போதிமரம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 11,330
பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு பின் வீடு வந்து சேர்ந்தவள் ..ஹாலிலிருந்த சோபாவில் ‘ ‘ தொப்பென்று ‘ அமர்ந்தாள் : ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டவளின் மனக்கண் முன்னே , சற்று முன்பு நடந்த அந்த சம்பவம் , நிழல் படம் போல தோன்றி மறைந்து கொண்டிருந்தது …..
கணவன் ராமை ஆபீசுக்கு அனுப்பிய கையுடன் நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்றவள் ,அடுத்த அரை மணி நேரத்தில் , பை கொள்ளா சாமான்களோடு ஆட்டோவில் ஏறி அமரப்போனவளின் பார்வை , தற்செயலாய் , எதிரேயுள்ள ஐஸ் கிரீம் பார்லர் மீது குத்திட்டு நின்றது !
அங்கே …….
கணவன் ராமின் தோளை உரசியவாறு , ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்த அந்த இளம் பச்சை வண்ண சுடிதார் அணிந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து தான் போனாள் அவள் !
‘ பம்மென்று ‘ பறந்து விரிந்திருந்த கூந்தலை கிளிப் போட்டு அடக்கியிருந்தாள் அந்த பெண் !…
ஒரு தடவைக்கு இரு தடவை அவ்விருவரையும் உற்று பார்த்தாள் அவள் :
சந்தேகமே இல்லை …அது கணவன் ராம் தான் ….
உண்மை இப்போது ஊர்ஜிதமாகி விட …..
நிலை குலைந்து போன அவள் , எரிச்சலும் , படபடப்புமாய் எதிரே வந்த ஆட்டோவில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள் …
அரை மணி நேர ஆட்டோ பயணம் அரை யுகமாய் தோன்ற , வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு !
‘ ச்சே …என்ன மனுஷர் இவர் ….திருமணமான ஆறே மாதத்திற்குள் கசந்து போய் விட்டேனா நான் …கட்டிய மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணிடம் இப்படி நெருக்கமாக ….ச்சே …என்ன தைரியம் அவருக்கு …வரட்டும் …நாக்கை பிடுங்குகிறாற்போல நாலு கேள்வி கேட்டு விட்டு அம்மா வீட்டுக்கு கிளம்பிடலாம் …. …….இல்லை ..இல்லை ….இப்போதே மதுரையிலிருக்கும் அப்பாவுக்கு போன் பண்ணி , இங்கே வரவழைத்து. அவரின் முகத்திரையை கிழிக்கிறேன் …..’
பல விதமான எண்ண அலைகளில் மூழ்கியிருந்தவள் , அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு , தளர்ந்த நடையுடன் எழுந்து கதவை திறந்தாள் …
எதிரே வேலைக்காரி முனியம்மா , வெற்றிலை காவியேறிய பற்கள் தெரிய சிரித்தபடி நின்றிருந்தாள் !
ஷைலஜாவின் கலங்கிய முகத்தை கண்டு துணுக்குற்றவள் ,
” இன்னாம்மா …முகமெல்லாம் சிவந்து போய் கிடக்கு …..அழுதியா என்ன ?”
பரிவுடன் அவள் கேட்க …
” அதெல்லாம் ஒண்ணுமில்ல ….டி வி ல சிவாஜி படம் போட்டான் ….ஒரே அழுகை …அது போகட்டும் , நீ ஏன் லேட் ?”
இயல்பாய் இருக்க முயற்ச்சித்தாள் ஷைலஜா :
” க்கும் ….அத்த ஏம்மா கேக்கறே …ரா முழுக்க ஒரே கலாட்டா தான் போ ……அந்த படு பாவி மனுஷன் குடிச்சுப்புட்டு .என்னையும் , .புள்ளைங்களையும் இழுத்து போட்டு அடிச்சி …… ஒரு பொட்டு தூக்கம் இல்ல …அட இது எப்பவும் நடக்கற மாமூல் சமாச்சாரம் தான் ….அத கூட பொறுத்துக்கலாம்மா …….நீயும் நானும் தாயா புள்ளையா பழகிட்டு வரோம் …..உன்கிட்ட சொல்றதுக்கென்ன …… அவருக்கு இன்னொரு பொண்ணு கூட சகவாசம் இருக்குமா ….அந்த விசயம் நேத்து தாம்மா எனக்கு தெரிஞ்சது …. …..அததாம்மா பொறுத்துக்கவே முடியல..என்னால .”
அவள் பேச பேச …இப்போது ஷைலஜாவின் உடலில் மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு !
இனம் புரியாத பரபரப்புடன் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டவள் …..கோபத்தில் நரம்புகள் முறுக்கேற ….முகம் சிவக்க , படபடத்தாள் :…
” ஷிட்…..என்ன ஒரு தைரியம் இருந்தா கட்டின பொண்டாட்டி குத்துக்கல்லாய் இருக்கும் போது இன்னொரு பொம்பளை மேல் அவனுக்கு நாட்டம் போகும் …?……சே …பொம்பளைங்கன்னா அவ்ளோ கேவலமா ?….ஒரு பேச்சுக்கு சொல்றேன் …..இதே காரியத்தை நாம செஞ்சா சும்மா விடுவாங்களா ?…..ஹூம் ….அவங்களை குறை சொல்லி குத்தமில்லே …..நம்ம நாட்டு சூழலும் , நாம வளர்ந்த முறையும் ஆண் வர்கத்துக்கு அடங்கியே தீரணும்ங்கர மனோ பலத்தை தானே நமக்கு கொடுத்துருக்கு ?……..அது போகட்டும் …..இனிமே அவன சும்மா விடக்கூடாது ……உன் போலீஸ்கார அண்ணன் கிட்ட சொல்லி , அவன நாலு தட்டு தட்டி வைக்க சொல்லு ….அப்போ தான் புத்தி வரும் அந்த ராஸ்கலுக்கு …..”
‘எண்ணையில் விழுந்த கடுகாய் ‘ படபட’ வென்று பொரிந்து கொண்டிருந்தவளை , இப்போது நிதானமாய் கையமர்த்தினாள் முனியம்மா :
” அட ….நீ வேற …விவரம் புரியாம பேசிக்கிட்டு …..நீ சொல்றாப்பல , என் அண்ணன் கிட்ட சொல்லி அந்த மனுசனை நாலு தட்டு தட்ட சொல்ல அஞ்சு நிமிசம் கூட ஆவாதும்மா எனக்கு ……..ஆனா அப்டி செஞ்ச பிற்பாடு எங்க வூட்டு மனுசங்க முன்னாடி அவருக்கு மதிப்பு இருக்குமா சொல்லு ….ஒரு விசயம் சொல்றேன் கேட்டுக்கம்மா ……ஒரு பொம்பளைக்கு , பிறந்த வூட்லேயாகட்டும் ….புருசன் வூட்லயாகட்டும் ..அவளுக்கு கிடைக்கிற மதிப்பும் , மரியாதையும் அவ புருசனை ஒட்டி தாம்மா இருக்கு ……புருசன் அப்டி இப்டின்னு இருந்தாலும் நாம நயந்து பேசி அவங்கள திருத்த பாக்கணுமே ஒழிய …அண்ணன் கிட்டேயும் , அப்பா கிட்டேயும் விசயத்தை கொண்டு போனா , நமக்கு அவமானம் தான் மிஞ்சும் …. நேத்து பூரா அந்த மனுசனுக்கு புத்தி சொல்லி தொண்ட தண்ணியே வத்திபோயிடுச்சும்மா ……….ஹூம் …அப்புறம் அந்த அங்காளம்மா விட்ட வழி ….. …..சரி சரி ..எனக்கு ஒரு வா காப்பி கொடு ….குடிச்சுப்புட்டு வேல பாக்குறேன் ….”
படு கூலாய் அவள் பேசி விட்டு நகர ……
அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த நிஜம் எத்தனை உண்மையானது ….எதார்த்தமானது என்று புரிந்தது ஷைலஜாவிற்கு : மனம் லேசாகி போனது அவளுக்கு இப்போது !
கணவன் வீடு வந்து சேர்ந்ததும் , அவனை எப்படி அப்ரோச் செய்வது என்கிற எண்ணமே அவள் மனம் முழுவதும் வியாபித்து இருக்க ….
இப்போது அவள் கண்களுக்கு முனியம்மா , சாதாரண வேலைக்காரியாக தெரியாமல் ஒரு ‘ புத்தனாய் ‘ தான் தெரிகிறாள் !!
திருப்தி இல்லை ……….