பொய்மை




(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கையில் இருந்த கடித உறையுடன் ஆசிரியர் முன் நின்றான் கதிரவன் உள்ளூர பயமிருந்தாலும், வலிய வரவ ழைத்துக் கொண்ட துணிச்சல் முகத்தில் படர்ந்திருந்தது. மாணவர் வருகை பதிவேட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர், கனிவுடன் கதிரவனைப் பார்த்தார்.

கையிலிருந்த கடிதத்தை மிக மரியாதையுடன் அவரிடம் காட்டினான் கதிரவன். அதை வாங்கிப் படித்தவர் அவனை அனுதாபத்துடன் பார்த்து,
‘‘சரி… உனக்கு நான்கு நாட்கள் விடுமுறை தருகிறேன். வீட்டில் ஓய்வாக இருக்கும்போது பள்ளிப் பாடங்களைப் படி.”
என்று கூறி அனுப்பிவைத்தார். கதிரவன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினான்
அவன் போன பின்னாலும் அவனைப் பற்றிய சிந்தனை யிலேயே இருந்த ஆசிரியருக்கு, எப்படியாவது அவன் வீட்டுக்குப் போய் அவன் தாயின் நலம் விசாரித்து வரவேண் டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.
இரண்டாம் படிவத்தில் படித்துவரும் கதிரவன் பள்ளி திறந்த ஆறுமாத காலத்தில் இதுபோல் நான்கைந்து முறைகள் அவசரவிடுப்பு கேட்டுக் கடிதம் கொடுத்திருக்கிறான்; ஒவ் வொரு முறையும் தாயின் மோசமான உடல்நிலை குறித்த செய்தியினைத் தாங்கியே கடிதம் இருக்கும்.
அவனது தாயார் கடுமையான நோய்க்கு ஆளாகிப் படுத்த படுக்கையில் இருப்பதை அது சொல்லும். இம்முறை யும் அதே கடிதம்தான்.
அவன் மேல் ஏற்பட்ட அனுதாபம் அவரை அவன் வீட்டுமுன் காரில் வந்து நிற்க வைத்தது.
ஆசிரியர் அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறக்கப்பட்டது. கையில் அன்றைய நாளிதழுடன் சுமார் நாற்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் எதிரே நின்றார். அழகாகவும் தூய்மையாகவும் உடை உடுத்தி நீண்ட
பின்னலில் மல்லிகைச் சரம் வைத்து அழகாய் திலகம் வைத்திருந்த அவர், தன் இருகரங்களையும் குவித்து .
“வணக்கம்… வாங்க, நீங்க யாரைப் பார்க்கணும்…? என்று கனிவு ததும்பக் கேட்டார்.
ஆசிரியரும் பதிலுக்கு வணக்கம் கூறி , தான் யாரென்ப தையும் வந்த விஷயத்தையும் கூறினார். அந்தப் பெண்மணி ஆசிரியரை அழைத்து அமரச் சொல்லி அவருக்குக் குடிப்ப தற்குச் சுவைநீர் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு முன்னால் கிடந்த இருக்கையில் உட்கார்ந்தார்.
தான்தான் அந்த மாணவனின் தாயார் என்றும், வருமா னம் கருதி தனியார் நிறுவுனத்தில் வேலை செய்து வருவதாக வும், தனது பிள்ளைதன் பெயரைப் பயன்படுத்தி இப்படிப் பள்ளிக்கு மட்டம் போடுவதை நினைத்தால் தனக்கே வெட்க மும் வேதனையும் மிகுவதாகக் கூறி வருந்தினார்.
ஆசிரியர் அவருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி அமைதிபடுத்தி விட்டுக் கிளம்பினார். வழி நெடுகிலும் அந்த மாணவன் செய்த திருட்டுத்தனம் அவரின் மனதை மிகவும் வருத்தியது . படிக்கவேண்டிய வயதில் பள்ளிக்கு மட்டம் போடுவதற்கு நல்ல நிலையில் இருக்கும் தாயின் மேல் பொய்ச் சொல்லி, பொய்யாய்க் கடிதம் எழுதிப் போலி யான கையெழுத்தும் போட்டுத் தன்னை அவன் பலமுறை ஏமாற்றி இருப்பது அவனது அதிமேதாவித் தனத்தை உறுதிப் படுத்தியது. கூடிய விரைவில் அவனது திருட்டுத் தனத்திற் குத் தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
வீட்டில் அம்மாவிடம் கதிரவன் நன்றாகத் திட்டு வாங்கி னான். தேவையில்லாமல் பொய் சொன்னால் நிச்சயம் கடவுள் தண்டனை கொடுப்பார் என்று அவனைக் கண்டித் தார். அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்தி ருந்தான்; அவனிடம் வீம்பு மிகுந்திருந்தது. புதுப்புது நண்பர் கள் சேர்ந்திருந்தனர். அவன் வீணாக நேரத்தைக் கழிக்கப் புதிய நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிந்தான்.
இரண்டு வாரங்கள் கழித்திருக்கும். பள்ளியில் தேர்வு நேரம் வீட்டில் உட்கார்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டி ருந்தான் கதிரவன். சமையலறையில் வேலையாய் இருந்த அவனது அம்மா எதிர்பாராமல் தரையில் வழுக்கி விழுந்த தால் நெற்றியில் பலமாக அடிபட்டு அதிலிருந்து இரத்தம் அதிகமாய் வெளியேறி மயக்கமடைந்தார். அந்த நேரத்தில் வீட்டில் யாருமில்லாததால் பயத்தால் எதுவும் செய்யத் தெரியாமல் தவித்த கதிரவன் திடீரென்று மருத்தவமனைக் குப் போன் செய்து ஆம்புலன்ஸ் வண்டியை அழைத்தான்.
அவர்கள் வந்து அவன் அம்மாவை மருத்துவமனைக் குக் கொண்டு சென்றார்கள். அவனும் கூடவே போனான்.
அம்மாவுக்கு மயக்கம் தெளியும்வரை உட்கார்ந்திருந்தான். அம்மா அவனைப் பள்ளிக்குப் போகச் சொன்னார். அம் மாவை அந்த நிலையில் தனியே விட்டுச் செல்ல அவனுக்கு விருப்பம் இல்லை. மருத்துவர்கள் குறைந்தது மூன்று தினங்க ளாவது அம்மா மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அப்பாவேறு ஊரில் இல்லை.
கதிரவன் தடுமாறினான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். அம்மாவின் உடல் தேறும்வரை, பள்ளியில் விடு முறை எடுக்கத் தீர்மானித்தான். கடிதத்துடன் ஆசிரியரிடம் சென்றான்.
அவனது கவலைபடிந்த முகமும் நடுங்கும் கைகளும், ஆசிரியருக்கு அவன் மேல் எவ்வித அனுதாபத்தையும் உண்டாக்கவில்லை; மாறாகக் கோபத்தையே உண்டு பண்ணி யது. அவனுக்கு அவர் விடுமுறை கெரடுக்க மறுத்துவிட்டார். பள்ளிக்கு வராமல் மட்டம் போட்டால், கடுமையாகத் தண் டிப்பேன் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
அவன் எவ்வளவோ கெஞ்சியும், அவர் அசைய வில்லை. கதிரவனின் அம்மாவுக்கு ஏற்பட்ட விபத்து, அங்கே இருக்கும் யாருக்கும் தெரியாது என்பதால் அவ னுக்கு உதவி செய்யவும் யாரும் முன்வ்ரவில்லை. மேலும் பலமுறை இப்படிப் பொய் சொல்லியே கடிதம் கொடுப்பவன் என்பதால் மற்றவர்கள் பரிந்து பேச அஞ்சினார்கள்.
ஆசிரியருக்கு தெரியாமல் ஓடவும் முடியாது . அவன் மிகவும் தடுமாறிப் போனான். ம்னம் முழுவதும் அம்மாவே நிறைந்து இருந்தாள். தேவையில்லாமல் அம்மாவின் உடல் நிலையைக் காரணம் காட்டிப் பொய்யாக விடுமுறை எடுத்ததால்தான், கடவுள் தன்னைத் தண்டித்திருக்கிறாரோ என்று நினைத்துப் பார்த்தான்.
அம்மாவை அவன் போய்ப் பார்க்காமல் அவருக்கு ஏதாவது நடந்து விட்டால் அதை நினைக்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. தன் இருப்பிடத்தில் இருந்தவாறே கண்ணை மூடிக் கொண்டு,
“ஓ, அம்மா… என்று அலறினான். ஓங்கி தன் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அவன் செயல் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர் அவன் அருகில் வந்து அவனை அதட்டினார். அவன் அழுகை நின்றபாடியில்லை. ஆசிரிய ரும் மற்றவர்களும் எதிர்பார்க்காத விதமாகக் கதிரவன் திடீரென்று ஆசிரியரின் காலில் விழுந்து முழங்கால்களைக் கட்டிக் கொன்டு அழ ஆரம்பித்தான்.
சார்… என்னை மன்னிச்சடுங்க சார், என் மனசுக்கு நல்லா தெரிஞ்சும், உங்களைப் பலதடவை நான் ஏமாத்தி னேன், அதுக்காக நான் எங்கம்மாவுக்கு ஆபத்துன்னு பொய் லெட்டரும் கொடுத்தேன். ஆனா நெஜமாவே, எங்க அம்மா கீழே விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பிட்டல்ல படுத்திருக் காங்க சார். எங்கப்பா வெளியூர் போயிருக்காங்க. அம்மா வைப் பார்த்துக்க என்னை விட்டா யாருமில்லே சார். என்னை நம்பலேன்னா, இந்த ஆஸ்பத்திரிக்குப் போன் பண்ணிப் பாருங்க சார்.
அழுது கொண்டே ஒரு சிட்டையை நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த ஆசிரியர் உடனடியாக அந்த மருத்துவம னைக்குப் போன் செய்தார். அங்கிருந்து கிடைத்த தகவல் அவருக்கு உண்மையைத் தெளிவுபடுத்தியது . அவனை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு விரைந்தார். நெற் றிக் கட்டுடன் படுத்திருந்த அவன் அம்மாவைக் கண்டு நலம் விசாரித்தார். ஆறுதல் சொன்னார். அதன்பின் கதிரவனுக்கு அறிவுரைகள் சொல்லி அம்மாவுக்கு உதவியாக சில தினங்கள் இருக்க அனுமதித்தார்.
அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தன் தாயின் முகத்தைப் பார்க்கக் கதிரவனுக்குக் கவலை அதிகமாயிற்று. தன்னால்தான் தன் தாய்க்கு இந்த கதி ஏற்பட்டது என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். தன்னைத் தண்டிக்க இறைவன் தாயின் உயிருக்கு எந்த ஆபத்தையும் விளைவிக் காததற்கு இறைவனுக்கு மனமாற நன்றி கூறினான். இனி எந்த கஷ்டநிலை வந்தாலும், பொய்யே சொல்லமாட்டேன் என்று தனக்குத் தானே உறுதி மொழி எடுத்துக் கொண்டான்.
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். (குறன் : 293)
விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html#293
– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை