பௌர்ணமி நிலவில்
“பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா….”,
‘எப்எம்’ லிருந்து ஒலித்த பழைய பாடல் வரிகள் காற்றில் மிதந்து வர, வங்கக்கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வருண். சுருண்டு சுருண்டு, உருண்டு உருண்டு வந்த வண்ணம் இருந்தன அலைகள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் இருந்தது. எவ்வளவு பார்த்தாலும் சலிப்பதில்லை கடல். கட்டாந்தரை போலில்லாமல், மெத்துமெத்தென்றிருக்கும் கடற்கரைமணலில், லேசாக வளைந்தும், நெளிந்தும் நடக்கும் மனிதர்கள். இறுக்கங்கள் சற்றுதளர்ந்த மன நிலையில், மெல்லிய சந்தோசம் பூசிய முகங்கள். கடற்கரையில் உலகம் மாறுபட்டு இருப்பது மாதிரியிருந்தது வருணுக்கு. ‘வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…’ என்ற எண்ணம் அவனுக்குள் ஒருபெருமூச்சோடு வெளிப்பட்டது.
“இவினிங் சிக்ஸ் தேர்ட்டிக்கு, பீச்ல மீட் பண்ணலாம், வெயிட் பண்ணுடா.” மாலதி, காலையில் அலை பேசியில் பேசியபடி வருவாளென்று காத்திருந்தவனுக்கு, நேரம் செல்ல செல்ல இருப்புகொள்ளவில்லை. மூன்று முறை செல்லில் பேச முயன்றபோது… ‘நீங்கள் தொடர்பு கொண்டவாடிக்கையாளர் ….’ பதிலாக வந்த குரலைக்கேட்கக் கொஞ்சம் எரிச்சலாக வந்தது.
வெளிச்சம் குறைய ஆரம்பிக்க, நிலா ஔியில் கடல் மின்னத் தொடங்கியது.
அப்போது மூச்சிறைத்தபடி வேகமாக வந்து நின்றவளை உற்றுப்பார்த்தான்.
“சாரீடா… ஆபீஸ் வேலை முடிஞ்சி புறப்படுற நேரத்தில ஹெட் ஆபீஸிலிருந்து அவசர மெயில் வர, உடனே ரிப்ளை ரெடி பண்ணி அனுப்பிட்டு வர்றதுக்குள்ளே, போறும் போறும்னு ஆயிடுச்சி. வழியில சரியான ‘டிராபிக்ஜாம்’ வேறு…” படபடவென பேசிமுடித்தாள்.
“முதல்ல உட்காரு. அப்புறம் பேசலாம்…”
“நோ, நான் சீக்கிரமா வேற போகனும்.வீட்டுக்கு லேட்டா போனா எல்லார் கிட்டேயும் விளக்கம் சொல்லி முடியாது…”
“உட்காருப்பா போலாம். இன்னிக்கு ஒருநாள் சமாளிச்சிக்கோ.”
ஒரு வழியாக அமர்ந்தவள். சிறிது நேரம் மௌனமாகக் கடலைப் பார்த்தாள்.
அருண் தான் மெல்ல ஆரம்பித்தான். “அப்பாவோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிட்டிருக்கு, மாலதி. சிறுநீரக நோயாளியான அவருக்குச் சீக்கிரமே, டிரான்ஸ்பிளான்ட்பண்ணியாகனும்னு டாக்டர் சொல்றார். அம்மாவுக்கு பிரஷர் இருக்கிறதால அவங்களால கிட்னி டொனேட் பண்ணமுடியாது. விதி முறைகளின் படி, குடும்ப உறுப்பினர்தான் கிட்னிகொடுக்க முடியும். இந்த நிலையிலே, ஒரே மகனான நான் தான் அவருக்கு கிட்னி கொடுத்து, அவர் உயிரை காப்பாத்தியாகனும். என்னால எங்க அப்பாவை இழக்க முடியாது; இதைப்பத்தி நாம பேசின விஷயங்களையெல்லாம் உங்க வீட்ல நீ தான் பக்குவமா எடுத்துச் சொல்லி நம்ம கல்யாணத்துக்குத் தடை வராம பார்த்துக்கனும்..” அவன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு நீண்ட பெருமூச்சு விட்டான்.
“உனக்கும் இதில் சம்மதம்தானே. உனக்கு விருப்பமில்லை என்றாலும், நான் இதை செய்தாகனும். ஒருவேளை உனக்கு இதில் சம்மதமில்லைனா ஓப்பனா சொல்லிடு. இதற்காக நாம் பிரியநேர்ந்தாலும் நான் உன்னைத் தப்பா நினைக்கமாட்டேன்…” என்றான்.
“இரண்டு வருஷமா பழகி, நீ என்னைபுரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா!. இதே நிலைமை எங்க வீட்டிலிருந்து, நான் ஒன்இடத்திலே இருந்தா, என்னை விட்டு நீ போய் விடுவாயா..? இது தான்காதலா..?” .என்றாள் கோபமாக.
“சாரி மாலு. நமக்குள்ளே எந்த ‘மிஸ்அண்டர் ஸ்டாண்டிங்கும்’ வரக்கூடாதுனுதான் கேட்டேன். என்னை மன்னிச்சிடு..” என்று அவளை சமாதனப்டுத்தினான்.
“ஒ கே., நான் எங்க வீட்ல பேசறேன். எல்லாம் பாஸிட்டிவா நடக்கும்னு நம்புவோம். நான் உனக்குத் துணையாக இருப்பேன், நேரமாயிடுச்சி, வா போகலாம்..” என அவள் பதிலுரைக்க இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
மாலதி வீட்டில் நுழைந்த போது, அவளின் அம்மா கனகம் ‘டிவி’ யில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் அப்பா ராமநாதன் காலையில் விட்ட பேப்பரை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.
“என்னடி, இவ்வளவு லேட்டா வர்ற..?” என்ற அம்மாவிடம் ஆபீஸில இன்னைக்கி வேலை அதிகமென்று ஒருவாறு சமாளித்தாள். சீரியல் நாயகியின் வாழ்க்கைப் பிரச்சனையில் மூழ்கிஇருந்ததால் அதற்குமேல் மகளை எதுவும் கேட்காமல், தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் கனகம்.
இரவு உணவு முடிந்ததும், அப்பாவும், அம்மாவும் இவளிடம் பேசினர். அம்மா கனகம் தான் அதிகமாகப் பேசினாள்.
“மாலதி…, வருண் என்ன சொல்றான்..?” முகத்தில் வெறுப்போடு கேட்டாள்.
அந்தஸ்தில் குறைவு என்பதாலும் வருணின் குடும்பச் சூழல் தெரிந்ததாலும், அவள் பெற்றோர்க்கு இந்தக் காதலில் சம்மதமில்லை. மகளின் வற்புறுத்தல் காரணமாகவே, இருவரும் அரைமனதுடன் சம்மதித்திருந்தனர்.
“அம்மா. அவங்க அப்பாவுக்காக கிட்னி கொடுக்கப்போறதா இருக்கார்…”
“போச்சு… எல்லாமே போச்சு… இதுக்குத்தான் வேணாம்கிறேன்;
ஒரு ஆம்பள தன்னோட கிட்னியை தானம் கொடுத்தபிறகு எப்படி குடும்ப வாழ்க்கையை நடத்துவான். குழந்தை குட்டி பெத்துக்கிட்டு அவன் கூட நீ வாழ வேண்டாமா…”
“அம்மா…., தன்னோட இரண்டு கிட்னியில ஒன்னை தானமா கொடுக்கறவங்களுக்கு, ஒரு பிரச்சனையும் வராதும்மா. கொஞ்ச நாளிலேய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடலாம். அப்புறம் தாம்பத்யம், குழந்தைப்பேறு இதிலெல்லாம் எந்த பாதிப்பும் வராது. “எவ்வளவோ பேர் சிறுநீரக தானம் செய்த பின் தானும் நல்லா வாழந்துகிட்டு மத்தவங்களையும் வாழவக்கிறாங்க இந்தஉலகத்திலே” .
“எதைச் சொன்னாலும், வக்கணையா பதில் மட்டும் சொல்லிடு. ஏன் இவருதான் தானம் கொடுக்கனுமா? சொந்தத்துல வேற யாரும் உதவமாட்டாங்களா..?”
“அப்படியில்லம்மா….விதிகளின்படி குடும்ப உறுப்பினர்கள்தான் தானம் கொடுக்கமுடியும். வீட்டுக்கு ஒரே பிள்ளை அவர் மட்டும் தானே. அவங்க அம்மாவுக்கும் பிரஷர், சுகர் இருக்கு. அதுனால அவங்களும் தானம் கொடுக்க முடியாது. வருண்தான் அவங்க அப்பாவுக்கு உதவனும். அவருக்கு ஒண்ணும் ஆகாதும்மா.”
“எங்களுக்குத் துளி கூட இதில் விருப்பமில்லை. இத்தோட அவனை தலைமுழுகிடு, உன் நல்லதுக்குத்தான் இதைச் சொல்றோம்… சம்பாதிக்கிற திமிரில் நீ எங்க வார்த்தையைமதிக்கலேன்னா உன்னைத் தலை முழுகிடுவோம்…” கடுமையாகப் பேசினர் பெற்றோர் இருவரும்.
சற்று நேரம் அமைதியாக இருந்த மாலதி,“இதுதான் உங்க முடிவுன்னா, உங்களையும் இந்த வீட்டையும் விட்டு வெளியேறி நான் அவரைத் திருமணம் செய்துகொள்வதைத் தவிர எனக்கும்வேறு வழி இல்லை.” என்றாள்.
அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவள் பெற்றோர். மகளின் மன உறுதியும் அவளின் தன்னிச்சையாக எதையும் தைரியமாக முடிவு செய்து செய்யும் குணமும் நன்கு தெரிந்திருந்ததால் இதற்கு மேல் பேசினால் இன்னும் விபரீதமாகிவிடும் என்பதால் மௌனமாயினர் அவளது பெற்றோர். அதற்குப்பிறகு அவர்கள் இருவரும் ,மகளிடம் முகங்கொடுத்துப் பேசாமலேயே இருந்தனர். மகளுக்கு மதிய உணவை தயார் செய்து கொடுப்பதையும் நிறுத்திவிட அவளும் ஒரு வார காலமாக ஆபீஸ் கேண்டினில் உணவு சாப்பிட்டு வந்தாள் . சொந்த வீட்டிலையே மகளை அன்னியமாக நடத்தத் துவங்கினர்.
சிறுநீரக நோய்களுக்கான பிரத்யோகமான அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. டையாலிசிஸ்யுனிட் வெளிப்பறம் காத்துக்கொண்டிருந்தான் வருண்.
“டையாலிசிஸ்யுனிட்” என ஆங்கிலத்திலும் “குருதி கழிவுசுத்திகரிப்பு பிரிவு” எனத் தமிழிலும் எழுதியிருந்தது. வெளிப்புறம் இருந்த நிறைய நாற்காலிகளை மனிதர்கள் நிரப்பியிருந்தார்கள். கவலை தோய்ந்த முகங்களுடன் நிறையப் பேர் நின்றுகொண்டிருமிருந்தார்கள்.
