மண்ணில் தெரியுதொரு தோற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 2,909 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம் – 9

மலையகச் சாரல்களையே கண்டு களிக்கின்ற வாய்ப்பு இனிமேல் தனக்குக் கிட்டாமல் போகலாம் என்று நினைத்த ஜானகி, ‘இந்தச் சந்தர்ப்பத்தை முற்றாகப் பயன் படுத்தத்’ திட்டமிட்டாள்.

மலைநாட்டைப் பார்த்து ரசிக்கப் போகின்ற நினைப் பில் அவள் அன்று இரவு முழுவதும் கண்ணுறங்காம லிருந்தாள். முன்பு அந்தப் பிரதேசங்களைப் பல தடவைகள் சுற்றிப் பார்த்தும் அலுப்புக் கொள்ளாத அவள் மனசு மேலும் அதற்காகவே தாவிற்று.

அப்பிரதேசத்தின் உயர்ந்த மலைகளும், மலைகளை மரு விச் செங்குத்தாக விழுகின்ற பள்ளத்தாக்குகளும், அருவி ஓடும் நீரருவி வாய்க்கால்களும், பனி மண்டலங் கவிந்து தீவும் பாங்கில் பசுமை கொழித்துத் துலங்கும் செடி, கொடி மரங்களும் ஜானகியின் மனசைக் ‘கிளுகிளு’க்கச் செய்தன.

வெண் நீல வானத்து வர்ண ஜால மின் ஒளிக்கீறுகள் மலைச்சாரல்களில் பம்மிக் கிடக்கின்ற தேயிலைச் செடி களில் தவழ்ந்தன. கன்னிக் கொழுந்துகள் காற்றினில் கலகலத்து அசையும்போது, வெள்ளிகள் மி ன் சாடையில் கு.ரிகளின் இன்னச் சோணைகள் போல் குளு’ த்து மினுங்கின. நாலா பக்கங்களும் திரையிட்டுக் கவிந்த பனிமூடம், வான மண்டலந்தொட்டு மலையடி வாரங்களீறாக முகிலுறைந்த ஏக நீல வானம்போல் பூமி பரவ வெளுத்துக் கிடந்தது.

எங்கோ தொலைதூரத்து லயங்களில் ஆட்டு மந்தை களும் மாட்டுக்கன்றுகளும் இடறுண்டு கதறிச் சந்தடி செய்கின்ற தொனி கேட்டது. இருந்தாற் போல் நாய் களின் குரைப்பும் ஊளையும் காதில் விழுந்தன. மிருக ஜந் துக்கள் அலறும் இரைச்சல்கள் அடிக்கடி ஜானகியின் காதுகளை நச்சரித்துக்கொண்டிருந்தன.

மேடு பள்ளமான இந்த மலை நாட்டில் அந்த மனிதர் கள் போடும் குரல்கள் எத்தனை ரகமானவை. இதன் மலைச் சாரல்கள் போலவே அங்கேயுள்ள ஜீவாற்றுமாக்கள் சலித் துக் கத்துகின்றார்கள். அந்தக் கூக் குரல்கள் அவள் செவி களில் அவலமாகவே கேட்டன. அவர்களின் இந்தக் கோலத்திற்கான காரணங்களை முன்பு ஒரு தடவைபொன் ராசா அவளுக்கு விளக்கியிருந்தான். என்றாலும், அவன் கூறிய கதைகள் நினைவறுந்துவிட்டன.

அந்த நினைவலைகள்…?

குளுமையும் பசுமையுமான அந்தக் காட்சிகளை மீறிய அவர்களின் மாட்டுத் தொழுவ வாழ்க்கை அவள் நெஞ்சை இப்பவும் அழுத்திற்று. தலவாக்கொல்லை, உச்சி மலையில் நின்று பார்த்த கோலங்கள் திரை நீங்கியது போல் அவ ளுக்குப் பளிச்சிட்டன. லயங்களிலிருந்து எழும் சந்தடி களும் கூச்சல்களும் அலுத்துப்போன ஜீவாற்றுமங்களின் ஏக்கக் குரல்களாகவே கேட்டன.

தொழுவங்களில் அடைபட்ட வாய்விடாச் சாதிகள் போல் லயங்களில் அவர்கள் திணறித் தவிக்கிறார்கள். மலைச்சாரல்களை மேவிய தேயிலைக் கொழுந்துகள் வானம் நீவின பச்சை வர்ண மண்டலமாகத் தோன்றின. ‘உச்சி மலை தொட்டு அடிவாரமடங்க அலை பாய்ந்து விரிந்து கிடக்கின்ற தேயிலைக் கொழுந்துகளும், கண்ணெறி தூரங் களில் சடைத்து மதாளித்திருக்கின்ற சோலைகளும் இந்த மனிதர்களின் உழைப்பால் வளங்கொழித்தன’ என்று பொன்ராசா சொன்னபோது ஜானகி நம்பவில்லை.

“பூமியில் இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள் மோட் சத்தின் கோபுரங்களைக் கட்டி எழுப்புகின்றார்கள் என்றால் யார்தான் நம்புவார்கள்?” என்று அவனிடம் கேட்டாள் ஜானகி.

அதற்கு வரலாற்று ரீதியாகப் பதிலளித்த பொன் ராசா, அந்தக் கோபுரங்களில் வாழ்கின்ற தோட்டச் சொந்தக்காரர்- ‘வெள்ளைத்துரை’ மார்கள் எப்படித் தனியுடைமையாதிக்கவாதியானார்கள் என்பதையும் விளக் கினாள். அவள் அந்த ‘அற்புதக்’ கதைகளையெல்லாம் நெட்டுருவிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது லயங்களில் அடைந்து கிடக்கின்ற சிறுவர்கள் இரை காத்துக் கதறும் பட்சிகளைப்போல் தங்கள் தூய்மார்களின் வருகைக்காக வாய் பிளக்க நிற்கின்றனர். தங்கள் பிஞ்சுச் சதிரங்கள் கூனிக் குறாவ, குரல்கள் கேரும்வரை அவர்கள் ஓலம் வைத்து அழுகின்ற தொனி விண் கதறுவதுபோல் மலைகளை ஊடறுத்துக் கேட்டன.

”ஐயோ, பார்க்கப் பரிதாபமாக இருக்கிறதே, இவர்களுக்கு ஒரு விடிவு கிடையாதா?” என்று அங்கலாய்த்தாள் ஜானகி.

“ஜானகி, இவர்களின் கோரமான வாழ்க்கைக்கு, உம்மைப்போல் சில பெரிய மனிதர்களும் ‘பரிதாபம்’ பட்டது தான் காரணம். மனிதர்களில் பரிதாபப் படுபவன் ஒரு போதும் மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க மாட் டான். அவர்களுக்காக, அவர்கள் விரோதிகளுடன் போராடுகிறவன்தான் அதைத் துடைத்தெறிவான்” என்றான் பொன்ராசா.

அதன் அர்த்தம் ஜானகிக்குப் புரியவில்லை.

எத்தனையோ மலை நாட்டு- யாழ்ப்பாண இலக்கிய ஜாம்பவான்கள் மார்தட்டிக்கொண்டு தொழிலாளர்களின் கோர வாழ்க்கையை ‘வைத்துக் கதை பண்ணி’ குடக் கணக்கில் கண்ணீர் கொட்டி, கத்தை கத்தையாக எழுதிக் குவித்த படைப்புகளை அவள் நினைவு கூர்ந்தாள்.

“இவர்களின் பரிதாபகரமான வாழ்க்கையைப் படம் பிடித்து எத்தனையோ மலைநாட்டு – யாழ்ப்பாண எழுத்தாளர்கள் இலக்கியம் சிருஷ்டித்துப் ‘புகழ்’ பெற்றிருக்கிறார்களே, இந்த எழுத்தாளர்கள் நெஞ்சிரக்கமற்றவர்களா?”

ஜானகி ஈழத்தின் ‘புகழ்பெற்ற’ அந்த எழுத்தாளர்களைக் குறிப்பிட்டபோது பொன்ராசா கைகொட்டிக் கேலியாகச் சிரித்தான்.

‘ஏழைத் தொழிலாளர்களைச் சுரண்டி வாழும் முதலாளித்துவம் அவர்களுக்கு மாட்டிய கை விலங்குகளை ஓடிக்கத் திராணியற்று அவர்களுக்குச் சரியான வழி காட்டத் தெரியாத இந்நாட்டின் பல எழுத்தாளர்கள், கலை இலக்கியத்தின் பெயரால் ஜாதி, இன, மத காம இதிகாசப் பிரபந்தங்கள் பேசி இலக்கியத்தின் தரத்தையே சந்தைக் களமாக்கி, இளஞ் சந்ததியையே நாசமாக்கிவிட்ட அந்தப் பிரமாக்கள்…’

இத்துடன் அவன் சிந்தனை தடைபட்டது. அவன் நெஞ்சு நீறுபூத்த நெருப்பாக அகோரித்தது; கோபாவேசந் துன்னிக் கண்கள் சிவந்தன. சிலிர்த்த முகத்தைத் தடவிக்கொண்டு அவன் சொன்னான்:

“இவர்கள் இந்நாட்டு எழுத்தாளர்களல்ல; இந் நாட்டு மக்களுக்குள்ளே முளைத்த பெருந் துரோகிகள். இத்தகையோரால்தான் இந்நாட்டு மக்கள் – குறிப்பாக மலைநாட்டுத் தொழிலாளர்கள் கானலை நீரென்று நம்பி ஓடுகின்ற மான் குட்டிகள்போல் அதல் பாதாளத்தில் விழுந்து அன்றாடம் செத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எழுத்தாளர்கள் எடுத்தது பேனாக்களல்ல; தொழி லாளர்கள் நெஞ்சுகளிலே பாய்ச்சுகின்ற ஈட்டிகள்.”

ஈட்டிகள் என்ற வசனம் ஜானகி நெஞ்சில் ஈட்டி யாகவே பாய்ந்தது. இப்படி மானிதம் செத்த எழுத்தாளர்களும் இங்கு இருக்கிறார்களா? அவளால் கற்பனை பண்ணமுடியவில்லை.

:நீங்கள் ஓர் இயக்க இயல்வாதியாகவிருந்து கொண்டும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பேசுகிறீர்கள். அவர்களும் மக்களுக்காகத்தானே எழுதுகின்றார்கள்?”

“நான் ஓர் இயக்க இயல்வாதியாகவிருப்பதால் தான் பொறுப்போடு அடித்து’ச் சொல்லுகிறேன். அவர்கள் கண்களில் சுரண்டுகின்ற முதலாளித்துவக் கும்பலும் ‘மக்கள்’ தான், சுரண்டப்படும் தொழிலாளர்களும் மக்கள் தான். அந்த எழுத்தாளர்களோ அந்த ‘மக்களு’க் காக. இந்த ‘மக்களு’க்கு எழுதிக கொண்டிருக்கிறார்கள். இப்போ புரிகிறதா?” என்று வினவிய பொன் ராசா. அந்த லயங்களையே உற்றுப்பார்த்தபடி, ‘எழுத்தாளன் பணி மண்ணையும் மக்களையும் சித்திரிப்பதல்ல. மண்ணின் தோற்றத்தையும் அதிலே மக்கள் வாழும் முறையையும் காட்டி உன்னத வாழ்வுக்கு வழி கூறு பவனே எழுத்தாளன். அவன்தான் மக்கள் எழுத்தாளன். பாரதி மக்களைப் பற்றிச் சொல்லிக் கண்ணீர் வடிக்க வில்லை; மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை ஆவேச மாக இடித்துச் சொன்னான். அதனால்தான் பாரதி மக்கள் கவிஞனானான். யார் மக்கள் கலைஞன் என்பதைக் கண்டு கொள்ள முடிகிறதல்லவா?”

ஜானகி ‘ஆம்’ என்று கூறுவதுபோல் சொண்டுகள் குவித்துச் சிரித்தாள். இதழ் விரிந்த பூவைப்போல் அவள் முகம் மலர்ந்தது. கண்கள் அவனில் மேய்ந்தன.

பொன்ராசா புரியும் தர்க்க வாதங்களும் தத்துவ நீதி விளக்கங்களும் அவளை ஆகர்ஷித்தன. அவனின் புத் திக் கூர்மையை. நினைக்க அவளுக்கு வியப்பாக விருந்தது. அவள் அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

“நீங்கள் ஒழுங்காகப் படித்தால் நிச்சயம் ஒரு கலா நிதியாக வருவீர்கள்?”

பொன்ராசா சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“பெரும்பாலும் கலாநிதிகள் புத்தகங்களில் தத்து வத்தைத் தேடி அதையே புடம் போடும் கிளிப்பிள்ளை கள்; வாழ்க்கையனுபவத்துத் தத்துவச் சிருஷ்டிப்பாளர் களல்லர். எனவே. அவர்கள் வாழ்க்கை நடைமுறை இயக்கங்களுக்குப் புறம்பாகி மண்ணில் மிதியாமல் வானத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்நாட்டின் சாபக்கேடு, பெரும்பாலும் கலாநிதிகளும், சட்டவாதிகளும், செல்வந் தர்களும் தொழிலாளர் இயக்கங்களுக்குத் தலைமை வகிப்பதால்தான் ஏழைத் தொழிலாள விவசாய வர்க் கத்திற்கு இன்னும் விடிவு கிட்டவில்லை. தொழிலாள வர்க் கத் தலைமை எப்போ கிடைக்கிறதோ அப்போதான் முடுமை நீங்கும்…”

பொன்ராசாலின் புதுமையான கருத்தைக் கேட்டு ஜானகி சற்றுநேரம் அசந்துபோய் நின்றான்.

எதற்கும் ‘போராட்டம்’ என்று ஆவேசமாகப்பேசும் பொன்ராசா அமைதியே உருவான விரிவுரையாளரில் நல் லெண்ணம் கொண்டிரானென்று நினைத்த ஜானகி, “நமது விரிவுரையாளர் பற்றிய உங்கள் கருத்தென்ன?” என்று எதிர்பாராத ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டாள்.

பொன்ராசா நிதானமாகப் பதிலளித்தான் :

அவர் சேற்றில் முளைத்த செந்தாமரை. அவரிடம் கிளிப்பிள்ளைவாதி’கள் மட்டும் உருவாகவில்லை. பல புரட்சிகர நடைமுறைப் போராட்ட வீரர்களும் உருவாகியுள்ள னர். இவர்கள் வானத்து நட்சத்திரங்களைக் கற்பனை பண்ணி வெறும் மண்ணைப் பார்ப்பவர்களல்லர். உலகளாவிய ஜன வெள்ளத்தின் வாழ்க்கையை வைத்து இந்தப் பூமியையே சொர்க்கமாக்கப் போராடும் இயக்கவாதிகள்.

“நீங்களும் அப்படித்தானே?” என்று எளிதமாகக் கேட்டாள் ஜானகி.

“நான் மட்டுமா: ஏன், நீயும்தான்.”

ஜானகியின் வாய் அடைத்துப் போய்விட்டது. கண்கள் அவனை ஊனித்துப் பார்த்தன. இலட்சிய இணைப்பான அந்தக் கற்கண்டுச் சொற்கள்…

இன்றும் அந்த இனிய வார்த்தைகள் அவள் மனசை இன்பத்திலாழ்த்தின.

***

“ஜானகி,என்ன கல்லுப் பிள்ளையார் மாதிரிக் குந்தி யிருந்து யோசனையிலாழ்ந்து விட்டாயே, இனிக் கிளம்ப லாமே?’ என்று அரட்டிய சரஸ்வதி, இன்று எந்தப் பகுதியைப் பார்க்க உத்தேசம்?” என்று கேட்டாள்.

“போய்க்கெ கொண்டிருப்போம். எது மனசுக்குப் பிடிக் குதோ அங்கே தரிக்க வேண்டியதுநான்.

“சரி, வா போவோம்.”

இருவரும் பேராதனை ரஜவத்தையிலிருந்து மெயின் வீதியில் இறங்கும்போதே பொழுது மேலே வந்து விட்டது.

கண்டி நகரத்தைத்தேடி வீதியோரமாக நடந்து கொண்டிருந்தனர். அப்போது தொலை தூரத்துக்கப்பால் ஜனசந்தடியின் தெருக்கமும், ஏதோ ஆர்ப்பாட்டமும் தெரிந்தன.

‘கண்டி முனிசிபல் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போகிறார்கள்’ என்று முதல் நாள் விரிவுரையாளருக்கு கிழவன் வெள்ளைச்சாமி கூறிய செய்தி அப்போது அவள் நினைவில் குடுத்தது. இது அந்த ஆர்ப்பாட்டமாக இருக்கலாமோ?

ஜனங்கள் வீதிகளை அடைத்துப் பிடித்துக் கொண்டு கலவரப்படுவது மங்கலாய்த் தெரிந்தது. போக்குவரத்து வாகனங்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. பிரயாணிகள் வழிந்து நிரம்பிய ‘பஸ்’கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து உறுமி இரைந்து கொண்டிருந்தன.

“ஜானகி, பட்டாளம்போல் சனங்கள் திரண்டு நிற்குதே. நாங்கள் எந்தவழியாலும் போகமுடியாது போலிருக்கிறது. பேசாமல் வந்த வழியே திரும்பிச் செல்வோம்” என்றாள் சரஸ்வதி.

”சரஸ், கொஞ்சம் பொறு. அது என்னவென்று பார்ப்போம்” என்றாள் ஜானகி, ஏங்கிய கண்களால் அங்கே கூர்ந்து பார்த்தாள்.

‘கலங்கலீங்… த்டோம் ப்டோம்’ என்ற ஒலிகள்காது ‘கிண்’ணிடக் கேட்டன. கண்ணாடி யன்னல்கள் உடைந்து நொறுங்குகின்ற சத்தமா?

வீதிக் கடைகளை முற்றுகையிட்ட ஜனத்திரள் ஆர்ப்பரித்துப் போடும். கச்சல் ஏகமாய் ஜானகி காதில் விழுந்தது.

‘திடீ ரென்று மோட்டார் காரிலிருந்து நடுவீதியில் ங்கிய பெர்லிஸ் கத்திய குரலே கமாரிட்டது;

“றோட்டிலே ஒருவரும் நிற்க வேண்டாம்; கலைந்து போங்கள்”

நெஞ்சு ‘திடுக்’ கிட,ஜானகியும் சரஸ்வதியும் ‘தறு தறு’த்து தறு த்து முழிசிக் கொண்டு, வந்தவழியே திரும்பும் போது, ஓர் இளைஞன் கதறிக்கொண்டு வீதிக்குக் குறுக்கே ஓடினான்.

“ஸ்ரைக் செஞ்ச தொழிலாளங்கள், பொலிஸ்காரங்க அடிச்சு நொறுக்கிப் பூட்டாங்க”

ஜானகியின் நெஞ்ச ‘திக்’ கிட்டது; கால்கள் தரித்தன.

இந்தப் போராட்டத்தில் பொன்ராசா கலந்து கொண்டிருப்பானோ?’

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சொன்ன வார்த்தைகளே அப்போது அவள் நெஞ்சினை அறத்து ஊடுருவின:

“பொன்ராசனை மட்டும் பிடித்து உள்ளே தள்ளிவிட்டால்..?”

‘ஐயோ’ என்று வாய்விட்டுக் குழற வேண்டும் போல் அவள் மனசு கெந்தகித்தது.

சரஸ்வதி நடந்து கொண்டே, “ஜானகி, கெதியா வா போவோம்” என்று அரட்டினாள்.

அப்பவும் ஜானகியின் கால்கள் நகரவில்லை; தியங்கிப் போய் நின்றாள்.

“ஏ ஜானகி, என்னது அப்படியே நின்று விட்டாய்?”

“நான் வரவில்லை; விரும்பினால் நீ போ.”

“என்னடி, உனக்கென்ன விசரா பிடிச்சிட்டுது?” ஜானகி பதில் சொல்லாமல் சரஸ்வதியை முறைத் துப் பார்த்தாள்

அப்போது தொலை தூரத்துக்கப்பால் நாலைந்து தொழிலாளர்கள் மண்டை பிளந்த ரண காயங்களோடு ரத்தம் தோய்ந்த முண்டாஸ்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஆக்ரோஷித்துக் கத்துவது அவள் கண்ணில் தெரிந்தது:

”பொலிஸ் அட்டூழியத்தை?”

“அடக்கி ஒழிப்போம்!”

“முதலாளித்துவத்தை?'”

“நொறுக்குவோம்!”

“தோழர் பொன்ராசாவை?’

“விடுதலை செய்!”

“ஐயையோ!”

‘பொன்ராசாவை விடுதலை செய்’ என்ற கோஷம் மின்னலடித்தமாதிரி ஜானகி நெஞ்சைத் தாக்கிற்று. சர்வாங்கமும் உப்பிக் குழுவிற்று. கண்களில் நீர் ததும்ப, அவள் விறைத்துப்போய் நின்றாள்.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் இந்த நேரம் எங்கே இருப்பார்; என்ன செய்துகொண்டிருப்பார்?’ என்ற யோசனை யிலாழ்ந்த போது, பொன்ராசாவை அவர் விலங்கு மாட்டிப் பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போகின்ற ஓர் காட்சி பிரமையாக அவள் மனதில் தோன்றிச் சாடிற்று:சதிரம் குல்லிட்டுக்கொண்டது.

” சரஸ்வதி, உடனே ஜானகியையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போ.”

ஓர் குரல் அப்போது அவலமாகக் கேட்டது. ஜானகி திடுக்’ கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

விரிவுரையாளர் இராமசாமி கலவரமடைந்தவராக அவள் எதிரே நின்றார். ஜானகியிலும் பார்க்க அவர் நெஞ்சே ஆகவும் பதறிக் கொண்டிருந்தது.

முதல்நாள் விரிவுரையாளர் இன்ஸ்பெக்டருக்கு எக்காளித்துச் சொன்ன அந்த வார்த்தை – அந்தச் சவால் இப்போ அவர் செவிகளிலேயே ஓங்கி அறைந்தது.

”பொன்ராசாவை வலை போட்டுத் திரியும் உங்கள் முயற்சி, நிச்சயம் தோல்வியாகும்.”

அப்போது பொலிஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வெற் றிப் புன்னகையுடன் அவரைப் பார்த்து, ‘ஓய் விரிவுரையாளரே. எப்படி என் சமத்து?” என்று கேட்டுக் கேலி செய்வது போலிருந்தது.

கடும் யோசனையிலாழ்ந்துவிட்ட விரிவுரையாளர் ‘பர பரப்போடு வீடுதேடி நடக்கலானார்.

அத்தியாயம் – 10

“பொன்ராசாவுக்கு என்ன நேர்ந்தது? பொலிஸ் அவனை மட்டும் கைது செய்ததா? அவனுடன் பலரையும் கைது செய்திருக்குமா? இன்ஸ்பெக்டர் சிவலிங்கமே இதற் குக்கருவியாக இருந்திருப்பாரா?”

இப்படியெல்லாம் விரிவுரையாளர் தனக்குள்ளே கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே அறையில் சுற்றினார்.

பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம் புரிந்ததை எதிர்த்து,தொழிலாளர்கள்-வெகு ஜனங்கள் கெம் பி எழுந்து போர் முழக்கங் கொட்டி அரசாங்க – தனியார் உடைமைகளையும், கட்டிடங்களையும் நொறுக்கி எறிந்து கொண்டு சென்ற காட்சிகள் அவர் மனசில் அப்போது விரிந்தன.

யாழ்ப்பாணத்திலே இயக்க வேலைகளச் செய்து கொண்டிருந்த பொன்ராசா, மலைநாட்டுத் தொழிலாளர் போராட்டத்தில் ‘திடீ’ரென்று வந்து எப்படி குதித்தான் என்பதை அவரால் யூகிக்கவே முடியவில்லை.

‘கண்டி முனிசிப்பல் தொழிலாளர் சம்பள உயர் குடியிருப்பு நிலம், வரிக்குறைப்பு. கேட்டுப் போராடும் கமிட்டிக்கு அவன் ஓர் ஆலோசகராகத் தானே வந்திருந்தான்? அது இப்படி விஸ்வரூபம் எடுத்திருக்கிறதென்றால் பொலிஸாரின் ‘திட்டமிட்ட ‘சதியே காரணமாயிருக்கும்’ என்று நினைத்தார்.

‘முழுத் தகவல்களையும் சிவலிங்கத்திடமே தெரிந்து கொள்ளலாம். ஆனால், இன்னொரு பொலிஸ் அதிகாரியான அவர் பொலிஸ் விவகாரத்தை வெளியே கூறு வாரா?’ என்ற சந்தேகம் தட்டிற்று.

‘கேற்’ பக்கம் ஓர் குரல் கேட்டது:

“தொரே உள்ளே இருக்காங்களா?”

வெளியே வந்து பார்த்தார் விரிவுரையாளர்.

வெள்ளைச்சாமி, சிறிசேன, தங்கப்பன், அப்புஹாமி; சலாவுதீன் உட்பட ஆறு ஏழு தொழிலாளர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன நடந்தது? பொன்ராசா எங்கே? ”

பதட்டத்துடன் விடுத்துக் கேட்டார் விரிவுரையாளர்.

“ஸ்ரைக் பண்ணோணும்’னு நாம்ப தீர்மானிச்சபடி முனிசிபல் ‘கேட்’டுக்கிட்டவாத் தொழிலாளங்கல்லாம் ஒண்ணாப் போய்க்கிட்டிருந்தோம். ஒரு பொவிசு இஞ்சுப் பற்றகு அந்தத் தடிப்பய நம்ப கட்சி ஆபிசிலே இருந்த பொன்ராசாத் தோழரைப் புடிச்ச இழுத்து ஜீப்பில ஏத் திப்புட்டான். அந்தாப்பொல ஜனங்க குழம்பியிட்டாங்க” என்றான் வெள்ளைச்சாமி.

“அதுக்கு, பொலிஸ் ஏன் அடித்தது?” என்று ஆத்திரம் கக்கும் பாவனையில் கேட்டார் அவர்.

“கந்தோரில் இருந்த சங்கத்து ஆளுங்ககூடவுட்டுக் கொள்ள வந்தாக்கா சும்மா பாத்துக்கிட்டு இரிக்கிய ஏலுமா? அந்தால பொலிஸ்காரங்ககூட நாயம் பேசிக் கிடப் போறப்போ அங்கின குழம்பிப் பேயித்திரிச்சி. நாமளும் வுட்டுக்களே” என்று சலாவுதீன் சொல்லிக் கொண்டிருக்கவே, அவன் தோள்கள் விம்மிப் புடைத்துக்கொண்டன.

“நாங்கட வவுத்தில் அடிக்கிற பணங்காரங்களுக்கு விரோதமா முட்டுப்பட்ட தொழிலாளிங் சட்டன் (போராட்டம்) பண்றாங். அதுக்குப் பொலிஸ்காரங் பொல்லுந் துவக்குங் கொண்டு வாறாங். என்னங் அநியாயங்’ என்று குமுறினான் சிறிசேனா.

விரிவுரையாளருக்குப் பக்கத்தில் போய் நின்ற, சிறி சேனா சட்டையைக் கழற்றி நெஞ்சுப் பாளத்தைக்காட்டி “காயங்களப் பாத்தீங்களா?’ என்று முறையிட்டு அவரைப் பார்த்தான்.

“பொலிஸ்காரங்க நம்ப தொழிலாளிங்க ஒடம்பில கை வைச்சோடன், ‘பொலு பொலு’ ன்னு அவங்கமேல கல்லு வந்து விழுந்திச்சு. அந்தால ‘படார்படார்’ன்னு பொல்லுங்களால மாட்டத் துவங்கிட்டாங்க” சொல்லி முடித்தான் வெள்ளைச்சாமி.

“யாருக்கேனும் உயிர்ச் சேதமுண்டா?’

“இல்லே, அப்புடி ஆரும் மவுத்தாகலே. ஆனா ரண்டு பேர்ட முழங்கால்ல அடி வுழுந்திரிச்சி’ என்றான் சலாவுதீன்.

“படுகாயமோ?’

‘செம்மளாத் தெரியாதுங்க.”

“அந்த இரண்டு பேரையும் ‘ஹொஸ்பிட்டல்’ல சேத்தாச்சுதா?”

“ஆமாங்க சேத்தாச்சுங்க.”

“எந்த ‘ஹொஸ்பிட்டல்’ல?”

“கண்டி ஹொஸ்பிட்டலீங்க.”

இதையெல்லாம் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்த ஜானகி, ‘ஐயோ பாவங்கள்’ என்று நெஞ்சினுள்ளே உருகினாள்.

காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்குச் சென்று உடனே பார்க்கவும், கைதான பொன்ராசாவை பொலிஸ் நிலையம் போய் மீட்கவும் அவள் மனக துடித்தது..

“ஆஸ்பத்திரிக்குப் போய் காயக்காறரைப் பார்த்துக் கொண்டு வருவோமா?”

சரஸ்வதியிடம் கேட்கும் தோரணையில் விரிவுரையாளரை நோக்கி, ‘தழுதழு’த்த குரலில் அனுங்கினாள் ஜானகி.

அழகு செளந்தர்யமும், வாளிப்புமாய்த் தெரிகின்ற இந்தப் பெண், தொழிலாளரில் இவ்வளவு அக்கறை கொண்டு துடிப்பதைக் கவனித்த வெள்ளைச்சாமியும். அவன் தோழர்களும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார்கள்.

“தொரே இந்த அம்மா யாருங்க?’ என்று அவர் காதோடு கேட்டான் வெள்ளைச்சாமி.

“இவ ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சம்சாரம்” அழுத்தமாகச் சொன்னார் விரிவுரையாளர்.

‘விரிவுரையாளர் இந்த வேளை கூட சல்லாபம் புரிகிறாரே’ என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் நினைத்துக் கொண்டே, “நம்ப முடியாதுங்க தொரே. இந்த அம்மா பேச்சைப் பார்த்தா பொலிசு இஞ்சுப்பெற்றர் சம்சாரம்னு சொல்லிக்க முடியுங்களா?”

வியப்போடு சாடையாக தைந்த வண்ணம் கேட்டான் வெள்ளைச்சாமி.

“உங்களுக்கு அவ எப்படித் தெரிகிறா?”

“அவுங்களப் பார்த்தா, எங்க தோழர் பொன்ராசாவுங்க….”

“த்சூ நிறுத்து: அப்படியில்லை.”

அவன் வாயை அடைப்பது போல் தன் வாயில்விரல் வைத்து அச்சுறுத்தினர் விரிவுரையாளர்.

எங்க தோழர் பொன்ராசாவுங்க…’

இந்த வாக்கியம் ஜானகியின் மனசில் மீண்டது; அவள் இதயத்தினுள்ளே அது உளியாசுக்குடைந்த போதும் அந்தக் குடைவினுள்ளே அவள் இனங்காணாத எதோ ஓர் இன்பத்திலாழ்ந்தாள். இந்தக் களிப்பு, தனது பெண்மை, ஒழுக்கம் இரண்டிற்குமேமாக என்று புரிந்த போது, அவள் மனசு மீறுபாட்டம் வெதும்பிக் கொதித்தது. மான உணர்வும் இலட்சிய வேட்கையும் ஒன்றையொன்று மோதின. அவள் சித்தனை முற்றாகக் குழம்பி விட்டது.

தனது சுதந்திர அபிலாஷைகளைக்கூட தன் மனசுக்கு உகந்தபடி வெளிப்படுத்த இயலாத கட்டுக்கோப்புகள், அவள் மனசின் அப்போது கிறைக் கேடயங்களாகத் தோன்றின.

ஒருமுறை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் நடத்துகொண்ட முறைகள், அந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை இப்பவும் நினைத்து அவள் தன்னுள்ளுருகிச் சாம்பினாள்.

அன்று நிகழ்ந்த அநியாயத்தைத் தடுத்துவிட அவளால் முடியவில்லை. அதற்காக இன்றும் அவள் இதயம் நெகிழ்ந்து கொண்டிருக்கிறதேயன்றி அவள் நினைப்பது எதையும் அவளால் செய்யமுடியவில்லை.

“என் அந்தராத்மாவே சுத்தமில்லாமல் செத்துவிட்ட இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்” என்று அப்பவே அவள் சொல்லியிருந்தாள். விரிவுரையாளர் மட்டும் குறுக்கிடாமலிருந்தால் அவள் சரித்திரமே வேறாக அமைந்திருக்கும். ஆனல் அவள் விரிவுரையாளரின் சொற்களில் கட்டுண்டு பெட்டிப் பாம்பாகி விட்டாள்.

அந்த நிகழ்ச்சி மனசுள் இப்பவும் பிரளயித்துக் கொண்டுதானிருக்கிறது.

அரசாங்கத்தின் கெடுபிடிகளை எதிர்த்துத் தொழிலா எர்-விவசாயிகள் விடுதலை ஊர்வலம் நடத்தி யாழ்ப்பாண முற்றவெளியில் நிகழும் பிரமாண்டமான ஒரு கண்டனக் கூட்டமும், அந்தக் கூட்டப் பிரச்சாரச் சுவரொட்டிகளும் யாழ்ப்பாணமெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கின.

இவற்றைக் கவனித்த ஆட்சியும் தனது அரச இயந்திரங்களைத் தக்க வேளையில் முடுக்கிவிட்டது.

அன்று அதிகாலையிலிருந்தே நாடு பூராவுமுள்ள முப் படைகளும் ‘உஷார்’ படுத்தப்பட்டன. பொலிஸ் ‘ஜீப்’புகள் துப்பாக்கிகள் சகிதம் நகர வீதிகளில் ரோந்து சுற்றத் தொடங்கி விட்டன.

கடல் அலைகள் குமுறிக் கொந்தளிப்பது போல் நாலா பக்கமும் ஜனங்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

உணவு விலையேற்றத்தை எதிர்த்த அப்போராட்டத்தின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் சுன்னாகத்து மெயின் வீதியை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஜானகி விறாந்தையில் நின்று ஊர்வலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊர்வலம் அண்மிவிட்டது. வானம் இடியுண்டு பூமி அதிர்ந்த மாதிரி ஜனங்களின் ஆக்ரோஷக் கோஷங்கள் அவள் செவிகளில் விழுந்தன:

“உணவின் விலையை?”

“உயர்த்தாதே!”

“வெட்டிய கொத்தரிசியை?”

“திருப்பிக் கொடு!”

“ஏழைகள் வயிற்றில்”

“அடிக்காதே!”

“அந்நிய கம்பனிகளை?”

“தேசியமயமாக்கு!'”

“தொழிலாளர்களை?”

“பழிவாங்காதே!”

“வகுப்பு வாதம்?”

“ஒழிக!”

“ஜாதி பேதம்?”

“ஒழிக!”

“இனவாதம்?”

“ஒழிக!”

“சகோதரத்துவம்?”

“வாழ்க! வாழ்க!”

மண்ணிலிருந்து விண்ணதிர வெடித்துக் கிளம்புகின்ற ஜனக் குரல்களோடு தொழிலாளர் ஏந்திப் பிடித்து முன் னேறும் சுலோக அட்டைகளும், செங்கொடிகளும் வானளாவிப் ‘பட பட’த்து ஆடுகின்றன கண்ணுக்கெட்டாத தூரம் வரை நிரை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது ஊர்வலம்.

செஞ்சட்டையும் லனின் தொப்பியும் அணிந்து கொண்டு பொன்ராசா கம்பீரமாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

ஜானகியின் வீட்டு வாசல் நெருங்கியதும் அவன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாகக் கத்தினான்.

“பொலிஸ் அட்டூழியங்கள்?”

“ஒழிக!”

இதைத் தொடர்ந்து எங்கிருந்தோ ஓடி வந்து ஒரு பொலிஸ்காரன் அதிரும் தொனியில் கத்தினான்:

“அடேய் பண்டி, ‘ப்ளடி றாஸ்கல்’. வாய்க் கொழுப் பாய்க்கத்தாதே”.

ஊர்வலம் ‘சடா’ ரென்று தரித்தது. கூட்டம் ‘குபுகுபு’வெனத் திரண்டு விட்டது. உடனே பொன்ராசா பலமாகக் கத்தினான்:

“தோழர்களே! ஊர்வலத்தைக் குழப்பியடிக்க. பொலிஸ் ஆத்திர மூட்டும் சதி நடவடிக்கையில் இறங்கப் போகிறது. சட்டை செய்யாமல் முன்னேறிப் போங்கள்.”

பொன்ராசா கரங்களை உயர்த்தி ‘உஷார்’ படுத்திக் கொண்டிருந்தான். ஊர்வலம் நகரத் தொடங்கியது. மீண்டும் கோஷங்கள் ‘கணீ’ரிட்டன.

“பொலிஸ் மிரட்டலுக்கு?”

“அடிபணிய மாட்டோம்!”

அவ்வளவு தான்! உடனே ஒரு பொலிஸ் காரன் குறுக்கே குதித்தோடி வந்து பலமாகக் கத்தினான்:

“அடேய், சத்தம் போடாதே. நிறுத்து!”

நாலைந்து பொலிஸ்காரர்கள் ‘பெற்றன்’ பொல்லு களைக் கைப் புடங்குகளில் மாட்டிக் கொண்டு திடீரென ஊர்வலத்துக்குள் பிரவேசிப்பதை பொன்ராசாகண்டு விட் டான். கண்டதே தாமதம் புலிபோல் பாய்ந்து தொழிலாளர்களையும் ஊடறுத்துக் கொண்டு முன்னேறினான். அதற்கிடையில் தொழிலாளர்களுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் வாக்கு வாதம் முற்றிவிட்டது.

கட்டுக்கடங்காமல் ஜனத்திரள் திமிறத் தொடங்கியது. பொன்ராசா அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோற்றுவிட்டன.

க்ஷணவேளைக்குள் வீதி யுத்தக்களமாக மாறிவிட்டது.

சிதறி ஓடிய நாலைந்து தொழிலாளர்களின் மண்டைகள் உடைந்து இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. பொலிஸ் ‘ஜீப்’புகளும்,மோட்டார் வாகனங்களும் வீதியடங்கஊறுமிக் கொண்டிருந்தன.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் எங்கிருந்தோ ஓடிவந்து பொன்ராசாவின் ‘சேட்’டைப் பிடித்து இழுத்து அவன் நெஞ்சிலே ஒரு குத்துவிட்டார்.

அதோடு ஊர்வலம் ரணகளமாகவே மாறிவிட்டது. இன்ஸ்பெக்டர் எங்கே என்றும் தெரியவில்லை.

தனது கண்ணுக்கு எதிரே நிகழ்ந்த அந்தக் கொடுமை; அவன் நெஞ்சிலே இன்ஸ்பெக்டர் ஓங்கிக் குத்திய அந்தக் குத்து…

அன்று இரவு அவர் பொலிஸ்நிலையத்திலிருந்து வெற்றிப்புன்னகையுடன் வீட்டுக்கு வந்து ‘யூனிபோர்ம்’ கழற்றிக் கொண்டிருக்கவே, ஜானகி அவர் பக்கத்தே நின்று, “ஏழை மக்களுக்காகப் போராடுகிறவர்கள் மீது பொலிஸ் இப்படியெல்லாம் அநாகரிகமாக அட்டூழியம் புரிவது, சகிக்கமுடியாத பெருங்கொடுமை” என்றாள்.

இன்ஸ்பெக்டர் கேலியாகச் சிரித்து விட்டு “அவர்கள் ஏழைகளுக்காகப் போராடுகிறவர்களல்ல; முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளர்களைத் ‘தூண்டி’ விட்டுக் கூத்துப் பார்க்கின்ற நாசகாரிகள்” என்றார்.

“அப்போ, நீங்கள் முதலாளிகளைக் காப்பாற்ற வெளிக்கிட்டிருக்கிற சேவகர்கள், அப்படித் தானே?”

“என்னது, உன் பேச்சிலே பொன்ராசனின் ‘வாடை’ அடிக்குதே?”

“இது வாடையல்ல; உண்மை! அவர்கள் நாசகாரர்களல்ல; நீதிக்காகப் போராடும் தொழிலாளிகளின் இரட்சகர்கள்.”

“அதனால்தான் அந்தப் ‘பொன்ராசா ரட்சகர்’ இன்று சிலுவை சுமந்து செப்பமாக வாங்கிக் கட்டினார்.”

இன்ஸ்பெக்டர் விட்ட ‘நக்கல்’ அவளுக்குப் பொறுக்க வில்லை. உடனே அதற்கு அவள் ‘கடுகடு’ப்பாகவே பதில் சொன்னாள்:

“ஆனால், அவன் கோழையல்ல: கொள்கைப் பிரகடனம் செய்து போராட்டத்தில் இறங்கிய சுத்தவீரன். நீங்கள் தான் பேடித்தனமாக மறைந்திருந்து ஓடிவந்து அவன் நெஞ்சிலே எதிர்பாராமல் குத்தினீர்கள். அதுதான் கோழைத்தனம்: அதுதான் பெரும் வெட்கக்கேடு”.

ஜானகியின் ‘திடீர்’த் தாக்குதலை இன்ஸ்பெக்டரால் சகிக்கமுடியவில்லை.

“ப்ளடி. றாஸ்கல், சட் அப்” என்று சீறிக் கொண்டு அவள் கன்னத்தில் ‘சள்’ளென்று ஓங்கி அறைந்தார்.

அவர் அடித்த அடியைவிட அவன் நெஞ்சிலே அவர் இடித்த அந்த இடிதான் அவள் நெஞ்சினை அப்பவும் தாக்கிக்கொண்டிருந்தது.

‘ஏழைத் தொழிலாளி-விவசாய மக்களுக்காகப் போராட்டம் நடத்திய இலட்சிய புருஷனை இந்த முரட்டுக் கரங்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகின்றன’ என்று நினைத்த போதே ஜானகியின் இதயம் வலுவாக வெதும்பியது. அந்தக்கொடுமையான நிகழ்ச்சிகள் இன்னும் அவள் கனவுகளில் கூடப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

அன்றும் ஒரு நாள் இப்படித் தான் பொன்ராசா நெஞ்சில் குண்டுபட்டதாகக் கனவு கண்டு துடித்து எழுந்திருந்தாள்.

‘அந்தக் கனவுகளைப் போலவே கடைசியில் எல்லாம் வந்து முடியுமோ?’

இப்பொழுது இப்படி நினைக்கவே, அவள் நாக்குத் தடம் புரண்டது; கண்கள் கலங்கின.

‘இந்தம்மா எங்க தோழர் பொன்ராசாவுங்க….’.

ஒரு தொழிலாளியான வெள்ளைச்சாமி யூகித்துச் சொன்ன அந்த வாக்கு அந்த வாக்கினில் தனக்குண்டான புனித ஒழுக்க நெறிகள் யாவும் அழிந்து போனது போல் ஜானகிக்குத் தோன்றின. இருந்தும் அவள் மனசில் அவை பற்றிய எந்தக் கிலேசங்களும் இப்போது இருக்கவில்லை.

“நாம சொன்னது அம்மாவுக்குப் புடிக்கல்லப்போல. அதான் கண் கலங்கிட்டா. தெரிஞ்சிக்காமச் சொல்லிப்புட்டேன்; மன்னிச்சிருங்கம்மா.”

வெள்ளைச்சாமி ஜானகியைப் பார்த்துத் தாழ்ந்த குரலில் இரங்கி வேண்டினான்.

“அதெல்லாம் இல்லை; அப்படிச் சொன்னாலும் நான் கவலை கொள்ளவும் மாட்டேன்” என்றாள் ஜானகி.

இந்த வார்த்தை ஜானகி வாயில் பீறிட்ட போது அதன் அர்த்த புஷ்டியைப்புரிந்து வியந்தவாறே, ஜானகியைப் பார்த்தார் விரிவுரையாளர்.

“ஜானகி, நீ இப்போ உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய். அது தான் உன் வார்த்தைகள் கூட உன்னை மீறி வருகின்றன” என்றார் விரிவுரையாளர்.

“என் வார்த்தைகள்-என் ஆசைகள் யாவும் என்னை மீறி வருவதற்குக் காரணமே நீங்கள் தான்!”

எடுத்த எடுப்பில் அவரையே நிதானமாகப் பார்த்துக் குற்றம் சுமத்தும் பாவனையில் கூறினாள் ஜானகி.

அசையாத நெஞ்சும், மன உறுதியும் கொண்ட விரிவுரையாளர் அவளின் புது வியாக்கியானத்தால் அடிபட்டு ஒருகணம் அசந்தே போய்விட்டார்.

சிங்கப்பூரில் உள்ள தங்கை மகனுக்கு ஜானகியை மணம் செய்து வைக்கத்திட்டமிட்டிருந்தார் பொன்னையர். பெற்ற தந்தையான பொன்னையரே அவள் பிரிவைத் தாங்க முன்வந்தார். ஆனால், தன் இலட்சிய மாணவி ஜானகியைப்  பிரிந்து இருக்க இந்த விரிவுரையாளரின் மனசு இடங்கொடுக்கவில்லை. ஆகவே, பொன்னையரை வசப்படுத்தி அந்தச் சம்பந்தத்தை நிறுத்தியதோடு இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் எடுத்த தாலியை ஜானகி கழுத்தில் மாட்ட வைத்தார் விரிவுரையாளர். யார் வகை சொல்வது?

‘கண்ணுக் கெட்டாத தூரமென்றாலும் சந்தோஷமாக வாழவிருந்த ஜானகி, என் கண் முன்னே சிறைப்படுத்தப் பட்டுத் தவிக்கிறாள். என் வினை இப்போது என்னையே அறுக்கிறது.’

மனசில் எழுந்த துயரத்தைக் காட்டிக்கொள்ளாமல், அவர் ஜானகியை நோக்கி, “ஜானகி, நீ இப்போ எதை விரும்புகிறாயோ அதை மனம் விட்டுச் சொல்லு. நான் உடனே செய்து வைப்பேன்” என்றார்.

“காயப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறவர்களை உடனே போய்ப் பார்க்க வேணும்.”

“பொய். இது மட்டும் உன் விருப்பமல்ல. முக்கியமான ஒன்றை மறைத்து விட்டாய். நீ எதை மறைத்தாயோ அதுதான் இந்த விருப்பத்தையும் தூண்டிவிட்டிருக்கிறது” என்றார் விரிவுரையாளர்.

தனது மனசிலுறைந்த பாரச்சுமைகளை அவர் தெரிந்து கொண்டார் என்பதை ஜானகி உணர்ந்த போதும், அவற்றைத் தனது வாயால் இறக்காமல் அவர் வாயாலேகேட்க விரும்பி மௌனமாக நின்று அவரை விழிகளால் இறாஞ்சினாள்.

“மறைக்காமல் சொல்லு: நீ பொன்ராசாவைப் பார்க்கத்தானே துடிக்கிறாய்?”

“ஆம்!”

ஒப்புதலாகத் தலையசைக்கின்ற சாடையில் அவள் முகத்தை ஏறெடுக்க அவள் நெஞ்சு துருத்திக் கண்கள் கலங்கிக் குமிழிட்டுக் கொண்டன.

“அடுத்து. பொன்ராசாவை விடுதலையாக்க வேண்டும்; அது தானே?”

“ஓம், கெதியாக!”

ஜானகி வாய் திறந்தே சொன்னாள்.

எதிரே நின்ற தொழிலாளர்கள் சமைந்து போய் நின்றார்கள்.

”இந்தம்மா ஊர்க்காற இஞ்சுப்பெற்றர் நம்ப தோழர் பொன்ராசாவைப் புடிச்சு அடைச்சிட்டாரு. இவங்க அவரெ வெளிய எடுக்கோணும்கிறா. ஆரோ சாமி சொனாப்பல இந்தம்மா ஒரு ‘புரட்சிப் பொண்’ணுதான்.”

இப்படித் தனக்குள் சொல்லிக்கொண்டே ஜானகியை வாஞ்சையோடு பார்த்தான் வெள்ளைச்சாமி.

ஏதோ அரவங் கேட்டது.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் அவசரமாகக் ‘கேற்’றைத் திறந்து பெரும் திடும் போடு உள்ளே விரைந்து கொண்டிருந்தார்.

அவர் கண்கள் முற்றத்தில் நின்ற ஜானகியையும் தொழிலாளர்களையும் ‘முறைத்துப்பார்த்தன.

ஜானகியின் நெஞ்சு வானம் இருண்டு இடியுண்டது போல் அதிருண்டது.

“ஏ, ஜானகி!”

அவளைத் தாண்டிப் போய் விருந்தையில் நின்று உரத்ததொனியில் சினப்போடு அழைத்தார் இன்ஸ்பெக்டர்.

ஜானகி அசையவில்லை. முற்றத்தில் நின்ற வாறே அவரை ஏறு கண் வைத்து ‘என்ன?’ என்று கேட்பது போல் நோக்கினாள்.

“இன்றைக்கே யாழ்ப்பாணம் போக வேண்டும். கெதியாக ஆயத்தப்படுத்து.”

அவர் வார்த்தையில் கண்டிப்பும், அதிகாரமும், வெறுப்பும் கலந்திருப்பதை அவள் கவனித்துக் கொண்டே மெதுவாக நகர்ந்தாள்.

சிவலிங்கம் ‘விறுக் கென்று உள்ளே சென்றர்.

அவள் கண்கள் தொழிலாளர்களை நோக்கின.

‘உங்களுக்கு மிகவும் நன்றி, மீண்டும் சந்திப்போம், போய் வாருங்கள்’ என்று கூறுவது போலிருந்தன அவள் கண்கள்.

– தொடரும்…

– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *