மண் வாசனை





(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் பளீரென்று மென்பச்சையாக இருந்த செவ்வந்தியின் இலைகள் தளர்ந்து போய்க்காணப்பட் டன. மதிலோடு சரிந்திருந்த குரோட்டன்கள் சோம்பி யிருந்தன.

வேப்பமரக்கிளையில் இரண்டு காகங்கள் கவலையுடன் பதுங்கியிருந்தன. சமகால நிகழ்வுகளைப்போலவே வெய்யில் அகோரமாக எறித்தது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு கேற்றடிக்கு வர வெய் யிலின் வெம்மை உடலைச் சுட்டது. தகதகவென்று தெரு மின்னியது.
நேரம் பகல் பதினொரு மணி இருக்குமா? வெய்யில் இப்போது இப்படிப் பொசுக்கினால் திரும்பி வரும் போது எப்படியிருக்கும்?
வெளி விறாந்தைக் கதவடியில் நின்ற சின்னமகன் தளர்ந்து விழும் காற்சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டு டாட்டா காட்டினான்.
வெளியுலகத்து வெய்யிலைவிட எத்தனையோ மடங்கு வெம்மையைத் தினமும் அலட்சியமாக நெஞ்சில் தாங் கிக் கொண்டு வாய்க்கு ருசி படைக்கும் மனைவியும் அவ னோடு கூடநின்றாள்.
அவள் முகத்தில் வியர்வைத்துளிகள் முகிழ்ந்திருந்தன.
“என்ன யோசிக்கிறியள்?” என்றாள் அவள்.
“ம்…… வெய்யிலாய் இருக்குதப்பா……”
எத்தனை தரம் சொல்லிப்போட்டன், குடையைக் கொண்டு போங்கோவன் எண்டு-” என்றாள் பதிலுக்கு.
“குடை பிடிச்சுக்கொண்டு சைக்கிள் ஓடுறது கஷ்டம் அப்பா.”
“என்னெண்டு மழைகாலத்திலை ஓடுற நீங்கள்.” என்ற அவளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
அவளுக்குத் தெரியும் என் மனத்தைப் பற்றி. ஒரு கொண்டு பிடித்துக் வெய்யிலுக்குக் குடை ஆண் போவது என்பது? எல்லா ஆண்களும் குடையுடனா போகின்றார்கள். நான் மட்டும் குடையுடன் றோட் டால் போனால்? எத்தனைபேர்விண்ணாணமாகப் பார்ப் பார்கள். கொடுப்புக்குள் சிரிக்க மாட்டார்களா?
“என்ன` மனிசரப்பா நீங்கள். ஏன் மற்றவைக்காகப் போகிறியள்? ஒண்டில் நீங்கள் வெய்யிலில போய்ப் பழக வேணும் அல்லது குடையைத் தொப்பியைத் தன்னும் கொண்டு போக வேணும்.”
அவள் சொல்லுவது நியாயம்தான், எல்லாப் பிரச் விளைவுகளையும் இறுதியாக சுமை சினைகளையும் தாங்கியாகச் சுமப்பவள், அவள்தான்.
வெய்யிலுக்குள் போய் வந்தால் அன்று முழுக்கத் தலையைத் வலிக்கும், தலையைத் தூக்க முடியாது. தொடர்ந்து விடாமல் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே பல்லவிதான்.
நான் படும் பாட்டை உணர்ந்து துணைக்கு வருப் வள் அவள்தான். பின் தூங்கி முன் எழுவது மட்டுமல்ல சகல வேலைகளுக்கும் ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டு என் தலை வலிக்கும் துணைவருவது என்றால் இலேசான காரியமா?
யாழ்ப்பாணத்துச் சுற்றுப்புறத்து சூழ்நிலை நாளொரு தன்மையும், பொழுதொரு தோற்றமுமாக இருக்கையில் வெளியில் போகும் அலுவல்களை இயன்ற வரை குறைத்துவிட்டேன். என்றாலும் பரீட்சை ரூபத்தில் வந்துவிட்டது உபத்திரவம்.
“தொடர்ந்து ஒரே கதிரையில் இருக்கிறியே… அலுக் கேல்லையே…” என்று நண்பர்கள் கிண்டல் செய்ய…
”என்னப்பா…உங்களுக்குப் புறமோசன் ஒண்டும் இல்லையே” என் மனைவி கணைகள் எறிய, கடைசியில் களத்தில் இறங்கியாகினேன்.
அரசாங்க பிரதிவாரமும் மாதம் கடந்து வரும் கசட் பார்த்து உயர் பதவிக்கான பரீட்சைக்கு விண்ணப் பித்தாகி விட்டது.
அந்தப் பரீட்சைத் திகதி இந்தா இந்தா என்று செய்யவே பூதமாக வெருட்ட… பரீட்சைக்குத் தயார் இந்த சனி, ஞாயிறு பயணங்களில் வெய்யில் பிரச்சினை யும், பஸ்சில் போகலாம்தான். ஆனால் பஸ்சில் போகும் பழக்கத்தைக் கைவிட்டே கன காலமாகி விட்டது. பரீட் போய்ச் சேர சைக்குப் படிக்கப்போகும் இடத்திற்குப் இரண்டு பஸ் மாற வேண்டும். பிறகும் இறங்கி நடக்க வேண்டும். வெய்யிலுக்குள் சைக்கிளில் போவதே சங்கட மாக இருக்கும்போது… நடப்பதெப்படி?
தற்போதைய காலத்திய நிலையில் பஸ்ஸை நம்பிப் போக முடியாது. றோட்டால் போய் வரும் மினிபஸ்கள் சில வேலை ஒழுங்கைகள் வழியாகவும் சுழன்றடி முனையும்.பஸ்ஸேயில்லாமல் நடைக்குத் தாவ வேண்டி வரும். இப்படி எத்தனையோ சிக்கல்கள் இருக்கும் போது பஸ்சில் எப்படிப் போக முடியும்? ஒவ்வொரு சனி, ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில்தான் இந்தப் பிரச்சினை களை கட்டும். ஏனைய நாட்களில் காலையில் வேலைக்குப் போய் மாலையில் வேலையால் திரும் பும் வரை வெய்யில் பிரச்சினை இல்லை.
இரட்டை மாடிக் கட்டிடத்தில் சீமெந்துக் கூரை கொண்ட கீழ் மாடியில் ஃபான் காற்று கச்சிதமாக வீச, கிளுகிளுவென்று ஜன்னல் வழியே வேப்பங்காற்று சுகமாய் வர பைல்கள் நகராவிடினும் பொழுது கரைந்து விடும். பிறகு எப்படி வெய்யில் பிரச்சினை வரப்போகிறது?
ஒரு தடவை துணித் தொப்பி சகிதம் புறப்பட்டால் அது கல்லாகத் தலையை அழுத்திற்று. தலையை யாரோ அமர்த்திப் பிசைவது போன்ற உணர்வு.
தலை வேறு வியர்த்துப் பேன் கடிப்பது போல கடித்துத் துளைத்துத் தலையைப் பிய்த்துப் பிடுங்க வேணும் போல இருந்தது.
தொப்பியைப் போட்டுக் கொண்டு போங்கோ என்று ஆலோசனை சொன்ன மனைவியை ஒரு வாட்டம் திட்டித் தீர்க்க முனைந்தது மனம்.
ஒரு வழியாக தொப்பியையும் பிடுங்கிக் கொண்டாகி விட்டது. திடுமென ஒருவகை சுதந்திர உணர்ச்சி வெம் மையாக இருந்தாலும் காற்றுப் பட்டவுடன் இதமாக இருந்தது. ஆனால் மறுபடியும் வெய்யில் தலையைப் பொசுக்கியது.
வீடு வந்து சேர தலையிடி களைகட்டி விட்டது. சகல பக்க வாத்தியங்களும் துணை சேர, நாளைவரை வேறு தொந்தரவுகள் தேவை இல்லை.
தொப்பி இல்லாமலே வந்து சேர்ந்து விட்ட என் னைக் கண்டதும் கோபமாகவே வந்த மனைவி “கண்டறியாத நாகரீகம் பாக்கிறியள், தொப்பியைப் போட்டுக் கொண்டு வந்தால் என்னவாம். எப்படித்தான் கழுதை யாய்க் கத்தினாலும் உங்களைத் திருத்தேலாது” என்று வார்த்தைகளைத் தாழித்தாள்.
தலையிடி வருத்தம் ஒரு பக்கம். அவளின் திட்டுதல் மறுபுறமாகச் சேர்ந்து கோபத்தை உண்டாக்கியது. அவளைக் கோபித்து என்ன பிரயோசனம் என்று சமாளித் துக் கொண்டு படுக்கையில் சரிந்தேன்.
நான் கோபத்தைக் கைவிட்டாலும், மனைவி கை விடுவதாக இல்லை. கோபத்தை மாத்திரம் அல்ல வார்த்தையாடல்களைக் கூட என்னைத் துளைத்தெடுக் கத் தொடங்கி விட்டாள். “குடைபிடிக்க வெட்கம் தொப்பி போடுறது நாகரிகம் இல்லை எண்டால் இனிமேல் காலமை போய் பின்னேரம் வாங்கோ… நான் இரண்டு நேரச் சாப்பாட்டையும் சமைச்சுத்தாறன் கட்டிக் கொண்டுபோய் சாப்பிட்டு விட்டு ஆறுதலாய் வாங்கோ. மனிசர் ஒண்டில் தங்கடை சொந்தப் புத்தி யில நடக்கவேணும் அல்லாட்டி ஆரும் சொல்லுறதைத் தன்னும் கேட்க வேணும்… இரண்டும் இல்லாட்டி பிற கென்ன மனிசர்?”
கட்டில் தலைமாட்டில் நின்று அவள் புறுபுறுத்தாள். எழும்பி ஒரு தடவை அவள் வாயைப் பொத்தி இரண்டு அடி கொடுத்தால் என்ன? என்ற ஐடியாவும் வந்தது. அண்டைக்கு மாத்திரம் அல்ல, அவள் வாய் நீளும் அனேக தடவைகளில் இப்படியான ஒரு யோசனை வருகிறதுதான் என்றாலும் செய்ய முடிவதில்லை. மனம் வராது.
தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு பதில் சொல்லாமல் படுத்திருப்பதை சிறிது நேரம் பார்த் துக் கொண்டு நின்ற அவள் போய் குளிசையுடனும் கோப்பியுடனும் வந்தாள்.
அதற்கிடையில் என் நிலையை அவளுக்குப் புரிந் திருக்க வேண்டும். எனது கோபத்தைக் கரைக்க அவளும் கரையத் தொடங்கினாள்.
“இஞ்சருங்கோப்பா… எழும்புங்கோ” என்றபடி தலைமாட்டில் வந்து அமர்ந்தாள். அவளின் மிக நெருங்கிய அண்மை நன்றாகத் தெரிந்தது. இயல் பாக அவள் மேனி வாசம் சற்றுப் புளிசலான வாடை கொண்ட அவனது உடையின் மணம் சேர்ந்து இம்சைப்படுத்தியது.
“இஞ்சை…குளிசையும் கோப்பியும் கொண்டு வந்தி சின்ன ருக்கிறன் எழும்புங்கோ… நீங்களும் எங்கடை வன் மாதிரித்தானப்பா…” என்றபடி கையினால் தலை மயிரைக் கோதினாள்.
அவள் விரல்கள் நெற்றியில் அலைந்தன.
சட்டென்று நிலை குலைந்து போனேன். பஞ்சாப் பறந்த கோபத்தைத் தேடி நான் ஓடவில்லை. அவள் கைகள் தந்த சுகமான தழுவலினால் மெய் மறந்து போனேன் நிமிர்ந்து பார்த்தேன். அவள் விழிகள் பிர காசமாக ஜொலித்தன. பரவசம் கொப்பளித்தது.
அதன் பின்னர் இன்றைக்குத்தான் வெய்யில். நேரத் தில் புறப்பட்டது மாத்திரம் அல்ல குடைச் சங்கதியும் வேதாளமாக மீண்டும் முளைத்துள்ளது.
சைக்கிள் கேற்றைத் தாண்டவில்லை. தலையைச் சொறிந்தபடி மனைவியையும் தெருவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்க யாரோ ஒரு வயதான மனிதன் குடை பிடித்துக் கொண்டு நடந்து போனார்.
“அங்கை பாருங்கோவன், வெய்யிலுக்க குடைபிடிச்சுக் கொண்டு ஆட்கள் போயினம்தானே. நீங்கள் தான் கண்டறியாத வீண் கதை கதைச்சுக் கொண்டு இருக்கிறியள்”
நான் எதுவுமே பேசவில்லை.
“நில்லுங்கோ வாறன்” என்றபடி வீட்டுக்குள் ஓடினாள்.
“அம்மா…அம்மா…” என்றபடி சின்னவனும் தாயின் பின்னால் விரைந்தான்.
வெய்யிலில் காப்பாற்றக் கூடிய ஒரு பெரிய குடையை கொண்டு வந்து நீட்டினாள்.
“உதையே கொண்டு போறது”
“பின்னை வேற எதைக் கொண்டு போகப் போறியள், இது எண்டால்தானே வெய்யிலுக்கு நல்லது.”
“உந்தப் பெரிசைக் கொண்டு போறதைவிட பேசாமல் போகலாம்”
“அப்ப என்ன சின்னக்குடை கொண்டு வாறதே”
”ம்…” என்றேன் அரை மனத்துடன்.
மீண்டும் ஓடியே போனாள். சின்னக்குடையுடன் திரும்பி வந்தாள்.
“பிடியுங்கோ”
அரைமனத்துடன் வாங்கியாகி விட்டது.
“சரி…கவனமாய்ப் போட்டு வாங்கோ” என்றாள் மனைவி.
ஆனால் நான் அசையவில்லை. ஏதோ ஒன்று மனதை சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது.
“பிறகேன் மினைக்கெடுறியள்…போட்டு வாங்கோ” என வார்த்தைகளால் தள்ளினாள்.
வேறு வழியில்லை. கையிற் குடையுடன் கேற்றைத் தாண்டி தெருவுக்கு வர வெய்யிலின் வெப்பம் தகித்தது.
வீட்டு வாசலில் நின்ற மனைவி விடாமற் பார்வை யினால் துளைத்துக் கொண்டு இருந்தாள். கடைசியில் அவள் வெற்றியும் கண்டு விட்டாள்.
நாற்பது வயதை எட்டியும் பார்க்காத நான், குடை பிடித்துக் கொண்டு சயிக்கிளில் பயணப்பட்டேன்.
தெருவில், சனநடமாட்டம் இல்லை. நல்லதுக்குத் தானோ, சந்தியில்தான் தேத்தண்ணிக் கடை வாசலில் நாலைந்து பேர் என்னையே பர்த்துச் சிரிப்பது போல இருந்தது ஒருவன் பெரிதாகச் சிரித்து விட்டு என்னவோ சொன்னது போலவும் தெரிந்தது.
அவர்கள் என்ன கதைத்தார்களோ? எதற்காகச் சிரித்தார்களோ? அதை ஏன் தூக்கி என் தலையில் போடவேண்டும். பிரதான தெருவிற்கு சைக்கிள் வந்தது.
நம்ப முடியாத புதினமாக வெய்யிலுக்குக் குடையுடன் போவது இருந்தது. ஏதோ ஒரு மாயத்திரை பிடித்துக் கொண்டு போவது போல.
என்னைக் கடந்து போன மோட்டார் சைக் கிள் ஒன்று தன் வேகத்தைக் குறைத்தது “என்ன மச்சான்!” என்றான் அதில் வந்த கந்தசாமி.
பதில் சிரிப்புத்தான்.
“என்ன மழையே பெய்யுது.” என்றான் அவன்
மீண்டும் சிரிப்பு!!
“குடையோடை போக நான் ஒரு அம்மான் போறார் எண்டு நினைச்சன் பிறகுதான் உன்னைக் கண்டன். என்ன விசேஷம்?”
“தெரியாதே வெய்யில்”
“ஓமடாப்பா…சரியான வெய்யில்தான் வரட்டே.” என்றான் அவன் உண்மையைச் சொல்லியிருக்க மாட்டான்.
கட்டாயம் நாளைக்கு இவன் ஒவ்பீசில சொல்லிச் சிரிப்பான் என்ற யோசனையும் சட்டென்று அப்போது எழுந்தது.
திடுமென வெய்யில் குறைவது போலத் தெரிந்தது. வானத்தில் சில கருமுகிற் கூட்டங்கள் அசைந்தன. எதிரே அடிவானத்தில் இன்னும் திரளாக –
சூரியன் பட்டென்று அதனுள் மறைந்திருக்க வேண் டும். வெய்யில் எங்கே போனது?
குடையைச் சுருக்குவதா? விடுவதா என மனப் போராட்டம் வெடித்தது என்றாலும் குடையைச் சுருக்க வில்லை.
மப்பும் மந்தாரமுமாக இருக்கும் வேளையில் குடை பிடித்தால் பைத்தியக்காரன் என்று நினைக்க மாட்டார்களா? கடைசி மழையாவது பெய்ய வேண்டும். மழையும் இல்லை, வெய்யிலும் இல்லை என்றால் என்ன செய்யலாம்?
மழை பெய்யாதா? அல்லது வெய்யில் வராதா? என்று வானத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
– வீரகேசரி, 25-03-1990.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.