சில நோயாளிகள் அவஸ்தையுடன் அமர இடமின்றி நின்று கொண்டிருக்க நோயாளிகளுக்குத் துணையாக வந்திருந்த சிலரோ நாற்காலிகளை ஆக்கிமித்தபடி அமர்ந்து கைகளில்செல்போன் ‘கேம்’களை விளையாடியபடியும் மும்முரமாக அதன் திரைகளை வெறித்தபடியுமிருந்தனர். சகமனிதர்கள் மீதான கரிசனத்தையோ இரக்கத்தையோ மனிதர்கள் எந்தவித குற்றஉணர்வுமின்றி தொலைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று அச்சமாக இருந்தது அவனுக்கு.
அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரின் அலைபேசி அலர, சட்டைப் பையிலிருந்து நடுங்கும் கைகளுடன் அதை எடுக்க முயன்றவரின் கைநழுவி கீழே விழ இருந்தது அலைபேசி. அதைப்பத்திரமாக பிடித்து அவரிடம் கொடுத்தான். நன்றி சொல்லி விட்டு யாரிடமோ பேசினார் அவர். குரலில் நிறையத் தடுமாற்றம்.
அவரிடம் தன்னை அறிமுகம்செய்து கொண்டு பேசினான் வருண்.மிகுந்த மன வேதனையுடன் இருந்த மாதிரி இருந்தது அவர் முகம். தனது ஓரே மகளுக்கு எதிர்பாராதவிதமாகச் சிறுநீரகசெயலிழப்பு ஏற்பட்டு டையாலிசிஸ் சிகிச்சை செய்துவருவதாகக் கூறினார். தனது ஒரே மகளுக்குத் திருமணம் செய்துவைத்து வாழவைக்க வைக்கவேண்டும் என்பது மட்டும் தான்அவருடைய ஆசை, கனவு அனைத்துமே . அதற்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.
இதய நோயாளியான தன்னால் மகளுக்குச் சிறுநீரக தானம் செய்யமுடியாமலிருப்பது. அவருடைய மனைவி இறந்து விட்டிருக்க வேறு எவரும் தானம்செய்ய இயலாத சூழல்….என அவரின்கதையைக்கேட்க அவனுக்கு வருத்தமாக இருந்தது. “நம்பிக்கையோடு இருங்கள், நல்லது நடக்கும்” என்று ஆறுதலாகச் சொன்னான் வருண்.
அப்போது, “பேஷன்ட் ராமநாதனுடைய அட்டெண்டர் வாங்க” என்று நர்ஸ் கூப்பிட்டாள். வருண் யுனிட்டின் உள்ளே நுழைந்தான். மருந்து வாடையுடன் லேசாக இரத்த வாடையும் கலந்துவருகிற மாதிரி இருந்தது. ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் போது அவனுக்கு அப்படித்தோன்றுவது உண்டு.
வரிசையாகப் படுக்கைகளில் நோயாளிகள் அருகில் இருக்கும் டையாலிசிஸ் இயந்திரங்களுடன் இரத்தம் நிரம்பிய டியுப்களால் இணைக்கப்பட்டபடி படுத்துக் கொண்டிருந்தார்கள். பத்துவயது பிள்ளைகள் முதல் பெரியவர்கள் என எல்லா வயதிலும் நோயாளிகள் அங்கு இருந்தார்கள் . மனித உடலிலுள்ள இரத்தம் முழுவதையும் சுத்தம் செய்யும் வேலையை அந்தப் பெரியஇயந்திரங்கள் இராசயணங்கள் மற்றும் மருந்துகள் உதவியுடனும் செய்துகொண்டிருந்தன. அவ்வப்போது அவைகளை கண்காணித்தபடியும் இயக்கியபடியுமிருந்தார்கள் மருத்துவர்களும்செவிலியர்களும்.
கடவுள் கொடுத்த கையளவேயுள்ள சிறுநீரகம் செய்யும் அந்த வேலையை,செயற்கையாகத் தொடர்ந்து செய்வதற்கு மனிதனுக்கு எவ்வளவு பெரிய முயற்சி தேவைப்படுகிறது எனநினைத்தான். தனது தந்தையின் டையாலிசிஸ் முடிந்துவிடக் கொஞ்சம் சோர்வுடன் இருந்த அவரைக் கைதாங்கலாக பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் வருண்.
வாடகை டாக்ஸியில் வீட்டுக்கு வந்ததும் அவரைக் கட்டிலில் படுக்க வைத்து அவரது கால்களை பிடித்து விட்டான். அப்போது அவனிடம் “வருண்…நா வாழ்ந்து முடித்தவன். எனக்குப் பெரிசாஆசைகள் எதுவும் இல்லைப்பா. நீ வாழப்போற பிள்ளை. நீ எனக்காக கிட்னி டொனேட்பண்ண வேணாம். நான் டையாலிசிஸ் செய்துக்கிட்டு வாழ்க்கையை ஓட்டிடறேன்;
உங்க அம்மா தான் பாவம், அப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில அல்லாடறா. அவளுக்கும் இதுல சம்மதமில்ல. அதுனால நாங்க சொல்றத கேளுப்பா., நீ டொனேட் பண்ண வேண்டாம்..” என்றார் அவனின் தந்தை.
“அப்பா…. உங்களுக்கு ஐம்பது வயதுதான் ஆகுது. நீங்க இன்னும் நிறைய வருஷம் வாழனும். உங்க பேரப்பிள்ளைகளோடு விளையாடனும். அம்மாவுக்கும் துணை நீங்கதான். உங்களைஇப்படியே விட்டுடமுடியாது ; இரண்டு கிட்னியில, ஒண்ணு கொடுக்குறதால எனக்கு ஒண்ணும் ஆகாதுனு, டாக்டர் எத்தனையோ முறை சொல்லிட்டாரு. தைரியமா இருங்க…என் முடிவில் நான்உறுதியா இருக்கேன். நீங்கச் சீக்கிரமே நல்லபடியா ஆயிடுவீங்க. என் கூடவும் அம்மா கூடவும் பழைய மாதிரி சந்தோஷமா இருப்பிங்க..” வருண் நம்பிக்கையோடு பேசினான்.
மறுநாள் , மாலதி தன் அலுவலகத்தில் பரபரப்பாக இருக்கையில் அவளது செல்பேசி சிணுங்கியது . மறுமுனையில் வருண் , “மாலதி கொஞ்சம் முல்லை ஹாஸ்பிடலுக்கு வரியா . உங்கஅப்பாவுக்குச் சின்ன ஆக்சிடென்ட் . லேசா அடிபட்டிருக்கு . பயப்படவேண்டாம், நான் அட்மிட் பண்ணிட்டேன் . டாக்டர்ஸ் பார்த்துகிட்டு இருக்காங்க…” என்றான் .
“ஓ காட் . என்ன ஆச்சி எங்கப்பாவுக்கு சீரியசா ஒண்ணும் இல்லையே… எதுவாயிருந்தாலும் உண்மைய சொல்லு வருண்” என்று பதறினாள் . “ நேரில் வா பதட்டப்படாதே “ என்றான் வருண் . மாலதி அலுவலகத்தில் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போன் செய்து அம்மாவிடம் பேசினாள் . “ஐயோ கடவுளே , என்னடி சொல்லுரே எனக்கு ரொம்ப பயமா இருக்கு ..” என்று அம்மா அலறஅவளைச் சமாதானம் செய்தாள் . “நீ ஆட்டோ பிடிச்சி ஹாஸ்பிடலுக்கு வா… “ என்றாள் .
அலுவலகம் செல்லும் வழியில் நிகழந்த இருசக்கர வாகன விபத்தில், மாலதியின் அப்பா ராமநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகுந்த இரத்த இழப்புடன் சாலையில் அனாதரவாகக்கிடந்தது, அந்த வழியாக வந்தவருண், உடனடியாக அவரை ‘ஜசியு’ வில் அனுமதித்து மருத்துவ மனையில் முன்பணத்தையும் கட்டியது என நடந்ததை எல்லாம் மாலதியிடம் சொன்னான்வருண் .
உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவைப்பட அவருக்காக இரத்த தானம் செய்யத் தயாராக இருந்தான் வருண். ராமநாதனின் பிளட் குருப்பும் மாலதியின் பிளட் குருப்பும் ஒரே வகைஎன்பதால் மாலதி பிளட் டோனேட்செய்தாள்.
மருத்துவமனைக்கு வந்த கனகம் உயிருக்குப் போராடும் கணவனுக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் மனம் பதற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தது . நாள் முழுதும் ‘ஐசியு’ விலிருந்த கணவனை வெளியே ‘நார்மல் வார்டு’ க்கு மாற்றியபின் தான் கனகத்துக்கு உயிர் திரும்பி வந்த மாதிரியிருந்தது.
ஆபத்தில் தன் தந்தையின் உயிரைக்காக்கவும், தாயின் மாங்கலியத்திற்காகவும் உதவிய மகள் மாலதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “அம்மா.. நீ என் மகளில்லே கடவுள்! என்னோடவாழ்க்கையை மீட்டுக்கொடுத்த குல தெய்வம்” என்றாள் கனகம் உணர்ச்சி பொங்க.
“அப்பாவைச் சரியான நேரத்தில மருத்துவமனையில் சேர்த்தது வருண்தான். அப்பாவின் உயிரைக் காப்பாத்தினதுல அவரோட பங்குதான் அதிகம் .. ஒரு உயிரைக் காபாத்துறதுக்கு செய்யறஉதவியை விட இந்த உலகத்தில பெரிசா எதுவுமில்லை. இந்த மாதிரி அடுத்தவங்களுக்கு உதவும் மனசு உள்ள மனுசங்க இருக்கறதான் இந்த உலகம் இன்னும் நல்ல படியா இயங்கிட்டு இருக்குது.
என் அப்பாவை நான் காப்பாத்தறது என்கடமை. ஒரே மகளாக நான் இதக்கூட செய்யல்லேன்னா நான் மனுஷியே இல்லை” என்றாள்.
“அம்மா இந்த நேரத்தில சொல்லுறேன்னு தப்பா நினைச்சுக்காத…நான் எப்படி ஒருவகையில என் குடும்பத்தை காப்பாத்த உதவுகிறேனோ, அதே மாதிரி தானே,வருணும்… அவங்க அப்பாவைக் காப்பாற்ற வேண்டிய நிலமையிலே இருக்கார், அவங்க அம்மாவும் உங்களை மாதிரி தானே…” என்ற மகளின் பேச்சில் உண்மையிருப்பதைப் புரிந்துகொண்டவள், மகளின் கைகளை ஆதரவாகவும், அன்பாகவும் இறுகப்பற்றிக் கொண்டு, மகளின் பேச்சை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தாள் கனகம்.
இறுக்கமாக மூடியிருந்த அந்த அறையின் ஜன்னல் கதவுகள் லேசாகத் திறந்து கொள்ள இதமான காற்று உள்ளே வந்தது.
Dear Writer,
I am a fan of writer S. Kannan.
I agree with his opinion.
You should continue to write here.
Best regards…….
Kannan
7061901800
இச்சிறுகதை பிரபலமான இதழ்களுக்கு
அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது. வாசித்தவர்களுக்கு நன்றி.
நிலாரவி.
எல்லா இதழ்களுக்கும் விளம்பரங்களும், சினிமா செய்திகளும்தான் முக்கியம். வியாபார நோக்கம்தான் பிரதானம். அதனால் அந்த முயற்சியை நிறித்திக் கொள்ளுங்கள் நிலாரவி. என்னுடைய அனுபவத்தில் உணர்ந்துகொண்ட உண்மை இது. ஆகையால் தொடர்ந்து இணையதளத்திலேயே எழுதுங்கள்.
நைஸ். உண்மைகள் தெளிவாக உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பயிட்டது.