மகாலட்சுமி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 9,649
ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல்.
பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம். ஜானகி நல்லாருக்கா நீ உடனே புறப்பட்டு வந்துரு.
அப்பாவாகி விட்டேன். கடவுளே நன்றி. பத்து மாத புதிர் அவிழ்ந்து கிடைத்த விடை. ஒரு புதிய உயிரின் வரவு உறுதி செய்யப்பட்ட வினாடியிலிருந்து எத்தனை எதிர்பார்ப்புகள், கவலைகள், அச்சங்கள்.
நரம்பும் சதையுமாக என்னை உருக்கி அவளுக்குள் வார்க்கப்பட்ட எங்கள் மகள். உடலும் மனதும் மிதப்பது போல உணர்ந்த போதுநான் சற்றும் எதிர்பாராமல் மனதின் அடியாழத்திலிருந்து ஒரு எண்ணம் சரசரவென மேலேறி வந்து படடெடுத்து சீறியது.
பையனாக பிறந்திருக்கக் கூடாதா, சட்டென உதறியும் சிலந்தி வலை போல விலக்க விலக்க மேலும் அடர்ந்து படர்ந்தது.
பையனென்ன பொண்ணென்ன எல்லாம் ஒண்ணுதானே.
அதெப்படி பொண்ண வளர்த்து ஆளாக்கி நல்லவன் கையில புடிச்சு கொடுக்கறவரை நிம்மதி ஏது?
அடுத்தது பையனாயிருக்லாமே.
அதுவும் பொண்ணாயிட்டா?
குரல்கள் உள்ளே ஒலிக்க ஒலிக்க மனம் பிளவுபட ஆரம்பித்தது.
அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டு ட்ரெயினில் அமர்ந்திருந்த என் முகத்தில் எவ்வளவு முயன்றும் ஏமாற்றத்தின் சாயல் படிவதை தவிர்க்க முடியவில்லை.
இதெல்லாம் பிரமையாக இருந்து அம்மா போனில் சிங்கக்குட்டி பிறந்திருக்கான்டா என்று சொன்னால் என்று ஒரு பைத்தியக்கார எண்ணம் தோன்றி மறைந்தது.
வணக்கம் சார் என்றப அருகில் அமர்ந்தவரின் முகம் பரிச்சயமாயிருந்தது. அவரும் வழக்கமாக இதே ட்ரெயினில் வருபவர்தான்.புன்னகைப்பதோடு சரி.இதுவரை பேசிக் கொண்டதில்லை.
வணக்கம் என்றேன்.
எடுத்துக்கங்க என்று நீட்டிய பிளாஸ்டிக் பெட்டியில் சுலபத்தில் வீசியெறிய மனம் வராத வண்ணத்தாள்களில் பொதியப்பட்டிருந்த சாக்லேட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு என்ன விசேஷம் சார்? என்றேன்.
ப்ரமோஷன் கிடைச்சிருக்கு.
வாழ்த்துகள் என்ன ப்ரமோஷன்?
அப்பாங்கற புரமோஷன். எங்க வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்கா சார். எனக்கு பொண்ணு பொறந்திருக்கா.
பனிரெண்டு வருஷம்.பார்க்காத வைத்தியமில்ல. போகாத கோவில் இல்ல.ஒவ்வொரு மாசமும் ஒரு மாச நம்பிக்கைய சிதைச்சிட்டு விடியற அந்த நாள்ல கதறி அழுகறவள,உள்ளுக்குள் அழுதுகிட்டே சமாதானப்படுத்தியிருக்கேன். சரி, இந்த ஜன்மத்தில நமக்கு ப்ராப்தம் இல்லேன்ணு மனச தேத்திகிட்டு வாழ்ந்திட்டிருந்தோம். தாகத்தில உயிர் பிரியற இந்த கடைசி நிமிசத்தில உதடுகள நனைக்கிற அமுதம் மாதிரி வந்திருக்கா சார்.
இமையோரங்கள் மின்ன பரவசமாய் பேசிக் கொண்டிருந்தார்.
ஹாஸ்பிட்டல்ல ரெண்டு நாள் வலியே வரல.ரொம்ப நாள் கழிச்சு உண்டாயிருக்கறதால அநேகமா சிசேரியன்தான் பண்ண வேண்டியிருக்கும்ன சொன்னதால அதுக்கும் தயாராத்தான் இருந்தோம்.திடீர்னு வலி வந்திருச்சு.பக்கத்துல யாரும் இல்ல.என் விரல்கள நொறுக்கின அவளோட விரல்கள் வழியே அவளுக்குள்ள திவிரமா இறங்கிக்கிட்டிருந்த வலியை என்னால உணர முடிஞ்சுது.இதுததான் ஆரம்ப வலியாம்.கடவுளே அப்படின்னா உச்ச வலி எப்படியிருக்கும்.அப்படியே நடுங்கிப் போய்ட்டேன் என்னை வெளியில போகச் சொல்லிட்டாங்க.
ஒரு உலுக்கலுடன் வண்டி நகர ஆரம்பித்தது.
பெண்களை வெறும் உடம்பா நினைச்சுகிட்டிருந்த என்னை அந்த நிமிஷங்கள் புரட்டிப் போட்டிருச்சு சார்.குழந்தை பிறக்கறதுல ஆணுக்கு எள்முனையளவும் வேதனையில்ல.ஆனா பெண்ணுக்கு?கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா அவர் கண்டிப்பா ஆணாத்தான் இருக்கணும்.இல்லேன்னா இவ்வளவு ஓரவஞ்சன பண்ணியிருப்பாரா.மனதி இனத்தோட சங்கிலியின் நுட்பமான கண்ணிகள் அறுந்து போகாம காப்பாத்தறதுல பெண்ணோட பங்கு எவ்வளவு பெரியது.வலி தாங்கி பிள்ளை பெறமுடியாதுன்ணு பெண்கள் சொல்லிட்டா மனித இனத்தோட கதி என்ன ஆகும்?
சற்று நேரம் வண்டியின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பேரிரைச்சலோடு எதிர்திசையில் ஒரு வண்டி கடந்து போனது.
உணர்ச்சிவசத்தில் பேச்சற்று அமர்ந்திருந்தவரிடம் சாக்லேட்டைத் திருப்பிக் கொடுத்தேன்.
புருவம் உயர்த்தி பார்த்தவரிடம் பெருமிதமாய்ச் சொன்னேன்.
எங்க வீட்டுக்கும் இன்னைக்கு மகாலட்சுமி வந்திருக்கா.