதான் வந்தேன். கேள்விப்பட்டதும் ஓடி வந்தேன்.”என்றவாறு வாங்கி வந்த பிஸ்கட் , பழங்கள் எடுத்து எதிரிலிருந்த டீபாயில் வைத்தாள் .
மாலதி…தோழியின் அன்பு, அக்கறையில் உருகிப்போனாள்.
“உனக்கு யாரு காயத்ரி சேதி சொன்னா. .?”
“சுதாகர்!”
மாலதி இதை எதிர்பார்க்கவில்லை. சட்டென்று உள்ளுக்குள் கசப்பு. அவன் பேச்சு பிடிக்கவில்லை. காயத்ரியை விட்டால் அவனைப் பற்றி பெரிய புராணமே பாடி விடுவாள்! அதனால். …
“அப்புறம். ?அந்த வெங்கடகிருஷ்ணன் எப்படி இருக்கார் ?”பேச்சை மாற்றினாள்.
“அந்த ஆளை மறுநாளே புடிச்சி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன். அப்படியே தலையும் முழுகிட்டேன்.”சொன்னாள்.
காயத்ரி உற்சாகமாக சொன்னது மாலதிக்கு திருப்தியாக இருந்தது.
“அந்த பாதிப்பு என்னிடம் வந்தார்.”ஆரம்பித்தாள் .
“அப்படியா. ..?!!!”
“வந்து என்ன சொன்னான். ..?”
“ஏன் சொன்னே, எதுக்குச் சொன்னே…? குதிச்சார். நான் தான் அவள் மேல் உள்ள அக்கறையில் சொன்னேன். அவள் என் தோழின்னு முகத்திலடிச்சாப்போல சொல்லி அனுப்பினேன்.”என்றாள்.
“அந்த ஆள் நீ சொன்னதைக் கேட்டு சும்மா போனானா. .? இல்லே உன்னை கொலை கிலை செய்வேன்னு மிரட்டிப் போனானா. .?”
“அப்படியெல்லாம் இல்லே.”
“சும்மா சொல்லு. அலட்சியம் வேணாம். அவன் வஞ்சம் வச்சு பின்னால உனக்குத் தொல்லை கொடுக்கலாம்.”எச்சரித்தாள்.
“அதெல்லாம் என்னிடம் நடக்காது.”என்று மாலதி தன் கட்டை விரலை அசைத்து காட்டினாள்.
“எதுக்கும் நாம எச்சரிக்கையாய் இருக்கிறது நல்லது. நான் அங்கே தனியாத்தானிருக்கேன். ஒன்னு செய்யலாம். நாம் ரெண்டு பேரும் ஒண்ணா ஒரு இடத்துல இருக்கலாம்.”
“எனக்குப் பயமில்லே. உனக்குப் பயம்ன்னா இங்கே வரலாம். எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லே.”
“எனக்கும் பயமில்லே….!!”காயத்ரி தோள்களை குலுக்கிக்கொண்டாள்.
“வெங்கடகிருஷ்ணனைத் தூக்கி கிடப்பில் போட்டாச்சு. அடுத்து. … .?”கேட்டு மாலதி தோழியைப் பார்த்தாள்.
“ஏய். ..! நான் ஆம்பளைக்கு அலையல.”காயத்ரி பதறினாள்.
“இல்ல காயத்ரி. நீ வாழனும். வாழ வேண்டியள்.”மாலதி நிதானமாக சொன்னாள்.
“நீ. .?”இவள் கேட்டு அவளைத் திருப்பித் தாக்கினாள்.
“நான் முடிச்சுட்டேன். புள்ளையும் பெத்து.. வாழ்க்கை வெறுத்தாச்சு.”
காயத்ரிக்கு கேட்க சங்கடமாக இருந்தது.
“பெண் தாயாகனும் காயத்ரி. அதுதான் அவளின் பெண்மையின் முழுமை. நீயும் தாயாகி கணவனோடு சந்தோசமாக வாழனும்.”
“நெனைச்சேன். அதான் கெட்டுப்போச்சே. .”காயத்ரி வருத்தப்பட்டாள்.
“கெட்டுப் போகல. மனசு வச்சா மாறலாம். வேற வரன் தேடலாம்.”
“எப்படி. .?”
“வழி இருக்கு. வாழ நினைச்சோம்ன்னா நமக்குன்னு ஒருத்தன் எங்கேயாவது பொறந்திருப்பான்.”
“அவனை எப்படி கண்டுபிடிக்கிறது. ..?’
“யோசிக்கனும்.”
“நீ யோசி. நான் கிளம்புறேன்.”காயத்ரி விடை பெற்றாள்.
மாலதிக்குத் தோழி மறுமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டது சந்தோசமாக இருந்தது.
இவளை போல் வாழ வேண்டிய வயதில் உள்ள விதவைகள் தங்கள் மனதை மறைக்காமல் மறுமணத்திற்குச் சம்மதித்து திருமணம் முடித்துக் கொண்டால் அவர்களுக்கு கஷ்டம் தீரும். விதவை கள்ளத்தொடர்பு அதனால் அவமானம், கொலை, கொள்ளை, தற்கொலையெல்லாம் ரொம்ப குறையும்! – நினைக்க இவளுக்கு இதமாக இருந்தது.
சுதாகருக்கு அன்றைக்கு மாலதி முகத்திலடித்த மாதிரி பேசியதிலிருந்து வருத்தம். அவள் ஆண் வாடையே வெறுத்து ஒதுக்குகிறாள் என்பதில் துக்கம்.
‘தன்னுடைய அணுகுமுறை சரி இல்லையா. இப்படி இல்லாமல் வேறு எப்படித்தான் நெருங்குவது..?!!’என்றும் சிந்தித்தான்.
ஒருவேளை நாம் பாறையில் மோதுகிறோமா. .!! – நினைவு வந்தது.
அதுகூட… எறும்பு ஊற தேயும்!. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்! நினைத்தான்.
இவளின் இந்த கடுமையான இறுகல்,பாதிப்பிற்கு யார் காரணம்.??’ – சிந்தனை செய்தான்.
விவாகரத்துப் பெற்று குழந்தையுடன் பிரிந்திருக்கிறாள் என்றால் கணவன்தான் காரணம்! அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அவன் யார், எப்படிப்பட்டவன், என்ன செய்தான், யாரைக் கேட்டால் தெரியும்…? – யோசனை ஓட்டினான்.
வெகுநேர சிந்தனைக்குப் பிறகு …
பக்கத்திலுள்ள காயத்ரி மனதில் பட்டாள்.
அவளை சந்தித்து விபரம் கேட்டான்.
அவள் சொன்னதும் ஆடிப்போனான்.
நியாயம் உணர்ந்தான்.
ஆனாலும் எல்லா ஆண்களும் அப்படி இல்லை.! என்று நினைத்தான்.
இதை மாலதியிடம் எப்படி தெரிவிப்பது, உணர்த்துவது ? – தடுமாறினான்.
அவள் இவனுக்குப் பிடியே கொடுக்காமல், பார்வையில் படாமல் மறைந்தாள். அலுவக வேலையாய் அறைக்குள் நுழைந்தால் கூட அனாவசியமாக எந்த பேச்சும் பேசாமல் வந்த வேலையை முடித்துச் சென்றாள்.
அவளை வழியில் நிறுத்தியோ, வீட்டில் சிந்தித்துப் பேச… பயமாக இருந்தது.
அதிக தொந்தரவு சமயத்தில் ஆபத்து.! என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
காய் எத்தனைக் காலத்திற்குத்தான் கனியாமலிருக்க முடியும். .? – விட்டான்.
மாலதியின் பாராமுகம், பேச்சு, நடை உடை பாவனைகள் எதிலும் மாற்றமில்லை.
காய் கனியுமென்று நம்பிக்கை இல்லை.!!
‘வீண்!’ நொந்து கோப்புகள் பிரித்தான்.
‘உங்களை இன்று மாலை பாரதி பூங்காவில் சந்திக்க விரும்புகிறேன்.!’ – மாலதி துண்டு காகிதத்தில் அவளின் மணி மணியான கையெழுத்து!
மாலதி மனசு மாறிவிட்டாள்! இவனுக்குள் குபுக்கென்று குதூகலம் எட்டிப் பார்த்தது.
‘எப்படி. . எப்படி. .?’ திகைத்தான். அந்த திகைப்பை வளரவிடாமல் மகிழ்ச்சி அமுக்கியது.
இவன் இருக்கையில் சரிந்து கண்ணாடி தடுப்பிற்கு வெளியே அவளை பார்த்தான்.
மாலதி எதுவும் நடக்காதது போல் வேலையிலிருந்தாள்.
வாழ்க்கையில் கணவனால் அதிகம் பாதிக்கப்பட்டவள் . ரொம்ப அடிபட்டவள். அதை ஈடுகட்டும் விதத்தில் இரண்டு மடங்கு சந்தோசத்தைக்
கொடுக்க வேண்டும். இவனுக்குள் பரிவு வந்து.. இப்படி தன்னைப்பற்றி நினைத்தான்.
ஒரு மனைவிக்கு நல்ல கணவனாக வாழ்வது எப்படி ? யோசனைக்குப் போனான்.
ராகுல். .?! அவனைச் சொந்த மகனை விட அன்பாய், ஆசையை வளர்க்கவேண்டும். தனக்கு வாரிசு என்ற ஒன்று தேவை இல்லை. அவனே வாரிசு! மனதில் சொல்லிக் கொண்டான்.
“அம்மா! அப்பா உன்னை விட நல்லவர்ம்மா”குழந்தை சொல்லவேண்டும்.
விபரம் புரிந்த நாளிலிருந்து அவன் அப்பா அன்பு, முகம் தெரியாதவன். பாசம் காட்டினால் அதிகம் ஒட்டுவான். அவனுக்குச் செல்லம் கொடுத்துச் சீரழிக்காமல், படிப்புச் சொல்லிக் கொடுத்து, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, பிற்காலத்தில் அவனை நல்லவனாக, வல்லவனாக ஆக்கி ,ஒரு நல்ல தகப்பனுக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். எவர் பிறப்பாக இருந்தாலும்… நல்ல வளர்ப்பு குழந்தையை நல்லவனாக்கும்.! நினைத்தான்.
அவனுக்கு வேலை ஓடவில்லை.!!
அத்தியாயம்-18
பூங்காவில்……
மாலதி மெளனமாக அமர்ந்திருந்தாள்.
எப்படி ஆரம்பிப்பது , பேசுவது என்கிற யோசனையில்.. சுதாகர் ஸ்ககூட்டரை வெளியே நிறுத்திவிட்டு துள்ளலாக நுழைந்தான். ஆவலை அடக்கிக் கொண்டு மாலதி அருகில் துணிச்சலாக அமர்ந்தான்.
ஆணின் அருகாமை அவளுக்குள் கூச்சத்தை ஏற்படுத்தியது. அவனை நிமிர்ந்து பார்த்து கொஞ்சம் கண்கள் படபடத்து தலை கவிழ்ந்தாள்.
“சொல்லு மாலதி. .?”பார்த்தான்.
“நீ. .. நீங்க என்னை உண்மையா காதலிக்கிறீங்களா. ..?”
“ஆமாம்.”
“ஏன். .?”
“தெரியல. .”
“உங்க காதல் உண்மைன்னா நான் சொல்றபடி கேட்கனும். .”
“சொல்லு. .?”
“நீங்க என்னை மறக்கனும்.!!”
தடாலடி! இவன் எதிர்பாராதது.
அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“ம. .. மறந்து. …?”… தடுமாறிக் கேட்டான்.
“என் தோழி காயத்ரியைக் கலியாணம் பண்ணிக்கனும்.”
இதுவும் இவன் எதிர்பாராதது.
“ஏன். .. ?”கேட்டான்.
“அவள் விதவை. வாழ வேண்டியள். . விவாகரத்தான எனக்கு வாழ்க்கை கொடுக்கிறதைவிட அவளுக்கு கொடுக்கிறது மேல். ரொம்ப நல்லது.”
“நான் காதலிக்கிறது உன்னை. நீ… என்னைக் கலியாணம் பண்ணிக்கிறச் சொல்றது வேறொருத்தியை. எப்படி நியாயம். .?”
“உங்க நல்ல மனசுக்கு ஏத்த மனைவியாய் என்னால வாழமுடியாது சுதாகர்!”
“ஏன். .?”
“வாழ்க்கையில் கசப்பு. ஆண் துணையே வேணாம் முடிவு பண்ணிட்டேன்!.”
சுதாகர் அவளை பாவமாகப் பார்த்தான்.
“கேள்விப்பட்டேன் மாலதி. காயத்ரி சொன்னாள். ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா. .. எல்லா ஆண்களையும் நீ ஒரே மாதிரியாய் நினைக்கிறது தப்பு.”
“மன்னிக்கனும். என் மனசு மாறாது. நான் என் கணவரைப் தேர்ந்தெடுத்ததுக்கு இந்த வாழ்க்கை தண்டனை.”
“தண்டனை போதும் மாலதி….”
“இது ஆயுள்தண்டனை.! வற்புறுத்தாதீங்க.”
“மாலதி! நீ மனசு மாற மாட்டே. நான் மாறணுமா. .?”
“நான் உங்களைக் காதலிக்கலையே.”
“ஆனா. .. நான் காதலிக்கிறேன். .!”
“மனசும் மனசும் சேர்றதுதான் காதல். அதுதான் ஜெயிக்கும். நீங்க என் மேல் அன்பு வைச்சிருக்கிறது ஒருதலைக்காதல். அது எப்படி ஜெயிக்கும். .?”
“ஜெயிக்க வேணாம். அதுக்காக நீ என்னை மனசு மாறச் சொல்றது சரி இல்லே.”
“சரி இல்லேதான். ஆனா. .. நீங்க என் மேல் அன்பு வச்சதால சொல்றேன். என்னை நினைச்சு நீங்க ஏன் உங்க வாழ்க்கையைப் பாழ் பண்ணிக்கணும். .? அந்த ஆதங்கத்துல சொல்றேன். ஒரு நல்ல காரியத்துக்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறதும் நல்ல காதல்தான்.”
“என்ன நல்ல காரியம்.??”
“விதவை மறுமணம்!”
“………….”
“காயத்ரி என்னை விட அழகு. அது மட்டுமில்லாம அவ வாழத் துடிக்கிறாள். கணவன் மேல் அன்பாய், ஆசையாய், அந்நியோன்யம், பாசமாய் இருப்பாள். நான் அப்படி இல்லே. ஆணை வெறுத்தவள், வாழ்க்கை கசந்தவள். எந்த சூழ்நிலையிலும் என்னால குடும்பத்துல ஈடுபாட்டோடு வாழ முடியாது. அப்போ நான் உயிர் வாழறேன். .? என் குழந்தை ராகுலுக்காக. அது மட்டுமல்ல ஒரு பெண்ணாலே ஆண் துணையில்லாமல் நல்லா வாழ முடியும் என்கிறதை நான் வெளியில காட்டணும்ன்னு ஆசைப்படுறேன்.”
‘இவ்வளவு உறுதி, தெளிவாய் வாழ்பவளை எப்படி மனசு மாறி வாழ வைக்க முடியும். .? வற்புறுத்தி வாழ வைப்பது எப்படி சரியாகும். .?’ சுதாகர் நினைத்தான்.
“காயத்ரிக்கு இந்த விஷயம் தெரியுமா. .?”கேட்டான்.
“இன்னும் சொல்லலை. உங்க முடிவு தெரியாமல் நான் வார்த்தையை விட முடியாது. அவளிடம் விசயத்தை முன்கூட்டியே சொல்லி, நீங்க மறுத்தால். .. வாழ்க்கையில் மூணாவது முயற்சியும் தோல்வின்னு மனசு உடைந்து விடுவாள். உங்க சம்மதம் தெரிந்து அவளை வழிக்குக் கொண்டு வரலாம் என்கிறது என் எண்ணம்.”
சுதாகர் பேசவில்லை.
‘இனி எப்படி பேசியும் இவள் சரி வரமாட்டாள்!’ – என்பது இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அதே சமயம். .. இவளை இப்படியே விட்டுவிடவும் மனமில்லை.
“உங்க புருசனோட நீங்க மறுபடியும் சேர்ந்து வாழலாமே. .”சொன்னான்.
“அது முடிந்து போன விஷயம்.”மாலதி கறாராக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
மாலதி வெங்கடகிருஷ்ணனுக்கு வில்லியாகி விட்டாள். அவன் எல்லோருக்கும் எமனாக முளைத்துவிட்டால் என்ன செய்வது ..? என்கிற பயம் இவனுக்குள் வந்தது.
“இதுக்கு நான் யோசிச்சு முடிவு சொல்லனும். .”சொன்னான்.
மாலதிக்கு அதுவும் சரியாகப் பட்டது.
விடை பெற்றுக்கொண்டார்கள்.
அறையில் படுத்து சுதாகர் எவ்வளவு யோசித்தும் வெங்கடகிருஷ்ணன் இவர்களுக்கு வில்லனாக இருந்தான். எமனாகவும் தெரிந்தான்.
என் காதலைக் கெடுத்தியா. .. ? – மாலதியைக் கொல்லவும் துணியலாம்.!
என் காதலைத் துறந்ததற்குப் பரிசு! காயத்ரிக்கு கத்திக் குத்து.! அவள் உயிருக்கு ஆபத்து.! – அதுவும் நடக்கலாம்.
என் காதலியையா கலியாணம் பண்ணினே. .?! – இவன் உயிருக்கும் ஆபத்து.! இதுவும் நடக்கலாம்.
என்ன செய்வது. எப்படி சமாளிப்பது.?- புரண்டான்.
காலை எழுந்ததும் காயத்ரி வீட்டிற்குச் சென்றான்.
“வெங்கடகிருஷ்ணன் விலாசம் வேண்டும். .!”கேட்டான்.
“ஏன். ..?”
“வேலை விஷயமா பேசனும். ..”- உண்மையைச் சொன்னால் மிரண்டு விடுவாள் என்பதால் பொய் இப்படி சொன்னான்.
கொடுத்தாள்.
அரை மணி நேரப் பயணம்.
அவன் அறை… நகரத்தைச் தாண்டி ஒதுக்குப் புறமாக இருந்தது.
அவன் அங்கு இடிந்து போனவனாக இருந்தான்.
சுதாகர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அமர்ந்தான்.
எப்படி ஆரம்பிப்பது. .? இவனுக்குள் சின்ன தடுமாற்றம்.
மெல்ல துணிந்து. ..
“காயத்ரிக்கு உங்களுக்கும் என்ன உறவு. .?”கேட்டான்.
“பத்து நாட்களுக்கு முன்வரை காதலர்கள்.!”
“இப்போ. .?”
“அவள் ஒதுக்கிட்டாள்.! நான் ஒதுங்கிட்டேன்.!!”பிசிறில்லாமல் சொன்னான்.
“ஏன். ..? ??”
“அது என் முதல் மனைவி செய்த கைங்கரியம். நான் அவளுக்கு செய்த கொடுமைக்குப் பரிசு.!”
சுதாகர் அவனை ஆழமாகப் பார்த்தான்.
அணை முழுக்க வெள்ளம். கரையை எவர் தட்டிவிட்டாலும் உடையும். இப்போது அந்த நிலை வெங்கடகிருஷ்ணனுக்கு .
“உங்களை என் உடன் பிறந்த பிறப்பா நெனைச்சி சொல்றேன். ..”என்று ஆரம்பித்து அவர்கள் வாழ்க்கை – விவாகரத்து எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கொட்டினான்.
எல்லாவற்றையும் கேட்டு முடித்த சுதாகர். ..
“நீங்க இப்போ திருந்திட்டீங்களா. ..?”பார்த்தான்.
“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். சத்தியமா திருந்திட்டேன். அடி, வலிகள் போதும். இனி எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காம இப்படி தனி மரமா வாழறதுன்னும் முடிவு பண்ணிட்டேன்.!”இதையும் அவன் தெளிவாகச் சொன்னான்.
“ஏன். ..?”
“அதுதான் மாலதி எனக்குக் கொடுத்த பாடம், தண்டனை.”
“புரியலை. .??!!”
“உன் கொடுமையில நான் குலைந்து தனி மரமா இருக்கும்போது, நீ மட்டும் திருமணம் செய்து மகிழ்ச்சியா வாழறது எந்த விதத்துல நியாயம்ன்னு அவள் எனக்கு மறைமுகமா சொன்ன சேதி. திருந்திட்டேன்னு சொல்லி மனசு மாறி சந்தோசமா வாழறது சரி இல்லே! இது எனக்கு உண்டான நீதி”
“இது நல்ல நியாயம்தான் சுதாகர். என் கொடுமையால் அவள் தனி மரமான பின், நான் மட்டும் திருமணமாகி சந்தோசமாக வாழறது எப்படி சரி.? அதனால்தான் நானும் இப்படி வாழறதுன்னு முடிவாகிட்டேன். அது மட்டுமில்லே என் சம்பாத்தியம், சேமிப்பெல்லாம் என் மகன் ராகுலுக்கு சேர வழி பண்ணிட்டேன். இனி யார் சொல்லியும் நான் மனசு மாற மாட்டேன். என் மனைவி மாலதியை வந்து வாங்க வாழலாம்ன்னு கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன்.”சொன்னான்.
‘என்ன மனங்கள். ..!?!!! சுதாகர் விக்கித்தான். ரொம்ப நேரம் அப்படியே சிலையாக இருந்தான்.
“நன்றி! வர்றேன்.”சொல்லி மெல்ல நடந்தான்.
அப்போது. . இவன் மனக்கண்ணில்….
காயத்ரியும் இவனும் மாலையும் கழுத்துமாக நின்றார்கள்.!
அடுத்து. ..
இவர்களுக்குத் திருமணம் முடித்த திருப்தியில் மாலதியும் வெங்கடகிருஷ்ணனும் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்தார்கள்.
தாயுடன் சென்ற ராகுல். .. சுதாகர் – காயத்ரி தம்பதிகளை பார்த்து சினேகமாக சிரித்தான்.
முற்றும்.
– ஆகஸ்ட் 1, 2001ல் குங்குமச் சிமிழ் இதழில் பிரசுரமான குறுநாவல்.