ப்ரக்ஞையின் ஆற்றல்
கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜோதிடர் ஒருவர், தன்னால் ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரது குணங்களைக் கூற இயலும் என்றார்.

மனிதர்களின் முகம் மற்றும் அங்க லட்சணங்கள் அடிப்படையில் அவர்களுடைய குணங்கள், அவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் முதலானவற்றைக் கூறுகிற இந்திய ஆருடக் கலையான சாமுத்திரிகா லட்சணம் போன்ற கலையில் வல்லவராக அந்த ஜோதிடர் இருந்திருக்கக் கூடும்.
சாக்ரடீஸ் அவரிடம், “அப்படியானால் நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்த்து எனது குணங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்றார்.
“உங்களுடைய நாசித் துவாரங்களைப் பார்க்கும்போது நீங்கள் மிகுந்த கோபக்காரர் என்று தெரிகிறது.”
இதைக் கேட்டு சாக்ரடீஸின் சீடர்கள் கோபம் அடைந்தனர். ஆனால் சாக்ரடீஸ் மிகவும் அமைதியாக இருந்தார்.
ஜோதிடர் தொடர்ந்தார். “உங்களுடைய தலையின் அமைப்பைப் பார்க்கும்போது நீங்கள் பொறாமை பிடித்தவர் என்பது தெரிகிறது. உங்களுடைய கண்களின் அமைப்பு நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிடக் கூடியவர் என்று காட்டுகிறது.”
சாக்ரடீஸ் அவருக்கு வெகுமதி அளித்து அனுப்பினார்.
சீடர்கள், “அந்த ஜோதிடர் உங்களைப் பற்றி நேர்மறையான விஷயங்கள் எதையுமே சொல்லவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் எதற்கு அவருக்கு வெகுமதி கொடுத்தீர்கள்?” என்று கேட்டனர்.
“ஜோதிடர் கூறிய விஷயங்கள் யாவும் உண்மை. அதனால்தான் அவருக்கு வெகுமதி அளித்தேன். ஆனால், என்னுடைய இந்த எதிர்மறை அம்சங்களை விடவும் வலுவானது எனது ப்ரக்ஞை ஆற்றல். அந்த ஆற்றலின் மூலம் நான் எனது எதிர்மறை அம்சங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறேன். அது அந்த ஜோதிடருக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் அதுதான்” என்றார் சாக்ரடீஸ்.
பரிபூரணமானவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொரு மனிதர்களிடமும் ஏதேனும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்தக் குறையை
அறிந்துகொண்டு அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே சாமர்த்தியம்.