மண்ணில் தெரியுதொரு தோற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 4,364 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் – 3

ஜானகி உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். இன்று அவள் போக்கும் கோலமும் சிவலிங்கத்துக்குப் திராகவிருந்தன. அவளின் முகம் அதைத்து தேகம் இளைத்துப்போயிருந்ததை அவர் கவனித்துக்கொண்டார். பொலிஸ் நிலையத்தில் புலனாகாத வழக்குகளைத் துருவி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் சிவலிங்கம், தமது வீட்டுக்குள்ளே கிடக்கின்ற, புரியாத சிக்கலைச் சும்மாவிட்டு வைப்பாரா?

“என்ன சமாச்சாரம், முகம் ‘ஒரு மாதிரி’ இருக்கே?”

”ராத்திரி உடல் அசதி; நித்திைேரய வரவில்லை.”

“உண்மையாகவா.'” ஓ!

சிவலிங்கத்தின் மனசு ‘கிளுகிளு’த்தது.

திருமணம் புரிந்து இரண்டு வருஷங்கள். இத்தனை காலமாக ஒரு குழந்தைச் செல்வத்துக்காக அவர் தவிப்பது உண்மையில் ஜானகிக்கே தெரியாது.

‘இப்போ ‘ஏதாவது’ ஆகியிருக்கும். அதுதான் ஜானகிக்கு உடம்பில் சோர்வு தட்டுகிறது……’

கண்கள் வெறி துவள சுழற்றிப் பார்த்த அவர் ஜானகியின் கரத்தை அப்பிப் பிடித்து இன்பம் ததும்பச் சிரித்துக்கொண்டு கொஞ்சலாகக் கேட்டார்:

“ஏன், இந்தத் தடவை குளிக்கவில்லையா?”

ஜானகி நாணிக்கொண்டு பொய்ச் சினப்புடன் சரஸங் காட்டிச் சிரித்துவிட்டுச் சொன்னாள்:

“சாப்பிடுகிறபோதும் இந்தக் கதையா? அப்படி யல்லாம் ஒன்றுமில்லை.”

சாப்பாட்டு அறை ‘கலகல’த்துக்கொண்டே இருந்தது.

அதைக் கவனித்த பொன்னையர் புளகித்தவண்ணம் விறாந்தையில் கிடந்த சார்மனையில் உட்கார்ந்து புதினப் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்.

குழந்தைச் செல்வம் இல்லாத வீடு. புஷ்பங்களில்லாத வனாந்திரக் காடு’ என்ற அவரின் தவிப்பு ஒரு கவிதையாக எழுந்தது.

பென்சன் காலத்தின்போது பேரக் குழந்தைக்காகத் தாவிய அவா அவர் முகத்தில் புரைவிட்டது.

‘கொஞ்ச நேரத்துக்குமுன் வீடே நெருப்புப்பற்றி எரிவதுபோல் ரகளைப்பட்டுக்கொண்டிருந்தது. அவர் வந்ததும் அது அணைந்துபோய்விட்டதே! அவரிடம் ஏதோ மந்திரசக்தி இருக்கவேண்டும். அதிலே ஜானகி கட்டுண்டு விட்டாள்.’

பொன்னையர் இவ்வாறு தனக்குள் வியந்து மகிழ்ந்தார்.

ஜானகிக்கு ‘அப்படி ஒன்றுமில்லை’ என்றதும் சிவலிங்கத்தின் உற்சாகம் குன்றியது என்னவோ உண்மைதான். ஆயினும், அவர் சிரித்துக்கொண்டே மனைவியைப் பார்த்து “நீ எனக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்வாயென்று எதிர்பார்த்தேன். அது இன்னும் ஆகவில்லை.சரி. இப்பொழுது நானே உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்”என்றார்.

ஜானகி ஆவலுடன் முறுவலித்துக்கொண்டே கேட்டாள்:

“அப்படியா. என்னது?”

“முதலாளித்துவ ஆட்சியிலே பொலிஸார் ‘வெறும் அடிமைப் பொம்மைகள்’ என்று நாடு முழுக்க வேகமாகப் பிரசாரம் செய்துவரும் கோஷ்டியை உனக்குத் தெரி யுமா?”

முற்றும் உண்மை. பொலிஸார் சட்டத்துக்கு விஸ்வாசிகளல்ல; அடிமையானவர்கள். அவர்கள் சுதந்திர வீரர்களல்ல: கூலிப் பட்டாளங்கள்’ என்று கூற வாய் உன்னினாள் ஜானகி. ஆனால், அவரின் உற்சாகத்தைக் குழப்பாமல் விஷயத்தைப் பூராவும் தெரிந்துகொள்ள வென்று, ”நாள் முழுதும் வீட்டுக்குள் அடைந்துகிடக்கின்ற பெண் ஜென்மங்களுக்கு ஊர் விவகாரம் எப்படித் தெரியும்?” என்று ஒன்றும் தெரியாதவள் போல் நகைத்துக் கொண்டே கேட்டாள்.

ஜானகி கூற்றில் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவருக்கு அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் தரிசனத்திற்காகச் சென்ற ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற பிரிவுத் தமிழர் அங்கே தடுக்கப்பட்டார்கள். அதனால் யாழ்ப்பாணமே போர்க்களமாகிவிட்டது.

பொன்ராசா ஸ்தாபன ரீதியாகத் திரண்டு அவர்க ளுக்காகக் குரல் வைத்து, அவர்களின் உரிமைப் போராட்டத்தில் இறங்கித் தீவிரமாக இயங்கினான்.

அவனின் போராட்டத்துக்குச் ‘சாதிமான்கள்’ எனப் பட்ட யாழ்ப்பாணப் பொதுமக்கள் மத்தியிலிருந்தும் பேராதரவு கிடைத்தது. .

மலைநாடு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பகு களில் வாழும் சகல மக்களும் ஆதரவு கொடுத்தார்கள். முஸ்லிம்களும், கிறிஸ்தவர் களும், பௌத்தர்களும் கொடுத்த ஆதரவு பத்திரிகைச் செய்தியாகவும் பரவியது.

மேகம் பிளந்து பூலோகத்தில் இறங்கிய தூதர்களாக நின்ற சிலர் ‘தீண்டாமை’ என்னும் ‘புனித’ கைங்கரியத்தில் இறங்கித் தமக்கு மவுசு தேடிய விந்தைதான் பொன் ராசாவுக்குச் சிரிப்பாகவிருந்தது.

தேநீர்க் கடைப் பிரவேசம், கோயில் பிரவேசம் – இந்த உரிமைப் போராட்டங்களுக்கு நாள் குறித்தாயிற்று.

அதற்கான பொதுக்கூட்டம் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கவே, ‘திடீ’ரென்று பிரவேசித்த பொலிஸ் கோஷ்டி ஒன்று இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையில் வந்து கூட்டத்தை முற்றுகையிட்டது.

இந்தப் பொலிஸ் கோஷ்டி பாதுகாப்பளித்துக் கண்காணிக்க வரவில்லை; ‘அடக்குமுறை’க்காகக் கட்டவிழ்த்து விடப்பட்ட படை என்பதைப் பொன்ராசா தெரிந்து கொண்டான்.

அவன் தன் மேடைப் பேச்சில், “சமாதானத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில், மனிதாபிமானம் இன்றித் திமிர்கொண்டு மனிதர்களைக் கொடுமைப் படுத்துகின்றவர்கள் பாதுகாப்பாளர்களாகப் பொலிஸார் நடந்துகொள்வதைக் காண வேடிக்கையாக இருக்கிறது. இதுதான் சட்டமும் ஒழுங்குமென்றால், இந்தச் சட்டத்தையும் ஒழுங்கையும் தொழிலாள வர்க்கமும், அடக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட ஏழைப் பொதுமக்களும் நொறுக்கித் தவிடுபொடியாக்குவார்கள்…” என்று வீரா வேசமாகக் கர்ஜித்தான்.

அடுத்த கணமே இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சட்டத்தையும் ஒழுங்கையும் பொலிஸையும் ‘அவமதித்த’தற் காக, பொன்ராசனைக் கைதுசெய்ய அவன்மீது புலிபோல் பாய்ந்தார். எங்கிருந்தோ ‘தடா’ரென அவர் தலையில் கல் ஒன்று சுவீரமாக வந்து விழுந்தது.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் அந்தக் கல்வீச்சோடு தலை சுற்றி, அறிவு மயங்கி, கீழே விழுந்தார்.

விழுந்த இன்ஸ்பெக்டரை பொன்ராசா அலாக்காகத் தூக்கி வைத்துக்கொண்டே பலமாகக் கத்தினான்:

“தோழர்களே! நாங்கள் பலாத்கார வாதிகளல்ல: பலாத்காரம் பாவித்தால் மட்டுமே பலாத்காரர்களாக மாறுவோம். கைது செய்வது வெறும் மிரட்டல் இதனால் போராட்டத்தை அடக்கவும் முடியாது. இதற்கெல்லாம் அஞ்சவேண்டாம்.”

கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டது.

மயக்கம் தெளிந்த இன்ஸ்பெக்டர் உடனே பிரதியுப காரமாகப் பொன்ராசாவைக் கைதுசெய்தார்.

ஊருக்குத் தெரியாத இந்தச் செய்தி, சிவலிங்கம் வீட்டுக்குத் திரும்ப முன்னமே வீட்டில் அடைந்து கிடந்த ஜானகிக்கு எட்டிவிட்டது. அவருக்கு அதிர்ச்சி. அதை விட, ஜானகி அவர் மீது பெரிய குற்றமொன்றைச் சுமத்தினாள். அதுவே அவருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

“கொடுமைக்குள்ளானவர்களுக்காகப் போராடிய ஒரு வீரனை, வெறும் சட்டத்துணுக்கைக் கவசமாக்கிக் கொண்டு, அநியாயம் செய்வோர்க்குத் துணை நின்று பொலிஸ் கோழைத்தனமாக நடந்துவிட்டது”.

ஜானகி ஆவேசமாகத்தான் பேசினாள். அந்த வார்த்தைகள் அவர் நெஞ்சை மனசாரக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. தாக்கல் செய்த அந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல, அவளின் பேச்சு அவருக்கு எச் சரிக்கை செய்வதுபோல் தெரிந்தது. எனவே, அந்தக் கேஸை அவர் மெல்ல ‘அமத்தி விட்டார்.

‘போராட்ட வீரர்களைப் பெண்கள் வாழ்த்தும்போது தான் அவை வீறுகொள்கின்றன. பெண்கள் பங்குகொள் ளாத எந்த இயக்கமும் பூரணம் அடைவதில்லை. ஆதலால், இந்த உரிமைப் போராட்டத்தில் இளம் பெண் கள், தாய்மார்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்……

அந்தக் கூட்டத்தில் பொன்ராசா ஒரு கட்டத்தில் அறைகூவியது அவர் நினைவுக்கு வந்தது.

‘உண்மைதான். பெண்களில்லையேல் மனித விருத் தியோ, வாழ்க்கையோ சோபிப்பதில்லை’ என்று சொல்லிக் கொண்டார் சிவலிங்கம்.

‘ஒரு வருஷத்துக்கு முந்தி எப்பவோ நிகழ்ந்து முடிந்த சம்பவம் அது. ஆனால் இன்று நடந்திருப்பது ராஜ துரோகமல்லவா?’

மனசுள் புழுங்கிக்கொண்டே சிவலிங்கம் ஜானகியை அநாயாசமாகப் பார்த்தார். ஜானகி அப்பவும் தனக்கு எதுவுமே தெரியாதவள் போல் பேசாமலிருந்தாள்.

நிலமற்ற விவசாயிகள் பொதுமக்களைத் தவறான வழி யில் தூண்டி, ‘முடிக்குரிய’ நிலங்களில் அத்துமீறிக் குடியேற ஒரு பக்கத்தால் உசிப்பிவிட்டு, மறுபக்கத்தால் தீண் டாமைக்கு எதிரான போராட்டத்தில் தாழ்த்தப் பட்டவர்களை அணி சேர்த்து அரசாங்கத் திட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகளை மீறி பொன்ராசா நடத்தும் இயக்கங்களை ஆதியோடந்தமாக விஸ்தரித்துவிட்டு. ஜான கியைப் பெருமிதத்துடன் நோக்கினார்.

“ஆசாமியைக் கைது செய்து கூட்டுக்குள் போடத் தெண்டிக்கிறோம். எப்படியும் இரண்டு மூன்று தினங்களில் பிடித்துவிடலாம். அந்தப் பொறுப்பு என்னிடமே விடப்பட்டிருக்கிறது.’

அவர் அக்களிப்பில் விஷமச் சிரிப்பு மிளிர்வதை ஜானகி அவதானித்தாள். முகம் சுண்டியது. சுறுத்து வரும் முகபாவத்தைச் சிரமத்துடன் மறைக்க முயன்ற போது அவள் நெஞ்சில் அடங்காத பெருமூச்சு அம்மியது.

தனது மெளனமும், சேஞ்சலமும், தவிப்பும் சிவலிங் கத்துக்கு விபரீத சந்தேகத்தைத் தூண்டக்கூடும். என்று பதகளித்த ஜானகி மெதுவாக வாயசைத்தாள்:

“ஏழைகளுக்காகப் போராடுவதும், வழிகாட்டுவதும் தர்மமல்லவா?”

அவருக்குச் சிரிப்பு வந்தது: கூடவே சினப்பும் தட்டிற்று.

“ஏழைகளுக்காகப் போராடுவது தர்மமாகவிருக்க லாம். ஆனால், அது கையாலாகாத சோம்பேறிகளுக்கு ஒரு நாகரிகமாகிவிட்டது தெரியுமா?”

சிவலிங்கம் அழுத்தமாகச் சொல்லி ஏளனமாகச் சிரித்தார். அவளுக்குச் ‘சுருக்’ கென்று தைத்தது.

‘இந்தக் கையாலாகாத சோம்பேறிகளின் போராட்டத்தைக் கண்டுதான் சட்டக் கவசத்துக்குள்ளே ஒளிந்து காண்டு பொலிஸார் தொடை நடுங்கிச் சாகிறார்கள். இது தெரியுமா?’

இப்படிப் பதில் அளிக்க முனைந்த ஜானகி, இந்தப் பதிலே தன்னைக் காட்டிக்கொடுத்துவிடும்’ என்று கருதி, அதே கருத்தை, வேறு வார்த்தைகளில் ஊசி ஏற்றுவது போல் கூறினாள்:

“கையாலாகாத சோம்பேறிகளுக்காக பொலிஸ் இப் படியான கடும் நடவடிக்கைகளில் ஏன் இறங்கவேண்டும்! சும்மா விட்டுவிடலாமே?”

இந்தப் பதிலடியில் திணறி நிதானமிழந்த இன்ஸ்பெக்டர் சொற்பவேளை வாயடைத்தே கிடந்தார்.

‘பெண் ஒருவளுக்கு ஆண்பிள்ளை இளக்காரமாவதா? சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் பெண்கள் வெகு சாமர்த்தியசாலிகள்தாம். ‘

“நான் உனக்குச் சொல்லவந்தது அதுவல்ல.”

“அப்போ, என்ன?”

‘”அந்தப் பொறுப்பை நான் நிறைவேற்றினால் நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும். பிறகு உன் புருஷன் இந்த மாகாணத்துக்கே பெரிய அதிகாரி – பொலிஸ் சுப் ரிண்டன்ற்.”

சிவலிங்கத்தின் கண்கள் பிரகாசித்தன. இதயம் பூரிக்க ஜானகியை நுணாவிப்பார்த்துச் சிரித்தார். ஆனால், அவள் முகம் வாடித் தேம்பிக்கொண்டிருந்தது.

‘மரித்த பிணங்களை எதிர்பார்த்தே சவப்பெட்டிக் கடைக்காரனின் வாழ்க்கை கழிகின்றது.’

தன்னுள் யூகித்த வியாக்கியானத்தில் தானே ஆசு வாசமடைந்தாள் ஜானகி. அவள் முகத்தில் வெறுப் பின் சுவடு பதிந்தது.

ஒரு கணவரின் உயர்விலே மகிழாத மனைவியின் மன சைப் புரியக்கூட அவரின் அதிகார ஆனந்த வெறி தடுத்ததோ?

அவள், ‘எந்தப் பொறுப்பு’ என்று கூட அவரிடம் வினவவில்லை. ‘ பொன்ராசாவைக் கைது செய்து சிறைக் குள் தள்ளும் வெற்றி விழா’ என்று தானே அதற்குப்பதி னும் சொல்லிக்கொண்டாள். அப்போது அவள் நெஞ்சில் ஊற்றுக்கண்ணெடுத்த விரிவுரையாளரின் வாக்கியங்கள் அர்த்தமுள்ளதாகப் பட்டன.

‘சிறந்த சொத்தையேனும் தவறான வழிகளில் பெற ஒருவன் எத்தனிப்பா னாயின், அதைவிட வெட்கக்கேடா னது ஒன்றுமில்லை, இரந்து பெறுவது பிச்சைப் பண்டங் கள்: போராடிப் பெறுபவையே மதிப்பு வாய்ந்தவை.’

காத்திரமான-உண்மையான வாக்கியம்தான். அவள் நெஞ்சு விரிவுரையாளர் இராமசாமியை ஆரத்தழுவிக் குருதரிசனம் செய்தது. இதே கருத்தை பொன்ராசா எங்கோ பத்திரிகையிலும் எழுதியிருந்தான். அவளுக்கு வாசித்தது ஞாபகம்:

‘உரிமைகளைப் பறித்தவனிடம் இரந்து கேட்பது அடிமைத்தனம்; போராட்டத்தின் மூலம் பெற்றால்தான் அவை என்றும் ஆதர்ஸமாகத் திகழும்.’

‘ஜானகி, உனக்குச் சரியானது நீதியானது என்று உன் மனசு எதைச்சொல்லுகிறதோ அதற்காகப்போராடு. இல்லாவிடின் ஆத்தும சுத்தியிராது. எனவே, கலங்காதே – பயப்படாதே’.

பொன்ராசனே ஜானகிக்குக் கூறுவதுபோல் அவள் காதில் இப்படிக் ‘கிண்’ணரம் போட்டது.

மௌனமாக நின்ற ஜானகி தலையைக் கவிழ்த்துக் கொண்டு குசினிப் பக்கம் நகர்ந்தாள்.

பொன்னையர் சார்மனையில் இருந்து மகளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். அவள் கோலம் அவருக்குச் சஞ்சலத்தை மூட்டிற்று.

‘மீண்டும் ஏதோ புயல் அடித்திருக்கிறது. அதுதான் ஜானகி மூகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு போகிறாள்.’

அவர் மெல்ல எழுந்து குசினிக்குள் சென்று,

“பிள்ளை. என்ன நடந்தது?” என்று கேருந் தொனியில் கேட்டார்.

நெஞ்சு துருத்திப் பீறிய அழுகையை ஜானகி அடக்கித் திமிறிக்கொண்டே கதறினாள்:

“அப்பா, எனக்கேன் இந்த வெள்ளீடி விழுந்தது?”

உண்மையாக அவரின் நெஞ்சுப் பெட்டகம் இடியுண்டு கொலுக்கழன்றேவிட்டது. நடுங்கும் கரத்தால் புதல்வியின் முகத்தைத் தடவிக்கொண்டே நாக்குழறலானார்:

”ஜானகி, அழாதே! விபரத்தைக் கூறாமல் உனக்குள் மாய்ந்து உன்பாட்டில் அழுதால் நான் என்ன செய்வது?”

இருந்தாற்போல் வாசற்பக்கம் மணி அடித்து கேட்டது.

‘தந்தி!’

பொன்னையர் ‘குடு குடு’வென்று ஓடிப்போய் தந்தியை வாங்கிப் பார்த்தார்.

‘உன் கணவரோடு கண்டிக்கு நாளை புறப்பட்டு வரவும்.

திருமதி சரஸ்வதி சிவபாலன்தான் தந்தி கொடுத்திருக்கிறாள்- அவசரத் தந்தி.

சரஸ்வதி ஜானகியின் சர்வகலாசாலைத் தோழி, கண் டியில் குடும்பமாக இருக்கிறாள். விபரம் குறிக்காமல் திடீரென்று அவசரத் தந்தி கொடுத்திருக்கிறாளே!

‘அவளுக்கென்ன, மகராசி. நான்தான் பெரும் கருமக் காறி.’

அறைக்குள் சென்று சிவலிங்கத்திடம் தந்தியை நீட்டினாள் ஜானகி.

அவர் தந்தியைப் பார்த்துவிட்டு, சற்று யோசித்த பின் சிரிப்போடு. ஒரு பாணம் விட்டார்:

‘சரஸ்வதி விரிவுரையாளர் இராமசாமியின் மகள் மட்டுமல்ல, ஒரு பிரதம  எஞ்சினியரின் மனைவி. தெரிந்ததா?’

அவர் வார்த்தையை விட, அவர் நோக்கம் அவளுக்கு நன்றாகப் பளிச்சிட்டது.

”அவள் பிரதம எஞ்சினியர் சிவபாலனின் மனைவி என்பதாலல்ல, ஓர் இலட்சியவாதியான விரிவுரையாளரின் புத்திரி என்பதில்தான் அவளுக்கு மவுசு.’

ஜானகி அவருக்கு இப்படித்திருப்பிக்கூற நினைத்தாள். ஆனால், மனசு ஏவணில்லை. கண்டிக்குப் பயணம் வைக்க வேண்டுமே!

அதிக நாட்களுக்குப் பின் சரஸ்வதியைச் சந்திக்கப் போகின்ற குதூகலத்தில் ஜானகியின் இதயம் அப்போது நைந்துபோய்க் கிடந்தது.

அத்தியாயம் – 4

கொழும்புக்குச் செல்லும் ‘உத்தரதேவி’ அன்றும் வழக்கம் போஸ் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்பே கிளம்பியது. ஜன நெரிசலுக்கும் குறைவில்லை.

இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சிவலிங்கம்- ஜானகி தம்பதிகள் ஏறி ஒரு வாறு இடம் பிடித்துக் காண்டார்கள். புகையிரதம் இரைச்சலிட்டுக் கிளம்பியது.

ஜானகி யன்னலுக் கூடாக இயற்கைக் காட்சிகளை யும் அவற்றின் வளங்களையும் பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருந்தாள்.

மனிதர்களின் கரங்கள் தொட்டுக் கூடப் பார்க்காத எத்தனையோ ஏக்கர் கொண்ட தரிசு நிலங்கள் வாழ் விழந்த கைம் பெண்கள் போல் வரண்டுகிடந்தன. சில பகுதிகளில் தென்னந் தோப்புகளும், பனங்கூடல்களும், நெல்வயல்களும் நிரவலாகக் கிடந்தன. நெற்கதிர்கள் கொத்துக் கோர்வையாகச் சேர்ந்து காற்று வீச்சில் தலை சாய்ந்து கடலலைகள் விழுந்து மீள்வது போல் திகழும் பசுமைக் கோலங்கள் அவள் மனசில் ‘குளுகுளு’த்தன. அடர்ந்த சோலைத் தென்னம் வட்டுக்களில் குலைகளாகப் பெயர்ந்து தள்ளிக் கிடக்கின்ற குரும்பைகள், தேங்காய் கள், கன்னி கழியாத இளங் குமரிகளின் வகிடு பிரித்த நெஞ்சின் முனைப்பாடுகள் போல் அவள் மனக் கண்ணில் எழுந்தன. ‘ஈழத்து இளநீர்கள் யாழ்ப்பாணத்துப் பெண்கள் போல் ரம்மிய மானவை’ என்று அவன் சொன்னது உண்மையா?

கண் இமைக்காமல் ஜானகி தென்னந் தோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பொன்ராசா வேறு அர்த்தத்திலும் பத்திரிகையில் எழுதிய வாசகம் அவள் மனசில் ஊர்ந்தது.

‘மனிதர்களின் திறமைகள் எங்கே சுதந்திரமாகப் பிர யோகம் செய்யப்படுகின்றனவோ, அங்கேதான் அழகும், புத்துணர்வும், கலையும் முழுமையாகப் பிறக்கின்றன’

‘உண்மைதான். அவன் இந்தத் தத்துவ அறிவுகளை யல்லாம் எங்கே பயின்றான்? ஓ. அவன் விரிவுரையாளர் ராமசாமியின் பழைய மாணவனல்லவா? ஆனால். அவன் என்னைப் போல் பல்கலைக்கழகப் பட்டம் தானும் பெறவில்லையே?’

சுன்னாகத்திலே ஒரு சாதாரணக் கலவன் பாடசாலையிலே சரஸ்வதி, பொன்ராசாஇவர்களோடு தான் ஜானகி யும் கல்வி பயின்றாள். சரஸ்வதியும் ஜானகியும் பேராத னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலைப்பட்டதாரிகளாக வெளியேறிவிட்டார்கள். பொன்ராசாவுக்கு அந்தப் ‘பொசிப்பு’க் கிட்டவில்லை.

இரு தோழிகளுக்கும் பட்டங்கள் கிட்டியதுதான் மிச்சம். உத்தியோகம்தான் கிடைக்கவில்லை. ‘வேலையில்லாத் திண்டாட்டம்’ என்ற பூதத்தின் முன்னே பெண்களின் பட்டப் படிப்புகள் எம்மாத்திரம்? கொஞ்சமும் பலிதமாகவில்லை.

ஜானகி ஆசிரியத் தொழிலுக்கு மனுப்போட்டதை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் விரும்பவில்லை. ‘பெண்ணின் உழைப்பு ஆணுக்கு இழுக்கு’ என்பது அவர் அபிப்பிராயம். மனைவி வெளியில் தொழில் புரிவது இன்ஸ்பெக்டரின் அந்தஸ்துக்கும் பொல்லாப்பு என்ற அவர் எண்ணம் ஜானகியின் ஆவலுக்கு வேட்டுவைத்தது.

விரிவுரையாளர் இராமசாமியின் மகள் சரஸ்வதி பட்டதாரியாக இருந்தும், உத்தியோகம் பார்க்காமல் இருக்கும் போது சாதாரண ஓர் பெண்ணான தனக்குத் தொழில் இல்லாதது ஜானகிக்குப் பெரிதாகவும் படவில்லை.

‘பொன்ராசா வாழ்க்கையில் நொந்து இடிந்துபோனவன். சாதாரண தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து எவ்வளவோ துயரங்களுக்கு முகங் கொடுத்து முன்னுக்கு வந்தவன். அவன் மட்டும் அன்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ரகளை பண்ணாமலிருந்தால்…?

இன்று அவன் ஓர் வைத்திய கலாநிதியாக – கல்லூரி அதிபராக வந்திருப்பான். அடுத்த வகுப்பு மாணவர்களுக்காக நியாயம் கேட்டுப் போராடி. அவர்களை உயர்த்தி வைத்து விட்டு அவன் தன் வாழ்க்கையில் பெரும் மண்ணைவாரிக் கொட்டிய மனிதாபிமானி…’

இவ்விதம் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் ஜானகி. மாணவர்களின் கிளர்ச்சி பொன்ராசாவின் கல்விக்கு உலை வைத்துவிட்டது. அவன் வாழ்க்கையே கொந்தளிப்பாக மாறிவிட்டதை நினைத்த மாத்திரத்தில் அவள் மனம் உருகிப் பதகளித்தது.

‘விரிவுரையாளர் இராமசாமியின் மாணவனென அவன் கொண்டிருந்த பெருமிதத்துக்கு, இப்படி ஓர் அந்த கார வாழ்க்கையா அவனுக்கு அமைய வேண்டும்?’

அவள் முகம் ஒருகணம் சுண்டிற்று.

பசுமையான சோலைகளையும் பரவலாகச் செறிந்து கிடக்கின்ற காடு கரம்பு வயற்பரப்புக்களையும்  மனசூறிப் பார்த்தபோது, அவள் நினைவில் பேராதனைப் பூந்தோட்டத்திலே பொன்ராசனோடு இணைந்து சென்று பரிமாறிய வார்த்தைகள் ரம்மியமான அந்தக் காட்சிச் சித்திரங்களே கட்டுமீறித்திரை நீக்கம் புரிந்தன.

பூந்தோட்டத்துக்குள் நுழையும் போது ஜானகி நெஞ்சு பூரிக்கச் சிரித்துக் கொண்டே கேட்டாள்:

யாழ்ப்பாணத்தின் வரண்ட பிரதேசத்தைவிட்டு இந்தப் பேராதனைப் பூந்தோட்டத்துக்கு அருகிலேயே ஓர் இல்லம் அமைத்துக் குடித்தனம் வைத்துக் கொண்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் தெரியுமா?”

“இதிலே அப்படி விந்தையாக என்ன ரம்மியம் இருக்கிறது? தாய் நோஞ்சல் என்றாலும் பிள்ளைக்கு அவள் தெய்வம். பிறந்த நாடும் அப்படித்தான். அவனவனுக்கு அது அது தாய்”

“நீங்கள் தத்துவம் பேசுகிறீர்கள். கலையையும், இலக் கியத்தையும், அழகையும் மணிக்கணக்காகப் பேசும் களுக்கு அவற்றை ரசிக்கமட்டும் தெரியவில்லையே?”

ஜானகி கிண்டல் பண்ணினாள். அவன் சிரித்தான்.

“கலை இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு. மனிதர் உழைப்பும் அவர்கள் சிருஷ்டிகளுமே அழகும் லாவண் யமும் கொண்டு கலை இலக்கியமாகின்றன. அந்தக் கலை இலக்கியங்கள் பொழுது போக்குச் சாதனங்களல்ல; அவை வாழ்க்கைக்கான செழுமைத் தோற்றங்கள். இவற்றின் செழுமைக்குக் காரணம் என்ன தெரியுமா?”

ஜானகி பதில் பேசாமல் ஏதோ விந்தையிலாழ்ந்து முகம் நையச் சிரித்துக் கொண்டு பதிலளித்தாள்:

“நல்ல பசளையும், வற்றாத நீரூற்றும்”

“இது விஞ்ஞானப் பாடத்தைப் புத்தகத்தில் படித்து மனனம் பண்ணியவர்களின் கூற்று. உண்மையில் இவற்றிற்கெல்லாம் மனிதனின் கரங்களும் இந்த மண்ணும் தான் காரணம். இந்தத் தோற்றங்கள் யாவும் மண்ணி லிருந்தும், மண்ணில் உழைக்கும் மனிதர்களிடமுமிருந்து தான் கிளம்புகின்றன”

“மனிதர்களால் மட்டும் முடியுமா? பசளையும் நீரூற் அம் வேண்டாமா?”

“அவற்றையும் மனிதன் தான் செப்பனிட்டுப் பூமிக்கு மனித குலத்துக்கு அளித்தான்”

இதன்பின் ஜானகி பதிலளிக்கத் தயங்கினாள்.

“ஜானகி, இந்த நந்தவனம், அழகும் ரம்மியமுமாக விருக்கலாம். இவற்றைச் சில மனிதர் ரசித்தும் கொள்ள லாம்.ஆனால்,இந்த அழகைச்சிருஷ்டித்த ‘பிரம்மா’க்களை நேரிற் கண்டால் எந்த ரசிகசிகாமணிகளும் பிடுங்கிச் சாவார்கள்”

“ஏன்?”

“‘அந்தப் பிரமாக்கள் தான் இந்த மலையகத்திலே குடியுரிமையிழந்து, வாக்குரிமையற்று. நிலப்பரப்பின்றி ஓட்டை ஓடிசல் குடிசைகளில்-லயங்களில் அடைபட்டு அன்றாடம் செத்து மூச்சுத்திணறி ‘நித்திய நரசும்’ என்ற குழியில் சீவித்துக் கொண்டிருப்பவர்கள்’

உணர்ச்சி, ஆவேசம், கோபம்- அவன் முகத்தில் கொப்பளித்துத் தெறித்தன.

“யார் அவர்கள்?”

ஒரு குழந்தைபோல் ஜானகி ஆவலோடு கேட்டாள்.

“தொழிலாளர்கள்; பாட்டாளிகள்; தமிழர்கள்”

பொன்ராசாவின் கண்கள் சோகத்தில் ஆழ்ந்து போயி ருப்பதை அவள் கவனித்தாள் ‘நித்திய நரகப்’ படுகுழி யில் ஆக்கினைப்படும் அந்த மனிதர்களை – தமிழர்களை அவள் இதுவரை கண்டதேயில்லை. எனவே, ஆவல் ததும்ப – பரிதாபத்தோடு மீண்டும் கேட்டாள்:

“அவர்களை நான் கட்டாயம் கட்டாயம் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்களை எங்கே சந்திக்கலாம்?”

“மாடமாளிகை கோட்டை கோபுரங்கள் புடை சூழ்ந்த-ஸ்ரீராஜவிக்கிரம சிங்கனாம் தமிழன் அரசோச்சிய இந்தக் கண்டிமா நகரத்திலே”

இலங்கையின் இதயமாம் கண்டி மா நகரத்தில் தமிழன் ஆட்சி புரிந்த வரலாறு அவளுக்குத் தெரியும். தமிழன் ஆட்சி புரிந்த கண்டியில் தமிழர்களே நரகக்குழியில் – லயங்களில் வாழ்கிறார்களென்றால்…?

அவளுக்கு இந்தச் செய்தி ஆகவும் வியப்பாகத் தெரிந்தது.

‘பெரும் தோப்புகள், உயர்ந்த மலைச்சாரல்கள். நெடிய மாடிகள், திறந்த வீதிகள், அகன்ற வாவிகள். மாடிவீடுகள் – இவ்வாறெல்லாம் செறிந்துள்ள இந்தக் கண்டி மா நகரத்திலே, அவன் சொல்லும் கோலத்தில் மனிதர்கள் இருப்பார்களா?”

நூதன வியாக்கியானம். சந்தேகம் எழுந்து அவள் மனசைக் குடைந்தது. அது அவள் முகத்தில் பாவியதை அவன் கவனித்தான்.

“நாங்களும் அவர்களும் இருவேறு உலகில் வாழ்கின் றோம். நீர் வாழ்ந்த உலகத்திலே இந்த ஜீவன்களைக் கண்டிருக்கமாட்டீர். அதுதான் உமது முகம் வியப்பில் ஆழ்ந்து போய்க் கிடக்கிறது. உண்மையில் நீர் அந்த உலகத்தைப் பார்க்க விரும்புகிறீரா?’

“ஓம், கட்டாயம் பார்க்க வேண்டும்” என்றாள் ஜானகி.

தெற்கே பூந்தோட்டத்தின் ஊஞ்சற்பாலம் நெருங்கி விட்டது. கதை வேகத்தில்-ஊஞ்சற்பாலம் அண்மியதே தெரியவில்லை.

தொங்கு பாலத்தின் கீழே மாவலிகங்கை சலசல’த்து ஓடிக் கொண்டிருந்த பாங்கை அவள் ஒரு கணம் பாலத்தில் தரித்து நின்றே பார்த்தாள்.

இளைஞர்கள். கன்னிகள், கமராக் கலைஞர்கள், ‘யூனி வர்சிட்டி’ மாணவர்கள், காதல் கொதிச்சிட்டுகள், இலக் கியச் சுவைஞர்கள், அரசியல் சாணக்கியர், ‘மினிஸ்கேட்’ ரகங்கள்- இப்படிப் பல ரக ஜீவாத்து மாக்களைக்
‘குஷி’ யிலாழ்த்தும் அந்த ஊஞ்சற்பாலத்துக்குள்ள விசேஷ மவுசு என்னவெனில், இருவர் ஜோடிகட்டிக் கூட்டுச் சேர்ந்து செல்வதற்கென்றே ஒடுக்கமாக அது செப்பனி டப்பட்டிருப்பது தான்.

கம்பிகளால் கேடயமாக்கப்பட்ட அந்தத் தொங்கு பாலத்தில் இளங்கா தல் நோயாளர் போட்டி போட்டுக் கொண்டு திமிறித் திணறுவதை அவன் பலதடவை வேடிக்கை பார்த்திருக்கிறான்.

கூத்துக்குள்ளே கோமாளியாக வெளியூர் உள்ளூர் ‘ஹிப்பி’ஸ்டுகளும் ஜோடி போட்டுக் கொண்டு அந்த ஊஞ் ற் பாலத்திலே கெந்தி ‘அன்ன நடை’ பயில்கின்ற கோலம் அவளுக்குச் சிரிப்பை மூட்டிற்று. ஜானகியும் சுய நினை விழந்து சிரித்தேவிட்டாள். இந்தக் கேளிக்கைகள் பொன் ராசன் மனசிலும் கிளுகிளு ‘ப்பை மூட்டின. அவன் ஜானகியின் முகத்தை உணர்ச்சி தேங்க ஏறெடுத்துப் பார்த்தான்.

அப்போது அவளின் முகம் சிலிர்த்து, பூப்போல் விரிந்தது. தேன் வழிந்தமாதிரி வாய்ச் சொண்டுகள் பள பளத்தன. உடம்பில் நுளுந்திய உணர்ச்சிப் பீறல் அவள் நெஞ்சினில் புரைந்து அவள் கண்களிலே காந்தியது.

பொன்ராசா அவள் கரத்தைச் ‘சடா’ரென்று பற்றிக் கொண்டான்.

அவள் எங்கோ ஓர் உலகத்தில் சஞ்சரித்துவிட்டு வந்த வளைப்போல் ஆசுவாசப்பட்டுக்கொண்டே கேட்டாள்.

“நாங்களும் இந்த ஊஞ்சற்பாலத்தைக் கடந்து போய் வருவோமா”

”அப்படியா? சரி, வா போவோம்”

அவன் அவள் கரத்தைப் பிடித்து வருடினான்.

அவள் அந்தப் பிடியில் துவண்டுபோய் தன் நிலை இழந்து உடம்பின் கொது கொதுப்பில் மூழ்கிவிட்டாள்.

அவள் அதரங்கள் தேன் தோய்த் தெடுத்த பழங்கள்போல் ஊனித்து மின்னின.

பாலத்தைக் கடந்ததே அவளுக்குத் தெரியவில்லை. அவன் கரங்களில் தாவிக் கொண்டே ஜானகி அவனைப் பரீட்சித்தாள்:

“இப்பொழுது யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்?”

காதல் ஜோடிகளாகவல்ல: ‘புது மணத் தம்பதிகள்’ என்று”

‘புதுமணத் தம்பதிகள்’

இது வாக்கல்ல; கற்கண்டு. அது அவள் நெஞ்சுக்குள்- வாயினுள் தேனாக வூறிற்று.

“சும்மா போங்கோ”

என்ன சரஸம்; எத்தகைய சல்லாபம். செல்லமாகக் கடிந்து கொண்டே அவள் அவனை விழுங்கிப்பார்த்தாள்.

அவன் வாயில் வந்ததைச் சொல்லாமல் அந்த மாவ லிக் கங்கைக் கரையைச் சுட்டிக் காண்பித்தான்.

அங்கே ஆணும் பெண்ணுமாக இரண்டு யானைகள் ஜோடி பிணைத்துக்கரையில் விழுந்து படுத்துக் கொண்டு, தும்பிக்கைகளால் உள்ளிழுத்த தண்ணீரை ஒன்றுக்கு மேல் ஒன்றாக வீர்யமாகப் பாய்ச்சி விளையாடிய வண்ண மிருந்தன.

பொல்லாத கழிகடை யானைகள்: சரியான வம்புப் பிறவிகள்.

அவள் தேகம் நாணத்தால் கூனிக் குன்றியது.

அவன் அவளை மேவிப் பார்க்க, அவளும் அவனை மருவிப் பார்த்தாள்.

***

“குருணாகலை ஸ்ரேஷன் வந்து விட்டது”

குரல் கேட்ட ஜானகி துயிலெழுந்தவள் போல் திகைத்துக் கொண்டு கண்களைச் சுழற்றினாள்.

அவளைத் தட்டி எழுப்பிய சிவலிங்கம் இறங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.

ஜானகி பரபரப்போடு யன்னலூடாக எட்டிப்பார்த்தாள்.

குருணாகலை ஸ்ரேஷன் வந்தேவிட்டது.

‘ஆ. இந்த உத்தரதேவியும் ஊஞ்சற்பாலமாக இருந்து விடக் கூடாதா?’

– தொடரும்…

– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *