மனங்கள் மாறுமா?




(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சிலரும், இருமனம் கலந்தால் திருமணம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், துளசியின் வாழ்க்கையில் திருமணம் எங்கே நிச்சயிக்கப்படுகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் துளசிக்கு இப்போது வயது இருபத்து நான்கு (24). அவள் தன் வயதைப்பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால், தான் இப்படியே இருந்து விடுவோமோ என்ற எண்ணம் அவள் மனதின் ஒரு மூலையில் எட்டிப்பார்த்தது.

காரணம் அவள் ஐந்து வயதாய் இருக்கும்போது ஒரு சிறிய விபத்தில் துளசியின் இடது காலில் அடிபட்டதால் அவள் ஒரு காலை மட்டும் சற்று சாய்த்து நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
துளசி தன் வாழ்க்கையைப்பற்றி எண்ணி பயம் கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. படிப்பில் கெட்டிக்காரியான அவள் பெற்றோரின் வசதிக்கேற்ப உயர்நிலைக்கல்வியை முடித்துவிட்டு, தட்டெழுத்து பயிற்சியும், கணிணி பயிற்சியும் பெற்றிருந்தாள்.
துளசி ஆசிரியையாக விரும்பி சிங்கப்பூரில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஒரு நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தாள். சிறு பிள்ளைகளை பார்க்கும் போது, அவர்களின் நடவடிக்கைகளில் துளசியின் மனம் ஆனந்தத்தில் சிறகடித்துப் பறக்கும். வகுப்பு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அன்று பள்ளிக்கு அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றாள். அந்தப் பூங்காவில் பல மரங்கள், பல வண்ணப் பூக்கள், பூக்களின் மேல் பட்டாம் பூச்சிகள் கண் கொள்ளாக் காட்சியை துளசி விரும்பி ரசித்தாள்.
(பாடல் : செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே) துளசியைப் பற்றி கவலைப்பட்டனர் அவள் பெற்றோர். எந்தக் குறையும் இல்லாத பெண்களுக்கே இந்தக் காலத்தில் திருமணம் நடப்பது பெரிய காரியமாக உள்ளதே!
தங்கள் மகள் துளசியின் வசீகரமான அழகு இந்த ஒரு காலால் தோற்றுப் போய் விட்டதே என அந்த அன்பு பெற்றோரின் மனம் மிகுந்த வேதனைப்பட்டது. இருந்தாலும் எல்லாம் வல்ல இறைவனை நம்பிக்கையுடன் வேண்டிக் கொண்டனர்.
துளசிக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். துளசியால் அவர்களின் திருமணமும் தாமதமாகிவிடும் என துளசியின் பெற்றோர் வருந்தினர்.
குடும்பத்தில் மூத்த பெண் துளசி இருக்கும் போது சிலர் அவள் தங்கை தாமரையை பெண் கேட்டு வந்தனர். இந்தச் சூழ்நிலையை நினைத்து அவர்கள் கவலைப்பட்டாலும், துளசியின் மனநிலை அறிந்து அவளுக்கு ஆறுதல் கூறினர்.
(பாடல் : ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்)
தேய்பிறை சந்திரனின் மங்கலான ஒளியில் தோட்டத்தின் நிறம் சாம்பல் பூத்தாற்போல் காட்சியளிப்பதைப் போன்று, துளசியின் வசீகரமான அழகு அவள் இடக்காலில் தோற்றுப்போனது. ஆனால் மற்ற பெண்களைப் போன்று துளசியால் எந்த வேலையானாலும் திறம்பட செய்து முடிக்க முடியும். துளசி அறிவிலும், ஆற்றலிலும் மிகச் சிறந்தவள். நல்ல மனம் படைத்தவள்.
குடும்பத்தில் மூத்த பெண் என்ற முறையில் பொறுப்புடனும், அனுசரணையுடனும் நடந்து கொண்டாள். அதே சமயத்தில் பள்ளியில் பிள்ளைகளின் திறன் அறிந்து பாடத்தை கற்பித்தாள்.
துளசியின் திறமையை அறிந்து பள்ளியின் முதல்வர், துளசியை பள்ளியின் துணை நிர்வாகியாகவும் செயல்படச் செய்தார்.
அன்று ஒரு நாள் பள்ளியின் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் பொருட்டு துளசி தன் பள்ளியின் சக ஆசிரியைகளுடன் சில பரிசுப் பொருட்கள் வாங்க கடைத் தொகுதிக்கு சென்றிருந்தாள்.
அப்பொழுது திடீரென்று ஓர் இளைஞன் துளசியின் முன் வந்து “மன்னிக்க வேண்டும், இது தங்களுடையது” என்று ஒரு சிறிய பணப்பையை துளசியிடம் நீட்டினான்.
துளசி ஆச்சரியத்துடன் தன் பணப்பையை “நன்றி ” என்று கூறி பெற்றுக் கொண்டாள். பணப்பையை எப்படி தவறவிட்டோம் என்று நினைத்துக் கொண்ட துளசி தன் மனதில் வேறு எந்த சலனமும் ஏற்படாமல் பொருட்களை வாங்கிவிட்டு சென்றாள்.
அவள் வாழ்க்கைப் பாதைக்கு சூரியன் உதித்தாகி விட்டதை அவள் அறியவில்லை .
அதே நேரத்தில் அந்த இளைஞனான அருண் என்பவன் துளசியை நினைத்துப் பாடினான்.
(பாடல் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்)
அருண் சிறுவயதிலிருந்தே நல்லொழுக்கத்துடனும், நல் அறிவுடனும் வளர்ந்தவன். ஏழைகளைக் கண்டால் மனதில் இரக்கம் கொள்வான், அனாதைக் குழந்தைகள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் மீது பரிதாபம் கொண்டு அவர்களுக்கு உதவும் மனம் படைத்தவன்.
அப்படிப்பட்ட அருண் துளசியின் மீது உண்மையான நேசம் கொண்டான். துளசியைப் பற்றி தன் பெற்றோரிடமும் கூறினான். துளசியின் அமைதியான அழகும் அடக்கமும் அருணை மிகவும் கவர்ந்தது. அருண் துளசியின் நினைவாகவே இருந்தான்.
மறுநாள் துளசி வேலை முடிந்து வீடு திரும்பும்போது அவள் முன் நின்றான் அருண். அவளிடம் பேச விரும்புவதாக கூறி, அருகில் உள்ள பூங்கா இருக்கும் இடத்திற்குச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, துளசியை விரும்புவதாகக் கூறினான்.
துளசிக்கு தன்னையே நம்ப முடியவில்லை. தன் கால் சற்று குறையுடையதை சுட்டிக் காட்டினாள். அதற்கு அருண் “வாழ்க்கை வாழ்வதற்கு இரு மனங்கள் ஒன்று பட்டால் போதுமானது, நான் உங்கள மனப்பூர்வமா விரும்பறேன்” என்றான்.
துளசி வானத்தில் சிறகடித்துப் பறந்தாள். தன் சம்மதத்தையும் தெரிவித்தாள். அருண்-துளசி இருவரும் மனமகிழ்ந்தனர்.
(பாடல் : சிரித்தாள் தங்கப்பதுமை அடடா, அடடா என்ன புதுமை)
வீடு திரும்பிய துளசி, தன் பெற்றோரிடம் அருண் பற்றி கூறினாள். இருவரும் மனம் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறினார்கள். தங்கள் மகள் துளசியின் திருமண நாளை நினைத்து காத்திருந்தனர்.
அருண் தன் விருப்பத்தை தன் பெற்றோரிடம் கூறி துளசி பற்றியும் கூறினான். அவர்கள் துளசியின் காலில் உள்ள குறையை எண்ணி மறுத்தனர்.
அருண் உறுதியாக துளசியைத்தான் மணப்பேன் என்று கூறியதற்கு, அவர்களோ கதைக்கும், கற்பனைக்கும் இது சரி வரும், ஆனால் நிஜ வாழ்க்கையில் இது சரிபட்டு வராது. “பின்னால நீதான் கஷ்டப்படுவே” என்று கூறி மறுத்ததுடன் துளசியைப் பற்றி இனி எந்தப் பேச்சும் கூடாது என்றும், அவர்கள் பார்க்கும் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்று கூறினர்.
அருண் மனம் வருந்தினான். துளசியை மறக்க முடியாமல் தவித்தான். விசயத்தை அறிந்த துளசி மனம் வாடினாள். இவ்வளவு நாள் இல்லாத ஆசையை தன் மனதில் வளர்த்துக் கொண்டு விட்டோமே என அருணை நினைத்து நெஞ்சம் துடித்தாள்.
“இறைவா என்னைப் ஏன் படைத்தாய், நான் இவ்வுலகில் பிறக்காமலேயே இருந்திருக்கக் கூடாதா” என இறைவனிடம் மன்றாடினாள்.
மறுநாள் துளசி வேலைக்குச் செல்லவில்லை. லீவு எடுத்துக் கொண்டாள். தன் தங்கை தாமரையோடு கோவிலுக்குச் செல்ல வேண்டும் என நினைத்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை. அருண் தன் தாயுடன் கோவிலுக்கு வந்திருந்தான். கோவிலில் மனமுருக வேண்டிக் கொண்டார்கள்.
துளசியை கோவிலில் கண்ட அருணிண் தாய் துளசியின் அழகைக் கண்டு, அவள் அடக்கத்தையும், பணிவையும் கண்டு, துளசிதான் தனக்கு மருமகளாக வேண்டும் என மனமார விரும்பினாள்.
நேரம் அறிந்து அருண் “அம்மா நான் விரும்பிய துளசி இவள்தான்”, என துளசியைக் காட்டியதும், அருணின் தாய் துளசியின் அருகில் சென்று, அவளிடம் பேசிவிட்டு துளசியைப் பற்றி தெரிந்து கொண்டவுடன் அருணிடம்,
“அருண், துளசிதான் என் மருமகள்” என்றதும், அருண்-துளசி இருவரும் தங்களையே மறந்தனர்.
அருணின் தாயோ இப்படி ஒரு நல்ல மருமகளை இழக்க இருந்தேனே என வருத்தப்பட்டார். துளசியின் நல்ல குணமும், மனமும், அழகும், அடக்கமும், அறிவும், அவள் சற்று சாய்த்து நடக்கும் சிறு குறையை மறைத்து அவளை வானளாவ உயர்த்திக் காட்டியது.
உடலில் குறையில்லாத பெண்கள் எத்தனையோ பேர் மனங்களில் குறையை வைத்துக் கொண்டு மரியாதையில்லாமல் நடக்கும் இந்தக் காலத்தில், துளசி உண்மையிலேயே மிக உயர்ந்தவள்.
அருண்-துளசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உறுதி செய்யப்பட்டது. சட்டப்படி இருவரின் திருமணமும் நல்ல நாளில் நடந்தது. மணமக்களை வாழ்த்தினர் அனைவரும்.
மனங்கள் மாறினாலும், பின் மனங்களாலேயே ஒன்று சேர்க்கப்பட்டனர்.
(பாடல் : செந்தமிழ் பாடும், சந்தனக்காற்று)
– ஒலிக்களஞ்சியம் 96.8ல் டிசம்பர் 1994ல் ஒலிபரப்பப்பட்டது, இசையும் கதையும், டிசம்பர் 1994.
– பிரகாசம் சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு: மே 2006, சிங்கப்பூர்.