மண்வாசனை





(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் ஆசிரியனாகிப் பத்து வருடங்கள். இந்தப் பத்து வருடங்களும் வெளி மாவட்ட சேவை என்ற சட்டத்தோடு ‘வாரோட்டம்’ நடாத்தி எப்படியோ சட்டத்தை வென்று சொந்த ஊர்ப் பாடசாலை யொன்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருந்து விட்டேன்.
இந்த வருடம்.
எனது அரசியல் தீர்க்க தரிசனம் பிழைத்தால் இம்முறை எனக்கு ஏற்பட்ட இட மாற்றத்தை ரத்து செய்ய முடியாமல் போய் விட்டது….
இம்முறை நடந்த தேர்தலில் நான் ஆதரவு காட்டிய வேட்பாளரால் தேசியப் பேரவைக் கதிரையில் குந்த முடியாமல் போய் விட்டதால்….
அதன் பிரதிபலிப்பு….?
இடமாற்றப் பட்டியலில் எனது பெயர் தான் முதலாவது… அதிலும் கஸ்டப் பிரதேசமான மூதூரில் ஒரு பாடசாலை!
தேசியப் பேரவைக் கதிரையில் குந்தியிருக்கும் எனது எதிரியின் கால்களைப் பிடிக்கக் கூடாது என்ற மன வைரக்கியத்தோடு ‘வெற்றிகரமாக தோல்வியை ஒப்புக் கொண்டு….’ மூதூர் பாடசாலைக்கு வந்து விட்டேன்.
மார்கழி மாத விடுதலையின் பின் இன்று தான் பாடசாலை ஆரம்பம்.
மூதூர் பாடசாலை.
அதிபரின் காரியாலயத்தில் அமர்ந்திருக்கின்றேன்.
திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் கடலில் பிரயாணம் செய்ய வேண்டும்…. பிரயாணம் செய்த அந்த ‘அவதியுணர்வுகள்’ எனது இதயத்தில் இன்னமும் பூரணமாக மரித்துப் போய்விடவில்லை.
உத்தியோகம் புருஷலட்சணம்…. இந்த அவதிகளுக்காக அந்த லட்சணத்தை விட்டுவிட முடியுமா?
இப்பாடசாலையில் படிப்பிக்கின்ற ஆசிரியர்களை, அதிபர் எனக்கு அறிமுகஞ் செய்து வைக்கிறார்.
அதிபர்.
அவர் பெயர் கனகசிங்கம்.
இவரது பெயரை அடிக்கடி பத்திரிகைகளில் பார்த்த நினைப்பு எனக்குண்டு. ஏனென்றால் இவர் ஒரு கவிஞன்.
கறுத்தவர், மிக மெல்லியவர், சுருண்ட கேசம், கண்ணாடி… நிலத்தில் விழுந்த பந்து துடிப்பதைப் போன்ற சுறுசுறுப்பு.
சம்பிரதாய பூர்வமாகவும், மனிதாபிமானமாகவும் அதிபருக்கும் எனக்கும் இடையில் சிறு சம்பாஷணை நடந்து முடிகின்றது.
‘மாஸ்டர்… உங்களை ஐந்தாம் வகுப்புக்கு பொறுப் பாசிரியராகப் போட்டிருக்கிறன்… பிறகு பாத்துச் செய்வம்…’ அதிபரின் வேண்டுகோள் கலந்த கட்டளையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
“ஏதாலும் தேவையெண்டால் சொல்லுங்கோ..?” அதிபர் என்னிடம் கூறுகின்றார்.
“சேர்….” “….”
“சொல்லுங்கோ….”
“….நான் நாளைக்கு ஊருக்கு போகலாமெண்டு நினைக்கிறேன்…”
“…என்ன மாஸ்டர் இப்பதானே வந்தனீங்க”
“உண்மை தான்… என்ரை புள்ளையளைப் பிரிஞ்சிருந்து எனக்குப் பழக்கமில்லை… அதாலை ஊருக்குப் போய் குடும்பத்தை கூட்டி வரப்போறன்.”
“சரி…. போட்டு வாருங்கோ…”
“சேர்….”
“சொல்லுங்கோ….”
“இரண்டு மணிக்கு திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு பஸ் இருக்கு… நான் இஞ்சையிருந்து பதினொரு மணிக்குப் புறப்படால் தான் அந்த பஸ்ஸிலை போகக் கூடியதாக இருக்கும்…”
“சரி மாஸ்டர்…. நீங்க பதினொரு மணிக்குப் போங்கோ…” அதிபர் பெருமனதோடு எனது வேண்டுகோளை ஏற்று அனுமதி யளிக்கின்றார்.
எனக்கு பெரும் மனத்திருப்தி
இப்போது ஒன்பது மணி இன்னும் இரண்டு மணித்தியால ங்களை கடத்த வேண்டும் ஆனால் இனியும் அதிபரின் காரியாலய த்தில் அமர்ந்திருப்பது முறையல்ல.
“….. சேர் நான் வகுப்புக்கு போகட்டா”
“….நல்லது போங்கோ….”
நான் ஐந்தாம் வகுப்பைத் தேடி நடக்கின்றேன்.
ஐந்தாம் வகுப்பு
“வணக்கம் சேர்…..”
“வணக்கம்….” மாணவர்களும் அமர்கின்றனர். நானும் அமர்கின்றேன்.
கிட்டத்தட்ட முப்பது மாணவர்களிருக்கும். புதிதாக வந்த என்னை சகலரும் ஆவலோடு பார்க்கின்றனர்.
“நாளைய சமுதாயத்தை நிர்ணயிப்பவர்கள்…” பத்து வருடங்களாக ஒரே பாடசாலையில் இருந்து பார்த்து புளித்துப் போன முகங்களை ‘விட்டு புதிய முகங்களை பார்த்ததாலோ – என்னவோ, என்னையறியாமல் இப்படியொரு எண்ணம் எனது மனதில் தோன்றி மறைகின்றது.
…என்னுடைய பெயர் விபுணசேகரம்… இனிமேல் நான் தான் உங்களுக்கு வகுப்பு மாஸ்டர். நான் என்னை பற்றிய அறிமுகத்தை சுருக்கமாக முடிக்கிறேன்.
“சரி நான் என்னுடைய பெயரைச் சொல்லிவிட்டேன்… இனி நீங்கள் ஒவ்வொருவராய உங்கடை பெயர்களைச் சொல்லுங்கோ…”
‘…சிவமுரளிதரன்… தெய்வேந்திரன்… பவதாரணன்… கபிலநாதன்… செந்தூரன்… இப்படியே ஆண்களும் பெண்களும் சொல்கிறார்கள்…”
“இந்த வகுப்பு மொனிற்றர் ஆர்…” நான் கேட்கிறேன்.
”சேர்… என்னும் மொனிற்றர் தெரியவில்லை…” அவள் வாணிசிறீ கூறுகின்றாள்.
“அப்ப ஒரு மொனிறறரைத் தெரிவு செய்வமா…” பதினொரு மணிவரை இப்படியே நேரத்தை கடத்திவிட முனைகின்றேன்.
ஆசிரியருக்குரிய இலட்சணங்களுள் இதுவும் ஒன்றோ, என்னவோ நேரத்தைப் போக்காட்டுகின்ற தந்திர குணம் என்னிடம் நிறைய உண்டு.
‘சரியுங்க சேர்… மொனிற்றர் தெரிவம்… மாணவர்களும் தயாராகுகின்றனர்.
இந்த வகுப்பிலை யார் கெட்டிக்காரன்…
‘…கபிலநாதன் சேர்…’
கபிலநாதன் எழும்புங்கோ… நான் கபிலநாதன் தேடுகிறேன்.
கபிலநாதன் எழுந்து நிற்கிறான்.
கறுத்து மெலிந்த, கட்டைத் தோற்றம் சொந்த நிறத்தை இழந்து வெளிறிய ஒரு ரெர்லின் சேட். அதிலும் பல பொத்தல்கள். ஒரு சிறிய களிசான்… சிறு பிள்ளைகள் போல் இன்னமும் முன்னோக்கி வளர்ந்திருக்கும் தலைமயிர்…
சோக்குக் கட்டியில் தொட்டந் தொட்டமாகக் கறுப்பு மை ஊறியிருப்பது போல், அவனது தோற்றத்தில் தொட்டந் தொட்டமாக ‘வறுமைப் பிதிபலிப்புகள்’ தெரிகின்றன….
எனது மனம் அவனுக்காக பரிதாபப்படுகிறது.
‘கபிலநாதனை மொனிற்றராக்குவம்…”
‘ஓம் சேர்…’ அனேகமானவர்கள் எனது பிரேரணையை ஆமோதிக்கின்றனர்.
இடையில்
புதியதொரு பிரேரணை வெடிக்கிறது.
‘சேர்… உவன் வினாயகமூர்த்தி செந்தூரனிட்டை வாங்கித் தின்னிறவன் சேர்… அதாலைதான்… உவன் செந்தூரனைத் தெரிவு செய்யிறான்….’ அவள் வாணிசிறீ கூறுகின்றாள்.
‘நக்குண்டார் நாவிழந்தார்’ அந்த உணர்வா…? அந்தப் பெரிய உணர்வு இந்தச் சின்னஞ் சிறுசுகளுக்கு வருமா?….
எனக்குள் ஒரு உணர்வுக் குமிழ் வெடிக்கின்றது.
நாக்கு நனைத்ததற்காக நாக்குப் புரட்டுகின்ற…. தப்பிலித்தனம்… வினாயக மூர்த்திக்கு ஏற்படுமா?
எனது மனம் ஏற்றக் கொள்ள மறுக்கின்றது.
‘சே…. நான் மொனிற்றராய் இருக்கிறன்…’ அந்த செந்தூரன் எழுந்து நிற்கிறான்.
செந்தூரன்
புத்தம் புதிய சோக்கட்டியின் அழகு, மதாளிப்பு…
‘மொனிற்றர்… ஒரு பதவி…’
இவன் செந்தூரன்…. இவனுக்குப் பதவி ஆசையா?
….உலகம் புரியாத வயது… அப்படிப்பட்டவனுடைய செயலுக்கு நான் அர்த்தம் கற்பிக்கலாமா?… இது சிறுபிள்ளைத்தனம்.
“நிட்சயமாகப் பதவியாசையல்ல!…”
“அப்ப….ஆரை மொனிற்றராக்குவம்…” நான் பிரச்சினையைப் பொதுவாக வைக்கிறேன்.
“சேர்… கபிலநாதன் தான் கெட்டிக்காரன் அவன் தான் மொனிற்றர்….”
“சேர் செந்தூரன் வெறும் மொக்கன்… அவனை மொனிற்ற ராக்க வேண்டாம்…”
“கபிலநாதன் கெட்டிக்காரன்.”
“செந்தூரன் மொக்கன்…”
“கபிலநாதன் தான் மொனிற்றர்…”
“செந்தூரன் வேண்டாம்…”
வகுப்பில் பெரும் கலவரம், பெரும்பான்மையான மாணவர்கள் கபிலநாதனை ஆதரிக்கின்றனர்.
வகுப்பில் ஏற்பட்ட போட்டி மனப்பான்மையை ஆசிரிய அதிகாரத்தைப் பாவித்து அடக்கி விட நான் விரும்பவில்லை… அப்படியென்றால் முடிவு…? யார் மொனிற்றர்…
ஒரு தேர்தல்…!
மொனிற்றர் பதவிக்கான தேர்தல்!….?
இவர்கள்… இந்த மாணவர்கள்… நாளைய மனிதர்கள்… நாளைய சமுதாயத்தில் இவர்கள் அங்கம் வகிக்கப் போகும் நிசமான தேர்தலுக்க… இன்று ஒத்திகை நடாத்தப் போகிறேனா…? எனது மனம் கூசுகின்றது…!
ஏன்?….
தேர்தல் சாக்கடையை முடறு முறித்துப் பல தடவை குடித்த… அனுபவம் எனக்குண்டு.
இந்தச் சமுதாயத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட உணர்வு உலகம் புரியாத இந்தச் சிறிசுகளின் செயல்களுக்கு மிகப்பெரும் அர்த்தங்களைக் கற்பித்து நானே எனக்குள் அவதிப்படுகிறேன்.
“சரி போட்டி வைப்பம்…” நான் கூறுகின்றேன்.
“என்ன போட்டி சேர்”
“…முதலிலை கபிலநாதனை விரும்பிறவை உங்கடை வலது கையை உயர்த்துங்கோ… ஆருக்குக் கூடவோ அவன்தான் மொனிற்றர்…”
“சரி சேர்…”
“கபிலநாதனை மொனிற்றராக்க விரும்புறவை வலது கையை உயர்த்துங்கோ…” நான் கூறுகின்றேன்.
தொண்ணூறு வீதமான கைகள் உயருகின்றன.
கபிலநாதன் மொனிற்றர் என்பதை எனது மனம் தீர்மானித்துக் கொள்கின்றது.
“…சேர் உங்களைப் பிறின்சிப்பல் வரட்டாம்” பெரிய வகுப்பு மாணவனொருவன் வந்து கூறிவிட்டுப் போகின்றான். போட்டியை நிறுத்தி விட்டு நான் அதிபரின் காரியாலயத்தை நோக்கி விரைக்கின்றேன்.
அதிபரோடு கதைத்த நான் பதினொரு மணிக்கு புறப்பட்டு விடுகின்றேன். திரும்பவும் வகுப்பிற்கு போக முடியவில்லை.
ஒரு கிழமை லீவின் பின்.
பாடசாலைக்குத் திரும்பவும் வந்து ஐந்தாம் வகுப்பிற்கு வருகிறேன்.
“சேர்… மொனிற்றர் தெரிவம்…” நான் மறந்து போய் விட்டேன். மாணவர்கள் மறக்கவில்லை. ஒரு கிழமைக்கு முன் இந்த வகுப்பில் நடாத்தப்பட்ட மொனிற்றர் தெரிவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை எனக்குள் இரை மீட்புக் செய்கின்றேன்.
கபிலநாதன்… செந்தூரன்…
கபிலநாதனுக்காக தொண்ணூறு வீதமான கரங்கள்… கபிலநாதன் தான் மொனிற்றர்…
‘…கபிலநாதனை மொனிற்றராக்க விரும்புறவை வலது கையை உயர்த்துங்கோ…’ நான் முதலிலிருந்து போட்டியை ஆரம்பிக்கின்றேன்.
…என்னையே என்னால் நம்ப முடியவில்லை…?
…இப்படியும் நடக்குமா… என்ன கொடுமை…!
கபிலநாதனுக்காக ஒரு கை கூட உயர்த்தப்படவில்லை?
சரி… செந்தூரனை மொனிற்றராக்க விரும்புறவை உங்கடை வலது கையை உயர்ந்துங்கோ… என்னை நான் சமாளித்துக் கொண்டு போட்டியை தொடர்கிறேன்.
அநேகமானவர்கள், அன்று கபிலனை ஆதரித்தவர்களும் செந்தூரனை ஆதரித்து தங்கள் கைகளை உயர்த்துகின்றனர்.
கபிலநாதன் தலை குனிந்து நிற்கிறான்.
செந்தூரன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
இந்த மாற்றத்திற்குரிய காரண்ம?… சென்ற ஒரு கிழமைக்குள் நடந்ததென்ன?…
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை…?
கபிலநாதன் எப்படித் தகுதியை இழந்தான்?
செந்தூரன் எப்படித் தகுதியை பெற்றான்?
புரியாத புதிர்!….?
போட்டி முடிவுப்படி செந்தூரனை மொனிற்றராக்கின்றேன்.
எவருக்குமே கையுயர்த்தாமல் இருந்த அந்த ஒரேயொரு மாணவன்… அவன் பெயர் பவதாரணன்.
அவன்தான் எனது புதிரை விரிய வைக்கும் கருவி என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்.
பாடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன… இடைவேளை வருகின்றது… சரியான நேரம்… நான் பவதாரணனைத் தனிமையில் அழைக்கிறேன்.
“பவன்…”
“சேர்…”
“நீங்கள் ஏன் ஒருத்தருக்கும் கை உயர்த்தயில்லை…”
“எனக்கு விருப்பமில்லைச் சேர்”
“பொய் சொன்னால்… களவு செய்தால் கடவுள் புழுக்கிடங்கிலை போடுவாரெண்டு லில்லி ரீச்சர் சொன்னவ…’ கண்களை அகலத் திறந்தபடி அவன் கூறுகிறான்.
“இதிலை என்ன பொய்… களவு…”
“உண்மையிலை கபிலன்தானே சேர் கெட்டிக்காரன்… ஆப்பிடியிருக்க எல்லாரும் செந்தூரனுக்காகத்தானே சேர் கை உயத்தினவை…” அவன் கேள்விக் குறியோடு என்னைப் பார்க்கிறான்.
“ஏனெண்டு உங்களுக்குத் தெரியுமா…”
“தெரியும் சேர்… போன கிழமை முழுக்கச் செந்தூரன் எல்லாருக்கும் கச்சானும், ஐஸ்பழமும், ரொபியும் வாங்கிக் குடுத்தவன் சேர்… தனக்கு கை உயத்தச் சொல்லித்தான் சேர் வாங்கிக் குடுத்தவன்…”
“…” நான் மெளனமாக நிற்கிறேன்.
“எல்லாரும் அவனிட்டை வாங்கித் திண்டு போட்டு… அவனுக்காகக் கையை உயர்த்தினவை… இது பொய்தானே சேர்…” பவதாரணன் என்னைப் பார்த்துக் கேட்கின்றான் கேட்டவன் சில விநாடிகளின் பின்.
“கபிலன் எவ்வளவு கெட்டிக்காரன் சேர்… பாவம்… மனவருத்தப்படுகிறான் சேர்…” இப்படி வேதனையோடு அவன் கூறுகின்றான்.
“தேர்தல் தர்மம் அதைத்தான் பவன் எதிர்பார்க்கின்றான்… பவன் புரிந்து கொண்டது தேர்தல் தர்மமென்றால்… செந்தூரன் புரிந்து கொண்டது…?…! தேர்தல் தந்திரமா?….!
பவனுக்குத் தர்மத்தைக் கற்பித்தது. லில்லி ரீச்சர்… செந்தூரனுக்குத் தந்திரத்தைக் கற்பித்தது…? மண்வாசனையா?…
ஐஸ்பழம் கச்சான், ரொபி…
‘மொனிற்றர்’ பதவி!…..?
நாளை….
பணம், சாராயம், அன்பளிப்புக்கள்…
எம்.பி பதவி…! …?
இந்த மாணவர்கள்….
நாளை விரியப் போகும்
சமுதாயச் சுருக்கங்கள்…!
நாளைய சமுதாயத்தை நான் இன்றே காண்கிறேன்.!
– சிரித்திரன். ஆனி 1985.
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.