மதம் மனிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 2,488 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூர்
2.7.2002

அன்புள்ள மகள் ரோசிக்கு அப்பா அனுப்பும் மின்னஞ்சல். இங்கு உன் தங்கை ஷெர்லி மற்றும் கலிம் எல்லோரும் நலமாக இருக்கிறோம். ஜப்பானில் நீயும், மாப்பிள்ளை ஹிருதயநாத்தும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு உன்னிடமிருந்து வந்த மின் அஞ்சல்தான். அதன்பின் எந்தத் தகவலும் இல்லை. எனக்கும் வயதாகிவிட்டது. உன் தங்கைக்குத் திருமணம் செய்துவிட்டால் நான் கண்ணை மூடுவதற்குத் தடையிருக்காது.

உன்னையே விரும்பி எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்த பையனையே அழைத்துவந்து வீட்டில் இருக்க வைத்துவிட்டு நீ காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு ஜப்பான் சென்றுவிட்டாய்.

காதலில் தோல்வியடைந்த எவனும் தற்கொலை செய்துகொள்வதும், தாடிவைத்துக் கொண்டு திரிவதும், இல்லையேல் பழிவாங்குவதும்தான் செய்வார்கள். ஆனால், இந்தப் பிள்ளை கலிமோ, உன் ஆசையை நிறைவேற்ற நமது வீட்டில் ஒரு தலைம கனாக இருந்து எல்லாக் கடமைகளையும் செய்கிறார். ஒருமுறைகூடக் கோபித்துக் கொள்ளாமல், ஒரு கடுஞ்சொல்கூடச் சொல்லாமல் எங்களைக் கவனித்துக் கொள்கிறார். நல்ல குணம். அவர் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கும் மேல் நமது குடும்பத்திற்காகவே செலவு செய்கிறார். நீ போய் ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஷெரீன் ஓ லெவல் முடித்துப் பாலியையும் முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்கிறாள். எங்கோயாவது மூன்று மாதம், நான்கு மாதம் என ஒரு நிரந்தரமில்லா வேலைதான் கிடைக்கிறது.

ஜாதி மதம் பார்க்காது, தம்பி கலீமுக்கே நமது ஷெரினைத் திருமணம் செய்து வைத்துவிட்டால், ஒரு கல்லில் பல மாங்காய்கள் உதிர்ந்தது போலாகிவிடும். இதை அவரிடம் நான் கேட்பதற்கு வெட்கமாக இருக்கிறது. எதையும் நீ சொன்னால்தான் அவர் கேட்பார் என நினைக்கிறேன்.

இப்படியொரு திருமணம் நடந்தால் ஷெர்லியும் ஒத்துக்கொள்வாள் என்று நம்புகிறேன். நீ எங்களுடன் இருந்திருந்தால், எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. இதற்கும் உன் உதவியை நாடும்

அப்பா ஆரோக்கியசாமி.


தோக்கியோ
5.8.2002

அன்புள்ள கலீமுக்கு ரோசி!

நலம் நாடுவதும் அதுவே.

அப்பா எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் சொன்னால்தான் நீ கேட்பாயாம்.

நீ ஒரு முஸ்லிம். நாங்கள் கிறுஸ்தவர்கள். ஆனால், நமக்கு இடையில் மதம் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் குறுக்கிட்டது கிடையாது. காரணம் நீயும் பள்ளிவாசல் போவதில்லை. நானும் தேவாலயம் போவதில்லை. ஆனால், நாம் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுதான் நமது நட்பிற்கும், உறவிற்கும் அடித்தளமாக இருந்துவருகிறது.

உன் தந்தையோ, தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்து, அங்கே உன் தாயாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் என்றும் சில ஆண்டுகள் கழித்து, நீ கைக் குழந்தையாக இருக்கும்போது உங்களிரு வரையும் விட்டுவிட்டுத் தமிழகத்திலிருந்த அவருடைய மூத்த மனைவியிடம் சென்றுவிட்டார் என்றும், பின்னர் உன்னைப் பெரியம்மாவிடம் சேர்ப்பித்து விட்டு, உன் அம்மா வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார் என்றும், உன் பெரியம்மா, பெரியபாசம் இல்லாமலும், அதே நேரத்தில் பெரிய வெறுப்பு இல்லாமலும், ஏனோ தானோ வென்றுதான் உன்னை வளர்த்தார் என்றும், நீ பதினைந்து வயதாகியிருக்கும் போது, உன் பெரியம்மாவின் மரணத்திற்குப் பிறகு, பெரியப்பா விடம் குறைந்த அளவு பாசத்தைக்கூடப் பெற முடியாததனால், நீ வெளியேறி ஒரு அச்சகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்து படிப்படியாகப் பல நிலைகளிலும் அச்சுத் தொழிலைத் தெரிந்து கொண்டதாகவும் நீ ஒரு முறை சொன்னதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது.

அதன்பின் சில ஆண்டுகள் கழித்துதான் நமது நட்பு ஆரம்பித்தது. நான் பணி செய்த நிறுவனத்தின் அச்சு வேலை தொடர்பாக நீ வேலை செய்த அச்சகத்திற்கு வந்தேன். அப்போது, உனது அச்சக உரிமையாளர் அவருடைய தாய் நாடான இலங் கைக்குச் சென்றுள்ளதாக நீ சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. நீ அப்போது அச்சகப் பொறுப்பாளராக இருந்தாய். நான் உன்னைச் சந்திக்க வரும் போதெல்லாம், உன் முதலாளி, இலங்கை யிலேயே தங்க ஆரம்பித்துவிட்டார். யாழ்ப்பாணத் தின் சாவகச் சேரியிலிருந்த தன் குடும்பத்தைக் கொழும்புவிற்கு வரவழைத்து, அங்கேயே ஒரு தொழிலை ஆரம்பித்துவிட்டார். சிங்கப்பூருக்கு வர விருப்பம் இல்லாமலிருக்கிறார். உன்னை நம்பித் தொழிலை விட்டுச் சென்றுள்ளார் என்றும் ஏதாவது மீதப்படும் தொகையை அவருக்கு அனுப்பி வைப்ப தாகவும் நீ என்னிடம் சொல்லியிருக்கிறாய்.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால் நமக்குள் எப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டது என்று சிந்தனையைத் தோண்டும்போது நினைவிற்கு வந்தவற்றை உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நீயோ இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய். நீ ஏன் திருமணம் செய்து கொள்ள வில்லை என்று நான் கேட்டதில்லை. காரணத்தை நானாக யூகித்துக் கொள்கிறேன். எனக்குப் பதிலாக, என் வீட்டில் தன் தந்தையையும், தங்கையையும் நன்றாகக் கவனித்துக் கொள்கிறாய் என்றும் எல்லாச் செலவுகளையும் நீயே செய்வதாகவும் உன்னைப் பற்றிப் பெருமையாக அப்பா எழுதியிருந்தார்.

தங்கையின் திருமணத்தை நடத்திவிட்டால் அவருடைய கடமை முடிந்துவிடும். அவர் உன்னிடம் கேட்கக் கூச்சப்படும் ஒன்றை உன்பால் உள்ள உரிமையில் நான் இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்கிறேன். நீ என் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்! அப்படி நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. உன் நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்குப் பாசமுள்ள
ஆ.ரோசி.


சிங்கப்பூர்
30.8.2002

அன்புள்ள ரோசி நலம். நாடுவதும் அதுவே. நீயும் ஹிருதயநாத்தும் நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். இனி இன்னொருத்தியை நான் திருமணம் செய்வதாக உத்தேசம் இல்லை. அந்த எண்ணம் என்னை விட்டு நீங்கி ஆண்டுகள் ஐந்து ஆகிவிட்டன.

நீ எனக்குச் செய்த உதவியை மறக்க முடியவில்லை. ஆயினும், நீ சொல்லி நான் மறுப்பது அநேகமாக இது ஒன்றாகத்தானிருக்கும்.

நான் இந்த அச்சகத்தில் பொறுப்பாளனாக இருந்தபோது நமது பழக்கமும் நட்பும் ஏற்பட்டதை நினைவுகூர்ந்தாய். என் முதலாளி எனக்கு எழுதியிருந்த கடிதத்தை உன்னிடம் காண்பித்தேன். அதைப் படித்துப் பார்த்துவிட்டு, என்னை உற்சாகப் படுத்தி, ஊக்கமூட்டி, என் முதலாளி கேட்ட தொகையை உடனே என்னிடம் நீ கொடுத்துக் கொழும்புவிற்கு அனுப்பச் சொன்னதை என் நினைவிலிருந்து நீக்க முடியாது. அதன் பிறகு என் கையிலிருந்த சிறிய சேமிப்பை வைத்துச் சிறிது விரிவுபடுத்தியும் வேகப்படுத்தியும் தொழிலைச் செய்தேன். கணினி வடிவமைப்பு, நகல் எடுத்தல் போன்ற புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்த விரும்பினேன். அதற்கும் நீதான் என்னை ஒரு வங்கிக்கு அழைத்துச் சென்று, உனக்குத் தெரிந்த ஒரு சீனரிடம் அறிமுகப்படுத்தி நிதியுதவி யையும் வாங்கிக் கொடுத்தாய்.

உனக்குத் தெரியுமா? மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த வங்கிக்கடன் கடைசித் தவணையையும் செலுத்தி முடித்து விட்டேன். இருந்தாலும் உன்னிடம்தான் இன்னும் நான் கடனாளியாக இருக்கிறேன். அதற்காகத்தான் சேமித்து வருகிறேன்.

இடையில் நமக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் உன்னையே திருமணம் செய்துகொள்வது என்று ஆசைப்பட்டேன். அதை மறைமுகமாக உனக்குப் புரிய வைத்தேன். ஆனால், அதற்குப் பிறகுதான் தெரிய வந்தது நீ ஒருவரைக் காதலித்து வருகிறாய் என்று, உன் காதலில் இடையில், ஏற்பட்ட தொய்வின்போது உன் காதல், தோல்வியில் முடிந்தால் நன்றாயிருக்குமே என்றுகூட என் மனம் எண்ண ஆரம்பித்தது. உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்கிற எண்ணத்தில் அழுத்தமாக இருந்தேன்.

ஆனால் என் ஆசை நிராசையானது.உங்களிருவரின் காதலினால், நீ உன் தாயையே இழந்தவளல்லவா? நீ எப்படிப் பின்வாங்க முடியும். அதில் எந்த நியாயமும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என் மனத்திற்குள் எழுந்த அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடந்த போராட்டத்தில், அறிவே வென்றது. என் உணர்ச்சியைச் சாகடித்துவிட்டேன்.

நீ ஹிருதயநாத்தைத் திருமணம் செய்துகொண்டு ஜப்பான் புறப்படும் முன்பு என்னிடம் வந்து, “என் தந்தைக்கும், தங்கைக்கும் பாதுகாப்பாக, உறுதுணை யாக நீ இருக்க வேண்டும். நீ என் வீட்டிலேயே வந்து தங்கிக்கொள். நீ ஏன் தனியாக இருக்க வேண்டும்’ என்று கேட்டாய், நானும் உனக்காக ஒத்துக் கொண்டேன்.

உன் வீட்டிற்கு வந்த பின்புதான் எனக்குக் குடும்பம் என்றால் என்ன, பாசம் என்றால் என்ன, என்று புரிய ஆரம்பித்தது.

அந்த மகிழ்ச்சியிலேயே நான் நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ இருக்க வேண்டிய இடத்தில் நான் இருந்து உனது குடும்பத்தைக் கவனித்து வருகிறேன். உன் தந்தையை என் தந்தைபோலவும், உன் தங்கையை என் தங்கை போலவும் பாவித்து வருகிறேன். அதேபோல அவர்களும் என்னிடம் அன்பாகப் பழகுகிறார்கள். உன் தந்தை வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோதும், ஒருதலை ராகமான என் மானசீகக் காதலியின் தந்தைக்குத் தொடர்ந்து உதவிட எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று அதையும் ஒரு மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டேன்.

அதேபோல் உன் தங்கையும் என் மீது மிகுந்த அன்பைச் செலுத்தி வருகிறாள். ஒரு முறை உன் தங்கை பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்தபோது அவள் செய்த சிறு தவற்றுக்காகக் கொஞ்சம் கடுமையாகக் கண்டித்துவிட்டேன். மறுநாள் அவள் புண்பட்டிருப்பாளோ என்று சமாதானப்படுத்தினேன். அதற்கு அவள் என் அக்கா இருந்தால் எப்படி என்னைக் கண்டிப்பாளோ அதைவிடக் குறைவாகத் தானே கண்டித்தீர்கள். என் நன்மைக்காக அறிவுரை சொன்னதாகத்தான் எடுத்துக் கொண்டேன், என்று சொன்னாள். அதைக் கேட்டு என் கண்களில் சுரந்த நீரையும் துடைத்துவிட்டாள்.

இப்படிப்பட்ட குடும்பப் பாசத்திற்கு; அது தரும் ன்பத்திற்கு எனக்கு எந்தக் குறைச்சலுமில்லை. அவளுக்கு ஏற்ற ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். நொவினா மாதா கோவிலில் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இவள் பெயரைப் பதிவு செய்திருப்பதோடு, அங்கு வரும் சில பெரியவர் களிடமும் சொல்லி வைத்துள்ளேன்.

அவள் திருமணத்தை, நீ கட்டாயம் வந்திருந்து நடத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளாக உன்னைப் பார்க்காமல் நாங்கள் மூவரும் விரக்தியிலிருக்கிறோம். என் உள் மனத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது. ஒரு காதலியாக இல்லை; ஒரு தோழியாக.

நான் திருமணம் செய்துகொண்டு ஒரு வாரிசை உருவாக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில்; என் குடும்பத்தில் ஏற்பட்ட பல குளறுபடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்புகிறேன். அதனால் உன் தங்கையைத் திருமணம் செய்துகொள்ள என்னை வற்புறுத்த வேண்டாம் என் அன்புடன் வேண்டும்.

கலீம்.


தோக்கியோ
19.1.2003

அன்புள்ள கலீமுக்கு நீங்கள் மூவரும் நலமாக இருப்பீர்கள் என்று பூரணமாக நம்புகிறேன். இடையில் நீ எழுதிய இரண்டு மூன்று மின்னஞ் சல்களுக்கும் நான் பதில் போட இயலவில்லை. ஆனால், என் எண்ணமெல்லாம் தினமும் சிங்கப்பூரில் இருந்தது.

தங்கை ஷெர்லிக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டதாக நேற்று வந்த கடைசிக் கடிதத்திற்கும் பதில் போடாமல் இருந்துவிடக் கூடாதே என்கிற குற்ற உணர்வுடன் உடனே இக்கடிதத்தை அனுப்புகிறேன். தொலைபேசியிலும், தொலைப் பிரதியிலும் விரைவாகச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் இக்கால கட்டத்தில் நாம் மின்னஞ்சல் மூலமாகப் பேசிக்கொள்வதில் சில அர்த்தங்களும் உள்ளன. தொலைக்காட்சிபோல் உருவத்தைப் பார்க்கக்கூடிய மின்னஞ்சல் உள்ளது. ஆனால், நம்மிடம் அந்த வசதி இல்லை. அப்படி இருந்திருந்தால் உங்களையெல்லாம் பார்ப்பதோடு, மாப்பிள்ளையையும் பார்க்கலாமல்லவா?

ஷெர்லி திருமணத்தை ஏப்பிரல் மாதத்தில் வைத்துக் கொள்ளலாமென்று மாப்பிள்ளை வீட்டில் அபிப்பிராயப் பட்டதாகவும், என் பதிலைத் தெரிந்து கொண்டு “நாள்” குறிப்பிடலாமென்று அவர்களுக்குப் பதில் சொல்லி உள்ளதாக எழுதியிருந்தாய்.

அவர்கள் விருப்பப்படியே தேதியை முடிவு செய்துவிடு. நான் அடுத்த மாதத்திலேயே வந்து விடுகிறேன்.

என் வாழ்க்கையில் சில ஏமாற்றங்களும் சில திருப்பங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை உனக்கோ, அப்பாவிற்கோ இதுபற்றித் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டேன். உங்கள் கவனத்திற்கு வராமலேயே சரி செய்து விடலாமென்று முயன்று வந்தேன். நீ கூட ஒரு கடிதத்தில் நீ ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டுதான் சிங்கப்பூர் வரவேண்டுமென்று இருக்கிறாயா? என்று கேட்டிருந் தாய். மருத்துவரிடம் சென்ற ஆண்டு சோதித்துப் பார்த்ததில் எனக்கு அந்த வாய்ப்பு இல்லையென்று உறுதியாகச் சொல்லிவிட்டனர். நானும் அதனா லென்ன என்று இருந்துவிட்டேன். ஆனால், ஹிருதய் மட்டும் அந்தக் குறையைப் பெரியதாக எடுத்துக் கொண்டார். ஆயினும் என்னிடம் பாசம் குறையாமல் தானிருந்தார். அதே நேரத்தில் என்னிடம் காட்டிய பாசம் போலவே வேறு ஒரு ஜப்பானியப் பெண் ணிடமும் காட்ட காட்ட ஆரம்பித்தார். அங்கேதான் பிரச்சினை தொடங்கியது. நான் கண்டிக்க ஆரம்பித் தேன். ‘நீயும்’ இரு அவளும் இருக்கட்டும்’ என்கிறார்.

என் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிரச்சினை முற்றிக்கொண்டேபோகிறது. இப்போது நான் அவரிடம் பேசுவதே இல்லை. இந்த நேரத்தில் ஷெர்லியின் திருமணத்தை முன்னிட்டுச் சிங்கப்பூர் வந்து திரும்பினால் மாற்றம் ஏதாவது வருமா என்று யோசிக்கிறேன். இப்போதைக்கு அப்பாவிடம் எதையும் சொல்ல வேண்டாம்.

இப்படிக்கு
ரோசி


சிங்கப்பூர்
6.2.03

அன்புள்ள ரோசி உன் கடிதம் படித்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதே! நான் உன் நலம் விரும்பி. நான் என் நலத்தை விரும்புவதைவிட நீ நன்றாக இருக்க வேண்டுமே என்று விரும்புபவன்.

நீ வரும் நாளை முன்கூட்டித் தெரிவித்தால் திருமண ஏற்பாடுகளுக்கு ஓர் இறுதி வடிவம் கொடுக்க ஏதுவாக இருக்கும்.

இப்படிக்கு
கலீம்


தோக்கியோ
18.2.2003

அன்புள்ள கலீம்!

நான் அடுத்தமாதம் 16ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் காலை 11 மணிக்கு அங்கு வந்து விடுவேன். வந்த மறுநாளே மாப்பிள்ளை வீட்டாரை வரச்சொல்லிவிடு. பேசி முடித்துவிடுவோம். அவர்கள் சொன்னது போல ஏப்பிரலில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். ஷெர்லி மகிழ்ச்சியாக இருப்பதாக அப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அப்பாவுக்குத் தான் முழு திருப்தியில்லை. உன்னை மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான் இன்றும் மேலோங்கி நிற்கிறது.

நான் சிங்கப்பூர் வந்தால் திரும்பி ஜப்பான் வருவதாக உத்தேசம் இல்லை. அங்கு வந்தபின் விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடுவதாக உள்ளேன். ஹிருதயும் ஒத்துக்கொண்டார்.

இந்த முடிவுக்கு ஏன் வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இங்கு ஏற்பட்ட பிரச்சினை ஒருபுறம். நீ அங்கு எனக்காக இருக்கிறாய் என்கிற எண்ணம் இன்னொரு புறமாக உளவியலாய் என்னைப் பாதித்து இருக்கும் என்றுகூடத் தோன்றுகிறது.

இவர் வாரிசு வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறார். நீயோ வாரிசு வேண்டாமென்று கூறுகிறாய். இவரோ தான் நன்றாக இருக்க வேண்டுமென்று வெறிபிடித்தலைகிறார். நீயோ உன்னைப் பற்றிக் கவலைப்படாமல் என் நலம் விரும்பியாகவே இருக்கிறாய். திருமணம் ஆனபின்பு ஒப்பிடக்கூடாதுதான்; உன்னை நினைக்கக் கூடாது தான். அறிவுடன் நினைக்கிறேன். எதைப்பற்றி எண்ணக்கூடாது என்று நினைக்கிறேனோ, அதையே நினைக்கிறேன். மருந்து சாப்பிடும்போது குரங்கை

நான் அடுத்தமாதம் 16ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் காலை 11 மணிக்கு அங்கு வந்து விடுவேன். வந்த மறுநாளே மாப்பிள்ளை வீட்டாரை வரச்சொல்லிவிடு. பேசி முடித்துவிடுவோம். அவர்கள் சொன்னது போல ஏப்பிரலில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். ஷெர்லி மகிழ்ச்சியாக இருப்பதாக அப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அப்பாவுக்குத் தான் முழு திருப்தியில்லை. உன்னை மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான் இன்றும் மேலோங்கி நிற்கிறது.

நான் சிங்கப்பூர் வந்தால் திரும்பி ஜப்பான் வருவதாக உத்தேசம் இல்லை. அங்கு வந்தபின் விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடுவதாக உள்ளேன். ஹிருதயும் ஒத்துக்கொண்டார்.

இந்த முடிவுக்கு ஏன் வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இங்கு ஏற்பட்ட பிரச்சினை ஒருபுறம். நீ அங்கு எனக்காக இருக்கிறாய் என்கிற எண்ணம் இன்னொரு புறமாக உளவியலாய் என்னைப் பாதித்து இருக்கும் என்றுகூடத் தோன்றுகிறது.

இவர் வாரிசு வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறார். நீயோ வாரிசு வேண்டாமென்று கூறுகிறாய். இவரோ தான் நன்றாக இருக்க வேண்டுமென்று வெறிபிடித்தலைகிறார். நீயோ உன்னைப் பற்றிக் கவலைப்படாமல் என் நலம் விரும்பியாகவே இருக்கிறாய். திருமணம் ஆனபின்பு ஒப்பிடக்கூடாதுதான்; உன்னை நினைக்கக் கூடாது தான். அறிவுடன் நினைக்கிறேன். எதைப்பற்றி எண்ணக்கூடாது என்று நினைக்கிறேனோ, அதையே நினைக்கிறேன். மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக்கூடாது என்கிற கதை போல, உன் நினைவு தான் வருகிறது. இந்த நினைவும் வீட்டில் பிரச்சினை ஏற்பட்ட பிறகுதானே எழுந்தது. கடந்த ஓராண்டாகவேதான்!

சரியோ தவறோ! நீ, நான், அப்பா மூவருமான குடும்ப வாழ்க்கை இறுதியானதாக இருக்கட்டும். நாமிருவரும் உடலால் முடியாவிட்டாலும் உள்ளத்தால் உறவாடி மகிழ்ச்சியாக வாழ்வோம். ஷெர்லி திருமணத்திற்குப் பிறகு அப்பாவிடம் சொல்வோம். அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.

நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கு யார் என்ன பட்டம் கொடுத்தாலும் கொடுக்கட்டும்.

இப்படிக்கு
உன் பிரியமான
ரோசி.

– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *