கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 912 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலில் நிற்கும் ஆணைக் கொய்யாமரம் குளிர்ச்சியான காற்றை வீடு முழுவதும் இறைத்திருந்தது. முற்றத்தை அலங்கரிக்கும் மலர்ச்செடிகளுக்கிடையே ஒற்றைக் கருங்குருவி சோககீதம் இசைப்பதைக் கண்டமாத்திரத்தில் மனம் சட்டென சஞ்சலப்பட்டது. கைகளை உதறி சீச்சீ சூ சூ… என அதை விரட்டுவதற்கும் என் கைப்பேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது. 

நேரம் காலை 6.45 வீட்டில் இறைந்துக் கிடந்த குளிர் காற்றில் தொலைபேசியில் வந்த செய்தி வெப்பத்தை வாரியிரைத்தது. இரண்டொரு நாட்களாய் எதிர்பார்த்திருந்த செய்தி என்றாலும் “நண்பனின் மரணச் செய்தி உள்ளத்தை உழுக்கிப் போனது. காலன் எவ்வளவுகர்ணக் கொடூரமாய் தன் நாடகத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது. 

மரணச் செய்தியை சுதாகரித்துக் கொள்வதற்காக வாசலுக்கு வருகிறேன். பளபளவென ஒளிர்ந்த விடியல் வானம் நண்பனின் மறைவு தாளாது மெதுமெதுவாய் இருளத் தொடங்கியிருந்தது. 

தாழிட்டுக் கிடக்கும் நண்பன் வீட்டுக்கதவும் வெறிச்சோடிக் கிடக்கும் வாசலும் அவனின் முகத்தை மனக்கண்ணில் நிழலாடச் செய்தது. 

2

நினைவுகள் என்னை 40 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றது. தரவளையில் காளகாரர் கோபாலுவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தோட்டந் தோட்டமாக காளைகளுடன் சுற்றித்திரிந்து நேரங்காலங் பாராது உழைத்துழைத்து ஓடாய் தேய்ந்த அந்தக்கால்களில் ஒட்டிக் கிடக்கும் மண்ணும் தரவளையின் வரலாறு பேசும். தோட்டந் தோட்டமாய் காளை ஓட்டி மாடுகளை செனையாக்குவதில் கைதேர்ந்தவன் கோபால். காளையோட்டி மாடுகளை செனையாக்குவதால் அவனை இளம் பெண்கள் செல்லமாய் செவலகார கோபாலு என்று நக்கல் பண்ணுவதுண்டு. 

பாடமாத்திக்கு பக்கத்தில் கேட்ரோட் சந்தியில்தான் வழமையாவே மாடுகளை பட்டிக்கு போடுவார்கள் அண்டை அயல் தோட்டங்களில் உள்ள மாடுகள் எல்லாம் அங்குதான் கொண்டு வரப்படும் மாடுகள் பட்டிக்கு விடப்படும் நாட்களில் சின்னஞ் சிறுசுகளை கேட்ரோட் பக்கம் விடமாட்டார்கள் 

ஆனால் தோட்டத்து குஞ்சு கொலவான்களை அடக்கமுடியாது. மலை மேடுகளிலும் பாறை இடுக்குகளிலும் ஒழிந்திருந்து மாடுகள் புணர்வதைப் பார்த்துவிட்டு எதோ சிதம்பரரகசியத்தை அறிந்து விட்டத்திருப்தியில் அதைப் பற்றியே பேசித்திரிவர். 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் அவனுடன் தோட்டந் தோட்டமாய் சுற்றியிருக்கிறேன். சிலநேரங்களில் அவனுக்கும் காளைக்கும் இருக்கும் சிநேகம் கண்டு வியந்திருக்கிறேன். கோபாலுவின் கழுத்துவரை விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றாலும் நில்லென்றால் நிற்பதையும் போவென்றால் போவதையும் கண்டால் வியப்பாக இருக்கும். பல சந்தர்பங்களில் பெற்ற பிள்ளையைப் போல் செல்லமாய் கொஞ்சுவதும் கண்டால் உடல் புல்லரித்துப் போகும். 

வழமையாகவே அந்திநேரங்களில் தோட்டத்தை விட்டு கிளம்பிச் செல்வதால் வீடுதிரும்பும் நேரம் நடுச்சாமமாய் தான் இருக்கும். காளையின் கால்களில் கட்டப்பட்டிருக்கும் மணிதான் தோட்டத்தில் காளகாரரை அடையாளப்படுத்தும் சிம்பொனி மணியொலியை துாரத்தில் கேட்ட மாத்திரத்தில் குழந்தைகளும் கூட கப்சிப்பென்று அடங்கி விடுவர். வீட்டில் அடங்காப் பிடாரியாகத் திரியும் குழந்தைகளுக்கும் காளக்கார கோபாலுதான் பூச்சாண்டி கட்டைக்கம்பும், கோட்டும் முறுக்கு மீசையும் பார்த்தாலே குழந்தைகள் பயம் கொள்வர். ஆனால் அவனுள் எப்போதும் மலர்ந்துக் கிடக்கும் குழந்தை உள்ளத்தை என்னைப் போல் அளந்தார் எவரும் இல்லை. 

வீடு திரும்புவதென்னவோ நடுச்சாமமாய் இருந்தாலும் அவன் வருடத்துக்கொன்றென 5 5 பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளதவறவில்லை. 

தோட்டத்து பொது வேலைகளைகளில் அவன் காட்டும் அக்கறை இருக்கிறதே அதை வார்த்தைகளில் அளக்க முடியாது. தோட்டத்தில் மையம் விழுந்தால் பொணத்தை ரெண்டாம் நம்பரில் கொண்டு சேர்க்கும் வரை ஓயமாட்டான். அப்போதெல்லாம் அசட்டுத்தனமாய் என் காதுகளில் 

“ஏன்டா ராசு நாளைக்கு நாங்க போனாலும் இந்த மண்ணுலதான் தலசாய்க்கணும்” 

“சொந்தங்க கூடி துாக்கிப் போடுற பாக்கியம் எத்தன பேருக்குத்தான் கெடைக்குது. 

“அப்பிடி போனாத்தான் நிம்மதியா துாங்க முடியும்” 

“வாழுற காலத்துலத்தான் நமக்கு நெலம் கெடைக்கல செத்தோன் சரி சொந்த மண்ணுல தலசாய்க்கத்தானே வேணும்” 

“இப்பவே நமக்கும் எடம் போட்டுவப்பமா?” என்று அவன் கேட்ட வார்த்தைகள் என் உள்ளத்தை அம்பெனத் தைத்கிறது. 

3

உள்ளம் புழுங்கிகிடந்ததாலோ என்னவோ கொழும்பு காலநிலையில் மனசு இன்னும் புழுங்கியது. பேருந்து பெட்டாவில் இருந்து ஊர்ந்து கல்கிசையில் வந்து நின்றது. கொழும்பு அவ்வளவாய் பரீட்சையம் இல்லாத நகரம் என்பதால் நண்பனின் மையத்தை சுமந்துக் கிடக்கும் மலர்சாலையைத் தேடிக் கண்டுப் பிடிக்க முடியவில்லை. கடைசியில் ஆட்டோக்காரனின் அதீதகரிசனையோடு மலர்சாலையைக் கண்டடைந்தப் போது அவனுடன் பேரம் பேசுவதற்கு மனமின்றி கேட்டப் பணத்தை கையில் திணித்து விட்டு உள்ளே போகிறேன். 

பட்டுவேட்டியும் மாலையுமாய் புதுமாப்பிளையென நீட்டி நிமிர்ந்து கிடந்த கோபாலுவைக் கண்டமாத்திரத்தில் அழுகை பொங்கிக்கொண்டெழந்தது. மலர்சாலை அதீத அமைதியில் திளைத்திருந்ததால் உள்ளக் குமைச்சல்களை உள்ளுக்குள் போட்டு புழுங்கிக் கொண்டு பாப்பக்கா மட்டும் சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தார். இத்தனைக் காலவாழ்க்கை, அனுபவங்களை சொல்லியழ முடியா துயரம் அவர் முகமெங்கும் அப்பிக்கிடந்தது. மரண அறிவித்தலில் கூட அவனின் பிறப்பிடத்தின் அடையாளம் அழிக்கப்பட்டிருந்தது. தான் பெற்ற பிள்ளைகளின் முகங்களில் மட்டும் எதையோ பெரிதாய் சாதித்து விட்ட இறுமாப்பு மிக இறுக்கமாய் படர்ந்திருந்தது. 

பாப்பக்கா என்னனைக் கண்ட மாத்திரத்தில் பொங்கி அழுதார். 

“ஐயோ ராசு இந்த மனுசென் என்ன ஏமாத்திட்டு போயிட்டது பாத்திங்களா?” 

“ஊருக்கு போயிறணும்முணு கெடந்து துடிச்சதே” 

“இப்பிடி என்னெ தனிமரமா தவிக்க விட்டுட்டு போயிட்டதே” என்று விம்மி வெடித்தார் பாப்பக்கா. 

“ஆயிரந்தான் சொல்லுங்க பொணத்த ஊருக்கு கொண்டு வராம விட்டது சரியில்ல” 

“எத்தன பேருக்குத்தான் பதில் சொல்லுறது சொல்லுங்கப் பாப்பம்” என்று துக்கத்தை பகிர்ந்துக் கொண்ட போது 

“நானும் எவ்வளவோ போராடி பாத்துட்டேன் ராசு பயலுங்க கேட்க மாட்டேனுட்டானுங்க பத்துவருசமா பொழங்குன எடம் அதுத்தான் இங்கையே செய்யனும்னு முடிவு எடுத்துட்டானுங்க” என்று புடவை முந்தானையால் வாயை மூடிக் கொண்டு மீண்டும் அழத் தொடங்கினார் பாப்பக்கா. 

அறிமுகமில்லா மனிதர்கள், அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் எதையும் மனசு ஏற்றுக் கொள்ளவில்லை. என் மண் அதன் மகத்துவம் பற்றி சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் அங்கு யாருமே இருக்கவில்லை. பாவம் பஞ்சம் பிழைக்க வந்த இடம் வெகுவாய் அவர்களை மாற்றியிருந்தது. மலையென சாய்ந்துக் கிடந்த கோபாலுவின் உடல் என் மனசை விட்டு அகலவில்லை. 

மரண கிரியைகளில் கலந்துக் கொண்ட திருப்தியை தவிர மனசு வெறுமையாகவே கிடந்தது. ஹட்டன் பஸ்சில் ஏறி அமர்ந்துக் கொள்கிறேன். உடல் கொழும்பு வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாது தகித்துக் கிடந்தது. பஸ் மெதுவாய் நகரத் தொடங்கியதும் யன்னலின் ஊடே பரவும் காற்று உள்ளத்துக்கும் உடலுக்கும் தெம்பளிக்க அப்படியே கண்ணயர்ந்துப் போகிறேன். 

4 

“என்ன கோபாலு சின்னப் புள்ள மாதிரி யோசிக்காம எடுத்தேன் கவுத்தேனு பேசுற? நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவ எடுத்தியா? “அட நீவேறடா தோட்டங்கள் எல்லாம் கம்பனிகளுக்கு தாரவாத்தாச்சி இனி இங்க இருந்தா பஞ்சம் பொழைக்கவும் முடியாது. போயி புள்ளைங்கள அண்டி பொழச்சிகிட்டாத்தான் உண்டு” 

“நாங்க என்னா தோட்டத்த விட்டுட்டாப் போறம் கொஞ்ச நாளைக்கு போயி இருந்துப் பாப்பம்” என்று பொய்யாய் ஒரு சமாதான வாரத்தையை ஒப்புவித்தான். 

“அப்ப எல்லாரும் கொழும்புக்கு போவனுமுனு முடிவே பண்ணீட்டீங்க?’ 

“ஒனக்கே தெரியும் ராசு முன்ன எல்லாம் தோட்டத்துல பேரு போட்டதோட அந்திக்கு காள ஓட்டுனா நாலுகாசு தேடலாம் இப்பத்தான் அதுலயும் மண்ணு விழுந்திருச்சி மாடுகளுக்கு ஊசிப் போடதொடங்குனதோட பொழப்பு படுத்துக்குச்சி அப்பொறம் எப்பிடி பொழைக்கிறது” 

“நீ ஆயிரந்தான் சொல்லு நம்ம மண்ண விட்டுட்டு போறது மனச போட்டு கொடையுது புள்ளைகள எதுக்க முடியல என்று அன்று அவன் கண்களை கசக்கிக் கொண்டே என்னிடம் பயணம் சொன்னது நினைவில் வந்து நெருஞ்சி முள்ளாய் குத்தியது. 

பஸ் வட்டளை வளைவுகளில் என்னை அங்குமிங்கும் உழுக்கி திடுக்கிட்டு எழச் செய்தது. அப்போது அடிவயிற்றில் ஏதோ கல்லைக்கட்டி போட்டாற் போல் ஓருணர்வு உறைந்துக் கிடந்தது. உடல் குப்பென வியர்த்துக் கொட்டியது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் இனம் புரியாத நெருடல் என்னை பாடாய் படுத்தியது. 

பஸ் ஹட்டனை வந்தடைய நள்ளிரவு 01.00 ஆகியிருந்தது. பேரக்குழந்தைகளுக்காக வாங்கிய ஓரஞ்ச் காய்கள் அடங்கிய பையை கையில் பிடித்துக் கொண்டு காமினிபுர பாதையூடாக இறங்கி தரவளை மண்ணில் கால் பதிக்கிறேன் நிலவொளியில் ரெண்டாம் நம்பர் மலை என்னை வரவேற்றது. 

நிலவொளியில் ரெண்டாம் நம்பர் இன்னும் மெருகேறியிருந்தது. மெல்லிய இருளில் தலையசைத்துக் கிடக்கும் காட்டுமரங்கள் சலசலத்துக் கிடந்தன. எழுபது வருடமாய் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் உறுதியாய் நிற்கும் பூச்சி பெரியங்கங்காணியின் கல்லறையில் அன்று பெய்த மழையின் ஈரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. கல்லறையின் நுழைவாயிலில் உடைந்துத் தொங்கும் தகரம் மெல்லிய காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. மலையெங்கும் அமைதி திளைத்திருந்தது. 

சரக் சரக்கென சத்தமிடும் என் பாதவொலி அங்கு பரவியியிருந்த அமைதியை சிதைக்க ஆத்துலயத்தின் தொங்கல் காம்பராவைத் தாண்டி நடந்துக் கொண்டிருக்கிறேன்.நேரம் இப்போது நள்ளிரவு ஆகியிருந்தது. அப்போது அங்கிருந்து குப்பென வந்து முகத்தில் அறைத்த அந்த மனித நெடி மிகவும் நெருக்கமாகி என்னை ஆட்கொண்டது. அதனால் சட்டென நெஞ்சு பதற திரும்பி ஒருமுறை கோபால் வீட்டை நோட்டமிடுகிறேன். வீட்டினுள் இருந்து வெளிவந்த அழுகையோடு கலந்த விம்மல் அங்கு பரவியிருந்த நிசப்தத்தை சிதைத்தது. 

குளிரில் விறைத்துக் கிடந்த உடலில் பயம் மெதுமெதுவாய் பரவத் தொடங்கியிருந்தது. 

இத்தனைநேரம் உள்ளத்தை அரித்துக் கிடந்த துக்கம் பொங்கி வெடித்துச் சிதறியது. என்னை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. ஓவென கத்தி அழுகிறேன் நான் இட்ட கூச்சல் காற்றை கிழித்துக் கொண்டு ஒலித்தது இது நண்பனின் மறைவுக்கான அழுகை மட்டுமல்ல அவனின் ஆத்மாசாந்திக்கான பிராத்தனையும் கூட.

– ‘தீ’ ஆண்டுமலர்.

– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *