மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 15,029
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள்.
யார் அந்த உத்தம தாய்மார்கள்?
ராமாயணத்தில் லக்ஷ்மணனின் தாயான சுமித்திரை.
பாகவதத்தில் துருவனின் தாய் சுநீதி.
மார்கண்டேய புராணத்தில் வரும் இளவரசி மதாலசா.
இந்த மூன்று தாய்மார்களும் உலக வழக்கப்படி சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் இப்படியும் செய்வார்களா என்று தோன்றும். ஆனால் தன் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த பதவியான வைகுந்தப் பதவியை பெற்று தருவதில் மிக மும்முரமாக இருந்த தாய்மார்கள் இவர்கள்.
ராமரும், சீதையும் மர உரி தரிக்கும் முன்பாகவே மரவுரியுடன் தயார் நிலையில் நின்றான் லக்ஷ்மணன். ராமர் வியந்து போய் அவனை தன்னுடம் வரவேண்டாம் என்று பலவாறு எடுத்துக் கூறி தடுத்துப் பார்த்தார். லக்ஷ்மணன் கேட்கவில்லை. கடைசி ஆயுதமாக ராமர் லக்ஷ்மணனை, “போய் உன் தாயிடம் சொல்லிவிட்டு வா” என்றார்.
லக்ஷ்மணனும் சென்றான். சுமித்திரை கேட்டாள், ” ஏன் என்னிடம் விடை கொடுக்கும் படி கேட்டுக் கொண்டு காலம் தாழ்த்துகிறாய்? ஸ்ரீ ராமரையும், சீதையையும் , ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் மஹா லக்ஷ்மியையும் சேவிப்பது போல் இடை விடாது சேவிப்பாயாக. உன் பணிவிடையில் இருக்கும் போது அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், உன் முகத்தைக் கூட என்னிடம் காட்டதே” என்று கூறிய வீரத்தாய் சுமித்திரை. லக்ஷ்மணனை தன் மகனாகவே நினைக்காமல், ஸ்ரீ ராமனின் சேவகனாகவே பார்த்தாள் அத்தாய்.
துருவனுக்குக் கிடைத்த ஈஸ்வர தரிசனத்திற்கு காரண குரு அவனுடைய சிறிய தாயான சுருசி. காரிய குரு நாரதர். தன் சிறிய தாயாரால் அவமதிக்கப் பட்டு அழுதுகொண்டு வந்த மகனிடம், வைராக்யத்தை எடுத்துக் கூறிய மகா சாத்வீ சுநீதி.
“உன் தந்தையின் மடியில் அமர்வதற்காகவா ஒருவர் அழுவார்கள்? இதை விட வேறு உயர்ந்த பதவி உனக்காக காத்திருக்கிறது. தாமரை பதங்களை உடைய ஸ்ரீமன் நாராயணனின் மடியில் போய் அமர். உன் தாத்தா சுவயம்புவ மனு ஈஸ்வரனை காண்பதற்காக அழுதார். அவரிடம் சிருஷ்டி செய்ய பூலோகத்திற்கு செல் என்று சொன்ன போது இறைவனை விட்டு பிரிய மனமின்றி அழுதார். பின் மஹா விஷ்ணு ஆதி வராஹ் மூர்த்தியாக அவதரித்து பூமியை மீட்டு தந்து சிரிஷ்டியை தொடரச் சொன்னார். உன்னிடைய கொள்ளுத்தாத்தா பிரம்மா ஸ்ரீமன் நாராயணனை தரிசிப்பதற்காக பல்லாண்டுகள் தவம் செய்தார். அழுது துடித்தார். அப்படி இருக்க நீ கேவலம் ஒரு மனிதருக்காக அழுவதாவது? யார் மேலும் மன வருத்தம் கொள்ளாதே. எல்லாம் ப்ராரப்தப் படிதான் நடக்கும். நீ உடனே சென்று பகவானை வேண்டி தவம் செய்,” என்று கூறி தன் அறியாச் சிறுவனை ஐந்து வயது மகனை தவத்திற்கு அனுப்பிய மிக உத்தம தாய் சுநீதி.
ஒரு அபலை, கணவனால் அவமதிக்கப் பட்ட பெண் சுநீதி கூறும் வார்த்தைகளை கேட்டீர்களா? “உன் சிற்றன்னை சொல்வது உண்மை தான். அவளிடம் கோபம் கொள்ளாதே. ஸ்ரீமன் நாராயணின் தாமரை பாதங்களை போய் சரணடை என்று அவள் கூறியவை சத்தியமான வார்த்தைகள். யார் மேலும் வருத்தமோ, பொறாமையோ, வெறுப்போ கொள்ளாதே” என்று கூறி இறைவனை வேண்டி தவம் செய்யச் செல்லும் தன் அறியாச் சிறுவனின் மனத்தை பக்குவ படுத்தி அனுப்புகிறாள்.
மதாலசாவின் தந்தை அரசனாக இருந்த ஒரு பிரமஞானி. அவர்கள் வீட்டிற்கு பல மகான்கள், ஞானிகள் வருகை புரிவர். அவர்களின் உரையாடலை எல்லாம் கேட்டு கேட்டு வளர்ந்தவள் மதாலசா. அவளும் ஒரு பிரம்மஞானி ஆனாள். தன்னை மணம் புரிய வந்த அரசன் ரிதத்வஜனிடம் ஒரு நிபந்தனை விதித்தாள். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளை தன் விருப்பப்படி தான் வளர்ப்பேன் என்று. அவனும் ஒப்புக் கொண்டான்.
முதல் மகன் பிறந்ததும் அரசன் அவனுக்கு விக்ராந்தா என்று பெயரிட்டான். அதை கேட்டு மதாலசா சிரித்தாள்.
இரண்டாம் மகனுக்கு அரசன் சுபாஹு என்று பெயரிட்டான். அப்போதும் மதாலசா சிரித்தாள்.
மூன்றாம் மகனுக்கு அரசன் சத்ரு மர்தன் என்று பெயரிட்டான். இம்முறையும் மதாலசா சிரித்தாள்.
அரசனிடம் போட்ட நிபந்தனை படி மதாலசா தன் குழந்தைகளை தன் விருப்பப் படி ஞான மார்கத்தில் வளர்த்தாள். தொட்டிலில் இட்டு தாலாட்டும் காலம் முதலே அவர்களுக்கு ஞான போதனை ஆரம்பித்து விட்டது.
மதாலசா பாடிய தாலாட்டு இது தான்:
கிம் நாம ரோதசி சிஷோ?
நச தேஸி காமஹா
கிம் நாம ரோதசி சிஷோ?
நச தேஸி லோபஹா
கிம் நாம ரோதசி சிஷோ?
நச தேஸி மோஹஹா
ஞானம்ருதம் சமரசம் ககனோ தமோசி
சுத்தோசி புத்தோசி நிரஞ்சனோசி
பிரபஞ்ச மாயா பரிவர் ஜிதோசி.
“குழந்தாய்! ஏன் அழுகிறாய்? நீ ஆத்மன். உனக்கு ஆசைகள் கிடையாது. ஆசை இருந்தால் தானே துக்கம் வரும்? உனக்கு தான் ஆசையோ காமமோ கிடையாதே. ஏன் அழுகிறாய்? அழாதே!
உனக்கு பேராசையும் கிடையாது. ஏனென்றால் நீ ஆத்மன். ஆத்மாவுக்கு ஆசையோ பேராசையோ மோகமோ இல்லை. அதனால் உனக்கு ஏமாற்றமே கிடையாது. அதனால் அழாதே!
ஆத்மா ஞானம் அடைந்த ஞானிகள் அழுவதில்லை. மகிழ்ச்சியோ, துக்கமோ, கஷ்டமோ ஆத்மாவுக்கு கிடையாது. நீ ஆத்மா. நீ ஒரு சுத்த ஆத்மா. புனிதமான ஆத்மா. அப்பழுக்கற்றவன். இந்த பிரபஞ்சம் ஒரு மாயை என்று உணர்ந்தவன். அதனால் அழாதே!”
என்ற ஞான போதனையை இரவும் பகலும் குழந்தை பிராயத்தில் இருந்தே ஊட்டி ஊட்டி வளர்த்தாள் மதால்சா.
முதல் மூன்று குழந்தைகளும் தாய்ப் பாலோடும் தாலாட்டோடும் தாய் புகட்டிய ஞான போதனையால் இந்த பிரபஞ்சம் ஒரு மாயை என்று உணர்ந்து நாட்டையும் சுகத்தையும் துறந்து தாயின் ஆசியோடு காட்டுக்கு சென்றனர் தவம் செய்ய.
தற்போது நான்காவதாக ஒரு மகன் பிறந்தான். அப்போது அரசன் கூறினான், ” மதாலசா! முதல் மூன்று குழந்தைகளுக்கும் நான் பெயர் வைத்த போது நீ நகைத்தாய். இப்போது நீ பெயர் வை”.
மதாலசா அக்குழந்தைக்கு அலர்க்கா என்று பெயர் வைத்தாள். அதை கேட்டு அரசன் வெகுண்டான். அலர்க்கா என்றால் பைத்தியம் பிடித்த நாய் என்று பொருள். பொருத்தமற்ற பெயர் என்று குறை பட்டான்.
மதாலசா கேட்டாள், ” நீங்கள் வைத்த பெயர்கள் மட்டும் பொருத்தமானவையா? முதல் மகனுக்கு விக்ராந்தா என்று பெயர் வைத்தீர்கள். விக்ராந்தா என்றால் அங்கும் இங்கும் அலைபவன் என்று பொருள். ஆத்மா வருவதும் இல்லை போவதும் இல்லை. இப்பெயர் சுத்த சச்சிதானந்தமான அச்சிசுவுக்கு எப்படி பொருந்தும்?
இரண்டாம் பிள்ளைக்கு சுபாஹு என்று பெயரிட்டீர். சுபாஹு என்றால் விசாலமான வலுவான புஜங்களை உடையவன் என்று பொருள். ஆத்மாவுக்கு ஒரு உருவமே இல்லாத போது புஜங்கள் எங்கிருந்து வரும்?
மூன்றாவது மகனுக்கு சத்ரு மர்தன் என்று பெயர் வைத்தீர். ஆத்மாவுக்கு சத்ருவும் கிடையாது மித்ரனும் கிடையாது. அப்படி இருக்க நீங்கள் வைத்த பெயர்கள் பொருத்தமில்லாத பெயர்கள் தானே. அதே போல் அலர்க்கா என்ற பெயரும் இருந்து விட்டு போகட்டும்” என்று கூறி விட்டாள்.
மீண்டும் அரசன் கூறினான், ” போகட்டும். மதாலசா! இந்த பிள்ளையையாவது பிரவ்ருத்தி மார்கத்தில் வளர். எனக்கு நாட்டை ஆள ஒரு வாரிசு தேவை. முதல் மூன்று புதல்வர்களும் உன்னுடைய ஞான போதனையால் நாட்டை துறந்து காட்டுக்கு சென்று விட்டனர். இந்த மகனையாவது நாடாளுவதற்கு தயாராக்கு. நாம் இருவரும் இவனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வானப் பிரச்தாஸ்ரமத்திர்க்கு செல்லலாம்,” என்று கேட்டுக் கொண்டான்.
மதாலசாவும் சரி என்று ஒப்புக் கொண்டு அலர்க்காவை உலக விவகாரங்களை சமாளிக்கும் விதமாக பல வழிகளிலும் தேர்ந்தவனாக வளர்த்தாள். அரச நெறி முறைகளையும் போர் முறைகளையும் கற்று தந்தாள். எப்படி நல்ல அரசனாக நாட்டை ஆள வேண்டும், சத்ருக்களை ஒழித்து நாட்டு மக்களை காப்பது போன்ற கருத்துக்களை கொண்ட தாலாட்டு பாடல்களை பாடி தூங்கச் செய்தாள்.
நாட்டை அலர்க்காவிடம் ஒப்படைத்து விட்டு வனத்துக்கு சென்ற போது மதாலசா ஒரு மோதிரத்தை அலர்க்காவிடம் கொடுத்தாள். “மகனே! உன் மனதில் கவலையோ, துக்கமோ ஏற்பட்டு வாழ்க்கையில் சோர்ந்து போன போது இந்த மோதிரத்தை திறந்து பார்” என்று கூறி சென்றாள் அந்த ஒப்புயர்வற்ற தாய்.
நல்ல விதமாக அரசாண்டு வந்த அலர்க்காவிர்க்கும் ஒரு நாள் வாழ்வில் சோர்வு கண்டது. தாய் கூறியது நினைவுக்கு வந்தது. மோதிரத்தை திறந்து பார்த்தான்.
அதில் என்ன எழுதி இருந்தது? முதல் மூன்று குழந்தைகளுக்கு போதித்த அதே ஞான உபதேசம் தான். “சுத்தோசி புத்தோசி நிரஞ்சனோசி பிரபஞ்சமாயா பரிவர்ஜிதோசி”.
இந்த உபதேசத்தை படித்த உடனே, விசித்தரமாக அலர்க்காவுக்கு வைராக்யம் ஏற்பட்டு அவனும் காட்டை நோக்கி தவம் இயற்ற சென்று விட்டான்.
உண்மையான தாயின் வளர்ப்பு என்றால் இப்படி தானிருக்க வேண்டும் என்பதற்கு இம்மூன்று தாய்மார்களும் எடுத்துக் காட்டு. நம் பாரத நாட்டின் சனாதன தர்மத்தையும் வேத நெறிகளையும் கட்டி காப்பதில் அன்னையரின் பங்கு அளப்பரியது. ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி வளர்க்கிறாள் என்பதில் தான் அக்குழந்தைகளின் எதிர் காலமே அடங்கி இருக்கிறது.