மண்ணில் தெரியுதொரு தோற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 5,080 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம் – 15

பொழுது கிளம்பி வெகு நேரமாகியும் ஜானகி எழுந்திருக்கவில்லை. இல்லம் வெறிச்சோடி மயானம் போல் கிடந்தது.

பொன்னையர் மனசில் விபரீத நினைவுகள் குடிபுகுந்தன. முற்றத்தில் இறங்கி வேப்பங் குச்சி முறித்துப் பற்களை விளக்கிக்கொண்டு, ஜானகி தூங்கும் அறையைப் பார்த்தபடியே சற்று நின்றார்.

‘விடிந்த முகத்தில் பெண்ணானவள் இல்லாவிட்டால் அந்த வீடே சூரிய தரிசனமில்லாத பூமிபோல் இருள் மண்டிவிடும்.’

இதயத்துள் வெதும்பிக்கொண்டு நுணாவுகண் வைத்து வீட்டைப் பார்த்தார். அப்போது அவர் கண்களே இருள் மண்டுவதுபோலிருந்தன.

ஜானகியின் வாழ்க்கை இப்படிக் குமுறலும் துயரமுமாக உருவெடுக்குமென்று அவர் மறந்தும் நினைத்த தில்லை. அவளின் அன்றாடப் போராட்ட வாழ்வும், குடும் பத்திற்குள் அதிகரித்துவிட்ட முரண்பாடுகளும் அவள் வாழ்க்கையை எத்தனை கொடிய சோதனைக்குள்ளாக்கி விட்டன. அவள் வாழ்க்கையே கண்ணீர்க் காவியமாகி விட்டதே.

‘நான் ஒரு கருமக்காறன். இல்லாவிட்டால் என் வயிற்றில் சம்பவித்த ஜானகி தானும் துயரப்பட்டு என்னையும் அதுக்கு ஆளாக்குவாளா?’

குமுறிக்கொண்டு கிணற்றடிப்பக்கம் நடந்தார்.

முகம் அலம்பிய பின் திரும்பிவந்து அறைக்குள் சென்று திருநீற்றை எடுத்து நெற்றியில் தடவிவிட்டு சர்வாங்க புலன்களை ஒடுக்கிய பொன்னையர் அபயக் குரல் வைத்தார்:

‘முருகா, என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?’

அவர் கண்கள் கலங்கின. முருக தரிசனத்தின் பின் விறாந்தைக்கு மீண்டு, மூலைப் பக்கத்துச் சார்மனையில் சரிந்தார். மனசு ஏதோ ‘ஒரு மாதிரி’ அடித்துக்கொண்டது; நெஞ்சு துருத்திற்று. கொஞ்சநேரம் சார்மனையில் ஆறுதலாகவும் அவரால் இருக்கமுடியவில்லை. தலையைத் திருகிக் கண்ணெறிந்து ஜானகியின் அறையை மீண்டும் நோக்கினார்.

ஜானகி எழுந்திருக்கவில்லை; கதவுகளும் பூட்டப்பட்டுக் கிடந்தன. அவர் முகம் சுண்டிக் கறுத்தது.

‘நேற்றிரவு இன்ஸ்பெக்டர் வீட்டுக்குத் திரும்பமுன்னமே ஜானகி தூங்கியிருப்பாள். அவரும் அவளை எழுப்பாமல் தானாகவே சமையற்கட்டுக்குச் சென்று சாப்பிட்டு வந்து உறங்கிவிட்டார்..?

பொன்னையரின் யூகம் சரியோ தப்போ அவர் உறங்கும்போது தான் சமைத்த உணவு பாத்திரங்களில் அப்படியே கிடந்ததைக் கவனித்தார்.

‘அவர் ‘டியூட்டி’யால் வந்த பின் அவருடன் சாப்பிடலாம் என்று ஜானகியும் உண்ணாமலே தூங்கியிருப்பாள்.’ என்று மறுபாட்டம் நினைத்தவராய் அந்தப் பிரச்சினையில் உழலாமல் கிடந்தார். என்றாலும், இந்தச் சீர்கேட்டை நினைக்க அவர் மனசு கொதித்தது.

சார்மனையை விட்டு எழுந்து குசினிக்குள் சென்று பாத் திரங்களைத் திறந்து பார்த்தார்.

சோறும் கறிகளும் பாத்திரங்களோடு ‘சளித்து’ப் போய்க் கிடந்தன.

தன்னைத் தவிர வேறு ஒருவரும் இரவு சாப்பிடவில்லை என்ற உண்மை அப்போது அவருக்குப் புலனாயிற்று.

‘மூதேவிப் பெட்டை, கழுதை சாப்பிடாமல் படுத்திட்டுதே.’

பொழுது முகத்தில் ‘சுள்’ளிட்டது. நேரம், ஏழு ஏழே காலாகிக்கொண்டிருந்தது.

‘விடிந்து பொழுது ஏறிய பின்னும் பெண்ணாப் பிறந்தவளுக்கு ஒரு தூக்கமா?’

புகைந்து கொண்டே விறாந்தையில் ஏறிக் கதவோரமாக நின்று, ‘புள்ள ஜானகி’ என்று அனுங்கும் குரலில் அழைத்தார்.

உள்ளே எந்த அசுமாற்றத்தையும் காணவில்லை.

புறங்கை விரல்களை மடக்கி மொழிப் புடங்கால் ‘டொக் டொக்’ கென்று கதவில் தட்டினார்.

மூச்சுப் பேச்சே இருக்கவில்லை. அவருக்குச் சாடையான சினம் எழுந்தது,

“டியே புள்ள, ஜானகி” என்று குரல் வைத்த வண்ணம் கதவில் அறைவது போல் அதைத்துத் தட்டினார்.

கதவு ‘சடா’ ரென்று திறபட்டது.

திகிலோடு ஜானகியின் கட்டிலைப் பார்த்தார்.

அவளைக் காணவில்லை!

பொன்னையர் நெஞ்சு கோடை முழக்கமாக இடித்தது;  கை கால்கள் உதறி எடுத்தன; நினைக்க வராத நினைவுகள் மண்டைக்குள் பிரளயப்படுத்திப் பூகம்பித்தன.

‘ஏதோ விபரீதம் நேர்ந்திருக்கிறது.’

இப்படி நினைத்தபோதே, ‘ஐயோ’ என்று வாய் வீட்டுக் குழறியழவேண்டும்போல் மனம் அந்தகாரித்தது.

‘மறுபடியும் இவளுக்கு ஏதாவது சபல மனந்தட்டி அவன் பொன்ராசாவைத் தேடி…?’

சடலம் ஊனிக் குறுக, மனைவியின் படத்தை அவர் கண்கள் துழாவின; கண்ணீர் துளும்பிற்று.

கண்களைத் துடைத்துக்கொண்டு மேசையில் முண்டு கொடுத்துக் கதிரையில் இருந்தபடி கண்களை அறை பூராவும் மேயவிட்டார். ஒரு கடித உறையோடு மேசையில் விரித்த கடதாசி ஒன்று வெளுப்பாக அவர் கண்ணில் பட்டது.

தாவி எடுத்து ஆவலோடு பார்த்தார். இடுக்கி எடுத்த உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் புரட்டினார்.

ஜானகியின் எழுத்தேதான்.

தேகம் ஒரு பாட்டம் உலுப்பிச் சிலிர்த்தது; கை நடுங்கிற்று; நெஞ்சு பதற வாசிக்கலானார்:

என் அன்பான அப்பாவுக்கு.

நீங்கள் என்னைத் தேடவேண்டாம். அந்த முயற்சி வீண் வேலை. என் பிரிவு உங்களை மீளாத் துயரிலாழ்த்தும் என்பதை அறிவேன். கெட்டியாக மனசை அடக்கிக் கொள்ளுங்கள்.

இந்தப் பூமியில் எத்துனையோ உரிமைப் போராட்டங்கள் நிகழ்ந்தமையால் புதிய சமுதாயத்தின் தோற்றங்கள் இதே மண்ணில் தெரிகின்றன.

சமூக வாழ்க்கை தனிமனித இச்சைக்குள் அடங்குவதன்று; அது உலகளாவிய மனித வர்க்கத்துக்குட்பட்டது. எனவே, அந்த உலகளாவிய மாபெரும் வர்க்க இயக்கத்துடன் நான் இணைந்துகொள்ளப்போகிறேன்.

அவருக்கும் இதே செய்தியைத்தான் கூறுங்கள்.

உங்கள் அன்புப் புதல்வி,
ஜானசி.

‘அவள் தற்கொலை புரியவில்லை’ என்று தெரிந்து போது அவர் நெஞ்சினில் உண்டான புரை காயம் சற்று ஆறியது. ஆயினும், அவரால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு தாப உணர்வு-ஒரு தவிப்பு அவரை ஆட்கொண்டது. அவர் மூளையோ சுரணை செத்து மரத்துப்போய்விட்டது. அந்தக் கடிதத்தை மறு தடவை ஊன்றிப் படித்துவிட்டு அடுத்த கடிதத்தை விரித்தார்:

‘என் தந்தை போன்ற திரு. பொன்னையர் அவர்களுக்கு’,

இத்துடன் அவர் வாசனை நின்றது. அந்த எழுத்தும் வாசகமும் புதிசாகப்பட்டதால் அவர் மனசு சங்கடத்தில் லாழ்ந்தது.

‘என் ஜானகியை விட, நான் வேறு யாருக்கு, எப்போது தந்தை போலிருந்தேன்?’

இந்தக் கேள்வியுடன் அந்த வாசகத்தைக் கவனித்த பொன்னையர், கடிதத்தின் கையெழுத்தை உற்றுப் பார்த்தார்.

‘நா.பொன்ராசா.’

அவர் முகம் வெறுத்துச் சுழித்தார். என்றாலும், தன்னை இவ்வளவு பெரிதாக மதித்து அவன் தனக்கு எழுதியதும், அதன் ஆரம்ப வாசகமும் அவருக்கு உவப் பாயிருந்தன.

இந்தக்காலத்து வாலிபர்கள் வாழ்க்கையனுபவமற்று எழுந்தமானமாகக் கூச்சலிடும் பூச்சிகள். இல்லாவிட்டால் ஒரு நாள்கூட முகம் ஒட்டிப் பழகாதவன் என்னைத் ‘தந்தை’ என்று எழுதுவானா?

கண்களை அகலவிரித்துக் கடிதத்தை வாசித்தார்:

என் தந்தைபோன்ற திரு.பொன்னையர் அவர்களுக்கு,

இதில் நான் எழுதுவது உங்களுக்குக் கசப்பாகவும் புதுமையாகவும் இருக்கலாம். பொறுமையோடு நிதானமாக இதை வாசியுங்கள்.

மனித குலத்துள்ளே சுரண்டல், அடிமைத்தனம் என்று தோன்றினவோ, அன்றே இந்த உலகத்தில் வர்க்க பேத முரண்பாடு தோன்றிவிட்டது. இதை எந்த ஒட்டு வேலை செய்தும் இணைக்கமுடியாது. முரண்பட்ட சமூக அமைப்பிலே போராட்டம் ஒன்றினால்தான் இந்த வர்க்க பேதத்தை ஒழிக்கலாம். இதை நீங்கள் ஒப்புக்கொள்ளா விட்டாலும், உண்மை நியதி இதுதான்.

அடக்கி ஒடுக்கிச் சுரண்டப்படும் சகல மக்களும் இந்தப் போராட்டத்தையே ‘தர்மநீதி’ யாகக் கொண்டுள்ளார்கள். இந்தத் தர்ம நியாயத்தின் பக்கமே இன்று மாபெரும் விடுதலைப் போராட்ட இயக்கமே அண்ட மளாவி நிற்கின்றது. இந்தத் தர்ம யுத்தத்திலே நான் மட்டுமல்ல, எனது வழிகாட்டியான விரிவுரையாளர் இராமசாமியும், அவரால் ஊற்றுக்கண்ணெடுத்த போதத்தில் வளர்ந்த உங்கள் புதல்வி ஜானகியும் சங்கமித்திருப்பதை நீங்கள் புரியாதிருக்கலாம். ஆனால், இன்ஸ்பெக்டர் இதை எப்பவோ சரியாக இனங்கண்டுவிட்டார். இந்த வகையில் விரிவுரையாளர், நான், ஜானகி மூவரும் ஒரு கன்னை. நீங்களும், இன்ஸ்பெக்டரும் மறு கன்னை.

வர்க்க உணர்வு பூண்டு ஓர் இலட்சியத்தில் ஊறிப் போன உங்கள் ஜானகியை நீங்கள் தெரிந்தும், அவளை அவளின் எதிர் முகாமுக்குள் தள்ளி ‘குடும்பம்’ என்ற கூடாரத்துள் அடைத்துவிட்டீர்கள். அதுதான் நீங்கள் செய்த தவறு. ஆனால், அவள் அந்தக் கூண்டை உடைத்துக்கொண்டு என்றோ ஒரு நாள் சுதந்திரப் பறவையாக வெளியேறுவாள் என்பது மட்டும் நிச்சயம். இதைக் கூறும்போது உங்களுக்குக் கோபம் பொங்கும். தயவு செய்து அதுக்கு இரையாகாமல் ஆழ்ந்து படியுங்கள்.

முட்டைக் கரு கோழிச் சூட்டினால் கலங்கி முரண்பட்டு, அந்த முரண்பாடே கொந்தளித்துப் போராட்ட உருவெடுக்கிறது. புதிய வடிவமெடுத்த குஞ்சு, முட்டைக்கோதை உடைத்து நிராகரித்துவிட்டு வெளியேறு கிறதல்லவா? இந்த மண்ணில் புதிய உலகங்களும் இப்படித்தான் பழமையை நிராகரித்துத் தோன்றின. நீங்கள் அடைவைத்த ‘குடும்பக் கோட்டை’யை உதறி விட்டு உங்கள் குஞ்சு ஜானகியும் அப்படித்தான் புதுமைப் பெண்ணாக வெளியே வருவாள். இதை எத்த வல்லாதி வல்லனாலும் நிறுத்தமுடியாது. அவளைப் பொறுத்த வரை இது பெரும் உபாதை. ஆனால், நீதியின் நிமித்தம் அவஸ்தையான அவள் ஓர் பாக்கியசாலி. ஏனெனில், இந்த உலகம் நாளைக்கு அவளுடைய தாகவே இருக்கும். அவள் இழக்கப் போவது சுதந்திரத்தையல்ல; அடிமை விலங்கை.

நான் சம்பந்தமில்லாத விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களல்லவா? சரி, சலிக்கமல் மேலே படியுங்கள்.

உங்கள் கூற்றின் படி நான் இப்பொழுது ஒரு கைதி. ஜானகி பாஷையில் நான் ஒரு விடுதலைப் போராளி, அப்படிப்பட்ட நான் இவற்றையெல்லாம் கூறும்போது நகைப்பீர்கள் என்று தெரியும். நீங்கள் மட்டுமல்ல. இன்ஸ்பெக்டரும் தனது ஆத்திரங்களை என்னிலும் ஜானகியிலும் கொட்டி, ஓயாத கெடுபிடிகளை நடத்தி வஞ்சம் தீர்த்திருக்கிறார். முதலாளித்துவத்தின் ‘மெய்க் காப்பாள’ரான அவர் சட்டத்தின் துணையோடிருந்தும் பேடித்தனமாக என் மீது ‘பொய் வழக்கு’ச் சோடிக்கவே முடிந்தது. இதிலிருந்தே அவரின் கையாலாகாத் தனத்தையும், பலவீனத்தையும், முட்டாள்தனத்தையும் புரிந்து கொள்வீர்கள். பாவம், தந்திரம் அறியாத பேதை ஜானகி தான். கொண்ட இலட்சியத்திற்காக எத்தனை தடவைகள் அந்த முரட்டுக் கரங்களால் கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறாள் தெரியுமா? அவள் மட்டும் இன்ஸ்பெக்டருக்கு மனைவியாகா திருந்திருந்தால்?

ஐயா, வியப்பான இந்தக் கேள்வியை நான் மட்டும் கிளறவில்லை. விரிவுரையாளர், உங்கள் ஜானகி, இன்ஸ்பெக்டர் எல்லாருமே நெஞ்சுருகிக் கேட்கத் தொடங்கி விட்டார்கள். உங்கள் மனச்சாட்சியைத் தட்டிக் கூறுங்கள். நீங்களும் அப்படி நினைத்து வருந்தவில்லையா? உண்மையாகவே சொல்கிறேன். இன்ஸ்பெக்டரின் தாலி ஜானகி கழுத்தில் ஏறாதிருந்தால்…?

‘ஜானகி இன்ஸ்பெக்டரைக் கல்யாணம் செய்யாதிருந்தால் நீ அவளைத் திருமணம் புரிந்திருப்பாயா?’ என்று நீங்கள் என்னைக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம், ஐயா. நான் அவளை என் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ள விரும்பியது உண்மைதான்.

நான் மட்டுமா? உங்கள் ஜானகியிடமே கேட்டுப் பாருங்கள். ‘இன்ஸ்பெக்டரைக் கல்யாணம் செய்யாதிருந்தால், பொன்ராசாவையே என் வாழ்க்கைத் துணைவராக ஏற்றிருப்பேன்’ என்றே அவளும் கூறுவாள்.

‘இந்த நோக்கம் அவளிடம் இருந்திருப்பின் அவள் ஏன் இன்ஸ்பெக்டரை விரும்ப வேண்டும்; உன்னையே திருமணம் செய்திருக்கலாமல்லவா?’ என்று உங்களுக்கு எண்ணத் தோன்றும். அதற்கு விடையளிக்கவே தங்களுக்கு இதை எழுத நினைத்தேன்.

ஐயா, நீங்கள் நம்பாவிட்டாலும் உண்மையைக் கூறுகின்றேன். நான் அவளையோ, அவள் என்னையோ திருமணம் புரிந்து ‘குடித்தனம்’ நடத்த நினைத்தவர்களல்லர். வர்க்கபேதமற்ற சமுதாயத்திற்காக- உலகளாவிய ஓர் இயக்கத்தில் நாங்கள் கொண்ட காதலுக்காக எமது சுய இச்சைகளைத் தியாகம் செய்துகொண்ட நாங்கள். எங்கள் காதல் உணர்வுகளையே ஓர் இலட்சியப் பித்தாக்கி விடாதது உங்களுக்கு வியப்பாகவிருக்கலாம். எனக்கோ, ஜானகிக்கோ இது வியப்பன்று. காதல் முரண்பாடற்றவர்களிடமே ஜீவாமுதமாகத் திகழும்.அந்தக் காதல்கூட ஓர் வர்க்கபேதமற்ற சமுதாயத்தில் தான் பூரணமாகச் சோபிக்கும். இந்த உண்மையை நீங்கள் புரியாதபடியால் தான் ‘ஆண் – பெண் உறவுமட்டும் இல்லற வாழ்க்கை’ என்ற தப்பான முடிவெடுத்து அவள் கழுத்தில் அந்தத் தாலியைக் கட்டுவித்தீர்கள்.

நீங்களும் இன்ஸ்பெக்டரும் ஜானகியைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொண்டிருப்பதையும் நான் அறிவேன். ‘நெருப்பில்லாமல் புகை கிளம்புமா?’ என்று நீங்கள் கேட்கலாம். ‘புகை கிளம்புவதற்காகவே நெருப்பை மூட்டிவிடும்’ நயவஞ்சகர்களை நீங்கள் தெரிந்திருக்கவில்லையே? இலட்சியதாகத்தோடு திகழ்ந்த உங்கள் பெண் வாழ்க்கை இத்தகைய அலட்சிய வாதிகளால்தான் நெருப்பாகியது. இதுகூடவா உங்களுக்குத் தெரியாது? உங்கள் புத்திரி மனசைத் தெரியாத உங்களுக்கு நானே சொல்கிறேன், இதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள்.

ஜானகி தூய்மையானவள்; ஒழுக்கமானவள்; நேர்மையானவள்; துணிச்சலுள்ள ஒரு புதுமைப் பெண்.

அவள் உங்கள் புத்திரி என்பதை நினைத்து நீங்கள் நிச்சயம் பெருமைப்படலாம். ஆனால், அந்தப் பாக்கியம் உங்களுக்கோ, இன்ஸ்பெக்டருக்கோ இனிக் கிட்டாது. அவள் இந்த மண்ணில் தோன்றிய விடுதலைப் போராளிகளுடன் ஒன்றிணைந்து, அந்த உலகோடு சங்கமித்துவிட்டவள். உங்கள் ஜானகி என் காதலியல்ல; அவள் என் தோழி; உடன் பிறவாத என் அன்புச் சகோதரி.

தங்கள் மைந்தன் போன்ற,
நா.பொன்ராசா.

அத்தியாயம் – 15

பொன்னையர் உணர்வு செத்து மரக்கட்டையாக விறைத்துப் போய் நின்றார்.

கடிதம் அவருக்குத் தெரியாமலே கை நழுவிக் கீழே விழுந்தது. கூடவே நெஞ்சு பூகம்பித்து விம்மலானார். கண்களிலிருந்து ‘பொலு பொலு’த்துக் கொட்டிய கண்ணீர் முகம் அடங்க வழிந்து தேம்பியது.

சொற்ப நேரம் தன்பாட்டுக்கு நெஞ்சீறல் தீர ஒரு சாவாக அழுது கொண்டிருந்தார். அந்த அழுகையும் தானாகவே அவருள் அடங்கியபோது நாழிகையாயிற்று.

‘இனி என்ன செய்வது?’

கடுவலாக யோசிக்கலானார் ஒன்றுமே புலனாகவில்லை. மண்டை அம்மிற்று. சார்மனையிலிருந்து சற்றுவேளை பரத வித்துக்கொண்டிருந்தார். பொழுது ஏறிக்கொண்டிருந்தது.

வெளியே தலை நீட்டிப் பார்த்தார். வெய்யில் நன்றாகப் பிரகாசித்தது. ‘நேரம் ஒன்பது மணியிருக்கும்’ என்று கணித்துக்கொண்டார்.

‘ஜானகி எங்கு போயிருப்பாள்?’

கலங்கிய மண்டையை ஊடுருவிக் கொண்டு இந்தக் கேள்விதான் எழுந்தது.

கை நழுவிய அந்தக் கடிதத்தை ‘சடா’ரென்று கண் குத்திப் பார்த்தார்.

அது தெருவில் விடப்பட்ட ஓர் அனாதைக் குழந்தை போல் அவருக்குத் தோன்றிற்று.

நெஞ்சு புரைய அதை வாஞ்சையோடு தாவி எடுத்து கைக்குள் மடக்கி வைத்துக் கொண்டார். ஒரு கணம் மௌனம் ஆட்கொண்டது.

இருந்தாற்போல் அவர் உள்ளம் பொன்ராசாவில் விழுந்தது.

‘அவன் நான் பெறாத என் புத்திரன்’ என அவர் வாய் ‘முணு முணு’த்தது.

‘இப்படி ஒரு நற்பண்பானவனைத் தெரிந்து கொள்ளாமல் இத்தனை நாட்களாக நச்சரித்தக் கொண்டிருந்தேனே.’

எப்படியாவது அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஓர் ஆவல் அவர் மனசில் கருக் கூட்டிற்று.

உடனே கடிதத்தை விரித்து அதன் தலைப்பைப் பவ்வியமாகப் பார்த்தார்.

அதில் முகவரியோ, வசிக்கின்ற இருப்பிடமோ, ஊரோ எதுவுமே குறிப்பிட்டிருக்கவில்லை.

தொட்டாற் சுருங்கி போல் அவர் முகம் சுருங்கிக் கறுத்தது. ‘எங்கே தேடுவது, யாருக்கு எழுதுவது?’ என்று தனக்குள்ளே முனகித் திணறினார்.

‘ஜானகி நிச்சயமாக விரிவுரையாளர் வீட்டுக்குத்தான் சென்றிருப்பாள். அங்கு போனால் எல்லா விபரத்தையும் அறிந்து விடலாம். ஆனால் கொந்தளிப்பும், கெடுபிடிகளும் நாடடங்க நிகழும் போது ஜானகி அங்கே போயிருப்பாளா?’

இப்போது அவரிடம் உள்ள கடிதம் ஒன்றுதான் அவருக்கு ஆதங்கமாகத் தோன்றியது. கடிதத்தையே மறு தடவை விரித்து வரிக்கு வரி விட்டு மனசுள்ளே தெட்டந் தெறியனாக வாசித்தார்.

‘உங்கள் அபிப்பிராயத்தின்படி நான் இப்பொழுது ஒரு கைதி, ஜானகி பாஷையில் ஓர் விடுதலைப் போராளி’

இந்த வாக்கியத்தை அவர் அழுத்தி வாசித்தார்.

‘அவள் கூற்று உண்மை. அவன் உண்மையாக ஓர் போராளிதான்’ என்று தானும் அருக்கூட்டி விட்டு தொடர்ந்து வாசிக்கலானார்.

‘…நான் ஜானகியை என் வாழ்க்கைத் துணைவியாக்க விரும்பினேன்…’

இந்த வாக்கியம் இப்போது அவர் மனதில் பதிந்தது.

‘எவ்வளவு அந்தரங்க சுத்தியோடு சொல்லியிருக்கிறான். இதில் என்ன தவறுண்டு? இப்படிப் பட்டவன் ஏலவே எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா? ம்… என்ன செய்வது; இருவருக்கும் பொசிப்பில்லை.’

இப்படி ஒரு ‘சப்பு’க் கட்டி விட்டுக் கடிதத்தில் கண்ணோட்டம் விட்டார்.

‘ஜானகி தூய்மையானவள்; ஒழுக்கமானவள்: நேர்மையானவள்; துணிச்சலுள்ள ஓர் புதுமைப் பெண்…’

‘உங்கள் ஜானகி என் காதலியல்ல, அவள் என தோழி உடன் பிறவாத அன்புச் சகோதரி…’

கடைசி வாக்கியங்களை அவர் வாசித்த போது சின்னஞ் சிறு குழந்தைபோல் நெஞ்சு கேவப் பரதவித்துக் கொண்டு கடிதத்தை ஒருசாவாக மடித்து எடுத்துக் கொஞ்சியேவிட்டார்.

‘நான் பெறாவிட்டாலும் அவன் என் ஜானகியை போல் எனக்கோர் புத்திரன்’.

மனம் உருக, நாக்குத் திணற, இருதடவை இவ்வாறு அழுத்திக் கூறிக்கொண்டே கண்ணீர் விட்டார் பொன்னையர்.

‘கண்ணின் மணி போல் உயிரோவியச் சித்திரமாக காத்து வளர்த்த என் செல்வக் குமாரத்திக்கு படுபாவி இன்ஸ்பெக்டரோடு சேர்த்து கொடுமை செய்தேனே. நான் பெரும் பாவி.’

அவர் நெஞ்சு குமுறி அவருள் அலை அடித்தது.

‘இப்போ என் ஜானகி எங்கே இருக்கிறாள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எதற்கும் விரிவுரையாளர் இராமசாமிக்கு ஒரு தந்தி கொடுத்துப் பார்ப்போம்.’

எழுந்து வெளியே கிளம்ப ஆயத்தமானார்.

வெளிக்கிட அடுக்குப் பண்ணியவர் எதுவுமே செய்யாமல் அறை ஏகலும் ஒரு பாட்டம் சுற்றிக்கொண்டிருந்தார். அறைக்குள் நிலவிய அமைதியைக் கலைத்துக் கொண்டு தற்போது ‘கேற்’ பக்கம் ‘சைக்கிள் பெல்’ சத்தம் அவர் காதில் ஓயாமல் விழுந்தது.

அடித்து விழுந்து கொண்டு வெளியே வந்தார்.

‘தந்தி’

நெஞ்சு சுரீரித்தது. ‘தந்தி’ கொடுக்க வேண்டுமென்று க்ஷண வேளைக்கு முன்பு தான் நினைத்தார். அவருக்கே தந்தி யென்றால்?

ஓட்டமும் நடையுமாக விரைந்து தந்தியை வேண்டி ‘கேற்’ வாசலடியிலேயே நின்று பிரித்துப் பார்த்தார்.

‘ஜானகி இங்கே வந்திருக்கிறாள். விரும்பினால் வரவும்’ – இராமசாமி.

புயல் அடித்து ஓய்ந்தது போல் அவர் மனசு உறைந்தது.

‘அவர்தான் அவளுக்குச் சித்தாந்தத்தை ஊட்டி அவளை ஓர் இலட்சியவாதியாக்கியவர். ஒரு வகையில் அவரும் ஜானகிக்குத் தந்தைதான்.’

இன்ஸ்பெக்டரை நினைக்க அவர்முகம் சுண்டிக் கறுத்தது.

‘இந்தச் சம்பவம் இன்ஸ்பெக்டருக்குத் தெரியாது. இதை அவர் அறிந்தால் என்ன விபரீதம் நடக்குமோ?’

பொன்னையர் இப்படி ஏங்கிய போதும் ‘இப்படியெல்லாம் முரண்பட்டு இடிந்த கோபுரமாகிவிட்ட குடும்பத்தை இனி எவராலுமே கட்டி எழுப்ப முடியாது’ என்ற முடிவிற்கே வந்தார்.

ஆனால், ஜானகியின் இளமை, எதிர்கால வாழ்க்கை இரண்டையும் நினைத்தபோது, தனது சகல சொத்துச் சுகங்களையும் இழந்துவிட்ட ஓர் உணர்வே அவருக்கு மேலிட்டது.

‘இன்றே கண்டிக்குச் சென்று ஜானகியைப் பார்க்க வேண்டும்.’

மனசில் திட்டம் போட்டுக்கொண்டே வீட்டைத்தேடி நடந்தார்.

பொன்னையர் விறாந்தையில் காலெடுத்து வைக்க வில்லை. இருந்தாற்போல் இடியோசையாக வீதியடங்க ஜனநடமாட்டமும், குரலொலியும் கேட்டன. குத்துக் காலில் நின்று உற்றுக் கவனித்தார்.

‘மறுபடியும் ஏதேன் தொழிலாளர் போராட்டம் நடக்கிறதோ?’

அவர் கண்களுக்கு அப்படியும் தெரியவில்லை. பெரும் ஆர்ப்பாட்டங்களோ, கோஷங்களோ இருப்பதாயுமில்லை. ஒரே ஆரவாரமாகவே தெரிந்தது.

ஜனத்திரளும் ஆர்ப்பரிப்பும் நின்றபாடாய்க் காணவில்லை. வர வர ஜனக் கூட்டம் வீதியை அடைத்துப் பிடித்துப் பெருகிக்கொண்டு வந்தது.

தான் கண்டிக்குப் புறப்பட எடுத்த தீர்மானத்திற்கு இது ஊறு விளைவிக்குமோ என்று ஒரு கணம் சஞ்சலப்பட்டார்.

ஜனக்கூட்டம் சற்று வேகமாகக் கொந்தளித்துக் கத்துகின்ற தொனியும் இப்போது அவர் காதில் கேட்டது.

விறாந்தையிலிருந்து இறங்கி பிறங்கை கட்டிக் காண்டு வாசல் பக்கம் நின்று வீதியைப் பார்த்த வண்ணம், மெதுவாகச் சென்று ‘கேற்`றைத் திறந்தார்.

தூரத்தே முண்டியடித்துக் கொண்டு கும்பலாகத் திணறி வரும், ஜனத்திரளும், ஏந்திப் பிடித்து முன்னேறி வருகின்ற செங்கொடிகளும் அவர் கண்களில் தோன்றின.

‘ஊர்வலம் போல் இருக்கிறது’ என்று யூகித்துக் கொண்டார் பொன்னையர்.

காலை வேளையில் பத்து மணிக்கெல்லாம் ஊர்வலங்கள் நிகழ்வதை அவர் கேள்விப்பட்டதேயில்லை.

‘அரசாங்கம் கெடுபிடிச் சட்டம் போட்டிருக்கும் வேளையில், இப்படிப் பகிரங்க ஊர்வலம் நடத்த முடியுமா?’

எல்லாம் அவருக்கு வியப்பாகவே இருந்தன. மதிற் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இருவர் உற்சாகத்தோடு பேசிக் கொண்டு போன வார்த்தைகள் காதில் விழுந்தன.

“உணவு விலையைக் கூட்டிச் சனங்களின் வயித்தில் அடிச்சவேக்குக் கடைசியில் நாசம் வந்து புடிச்சிட்டுது.”

“மக்கள் போராட்டம் முழு வெற்றி”

”ஏழைகள் வயிற்றில் விழுந்த அடி, ஆட்சி அதிகாரத்தையே கலக்கி விழுத்தி விட்டது.”

பொன்னையருக்குச் ‘சங்கதி’ வெளித்தது.

‘பெருஞ் சொத்துச் சுகவாசிகளைப் பாதுகாக்கப் போய் ஏழை மக்களின் வயிற்றில் அடித்ததால் வந்த வினை இது.’

அந்தக் கூட்டத்தில் சொல்லிக்கொண்டுபோன அபிப்பிராயத்தை அவர் மனசும் ‘ஆமாம்’ என்று ஒப்புக் கொண்டது.

ஊர்வலம் அண்மி விட்டது. கூர்ந்து கவனித்தார். ஊர்வலம் நெருங்க தெருங்க அதில் எழுந்த கோஷக்குரல்களும் அண்டதிக்கதிர ஒலிக்கத் தொடங்கின.

“மக்கள் போராட்டம்?”

“கலக்கி விட்டது!”

“தொழிலாளர் வெற்றி?”

“தேசத்தின் வெற்றி?”

“சுரண்டும் வர்க்கத்தை?”

”பூண்டோடு ஒழிப்போம்!”

“தொழிலாளர் ஒற்றுமை?”

“ஓங்கி வளர்க!”

“தோழர் பொன்ராசாவுக்கு?”

”ஜே! ஜே!”

மின்சாரம் இடுக்கி அடித்தமாதிரி பொன்னையர் பிரமிப்பில் ஆழ்ந்தார். தான் கனவுலகில் நிற்பதாக ஒரு கணம் அவருக்குத் தோன்றியது.

தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஒருமித்து ஆவேகித்துப் போய்க்கொண்டிருக்கிற காட்சி, பொன்னையர் நிலையை அடியோடு குலைத்தது.

அவர்கள் கரங்களில் ‘படபட’த்துக் கம்பீரித்துக் கொண்டிருக்கிற கொடிகள் வெற்றி முரசம் கொட்டுவது போல் அவருக்குப் பட்டன.

பொன்னையர் தன்னையும் தனது நிலையையும் மறந்தவராய் வீதிக்கு வந்து கண்ணூனப் பார்த்தபடி நிற்கலானார்.

தொழிலாளர் புடைசூழ, ஊர்வலத்தின் ஒரு பகுதிக்குத் தலைமை தாங்கி வந்துகொண்டிருந்தான் பொன்ராசா.

பெண்கள் ஊர்வலத்தை உடனே அவர் கண்கள் மேய்ந்தன.

அவர் ஊகித்தது போல் அந்தக் குழாமில் அவரின் ஜானகியைக் காணவில்லை.

ஊர்வலம் எக்காளித்து ஜெயபேரிகையுடன் முன்னேறிக் கொண்டிருந்தது.

அணிவகுப்பின் முக்காற் பகுதி ‘கேற்’றடியைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது ‘திடீ’ரென்று கணக்கற்ற உக்ர கோஷத் தொளிகள் கமாரிட்டன.

“சதிகாரரை?”

“நீறக்குவோம்!”

“தோழர் பொன்ராசாவுக்கு?”

”ஜே! ஜே!”

மூன்றாவது படையாக அணிவகுத்துக்கொண்ட மக்கள் கூட்டம், அவர் நின்ற கேற்றண்டையைப் பார்த்தே குரல் வைத்தது.

“விரிவுரையாளர் இராமசாமிக்கு?”

”ஜே! ஜே!”

“தோழி ஜானகிக்கு?”

”ஜே! ஜே!”

பொன்னையா அங்கம் சிலிர்க்க, ஆவலோடு அவர்களை இமை வெட்டாமல் பார்த்துக்கொண்டே பூரித்து விம்மிய நெஞ்சினராய் நின்றார்.

ஆனந்த பரவசத்தில் அக்களித்துப்போன அவர் இதயம் அவருள் கேவியது. அக்களிப்பு வேதனை அவர் கண்களில் ஊனித்துக்கொண்டிருந்தது.

அவர் கண்கள் கரைந்து கண்ணீர் உகுத்தன.

தன் கண்ணில் மறையும் வரை, பொன்னையர் அந்தத் தோற்றத்தை, மனம் பொங்க, ஆசுவாசமாகப் பார்த்துக் கொண்டே நின்றார்.

அப்போது அவர் நெஞ்சூதி ஒரு பெருமூச்சுக் கிளம்பி அவர் ஆத்மராகமாக மாறியது.

‘நான் பெற்ற செல்வமே. எனக்கே வழிகாட்டி விட்டாய். இது எனக்குப் போதுமடி.’

(முற்றும்)

– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *