மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 9,469 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16. சிவகாமி, கொஞ்சம் சிரி!

சிவகாமியின் வீடு, முத்தழகின் வீட்டிற்கு அடுத்த வீடு. சிவகாமி, முத்தழகின் அத்தை மகள். அதாவது, முத்தழகின் அப்பா தில்லைநாயகத்தின் தங்கை மகள். இவளை முத்தழகின் அண்ணன் அரசுவுக்கு மணம் செய்துவிடவேண்டும் என்று முயற்சி நடந்துகொண்டு இருந்தபோதுதான் அரசு இறந்து விட்ட செய்தி வந்தது. திருமணப் பேச்சு நின்றது. இப்போது சிவகாமியை முத்தழகுக்கு மணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற பேச்சு கிளம்பியது.

சிவகாமியின் அப்பா, தனது அறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து, ஏதோ ஒரு பத்திரிகையை படித்துக்கொண்டு இருந்தார்.

கீழே, அவர் அருகில் தரையில் உட்கார்ந்து, பருப்பில் இருக்கும் கல்லைப் பொறுக்கிக்கொண்டே, “என் அண்ணன் உடம்பு சௌகரியம் இல்லாமல் இருக்கிறாரே, எத்தனை தடவை போய்ப் பார்த்தீர்கள்?” என்று கேட்டாள் சிவகாமியின் அம்மா.

“மூன்று தடவை போய்ப் பார்த்தேனே, போதாதா?” என்று திருப்பிக் கேட்டார் அப்பா.

“அடுத்த வீட்டில்தான் இருக்கிறார் என் அண்ணன். இருக்கிறார் என் அண்ணன். ‘மூன்று தடவை பார்த்தேன்’ என்று பெரிதாகச் சொல்லுகிறீர்களே?”

“பின்பு எத்தனை தடவை பார்க்க வேண்டுமாம்?”

“அரசு நம் பெண்ணை வேண்டாமென்று சொல்லிவிட்டான் என்று உங்களுக்கு அவர் மேல் கோபம்! அதற்கு என் அண்ணா என்ன செய்வார்? ஆனால், அவன் நம் பெண்ணை வேண்டாமென்று சொன்னதும் நல்லதாகத்தான் போயிற்று. சிவகாமியை அவனுக்குச் செய்திருந்தால் தாலியை இழந்து தவித்திருப்பாள்.”

“சரி, அதைப் பற்றிப் பேசி என்ன பயன்? இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய் நீ?”

“சின்னவன் முத்தழகுக்கு நம் பெண்ணை செய்வது பற்றி என் அண்ணனிடம் உடனே போய்ப் பேசுங்கள். இந்தத் தையிலாவது அவள் கல்யாணத்தை முடித்து விடுவோம்!”

“மூத்தவனை இழந்து கவலையுடன் ரத்தக் கொதிப்பால் படுக்கையில் இருக்கிறார் உன் அண்ணா. இந்த நிலைமையில் அவரிடம் போய்க் கல்யாணப் பேச்சை எப்படி எடுப்பது?”

“நிலைமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் கல்யாணம் நடந்தாற்போலத்தான். உங்களுக்குச் சொன்னால் தெரியமாட்டேன் என்கிறதே! என் அண்ணா உடம்பு சௌகரியமில்லாமல் இருக்கும்போதே இந்தக் கல்யாணம் நடந்தால் தான் நடந்தது. அவருக்குப் பிறகு அந்தக் குடும்பத்தில் சம்பந்தம் செய்வது என்பது சாத்தியமே இல்லை. தெரிகிறதா?”

“உன் அண்ணன் நீண்ட நாளைக்கு இருக்கட்டும். நீ நினைப்பது மாதிரி சீக்கிரத்தில் அவர் போய்விடுவார் என்றும், அவர் போவதற்குள் உன் மகளை அவர் மகனுக்குக் கெட்டிக்காரத்தனமாகக் கல்யாணம் செய்துவிடுகிறாய் என்றும் வைத்துக் கொள்வோம். கல்யாணம் முடிந்ததும் உன் அண்ணன் போய்விட்டால், அதன் பிறகு சிவகாமியின் மாமியார், சிவகாமியைக் கொடுமைப்படுத்த மாட்டாளா? நான் சொல்வதைக் கேள். இருப்பது ஒரே பெண். ஆகையால், உன் மூளையையெல்லாம் இதில் செலவழிக்காமல், சிவகாமிக்கு யாரைப் பிடிக்கிறதோ அவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடு! வீணாக அவள் வாழ்க்கையைக் கெடுக்காதே!” என்றார் அப்பா.

“முத்தழகு இருக்கும்போது வேறு மாப்பிள்ளையைப் பற்றி நினைக்க எனக்கு மனசே இல்லை. எப்படியாவது முயற்சி செய்து, சிவகாமியை முத்தழகுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோம்!” என்றாள் அம்மா. இதைச் சொல்லும்போது அவள் குரல் தழுதழுத்தது.

அம்மாவின் குரல் தழுதழுத்ததைக் கண்ட அப்பா, “சரி, என்னாலான எல்லா முயற்சிகளையும் நான் செய்கிறேன். உன்னாலான முயற்சிகளை நீ செய்!” என்று சொல்லிவிட்டு எழுந்தார். அப்போது சிவகாமி உள்ளே வந்து, “அப்பா, தங்கதுரை ஒரு படம் எடுக்கப்போகிறார்! அதில் நான்தான் கதாநாயகி” என்றாள்.

“கதாநாயகிக்கு அப்பா, அம்மா வேண்டாமா? எங்களையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லு!” என்று கோபத்துடன் சொல்லிக்கொண்டே துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டார் அப்பா.

“அப்பா, நிஜமாகச் சொல்லுங்கள். நீங்களும் அம்மாவும் நடிப்பதென்றால் நான் ஏற்பாடு செய்கிறேன். தங்கதுரை நான் சொல்வதை மறுக்க மாட்டார்!” என்றாள் சிவகாமி.

“எப்படி மறுப்பான்? பணமெல்லாம் சேர்ந்த பிறகுதான் நீ சொல்வதை அவன் மறுப்பான். அதுவரைக்கும் மறுக்க மாட்டான்!” என்றார் அப்பா.

சிவகாமி, “ஆமாம் அப்பா, நீங்கள் சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. நான் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் 50,000 ரூபாய் அவருக்குக் கொடுக்க வேண்டுமாம்!”

“சரிதான்! நீ கதாநாயகியாக நடிப்பதற்கு 50,000 ரூபாய், உன் அம்மா, அம்மாவாக நடிப்பதற்கு 10,000 ரூபாய், நான் அப்பாவாக நடிப்பதற்கு 10,000 ரூபாய்… மொத்தம் 70,000 ரூபாய்! உன் அம்மாதான் லட்சக்கணக்கில் பெட்டகத்தில் வைத்திருக்கிறாளே, வாங்கிக்கொண்டு போ!” என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினார் சிவகாமியின் அப்பா.

“என்னம்மா, நான் சினிமாவில் நடிக்க அப்பா பணம் தரமாட்டாரா?”

“நீ என்னடி இன்னும் குழந்தை மாதிரி… நடிப்பதற்கு எல்லாரும் பணம் வாங்குவார்கள்; நீ என்னடாவென்றால் பணம் கொடுக்கிறேன் என்கிறாய்!” “புதிதாக முதலில் ஒருத்தியை நடிக்க வைப்பதற்கு எல்லாரும் யோசிப்பார்களம்மா! உனக்கு மார்க்கெட்டே தெரியவில்லை. முதலில் பணத்தைக் கொடுத்து ஒரு படத்தில் நடித்து, அது வெற்றி பெற்றுவிட்டால், அப்புறம் நான் கேட்கிற பணத்தைப் படாதிபதிகள் தருவார்கள். அப்புறம் நான் பெரிய ஸ்டார் ஆகிவிடுவேன் அம்மா!””

“நீ நடிகையாவதை அப்பா விரும்பவில்லை சிவகாமி!”

“இந்த வீட்டில் அப்பா விருப்பப்படிதானா எல்லாம் நடக்கிறது? நீ என்ன நினைக்கிறாயோ அதுதானே இந்த வீட்டில் நடக்கிறது?” என்று சொல்லிக் கொண்டே, தன் முகத்தை அம்மாவின் தோளில் வைத்துக் கொண்டாள் சிவகாமி. “வீட்டிற்குள் நாம் விரும்புகிறபடி எது வேண்டுமானாலும் செய்யலாம் சிவகாமி. ஆனால் வெளி விவகாரத்தில் உன் அப்பா வின் விருப்பம் இல்லாமல் எதையும் நாம் செய்யக் கூடாது!” என்றாள் அம்மா. தொடர்ந்து, “நீ சினிமாவில் சேருவதை உன் அப்பா விரும்பாததற்குக் காரணம் என்ன தெரியுமா?” “சொல்லுங்கள் அம்மா.”

“நீ நாகரிகம் என்ற கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாய். அதனால்தான் உன் அப்பாவிடம் இது பற்றிப் பேச நானும் யோசிக்கிறேன்!” என்றாள் அம்மா.

“அம்மா?” என்று சொல்லிக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, சன்னலுக்கு அருகில் வந்து நின்றாள் சிவகாமி.

இதைக் கண்ட அம்மாவின் கண்களும் கலங்கின. அவளும் எழுந்து சிவகாமிக்கு அருகில் வந்து நின்றாள்.

“என்ன சிவகாமி, சொல்லு?” என்றாள்.

வெளியே தெருவையே பார்த்துக்கொண்டிருந்த சிவகாமி திரும்பினாள். அவள் விழிகளில் நீர் நிறைந்திருந்தது.

“அம்மா, என் உள்ளம் வேறு! என் உடை வேறு! என் நாகரிக உடையைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். என் நல்ல மனதை எவருமே பார்த்ததில்லை! பெரிய அத்தான் அரசுவுக்கு என்னைக் கல்யாணம் செய்வதென்று எல்லோரும் முடிவு செய்தீர்கள். அதுவரை நான் நாகரிகத்தைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. குடும்பத்தின் குல விளக்கு போல் இருந்தேன். அப்போது அநாகரிகப் பழக்க வழக்கங்கள் என்னிடம் ஏதாவது இருந்தனவா அம்மா? அரசு அத்தான் என்னை விரும்பவில்லை. ஏன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தார் என்பது இப்போது கூட எனக்குத் தெரியாது. அரசு அத்தானைக் கணவன் என்று நினைத்துக் கும்பிட்டுப் பழகினேன். என்னை அவர் விரும்பவில்லை என்றதும் அவரோடு பழகுவதைக் குறைத்துக் கொண்டு, சின்ன அத்தான் முத்தழகுடன் பழகத் தொடங்கினேன்.

அவரும் என்னைக் கண்ட போதெல்லாம் கேலி செய்தாரே தவிர, என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அப்புறம் இந்த உலகத்திலே எனக்கு என்னம்மா இருக்கிறது? இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தேன். எனக்கு அழகு இல்லாததும், நாகரிகம் இல்லாததும்தான் என் தோல்விக்குக் காரணம் என்பது தெரிந்தது. அன்றிலிருந்து ஒரு நவநாகரிக மங்கையாகிவிட்டேன். என் அத்தான்கள் என்னைக் கைவிட்டுவிட்டார்கள் என்றதும், அணிலாக இருந்த நான் ஆளைக் கொட்டும் தேளாகிவிட்டேன்!” என்று சொல்லி, அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள் சிவகாமி.

இந்த மாதிரி மகள் சிவகாமி பேசியதுமில்லை; அழுததும் இல்லை. அம்மா இந்த மாதிரி துக்கம்கொண்டதும் இல்லை.

தாய், தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, தன் தோளில் புதைத்திருந்த மகளின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களையும் துடைத்துவிட்டு, “சிவகாமி, இன்னும் எதுவும் கெட்டுப் போகவில்லையம்மா! முத்தழகுக்கு உன்னை எப்படியும் முடித்து வைத்துவிடுகிறேன்!” என்றாள்.

“இல்லையம்மா! அது சாத்தியமே இல்லை. பெரியவராவது என்னோடு பல தடவை பிரியமாகப் பேசியிருக்கிறார். சின்னவர் என்னோடு ஒரு தடவைகூடப் பிரியமாகப் பேசியதில்லை அம்மா!” என்றாள் சிவகாமி.

சிறிது இடைவெளிக்குப் பிறகு “இருந்தாலும் சிவகாமி, நீ தங்க துரையோடு பழகுவது எனக்கும் அப்பாவுக்கும் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை!” என்றாள் அம்மா.

சிவகாமி, சன்னல் வழியாக வெளியே பச்சை மரங்களைப் பார்த்துக்கொண்டே, “அம்மா! ஏதோ என் மனதில் படுகிறது. உன்னிடம் சொல்லலாமோ என்னவோ?” என்றாள்.

“சும்மா சொல்லம்மா! அம்மாவிடம் சொல்லக்கூடாதது கூட மகளுக்கு உண்டா என்ன?”

“அம்மா, பெரிய அத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றே என் மனம் சொல்கிறது அம்மா!”

“சிவகாமி, உனக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்று கடுமையான குரலில் கேட்டாள் அம்மா.

“இல்லையம்மா! நான் சுய நினைவோடுதான் இருக்கிறேன். என் மனம் சொல்வதை உன்னிடம் சொல்கிறேன், அவ்வளவுதான்!” என்றாள் சிவகாமி.

தொடர்ந்து, “அம்மா, பெரிய அத்தான் உயிரோடு திரும்பி வருவார் என்று என் மனம் அடிக்கடி சொல்வதால், நான் தங்கதுரையுடன் ஜாக்கிரதையாகவே பழகி வருகிறேனம்மா!” என்றாள்.

“சிவகாமி, தங்கதுரையோடு நீ ஜாக்கிரதையாகப் பழகுவது பற்றி எனக்கு மகிழ்ச்சி! இருந்தாலும், அவனோடு பழகுவதையே நீ அடியோடு விட்டுவிட்டால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்” என்றாள் அம்மா.

“இல்லையம்மா! திடீரென்று எவரையும் என்னால் கல்யாணம் செய்துகொள்ள முடியாது!”

“இதற்கு என்ன அர்த்தம் சிவகாமி?”

“அர்த்தமா?” என்று கேட்டுக் கொண்டே திரும்பினாள் சிவகாமி. அப்போது அவள் கையிலிருந்த புத்தகத்துக்குள்ளிருந்து ஒரு புகைப்படம் விழுந்தது. அது அரசுவினுடையது! பெரிய அத்தான் அரசுவினுடையது!

அம்மா அந்தப் புகைப்படத்தைக் குனிந்து எடுத்துச் சிவகாமியிடம் கொடுத்துக்கொண்டே, “உன் போக்கு எனக்குப் பிடிபடவில்லை சிவகாமி! கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது!” என்றாள்.

“அம்மா, நானாக எதுவும் செய்யவில்லை. பெரிய அத்தானுக்குதான் என்னை முதலில் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னீர்கள். உடனே அவர் என் மனத்தில் வந்தார். இன்றும்கூட அவர் என் மனத்தில் இருக்கிறார். இந்தப் புத்தகம் அவருடையதுதான்!

அவர்தான் இதைப் படிக்கச் சொல்லி என்னிடம் தந்தார். அப்போது அவர் அறையில் இருந்த புகைப்படத்தை எடுத்து இந்தப் புத்தகத்தில் வைத்தேன். அந்தப் புகைப்படம்தானம்மா இது!” என்றாள் சிவகாமி.

இதைக் கேட்டதும், என்ன செய்வதென்றே அம்மாவுக்குப் புரியவில்லை. கொஞ்சம் துணிந்து, “சிவகாமி, ஒருவேளை சின்ன அத்தானுக்கும் உனக்கும் திருமணம் நடக்காவிட்டால், கண்டிப்பாக உனக்கும் தங்கதுரைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன். சிவகாமி, கொஞ்சம் சிரி!” என்றாள்.

சிவகாமி சிரித்தாள்.

“இருந்தாலும் சிவகாமி, தங்கதுரையோடு பழகும்போது கொஞ்சம் பாதுகாப்புடன் பழகிக் கொண்டிரம்மா!”

“ஆகட்டும் அம்மா” என்றாள் சிவகாமி. “அதிருக்கட்டும் அம்மா, பணம் கேட்டேனே படத்திற்கு..?” என்றாள்.

“பெருந்தொகை! இது பெரிய விஷயம் சிவகாமி!” என்றாள் அம்மா.

“அம்மா, பெரிய அத்தான் இறந்து, சின்ன அத்தானும் கை விட்டுக் கலங்கி நிற்கிற நான், நடிகையாகாவிட்டால், நான் வாழவே முடியாதம்மா!”

“என்னவோ அம்மா, எல்லாம் எனக்குப் பயத்தைத் தருகின்றன! என்னால் முடிந்தமட்டும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போனாள் அம்மா.

அம்மா போனதும் தங்கதுரை வந்தான்!

“வாருங்கள் தங்கதுரை, வந்து நேரம் ஆயிற்றா?” என்று கேட்டாள் சிவகாமி.

“இல்லை சிவகாமி, இப்போதுதான் வந்தேன்!”

“அப்பா வெளியே இருப்பாரே?” என்று கேட்டாள் சிவகாமி.

“ஆமாம். உட்கார்ந்திருக்கிறார். என்னைப் பார்த்தார். ஏதும் சொல்லவில்லை. நான்பாட்டுக்கு வந்துவிட்டேன்!” என்றான் தங்கதுரை. “அது சரி சிவகாமி, படம் எடுப்பதற்கு 50,000 ரூபாய் கேட்டேனே, அப்பாவிடம் சொன்னாயா?”

“சொன்னேன். அப்பாவுக்குச் சினிமாவில் அக்கறை இல்லை!”

“அப்பா வேண்டாமென்றால் அப்புறம் நீ எப்படி ஸ்டார் ஆவது?”

“அம்மாவிடம் சொன்னேன். அப்பாவிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள்.”

“சிவகாமி…!”

“என்ன தங்கதுரை?”

“நீ ஸ்டார் ஆக முடியாது!”

இதற்கு சிவகாமி மறுமொழி ஏதும் சொல்லவில்லை.

தங்கதுரை எழுந்து நின்று, “என்ன சிவகாமி, நீ ஸ்டார் ஆக முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன், பேசாமல் இருக்கிறாயே?” என்றான்.

“முன்பு எனக்கு ஸ்டார் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது தங்கதுரை! ஆனால், அம்மாவிடம் பேசிய பிறகு, எனக்கு அந்த ஆசை குறைந்துவிட்டது!” என்றாள் சிவகாமி.

“அப்படியா?” என்று கரங்களைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான் தங்கதுரை. சற்று நேரம் கழித்து, “அப்புறம் உன் முடிவு?” என்று கேட்டான்.

“கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் ஒரு முடிவுக்கு வர! நடிகையாவது என்று தீர்மானித்துவிட்டால், எப்படியும் 50,000 ரூபாயை உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.”

“அதுவும் சரிதான்!?” என்று சொல்லிவிட்டு, “சிவகாமி, உன் கையிலிருப்பது என்ன புத்தகம்? கொடு, நான் பார்க்கிறேன்” என்றான் தங்கதுரை. “மன்னிக்கவேண்டும் தங்கதுரை!” என்று சொல்லியபடியே சட்டென்று அறையை விட்டு வெளியே போய்விட்டாள் சிவகாமி.

தங்கதுரை அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

17. அறைக் கதவு திறந்து கிடந்தது!

சமையலறையில் பணிப்பெண் பாவையோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மணிமொழி, இருட்டிவிட்டதால் தன் அறைக்கு வந்தாள். நேற்றிரவு மாடியில் முத்தழகைத் தனியாகக் கண்டு பேசிய பிறகு அவளுக்கு அமைதியே இல்லை! அந்த மாடி இரவுச் சந்திப்புக்குப் பிறகு முத்தழகை முடிந்தவரை பார்க்காமல் இருக்க முயன்றாள் மணிமொழி.

மணிமொழி கதவைச் சாத்தித் தாழிட்டுக்கொண்டு, கட்டிலுக்கு அடியில் இருந்த அந்தப் பெட்டியை எடுத்துத் திறந்தாள். இறந்துபோன அந்த மணிமொழியின் பெட்டியை மணிமொழி திறப்பது இது இரண்டாவது தடவை. ஊரிலிருந்து வந்ததும் இளங்கோ பால் பருகும்போது, பாலைச் சட்டையில் கொட்டிக் கொண்டுவிட்டான் என்று மாமியார், குழந்தையை மணிமொழியிடம் கொடுத்துச் சட்டையை மாற்றச் சொன்னாள். மணிமொழி குழந்தைக்குச் சட்டை எடுப்பதற்காகப் பெட்டியைத் திறந்தாள். மேலாகக் கண்ணாடி போட்ட புகைப்படம் ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் மணிமொழியின் ரத்தம் உறைந்தது. சுதாரித்துக்கொண்ட மணிமொழி, சட்டையை எடுத்துக் கொண்டு பெட்டியை அப்படியே மூடிவிட்டாள்.

அதுதான் மணிமொழி, முதல் தடவையாக இளங்கோவின் தாய் மணிமொழியின் பெட்டியைத் திறந்தபோது நடந்தது. மாமியார் குழந்தைக்கு நிறையச் சட்டைகளும் மற்றவைகளும் தைத்து, குழந்தைக்கு வேண்டிய பொருட்களையும் நிறைய வாங்கி விட்டதால், பெட்டியைத் திறக்க வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது!

அதற்குப் பிறகு, பல நாட்கள் கழித்து இப்போதுதான் இரண்டாவது தடவையாக அந்தப் பெட்டியைத் திறக்கிறாள் மணிமொழி. மேலாக அந்தப் புகைப் படம் இருந்தது. முத்தழகின் அண்ணன் அரசுவும், அவன் மனைவி மணிமொழியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் அது.

புகைப்படத்திலிருந்த அரசுவின் உருவத்தை நன்றாகக் கவனித்துப் பார்த்தாள் மணிமொழி. முதல் தடவை இந்தப் பெட்டியைத் திறந்தபோது, இந்தப் புகைப்படத்திலிருக்கும் அரசுவை இப்படி உற்றுப் பார்க்க நேரம் இல்லாதவளாக இருந்தாள் மணிமொழி.

இளையவரைப் போல் இவர் அப்படி ஒன்றும் அழகாய் இல்லை. இவரைவிட இளையவர் கொள்ளை அழகு! தம்பியானாலும், இவரைவிட உயரமாக இருப்பார் போலிருக்கிறதே! இவருக்குக் கொஞ்சம் நீள முகம், இளையவருக்குப் பூரண நிலவு மாதிரி வட்டமுகமாயிற்றே! கண்கள்..? இவர் கண்களில் ஒளி இல்லை. இளையவர் கண்கள் கவர்ந்திழுக்கும் கண்கள்! முடி கூட இளையவரின் முடிதான் கவர்ச்சியான முடி என்று எண்ணியது மணிமொழியில் மனம்!

அப்போது – அறைக் கதவை எவரோ படபடவென்று தட்டினார்கள்.

உடனே மணிமொழி அந்தப் புகைப்படத்தைக் கட்டிலில் கிடந்த தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டு, பெட்டியை மூடிப் பூட்டிவிட்டு வந்து கதவைத் திறந்தாள். எதிரே பாவை!

“அக்கா, எல்லாரும் சாப்பிட்டு விட்டார்கள், நீங்கள் மட்டும்தான் பாக்கி! வாருங்கள் சாப்பிட” என்றாள் பாவை.

“இளையவர் சாப்பிட்டு விட்டாரா பாவை?”

“சாப்பிட்டுவிட்டார்.”

“எங்கே அவர்?”

“வெளியே, பத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார் அக்கா!”

இதைக் கேட்டதும் மணிமொழிக்கு உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்தியதைப் போலிருந்தது.

மணிமொழி, மறதி மிகுந்தவளே! உன் காதலன் முத்தழகு துன்பம் கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டதுமே கதவைக் கூடச் சாத்தாமல் போய் விட்டாயே! என்ன நடக்கப் போகிறது தெரியுமா? உனக்கு அம்மா இல்லை. இளங்கோவுக்கு நீ அம்மா இல்லை. என்ன வாழ்வடி உன் வாழ்வு!

மணிமொழியும் பாவையும் சமையலறைக்கு வந்தார்கள். மணிமொழி சாப்பிட உட்கார்ந்தாள். பாவை பரிமாறினாள்.

தலையைக் குனிந்து மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிமொழியிடம், “இளங்கோ எங்கே அக்கா? அந்தச் சுட்டிப் பயலை நான் இன்று முழுவதும் பார்க்கவே இல்லை!” என்றாள் பாவை.

மணிமொழி குனிந்த தலையை நிமிராமலே, “மாலை வரை இளங்கோவை நான்தான் வைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அத்தை வந்து அவனை வாங்கிக் கொண்டு போனார்கள். அவன் தான் யாரிடம் வேண்டுமானாலும் இருப்பானே!” என்றாள்.

கொஞ்ச நேரத்தில் மணிமொழி சாப்பிட்டுவிட்டு எழுந்தாள். கையைக் கழுவிவிட்டுத் தன் அறைக்கு வந்ததும்தான் அவளுக்குத் தெரிந்தது, அறைக் கதவைத் திறந்தே போட்டு விட்டுப் போயிருப்பது.

அறைக்குள் நுழைந்ததும், கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு, தலையணைக்கடியில் தான் வைத்துவிட்டுப் போன அந்தப் வைத்துவிட்டுப் போன அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கிழிப் பதற்காகத் தலையணையை தலையணையை எடுத்தாள். அந்தப் படத்தைக் காணோம்!

அறைக்கதவு திறந்து கிடந்ததால் எவரோ வந்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது மணிமொழிக்குத் திண்ணமாகத் தெரிந்துவிட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒரு முடிவுடன் எழுந்தாள்.

நேராகச் சமையலறைக்கு வந்து பாவையிடம், “பாவை, இளையவர் பால் சாப்பிட்டு விட்டாரா?” என்று கேட்டாள்.

“இன்னும் இல்லை அக்கா” என்றாள் பாவை.

“என்னிடம் கொடு, நான் கொண்டு போய்க் கொடுக்கிறேன்” என்று பாலை வாங்கிக்கொண்டு பத்தியில் இருளில் உலவிக் கொண்டிருந்த முத்தழகிடம் வந்தாள் மணிமொழி.

அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த முத்தழகு, மீண்டும் மௌனமாக உலவத் தொடங்கினான். பின்பு, “நீங்கள் ஏன் அண்ணி பாலை எடுத்து வந்தீர்கள்?” என்று கேட்டான்.

“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்!”

“என்னிடம் பேச என்ன அண்ணி இருக்கிறது?”

“நீங்கள் நேற்றிரவு முழுவதும் கண் விழித்திருக்கிறீர்கள்!”

“ஆமாம் அண்ணி. நேற்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை!”
“காரணம்?”

“என் மனத்தில் அமைதி இல்லை அண்ணி.”

“உங்களுக்கு மன அமைதி இல்லாமல் போனதற்கு நான் தான் காரணமா?”

“ஆமாம் அண்ணி, நீங்கள் தான் காரணம்!” என்றான் முத்தழகு.

இதைக் கேட்டதும் மணி மொழியின் கையிலிருந்த பால் குவளை கீழே விழுந்தது.

“என்ன அங்கே..?” என்று கேட்டுக் கொண்டே, கையில் குழந்தையுடன் அடுத்த அறையில் இருந்த அம்மா வெளியே வந்தாள். அதற்குள் மணிமொழி அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டாள்.

முத்தழகு தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அம்மா, இருட்டில் எங்கே வருகிறீர்கள்? அறையிலேயே இருங்கள். நான் இங்கு உலவிக் கொண்டிருந்தேன். இருட்டில் தண்ணீர் இருந்த குவளையைத் தெரியாமல் தட்டிவிட்டேன். அவ்வளவுதான். நீங்கள் போய்ப் படுங்கள்” என்றான்.

“ஆகட்டுமடா, நீயும் போய்ப் படுத்துக்கொள். கண் விழித்தால் உடம்புக்கு ஆகாது” என்று சொல்லிக் கொண்டே, குழந்தையுடன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள் அம்மா.

முத்தழகு இருட்டில் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

18. அப்படியா சொல்கிறாய்?

மறுநாள் காலை.

மணிமொழி குளித்துவிட்டு வரும்போது, கூடத்தில் தங்கதுரையும் முத்தழகும் பேசிக்கொண்டிருந்தார்கள். மணிமொழி ஈரப் புடவையுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

“முத்தழகு, உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்” என்றான் தங்கதுரை.

“இது தனியான இடம்தானே, பேசு!” என்றான் முத்தழகு.

“உன் அண்ணி வருவார்களே!” என்றான் தங்கதுரை.

“வந்தால் என்ன, அவர்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நீ சொல்லு வந்த விஷயத்தை” என்றான் முத்தழகு.

“முத்தழகு, நான் சிவகாமியைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.”

“செய்துகொள்ள வேண்டியது தானே!”

“உனக்கு இதில் ஆட்சேபனை ஏதாவது..?”

“எதுவும் இல்லை!”

“அப்படியானால், எங்கள் திருமணத்திற்கு உடனே நீ ஏற்பாடு செய்ய வேண்டும்!”

“ஏன், உங்கள் திருமணத்திற்குத் தடை ஏதாவது இருக்கிறதா?”

“தடை என்று ஏதும் இல்லை. ஆனால்…”

“ஆனால் என்ன?”

“சிவகாமியை வேறு யாருக்காவது பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது.”

“சரி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும், சொல்லு?”

“உடனே சிவகாமியின் அப்பா அம்மாவைப் பார்த்துப் பேசிக் கல்யாணத் தேதியை நிச்சயம் செய்ய வேண்டும்!”

“அதற்கு முன் சிவகாமியின் கருத்தை தெரிந்துகொண்டு, அதற்கு மேல் ஆக வேண்டியவற்றைக் கவனிக்கிறேன்.”

“அப்படியா சொல்கிறாய்?”

“ஆமாம் தங்கதுரை! அந்த வீட்டில் அத்தனையும் அம்மா அதிகாரம்தான். ஆகையால், அத்தையைச் சரி செய்ய வேண்டுமென்றால், முதலில் சிவகாமியைச் சரி செய்யவேண்டும்.”

“சரி, அப்படியே செய்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் தங்கதுரை.

அப்போது மணிமொழி வெள்ளைச் சேலை, வெள்ளைச் சோளியில் ஒரு வெள்ளைத் தாமரை மலர்ந்து நடந்து செல்வது போல் தலையைக் குனிந்தபடி நடந்து சென்றாள்.

– தொடரும்…

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *